பண்டிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 அக்டோபர், 2019

பண்டிகைகளின் பின்னணி

இந்து மதத்தில் பண்டிகைகளுக்குக் குறைச்சலே இல்லை.

சிறீ அனுமத் ஜெயந்தி, கெர்ப்போட்ட நிவர்த்தி, தை அமாவாசை, மாசி மகம், சிறீ மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சிறீ ராம நவமி, மதுரை சிறீ மீனாட்சி திருக்கல்யாணம், சிறீ கள்ளழகர் எதிர் சேவை, அட்சய திருதியை (தங்கம் வாங்க சிறந்த நாள்), சிறீ மத் சங்கர ஜெயந்தி, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம், சங்கரன் கோவில் தபசுக் காக்ஷி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜெபம், சிறீ மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சிறீ விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, சர்வ மகாளய அமாவாசை, நவராத்திரி, சரசுவதி பூஜை / ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை இத்தியாதி... இத்தியாதி... இத்தியாதி...

பெரும்பாலும் இந்து மதப் பண்டிகைகள் எல்லாம் அசுரர்களை அழிப்பது என்ற மய்யப்புள்ளியை வைத்துச் சுழலுவதாகவே இருக்கும். தீபாவளி என்றால், நரகாசுர வதம், கந்த சஷ்டி என்றால், சூரபத்மன் வதம் - நவராத்திரி என்றால், மகிஷாசூரன் வதம், ஓணம் என்றால் மாவலி வதம்.

அசுரன் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்தரிப்பதுதான் இந்த இதிகாச, புராணங்கள் என்பவை.

திராவிடர்களான அசுரர்களை அழிக்கவே கடவுள் அவதாரம் எடுத்ததாக எழுதித் தள்ளியுள்ளார்கள். அப்படி சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நாளை பண்டிகையாக்கி, கொல்லப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே பண்டிகையாகக் கொண்டாட வைத்துவிட்டனர் என்பது எத்தகைய அவலம்!

ஆண்டு முழுவதும் ஏராளமான பண்டிகைகளைக் குவித்து வைத்துள்ளனர். திராவிடர்களின் அறிவையும், மானத்தையும் இழக்கச் செய்வதுடன், அவர்கள் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பொருளை ஒரே நாளில் நாசப்படுத்தும் ஏற்பாடாகவும் இதனைக் கருதவேண்டும்.

ஒரு கடைசிக் கடவுள் கல் உள்ளவரைக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை, பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்து கல்லுப் போன்ற மிகப்பெரிய உண்மையாகும்.

புரட்டாசியில் நவராத்திரி என்று கூறி ஒன்பது நாள்களை நாசப்படுத்துகிறார்கள். மூன்று நாள் பார்வதிக்கு - 3 நாள் லட்சுமிக்கு - 3 நாள் சரசுவதிக்காம். முறையே சக்தி, செல்வம், கல்விக்கு இந்தக் கடவுள்கள் அதிபதியாம். ஒன்பது நாள்களும் கொலு வைத்து நாள்தோறும் பூஜைகளை நடத்தி மடமைத்தனத்துக்கு மகுடாபிசேகம் செய்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் (அப்படி ஒருவன் இருக்க முடியுமா?), அவனின் பரிவாரங்களும் உலகை இம்சித்துக் கொண்டிருந்தனராம் (உலகத்தையே இம்சித்து இருந்தால் மற்ற மற்ற நாடுகளில் மகிஷா சூரனையும், அவன் பரிவாரங்களையும் மற்ற நாட்டுக்காரர்கள் என்ன செய்தார்களாம்?). அந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட்டனராம். (ஏன் பரமசிவன், விஷ்ணு எல்லாம் இருந்தார்களே!). பார்வதி தேவி ஒன்பது நாட்கள் சிவனைக் குறித்துத் தவமிருந்து அவனிடமிருந்து தக்க சக்தியைப் பெற்று ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று பரிவாரங்களை நாசம் செய்தாராம். மகிஷா சூரனைக் கொன்றதால், பார்வதிக்கு மகிஷாசூரமர்த்தினி என்று பெயரும் வந்து சேர்ந்ததாம்.

பார்வதி தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாளில் வேண்டிய வரங்களை சிவன் அருளினாராம். இந்த நவராத்திரியின் சூட்சமத் தத்துவம் இதுதானாம்.

இடையே இடைச் செருகல். லட்சுமி - செல்வத்தின் அதிபதி அவளை வேண்டினால் செல்வம் பெருகுமாம்.

கல்விக் கடவுளான சரசுவதியை வேண்டிக் கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாமாம்!

சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே - சூத்திரன் படித்தால் நாக்கை அறு என்று என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் சரசுவதி பூஜை கொண்டாடக் கட்டளை இடுவதும், அப்படி சரசுவதியைப் பூஜை செய்தால் கல்வி ஒளி கிடைக்கும் என்பதும் பச்சையான முரண்பாடு அல்லவா!

கல்விக்கென்று கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகளாக மக்கள் கிடந்தது ஏன்? திராவிட இயக்க மும், தந்தை பெரியாரும் அயராது பாடுபட்டதால், நீதிக்கட்சி ஆட்சியால், காமராசர் காட்டிய ஆர்வத்தால், தொடர்ந்து நடைபெற்று வந்த திராவிடர் இயக்க ஆட்சியால் கல்வி வளர்ந்ததே தவிர, சரசுவதி பூஜையாலா? மக்களுக்குக் கல்வி கிடைத்தது? எத்தனை நூறு ஆண்டுகாலமாக சரசுவதி பூஜை கொண்டாடப்படுகிறது!

அப்பொழுதெல்லாம் ஏன் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை? சரசுவதி பெண் கடவுளாக இருந்து பெண்கள் அறவே கல்வியில்லாத களர் நிலமாக ஆக்கப்பட்டது ஏன்? ஏன்?

செல்வத்துக்கென்று ஒரு கடவுள் இலட்சுமி இருக்கும் இந்த நாட்டில் வறுமைக்கோட்டுக்கும் கீழே மக்கள் உழலுவது ஏன்? நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் 77 சதவிகிதம் என்று அரசு புள்ளி விவரம் கூறும் பரிதாப நிலை ஏன்? இரவு சாப்பாடு இல்லாமல் படுக்கைக்குச் செல்லுவோர் இந்தியாவில் 20 கோடி பேர் என்ற நிலை ஏன்? ஏன்?

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? இந்தக் கடவுள்கள் வெங்காயங்கள் எல்லாம் கற்பிக்கப் பட்டவை - மக்களை முட்டாளாக்கி அவர்களின் அறிவை, உழைப்பை, பொருளை முற்றிலும் சுரண்டும் சூழ்ச்சி என்பதல்லாமல் வேறு என்னவாம்?

உழவர் திருவிழா (பொங்கல்), மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்கள், சிந்தனையாளர்களைக் குறிக்கும் நாள்களை நன்றித் திருவிழாவாகவும், அவர்களின் சிந்தனைகளைப் புதுப்பிக்கும் வரலாற்று நாளாகவும் கொண்டாடுவதைப் புரிந்துகொள்ளலாம்.

மக்களை மொட்டை அடிக்கும் பண்டிகைகளைத் தடை செய்தால், அது உண்மையிலேயே மக்கள் நல அரசாக இருக்க முடியும் - சிந்திப்பீர்!

- விடுதலை நாளேடு, 4.10.19

திங்கள், 9 ஏப்ரல், 2018

பங்குனி உத்திரம் என்ற பசப்பு பக்தியின் ஆபாசத்துக்கு எடுத்துக்காட்டு

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக் குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாதங்களில் 12ஆம் மாதமாகிய பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர நாளாகும். நட்சத்திரங்களில் 12ஆம் நட்சத்திரம் உத்தரம். முருகன் கோயில்களில் இந்நாளில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

மீனாட்சி கல்யாணம்

சிவனுக்கும் பார்வதிக்கும் சோம சுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் கூறி, திருமணம் செய்வித்த நாள் பங்குனி உத்தரநாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களின் ஆறுதலுக்காக சிவன் பார்வதியை  மணந்தானாம்.

இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துகள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர் வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப் பார்களாம்.

பங்குனி உத்திரக் கல்யாணத் திருவிழா அன்றைய நாளில் சைவர்கள் விரதமிருப்பர். பகற் பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் இருப்பார்களாம். இத னைக் கல்யாணசுந்தர விரதம் என்கிறார்களாம்..

பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தான். ராமன், சீதையை கரம் பிடித்தான். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தான். அரங்கநாதன் ஆண்டாள் முதலிய கடவுளர்களின் திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றனவாம். இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் கூறப்படுகிறதாம்.

இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருக னையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.

அசுரர்களை முருகன் அழித்த நாளாம்

பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தானாம். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருந்ததாம். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சியில், தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வந்தா னாம்.

அதனால், முருகன், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகா சுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட,  இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப் படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரி சூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண் டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர் களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகனின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதன்மூலம் அறிந்த முருகன், நேர டியாக போர்க்களத்திற்கு  சென்று  கடுமையாக தாக்கினானாம்.

தாக்குதலை சமாளிக்க முடி யாமல் தாரகாசுரன் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந் தான். முருகன், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிய, துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றதாம். அதன் பிறகு முருகன், தெய்வானையை மணந்தானாம். அந்த நாளே பங்குனி உத்திரமாம்.

இப்படி சற்றும் அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு காலங்காலமாக பக்தியின் பெயரால் மக்களை அறி வுக்குருடர்களாக ஆக்கியதுடன், சிறுபிள்ளை விளையாட்டாக திருவிழாக்களை நடத்தச் செய்து, ஏமாந்த மக்களை வஞ்சித்து வருகின்ற பார்ப்பனக்கூட்டத்தின் வஞ்சகத்தைப்புரிந்து கொண்டு விழிப்பை பெறுவது எப்போது? சர்வ சக்தியுள்ளவன் கடவுள் என்றால், அவனுக்கு வேல் எதற்கு? சூலாயுதம்தான் எதற்கு?

எல்லாம் அவன் செயல் என் றால், அசுரர்களின் செயல் யார் செயல்?

அசுரர், தேவருக்குள் பிரச்சினை என்றால், தேவர்களை மட்டும் காக்க வேண்டிய அவசியம்தான் என்ன? கடவுளுக்கு எதற்கு ஆண்டு தோறும் திருமணங்கள்? வைபவங்கள்? விழாக்கள்? அதனால் விளையும் நன்மைதான் என்ன? நேரமும், பொருளும், உழைப்பும் பாழாவதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? பக்தர்கள் சிந்தித்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலைகளிலிருந்து விடுதலை பெற்றிடலாமே!

- விடுதலை நாளேடு, 27.3.18

திங்கள், 8 ஜனவரி, 2018

பங்குனி உத்திரம் என்றால் என்ன?

அது என்ன பங்குனித் திருவிழா?


அந்த நாளில் பங்குனி உத்திர நாளில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்ததாம்.

சிவனுக்கும், பார்வதிக்கும் பல திருமணங்கள் நடந்துள்ளன. பார்வதியை பல உருவங்களில் பிறக்கச் செய்வாராம் பிறகு மணந்து கொள்வாராம். அதனால்தான் சிவன் திருமணம் என்று பக்தர்கள் சொல்லமாட்டார்கள். பார்வதி கல்யாணம் என்றுதான் கூறுவார்கள்.

கல்யாணம் என்றால் விளையாட்டு என்றும் பொருள். சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் என்று தான் சொல்வார்கள். வள்ளித் திருமணம் என்று ஏன் கூறுகிறார்கள்? வள்ளி  தமிழச்சியாம்! கடவுள் பக்தர்களுக்கு மொழி பக்தி கூட உண்டு போலும்!

சிவன்  பார்வதி கல்யாணத்துக்கு உலக மக்கள் எல்லாரும் இமய மலைக்குக் கூடி விட்டார்களாம். எனவே, பளு தாங்காமல் பூமி வடக்குத் திசையில் தாழ்ந்து போய் விட்டதாம். பூமி தட்டையாக  சீசா பலகை போல இருக்கிறதா? என்ன முட்டாள் தனம் பாருங்கள்!

எனவே, பூமியைச் சமன் செய்ய சிவன் ஓர் ஆளை அனுப்பியதாம். அவன்தான் அகத்தியன். குறுமுனி. குள்ள உருவம். 20 கிலோ எடை இருப்பானோ? சந்தேகம்தான்.

அகத்தியன் தெற்கே வந்ததும் பூமித் தட்டை சமனாகி விட்டதாம். கல்யாணம் சங்கடமின்றி நடந்து முடிந்ததாம். அந்த நாள் தான் பங்குனித் திருவிழா.

அன்றைக்கிருந்த மூடர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கமாட்டார்கள் என்று அடித்துவிட்ட கதை. ஆனால் இறைக்கும் இதை ஏன் எதற்கு என்று யோசிக்காமல் தொடர்பவர்களை என்னவென்று கூறுவது?

ஆன்மீகவாதி என்பதா? அடிமுட்டாள் என்பதா?

-முகமது நசீம், பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள், முகநூல் பதிவு, 9.1.18