புதன், 23 ஜனவரி, 2019

புராண கலாச்சாரம்?

குந்தி தேவி முதன் முதலில் பிள்ளை பெற்றுக் கொண்டது சூரியனிடம்

சூரியனிடம் சேர்ந்து கர்ணனைப் பெற்றாள்

இந்து  புராணத்தின்படி சூரியனின் மகன்தான் இந்திரன்

அந்த இந்திரன் மூலமாகப் பெற்றெடுத்தவன்தான் arjunan

அப்ப அப்பனிடமும் பிள்ளை பெற்றிருக்கிறாள்

மகனிடமும் பிள்ளை பெற்றிருக்கிறாள்

இதுதான் இந்து தர்மமா?
இதுதான் வாழ்வியல் முறையா?

தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரானது இந்து தர்மம்

- முனைவர் ம.குமரவேல் முகநூல் பக்கம்

ஜெகநாதன் ஜெகன் கருத்து

இந்தமாதிரி புராணங்களில் நிறையவே உண்டு.அதை சொன்னால் அதன் உண்மைத்தன்மை அறியாமல் கோபம் கொள்பவர்களே அதிகம்.உதாரணமாக பிரம்மனின் மகள் முறைதான் சரஸ்வதி.ஆனாலும்.மனைவியாக்கப்பட்டது

தமிழ்காப்பியங்களில் இத்தகைய அசிங்கள் இல்லை.

தளபதி சண்முகம் கருத்து
அப்படி பார்த்தால் நகுல சகாதேவர்களது தந்தையான அசுவினி புத்திர்ரஃகள் கூட சூரியனின் மகன் கள் தான்

23.1.18

வெள்ளி, 18 ஜனவரி, 2019

கவுரவர் 100 பேர் டெஸ்ட் டியூப் குழந்தைகளா?

டெஸ்ட் டியூப் குழந்தை என்றால் என்ன என்றே தெரியாதவர்களின் உளறல்!


***மஞ்சை வசந்தன்***
பாண்டு மகாராசா தன் மனைவி குந்தி தேவியைப் பார்த்து, கிந்தம முனிவரின் சாபத்தால் நான் உன்னிடம் குழந்தை பெற முடியாத வகையில் உள்ளேன். எனவே, முனிவர் மூலமாகவோ, தேவர் மூலமாகவோ குழந்தை களைப் பெற்றுக்கொள் என்று குந்தி தேவிக்கு அனுமதியளிக்கிறான்.

கணவனின் வேண்டுகோள்படி எமதர்மனுடன் குந்தி தேவி உடலுறவு கொண்டு தருமனைப் பெற்றாள். குந்திக்கு குழந்தை பிறந்ததை அறிந்த காந்தாரி ஆத்திரம் பொங்க, என் வயிற்றில் இரண்டு வருடங்களாக கரு வளர்ந்தும் குழந்தை பிறக்கவில்லையே என்று உணர்ச்சிவயப்பட்டு, தன் வயிற்றில் அடித்துக்கொள்ள, அந்த அடியால் அவள் வயிற்றிலிருந்த கரு, கருப்பை யோடு கீழே குருதி சொட்ட வந்து விழுந்தது.

வியாசன் அந்தக் கருவை நூறுகூறு செய்து நெய் நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப் பகுதியை ஒரு கலசப் பானையிலிட்டு வைத்தான்.

சஞ்சலமானகோசத் தசையினைத் தாழிதோறும்

எஞ்சலவாகநூறு கூறுசெய்திழுதிலேற்றி

நெஞ்சலர்கருணையாள னின்றவக்குறையுஞ்சேர்த்தி

அஞ்சில்வார்குழலியாகென்

றாங்கொருகடத்தில்வைத்தான்.

காந்தாரியின் வயிற்றிலிருந்து கருப்பையுடன் வீழ்ந்த கருவை வியாசர் நூறு கூறாக ஆக்கி, ஒவ்வொன் றையும் நெய்யுள்ள கலயத்தில் போட்டார். அந்த சதைப்பிண்டம் ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக கலயத்துள் பிறந்தது என்கிறது மகாபாரதம்.

கரு பத்து மாதத்திற்குமேல் வயிற்றில் இருக்காது. 10 மாதத்திற்கு முன்புகூட குழந்தை பிறந்துவிடும். அப் படிப் பிறக்காமல் போனால் தாயும் குழந்தையும், இறந்து போவர். இதுதான் உலகம் அறிந்த அனுபவ உண்மை.

ஆனால், இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா? இரண்டு வருடமாக காந்தாரி வயிற்றிலே கரு அப்படியே இருந்ததாம். இதுதான் அறிவியலா? மகப்பேறு அறிவியல் இப்படித்தான் சொல்கிறதா? இக்கருத்து மகப்பேறு அறிவியலுக்கு எதிரானது, மூடத்தனமானது, அறியாமை யில் பிதற்றியது என்பது விளங்கவில்லையா?

அடுத்து, கருவைச் சுமந்து கொண்டுள்ள பெண் தன் வயிற்றில் அடித்தால், கரு கலையும். கலைந்த கரு இறந்துபோகும். இதுதான் அறிவியல்.

ஆனால், இந்துமதம் என்ன சொல்கிறது தெரியுமா? கலைந்த கரு இரத்தமும் சதையுமாய் வெளிவர அதை துண்டுகளாக வெட்டி, 101 கலயங்களில் மூட 101 குழந்தைகள் பிறந்தன என்கிறது இந்து மதம்.

வயிற்றில் உள்ள ஒரு கரு கலைந் தால், 100 குழந்தைகள் எப்படி பிறக்கும்? கரு கலைந்தால் அக்கரு இறந்து போகும் என்பதே அறிவியல். ஆனால், கலைந்த கருவை 101 கலசத்தில் அள்ளி வைத் தார்களாம்? ஏன் கலசத்தில் அள்ளி வைக்க வேண்டும். கலைந்த கருவை குப்பையில்தானே போடுவார்கள்?

ஒரு கருவுற்ற பெண் தடுமாறி கீழே விழுந்தால் அவள் வயிற்றிலுள்ள கரு கலைந்து போகும். அந்தக் கருவை அள்ளி ஒரு கலயத்தில் போட்டு மூடினால், அது குழந்தையாக மாறுமா?

அப்படியிருக்க இப்படியொரு அறிவுக்கும், உண்மைக்கும், நடப்பிலும் பொருந்தாக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப் படையாகும்?

இவை சோதனைக்குழாய் குழந் தைகள் என்கிறார் ஒரு துணைவேந்தர்.

அது மட்டுமல்ல, கலைந்த கரு கலசத்தில் அள்ளி வைக்கப்பட்ட முறையைக் கொண்டுதான் குளோனிங் முறையைக் கண்டுபிடித்தார்கள் என்பது அதைவிட அறிவற்ற பிதற்றல் அல்லவா?

குளோனிங் என்பது ஒரு உயிரணுவைக் கொண்டு அந்த உயிரினத்தை உருவாக்குதல் ஆகும். அதற்கும், கலசத்தில் அள்ளி வைப்பதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

டெஸ்ட் டியூப் குழந்தை என்பது என்ன?


டெஸ்ட் டியூப் குழந்தை என்றால், டெஸ்ட் டியூப்பில் குழந்தை வளரும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் முட்டாள்தனத்தின் விளைவே அந்தத் துணைவேந்தரின் கருத்து. டெஸ்ட் டியூப் குழந்தை என்பது டெஸ்ட் டியூபில் வளர்ந்த குழந்தை என்று பொருள் அல்ல.

கருப்பைப் பாதையில் அடைப்பு இருக்கும் பெண் களுக்கு உடலுறவு மூலம் ஆணின் விந்தணு கருப் பையுள் செல்லாது. எனவே, ஆணின் விந்தணுவையும், பெண்ணின் சினை முட்டையையும் எடுத்து அதை டெஸ்ட் டியூபில் சேர்த்து கருத்தரிக்கச் செய்வர். கரு உருவானவுடன் அதை ஊசியின் வழி பெண்ணின் கருப்பையுள் செலுத்துவர். பிறகு அக்கரு தாயின் கருப்பையுள் வளர்ந்து வழக்கம்போல அவள் பிள்ளை பெறுவாள்.

கருப்பையும் சரியில்லாத பெண்களுக்கு, வேறு ஒரு பெண்ணை வாடகைக்கு அமர்த்தி அவள் கருப்பையுள் டெஸ்ட் டியூபில் உருவான கருவை ஊசிமூலம் செலுத்தி அப்பெண்ணின் வயிற்றில் அக்குழந்தை வளர்ந்து அவள் பெற்றெடுப்பாள். இதுதான் டெஸ்ட் டியூப் குழந்தை என்பது. ஆனால், இந்த அறிவியல் உண்மை அறியாத அடிமுட்டாள்கள் அறிவியல் மாநாட்டிலே கவுரவர்கள் கலசத்தில் பிறந்தவர்கள், அவை டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்று பிதற்றுகின்றனர்.

இதைவிட அந்த அறிவியல் மாநாட்டிற்கு கேவலம் உண்டா? இந்த ஆளெல்லாம் துணைவேந்தர் என்றால் அப்பல்கலைக்கழகம் உருப்படுமா?

இன்னும் வேடிக்கை என்னவென்றால் குழந்தை பிறப்பது பற்றி இந்து மதம் கூறுவதுதான்.

ஒரு பெண்ணுடன் ஓர் ஆண் உடலுறவு கொண்டு அவனது விந்தணு பெண்ணின் கருப்பையில் உள்ள சினை முட்டையுடன் சேர்ந்து கருவுண்டாகி அது வளர்ந்து குழந்தை பிறக்கும்.

ஆனால், இந்து மதம் குழந்தைகள் எப்படிப் பிறந்தன என்கிறது தெரியுமா?

கிருபர், கிருபி பிறப்பு


கவுதம முனிவரின் பிள்ளை சரத்வான். ஒருமுறை ஜாலவதி என்ற தேவகன்னிகை அவர் ஆசிரமத்தருகில் ஒற்றைத் துணியுடன் சென்றாள். முனிவர் கண்டார். விந்து வெளிப்பட்டது. அது நாணல் தண்டில் விழுந்தது. இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. அவற்றிலிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை யொன்றும் பிறந்தன. காட்டிற்கு வேட்டையாடச் சென்ற சந்தனு அவர்களை எடுத்து கிருபையோடு வளர்க்கிறார். ஆண் குழந்தை கிருபாச்சாரியாகிறது. பெண் குழந்தை கிருபியாகி பின்னர் துரோணரை மணக்கிறாள்.

துரோணர் பிறப்பு


கங்கை பிறக்கும் இடத்திற்கு அருகில் பரத்வாஜ முனிவர் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவர் கங்கையில் நீராடிக் கொண்டிருந்த க்ருதாசி என்ற தேவகன்னி கையைக் கண்டு காமுற்றார். வெளிப்பட்ட விந்தை அந்த முனிவர் துரோணம் என்ற பாத்திரத்தில் ஏந்திக் கொண் டார். அதிலிருந்து பிறந்தவரே துரோணர். அயோநி ஜனாகப் பிறந்தவர். (யோனி x அயோனி)

அசுவத்தாமா பிறப்பு


துரோணர் மனைவியாகிய கிருபியின் கற்பினை நாரதரால் அறிந்த ருத்திரன், அதனையறிய நிருவாண பிச்சை கேட்டு அவள் அழகினைக் கண்டு விந்தைத் தட்டிலிட அதனை அவள் துரோணர் குதிரையிடம் வைத்ததனால் குதிரையின் முதுகைக் கிழித்துக்கொண்டு அசுவத்தாமன் பிறந்தான். (அசுவம் - குதிரை)

('அபிதான சிந்தாமணி', பக்கம் 24, 1934 - பதிப்பு)

துருபதன் எப்படிப் பிறந்தான்?


மகனில்லாத பாஞ்சால அரசன் தனக்கு மகன் வேண்டித் தவம் செய்ய காட்டிற்குச் செல்கிறான். பல ஆண்டுகள் கடுந்தவம் செய்கிறான். அப்போது மேனகை அசோக மரங்களினூடே மறைந்து மெல்ல நடந்து வந்தாள். அரசன் அவளைப் பார்த்து விட்டான். அவள் இவனருகில் வந்தபோது இவனது விந்து வெளிப்பட்டு கீழே விழுந்துவிட்டது. அவ்வரசன் வெட்கத்துடன் கால்களினால் அதனை மறைத்தான். அதிலிருந்து ஒரு மகன் தோன்றினான். அங்கிருந்த முனிவர்கள் அந்தப் பிள்ளைக்குத் துருபதன் எனப் பெயரிட்டனர். (த்ரு  - மரத்தடியில், பதன் - கால் வைத்ததனால் உண்டானவன்) அவனே பின்னர் பாஞ்சால நாட்டு அரசன் ஆகிறான்.

எப்படிங்க... இப்படி அறிவற்று உளறும் இந்து மதம் தான் அறிவியலுக்கு அடிப்படையா?

இவை மட்டுமல்ல, கர்ணன் பிறப்பு பற்றியும், பாண்டவர்கள் பிறப்பு பற்றியும் இந்து மதம் என்ன சொல்கிறது தெரியுமா?

பாண்டவர் பிறப்பு


சூரியனை தியானித்து கர்ணனைப் பெற்றாள். பாண்டுவின் அனுமதியின் பேரில் குந்தி எமதர்ம தேவனுக்குத் தருமரையும், வாயுதேவனுக்குப் பீமனையும், இந்திரனுக்கு அருச்சுனனையும் பெற்றாள். மாத்திரி அசுவின் தேவர் மூலம் நகுல சகாதேவர்களை ஈன்றாள்.

இதில் முக்கிய செய்தி என்னவென்றால் குந்திதேவி எமனுடன், வாயுவுடன், இந்திர னுடன், மாத்திரி அசுவினி தேவர்களுடன் உடலுறவு கொண்டு பெறவில்லை. இவர்களை மனதால் தியானித்தாளாம் (நினைத்தாளாம்). உடனே குழந்தை பிறந்துவிட்டதாம்! எப்படிங்க?

ஒருவரை மனதால் நினைத்தாலே வயிற்றில் கருவுண்டாகும் என்று உலகில் எந்த அறிவியல் கூறுகிறது? சொல்லுங்க! இதைவிட ஓர் அறிவில்லா உளறல் உலகில் வேறு இருக்க முடியுமா? இந்த இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட எந்தப் பித்தலாட்டமும் செய்வர், எந்த மோசடியும் புரிவர் என்பதற்கு இந்து மதம் அறிவியலுக்கு அடிப் படையென்பதும், இதிகாச காலத்திலே இராக்கட், விமானம், ஏவுகணை எல்லாம் இருந்தது என்பதும் எடுத்துக்காட்டு. இராமாயண காலத்தில் விமானம் இருந்தால் இலங்கைக்குச் செல்ல ஏன் அணை கட்ட வேண்டும்? விமானத்திலே சென்றிருக்கலாமே! ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பார்ப்பனர்களும், அவர்களது கைக்கூலிகளும் பதில் சொல்வார்களா?

- விடுதலை நாளேடு, 12.1.19

வெள்ளி, 11 ஜனவரி, 2019

கொள்ளைக்கார - அய்யப்பக் கடவுள்நம் நாட்டைப் பொறுத்தவரை சீசனுக்கு ஒரு கடவுள். இது அய்யப்பன் சீசன்!' எங்கு பார்த்தாலும் அய்யோ அப்பா' என்ற அவலக் குரல்கள் கேட்கத் துவங்கி விட்டன. தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம். கூழாங்கற்கள் - கடவுள்களாகப் பெருகிக் கிடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சக்தி இல்லையென்று கருதித்தான் கேரள மாநில கடவுளையும் கடன் வாங்குகிறார்கள் போலும்!
அய்யப்பன் ஒரு கொள்ளைக்காரனே!
அய்யப்பன் சபரிமலைப் பகுதியில் உள்ள பம்பா என்னும் ஆற்றங்கரையில் சிறு குழந்தைப் பருவத்தில் கண்டெடுக்கப் பட்டான். ஒழுக்கந் தவறியவள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பெற்றுத்தூக்கி யெறிந்து விட்டுச் சென்றிருக்கிறாள். வேட்டைக்குக் காட்டிற்கு சென்றவர்கள் இந்த ஊர் பேர் தெரியாத குழந்தையைக் கண்டெடுத்து, அரசனிடம் சேர்ப்பித்தனர். அரசனோ புத்திர பாக்கியம்' இன்றி வருந்திக்கொண்டி ருந்தான். இந்த நிலையில் இந்தக் குழந் தையை எடுத்து, சீராட்டிப் பாராட்டி வளர்த் தான்-மணிகண்டன் என்று பெயருமிட்டான்.
இதற்கிடையில் அரசன் மனைவி கரு வுற்று. ஒரு ஆண் குழந்தையை ஈன்றுவிட் டாள். இருவரும் வளர்ந்து பெரியவர்களான பிறகு, இளவரசுப் பட்டம் யாருக்கென்று சர்ச்சை எழுந்தபோது, ராணி, தன் வயிற்றுப் பிள்ளைக்கே நான் இளவரசுப்பட்டம் என்று கூறினாள். வேறு வழியின்றி மணி கண்டன் தன் பிறந்த வீட்டுக்கே - அதாவது காட் டுக்கே சென்று விட்டான், அவனோடு அவனது தோழர்களும் சென்றனர். நாளடை வில் இந்தக் கூட்டம் கொள்ளைக் கூட்ட மாக, உருவெடுத்தது, வழிப்பறியில் தீவிர மாயினர். அந்தக் கூட்டத்திற்கு மணிகண் டன் தலைவனானான். சுற்றுப்புறங்களில - இவர்கள் கொள்ளையடிக்கச் சென்ற போது, மணிகண்டனை கண்ட பொது மக்கள், அய்யோ அப்பா'' என்று கூச்சல் போட்டனர். அந்தக் கூச்சலே நாளடைவில் அவனுக்கே பெயராகிவிட்டது. இரவில் திருடச் செல்லவும், காட்டில் மறைந்து வாழவும் கருப்புடைகளை மேலும் கீழும் அணிந்து கொண்டனர். ஆளுக்கொரு தீப்பந்தமும் தடியும் வைத்துக் கொண் டனர்.
கொள்ளைக்கூட்டத் தலைவனான அய்யப்பன் முதுமை அடைந்து நோயால் மாண்டான். உடனே அவனது சகத் தோழர்கள் அவனுக்கு மலை உச்சியில் நடுகல் நட்டுக் கோயிலும் எழுப்பினர். அந்தக் கோயிலுக்குச் செல்ல பதினெட்டுப் படிகளும் வெட்டி வைத்தனர். அய்யப்ப னின் முன்னோடியாக இருந்த கருப்பு'' என்பவன் மாண்டதும் அந்தப் படிக் கட்டுக் குப் பக்கத்தில் புதைத்துப் பதினெட்டாம் படிக் கருப்பு'' என்று ஒரு 'தெய்வமாக்கினர்.
மலைவாசிகள் இறந்தவர்களைப் புதைத்துக் கல்நட்டு ஆண்டுக்கொருமுறை படையல்போட்டு, ஆடிப்பாடிக் களிப்பது வழக்கம். இந்த முறையிலேயே அமைந்தது தான் இந்த அய்யப்பன் கோயிலும் பூசையும். இப்படியொரு கர்ண பரம்பரைச் செய்தி!
பக்தர் ஒருவரின் முக்கிய வேண்டுகோள்

முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தனில் புண்ணிய கோட்டி விமானத்தின் கீழே அக்னியில் அவதாரம் செய்த சிறீவரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி மரத்தினாலான பழைய மூலவர் சின்னம் ஆன காரணத்தால் முன்புறம் உள்ள புஷ்கரணிகுளத்திலுள்ள மண்டபத்தில் அத்திமரம் தண்ணீருக்கு மேலே மிதந்து வராமாலிருக்க சில நாகம் உருக்கொண்ட பாராங் கற்களை வைத்து மூழ்கடிக்க செய்துள்ளார்கள். இந்த பின்ன மான அத்தி மரத்தினாலான "அத்தி வரதரை" 48 வருடங் களுக்கு ஒரு முறை குளத்திலுள்ள தண்ணீர் கால்லாவற்றையும் இறைத்து வெளியே கொண்டு வந்து சுத்தம் செய்து பொது மக்கள் தரிசனத்திற்காக 48 நாட்கள் காட்சிப் பொருளாக வைப்பார்கள். இந்த பின்னமான அத்திமர சிலைக்கு எந்த விதமான பூஜை, புனஸ்காரங்கள் ஏதும் கிடையாது. ஆனால் கோவிலில் சில பூஜாரிகள் கற்பூர ஹாரத்தி தட்டை ஏந்தி கொண்டு, வரும் பக்தர்களிடம் பண வசூல் செய்வதற்காகவும், புஷ்பம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நெய்வேத்யம் செய்வதற்காகவும் நிற்கிறார்கள். இந்த பின்னமான அத்தி வரதர் சிலைக்கு பூஜை சேவை சாத்துமறை ஏதும் கிடையாது. வரும் 2019 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இந்த அத்தி வரதரை குளத்திலிருந்து வெளியே எடுக்க போவதாக, தெரிகிறது. ஆகையால் இந்த அத்தி வரதர் சிலையை காட்சிப் பொருளாக ஏதோ ஓர் மண்டபத்தில் வைத்து பக்த கோடிகள் வலம் வர செய்ய வேண்டும். இந்த சிலையை வைத்து கோவிலில் உள்ள பூஜாரிகளோ, நுழைவு கட்டணமோ, உண்டியோ வைக்கக் கூடாது. தங்கள் வசூலுக்காக எடுப்பதானால் அத்தி வரதரை குளத்திலிருந்து எடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இந்த அத்தி வரதரை நம்பி நிறைய பேர்கள் கனவுலகத்தில் பேராசை கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த கடிதத்தை படித்து இதற்கு ஒரு நல்ல நியாயமான முறையில் நடத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு திருக்கோயில் ஆகம பூசாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள 205 பேர்களை சாதி சமய வேறின்றி இந்த நிகழ்ச்சியின் பணியில் அமர்த்தி அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுகிறோம். இதனால் தமிழ்நாடு அறநிலையத் துறைக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள, திருக்கோயிலில்
அக்கறை உள்ள பக்தர்கள்.
பக்தி என்பது பிசினஸ் என்ற காஞ்சி சங்கராச் சாரியார் - மறைந்த ஜெயேந்திரர் வாய்க்கு ஒரு கிலோ சர்க்கரையை போட வேண்டும்.

ஒரு புராண - புளுகு புத்திரனே அய்யப்பன்
அடுத்த ஒரு புராண அண்டப் புளுகைக் கேளுங்கள்! பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோ சனை இன்றி கேட்ட வரத்தினைத் தருவ தாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஸ்பமாகி விடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே அளித்தான். வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினால், சிவன் ஓடினான்; விட வில்லை பத்மாசூரன்'விடாதே பிடி' என்று விரட்டினான்.
இந்த நிலையில் தனது மைத்துனருக்கு மோசம் விளைந்ததே என்று கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி விஷ்ணு, மோகினி உருவெடுத்து எதிரே வந்தான். பத்மாசூரன் மதிமயங்கி மோகி னியிடம் நெருங்கினான். 'இப்படி வந்தால் இணங்கமாட்டேன்; குளித்து சுத்தமாய் வரவேண்டும்' என்று கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து பஸ்பமாகி விடுகிறான்.
பிறகு, பயந்து ஒளிந்திருந்த சிவனை விஷ்ணு அழைத்து நடந்ததை கூறினாள். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டது. அந்த மோகினி உருவத்தை மீண்டும் காட்டச் சொன்னான். விஷ்ணு மீண்டும் மோகினி உருவெடுத்தாள் அவ்வளவு தான் சிவன் நிலை குலைந்தான். அவனோடு கூடினான். வெளி வந்த இந்திரியத்தைக் கையிலே பிடித்தால்.  ரிஷிப்பிண்டம் இராத் தங்காது' என்றபடி கையிலே - பிள்ளை பிறந்தது. கையிலே பிறந்ததால் 'கையப்பன்' என்றும், நாளடைவில் அய்யப்பன் என்றும் மரு விற்று என்று இப்படியொரு கதை. அரிக்கும் அரனுக்கும் பிறந்ததால் அரிஹரப் புத்திரன்' என்ற பெயரும் உண்டு என்பர்.
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
முதல் கதையின்படி கொள் ளைக் கூட்டத்தலைவன் அய்யப்பன், இரண்டா வது கதையின்படி அசிங்கத்திலும் ஆபாசத் திலும் பிறந்தவன்" அய்யப்பன். ஆணுக்கும் ஆணுக்கும் கலவி நடந்தது-பிள்ளை பிறந் தது என்ற ஆபாசத்தைப் பக்தியாக்கிய நாடு உலகில் உண்டா?
கடுகத்தனை அளவுக்குக்கூடப் பொருத்த மற்ற இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இருக்கின்றதா 'அய்யப்பன்' சங்கதிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம், பக்திவேஷம் என்றால், இது அசல் வெட்கக்கேடு அல் லவா? பாமரர்கள் மட்டுமல்ல, படித்தவர் களும் பட்டதாரிகளும்கூட அய்யோ அப்பா சரணம்'' என்று காட்டுக் கூச்சலிட்டு, அலைகின்றார்கள் என்றால், அவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
அய்யப்பனுக்குச் சக்தி இருந்தால் அந்தக் கோயில் சமீபத்தில் தீப்பற்றி எரிந் ததே, எங்கே போயிற்று அந்த சக்தி? நக்சல் பாரிகள் கடவுள் மறுப்பு சுலோகத்தை அந் தக் கோயில் சுவர்களில் எழுதிய போதும், ஒட்டியபோதும் எங்கே போனான் அந்த அய்யப்பன்?
அய்யப்ப பக்தர்களே! சிந்தியுங்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்!! தெளிவு பெறுங் கள் - திருத்தம் அடையுங்கள்.
-  விடுதலை ஞாயிறு மலர்,

சபரிமலையில் பெண்கள்: மலையாள பத்திரிகை படப்பிடிப்புவயது வேறுபாடின்றி, பெண்கள், சபரி மலை சன்னிதானம் சென்று, தர்ம சாஸ்த் தாவை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், எப்போதும் அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், உண்மை அதுதானா?
2012ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி, மலையாள பத்திரிகைகள் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன....
ஆபிரகாம், தடியூர் என்ற மலையாள பத்திரிகை நிருபர், இப்போது, அந்த செய் தியையும், அதன் பின்னர் நிகழ்ந்தவற் றையும் நினைவு கூர்கிறார்...
அன்று, சபரிமலை சன்னிதானத்தில், சில பெண்கள் கூட்டமாக வந்து, தர்ம சாஸ்த் தாவை தரிசித்ததை கண்டேன்; அந்த பெண்களுக்கு, போலீஸ் காவல் இருந்தது.. பத்திரிகையாளர் எவரையும், புகைப்படங் கள் எடுக்க, முதலில் அனுமதிக்கவில்ல; ஆனாலும், நாங்கள், பெரும் பாடுபட்டு, புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிகை களில் செய்தியும் வந்தது!நாங்கள் சபரிமலை தந்திரிகளிடம், விசாரித்த போது, அந்த பெண்கள் அனைவரும், கொல்லம் நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர், சுனில் சுவாமி என்பவரோடு, மும்பையிலிருந்து வந்த பெண்கள் என்று தகவல் சொன்னார்கள்!
பத்திரிகை செய்திகள் வந்த உடனே, ராகுல் ஈஸ்வர், என்னை தொடர்பு கொண்டு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது.. எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை... ஆனாலும், எனது அம்மா, இதை, பிரச்சினை ஆக்க வேண்டாம்; தொழில் அதிபர் சுனில் சுவாமி, நமக்கு வேண்டியவர் என்பதால், இதை இத்தோடு விட்டு விட வேண்டும்" என்று கூறினார்.
இப்போது, சபரி மலையில், பெண்க ளுக்கு அனுமதி கொடுத்தால், தற்கொலை செய்து கொள்வோம் என்பவர்களோ, அல்லது,
சபரிமலையை, ரத்தக்களரியாக மாற்றி, பெரும் கலவரத்தை தூண்டிவிடும், எவரும், சுனில் சுவாமி, தன்னோடு வந்த, பெண்களையும் சேர்ந்து, சன்னிதானத்தில் நுழைந்து, 2 நாட்கள், சன்னிதானம், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து, சடங்குகளை நிறைவேற்றியதையோ, கண்டு கொள்ளவில்லை!
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாள் முனையும் நீளவில்லை என்பது தான் விசித்திரம்...
இது மட்டுமா? 2032ஆம் ஆண்டு வரைக்கும்,  உதயாஸ்தமய பூஜை செய் யும், டிக்கட்டுகளை, மொத்தமாக, புக் செய்து விட்டு, சட்டப்படி, இப்போதும், சபரிமலை வந்து செல்கிறார், சுனில் சுவாமி!
இதற்கு எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை....
அவர்களுக்கு தெரியும்...
சர்வ வல்லமை மிக்க சுனில் சுவாமி, யாரென்று.
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாளும் நீளாது..
என்ன காரணம் என்று, சங்கிகளுக்கு நன்றாக தெரியும்...
என்ன காரணம்?
அப்போதைய, கேரள மாநில பாஜக தலைவர், இப்போது, ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், சுனில் சுவாமியின், நெருங்கிய நண்பர் என்பது, சங்கிகளுக்கும் தெரியும்; ராகுல் ஈஸ்வருக்கும் தெரியும்...
யார் இந்த ராகுல் ஈஸ்வர்..? சபரிமலையில், வன்முறையை, திட்ட மிட்டு நிறைவேற்றி, தற்போது, கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்...
நன்றி: பதிவர் (RaJ Mohan) 
தகவல்: பஞ்சாட்சரம், திருவண்ணாமலை
- விடுதலை ஞாயிறு மலர், 17.11.18

செவ்வாய், 8 ஜனவரி, 2019

மார்கழிப் பீடை

மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற்காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.

கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்குகின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங்கல்கள் நைவேத் தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர்.

வைதீகர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படுகின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர்.

இவைமட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம். வைணவர்கள் பஜனைமடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்தமாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால்கைகள் குளிரினால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகட வென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள்வார்கள், தெருத் தெருவாக பஜனை செய்து கொண்டு வரு வார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு.

இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்யலாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும்.

இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப்பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!

இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற்காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.

மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத்திற்காக, சீரங்கத் திற்கு ஓடச்செய்கிறது, சிதம்பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர்காலத்தில் - பனிக்காலத்தில் - காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ் வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்!

எதற்காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத் திற்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்கவில்லையா? இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகாதாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லுகிறேன். மதம் என்னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள்தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும்.

மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?

மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள். பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு.

ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதியடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!

மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத்தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே. அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங்களென்றும் திரு நாட்களென்றும் அலைகின்றீர்கள். அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய்யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமையடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வமடையலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை! நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங்களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்ற வில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு ஸ்க்குரூலூஸ் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.

- குடிஅரசு, 27-12-1931இல் ஸ்க்குரூலூஸ்