திருநீறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநீறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

பஞ்சமா பாதகத்திற்கும் பரிகாரம் திருநீறா? -- கவிஞர் கலி.பூங்குன்றன்

 


விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு.-

“நீறுபுனைவார் வினையை நீறு செய்தலாலே

வீறுதனி காமமது நீறென விளம்பும்

சிறுநரகத்துயிர் செலாவகை மருந்தாய்க்

கூறுடைய தேவிகையில் முன்னிறை கொடுத்தார்.”

இதன் பொருள்:- “திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒரு மருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு” என்பதாம்.

கதை:- ஒரு காலத்தில், மகாபாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயிசு முடிவிலே, யமதரும ராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடு கிறதற்கு தூதர்களைஅனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு, அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை மேட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும தலையிலும் ஏறி மிதித்துக்கொண்டு போய்விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம் பல் அவனுடைய மார்ப்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக்கண்டு, யமதூதர்கள் கிட்டப்போகப் பயந்து, விலகி விட்டார்கள். உடனே சில கணங்கள் வந்து அவ னைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள்” என்று சில புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

தெளிதல்:- இதை வாசிக்கிற என் ஜென்மதேச வாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும் கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சத்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே, இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால், தாங்கள் அன்றாடஞ் செய்கிற பாவ கருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ?

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டு விட்டா லும், தாங்கள் சாகும்பொழுது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும், தங்கள் உறவின் முறையார் தங்களைத் தகனிக்கக் கொண்டு போகிற பொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்க மாட்டார்களா?

இதெல்லாம் வீணென்று நமது முன்னோர்களில் அனேகர் சொல்லி எச்சரித்துமிருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றை யிதனடியில் குறிப்பிடுகிறோம்.

சிவவாக்கியர்:-

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்

பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்

உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் என்கிறார்.

சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

பட்டணத்தார்:-

“நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே

மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?

ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே! என்கிறார்.

நெஞ்சறி விளக்கம்

“வேடத்தைத் தரித்தாலென்ன வெண்பொடி யணிந்தாலென்ன,

நாடொத்து வாழ்ந்தா லென்ன கதிகலங் கண்டாலென்ன …” என்கிறது.

கவனிப்பு: “நீறு பூசிக் கொண்டால் எல்லாப் பாவமும் போய் முக்தியடைவாய்” என்கிற உபதேசம் கடவுளை பைத்தியக்காரனாக்குகிறது போலாகிறதல்லவா? எப்படியெனில், ஒரு நியாயாதிகாரி ஒரு கொலை பாதகனை நோக்கி “அடா! அங்கே கொஞ்சம் சாணியுண்டு; அதைச் சுட்டுப் பொடியாக்கிப் பூசிவா, உன்னை மன்னித்து விடுதலையாக்குவேன்” என்று தீர்ப்புப் பண்ணினால், அதைக் கேட்டவர்கள், அவரைப் பயித்தியம் பிடித்தவன் என்று நிந்திப்பார்களல்லவா? அப்படியே ‘விபூதி பூசுதல் பாவத்தைச் சாம்பலாக்குமென்று சிவன் சொன்னார்’ என்று சொல்லுகிறவர்கள் சிவனை பயித்தியக்காரனாக்குகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் சிவனுக்கு எப்படி அஞ்சி பயப்படுவார்கள்? பக்தியாய் இருப்பார்கள்? ஆன்றோர்கள் “பரிசுத்தம் (ஒழுக்கம்) இல்லாதவன் கடவுளை தரிசிக்க மாட்டான்” என்கிறபடியால், விபூதி பூசுதலுக்கும் பரிசுத்தத்திற்கும் சம்பந்தம் என்னயிருக்கிறது? ஒன்றுமில்லை. விபூதி பூசுதல் பரிசுத்தத்திற்கு காரணம் என்று எவ்வளவேனும் நினைக்கலாகாது, அப்படியே காரணமாயிருந்தால், திருடன் ஒரு கையினாலே திருடி மறு கையினாலே விபூதி பூசி, புண் ணியசாலியாயிருப்பான் அல்லவோ?ஆகையால் இப்படிப்பட்ட பொய்யுபதேசத்தை விட்டு விட்டு, பரிசுத்தமாகிறது எப்படி என் று கவனியுங்கள்.

பிரபு லிங்கலீலை:-

“எண்ணரும்அன்புளத் தில்லையேயெனில் பண்ணிய பூசனை பயன் தராதரோ;” என்றெச்சரிக்கிறது.

வாயுசங்கிதை:-

“கருமம் தவம் செபம் சொல்காச சமாதி ஈனம் புரிபவர் வசமதாகிப் பொருந்திடேம் புரையொன்றின்றி திரிகூறும் அன்புசெய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போம்” என்று பகிரங்கமாகப் போதிக்கிறது.

ஆதலால் “அன்புள்ளவன் இடத்தில் பரிசுத்தம் இருக் கும், பரிசுத்தமுள்ளவனிடத்தில் கடவுளும் இருப்பார். மோட்சமுண்டு” என்பது நிச்சயமாகிறது.

– ‘குடிஅரசு’ – 24.7.1928 – கட்டுரை

இதுதான் திருநீற்றின் மகிமை! ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் தன்மை! ஆதாரத்துடன் பேசுகிறோம் – பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!

 - விடுதலை நாளேடு, 24.04.25


செவ்வாய், 10 ஏப்ரல், 2018

திருநீறு பூசுவதேன்?



திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும்; இல்லா விட்டால் மூடர்க்கழகு" திருநீறடித்தல் என் பதாவது விளங்கும்.

எப்படியெனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்று அதை இடுகின்றவர்கள் கருதுவதும் தாங்கள் எவ்வளவு அக்கிர மக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத் திலே சகல பாவமும் போய்க் கைலாயம் சித்தித்துவிடும் என்று நினைப்பதுமேயாகும்.

இதற்கு ஆதாரமாக திருநீறின் மகிமை யைப்பற்றிச் சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப் பனன் மிக்க அயோக்கியனாகவும், கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்துகொண்டே இருந்து ஒரு நாள் ஒரு புலையனான சண் டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும், அந்தச் சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப் பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எரித்து விட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப் பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளிக்கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில் சிவகணங்கள் இரத்தின விமா னத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எம தூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமா னத்தில் வைத்துக் கைலாயத்திற்குப் பார்வதி யிடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து,

இவன் மகாப்பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படிக் கொண்டு போக லாம்? என்று வாதாடினதாகவும், அதற்குச் சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்றுத் திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத் துக்கு அருகனானதனால் பரமசிவன் எங் களை அனுப்பினார் என்று சொன்னதாக வும், அதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக் கைப் புரட்டிப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒரு நாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சத்தில் இடமில்லை என்று சொல்லி வாதிட்டதாகவும், அதன்மீது சிவ கணமும் எமகணமும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பான் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந் தாலும் இவனைக் குத்திக்கொன்று சுடு காட்டில் இவன் பிணத்தை எறிந்து விட்ட போது, மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம் பலின்மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதன் காலில் பட்டிருந்த அந்தச் சாம்பலில் கொஞ் சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால், அவ னுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி எம னைக் கண்டித்து அனுப்பி விட்டுப் பார்ப் பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத் தில் சிறிது பட்டு விட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்கு மென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணி கின்றார்கள் - அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு இதில் எழு தக் கூடாத படுபாதகங்கள் செய்வதனால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்குமென்றும் அவன் பிதுர்க்கள் செய்த பாவங்கள் கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதப்பட்டிருக் கின்றது.

இவை: பிரமோத்திர காண்டம் 14ஆவது, 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூட ராகவாவது இருக்காமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.

- "விடுதலை" 29-12-1950

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18