வெள்ளி, 22 செப்டம்பர், 2017

இந்து மதம் யாருக்கு சொந்த மதம்?


1929 குடிஅரசிலிருந்து., 

பண்டிதப் பெரு மக்கள் இந்து மதம் யாருக்கு சொந்த மெனக்கண்டும் கண் மூடித்தனமாகவோ அல்லது பண்டிதத் தன்மைக் குப்பங்கம் வருமென்னும் நோக்கங் கொண்டோ, பாமர மக்களை பாழ்படுத்துகின்றனர். சரித்திர சம்பந்தப்பட்ட வரையிலும் ஆரியராலேயே இந்து மதம் ஸ்தாபகமானதெனக் காணலாம். ஆரியரின் குடியேற்றத்தின் பின்னர் இந்து மதமுண்டாயிற்றென்பதில் மயக்கமில்லை. இது நமது பண்டிதர்களும் அறிந்த இரகசியமே. ஆரியர்கள் தங்கள் கபட நாடகத்தால் தமிழ் மக்களை வயப்படுத்தி தமிழ் நாட்டிலிருந்த சில வழிபாடுகளை தமது வழி பாட்டுடன் ஜோடித்து  மக்களை மயக்கி விட்டனர். நாம் எவ்வளவு தூரம் துருவிச் சென்றாலும் இந்துமதம் தமிழ் மக்களாகிய நமக்கு சொந்தமன்று என்ற முடிவுக்கே வருகிறோம். 

சொந்தமற்றதை சொந்தமாகப் பாவிப் பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். ஆரியரால் உண்டாக்கப் பட்ட நான்கு வருணங் களையும் எண்ணிலடங்கா சாதி களையும் உடைய இந்து மதத்திற்கும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாத பூர்வத் தமிழ் மக்க ளாகிய ஆதி திராவிட ரெனும் சமூகத்தினருக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! இமயகிரிக்கும் குண்டுமணிக்கு முள்ள வித்தியாசத்தை ஒக்கும். இந்து மதமல்லவா பஞ்சமரென்று சண்டாளரெனவும், தீண்டப்படாதவ ரெனவும், தெருவில் நடக்கப் படாதவரெனவும் இன்னும் மிருகத்திலும் கேவலமாக மதிக்கச் செய்தது. 

அதனையல்லவா சுயமரியாதை இயக்கம் கண்டிப்பது. இதை அறியாமல்  சகஜாந்தசுவாமி சுயமரியாதைச் சங்கத்திற்கு விரோதமாக போலி ஆஸ்திகர் சங்கத்தில் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்கி அதை தாங்கிப் பேச தலைமை வகித்தது. நன்றியை கொன்றதற்கு ஒப்பாகும். ஆதிதிராவிட ரென்னும் பூர்வத் தமிழ்பெருமக்கள் இந்துமதத்தை விடும் பரியந்தம் பஞ்சமர் தீண்டாதவர் என்னும் பட்டம் மாறவே மாறாது என்றும் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும் கேவலமாகத் தான் வாழவேண்டும். 
-விடுதலை,25.8.17