வியாழன், 29 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 14இராவணன்: பக்தி தலைக்கேறி விட்டதே! பாபம்! வெட்டுண்ட தலைகளைக் கண்டார் - இரக்கம் எழவில்லை - இன்னும் வெட்டப்பட வேண்டிய தலை உண்டா என்று தேடினார் இந்த மகானுபாவர். கம்பரே! இவர் அரக்கரல்ல, அரன் அடியார்! ஒரே ஒரு குழந்தையைக் கண்டார். பரசுராமர்: ஓஹோ அந்தக் குழந்தையின் முகத் தைக் கண்டு இரக்கம் பிறந்ததோ - (விசுவாமித்திரரைப் பார்க்கிறார்.) இராவணன்: இல்லை கோபம் வந்தது, அந்தச் சிசுவையும் இந்தச் சிவபக்தர் கொல்லக் கிளம்பினார். விசுவாமித்திரர்: குழந்தையைக் கொல்ல இராவணன்: அய்யா! வேண்டாம். மற்றவர்கள் சிவசொத்தைத் தின்றார்கள் என்று கொன்று விட்டீர்.

இச்சிசு அக்குற்றமும் செய்யவில்லையே. கொஞ்சம் இரக்கம் காட்டும், இக் குழந்தையைக் கொல்லாதீர், என்று வேண்டிக் கொண்டனர். விசுவாமித்திரர்:  வேண்டிக் கொள்ள... இராவணன் : சிவபக்தர், சீற்றம் தணியாதவராய் இச்சிசு, அதன் தாய்ப்பாலைக் குடித்திருக்குமன்றோ - அந்தப் பாலிலே சிவசொத்து கலந்திருந்ததன்றோ - ஆகவே சிசுவும் கொல்லப்படத்தான் வேண்டு மென்று கூறி, சிசுவைத் தூக்கி மேலுக்கு எறிந்து, கீழே விழும்போது, இடையில் வாளை ஏவி, குழந்தையை இரண்டு துண்டு ஆக்கினார், இரக்கமற்று .

இறைவனின் நற்தொண்டன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, இரக்கமற்ற இவர் அரக்கரல்ல - கம்பரே! நான் அரக்கன். கேட்டால் என்ன சொல்லுவார்? பக்தி அதனால் செய்தேன் என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தேன் என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தார் - காரணம் எதுவோ கிடக்கட்டும் - நடந்தது படுகொலை - இரக்கம் இருந்ததா? துளி! பெண்கள் அழுதபோது? பால் வடியும் முகமுடைய சிசு கதறியபோது? - இருந்ததா - இரக்கம் காட்டப் பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினீரா? இரக்கமற்றுப் படுகொலை செய்தவர் நாயனார் - அடியார் - கொலைக் கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் - தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசு ராமன் - பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் - இவர் களெல்லாம் தவசிகள் - ரிஷிசிரேஷ்டர்கள் - பரமன் அருளைப் பெற்றவர்கள் - நீதிதேவா! நான் அரக்கன் - இவர்கள் யார்? - என்னை விசாரிக்கக் கூடிடும் அறமன்றத்திலே இவர்கள் காப்பாளர் களாம். இரக்கமற்ற இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவா?

குற்றக் கூண்டில் இருக்க வேண்டி யவர்கள்! நீதிதேவா! அறம் - அன்பு - ஏதுமறியாத இவர்கள், அறநெறி காப்பாளர்களா?  (கோபத்துடன், கூண்டை விட்டு இறங்கிச் சென்று) (அறநெறி காப்பாளர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று) இரக்கமற்ற இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவா? (ஆசனத்தைப் பிடித்தாட்ட அவர்கள் அலறுகிறார்கள்) (நீதிதேவன் மீண்டும் மயக்க மடைகிறார். கம்பர் பயந்து, நடுங்கி, அவசர அவசர மாக வெளியே செல்லப் பார்த்துக் கால் இடறிக் கீழே வீழ்கிறார். இராவணன் சென்று அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்துச் செல்கிறான்.)

திராவிட நாடு 8-3-1947)

(முற்றும்)
-  விடுதலை நாளேடு, 26.11.18

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 13

என்பதற்குச் சமாதானம் கூறுவார்கள் - நான் கூடக் கூறினேன் - என்னை அரக்கராக்கிய இந்த அறிஞ ரைக் கேட்கிறேன் - இவர்கள் யார்? அதோ, துரோணாச்சாரி - எவ்வளவு இரக்கமுள்ள மனம், அவருக்கு! மனதாலே, குருவாகப் பாவித்து பதுமை செய்து வைத்து வணங்கிய, வேடர் திலகன் ஏகலைவனை, காணிக்கை கேட்டாரல்லவோ, கைக் கட்டை விரலா - வலது கையாகப் பார்த்து - எவ்வளவு இரக்க சுபாவம்! ஏன் ஆச்சாரியராக்கப்பட்டார். என்னை ஏன், அரக்கனாக்கினீர்? துரோணர்: (துடித்தெழுந்து) நான் கேட்டால், அவன் கொடுக்க வேண்டுமோ! நானா வெட்டி எடுத்துக் கொண்டேன், அவன் கை கட்டை விரலை? இராவணன்:  அவனுடைய தொழிலுக்கும் வில் வித்தைக்கும் எந்தக் கை கட்டை விரல் ஆதாரமோ, அதைக் கேட்டீர், காணிக்கையாக. துளியாவது மனதிலே இரக்கம் இருந்தால் கேட்பீரா! அவனாகத் தானே கொடுத்தான் . என்று வாதாடுகிறீர். அவன் ஏமாளி அல்ல.

உமது கொடுமை கால முழுவதும் உலகுக்குத் தெரியட்டும், ஒரு கட்டை விரல் போனாலும் பாதகமில்லை என்று எண்ணி னான். துரோணர்: அவனாகக் கொடுத்தான் - அவனாகவே தான் கும்பிட்டுக் கூத்தாடினான், குருவே, குருவே, என்று. இராவணன்: அந்த அன்பு கண்டு, நீர் உமது குணத்தைக் காட்டி விட்டீர். கட்டை விரலைக் காணிக்கைக் கேட்டபோது என்ன எண்ணினீர் மனதில். அவன் மறுப்பானா, மறுத்தால் அவனுடன் மல்லுக்கு, நிற்கலாம் - கொல்லலாம் என்று சூதாக எண்ணினீர் - துரோணாச்சாரியே, அவன் உம்மைத் தோற்கடித்தான். அவன் இழந்தது கைவிரல் - நீர் இழந்தது கண்ணியம், கவனமிருக்கட்டும் - இரக்கமற்ற நெஞ்சுடையவர் நீர்,  என்பதை உலகுக்கு உரைத்தான் அந்த உத்தமன் - சொல்லால் அல்ல - செயலால். அவன் விரல் வெட்டப்பட்டபோது இரத்தம் கொட்டிற்றே.

அதைக் கண்டாவது இரக்கம் பிறந்ததோ உமக்கு? துரோணர்: (நீதிதேவனைப் பரிதாபமாகப் பார்த்து)  நீதிதேவா! எங்களை வரவழைத்து, அவ மானப்படுத்தவே, இந்த விசாரணையை நடத்து கிறீரோ என்ன? எப்படி இதை நாங்கள் சகிப்போம்? நீதிதேவன்: நான் என்ன செய்ய? குற்றவாளி எனக் கருதப் படுபவனுக்கு, தாராளமாகப் பேச நமது மன்றம் உரிமை தந்தாக வேண்டுமே. (இலங்கே சனைப் பார்த்து) இலங்காதிபா! ஏன் இவர்களை ஏசுகிறீர்? இவர்களிடம், நம்பிக்கை இல்லை என்று பொதுவாகக் கூறிவிடுமே! இராவணன்: நீதிதேவா நான் மறு விசாரணைக்கு இசைந் ததற்குக்  காரணமே, புது உண்மைகள் தெரியச் செய்ய வேண்டும் என்பதுதான் - விடுதலை கோரி அல்ல - எந்தக் குற்றத்தை என் மீது ஏற்றி, என்னை அரக்கராக்கிக் காட்டினாரோ, அதே குற்றத்தைச் செய்தவர்கள், மகரிஷிகளாய், ஆச்சாரி யர்களாய்.... இதோ...  (கோட்புலியைக் காட்டி) நாயனா ராய் - உயர்த்திப் பேசப் படுகிறார்களே, இது சரியா என்று கேட்கிறேன். ஏசி இவர்கள் மனதைப் புண்படுத்த அல்ல.

இதோ கொலு வீற்றிருக்கிறாரே கோட்புலி நாயனார்... நீதிதேவன்: ஆமாம், சிவபக்தர். இராவணன்: உண்மை - சிவபக்தர் பெரிய போர்வீரர் கூட -  இன்று நாயனார் கம்பர்: செந்தமிழில் சேக்கிழார் இராவணன் : செய்திருக்கிறார் பல செய்யுட்கள், இவருடைய சீலத்தை விளம்பரப்படுத்த.

கோட்புலி : ஈசா! யானோ விளம்பரம் தேடுபவன்? கைலைவாசா! ஏனோ இத்துஷ்ட சிகாமணி என்னை ஏசக் கேட்டும், உன் நெற்றிக் கண்ணைத் திறந்திடக் கூடாது. இராவணன் : அய்யன், வேறு ஏதேனும் அவசர அலுவலிலே ஈடுபட்டிருக்கக் கூடும் - அடியவரே! பிறகு மனுச் செய்து கொள்ளும். நீதிதேவன்: சரி, சரி.. இங்கு இலங்கேசனா கோர்ட் நடத்துகிறார். இராவணன்: இல்லை, தேவா! குற்றவாளிக் கூண்டிலுள்ள நான் என் குறையைக் கூறிக் கொள்கிறேன். வேறொன்றுமில்லை. அய்யா! கோட்புலியாரே! நீர் ஒரு கொலை பாதகரல்லவா? கோட்புலி: (காதுகளைப் பொத்திக் கொண்டு) சிவ; சிவா! கூசாது கொடு மொழி புகல்கிறான் - கேட்டுக் கொண்டிருக்கிறீரே, தேவா. விசுவாமித்திரர்: (கோபித்து எழுந்து நின்று.) நன்று நீதிதேவா, கோட்புலிக்காக மட்டும் இரக்கம் காட்டுகிறீரோ - இது தான் நியாயமோ! இலங்கேசன், நாங்கள் இரக்கமற்றவர்கள் என்று விளக்குவதற்குப் பல கூறினதுபோல், கோட்புலி பற்றியும் கூறட்டுமே, நாயனாருக்கு மட்டும் பாதுகாப்போ? நாங்கள் கிள்ளுக்கீரையோ! நீதிதேவன்: பொறுமை, பொறுமை. இலங்கேசன் இஷ்டம் போல பேசட்டும். கோட்புலியாரே! பதில் கூறும். கோட்புலி: நானா? இவனுக்கா, நாதனின் நல்ல ருளைப் பெற்ற நானா முடியாது...

இராவணன்: எப்படி முடியும் என்று கேட்கிறேன். ஒரு செல்வவான் மூன்றடுக்கு மாடி மீது உலவுகிறான், அவனைக் கண்டோர் அறிவார்களா, அவன், வஞ்சனை, பொய், களவு, எனும் பல படிக்கட்டுகளை ஏறித்தான், சுகபோகம் தரும் அந்த மூன்றாம் மாடிக்கு, வந்தான் என்பதை. இல்லையல்லவா! அதுபோலவே தான், இதோ இங்கு நாயனாராகக் காட்சிதரும் அந்தக் கோட்புலி, பிணங்களின் மீது நடந்து, இங்கு வந்து சேர்ந்தவர். கோட்புலி: பித்தமோ? அன்றி, வார்த்தைகள் யாவும் வெறும் சத்தமோ?

இராவணன்: கோட்புலியாரே, நீர் ஓர் சிவ பக்தர்தானே? கோட்புலி : ஆம், அதற்கும் தடையோ, அரனடியானே யான். இராவணன்: அறிந்தே கேட்டேன் அடியவரே! சிவபக்தியால் நீர் செய்தது என்ன? கோயில் கோயி லாக ஓடினீர், அருள் கிடைத்தது. அதை அல்ல நான் கேட்பது. ஒரு காலத்தில் உமது மாளிகையிலே, ஏராளமாக நெற்குவியல் சேகரித்து வைத்திருந்தீரே.

கோட்புலி: ஆ.. மா... ம். அது.. வா. விசுவாமித்திரர்: ஏன், இழுத்துப் பேசுகிறீர், பொருள், களவோ? இராவணன்: இல்லை, முனிவரே! அவ்வளவு சாமான்யமான குற்றத்தையா இவ்வளவு பெரியவர் செய்வார்? நெல் இவருடையதே. கோயிலுக்கு என்று சேகரித்து வைத்திருந்தார். ஒரு சமயம் அதற்காக ஊரைவிட்டுச் சென்றார் - கடுமையான பஞ்சம் ஊரிலே அப்போது ஏற்பட்டது. அதன் கொடுமை தாங்கமாட்டாமல், மக்கள் ஏராளமாக மடியலாயினர். நீதிதேவன்:  அதற்கு இவர் என்ன செய்வார்? விசுவாமித்திரர்: ஏன், சிவபக்தர் பஞ்சத்தைத் தடுத்திருக்கக் கூடாது என்று கேட்கிறார் இலங் கேசன்? இராவணன்:  இல்லை, இல்லை, அவ்வளவு பெரிய காரியத்தை நான் எப்படி இவரிடமிருந்து எதிர் பார்ப்பேன். நான் சொல்வது வேறு. அந்தப் பஞ்சம், இவருடைய பண்டகசாலையில் தேக்கி வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருள் கிடைத்தால் தலை காட்டியிருக்காது. மக்கள் மடியமாட்டார்கள்.

பிணம் கீழே வீழ்ந்தது - இவர் கிடங்கிலே நெல் மூட்டைகள் ஏராளம். உணவுக்காக வெளியே திண்டாட்டம் - உள்ளே நெற்குவியல் குன்று போல. நீதிதேவன்: விவரம் குறைத்து... இராவணன்: விஷயத்தைக் கூறுகிறேன். பஞ்சத்தில் அடிபட்ட மக்கள், கிடங்கிலிருந்து உணவுப் பொருளை எடுத்துக் கொண்டனர். கோட்புலி: (கோபமாக) என் உத்தரவின்றி - நான் ஊரிலில்லாத போது - சிவகாரியத்துக்கென்று இருந்த என் செந்நெல்லைக் களவாடினர். இராவணன்: களவு அல்ல! பகிரங்கமாகவே எடுத்துக் கொண்டனர் - எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்ற - பிறகு தந்து விடுவோம் என்று எண்ணி.

கோட்புலி : கொள்ளை அல்லவா அது? இராவணன்: கிடங்கிலே நெல்லை, பஞ்ச காலத்தில் குவித்துக் கொள்வது? நீதிதேவன்: அதுவும் குற்றம்தான். இராவணன்: இதற்கு நீர் செய்ததென்ன? கோட் புலியாரே! அன்பே சிவம்! சிவமே அன்பு - அந்தச் சிவத்துக்கு நீர் அடியவர் - அடியாரே! பட்டினிப் பட்டாளம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நெல்லை எடுத்துக் கொண்டனர். சிவத்தொண்டராம் தாங்கள் என்ன செய்தீர்? பரசுராமர் : நியாயமான கேள்வி? நானாவது என் தகப்பனாரின் சொல்லைக் கேட்டு தாயின் தலையை வெட்டினேன் - கோட்புலி செய்தது எனக்கும் கேள்வி தான். ரொம்ப அக்ரமம், ஈவு இரக்கமற்ற செயல்.

இராவணன்: அதுதான் முக்கியம். இரக்கமற்ற செயல். சிவசொத்து, அந்த நெல். அதை யார் தின்றார் களோ அவர்களெல்லாம் சிவத் துரோகிகள். சிவத்துரோகிகளின் சிரத்தை வெட்டாது விடேன் என்று சீறினார். இந்தச் சிவபக்தர்... இல்லையா கோட்புலியாரே? சீறினார் - சீவினார் தலைகளை... பரசுராமர்: பலரைச் சிரச் சேதம் செய்தார். மகாபாபம், ரொம்ப அக்கிரமம்! நான் தாயை மட்டும் தான் கொன்றேன். அதுவும் தகப்பன் பேச்சை எப்படித் தட்டி நடப்பது என்ற காரணத்தால். இராவணன்: இவருக்கு யாரும் கட்டளையிடவில்லை தலைகளைச் சீவச் சொல்லி! கொன்றார் கொன்றார், ஆண்களையும் பெண்களையும் கொன்றார், இரக்கம் துளியுமின்றிக் கொன்றார் - பதைக்கப் பதைக்கக் கொன்றார் - வேண்டினர், கொன்றார்.

காலில் வீழ்ந்தனர். கொன்றார் - கொன்று தீர்த்தார் சகலரையும் - தேவா! குற்றவாளி என்று என்னைக் கறைபடுத்திய கம்பரே! இவர் செய்தார் இக்கொடுமை. விசாரணை உண்டா? இல்லை குற்றம் சாட்டவில்லையே!! குற்றம் சாட்டாதது மட்டுமா, இத்தனை கொலைகளைத் தன் பொருட்டு செய்தாரே, இந்தப் பக்த சிகாமணி என்று மகிழ்ந்து, கைலைக் குன்றி லுள்ள முக்கண்ணன், இவருக்கு அருள் பாலித்தார். நீதிதேவன்: கொடுமைதான். இராவணன்: அது போது, உயிருக்குப் பயந்து அந்த மக்கள் எவ்வளவு கெஞ்சி இருப்பர் - கோட்புலியாரே? எம்மைக் கொல்லாதீர் - உமது காலில் வீழ்கிறோம், வேண்டாம் - தயவு செய்க - எல்லாம் அறிந்தவரே! ஏழைகள் பால் - இரக்கம் காட்டும், என்று எவ்வளவு கெஞ்சியிருப்பர்! விசுவாமித்திரர் : என்னப்பா, அக்கிரமம். அலறித் துடித்து அழுது புரண்டுதான் இருப்பர். கல்லும் உருகுமே அந்தக் கூக்குரலைக் கேட்டால்...

பரசுராமர்: இவ்வளவு பேரைக் கொன்றும் ஆத்திரம் அடங்கவில்லை ?

தொடரும்....

-  விடுதலை நாளேடு, 25.11.18

சனி, 24 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 11நீதிதேவன் : குற்றவாளியெனக் கருதப்படுபவன் மிகச் சாதாரணமானவன் என்று தாங்கள் கூறிட முடியாது. கம்பரே, அவன் தனக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டும் சம்பவங்களையும் சாதாரண மானதென்றும் தள்ளிவிட முடியாது. தன் இசை வன்மையால் பரமனின் உள்ளத்தையே உருக வைத்தவன். ஈடு இணையற்ற கலைஞன். இவை களை இல்லை என்று மறுத்திட எவர் உளர் கம்பரே! அவனுடன் நான் செல்வது, அடாது, கூடாது, என்று கூறுவோர், என்ன காரணம் கூறுவர்.

கம்பர்: மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி நான் ஏதும் அறியேன். நான் கூறுவது, குற்றவாளியெனக் கருதப்படுபவனுடன், தீர்ப்பு கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது, முறையல்ல, சரியல்ல என்று. அவன் விளக்கம் கூற தங்களை அழைக்கிறான் என்றால், என்னையுமல்லவா, உடன் அழைத்துச் செல்ல வேண்டும்? தாங்கள் மட்டும் தனியாகச் செல்வது தவறல்லவோ?

நீதிதேவன்: குற்றம் சாட்டப்பட்டவனை, தனியாக விசாரிப்பதும், குற்றம் சாட்டியவர்களை தனியாக விசாரிப்பதும் பிறகு இருவரையும் வைத்து விசாரணை நடத்துவதும், தீர்ப்புக் கூறு வோனின் முறை அல்லவோ? அது எப்படித் தவறாகும்? கம்பர்: கடல் சூழ் உலகமெலாம், கவிச் சக்கரவர்த்தி எனப்போற்றப்படும் என்னையும், கருணையும், இரக்கமும் இல்லாத அரக்கனையும், ஒன்றாகவே கருதிவிடுகிறீரா, தேவா? ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது, மறு விசாரணை கொள்வதே ஏற்றமுடையதாகாது. அப்படி எடுத்துக் கொண்ட மறுவிசாரணையில் குற்றவாளி யின் பின்னால், தீர்ப்புக் கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது கற்றறிவாளர், ஏற்றுக் கொள்ள முடியாதது, தேவா! நீதிதேவன் : முற்றும் கற்றுணர்ந்தோர் முடிவு கூட கால வெள்ளத்தால், சரியானவை அல்ல என்று மறுதீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதும் தாங்கள் அறியாததல்ல. கம்பர்: நீதிதேவா! தங்களை நிந்திக்க வேண்டு மென்பதோ, தங்கள் மீது மாசு கற்பிக்க வேண்டு மென்பதோ, எனது எண்ணமல்ல. எல்லாவித ஆற்றலும், அறிவும், திறனும் இருந்தது. ஆனால் அன்னை சீதா பிராட்டியாரை, அவன் சிறை வைத்ததும், கொடுமைப்படுத்தியதும், அவனது இரக்கம் இல்லாத அரக்க குணத்தால்தான் என்று நான் எடுத்துரைத்த தீர்ப்புக்கு தங்கள் தீர்ப்பு மாறுபடுமானால், கவிச்சக்கரவர்த்தி கம்பர் மட்டுமல்ல, தேவரும், மூவரும், முனிவரும் பரிகசிக்கப்படுவர். எனவே தங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இரக்கமில்லா கொடுமனம் படைத்தவன் தான் இராவணன், அரக்க குணம் படைத்தவன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை, என்ற தீர்ப்பையே நான் எதிர்பார்க் கிறேன். சென்று வருகிறேன். தேவா.

(கம்பர் போய் விடுகிறார்.)

பணியாள்: என்ன தேவா! இராவணனுடன் செல்வது, தகாது, கூடாது, என்று கூறி விட்டு, கம்பர் தானே தீர்ப்பைக் கூறி, அதன்படி தீர்ப்பும் இருக்க வேண்டுமென்கிறாரே! இது என்ன வகையில் நியாயம் தேவா! நீதிதேவன்: இதுதான் நேரத்துக்கேற்ற, ஆளுக் கேற்ற நியாயம். இலங்காதிபதி, தீர்ப்பைப் பற்றிக் கவலைப் படவில்லை. கம்பர் தன் தீர்ப்பு குற்றமுடையது என்று கூறிவிடப் போகிறார்கள் என்று கவலைப்படுகிறார். உம் பார்ப்போம்.

(காட்சி முடிவு)


காட்சி - 13 இடம் : அற மன்றம் இருப்போர்: நீதி தேவன், இராவணன், கம்பர், விசுவாமித்திரர்.


நிலைமை : இராவணன் வாதாடுகிறான். கம்பர், அலட்சியமாக இருப்பது போல் பாவனை செய்கிறார். விசுவாமித்திரர் திகைப்புற்றுக் காணப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தொல்லை நமக்கு வந்து சேர்ந்ததே என்று நீதிதேவன் கவலைப்படுகிறார்.

இராவணன்: (விசுவாமித்திரரைப் பார்த்து) நாடாண்ட மன்னனைக் காடு ஏகச் செய்தீர்! அரண்மனையிலே சேடியர் ஆயிரவர் பணிவிடை செய்ய, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்த அரசியை அடிமை வேலை செய்ய வைத்தீர். மகன் பாம்பு தீண்டி இறந்தான். சுடலை காத்து நின்றான் கணவன்! செங்கோல் ஏந்திய அவன் கரத்திலே, தவசியாரே! பிணங்கள் சரியாக வெந்து, கருகினவா என்று கிளறிப்பார்க்கும் கோல் இருந்தது.

பெற்ற மகன் பிணமாக எதிரே!

பொற்கொடி போன்ற மனைவி கதறிப் புரண்டிடும் காட்சி, கண் முன்னே.

பிணம் சுட, சுடலைக் காசு கேட்கிறான்!

தன் மகன் பிணமாக, தன் மனைவி மாரடித்து அழுகிறாள் - மாதவம் புரிந்தவரே! மகரிஷியே! அந்த மன்னன், சுடலைப் பணம் எங்கே என்று கேட்கிறான். அய்யோ மகனே! பாம்பு அண்டிக் கடித்தபோது அலறித் துடித்திட்டாயோ, பதறி விழுந்திட்டாயோ - சந்திரமதி புலம்பல்! யாரடி கள்ளி! இங்கே பிணமது சுடவே வந்தாய், கேளடி மாதே சேதி, கொடுத்திடு சுடலைக்காசு! வெட்டியானாகிப் பேசுகிறான் வேந்தன். சுடலையில்!

இதைவிட, கல்லையும் உருக்க வேறு சோகக் காட்சி வேண்டுமா! கல்லுருவமல்ல, கலை பல தெரிந்தவரே! என்ன செய்தீர் இதைக் கண்டு? இரக்கம், இரக்கம் என்று கூறி என்னை இழிவு படுத்தும் எதுகை மோனை வணிகரே மகன் பிணமானான் - மனைவி மாரடித்தழுகிறாள் - மன்னன் சுடலை காக்கின்றான் - பிணத்தை எட்டி உதைக்கிறான். ஏன் இரக்கம் காட்டவில்லை? தபோதனராயிற்றே! நான் தான் அரக்கன், இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லை - இவருக்கு என்ன குறை! ஏன் இரக்கம் கொள்ளவில்லை? கம்பர்: (காரணம், விளக்கம் அறியாமல் இரா வணன் பேசுகிறான் என்று நீதிதேவனுக்கு எடுத்துக் காட்டும் போக்கில்) சத்ய சோதனை யன்றோ அச்சம்பவம்! மூவுலகும் அறியுமே, முடி யுடை வேந்தனாம் அரிச்சந்திர பூபதி சத்யத்தை இழக்கச் சம்மதிக்காமல், சுடலை காத்தது! சோதனை சத்ய சோதனை... இராவணன்: ஆமய்யா ஆம்! சத்ய சோதனைதான் ஆனால் இங்கு தான் இரக்கம் ஏன் அந்தச் சமயத்திலே முனிவரை ஆட்கொள்ள வில்லை என்று கேட்கிறேன். விசுவாமித்திரர் : அரிச்சந்திரனை நான் வாட்டி வதைத்தது, அவனிடம் விரோதம் கொண்டல்ல. இராவணன்: விசித்திரம் நிரம்பிய வேதனை! காரணமின்றிக் கஷ்டத்துக்குள்ளாக்கினீர், காவ லனை இதயத்தில் இரக்கத்தை நுழைய விடாமல் வேலை செய்தீர்! விசுவாமித்திரர்: அரிச்சந்திரன் பொய் பேசாத வன் என்பதை .

இராவணன்: தெரியுமய்யா - இரு தவசிகளுக் குள் சம்வாதம் - அதன் பயனாக நீர் ஓர் சபதம் செய்தீர், அரிச்சந்திரனைப் பொய் பேச வைப் பதாக.. விசுவாமித்திரர்: ஆமாம் அந்தச் சபதத்தின் காரணமாகத் தான். இராவணன்: சர்வ ஞானஸ்தராகிய உமக்கு இரக்கம் எழ வேண்டிய அவசியம் கூடத் தெரிய வில்லை .. விசுவாமித்திரர்: அதனால் அரிச்சந்திரனுடைய பெருமைதானே அவனிக்கு விளங்கிற்று.

இராவணன்: அதுமட்டுமல்ல! உம்முடைய சிறுமைக் குணமும் வெளிப்பட்டது. (விசுவா மித்திரர் கோபம் கொள்கிறார்.) கோபித்துப் பயன்? அவ்வளவு மட்டுமல்ல கம்ப இலக்கணமும் கவைக்கு உதவாது என்பது விளங்கிற்று - இரக்கம் நீர் கொள்ளவில்லை, உம்மை இவர் அரக்கராக்க வில்லை, இலக்கணம் பொய்யாயிற்று! நேர்மை யுடன் இப்போதும் கூறலாம். ஆம்! சில சமயங்களில் தேவரும் மூவரும் தபோதனருங்கூட இரக்கம் காட்ட முடியாத நிலை பெறுவதுண்டு என்று. ஆனால் வேதம் அறிந்தவராயிற்றே! அவ்வளவு எளிதிலே உண்மையை உரைக்க மனம் வருமோ! வெட்கமின்றிச் சொல்கிறீர். நான் அரிச்சந்திரனைக் கொடுமைப்படுத்தியது, அதற்காக இரக்கத்தை மறந்தது அவனுடைய பெருமையை உலகுக்கு அறிவிக்கத்தானே உதவிற்று என்று. நான் ரிஷியல்ல, ஆகவே, நான் ஜானகியின் பெருமை யையும் இராமனின் வீரத்தையும், அனுமனின் பராக்கிரமத்தையும், அண்ணனையும் விட்டோடிய விபீஷணனின் ஆழ்வார் பக்தியையும் உலகுக்குக் காட்டவே இரக்கத்தை மறந்தேன் என்று கூறிப் பசப்பவில்லை. என் பரம்பரைப் பண்புக்கும், பர்ணசாலைப் பண்புக்கும் வித்தியாசம் உண்டு.

தொடரும்..

- விடுதலை நாளேடு, 23.11.18

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 12(இராவணனை அடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வது போலக் கம்பர், நீதி தேவனைப் பார்க்கிறார். மேலும் இராவணன் பேசினால் விசுவாமித்திரன் ஏதேனும் விபரீதமாகச் செய்வார் என்று நீதிதேவனும் பயப்படுகிறார். எனவே, அன்றைய விசாரணையை அந்த அளவோடு நிறுத்திக் கொண்டு அறமன்றத்தைக் கலைக்கிறார்.)

(சபை கலைகிறது.)


காட்சி - 14


(மீண்டும் அறமன்றம் கூடுகிறது.)


இடம் : அறமன்றம். இருப்போர்: அறநெறி கூறுவோர் அறுவர், இலங் காதிபன், நீதிதேவன், கம்பர். (கம்பரும், நீதிதேவனும் வருகின்றனர். ஒருவருக் கொருவர் நமஸ்கரித்துக் கொள்கின்றனர். நீதிதேவன் அமர்ந்ததும் இலங்காதிபன் பேசுகிறான்.)

இராவணன்: (அறநெறி கூறுவோரை நோக்கி) நீதி தேவனுக்குத் துணை நிற்க வந்துள்ளோரே! அறவழி கண்டுரைக்கும் அறிஞரே! உமக்குச் சில சொற்கள். இரக்கமற்றவன் நான், எனவே அரக்கன்; இந்தக் கம்ப இலக்கணத்தை மறுக்கிறேன். கடமை, தவம், தொழில், வாழ்க்கைச் சிக்கல் முதலிய பல கொள்ள வேண்டிய போது, இரக்கம் காட்ட முடிவ தில்லை , முடியாது, கூடாது - இதற்கு ஆதாரங்கள் ஏராளம். மாசற்ற மனைவி மீது அவசியமற்றுச் சந்தேகிக் கிறான், கணவன். அதுவே அறமாகாது. இந்தக் கண வன் செயலிலேயே இறங்கி, தன் மனைவியைக் கொல்லும்படி கட்டளை பிறப்பிக்கிறான். அது கொடுமை அநீதி. (விசுவாமித்திரர், அப்போது பரசுராமனைக் கேலியாகப் பார்க்கிறார். பரசுராமர் தலை கவிழ்ந்து கொள்கிறார்.)

அக்கிரமம் அந்த அளவோடு நிற்கவில்லை. அறநெறி உணர்ந்தோரே! அநியாயமாகத் தன் மனைவியைக் கொல்லத் துணிந்த அந்தக் கணவன், தன் மகனையே ஏவினான் - தாயைக் கொல்லும்படி மகனை ஏவினான் - பெற்றெடுத்த தாயைக் கொல்லும்படி.

பரசுராமர்: (கோபத்துடன்) போதும் அந்தப் பழங்கதை. விசுவாமித்திரர்: (நீதிதேவனைப் பார்த்து சாந்தப் பாவனையில்) குற்றவாளிக் கூண்டிலே நிற்பவன், தன் முழுவாதத்தையும் கூற நாம் உரிமை தருவதே முறை - (பரசுராமனைப் பார்த்து) தடுக்க வேண்டாம். (இராவணனை நோக்கி) தாயைக் கொல்லத் தனயனை ஏவிய... கூறும், இலங்காதிபா! மேலும் கூறும். தாயைக் கொல்ல தனயனை ஏவிய... இராவணன்: தரும சொரூபி! இதோ இருக் கிறாரே (பரசுராமனைக்காட்டி) இவருடைய தகப் பனார் ஜமதக்னிதான்! அக்கிரமக்காரத் தந்தையின் ஆற்றலுள்ள மகன் இவர்! மகரிஷியே! தாயின் தலையை வெட்டினீரே தகப்பனாரின் கட்ட ளையைக் கேட்டு; அப்போது இரக்கம் எந்த லோகத்துக்குக் குடி ஏறிற்று? இரக்கமற்ற நான், அரக்கன்! அறநெறி காப்பாளார் இவர்! பரசுராமர்: (கோபமாக) துஷ்டத்தனமாகப் பேசும் உன் நாவை துண்டித்து விட எவ்வளவு நேரம் பிடிக்கும் (எழுந்து நின்று) எவ்வளவு திமிர்! மமதை! (நீதிதேவனைப் பார்த்து) நீதிதேவா! இராவணன்: (பரசுராமனைக் கேலியாகப் பார்த்தபடி) ஆமாம், தவசியாரே! நாக்கைத் துண்டித்து விடும், இல்லையானால் பலப்பல விஷயம் அம்பலத்துக்கு வந்துவிடும், பாசம், பந்தம் இவைகளை அறுத்துக் கொள்ள முடியா விட்டாலும், தவசிரேஷ்டர்களே உமக்கு, நாக் கறுக்க , மூக்கறுக்க நன்றாகத் தெரியுமே, செய்யும். (நீதிதேவன், எழுந்திருந்த பரசுராமரை, ஜாடை காட்டி உட்கார வைக்கிறார்.)

விசுவாமித்திரர்: (சமாதானப்படுத்தும் முறை யில்) பரசுராமரே! கோபம் கொள்ளாதீர். இராவணன் உம்மைக் குறை கூறுவதாக அர்த்தமில்லை. இரக்கம் காட்டாது இருந்தவர்கள் நான்  மட்டு மல்லாது, பல பேர் உண்டு, வேறு காரணத்துக்காக என்பதை விளக்கத்தான், தங்கள் தாயாரின் சிரத்தைத் தாங்கள் கொய்த கதையைக் கூறினார், என்று நினைக்கிறேன். பரசுராமர்: (ஆத்திரத்துடன் எழுந்து) ஓய், விசுவாமித்திரரே விசுவாமித்திரர்: பொறுமை, பொறுமை! நீதி தேவா! இவ்வளவு தொல்லையும் தங்களால் வந்தது. நீதிதேவன்: முனிபுங்கவரே! என் மீது என்ன தவறு? பரசுராமர், தன் தாயின் தலையை வெட்டியது, ஜமதக்னி கட்டளையால். இலங்கேசன், பரசுராமருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டினான்.

என் மீது மாசு இல்லையே! விசுவாமித்திரர் : உமக்குத் தெரியுமே! இரக்க மற்ற செயலைச் செய்தவர் இந்தப் பரசுராமர் என்று. அப்படி இருக்க, எப்படி அவரை அறநெறி காப்பவராகக் கொண்டீர்! தவறல்லவா அது? பரசுராமர்: (கோபமாக) ஓய் விசுவாமித்திரரே! உம்முடைய யோக்யதையை அறியாமல் என்னை நீதிதேவன் சபையிலே இழிவாகப் பேசிவிட்டீர்... விசுவாமித்திரர்: இழிவு ஏதும் பேசவில்லை. ஸ்வாமி! உண்மையை உரைத்தேன். பரசுராமர்: (ஆத்திரம் பொங்கி எழுந்து) நானும் கொஞ்சம் உண்மையை உரைக்கிறேன் கேளும். ஜடாமுடிதாரி ஒருவர், அய்ம்புலன்களை வென் றவர் - தேவரும் மூவரும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும், தம் எதிரே என்று ஆசை கொண்டு அகோரத்தவம் செய்தவர் - (அனைவரும் விசுவா மித்திரரைப் பார்க்கின்றனர்.) அப்படிப்பட்டவர் - கேவலம், ஒரு கூத்தாடிப் பெண்ணின் கோலா கலத்திலே மயங்கி, தவத்தை விட்டு அவளுடன்...

விசுவாமித்திரர்: மூவரும், மன்மத பாணத்தின் முன், அது போலப் பரிதவித்ததுண்டு, பரசுராமரே! மேன்கையின் மோகன ரூபத்திலே நான் இலயித் தது பெரிய குற்றமென்று கூறுகிறீர் - இது சகஜம்-

பரசுராமர்: (கேலியாக) மேனகையின் மோக னம்! (கோபம் கலந்து) வேத வேதாந்தத்தின் இரக சியத்தை அறிந்து ஜீவன் முக்தராக விளங்கிட வேண்டியவருக்கு, மேனகையின் விழியிலே வழியும் அழகு பற்றி என்னய்யா கவலை? (மற்ற வர்களை நோக்கி அவள் அதரம் துடித்தால் இந்த தபோதனரின் யாக யோகம் துடிக்க வேண் டுமா? தூங்க வேண்டுமா? - இதுவா யோக்யதை. (குரலை மெல்லியதாக்கி) ஆனால் நான் அதைக் கூடக் குற்ற மென்று கூறவில்லை . (சோகக் குரலில் மேனகை யுடன் குலவினீர். குழந்தை சாகுந்தலம் பிறந்தாள் - விழியிலே களிப்புடன், அந்தக் குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு, தேவ மாது மேனகை, உம் எதிரே வந்து நின்று, பிரியபதே! இதோ, நமது இன்பம்! நமது மகள்! என்று கூறி ஆதரவு கோரிய போது, (குரலை மெள்ள மெள்ள உயர்த்துகிறார்.) எவ ளுடன் கொஞ்சி விளையாடி பஞ்ச பாணனை வென்றீரோ, எவளுடைய அன்பைக் கோரிப் பெற்றீரோ, எவளுக்காக கனல் கிளம்பும் யாக குண்டத்தை விட்டு நீங்கி, புனல் விளையாட்டுக்குக் கிளம்பி, புளகாங்கித மடைந் தீரோ.

அந்த அழகு மேனகையை வெறுத்தீர், அழ வைத்தீர் - தவிக்கச் செய்தீர் - வேதனைப்படுத்தினீர் - குழந்தை சகுந் தலையை ஏற்றுக் கொள்ள மறுத்தீர் - கையாலே தொட மறுத்தீர் - கண்ணாலே பார்க்கவும் முடியாது என்றீர் - காதலுக்குத்தான் கட்டுப்படவில்லை - ஒழியட்டும் - காட்டுவாசத்தின் காரணமாக அந்தக் குணம் இல்லை என்று கூட விட்டு விடுவோம் - குழந்தை - சந்திரபிம்பம் போன்ற முகம் - பொன் விக்ரகம் - அந்தக் குழந்தை யின் முகத்திலே தவழ்ந்த அன்புக்காவது கட்டுப்பட்டீரா? ஓய்! புலியும் அதன் குட்டியை அன்புடன் நடத்துமே, புண்ணியத்தைத் தேடி அலையும் புருஷோத்தம னாகிய உமக்குத் துளி அன்பு இருந்ததா - குழந்தையிடம் - எவ்வளவு கல் மனம்? விசுவாமித்திரர்: பரசுராமரே! கோபத்தைக் கிளறாதீர்.

பரசுராமர்: எவ்வளவு இரக்கமற்ற நெஞ்சு - அரக்கர் கூடக் குழந்தைகளிடம் இரக்கம் காட்டத் தவறியதில்லை . உம்மைப் போல, பெற்ற குழந்தை யைத் தவிக்க விட்டு விட்டு பிரியத்துக்குரியவளைத் தேம்பச் செய்துவிட்டு, இரக்கத்தை மறந்து திரிந்தவர்களை, நான் இந்த ஈரேழு லோகத்திலும் கண்டதில்லை. விசுவாமித்திரர்: (கோபம் தலைக்கேறியவராய்) ஓய்! பரசுராமரே! அளவு மீறிப் போகிறீர்.

நீதிதேவன்: இருவருந்தான்! இலங்கேசன் பேச வேண்டிய நேரம் இது; உமக்குள் உள்ள தகராறு களைக் கிளறிக் கொள்ள அல்ல. இராவணன் : நான், அவர்களைக் குறை கூறவில்லை நீதிதேவா! இரக்கமற்ற செயலைச் செய்தவர்கள் அவர்கள், என்பதைக் காட்டுவது அவர்கள் மீது கோபித்து அல்ல ! அவர்களும் பாபம், நிலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே; இரக்கம் கொள்ள முடியவில்லை. அவர்கள் எல்லாம் இரக்கமற்றவர், ஆகவே அரக்கர் என்று இந்தக் கம்பர், ஏன் குற்றம் சாட்டவில்லை ? இது என் கேள்வி! நான் இரக்கமற்றவன், ஆகவே அரக்கன் - எனவே நான் தண்டிக்கப்பட்டதும், என் அரசு அழிக்கப்பட்டதும், தர்ம சம்மதமான காரியம் என்று கவி பாடினாரே, அதற்குத்தான் இப்போது நான் மறுப்புரை கூறுகிறேன். இவர்கள் இரக்க மற்றவர்கள், மறுக்க முடியாது. ஏன் இரக்கமற்று இருந்தனர்.

- தொடரும்

- விடுதலை நாளேடு, 24.11.18