திங்கள், 30 அக்டோபர், 2017

இவள்தான் துர்க்காதேவியா?



பெண்களுக்கு மரியாதை தரும் நவராத் திரியாம் - நவராத்தி, வந்த கதையைக் கேட் டால் சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூசை அன்று சிலை செய்ய கங்கையில் இருந்து களிமண், பசுமாட்டுச் சாணம், பசு மூத்திரம், மற்றும் விலைமாதர் வீட்டு வாசல் மண் இவற்றை கொண்டு வந்து பார்ப்பனரிடம் கொடுத்து அவர்கள் அவற்றை யாகத்தில் வைத்து பூசை செய்த பிறகு  அதில் துர்க்கை சிலை செய்யவைக்கப்பட்ட மண்ணுடன் கலந்து துர்க்கை செய்வார்கள்.

எப்போதும் போல் இதற்கும் பல கதைகளைச் சொல்வார்கள். மைசூரை ஆண்ட மகிசனை பல வேதங்களை கற்று தேவர்களுக்கு இணையான சக்திகளைப் பெற்றுவிட்டானாம் - ஆகையால் தேவர் களுக்கு அவனால் அழிவு வந்துவிடுமாம், ஆகவே அவனைக் கொல்லவேண்டும், வேதங்களைக் கற்றதால் படைக்கும் கடவுள் (பிரம்மா) காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் அகியோர்களால் கொல்ல முடியாதாம்.

அவனே விரும்பி அதீத காதல் கொண்ட பெண் எவளோ அவளால் தான் அவனை கொல்ல முடியுமாம்! இந்திரன் முதல் அனைத்துத் தேவர்களும் தங்கள் பெண் டிரை மகிசனை காதலால் மயக்க அனுப்ப முன்வரவில்லை. ஆகையால் அழிக்கும் கடவுளான சிவனின் மனைவியான பார்வதி மற்ற பிரம்மனின் மனைவி விஷ்ணுவின் மனைவியுடன் சேர்ந்து துர்க்கையாக மாறி மகிசனை கொலை செய்ய முன்வருகிறாள்.

ஆனால் இங்கே என்ன சிக்கல் என்றால் அவனை காம இச்சைக்கு ஆட்கொள்ள முடியாமல் துர்க்காதேவி தவித்துவருகிறாள். இதனை அடுத்து காமதேவன் ஒரு யோசனை சொல்கிறான், அவன் ஏக பத்தினி விரதன், நீ அவனை காதலித்து திருமணம் செய்ய முடியாது,

ஆனால் அவனை விலைமாதராக மாறி அவனை உடலுறவுக்கு அழை! நான் கரும்புவில்லை அவன் மீது எய்து, அவனை காமவலையில் வீழ்த்துகிறேன், பிறகு அவனை கொலை செய்துவிடு என்று ஆலோசனை கூறுகிறான்.

ஆனால் காமதேவனால் கூட மகிச னுக்கு காம இச்சையைத்தூண்ட முடிய வில்லை. இந்த நிலையில் துர்க்கை “தான் ஒரு யாருமில்லா அபலை, தனது பிறவி வினையினால் பெரும் துன்பத்தில் ஆழ் கிறேன், என்று கூறி ஏகபத்தினி விரதனுடன் நான் கூடும் போது தனது பிறவிவினை தீரும்” என மகிசனிடம் கூறுகிறாள்.  துர்க் கையின் பேச்சை நம்பி அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான் மகிசன், 8 நாட்களாக தொடர்ந்து அவனுடன் கூடிய துர்க்கைக்கு அவனை கொலை செய்யமுடியவில்லை.

இதனை அடுத்து நாரதனை அழைத்து மகிசனை கொலை செய்ய யோசனை கேட்கிறாள், அதற்கு நாரதன் மகிசன் எல்லாவேதங்களையும் கற்று தேர்ச்சி பெற்றவன், வேதத்தைப் படைத்த பிரம் மனே பெண் இச்சை கொண்டு வேதத்தின் பெரும்பகுதியை மறந்துபோகும் அளவிற்கு சாபம் வாங்கியுள்ளான், ஆனால் மகிசன் அப்படி அல்ல - ஏகபத்தினி விரதன், ஆகவே அவனை வேதத்தின் புண்ணியங்கள் காப் பாற்றுகிறது, நீ அவனை மனம் மாற்ற வேண்டுமென்றால் அவன் கற்றவேதத்தை அவன் மறக்கச்செய்யவேண்டும் என்று கூறினான்.

இதனை அடுத்து 9 ஆம் நாள் மிகவும் துன்புற்றவள் போல் துர்க்காதேவி பஞ்சணையில் இருக்க அவள் மீது இரக்கம் கொண்ட மகிசன் ஏன் இப்படி இருக்கிறாய்? நான் தான் உனது பிறவிவினையை போக்க முன்வந்தேனே! என்று கூறினான்.

அதற்கு துர்க்கையோ இன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் கற்ற வேதங்களை என் வீட்டு வாசலில் விட்டுவிட்டு வந்து என்னு டன் கூடும் போது என்னுடைய பிறவி வினை முற்றிலும் நீங்கும் என்று கூறினாள்.

துர்க்கையின் சூழ்ச்சி அறியாத மகிசன் தன்னுடைய வேத புலமை அனைத்தையும் தன்னுடைய அங்கவஸ்திரத்தில் வைத்து பரத்தையாக உருமாறி இருந்த துர்க்கா தேவியின் வாசலில் வைத்துவிட்டார். 
அவர் வைத்த உடனே நாரதன் அவன் கற்றவேதங்களை மண்ணாக மாற்றி விட்டார். இந்த நிலையில் மகிசனுடன் கூடிய துர்க்கைக்கு நாரதன் அவன் கற்ற வேதங்கள் மண்ணோடு மண்ணாகிப்போன செய்தியைக் கூறியதும், காம மயக்கத்தில் இருந்த மகிசனை துர்க்கை கொலை செய்தாள்.

ஆகவே தான் இன்றும் அந்தப்புண்ணிய மண் அனைத்து விலைமாதர் வீட்டு வாச லில் இருப்பதாக நினைத்து அந்த மண்ணை எடுத்து துர்க்கை சிலைகளைச் செய் கின்றனர்.

எது எப்படியோ இந்து மதம் பெண்களை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக சித்தரித்துள் ளது என்று பாருங்கள், இந்துக்கள் வணங் கும் மும்மூர்த்திகளில் மனைவியை மகிசன் விவகாரத்தில் விலைமாதராக்கி வைத்துள் ளது. கீழ்த்தரமான பாலியல் வக்கிரத்துடன் கூடிய வடமொழி துர்க்கா புராணத்தை மொழிமாற்றம் செய்தால் பச்சைப் பாலியல் நூலை விட கேவலமான முறையில் எழுத வேண்டியிருக்கும், ஊடகத்தின் கண்ணியம் கருதி முக்கியமானவற்றை மட்டுமே மொழி மாற்றம் செய்துள்ளோம்.
-விடுதலை ஞாயிறு மலர், 21.10.17

மோகினியில் கரைந்தாள் காயத்ரி


மா.பால்ராசேந்திரம்



 

‘ஆன்மீகக் கோயில்கள்’ என்ற பெயரில் 2017 ஆகஸ்டு 6 ‘தினமலர்’ வாரமலரில் வெளிவந்த கருநாடக மாநிலம் கட்டீல் துர்கா பரமேஸ்வரியின் பெருமைக்காகக் கூறப்பட்டக் கதைகளுக்குச் சில விளக்கங்களும், பகுத்தறிவு வினாக்களுமே இக்கட்டுரை.

அருணாசுரன் ஓர் அரக்கன். அவன் முனிவர்களின் யாகங்களுக்கு இடையூறு விளைவித்தான். மிருகவதை செய்து குத்தாட்டம் போட்டப் புரோகிதக்குடுமிகள் மீது இரக்கங்காட்டாதவர் திராவிடர். ஆகவே, அவர்கள் அரக்கர்கள், அசுரர்கள், தாசர்கள், தஸ்யூக்கன் எனப் பார்ப்பனர்களால் இழித்துச் சுட்டப்பட்டனர்.

திரேதாயுகம், துவாபரயுகம் எனும் இரு யுகங்களிலும் கவட்டையை விரித்து ஆட்டம் போட்ட ஆரியக் கூட்டத்தின் செயல் கலியுகத்தில் சற்றே குறையத் தொடங்கியது. திராவிடர்கள் சிறிதே விழிப்புக் கொள்ளத் தொடங்கினர். பொறுக்குமா ஆரியம்? ‘அரக்கரின் அக்கிரமம்’, என்று ஓவெனக் கதறிக் கதைகளை இட்டுக்கட்டி எழுதத் தொடங்கியது - என்னவென்று?

‘அரக்கன் அருணாசுரன், தானே இறைவனென்று சொல்லியும், இறைவனை அவமதித்ததாலுமே பஞ்சம், பசி மேலோங்கியது’ என்று எழுதியது.

நம் மக்களைப் பொதுநலத்திற்குக் கேடு விளைவிப்பவர்களென்று திட்டமிட்டுப் பரப்பியவர்கள் பார்ப்பனர்கள். ‘எல்லாம் அவன் செயல்’ என்போரே! பஞ்சம், பசி, பட்டினி யார் செயலாகும்? யாரோ ஒருவர் அவமதித்தார் என்பதற்காகத் தன்னையே நம்பி வாழும் மக்களை இப்படிப்பட்டத் துன்பத்திற்கு ஆளாக்கலாமா? ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்பாரே வள்ளுவப் பெருமகனார். எதன் மீதும் விருப்போ, வெறுப்போ கொள்ளாதவராகத் தனக்குரிய கடமையைச் செய்வதுதானே இறையின் செயலாகும்? அதனை விடுத்துத் தனியொருவனுக்காக மொத்த மக்களையும் வருத்திக் கொல்வது தனக்குவமை இல்லாததுகள் செய்யும் செயலாகுமா? அறிவுலகம் இதனை ஒப்பலாமா? அய்யா கேட்கிறார்.
“இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்கிறவனைவிட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?” என்று.

அசுரன் குணத்தை மாற்ற இறைவனால் இயலவில்லை என்னசெய்வது?

‘ஜாபாலி முனிவர் காயத்ரி மந்திரத்தை உபதேசித்து அரக்கனைப் புனிதப்படுத்த முயன்றார். ஆனால், அது அவனை மேலும் அக்கிரமக்காரனாக்கியது’ எனப் போகிறது கதை. ‘காயத்ரி மந்திரம் நினைத்ததை யெல்லாம் தரும்’ எனக்கூறுவோரின் பதில் என்ன?

தினமலர் 8.8.2017 பக்திமலர் கூறுவதைப் பார்ப்போம். ‘காயத்திரி மந்திரம் ஜபிப்பதால், கம்பீரத்தோற்றம், தரமான பேச்சு, வறுமை, குறைநீக்குதல், பாதுகாப்பு, கண்ணில் அறிவொளி வீசுதல், அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்குதல், நரம்புகளும் சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படுதல், எந்தச் சூழுலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுதல் என நற்பயன்கள் உண்டாகும். மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையைப் பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினைத் தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரியவரும். எனவே, ‘ஓம் பூர்: புவ : ஸ்வ : தத் ஸவிதுர் வரோண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோத: ப்ரசோத யாத்’ எனும் நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்’, என்கிறது. இதைத்தானே உச்சரித்தான் அருணாசுரன்? பரமாத்மாவால் அசுரனின் புத்தியைப் பார்ப்பனப் பரதேசிகள் நினைத்தவாறு மாற்றம் செய்ய முடியவில்லையே! அன்றைக்குக் கவைக்குதவாது போன காயத்ரியைத்தான் இன்றைக்கும் பாழாய்ப்போகிற பக்தனை நாளும் ஓதிக் கொண்டிருங்கள்; நாங்கள் பண்டி புடைத்துப் பணத்தில் திளைத்தப் பெருவாழ்வு வாழ்கிறோம் என்று போக்குக்காட்டுகிறது ஆரியம். நாம் ஏமாளியாய்த் திரிவதா? வாழப் பிறந்தவன் ஆரியப் பார்ப்பான் மட்டும் தானா?

பார்ப்பாரக் குஞ்சுகள் பசி, பட்டினியால் கிரங்கின போலும். பொறுக்குமா ரிஷி களுக்கு? தொல்லை வந்தது. அக்கிரகாரச் சேரிக்கல்லவா! ஜாபாலி முனி களத்திலிறங் கியது. புனிதனாக மாறவேண்டியவன் புக்கசனாகவல்லவோ மாறிவிட்டான். மந்திரத்தின் மகத்துவம் மரித்து விட்டது. ஆனாலும் அந்த மந்திரத்தைத்தான் இன்றும் ஆற்றங்கரைகளில் முணுமுணுக் கிறார்கள். அதனால்தான் ஆறுகளும் கெட்டுவிட்டனவோ? ‘ஆறுகெட நாணலிடு’, என்பதோடு ‘காயத்ரியும் எடுத்து விடு’, என்றுதான் சொல்ல வேண்டும் போலும்.

விடாது விரட்டி அழித்திட எண்ணிய ஜாபாலி முனிவர் இந்திரனிடம் முறை யிட்டார். அய்யா கேட்கிறார், ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர் யாரிடமாவது ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா?”, என்கிறார். அந்த யோக்கிய முனி இந்திரனை வேண்டினான்.

‘யாகம் மூலம் அரக்கனைத் திருத்திடக் காமதேனுவின் மகளான நந்தினிப் பசுவைத் தேவேந்திரன் தந்தான்’ என்று போகிறது கட்டுரை.

மந்திரம் அருணாசுரனை அசைக்க வில்லை. யாகமாவது கை கொடுக்குமா? என மூட்டினர் தீயை. காமதேனு, பசு என்கின்றனர். அதன் வேலை, பாலைச் சொரியோ சொரியென்று சொரிந்திடுவது தானே? அதற்கும் உறவுகள் இருந்தனவாம். அது அதனின் மகளாம். பெயரோ நந்தினியாம். எந்தத் தகப்பனுக்கு அது பிறந்ததாம்? மிருகக் காளைக்கா? இல்லை, மனிதக் காளைக்கா? அய்யம் ஏன்? முனி வர்கள் பலர் மிருகங்களுக்குப் பிறந்ததாகச் சொல்கிறார்களே அதனால்தான் அய்யம் தோன்றுகிறது.

இதற்கிடையில், ‘பிரம்மா, சரஸ்வதி இருவரின் அருள் பெற்று யாராலும் மரணம் சம்பவிக்க முடியாத சக்திவாய்ந்த வனானான் அருணாசுரன்’. அப்படிப்போடு. பார்ப்பனரின் கடவுள்கள் அவரைப் போன்றே பின்புத்தியுடையன போலும். அசுரனை யாராலும் அழிக்க முடியாத வரத்தை அள்ளிக்கொடுத்தன. அகத்தின் அழகு முகத்திலென்பது போல ‘நியாயம்’ அருணாசுரன் முகங்காட்டியதால் பார்ப் பனக் கடவுளரை வென்று நின்றான்.

எதிலும் வீழாத அசுரனை அணைத்துக் கொல்வது என முடிவெடுத்தனர்.

‘ஆதிசக்தியின் ஆலோசனை கேட்டுத் தேவர்களின் குருவான பிரகஸ்பதி மூலம், “நீயே தெய்வம், பின் ஏன் உனக்குக் காயத்ரி மந்திரம்?” என்று புகழச்செய்தனர்’. மந்திரம் சொல்வதை நிறுத்திய அசுரன் முன் ஆதிசக்தி மோகினியாய் நின்றாள். அவளை, அசுரன் நெருங்குகையில் தேனீயாகிக் கொட்டிக் கொன்றான், என்கிறது கட்டுரை. இங்குதான் பார்ப்பனர் சூழ்ச்சியும், திராவிடர் வீழ்ச்சியும் நன்கு புரிகிறது. நேருக்கு நேர் மோதி வெற்றி காண இயலாத ஆரியம் பெண்களை விடுத்துக் கதையைச் சரிசெய்ததாகவே புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. மந்திரமோ மண்ணாங்கட்டி, யாகமோ வெறும் தெருப்புழுதி. மோகினிதான் கை கொடுப்பாளென்ற இழிச்செயலுக்குள் இறங்கிச் சாதித்துக் கொண்டதாகக்கதை புனைந்துள்ளனர். இச்செயல் கேவலமென எங்கேணும் ஆரியம் எண்ணியதுண்டா? இல்லையே! ஏன்? அய்யா சொல்கிறார், “பார்ப்பான், தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. காரணம், பார்ப்பான், பிராமணனாக வாழ வேண்டுமே! அதனால்தான் என்கிறார் பெரியார் அவர்கள்.

‘நந்தினி’ பசுவாக வராமல் நதியாக ஓடி வந்தாளாம் ‘நந்தினி நதியில் நடுவில் காணப்படும் லிங்க வடிவப் பாறையே துர்கா பரமேஸ்வரி. விலை மதிப்பில்லாத நம் பொருள் ஏதேனும் பறிபோய்விட்டால் இங்கு முறையிட்டால் திரும்பக்கிடைக்கு மென்பது அய்தீகம்’ என்று முடிகிறது. அது என்னங்கடா அய்தீகம்? ‘உண்மை’ என்று சொல்ல அச்சம் ஏன்? அய்தீகமென்ற திரைமறைவுக்குள் எத்தனை காலம் பதுங்குவீர்கள்?  பாறைக்குரிய வரலாறு இவ்வளவும். பாறைப் பரமேஸ்வரி காவிரி நீரைத் தமிழர்க்கு நியாயமாக வழங்கச் செய்யட்டுமே! சுவிஸ்க்குக் கடத்திய கருப்புப் பணமெல்லாம் உடனே திரும்பிட வழி வகுப்பாளா பாறை பரமேஸ்வரி? வந்தால் தலைக்குப் பதினைந்து லட்சம் தருவாரே நம் பாரதப் பிரதமர். வருமா? ஏனிந்த ஏமாற்று வேலையெல்லாம்?

“மூடப்பழக்கம், முடிவற்றக் கண்ணு றக்கம் ஓடுவதென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்,” என்றாரே புரட்சிக் கவிஞர்.

தங்கள் இனம் காக்கத் தினமலர்கள் பழைமைகளைப் புதுமைகளாக வண்ண மடித்துக் காட்டிடும். வீழ்ந்த திராவிடம் விழிப்புற்றுச் சிந்திக்க வேண்டுமல்லவா! திராவிடர் நலன் பேணும் ‘விடுதலை’ ஏட்டினை வீடுதோறும் வரவழைத்து விவரம் அறிந்திட வேண்டாமா? புனைக் கதைகளுக்குக் காலம் ஒதுக்கி வாழ்வை அழிக்கலாமா? ஆரியம் அணைத்திட இயலாத கொள்கை பெரியாரியம். அஃதோர் எரிமலை. தொட்டால் சாம்பல் மிஞ்சுமென்பது ஆரியத்திற்கு தெரியும். “இந்துமதம் நம்மதம் என்று கருதிக் கொண் டிருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் ‘இமயமலை அளவு’ முட்டாள்தனமாகும்” என்கிறார் அய்யா பெரியார். நம்மில் பலர் இந்துமதத்தை, பார்ப்பனக் கலாச்சாரத் தையே தூக்கிப்பிடித்து விளக்கம் வேறு தந்துகொண்டிருந்தால் நாம் உயர்வ தெப்போது? வாருங்கள் திசைமாறிடுங்கள். தமிழர் தலைவர் தலைமைக்கு வினை தீர்க்கும் வீரராய் நம்மை நாம் ஒப்படைப் போம். நம் சுயமரியாதைப் படை விரையும் வேகத்தில் மோகினிகளும், காயத்ரிகளும் புளுதிப் படலமாகிச் சிதைந்திடட்டும். புதியதோர் அறிவியல் உலகினைத் தமிழர்க்கெனப் படைத்திடுவோம். வாரீர்!.
-விடுதலை ஞாயிறு மலர்,21.10.17

மகாபாரதத்தை எழுதியவரும் சொன்னவரும் சுருக்குப்போட்டுக்கொள்ளவேண்டும்


பாரதக் கதையைத் தோலுரித்துக்காட்டி தமிழர் தலைவர் விளக்கம்



மகாபாரதத்தை எழுதியவரும், சொன் னவரும் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஜாதி வருண பேதங்கள் தலைதூக்கி ஆடுகின்றன என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரை யாற்றினார்.

ராஜதர்மம் எழுபத்தி மூன்றாவது அத்தியாயத்தில் உள்ளதைச் சொல்லு கின்றேன். "அரசன் அறம் பொருள்களைச் சேர்ப்பது மிக்க கடினமென்றறிந்து பொன் னிறமாவது, செந்நிறமாவது கருநிறமாவது உடையவரும், நோயற்றவரும் சுகமுள்ள வரும், கோபமில்லாதவரும், ஆசையில் லாதவரும் எல்லா விசயங்களின்றும் இந்திரியங்களை வென்றவரும் பல சாஸ் திரங்களைக் கற்றவரும் அறிவுள்ளவரு மான பிராம்மணரை சீக்கிரம் புரோகித ராகச் செய்து கொள்ள வேண்டும். "புரோ கிதனாக பிராமணரை வை” என்று சொன்னால் சரியாகப் போய்விட்டது. இதில் நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. நிறத்தைப் பற்றி ஏன் சொல்லுகின்றார்கள்? பொன்னிறமாக இருந்தாலும் வைத்துக் கொள், செந்நிறமாக இருந்தாலும் வைத்துக் கொள். கருநிறமாக இருந்தாலும் வைத்துக்கொள் என்று ஏன் சொல்ல வேண்டும்?. இது சந்தேகத்திற்குரிய ஓர் விசயம்.  உங்களுக்கே அதை விட்டு விடு கின்றேன் (சிரிப்பு கைதட்டல்). அவர்கள் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் பிராமணர்களைத்தான் புரோகிதர்களாக வைத்துக் கொள்ள வேண்டும்.

"ஓ! அரசனே! தர்மபுத்தியுள்ளவரும் மந்திரசக்தியுள்ள வருமான புரோகிதர் எந்த அரசர்களிடமிருக்கிறாரோ அவர் கட்கு அறம் பொருளின்பங்கள் பயன் படுவது திண்ணம். ஓ! யுதிஷ்டிரா! இவ் விசயத்தில், சுக்ராசாரியர் கூறின சுலோ கங்களைத் தெரிந்து கொள் அவற்றின் பொருள்.

புரோகிதனல்லா அரசன் எச்சிலுக்கு ஒப்பாவான் ராட்சர்களும், அசுரர்களும், பிசாசர்களும் சர்பங்களும் பறவைகளும் பகையாளிகளும், புரோகிதனல்லாத அரசனைக் கொல்லுவார்கள் என்பது அதர்வ வேதமறிந்து பிராமணன் எவ்வித யாகங் களிலும் அரசனுக்குப் பிரம்மத்வ மென்னும் வேலையைச் செய்ய வேண் டும். அதர்வ வேதத்தில் சொல்லியபடி எல்லாக் கர்மங்களையும் செய்விக்க வேண்டும்!

எந்த ராஜாவாவது இதைக் கேட்ட பிற்பாடு புரோகிதனை வைக்காமல் இருப்பார்களா?

எவ்வளவு பெரிய அளவுக்கு அப் பொழுதே பிளாக்மெயில் செய்திருக் கிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பார்ப் பனர்கள் பய முறுத்தியிருக்கிறார்கள். அச்சுறுத் தியிருக் கிறார்கள். ஆனால், பல இடங்களில் பார்ப்பனர்கள்தான் மற்றவர்களைக் கொன் றிருக்கின்றார்கள். புஷ்ய முத்ர சுங்கன் போன்ற பழைய வரலாற்றை எடுத்து படித் துப் பார்த்தால் உங்களுக்குத் தெளிவாகத் தெரி யும்.

ராஜதர்மம் எழுபத்தி இரண்டாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது “ஓ! அரசர்களிற் சிறந்தவனே! பிரம்ம தேவரின் முகத்திலிருந்து பிராமணன் சிருஷ்டிக்கப் பட்டான். அவர் கைகளிலிருந்து சத்திரியனும் தொடைகளிலிருந்து வைசியனும் சிருஷ்டிக் கப்பட்டார்கள். ஒ! பரதஸ்ரேஷ்டனே! பிறகு, மூன்று வர்ணத்தார்களுக்கும் பணிவிடை செய்ய வேண்டி நான்காவது ஜாதியான சூத்திரர்களை பிறப்பித்தார்.

பிராமணன் பூமியில் பிறக்கும் போதே எல்லா பிராணிகளுக்கும் தர்மமென்னுங் கோசத்தை ரட்சிக்கச் சக்தி பெற்றவனாயும், பிறக்கிறான்.

பிறவியினால் பிராமணனாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். யார் வேண்டுமானாலும் பிராமணனாகலாம் என்று சொல்லுவது பித்தலாட்டமானது.

ஏற்கெனவே இறையனார் அவர்கள் பேசும் பொழுது ஒன்றைச் சொன்னார்கள். மகாபாரதத்தில் “அனுசாசன பருவத்தில்” ஓர் செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

“சூத்திரர்களிடத்தில் புசிப்பவன், பூமியின் மலத்தையே புசிப்பவனாகிறான். சூத்திரர் களிடத்தில் புசிப்பவன் பூமியின் மலத்தையும் அதிலுள்ள மனிதர்கள், ஜந்துக்களின் ஜல, மலங்களையும் புசித்தவனாவான்.. சூத்திர னிடத்தில் போஜனம் செய்யும் பிராமணர்கள் பூமியின் மலத்தை புசிப்பவரே. சூத்திரனிடம் நேசிக்கும் பிராமணனும், சத்திரியனும், வைசியனும் (ஸ்ந்தியாவந்தனம் முதலிய) கர் மங்களை நன்கு செய்து வந்தாலும் நரகத்தில் வேகவைக்கப்படுகிறார்கள்” என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல எப்படிப்பட்ட உணவு? "குலத்தையும், சாமர்த்தியத்தையும் மகிமை யையும் விட்டு நாய் போன்ற விலங்கு ஜாதி யாகப் பிறக்கிறான். வைத்தியனது அன்னத் தைப் புசித்தால் அது மலத்திற்குச் சமமானது. விபச்சாரியின் அன்னம் மூத்திரம் போன்றது” இவைகள் எல்லாம் எவ்வளவு அசிங்கமான வார்த்தைகள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மூத்திரம் என்று சொல்லட்டும். அது என்ன விபச்சாரியின் மூத்திரம் என்பது. அதற்கு என்ன தனி "அசிடிட்டி இருக்கின்றதா? இல்லை. தனி டிகிரி இருக்கிறதா? அப்படி யானால் அவர்கள் எவ்வளவு கொச்சைப் படுத்துகிறார்கள் பாருங்கள்.

எனவே “சூத்திரனுடன் ஒரு பந்தியில் சேர்ந்து சாப்பிடும் பிராமணனுக்குச் சாஸ் திரப்படி, பாவம் உண்டாகிறது” என்று சொல் லப்பட்டிருக்கின்றது.

இந்த பாவத்திலிருந்து வெளியே வர வேண்டுமானால் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானால், ஏராளமான பார்ப்பனர் களுக்குச் சாப்பாடு போட வேண்டும் என்று இப்படி ஏராளமான செய்திகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கணபதி சாஸ்திரி எழுதிய மகாபாரதம் மட்டும் 1,180 பக்கங்கள். நான் தொடக்கத்தில் பெஞ்சமின் வாக்கர் எழுதிய நூலிலிருந்து சொன்னேன். பிராமண தத்துவத்தைப் பரப்புவதற்காகத்தான் மகாபாரதத்தை எழுதினார்கள் என்று கணபதி சாஸ்திரி எழுதிய நூல் 1180 பக்கங்கள். ஆனால் யோக்கியர் 'சோ' ‘மகாபாரதம் பேசுகிறது' என்ற தலைப்பில் இரண்டு வால்யூம்களை எழுதியிருக்கின்றார்.

சோ அவர்கள் இவ்வளவு பெரிய புத்த கத்தைப் போட்டு 500 ரூபாய்க்கு விற்றிருக் கின்றார். 'சோ' எழுதிய நூலில் சாந்தி பருவத்திற்கு எத்தனை பக்கங்களை ஒதுக்கி எழுதியிருக்கின்றார் என்றால், 93 பக்கங்கள்.

சோ எழுதிய நூலில் இந்த மாதிரி பகுதி இருக்கிறதா? என்றால் இல்லை. ஏனென் றால் அந்த செய்திகளை எல்லாம் இந்த நூலில் போட்டால் இந்த கால கட்டத்தில் வெளியே வரமுடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே மகாபாரதத்தை சுருக்கிய பெருமை நமக்கு உண்டு.

மகாபாரதத்திற்குச் சுருக்குப் போடுகின்ற தன்மையும் நமக்கு உண்டு (பலத்த கைதட்டல்). மகாபார தத்தை எழுதியவரும், சொன்னவரும் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும் (பலத்த கைதட்டல்).

மகாபாரதத்தில் உள்ள எல்லா பகுதி களையும் நண்பர் சிவராசன், இறையன் ஆகியோர்களை வைத்து எடுக்கச் சொன் னேன்.

சாந்தி பருவத்தில் ராஜதர்மம்தான் மிக முக்கிய மானது என்றால் அதில் உள்ள வாசகங்களையாவது இந்த பார்ப்பனர்கள் கையாள வேண்டாமா? அதை எல்லாம் எடுத்து விட்டார்கள். இது மட்டும் 107 பக்கங்கள் கொண்டது. 180 பக்கமாக சொல்லப்பட்ட மகாபாரதத்தில் உள்ள செய்திகளை 93 பக்கமாக குறைத்து அதில் உள்ள பல சங்கதிகளைச் சாப்பிட்டு விட்டார் சோ அவர்கள்.

அதே மாதிரி வர்த்தமான் பதிப்பகத்தின் சார்பில் இப்பொழுது போட்டிருக்கின்ற வியாசபாரதத்தில் 107 பக்கங்கள்தான் இருக்கிறது. எனவே நாம் உரையாற்றினா லும், ஆய்வுரையாற்றினாலும், ஆற்றா விட் டாலும், பெரியார் அவர்களுடைய கண் களுக்குத் தெரிகிறார் (பலத்த கைதட்டல்). இந்த இயக்கம் தெரிகிறது (பலத்த கைதட் டல்). ஆகவே இதனுடைய தாக்கம் என் பதிருக்கின்றதே அவர்களை அறியாம லேயே உள்ளே புகுந்திருக்கின்றது.

எனவேதான் மகாபாரத ஆராய்ச்சி என்ற நூலை நீங்கள் விரைவில் எதிர் பாருங்கள் என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன் இத்தனை நாட்களும் தொடர்ந்து வந்து ஆதரவு காட்டிய நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- ‘விடுதலை’, 13.2.2004

‘விடுதலை ஞாயிறு மலர்’, 21.10.2017