வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

இராமாயணம் ஒரு கட்டுக்கதை! - செ.ர.பார்த்தசாரதி, சென்னை

 


சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு, பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது 'இருக் வேதத்தில் (இருக வேதம் (57) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள். மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும் முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம் 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு தொகுப்பு | பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு. இந்திய வரலாறு-பக்கம் 118). ("விடுதலை" அசுரன் மலர் 2006, பக்கம் 16] உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு. அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது.
அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம் என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம் வால்மீகியும் கம்பரும், பக்கம் 15)

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறுவது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் இரகு வம்சம் என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது.

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூகனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என்றாலும், பார்ப்பனர்கள் புராணங்களையும். வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ர.பார்த்தசாரதி, சென்னை

- விடுதலை நாளேடு 18.8.2012



புதன், 19 ஆகஸ்ட், 2026

இயேசுவின் விண்ணேற்றம் - செ.ர.பார்த்தசாரதி

 இயேசுவின் விண்ணேற்றம்


- செ.ர.பார்த்தசாரதி


ஏசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பின் கல்லறையில் வைக்கப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் பிறகு 40 ஆம் நாள் விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.


கடைசியாக விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இடம் இப்பொழுது முகமதியரிடம் இருக்கிறது. விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் நாளின் போது (இரண்டு நாள்கள்) மட்டும் கிறித்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் முஸ்லீம்களின் மசூதியாக இருக்கிறது.


'ஏசு சிலுவையில் அறையப்படவுமில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை. சிலுவையில் அறையப்படுவது போல் ஒரு தோற்றத்தை கடவுள் (அல்லா) ஏற்படுத்தினார் என திருக்குர்ஆனில் உள்ளது.(திருக்குர்ஆன் அன்-நிஸா (An-Nisa) 4ஆவது அத்தியாயத்தின் 157-வது வசனம்) 


முஸ்லீம்கள் (அகமதியா பிரிவு) ‘இயேசு யூதர்களிடமிருந்து தப்பித்து இமய மலைப் பகுதியில் வந்து வாழ்ந்து பிறகு இயற்கையாக மரணமுற்றார்’ என்றும் அவருடைய சமாதி காஷ்மீரில் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.


குர்ஆனுக்கு முந்தைய 'தவ்ராத்' வேதத்தில், ‘இயேசுவின் சமாதி, முகமது நபியின் சமாதியின் அருகில் வைக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதாக ‘அல்ஹதீஸ்' என்ற முஸ்லீம்களின் வேத நூலில் உள்ளது. (திர்மிதீ,வசனம் 3,617)


ஆகையினால்தான் இன்றளவும் முகமது நபியின் சமாதியின் அருகில் எதுவும் வைக்கப்படாத காலியான சமாதி ஒன்று இருப்பதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர்.


'இயேசு உயிர்த்தெழுந்து 40ஆம் நாள் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது உண்மையாயின் 'தவ்ராத்'தில் சொல்லப்பட்ட வசனம் பொய்யாகிவிடுகிறது.காலியாக உள்ள சமாதி . அடைக்கப்படாமலே 'தவ்ராத்' வேதம் பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும்.


முஸ்லீம்கள் சொல்வதுபோல் காஷ்மீரில் அவர் இருப்பினும், 'தவ்ராத்' வசனம் பொய்யாகிவிடுகிறது.


இவையெல்லாம் போகட்டும், ‘விவிலியம்' (பைபிள்) என்ன சொல்கிறது என பார்ப்போம்.


'பதினோரு சீடர்களும் இயேசு குறித் திருந்த கலிலேயாவிலே உள்ள ஒரு மலையில் இயேசுவை சந்தித்தனர். அங்கிருந்து அவர் மறைந்தார்" என மத்தேயு கூறுகிறார். (28:16)


மாற்குவும் ‘கலிலேயாவில் பதினொரு வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இயேசு வந்து அவர்களுடன் பேசிவிட்டு பரலோகம் சென்றார் என்றும் கூறுகிறார். (16:7,14,19)


ஆனால் லூக்காவோ 'எருசலேம் அருகிலுள்ள பெத்தானியாவில் சீடர்களை ஆசீர்வதித்துவிட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்' என்று கூறு கின்றார். (24:50,51)


யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையில் சீடர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயேசு வந்து, அவர்களை அழைத்து, பேசிக்கொண்டே சென்றார் (யோவா: 21)


அப்போஸ்தலரோ, ‘எருசலேமுக்கு பக்கத்தில் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு அவரை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது' என்கிறார். அப்போஸ்தலர் (1: 1,9,12)


இந்த அப்போஸ்தலர் (1: 3) மட்டும் தான் ‘இயேசு உயிர்த்தெழுந்து 40 ஆம் நாள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்’ என்று கூறுகிறார். மற்றவர்கள் நாள் கணக்கைச் சொல்லவில்லை.


பக்கம் -13


மத்தேயுவும், அப்போஸ்தலரும் கலிலேயாவில் உள்ள மலையில், இயேசு பரமேறிச் சென்றதாக கூறுகின்றனர்.


ஆனால் யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையிலிருந்து பரமேறிச் சென்றதாக கூறுகிறார்.


இதைவிட அதிசயம் என்னவென்றால் பழைய பாலஸ்தீன தேசத்தில், ஒரு கோடியில் கலிலேயோ இருக்கிறது. இதன் எதிர் கோடியில் எருசலேம் இருக்கிறது. இதன் அருகிலுள்ள பெத்தானியா விலிருந்து இயேசு பரமேறிச் சென்றதாக லூக்கா சொல்கிறார்.


ஏதோ பக்கத்து ஊர்களை சொன்னாலும் பரவாயில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறுகின்றனர்.


இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவர் அருகில் இரு கள்ளர்களையும் அறைந்திருந்தனராம். அவர்களில் ஒருவன் இயேசுவை திட்டினானாம், மற்றவன் வாழ்த்தினானாம்.. வாழ்த்தியவனைப் பார்த்து "இன்றே நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய்' என்று சொன்னாராம்.


இந்த வசனப்படி 'இயேசு 40ஆம் நாள் மேலே சென்றார்' என்பது பொய் யாகிறது. இயேசுவை அறையப்பட்ட அன்றே மேலுலகம் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது.


இதிலிருந்து பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றதனால், இயேசு பரமேறிச் சென்றதாகச்   சொல்லப்படுவது எல்லாம் பொய்யான கட்டுக்கதை என்பதை அறியலாம்.


- உண்மை இதழ், 15.09.1987, 
பக்கம்-13,14

குறிப்பு:- 'கலிலியோ'விலிருந்து 'எருசலேம்' செல்ல இரண்டு பழைய பாதைகள் இருந்தன. 1.'சமாரியா' வழியாக 90 மைல்கள்.
2.'யோர்தான்' ஆற்று வழியாக 120 மையில்கள்.




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! - மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி

 சீதை சிறை வைக்கப்பட்டது எங்கே! 

- மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி


இலங்கை நாட்டில் நுவரெலியா என்ற இடத்தில் ‘சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவிலை 1982 ல் ரூ.10 இலட்சம் செலவில் பெரிய அளவில் எடுத்துக் கட்ட தமிழ் அமைச்சர் (அப்போதைய) இராஜதுரை அவர்கள் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதுவரை அத்திட்டம் நிறைவேறாமல் இருந்தது. 

ஆனால், தற்போது இலங்கை அரசு, வெளிநாட்டு பயணிகளை கவர சீதை அம்மன் கோயிலை புதுப்பித்து பெரிய அளவில் கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் இரண்டு பக்கமிருந்தும் வலிமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒரு பக்கம் புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள்; 'இந்து மத, கோயிலை பெரிய அளவில் விளம்பரப் படுத்த கூடாது' என்றும்; மறுபக்கம் இலங்கை நாட்டின் தொல்குடி மக்களான தமிழர்கள்; இராவணனை இணையற்ற வீரனாக கருதுவதால், 'இராவணனின் எதிரி யான 'இராமன்' சம்பந்தப்பட்ட கோயிலை பெருமைப் படுத்த கூடாது’ என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கோயிலைப் பற்றி அலசுவோம்!'குட்டித்தீவை எட்டிப்பார்த்தேன்' என்ற நூலில் இருந்து) 

“நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி இறங்கு முகமாக செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தில் 'சீதை அம்மன்’ கோயில் என்ற பெயரில் இக்கோயில் உள்ளது.

இது, தம் ஊர் கிராமக் கோயில்கள் போல் சிறிய கோயில், அது சமீபத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். பார்த்தால் மூன்று மலைகள் தெரிகின்றன. நடுவில் இருக்கும் மலை நல்ல உயரம்: இரு புறமும் சிறிய மலைகள்.

அந்த உயரமான மலையில் தான் இராவணன் சீதையை சிறை வைத்து இருந்தான் என்று சொல்லப்படுகிறது.

அந்த மாலைக்கு ‘சீதா எலியா’ என்று பெயர். சிங்கள மொழியில் ‘எலியா’ என்றால் மலை, சீதை சிறையில் இருந்த மலை என்பதால் ‘சீதா எலியா' என்று பெயர் ஏற்பட்டது.

சீதையை அசோகவனத்தில் சிறை வைத்ததாக நாம் படித்து இருக்கிறோம். ஆனால்; இந்த மலையில் அசோக மரமே கிடையாது. வேறு மரங்களும் இல்லை. ஆட்கள் செல்ல வசதியும் இல்லை” 


                                     அசோக மரம்

மேற்கண்ட செய்திகள் 'இராணி' வார ஏட்டின் ஆசிரியர் குரும்பூர் குப்புசாமி (அ.மா.சாமி) அவர்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து 'குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 

ஆட்கள் செல்ல வசதி இல்லாத, மரங்களே இல்லாத ஒரு மலையைக் காட்டி ‘இங்குதான் சீதை'யை சிறை வைத்தனர்; என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள்! குரும்பூர் குப்புசாமி அவர்களுக்கு மனசாட்சி உறுத்தியதால் உண்மையை எழுதியுள்ளார். 

இராமாயணத்தில் அரண்மனையை ஒட்டியுள்ள அசோகவனத்தில் சீதையை சிறை வைத்ததாகத்தான் உள்ளது. ஆனால் இலங்கையில் ஒரு மொட்டையான மலையைக் காட்டி: இதுதான் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் என்கிறார்கள் என்பதிலிருந்து; இராமாயண கதையை உண்மை என்று காட்ட, தற்காலத்தில் இட்டுக் கட்டப்பட்ட இடமே  நுவரெலியாவும்  ‘சீதை அம்மன்' கோயிலும் ஆகும் என்பதை அறிய முடிகிறது.

- விடுதலை ஞாயிறு மலர், பக்கம் V , 18.4.1999


கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி

  கிருத்துவர்கள் சிந்தனைக்கு!

"ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம், செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது"என்று (ரோமர் 5:12)ல் இருக்கிறது.

இயேசு இறந்தார் என்று (மத்தேயு: 27:50), (15:37 மாற்கு), (லூக்கா:24:46) (யோவான் 19:30) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. அப்படியாகின் முன்னால் கூறப்பட்டபடி, இயேசுவும் பாலம் செய்ததால்தான் இறந்தார் என்று தெரியவருகிறது.

போப், கிருஸ்தவர்கள் ஆகியவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இறந்து கொண்டும் இருக்கிறார்கள் ஆகையால் கிருஸ்தவர்களும் பாவம் செய்தவர்கள் என்று தெளிவாகிறது.

"தான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா’ என்றார். ஆகையால், அந்தச் சீசன் மரிப்பதில்லையென்கிற பேச்சு, சகோதரிகளுக்குள்ளே பரம்பிற்று. ஆனா லும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்னவென்று சொன்னார்". என்று (யோவான்:21:22,23 )ல் இருக்கிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை சமீபத்தில் இருக்கிறது" என்றுதான் கூறுகின்றனர். அப்படியானால் இயேசு மறுமுறை இன்னும் வரவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியாயின் ‘சீசன்’ இன்றளவும் உயிருடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதனை யாராவது, காண்பிக்க தயாரா? 

(எசேக்கியல்: 18:4,20) மற்றும் (ரோமர்: 6:23) ல் 

''பாவத்தின் சம்பளம் மரணம்,. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று, தேவன் கூறியுள்ளார் என்றும் (யோவான் : 5 : 29) "பிரேத குழியிலிருந்து நன்மை செய்பவர்களை ஜீவனை அடையும் படியும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும் படியும், எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்" என்றும் (மத்தேயு: 25: 32, 33, 34 41, 46)ல் "பாவம் செய்தவர்கள் பிசாசிற்காகவும், அவன் தூதர்களுக்காகவும், ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவார்கள். நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவர்" என்றும் இருக்கிறது.

எசேக்கியல், ரோமர் இரு வரும் பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும் என்று கூறுகின்றனர். ஆனால் யோவானும், மத்தேயுவும் “ஆத்துமா சாகாது” என்றும், “பாவம் செய்த ஆத்துமா நித்திய ஆக்கினையை அடையும், நன்மை செய்த ஆத்துமா நித்திய ஜீவனை அடையும்” என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் எப்படிப்பட் முரண்பாடு! 

(யோவான்:8:51) ல் “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே. உங்களுக்குச் சொல்கிறேன். என்றார்’  என்று இருக்கிறது.

யோவான்: 8:51 ல்  இயேசு வார்த்தையைக் கைக்கொண்டால் மரணத்தை காண்பதில்லை’ என்று இயேசு கூறுவதாக கூறி விட்டு, 5:29 ல்

"மரணமே கிடையாது, ஆத்மாவிற்கு ஆக்கினை தான் உண்டு" என்று கூறுகிறார். 

யோவானே இப்படி முன்னுக்கு பின் முரண்பாடாக கூறுகிறார். எசேக்கியல். ரோமர், யோவான், மத்தேயு ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஆத்துமாவை பற்றி கூறுகின்றனர் காரணம் என்ன. வென்று புரிகிறதா? காரணம். இதுதான் ஆத்துமா என்பது ஒன்று தனியாக இல்லை. அதனால் அதை மறைப்பதற்காக ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மட்டும் பொய்யை சொல்லி வைத்துள்ளனர். ஆகையால் கிருஸ்தவர்களும், மற்றவர்களும் கோபப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. 

குறிப்பு

: இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த புதிய ஏற்பாட்டிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- ர. பார்த்தசாரதி சென்னை-34

- உண்மை இதழ், பக்கம்-31

 இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த பரிசுத்த வேதாகமத்திலிருந்தும்  குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- செ.ர.பார்த்தசாரதி

- உண்மை இதழ், பக்கம்-31


- விடுதலை ஞாயிறு மலர், 09.04.2015ல் மீண்டும் வெளியீடு

புதன், 24 ஜூன், 2026

கந்தபுராணமும் - இராமாயணமும் ஒன்றே! - அன்னை மணியம்மையார்



1. கந்தபுராணமும் - இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும்.
 
2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட் டவையேயாகும்.
 
3. இரண்டு கதைகளும் ஆரிய சமயக் கொள்கைகளை வலியுறுத்துவதைக் கருத்தாய்க் கொண்டு ஆரியக் கடவுள் களைப் பெருமைப்படுத்த ஏற்படுத்தியவையாகும்.
 
4. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்து கற்பிக்கப்பட்டவையாகும்.
 
5. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும், அசுரர்கள் இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த் தியும், இழித்தும் காட்டப்பட்டவைகளாகும் என்பதோடு, இரண்டு கதைகளுக்கும் இந்திரன் பிரதானப்பட்டவனாகிறான்.

6. இரண்டு கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்புக் காவியங்களும் இரண்டு கோவில் அர்ச்சகர்களால், அதாவது கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளால் பாடப்பட்டவை யாகும். கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரி என்னும் அர்ச்சக ராலும், இராமாயணம் கம்பன் என்னும் பூசாரியாலும் தமிழில் பாடப்பட்டவை.
7. இரண்டு கதை உற்பத்திக்கும் காட்டப்பட்டக் காரணங் கள் - அசுரர்களின் தொல்லைகள் பொறுக்க மாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்களின் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக்  கொண்டவைகளாகும்.
 
8. இராமாயணக் கதைக்கு விஷ்ணு இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்தபுராணத்திற்கு சிவன் கந்தனாகப் (சுப்ரமணியனாக) பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.
 
9. இரண்டு கதாநாயகர்களுடைய பிறப்பும் அருவெருக்கும் தன்மையாகவே, அதாவது இராமன் தனது தாய் கவுசலை, யாகத்தின்போது குதிரையுடன் ஓர் இரவெல்லாம் கட்டித் தழுவிப் படுத்திருந்து, பகலெல்லாம் யாகப்ரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி இராமன் பிறந்ததாகவும்,
 
கந்தன், தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல தேவ ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து, தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில் வீரியத்தை விட்டு, அது கங் கையில் சேர்ந்து அங்கு பல பிரிவாகி குழந்தை உருக்கொள்ள, அதை பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகனானான்; கார்த்திகேயனானான் (இந்த சேதிகளை இராமாயணமே கூறுகிறது) என்பதாகவும் இருக்கிறது.
 
10. இவ்விரண்டு கதாநாயகர்களின் (இராமன் - கந்தன்) மனைவிமார்களும் தங்கள் பிறப்பை அறிய முடியாதவர்கள்.
 
அதாவது, இராமனின் மனைவி சீதை யாரோ பெற்று பூமியில் போடப்பட்டு, புழுதியில் மறைந்துகிடந்து ஓர் அன்னிய அரசனால் கண்டெடுத்து வந்து வளர்க்கப்பட்டவள்.
 
கந்தன் மனைவி வள்ளியும் யாராலோ ஒரு மானிடம் ஒரு ரிஷியால் சினை ஆகி பெறப்பட்டு, காட்டில் ஒரு குழியில் கிடக்கப்பட்டு, ஒரு வேட அரசனால் கண்டெடுத்துக் கொண்டு போய் வளர்க்கப்பட்டவள்.
 
11. இராமனுக்கு சீதை (விஸ்வாமித்திரன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள். கந்தனுக்கு வள்ளி  (நாரதன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள்.
 
12. இராமனுக்கு எதிரி (இராவணன் என்னும்) தேவர்கள் விரோதி; தேவர்களை அடக்கி ஆண்டவன். கந்தனுக்கு எதிரி (சூரபத்மன் என்னும்) தேவர்கள் விரோதி, தேவர்களை அடக்கி ஆண்டவன்.
 
13. இராமனுக்கு ஆயுதம் வில். கந்தனுக்கு ஆயுதம் வேல்.
 
14. இராவணனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன். மாபெரும் வரப்பிரசாதி.
 
சூரபத்மனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன், மாபெரும் வரப்பிரசாதி.
 
15. இராமனுக்கு லட்சுமணன் என்கின்ற ஒரு சகோதரன் உதவி செய்கிறான்.
கந்தனுக்கு கணபதி வீரவாகு என்கிற சகோதரர்கள் உதவி செய்கிறார்கள்கள்.
 
16. இராவணனுக்கு சூர்ப்பனகை என்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
சூரபத்மனுக்கு அசமுகி என்கின்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
 
17. இராவணனுக்கு இந்திர சித்து என்னும் (மேகநாதன் என்ற) மகன்; இவன் மகாபலசாலி. வீரன்.
 
சூரபத்மனுக்கு பானுகோபன் என்கின்ற ஒரு மகன். இவன் மகா பலசாலி.
 
18. இராவணனுக்கு விரோதமாக இராவணன் தம்பி விபீஷணன் என்பவன் இருந்து கொண்டு, எதிரியைப் புகழ்ந்து, சீதையை விடும் படிக்கூறி, எதிரிக்குக் காட்டிக் கொடுக்க நாட்டை விட்டுப் போய்விடுகிறான்.
 
சூரபத்மனுக்கு விரோதமாக சூரபத்மன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரியைப் புகழ்ந்து பேசி சயந்தனை சிறை விடும்படிக் கூறி, எதிரிக்கு அனுகூலமாக நாட்டை விட்டுப் போய் விடுகிறான்.
 
19. இராவணன் மகன் இந்திர சித்து இராமனைப் புகழ்கிறான்.
சூரபத்மன் மகன் பானுகோபன் கந்தனைப் புகழ்கிறான்.
 
20. இராவணனிடம் தூதனாக அனுமான் சென்று இலங்கையை அழித்துவிட்டு வருகிறான்.
 
சூரபத்மனிடம் தூதுவனாக வீரவாகு சென்று வீர மகேந்திரத்தைஅழித்து விட்டு வருகிறான்.
 
21. இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் லட்சுமணன், அவள் தலைமயிரை இழுத்துக் கீழேபோட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
 
சூரபத்மன் தங்கை அசுமுகியின் கைகளை மாசானன் என்பவன், அவள் மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
 
22. சூர்ப்பனகை சீதையை இராவணனிடம் சேர்க்க முயற்சிக்கிறாள்.
அசுமுகி இந்திராணியை சூரபத்மனிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறாள்.
 
23. சூர்ப்பனகை மூக்கு, காது அறுபட்டவுடன் அண்ணன் இராவணனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
 
அசுமுகி கை அறுபட்டவுடன் அண்ணன் சூரபத்மனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
 
24. அதற்கு ஆக கோபப்பட்டு இராவணன், இராமனுடன் சண்டைக்குப் போகிறான்.
 
அதற்கு ஆக வேண்டியே சூரபத்மன் ஆத்திரப்பட்டு, கந்தனுடன் சண்டைக்குப் போகிறான்.
 
25. இராமனுக்கு சுக்கிரீவன் அனுமார், அங்கதன், நீலன், சாம்புவந்தன் முதலியவர்கள் உதவி செய்கிறார்கள்.
 
சூரனுக்கு நவ வீரர்கள் உதவி செய்கிறார்கள்.
 
இராமனை மூலபலம் எதிர்க்கிறது என்றும், சூரனுக்கு ஓர் அரக்கி வயிற்றில் வெட்ட வெட்ட அசுரர்கள் பிறக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 
26. சூர்ப்பனகை உற்றார் உறவினரை ஓலமிட்டு அழைத்தாள். அசுமுகி உற்றார் உறவினரை நினைந்து ஓலமிட்டாள்.
 
27. சூர்ப்பனகை, வெள்ளிமாமலையை அசைத்த மன்னவா! என் மூக்கறுத்தப் பகைவனை நோக்காயா? என்று இராவணனிடம் ஓலமிட்டாள்.
 
அசுமுகி, கதிரவனை சிறை செய்த மன்னாவோ! யான் பட்ட குறையினை அறியாயோ? என்று சூரனிடம் அழுதாள்.
 
28. சூர்ப்பனகை, யான் அடைந்த அவமானத்திற்குப் பழி வாங்க வாராயா?, என்று அழுதாள்.
 
அசுமுகிசூரனிடம், பழி பூண்டு நின்றாயே, என்று அழுதாள்.
 
29. சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணன் சபை புகுந்தாள்.
அசுமுகி அழுதுகொண்டு சூரன் சபை புகுந்தாள்.
 
30. இராவணன் கோபம் கொண்டு வருந்தி சீதையை அடையக் கருதினான், அடைய துணிந்து விட்டான்.
 
சூரன் கோபம் கொண்டு மனம் கொதித்து, இந்திராணியை அடையக் கருதினான்.
 
31. இராவணன் சீதையைத் தூக்கி வந்து சிறை வைத்தான்.
 
சூரபத்மன், இந்திராணி ஒளிந்து கொண்டதால் அவள் மகன் சயந்தனையும், சுற்றத்தார்களையும் சிறை செய்தான்.
 
32. சீதை சிறையில் வாடி வதங்கி அழுதாள். சயந்தன் சிறையில் வாடி அழுதான்.
 
33. சீதை சிறையில், இராமன் வந்து விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினாள்.
 
சயந்தன் கடவுள் வந்து தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினான்.
 
34. சீதை அழுது எண்ணியதால் இராமன் விற்படை இலங்கைக்கு வந்தது.
சயந்தன் எண்ணி அழுததால் வீரமகேந்திரத்திற்கு வேற்படை வந்தது.
 
35. இராம தூதனாக அனுமான் இலங்கை வந்தான்.
முருக தூதனாக வீரவாகு வீரமகேந்திரம் வந்தான்.
 
36. இலங்கை வீரர்களாலும், சூரர்களாலும் கனல் கக்கும் கண்ணர்களாலும் நிறைந்திருந்தது. இலங்கையில் பசி இல்லை. ஏழை இல்லை. பிணி இல்லை. கவலை இல்லை.
 
வீரமகேந்திரத்தில் உள்ளவர் வரத்தினில் பெரியர். வன்மையில் பெரியர். உரத்தினில் பெரியர். அங்கு, வீரமகேந்திரத்தில் நலிந்து, மெலிந்து, நரை, திரை கொண்டு, பசி கொண்டவர் இல்லை.
 
37. இலங்கையில் வானவர் பணிந்து பணி செய்தனர். காவல் காத்தனர். பணியாளாய் நின்றனர். இதை அனுமான் பார்த்தான்.
 
வீரமகேந்திரத்தில் வானவன் வணங்கி ஏவல் புரிந்தனர். மீன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
 
38. இராவணனது பெருமையையும், அவனது தவத்தையும் அனுமான் வியந்து போற்றினான்.
 
சூரனின் தவத்தின் பெருமையை வீரவாகு வியந்து புகழ்ந்தான்.
 
39. அனுமான், சீதை சிறை இருந்த அசோகவனம் சென்று சீதையைக் கண்டு அவள் சோகத்தைத் தேற்றினான்.
வீரவாகு, சயந்தன் சிறை இருந்த இடம் சென்று அவனைத் தேற்றினான்.
 
40. அனுமான் இராவணன் முன் அழைத்துச் செல்லப்பட் டான்.
வீரவாகு சூரன் முன் சென்றான்.
 
41. இங்கே இராமன் பெருமையைச் சொல்லுகிறான்.
அங்கே முருகன் பெருமையைச் சொல்லுகிறான்.
 
42. அனுமான், இராவணனிடம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளே 
இராமனாய்த் தோன்றினான் என்கிறான்.
வீரவாகு தன்னிகரில்லா இறைவனே முருகனாகத் தோன்றினான் என்று சொல்லுகிறான்.
 
43. அனுமான் சொன்னது இராவணன் செவியில் ஏறவில்லை.
வீரவாகு சொன்னது சூரன் செவியில் ஏறவில்லை.
 
44. அனுமான், உன் செல்வம் சிதையாமல், உன் வாழ்வு குலையாமல் இருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிடு என்று இராவணனுக்குச் சொன்னான்.
வீரவாகு, நின் சேனையோடு நீ நெடிது வாழ வேண்டு மானால் வானவரைச் 
சிறையினின்று விடுக, ஆறுமுகன் அடிபணிக என்று சூரனுக்குச் சொன்னான்.
 
45. அனுமான் இலங்கையை எரித்தான்.
வீரவாகு மகேந்திர நகரை அழித்தான்.
 
46. அனுமான் அரக்க வீரரை அழித்த பின் இராமனிடம் சென்றான்.
வீரவாகு அசுரன் சேனையைச் சிதைத்த பின் அதைவிட்டுச் சென்றான்.
 
47. இராவணன் மந்திரிசபை கூட்டினான். அனுமான் செய்ததை எடுத்துரைத்து வருந்தினான்.
 
சூரன் மந்திரிசபை கூட்டினான். வீரவாகுவின் ஜெயத்தை மந்திரிகளுக்குச் சொல்லி வருந்தினான்.
 
48. இராவணன் சேனைக் காவலன் மகோதரன் எழுந்து வீரம் பேசினான்.
சூரனின் ஆட்களான கால சித்தனும், சூரனின் மகனாகிய பானுகோபனும் வீரம் பேசினார்கள்.
 
49. இராவணன் மகிழ்ச்சியும், தீரமும் கொள்கிறான்.
சூரன் மகிழ்ந்து ஊக்கம் கொள்கிறான்.
 
50. இராவணன் தம்பி விபீஷணன் எழுந்து இராவணனுக்குப் புத்தி கூறுகிறான்.
சூரன் தம்பியாகிய சிங்கமுகன் சூரனுக்குப் புத்தி கூறுகிறான்.
 
51. இராமன் கடவுள் என்றும், நீ வாழ வேண்டுமானால் சீதையை விட்டுவிடு, என்றும் விபீஷணன் கூறுகிறான்.
 
சிங்கமுகன், முருகன் ஆதிபரம் பொருளென்றும், நீ வாழ வேண்டுமாயின் வானவரை விட்டு விடு, என்றும் சொல்லுகிறான்.
 
52. இராவணன், எதிரியைப் புகழ்ந்த விபீஷணனைக் கடிகிறான்.
சூரன், எதிரியைப் புகழ்ந்த சிங்கமுகனை வெறுக்கிறான்.
 
53. இராவணன், இராமனை ஏளனம் பேசி இழிவுபடுத்திச் சொல்லுகிறான்.
சூரன், சுப்ரமணியனை ஏளனம் பேசி அலட்சியமாய்க் கருதிச் சொல்லுகிறான்.
 
54. இராவணன், விபீஷணன்மீது குற்றம்சாட்டித் திட்டு கிறான்.
சூரன், வீரவாகுவின் மீது குற்றம் சாட்டித் திட்டுகிறான்.
 
55. விபீஷணன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
சிங்கமுகன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
 
56. போர் நடக்கிறது. முதல் நாள் போரில் இராவணன் தோற்று மீளுகிறான்.
போர் நடக்கிறது. முதல் நாள் போரில் சூரன் மகன் பானுகோபன் தோற்று மீளுகிறான்.
 
57. இராமன் இராவணனை, இன்று போய் நாளை வா, என்கிறான்.
முருகன் பானுகோபனை, இன்று உன்னைப் போக விடுகிறேன் என்கிறான்.
 
58. இராமன் இராவணனை, இப்பொழுதாவது சீதையை விடுத்துப் பிழைத்துப் போக, என்று எச்சரிக்கிறான்.
 
முருகன் இரண்டாம் நாள் போரில் சூரனை, இப்பொழுதாவது வானவரை விடுத்தால், உயிர் வாழ்வாய்; இல்லையெனில் மடிவாய் என்று எச்சரிக்கிறான்.
 
59. இராவணன், மறுமொழி கூறாது அரண்மனை சென்றான்.
சூரன் மறுமொழி கூறாது அரண்மனை அடைந்தான்.
 
60. இந்திரசித்தன் போருக்குச் சென்று தோல்வி அடைந்து  தந்தையிடம் வந்து, இராமனை வெல்ல முடியாது. சீதையை விட்டுவிடு; உயிர் வாழ்வோம் என்கிறான்.
 
பானுகோபன் போரில் தோற்று, தந்தை இடம் வந்து, வானவரை விட்டு விட; உயிர் வாழலாம் என்கிறான்.
 
61. இராவணன் மகன்மீது கோபம் கொண்டு, உயிரை விடுவேனே ஒழிய சீதையை விட முடியாது. மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதல்ல, என்கிறான்.
சூரன் மகன்மீது கோபித்து, உயிர் விட்டாலும் விடுவேன்; வானவரை விட்டு வசைக்காளாகி வாழமாட்டேன், என்கிறான்.
 
62. இராவணன் மகன் இந்திரசித்தன் கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று கருதி, இலக்குவனோடு போர் தொடுத்து மாண்டான்.
சூரன் மகன் பானுகோபன் போருக்குச் சென்று மடிகிறான்.
 
63. இராவணன் இராமனுடன் போரிட்டு மடிந்தான்.
சூரன் முருகனுடன் போரிட்டு மடிந்தான்.
 
64. அவன் மனைவி மண்டோதரி புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
 
இவன் மனைவி பதுமை புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
 
இப்படியாக இன்னும் பல பொருத்தங்கள் காணலாகுகின் றன. ஆகவே, கந்தபுராணத்தைப் பார்த்து நகல்படுத்திய கதையே இராமாயணம்.

- அன்னை மணியம்மையார்

புதன், 17 டிசம்பர், 2025

மார்கழி மடமைகள்! சொர்க்கவாசல் மகிமை?ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை?

 மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!

சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே – அதாவது நாமத்தையே சாத்தி
விட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீர்த்தத்தில்
கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் – ஓடக்காரன் துணையோடு!

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி,
படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம்
என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் – சுடுகாடு, பார்வணம்  – சிரார்த்தம்
செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம்
இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).

சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் – அது எங்கே
செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்
துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

«««

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை?

பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றான். அதற்கு பத்மாசூரன், நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும் என்றானாம்.

சிவனும், அவ்வளவுதானே! அளித்தேன் போ! என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங்களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

அதற்கு விஷ்ணுவானவன், அதுதானா பிரமாதம், இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன் என்று கூறி, அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்துப் பத்மாசூரன் முன் சென்று நின்றான்.

அந்த மோகினிப் பெண்ணைக் கண்ட அசுரன், அவளைக் கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள், நான் உனக்கு உடன்படுகின்றேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கிறாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டு வா என்று கூறினாள்.

அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும்போது, தம் தலையில் கை வைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான்.

விஷ்ணு சிவனிடம் சென்று, பயத்தை விடுத்து வெளியே வாருங்கள்! நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக் கொன்றுவிட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.

அதற்கு சிவன், எப்படிப் பெண் வேடம் போட்டுச் சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள் என்றான். விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக் காட்டினான். அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டே ஓட, இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட, இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.

இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு.

எனவே, இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும், நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம் கூட வெட்கப்பட வேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன். இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே!

நூல் : ‘இந்து மதப் பண்டிகைகள்’


- உண்மை இதழ்,16-30.11.25

சனி, 20 செப்டம்பர், 2025

குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


‘குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


கட்டுரை, ஞாயிறு மலர்

சைவ மதத்தின் பெருமையை கூறுவதோடு, அதன் கதாநாயகர்களான பார்வதி பரமசிவனின் திருமணக் காட்சி களையும், அவர்களின் மகனாக ஸ்கந்தன் (கந்தன் – முருகன்) பிறப்பதை பற்றியும் ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் கூறுகிறது.

இந்த காப்பியத்தை காளியின் பக்தராக கூறப்படும், ‘கவிஞர் காளிதாசர்’ இயற்றியதாக கூறப்படுகிறது. (இவர் வாழ்ந்த காலம் பொ.மு 01 முதல் பொ.பி. 05 வரை ஏதோ ஒரு நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது!

‘குமார சம்பவம்’ என்கிற இந்த காப்பியத்தில் 17 சருக்கங்கள் இருக்கின்றன. இதில் எட்டு சருக்கங்களை தான் ‘காளிதாசர்’ இயற்றிய தாகவும், மற்ற 9 சருக்கங்களை வேறு யாரோ எழுதி ‘இடை செருகல்’ செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

முதல் 8 எட்டு சருக்கங்களைத் தான் பலர் ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். சிலர் மட்டுமே 17 சருக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பக்தி நூல்களை வெளியிடும் ‘லிட்டில் பிளவர் பதிப்பகம்’ ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் 8 சருக்கங்கள் கொண்டதையே வெளியிட்டுள்ளது.

காப்பியத்தின் பெயர் ‘குமார சம்பவம்’, ஆனால் இந்த எட்டு சருக்கங்களில் குமார சம்பவத்தை பற்றியே குறிப்பிடப்படவில்லை!. அதாவது குமாரன் எனப்படும் ஸ்கந்தனின் பிறப்பு பற்றியே குறிப்பிடப்படவில்லை. குமாரனின் பிறப்பு பற்றி காவியம் எழுத வந்த காளிதாசர், குமாரனின் பிறப்பை பற்றி, கூறாமலா இருந்திருப்பார்?

பிறகு வரும் 9, 10, 11 ஆகிய சருக்கங்களில் தான் கந்தன் எனப்படும் குமாரன் எப்படி பிறந்தான் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த வர்ணனை மிகவும் அருவருப்பாக (ஆபாசமாக) இருப்பதால் தான் இடைச்செருகல் என புறக்கணித்து விடுகின்றனர்.

‘குமார சம்பவம்’ என்கிற காப்பியத்தில் உள்ளபடி…..

பார்வதி – பரமசிவன் திருமணம் பருவதமலையில் நடைபெறுகிறது. அங்கே ஒரு மாதம் தங்கி இன்பம் அனுபவிக்கின்றனர். பிறகு இமய மலையின் உச்சிக்கு(கந்தமாதன மலை) புறப்பட்டு சென்று அங்கு யாரும் அறியா இடத்தில் மதுவை உண்டு, பாலின்ப களிப்பில், வாழ்க்கை வாழ்கின்றனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இப்படியே நூறு தேவ ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர்.(மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் ஒரு நாள். 360 மனித ஆண்டுகள் தேவர்களின் ஒரு ஆண்டு. அப்படியானால் 360×100 =36000 மனித ஆண்டுகள்) அதாவது 36,000 மனித ஆண்டுகள் பார்வதியும் -பரமசிவனும் உடலுறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

ஆனாலும் பார்வதிக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலங்கி போய், இனிமேல் ஒரு குழந்தை பிறந்தால் யாரால் தாங்க முடியும்? என அஞ்சிய தேவர்கள் ‘அக்னி’ தேவனை தூது அனுப்ப முடிவு செய்தனர். அக்னி தேவன் ‘புறா’ வடிவில், பார்வதியும் பரமசிவனும் உடலுறவு கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான். துணுக்குற்ற சிவன் அப்படியே வெளியே வந்து அக்னி தேவனிடம் ‘என்ன அவசரம்?’ என்று கேட்டான். தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் ‘தாரகாசுர’னை கொல்ல, ஒரு மகனை தாங்கள் பெற்றுத் தர வேண்டும்’ என தேவர்கள் என்னை அனுப்பி வைத்துள்ளனர்’ என கூறினார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

சமாதானம் அடைந்த சிவன், “உடலுறவுக்கு இடையே என்னை தொந்தரவு செய்ததால் வெளியேறும் ஸ்கலிதத்தை (விந்துவை) நீ ஏந்தி கொள்” என அக்னி பகவானிடம் விட்டார்.

அக்னி பகவான் அதன் வெப்பத்தை தாளமாட்டாமல் கங்கை நதியின் ‘சரவணப் பொய்கை’யில் மூழ்கி அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டான். அங்கே நீராட வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த விந்துவின் நீரினால் கர்ப்பமானார்கள். அந்த கர்ப்பத்தை அங்கேயே ஈன்று விட்டு விட்டனர்.

அதைப் பார்வதி எடுக்க ஆறு குழந்தைகளாக மாறின. அதை ஒன்றாக சேர்க்க ஆறு தலை 12 கை உடைய கந்தனாக (ஆறுமுகம் – ஷண்முகம்) மாறியது.

‘குமார சம்பவம்’; சருக்கம்: 9,10,11 பகுதிகள் தான் இவற்றை விவரிக்கின்றன.

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், பால காண்டம் சருக்கம் 36, 37இலும்,

ஸ்ரீ சிவ மஹா புராணம்,1 ஞான சம்ஹிதை,18. தாரகாசூரன் உதயமும் திரிபுரத் தோற்றமும்’ பகுதியிலும்  இதே கதை இடம்பெற்றுள்ளது.

‘குமார சம்பவம்’ என்ற பெயரில் காப்பியம் எழுத வந்தவர், குமாரனின் பிறப்பு பற்றி எழுதாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை. பிறகு வந்தவர்கள் காப்பியத்தை நகலெடுக்கும் போது அந்தந்த காலகட்டத்தில் இருந்த மொழி நடைக்கேற்றாற் போல் எழுதியிருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு “இந்தப் பகுதி இப்படி இருக்கிறது; அந்தப் பகுதி அப்படி இருக்கிறது’ அதனால் இந்த பகுதிகளை அவர் எழுதி இருக்க மாட்டார்” என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதையே!

- விடுதலை ஞாயிறு மலர், 20.09.2025