பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 நவம்பர், 2023

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள் (பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... )

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள்

தொகுப்பு: மின்சாரம்

5

பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... 

ஆன்மிகப் பணியில் சத்தியபாமா

‘பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லக் கூடாது’, ‘சாமி சிலைகளை பெண்கள் தொட்டால் தீட்டு’ என்றெல்லாம் சொல்லி ஆன்மிகத்தில் பெண் களுக்கு இந்தச் சமூகம் காலம் காலமாகப் பூட்டி வந்த கைவிலங்கு, ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவால் உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும், 108 பெண் களுக்கு தமிழ் வேதங்களை முழங்கி குடமுழுக்கு செய்யும் பயிற்சியையும் கொடுத்திருக்கும் சேலம் மாவட்டம், மேச்சேரியில் வசிக்கும் சத்தியபாமா பற்றி அறிய நேர்ந்தபோது, ஆச்சரியமாகிப் போனோம்.

‘சத்தியபாமா அறக்கட்டளை’ மற்றும் ‘அரசயோகி கருவூரார் தமிழின குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை’யின் நிறுவனர் சத்தியபாமாவிடம் பேசினோம். “எனக்கு சொந்த ஊர், சேலம் மாவட்டத் தில் உள்ள மேச்சேரி. திருமணமாகி, மூன்று பிள்ளைகள் இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே ஆன்மிகத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. ஆனா, பெண்களை கோயில் கருவறைக்குள்ள அனுமதிக்க மறுக்கிற வழக்கங்க ளுக்கு எதிராக மனதில் பல கேள்விகள் எழும். ஆதி காலத்துல பெண்கள் கருவறை வரை சென்று வழிபடும் உரிமை இருந்திருக்கு. பக்தி வளர்த்த நாயகிகளுக்கு, கோயில்களில் சிலைகள் இருக்கு. திருவரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் நாச்சியார், தமிழ் பாக்கள் பாடி வைணவ வழிபாட்டை வளர்த்த பெண். தஞ்சை இராசராச சோழன் கட்டிய பெரிய கோயிலில், சோழ னின் சகோதரி குந்தவை நாச்சியாருக்கும் முக்கியத் துவம் கிடைக்குது. இப்படி, பெண்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் பூசைகள், மந்தி ரங்கள் ஓதுவதில் முக்கியத்துவம் இருந்ததை அறிய லாம்’’ என்று ஆதிச் சான்றுகள் சொல்லி ஆரம்பித்தார் சத்தியபாமா.

``காலப்போக்குல, பெண்களை கோயில் கருவறைக் குள்ள அனுமதிக்க மறுத்த பிற்போக்குத்தனம் ஆன் மிகத்தில் நுழைந்தது. அது என்னை ரொம்ப நாள் உறுத்திட்டே இருந்ததால, கடந்த 2007 முதல் பெண் களின் கோயில் கருவறை உரிமை, தமிழ்வேத வழிபாட்டு முறைன்னு ஆழமா இறங்கிக் கத்துக்கிட் டேன். சென்னை, காரனோடையில் சமாதியாகியிருக் கும் 12ஆவது பதினெண் சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூராரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்த அவர், ‘பெண்களை மாதவிடாயின் காரண மாக தீட்டாகக் கருதுகிறார்கள். ஆனால், பெண்கள் சிவபூசை செய்யலாம்’னு சொல்லியிருக்கிறார். அவர் வழியில் இது தொடர்பா இன்னும் பல விடயங்களைக் கத்துக்கிட்டேன்’’ என்பவர், தன் பயிற்சி முறை பற்றி கூறினார்.

6

``காலம் காலமாக நம் கிராமத்துக் கோயில்கள்ல நம்ம அப்பத்தாக்கள், அம்மத்தாக்கள் பூசை பண் ணினாங்க. இப்போகூட சில இடங்கள்ல வயதான ஆத்தாக்கள்தான் பூசை பண்ணுறாங்க. இடைப்பட்ட காலத்துலதான், பெண்களுக்கான கோயில் கருவறை உரிமை மறுக்கப்பட்டது. அதை மாற்றும் விதமா, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை செயல் படுத்த, 2010இல் இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சு பெண்களுக்கு பூசாரி பயிற்சி, குட முழுக்கு செய்யும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில், பத்து வாரப் பயிற்சியாகக் கொடுத்தோம். இப்போ மூன்று நாள்கள் பயிற்சியாகத் தர்றோம். கடந்த பத்து ஆண்டு களில் பெண் அர்ச்சகர்கள் குழுவைக் கொண்டு, 20 கிராமக் கோயில்கள்ல தமிழ்வேத முறைப்படி குட முழுக்கு விழாக்கள் நடத்தி யிருப்பதை எங்களோட பெரிய சாதனையாகப் பார்க்குறோம்.

எங்ககிட்ட கத்துக்கிட்ட இன்னும் சில பெண்கள், தங்களோட குலதெய்வக் கோயில்கள்ல பூசை பண்றாங்க. இதுவரை 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும், 108 பெண்களுக்கு குடமுழுக்கு பயிற்சியும் கொடுத்திருக்கோம். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறைன்னு பல துறைகள்ல பணிபுரியும் பெண் களும் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு பயிற்சி எடுத் திருக்காங்க. இப்போ ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’னு அரசே அறிவித்திருப்பதால், பெரிய சந்தோசத்தில் இருக்கோம். இனி பெண்கள், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் கருவறையில் பூசை செய் யும் காட்சிகள் காணக் கிடைக்கணும்’’ என்றார் நெகிழ்ச் சியுடன்.

சமீபத்தில் கரூரில் சத்திய பாமாவின் அமைப்பு சார்பில், தமிழ் அமைப்புகள் உதவியோடு 30 பெண் களுக்கு மூன்று நாள்கள் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப் பட்டு, சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர் களில் சிலரிடம் பேசினோம்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பவ்யா. “எங்க ஊரு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி. உசிலம்பட்டியில பூக்கடை வெச்சிருக்கோம். என் வீட்டுக்காரர் தேவ தானப்பட்டியில் உள்ள ஆத்தோர சுந்தர விநாயகர் கோயிலுக்கு பரம்பரை பூசாரியா இருக்காரு. உசிலம் பட்டி மாதரை பத்ரகாளியம்மன் கோயில்லயும் பத்து ஆண்டுகளாக பூசாரியா இருக்காரு. சத்தியபாமா அம்மா அர்ச்சகர் பயிற்சி தர்றதை பத்தி, என் கொழுந் தனார் என்கிட்ட சொன்னாரு. எனக்கு இதுல ஆர்வம் இருக்குறதால, முயற்சி எடுத்து கலந்துக்கிட்டேன். மந் திரம் சொல்றது, நைவேத்தியம் செய்வது, தீபாராதனை காட்டுறது, ஹோமம் வளர்க்குறது, தீர்த்த கலசம் ரெடி பண்றது, ஹோமகுண்டம் போடுறதுனு எல்லா பூசை முறை களையும் சொல்லிக்கொடுத்தாங்க. தமிழ்வேத மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் தந்திருக்காங்க. வீட்டுல 48 நாள்கள் கலசத்தை வெச்சு, மந்திரங்களை ஓதி பூசை பண்ணினா, எல்லா மந்திரங்களும் மனப் பாடம் ஆகிடும்னு சொல்லி யிருக்காங்க. வீட்டுல கலச பூசையை ஆர்வமா பண்ண ஆரம்பிச்சுட்டேன்’’ என்றார்.

7

கேரள மாநிலம், வண்டிபெரியார் பகுதியில் வசிக்கிறார் செல்வி. ‘`நான் ஏற்கெனவே சத்தியபாமா அம்மா கிட்ட பயிற்சி எடுத்திருக்கேன். இப்போ மூணு நாள்கள் பயிற்சியில மறுபடியும் வந்து கலந்துக்கிட்டேன். கருவறை உயிர்ப்பு மந்திரம், சிவயோக பயிற்சி, காப்பு மந்திரம், குருமந்திரம், சந்நிதான மந்திரம், கிரகநிலை மந்திரம், குலதெய்வ மந்திரம், அந்தந்தக் கிழமைக்குரிய மந்திரம்னு பல பயிற்சிகள் கொடுத் தாங்க’’ என்றார் பரவசத்துடன்..

சென்னையைச் சேர்ந்த மீனா நமச்சிவாயத்துக்கு வயது 57. ‘`இளம் வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தேவாரம், திருவாசகம் பாடல்கள் எனக்கு அத்துபடி. அதையெல்லாம் சொல்லி வீட்டு பூசைகள் பண்ணுவேன். விரும்பி அழைக்கிறவங்க வீடு களுக்குப் போய், ‘இல்லந்தோறும் திருவாசகம்’னு பாடல்களைப் படித்து பூசை பண்ணுவேன். ஆதம் பாக்கம் முத்துமாரியம்மன் கோயில்ல பெண்கள் கூடி பூசைகள் செய்து, வழிபாடு நடத்துவோம். ஆனாலும், கருவறையில சிவனை வழிபடணும் என்பது என் ஏக்கம். இந்த நிலையில, முத்துமாரியம்மன் கோயில் குருக்கள் விக்னேஷ் மூலமா கரூர்ல அர்ச்சகர் பயிற்சி கொடுப்பதைக் கேள்விப்பட்டு ஆர்வமா கலந்துக்கிட் டேன். அர்ச்சகர் பயிற்சி யோடு, ஆன்மிகத்துல இன்னும் பல விஷயங்களையும் புரியவெச்சாங்க.

பெண்கள் சில கோயில்களுக்குள்ள நுழையவே இன்னும் தடை இருக்கும் சூழ்நிலையில, ‘பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்பு எங்களுக்கு எல்லாம் பெரும் உற்சாகம் கொடுத்திருக்கு. கடவுளின் அருளை பெண் கள், ஆண்கள் வழியாதான் பெறணுமான்னு என் மனசுல இருந்த ஆறாத கேள்வி, இப்போதான் சமாதானம் ஆகியிருக்கு. எனக்கு தமிழ்வேத மந்திரங்கள் ஓதி சிவ பூசை செய்ய ஆசை. அந்த வாய்ப்பு கிடைச்சா ஜென்ம பாக்கியம் அடைவேன்” என்றார் உணர்ச்சி மேலிட.

பெண்களின் குரல்கள் மீண்டும் கோயில் கரு வறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும்.

- ‘அவள் விகடன்', 14.9.2021

- - - - -

சபரிமலைக்கு பக்தனாக வந்த நான் 

இன்று சபரிமலையில் அர்ச்சகர்

யது கிருஷ்ணா தன் வயதொத்த மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்ட அரிதான குழந்தையாக இருந்தான். அவனை கோவிலுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்ல வேண்டியதில்லை. கோவில்களில் பின்பற்றப் படும் சடங்குகளால் ஈர்க்கப்பட்ட யது தனது ஆறாவது வயதிலேயே வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் தன்னாலான உதவிகளை செய்து வந்தான். இரண் டாண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடத்திய அர்ச்சகர் நியமனத் தேர்வில் மொத்தமுள்ள 62 இடங்களில் 4 ஆவது இடத்தை பெற்று, திருவிதாங்கூர் தேவசம் போர்ட் நிர்வகிக்கும் 1200 கோவில்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் முதல் முறையாக அர்ச்சகராக தேர்வு செய்யப் பட்டார்.

அதன்படி 2017 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சார்ந்த இளைஞரான இவர் பத் தினம்திட்டா மாவட்டத்தின் வலஞ்சவட்டம் கிராமத் தில் அமைந்துள்ள மணப்புரம் மஹாதேவா ஆலயத் தின் கர்ப்ப கிரகத்தில் நுழைந்து வரலாறு படைத்தார். அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் (டிசம்பர்) சபரிமலையில் சிறப்பு அலுவல் நிமித்தமாக தெரிவு செய்யப்பெற்றுள்ளார். "சபரிமலைக்கு அய்ந்து முறை பக்தனாக வந்துள்ள நான் இன்று இங்கேயே பணி செய்வதென்பது உண்மையில் நல்வாய்ப்புத்தான்" எனக் கூறும் யது கிருஷ்ணாவின் பெற்றோர்கள் தினக் கூலிகள் ஆவர்.

8
தன் பன்னிரண்டாவது வயதில் திருச்சூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு பரவூரில் அமைந் துள்ள சிறீ குரு தேவ வைதீக தந்த்ர வித்யா பீடத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் தந்த்ர சாஸ்திரத்தையும் பயின்றார். அர்ச்சகராக நியமிக்கப்பட்ட பின்னர் படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய யது கிருஷ்ணா "சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெறவேண்டும் என்பதே தற்பொழுது என் விருப்பம்" என தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். தான் அடைய எண்ணிய இலட்சியங்களை அடைவதற்கு தனக்கு "ஜாதி" எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை எனக் கூறும் யது அர்ச்சகராக தான் பொறுப்பேற்றதும் உயர் ஜாதி பிரிவைச் சார்ந்த பலர் ஒன்றிணைந்து தான் அர்ச்சகர் பணியை சிரத்தையுடன் செய்யவில்லை என புகார் அளித்தனர். எனினும் விசாரணைக்கு பிறகு அவர்கள் அளித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வெளியானது என்று கூறுகிறார். "அர்ச்சகராக பொறுப்பேற்றது முதல் எவ்விதமான கசப்பான அனுபவங்களையும் தான் பெறவில்லை" எனக் கூறும் யது வருங்காலத்தில் புகழ்பெற்ற கோவில் ஒன்றின் தலைமை அர்ச்சகராக ஆக வேண்டும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா', 29.12.2019

வெள்ளி, 14 அக்டோபர், 2022

பெண்கள் அர்ச்சகர்கள் ஆகக் கூடாதா?(1)

 

முகப்புக் கட்டுரை : பெண்கள் அர்ச்சகர்கள் ஆகக் கூடாதா?(1)

ஜுலை 16-31,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆண்களிலேயே குறிப்பிட்ட உயர்ஜாதியினர் தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அடம் பிடித்தவர்கள் _ அரட்டைக் கச்சேரி நடத்தியவர்கள், பெண்களும் அர்ச்கராகலாம் என்று சொன்னால் அமைதி காப்பார்களா? அம்மணமாக ஆடித் தீர்த்திட மாட்டார்களா?

‘துக்ளக்’ சோ.ராமசாமி 15 ஆண்டுகளுக்கு முன் ‘துக்ளக்’கில் (7.6.2006) எழுதிய தலையங்கத்தை மறுபதிப்பு செய்து (‘துக்ளக்’ 30.6.2021) குருமூர்த்தி குருக்கள் குதியாட்டம் போடுகிறார்.

‘சோ’ ராமசாமி எழுதியது என்ன?

“சரிநிகர் சமானம் என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும் என்பது  கொடுமை அல்லவா? முழுவதும் இல்லா விட்டாலும் 33% அர்ச்சகர்கள் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட முடியாதா? இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாள்களிலும், அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாமா?’’ என்று கிறுக்குத்தனத்தின் அசல் பதிப்பான சோ 15 ஆண்டுகளுக்கு முன் எழுதினார் என்றால்… பார்ப்பன சங்கத்தின் அதிகாரபூர்வமற்ற நாளேடான திரிநூல் ‘தினமலர்’ என்ன எழுதுகிறது?

“அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை மீண்டும் தி.மு.க. அரசு கையில் எடுத்திருக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றி பல்வேறு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று புலம்புகிறது ‘தினமலர்’ (17.6.2021).

அதே ‘தினமலர்’ (6.7.2021) தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் நாகசாமியும் “பெண் அர்ச்கர் நியமனம் அவசியமா?’’  என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் உரிமைப் பிரச்சினை இது.

9.5.1981 அன்று கரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டத்திலும் 11.8.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

“கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை உயர்ஜாதியினமாகிய பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு என்ற நிலையை மாற்ற சட்டம் ஒன்றை கலைஞர் தலைமையில் இயங்கிய தி.மு.க. அரசு நிறைவேற்றியது. அச்சட்டத்தை உச்சநீதி மன்றத்தின் மூலம் முடக்கிவிட்ட நிலையில் அதனை மாற்றிட நடத்திடும் போராட்டத்தினை இம்மாநாடு ஆவலோடு எதிர்பார்க்கிறது.

அவ்வாறு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லும்போது ஆண்களுக்கு மட்டும்தான் என்ற ஒரு கருத்து இருப்பதால், பெண்களுக்கும் அர்ச்சகர்களாக ஆகும் வாய்ப்பைத் தர வேண்டும் என்பதைக் கோரும் கிளர்ச்சியாக அக்கிளர்ச்சியை விரிவு படுத்துவோம் என்பதை இம்மாநாடு தெரிவிக்கிறது.’’

இந்தத் தீர்மானம் ஏனோ தானோ என்ற போக்கில், யாரையோ எரிச்சல் ஊட்டுவதற்காக நிறைவேற்றப்பட்டதல்ல. ஆதாரங்கள் ஏகப் பட்டவை தாராளமாகவே உள்ளன.

எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராஜன் ஆணையக் குழு  அறிக்கை (1982)

1. தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவனைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே, முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும், திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்தபோது, தான் பூஜை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே, அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞானசம்பந்தர், இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடி சாய்ந்த இலிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல், குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரிய புராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மரபுகள் உடைக்கப்பட்டன: கோவிலில் பெண்கள், உயர் வகுப்பினர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம்:

மராட்டியத்தில் 900 ஆண்டுகளுக்குப் பின் ருக்மணி அம்மன் கோவிலில் பெண் அர்ச்சகருக்குக் கோவில் நிருவாகம் அனுமதி வழங்கியுள்ளது.

மராட்டிய மாநிலம் பந்தர்பூர் என்ற நகரில் 900 ஆண்டு பழைமைவாய்ந்த வித்தால் ருக்மணி அம்மன் கோவில் உள்ளது. மராட்டியத்தில் வர்காரி என்ற இனத்தவர்களின் குலதெய்வமாக இது விளங்குகிறது. ஆண்டுதோறும் 2 கோடி பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபடுகிறார்கள்.

அஷாத் என்ற புனித மாதத்தில் வர்காரி இன மக்களும், மற்ற இனத்தவர்களும் இந்தக் கோவிலுக்கு நடைபயணமாகச் சென்று தரிசனம் செய்வார்கள்.

இந்தக் கோவிலில் அன்றாட பூஜைகள் செய்ய பெண் அர்ச்சகர்கள் மற்றும் உயர் வகுப்பினர் அல்லாத இதர பிரிவினரையும் அனுமதிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவில் அர்ச்சகர் பணிக்குப் பெண்கள் மற்றும் இதர பிரிவினர் 129 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 16 பெண்களை கோவில் நிருவாகம் தேர்வு செய்துள்ளது. இதுபற்றி கோவில் நிருவாகத் தலைவர் அன்னா டாங்கே கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இங்குப் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது 900 ஆண்டுகளுக்குப் பின் அந்த மரபு உடைக்கப்பட்டு அனைவரும் பூஜை செய்யலாம் என்ற முன் மாதிரியான முடிவை எடுத்துள்ளது என்றார்.

முதல் கட்டமாக 16 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். அவர்களில் ஊர்மிளா பதே என்ற பெண் முதன்முதலாக கோவிலுக்குச் சென்று பூஜைகளை நடத்தினார். பெண் அர்ச்சகர்கள் ருக்மணி அம்மனுக்கு மட்டும் பூஜைகள் செய்வார்கள். வித்தால் சுவாமிக்கு ஆண் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(3.7.2014)

 உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. அக்கோயில் அறக்கட்டளை சார்பில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, 40 ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்புக் கூறியது.

வித்தல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே கூறும்போது, நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களால் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப்பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக்கட்டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகியவற்றை அனைத்து ஜாதியினரும், குறிப்பாக பார்ப்பனரல்லாதார் செய்ய வேண்டுமென்று விரும்பினோம் என்றார்.

கோவில்களில் பெண் பூசாரிகள் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு

மங்களூரு -_ “கர்நாடகாவில் உள்ள கோவில்களில், பெண் பூசாரிகளை நியமிப்பது குறித்து, மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்’’ என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவில், நவராத்திரியை முன்னிட்டு, தசரா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதோடு, பெண்கள், இளைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கூட்ரோலி கோகர்ணேஸ்வரர் கோவிலில், தசரா கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்த, மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, கோவில்களில், பெண்களை பூசாரிகளாக நியமிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது:

மக்களிடையே, தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், சம நீதி கிடைக்க வேண்டும். 1912களில், நாராயண குரு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடினார். அவரின் பெருமுயற்சியால், அனைத்துத் தரப்பினரும் கோவிலுக்குள் பிரவேசித்து வழிபட்டனர். அப்போது, தீண்டாமைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்தது போல், இப்போது பெண் உரிமைக்கும் போராட வேண்டும்.

பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோவில்களில், பெண்களைப் பூசாரிகளாக நியமிப்பது குறித்து, மாநில அரசு ஆலோசித்து வருகிறது. அரசின் இந்த முடிவை, மக்கள் ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன். அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்ட பின், விரைவில், பெண் பூசாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

(‘தினமலர்’ -29.9.2014 பக்கம் 10)

பெண் அர்ச்சகர் எங்கே?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் எல்லா பூஜை புனஸ்காரங்களையும் பெண்களே செய்கின்றனர். கோயில் நுழைவுப் போராட்டத்தில் தொடங்கி, பரம்பரைப் பூசாரிகள் நி

யமனத்தைத் தடை செய்யும் போராட்டம் வரை தமிழ்நாடு கலாச்சாரப் போராட்டங்கள் பல கண்டபோதிலும் கோயில்களில் பெண்களின் பங்கு என்பதும், ஆகமக் கோயில்களில் பெண் பூசாரிகள் நியமனம் என்பதும் இதுவரை பேசாப் பொருள்தான்.

புனித நூல்களில் பாகுபாடில்லை

வேத நூல்கள் உள்பட இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்னும் வரிகள் காணப்படவில்லை. புராதன வேத காலங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேதம் பயின்றனர். மணம் முடித்தோ அல்லது மணம் முடிக்காமலோ பிரம்மவாதினி எனும் பெண் பூணூல் அணிந்த பிறகு (யக்ஞோபவீதம்) வேத ஞானம் பெறுவதற்காக வேதம் பயின்றார்.

வேதப் பள்ளி ஆசிரியரான கதா சாக்ஷாவுக்கு காதி எனும் பெண் மாணவி இருந்தார் என அஷ்டத்யாயி நூலில் பாணினி குறிப்பிட்டுள்ளார். ரிக் வேதப் பாடல்கள் கைவரப்பெற்ற பெண் மாணவிகளை அவர் பாவிரிச்சி என்றே அழைக்கிறார் என்கிறார், சமூக வரலாற்றாசிரியர் நந்திதா கிருஷ்ணா. பெண்கள் குறித்துப் பாடப்பட்ட எத்தனையோ வேதப் பாடல்களும் இருக்கின்றன. வேத குருக்களாகப் பணியாற்றியதைத் தவிரவும் கோயில் விக்ரகங்களுக்கு முக்கிய அபிஷேகப் பூசைகளும் பெண்கள் செய்திருக்கின்றனர்.

பிராமண ஆகம முறைகளைப் பின்பற்றிய இந்துக் கோயில்களுக்கும் சிறு தெய்வ வழிபாடுகளுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடு உண்டு. சிறுதெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்த கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக இல்லாவிட்டாலும், சமயச் சடங்குகளில் முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால், வேதங்களைப் படிக்கவும் ஆன்மிக ஞானம் பெறவும் தகுதியுடையவர்கள் பிராமண ஆண்களே எனப் பிராமணர்களுக்குள் பிடிவாதம் இருந்ததுபோலவே மற்ற சமூகத்தினரும் பெண்களைச் சமயச் சடங்குகள் ஆற்ற மறுப்புத் தெரிவித்தனர் என்கிறார் எழுத்தாளர் வ.கீதா. அறிவைக் கைப்பற்றும் இந்தச் செயல்தான் ஆணாதிக்கத்தின் துவக்கப் புள்ளி.

குருதியின் குறியீடு

ஆனால், பெண்களே அத்தனைப் பூஜை புனஸ்காரங்களையும் செய்யும் ஒரு கோயில் இருக்கிறது. சென்னையிலிருந்து 50 மைல் தொலைவில் 1970களில் கட்டி எழுப்பப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்தான் அது.

ஜாதி, இனம், வர்க்க வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது குருதியின் நிறம். அதன் குறியீடாக இங்கு வரும் பெண்கள் சிவப்பு நிறச் சேலை அணிவது வழக்கம். ஒரு தாய், ஒரு குலம் என்பதே இக்கோயிலின் மந்திரச் சொல்.

மாதவிடாய் நாள்களில் கோயிலுக்குள் கால் பதிக்கவே கலாச்சாரத் தடை விதிக்கும் ஒரு மதத்தில், இந்தக் கோயில் அந்தத் தடைகளைத் தவிடுபொடியாக்குகிறது. புனிதம், தீட்டு போன்ற படிப்பினைகளுக்கு இங்கு இடமில்லை. மாதவிடாய் என்பது இயற்கை நிகழ்வாகக் கருதுவதால் எந்நேரமும் இந்தக் கோயிலுக்குள் பெண்கள் பிரவேசிக்கலாம்.

அதேபோல கிராமப் புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு உரித்தான அம்மன் கோயில்களில் பெண் பூசாரிகளைக் காண்பது சகஜம். இருப்பினும், அங்கும் ஆண்கள் பெண்களின் இடத்தைப் பிடித்துக் கொள்வது உண்டு. பெண் பூசாரிகளுக்குப் பதிலாக நுழையும் ஆண்கள் சேலை அணிந்து பூஜை செய்யும் போக்கும் உள்ளது என்கிறார் முனைவர் கிருஷ்ணா.

பிரச்சினை எங்கே?

பெண் அர்ச்சகராக நினைத்தால் ஏன் இத்தனை எதிர்ப்பு? மாதவிடாய் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. முதலாவதாக, யாகம் நடத்துபவருக்கும் (யஜமானா) புரோகிதருக்கும் இடையே ஒரு சம்பிரதாயம் உண்டு. யாகம் நடத்துபவர் புரோகிதர் கையில் கங்கணம் கட்ட வேண்டும். அந்த வகையில் ஓர் ஆண் ஒரு பெண் கையில் கங்கணம் கட்ட வேண்டும் என்றால், இருவரும் தம்பதியினராக இருக்க வேண்டும். அடுத்து, யாகம் முடிந்ததும் நடத்துபவர், புரோகிதருக்குச் சம்பாவனை கொடுக்க வேண்டும். அப்படியிருக்க ஒரு பெண் புரோகிதர் சம்பாவனை பெற்றுக் கொள்வது என்பது ஒழுக்கக் கேடாகக் கருதப்படும்.

இரண்டாவதாக, பண்டைய காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி அடையும் எண்ணம் துளிர்த்தவுடன் ஆண்கள் பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல் சமய, ஆன்மிகத் தளத்திலும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். மூன்றாவதாக, தொடர்ந்து பல ஆண்டுகள் பயின்றால் மட்டுமே அர்ச்சகராக முடியும். இளம் வயதிலேயே திருமணம் முடித்துக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெண்களுக்கு எழுதப்படாத விதி. பெண் அர்ச்சகர் உருவாக இதுவும் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது எனலாம்.

ரிக் வேத காலத்தில் 30க்கும் அதிகமான வேத பண்டிதர்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. ஆனால், இன்று ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் பெண்களுக்கு இடமில்லை.

– ராதிகா சந்தானம், ஸ்ருதிசாகர் யமுனன்

– ‘தி இந்து’ (தமிழ்) 13.10.2015

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கை என்ன கூறுகிறது?

பெண் அர்ச்சகர்களும் ஸ்மார்த்த அர்ச்சகர்களும் 16.01. பெண் அர்ச்சகர்கள்:

வைணவ திவ்ய தேசங்கள் 108இல், 106க்குச் சென்று வந்துள்ள, உ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்ய தேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பல கோயில்களில் அர்ச்சகர்களே இல்லை என்றும் கூறுகிறார். அத்தோடு மட்டுமல்லாது, ஆண் பூசாரி இல்லாத காலத்தில் பெண் பூசாரிகள்கூட பூசை செய்வார்கள் என்றும் கூறுகிறார். ராமானுஜர், ஆகமம் நமக்கு இல்லை என்றும், பெண்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் தெரிவித்துள்ளார். இதிலிருந்து ஆகமம் என்பது (நடைமுறைகள்) மாற்றப்படக் கூடாத அளவு அவ்வளவு முக்கியத்துவம் உடையது இல்லை என்பதுதான் ராமானுஜர் கூற்று என்பதை அறியலாம். மேலும், பெண்களும் அர்ச்சகராகப் பணிபுரியலாம் என்பதுதான் ராமானுஜரின் கருத்து என்பதையும் அறியமுடியும். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள, வழிபாட்டு முறைகளைப் பற்றிய, கல்வெட்டுகளில் “இத்தளிச்சேரிப் பெண்டிர் (ஆடல் வல்ல மகளிர்) ஒவ்வொரு பூசை நேரத்திலும் தேவார இசைப் பாடல்களைப் பாடியவாறு வாத்திய இசைக்கேற்ப நடனமாடியபடி தட்டுகளில் பூக்களை எடுத்துச் சென்று அர்த்த மண்டபத்திற்கு மேலுள்ள தளங்களில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள கிழக்குப் புற வாயில்களின் வழியாக கீழே நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பார்கள். மேலும் இறை மூர்த்தங்கள் திருவீதி உலா சென்று வந்த பின் கோயில் வாசலில் வரவேற்று கோயிலினுள் அழைத்துச் செல்லும் உரிமையும் தளிச்சேரிப் பெண்டிருக்கே வழங்கப்பட்டிருந்தது’’ என்ற குறிப்பும் காணப்படுகிறது. பல கோயில்களில் ஆண்கள் இல்லாத காலத்தில் பெண்கள் பூசை செய்வதை இன்றும் காணலாம். எனவே, பெண்களுக்கு அர்ச்சகராவதற்கு உரிமை இல்லை என்ற வாதம் சரியானதல்ல என்பதையும் அறியலாம்.

“‘சரிநிகர் சமானம்’ என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பது கொடுமை அல்லவா! முழுவதும் இல்லாவிட்டாலும் 33% அர்ச்சகர்கள் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட முடியாதா? இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாள்களிலும் அந்த அர்ச்சகிகள் கோயிலில் அர்ச்சனை செய்யலாம்’’ _ என்று ஆத்திரமும் கிண்டலும் குதிக்க _ கொதிக்க சோ 2006இல் எழுதியதைத் தேடிப் பிடித்து இப்பொழுது (30.6.2021) மறுபதிப்பு செய்துள்ளாரே குருமூர்த்தி குருக்கள் (ஒரு வார்த்தையைக் கவனிக்க வேண்டும் _ மாதவிலக்கு நாள்களிலும் அந்த ‘அர்ச்சகிகள்’ என்று குறிப்பிட்டு இருப்பதில் உள்ள ஆரியக் கோபமும் திமிரும் தினாவெட்டும் மனுதர்மப் புத்தியும் கவனிக்கத் தக்கவை.)

முகத்தில் அடிப்பது போல ஒன்றைக் கேட்கலாம். அந்த மூன்று நாள் தனிமைப்படுத்தி உலக்கையைக் காவலுக்கு வைக்கும் வ(ப)ழக்கம் இப்பொழுது அக்ரகாரவாசிகள் வீட்டில் நடைமுறையில் உண்டா? அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பார்ப்பனப் பெண்கள் இதற்காக மாதத்திற்கு மூன்று நாள்கள் விடுப்பு எடுப்பது உண்டா?

கடைசிக் கடைசியாக மண்டையில் அடிப்பதுபோல ஓர் எடுத்துக்காட்டு.

‘மாதவிலக்கான நாளில் அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாம்.’ இதுதான் புரட்சி என்று புலம்பும் கூட்டம், கண்களில் விளக்கெண்ணெய்யைப் போட்டுக் கொண்டு, காதுகளையும் கூர்தீட்டிக் கொண்டு ஒன்றைப் படிக்கட்டும் _ கேட்கட்டும்!

கேரள மாநிலத்தில் செங்கண்ணூர்  செங்கண்ணூர் என்ற ஊரைக் கேள்விப்பட்டு இருப்பார்களே! ஆங்கே பகவதி அம்மன் பகவதி அம்மன் என்ற கோயிலை அறிந்திருப்பார்களே!

அந்தக் கோவிலில் விசேஷம் விசேஷம் என்ன என்ன?

அந்தப் பகவதி அம்மனுக்கு மாதா மாதம் மாதவிலக்கு வரும். அந்த மூன்று நாள்களில் _ ஆம் அந்த மூன்று நாள்களில்தான் பக்தர்கள் விசேஷமாய்க் கூடுவார்கள். பக்திப் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து ஓடுமே! இதற்கு என்ன பதில்? _ குருமூர்த்தி _ தாம்ப்ராஸ் (பார்ப்பனர் சங்கம்) கும்பலே!

இன்னொன்று மிக மிக முக்கியமானது. சிவனின் பக்கத்தில் பார்வதியும், சடையில் கங்கையும் மனைவியாக இருக்கிறார்களே _ அவர்கள் அந்த மூன்று நாளில் சிவனை விட்டு வெளியேறுவதில்லையே! அப்பொழுது சிவனின் நிலை என்ன? அட முரண்பாடே உன் நிலைதான் ஹிந்து மதமா?

குங்குமத்தின் ‘கதை’ என்ன?

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின் விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாதவிலக்கு வேளை ஏற்படும் இந்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் பெண்களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

– செ.கணேசன் எழுதிய

“பெண்ணடிமை தீர’’ என்னும் நூலிலிருந்து…

செவ்வாய், 23 மார்ச், 2021

இந்து மதத்தில் பெண்கள் நிலை


வெள்ளி, 11 ஜனவரி, 2019

சபரிமலையில் பெண்கள்: மலையாள பத்திரிகை படப்பிடிப்பு



வயது வேறுபாடின்றி, பெண்கள், சபரி மலை சன்னிதானம் சென்று, தர்ம சாஸ்த் தாவை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், எப்போதும் அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், உண்மை அதுதானா?
2012ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி, மலையாள பத்திரிகைகள் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தன....
ஆபிரகாம், தடியூர் என்ற மலையாள பத்திரிகை நிருபர், இப்போது, அந்த செய் தியையும், அதன் பின்னர் நிகழ்ந்தவற் றையும் நினைவு கூர்கிறார்...
அன்று, சபரிமலை சன்னிதானத்தில், சில பெண்கள் கூட்டமாக வந்து, தர்ம சாஸ்த் தாவை தரிசித்ததை கண்டேன்; அந்த பெண்களுக்கு, போலீஸ் காவல் இருந்தது.. பத்திரிகையாளர் எவரையும், புகைப்படங் கள் எடுக்க, முதலில் அனுமதிக்கவில்ல; ஆனாலும், நாங்கள், பெரும் பாடுபட்டு, புகைப்படங்கள் எடுத்தோம். பத்திரிகை களில் செய்தியும் வந்தது!நாங்கள் சபரிமலை தந்திரிகளிடம், விசாரித்த போது, அந்த பெண்கள் அனைவரும், கொல்லம் நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர், சுனில் சுவாமி என்பவரோடு, மும்பையிலிருந்து வந்த பெண்கள் என்று தகவல் சொன்னார்கள்!
பத்திரிகை செய்திகள் வந்த உடனே, ராகுல் ஈஸ்வர், என்னை தொடர்பு கொண்டு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது.. எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை... ஆனாலும், எனது அம்மா, இதை, பிரச்சினை ஆக்க வேண்டாம்; தொழில் அதிபர் சுனில் சுவாமி, நமக்கு வேண்டியவர் என்பதால், இதை இத்தோடு விட்டு விட வேண்டும்" என்று கூறினார்.
இப்போது, சபரி மலையில், பெண்க ளுக்கு அனுமதி கொடுத்தால், தற்கொலை செய்து கொள்வோம் என்பவர்களோ, அல்லது,
சபரிமலையை, ரத்தக்களரியாக மாற்றி, பெரும் கலவரத்தை தூண்டிவிடும், எவரும், சுனில் சுவாமி, தன்னோடு வந்த, பெண்களையும் சேர்ந்து, சன்னிதானத்தில் நுழைந்து, 2 நாட்கள், சன்னிதானம், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து, சடங்குகளை நிறைவேற்றியதையோ, கண்டு கொள்ளவில்லை!
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாள் முனையும் நீளவில்லை என்பது தான் விசித்திரம்...
இது மட்டுமா? 2032ஆம் ஆண்டு வரைக்கும்,  உதயாஸ்தமய பூஜை செய் யும், டிக்கட்டுகளை, மொத்தமாக, புக் செய்து விட்டு, சட்டப்படி, இப்போதும், சபரிமலை வந்து செல்கிறார், சுனில் சுவாமி!
இதற்கு எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை....
அவர்களுக்கு தெரியும்...
சர்வ வல்லமை மிக்க சுனில் சுவாமி, யாரென்று.
சுனில் சுவாமிக்கு எதிராக, எந்த வாளும் நீளாது..
என்ன காரணம் என்று, சங்கிகளுக்கு நன்றாக தெரியும்...
என்ன காரணம்?
அப்போதைய, கேரள மாநில பாஜக தலைவர், இப்போது, ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், சுனில் சுவாமியின், நெருங்கிய நண்பர் என்பது, சங்கிகளுக்கும் தெரியும்; ராகுல் ஈஸ்வருக்கும் தெரியும்...
யார் இந்த ராகுல் ஈஸ்வர்..? சபரிமலையில், வன்முறையை, திட்ட மிட்டு நிறைவேற்றி, தற்போது, கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்...
நன்றி: பதிவர் (RaJ Mohan) 
தகவல்: பஞ்சாட்சரம், திருவண்ணாமலை
- விடுதலை ஞாயிறு மலர், 17.11.18

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டவா?

சபரிமலை சென்று இரு பெண்கள் அய்யப்பனைத் தரிசித்து விட்டார்களாம்! அடேயப்பா, எவ்வளவுக் கூச்சல்! கோயில் தீட்டுப்பட்டு விட்டதாம். சொல்லு கிறவர்கள் யார்? அர்ச்சகர்கள்தான்! இதே அய்யப்பன் கோயிலில் - அர்ச்சகர்கள் தங்கிய அறைகளில் மதுப் பாட்டில்கள் கிடந்தது எல்லாம் கண்டுபிடிக்கப்பட வில்லையா? ஒரு விபச்சாரி வீட்டில், அய்யப்பன் கோயில் பிரதம தந்திரி கண்டரரு மோகனரு கண்டு பிடிக்கப்பட்ட கதை நாற்றம் எடுக்கவில்லையா?
அப்பொழுதெல்லாம் இந்த அய்யப்பன் கடவுள் கோபித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டு வெளிநாடு ஓடி விட்டாரா? அல்லது அவமானத்தைத் தாங்க முடியாமல் தூக்க மாத்திரைதான் சாப்பிட்டாரா?
காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயிலை தேவநாதனும், திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பத்ரிநாத்தும் விபச்சார விடுதியாக்கினார்களே, அந்தக் கடவுள்கள் கர்ப்பகிரகத்தைவிட்டு வெளியேறினவா?
எல்லாம் வல்லக் கடவுளுக்கு (?) ஆசாபாசம் உண்டா? ஆசாபாசம் இருந்தால் அது கடவுளா?
சிவனின் தலையிலும், பக்கத்திலும் இரு பெண்டாட்டிகள் இருக்கின்றனரே - அவர்களின் மாத விடாய்க் குறித்து சிவன் என்றைக்காவது சீறியிருப்பதாக மாதவிடாய்ப் புராணம் எழுதப்பட்டுள்ளதா?
அடப் பைத்தியங்களே! எவனோ ஒரு கிறுக்கன் எந்த காலத்திலோ உளறி வைத்ததை எல்லாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு 'தை  தை' என்று ஆடுவது எந்த நோக்கத்தில்?
இதில் எல்லாம் பார்ப்பனர்களுக்குக் கொழுத்த சுரண்டல் கொடி கட்டிப் பறக்கிறது என்பதுதானே!
இப்பொழுது சபரிமலையில் என்ன நடக்கிறது? இரு பெண்கள் அய்யப்பனைக் கும்பிட்டதால் தீட்டுக் கழித்தார்களாம் - சுத்திகரிப்பு நடந்ததால் அதன் பலன் யாருக்குப் போய் சேர்ந்திருக்கிறது?
'டைம்ஸ் ஆப் இந்தியா' ஏட்டில் நேற்று வெளி வந்ததை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருத்தூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாரே.
'பிராமணப் போஜனம்' செய்யப்பட்டதாம்; பட்டு வேட்டியும், அங்கவஸ்திரங்களும் அளிக்கப்பட்டதாம்.நல்லது நடந்தாலும் அவாளுக்கு வேட்டைதான் - அல்லது நடந்தாலும் அவாள் வயிற்றில்தான் அறுத்துக் கட்டப்படுகிறது - எத்தகைய சாமர்த்தியமான இனம்!
கோயில் கலசம் விழுந்தால், கோபுரம் இடிந்து விழுந்தால் அல்லது கோயில் தீப்பற்றி எரிந்தால் உடனே பரிகாரங்கள் என்ன - பூஜை புனஷ்காரங்கள் என்ன - யாகங்கள் என்ன! எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் அவாளின் அர்ச்சகர்களின் வருமானத்தில்தான் போய் முடியும்!


பக்தி என்ற போதை மூளையில் ஏற்றப்பட்டால் அம்மணமாக ஆடுவதற்கும் கூடக் கூச்சப்படுவ தில்லையே, வட நாட்டு சாமியார்கள் கதை  தெரிந்தது தானே! வேப்பிலையை சேலையாகக் கட்டுவதுகூட நடந்து கொண்டுதானே இருக்கிறது. (பெரியபாளையத் தம்மன்)


என்ன வெட்கக் கேடு என்றால் எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் அளவுக்குக் கெட்டுப் போக வேண்டுமா?
இதில்கூட இன பேதம் உண்டு, எந்தப் பார்ப்பான் எச்சில் இலையில் உருளுவான்?
சங்கராச்சாரியார் உருளுவாரா? பக்தி முற்றிய குருமூர்த்திகள் உருளுவார்களா? இராம கோபாலனோ, எச்.சிகளோ உருளுவார்களா?
இதோ ஒரு 'தினமணி' செய்தி (8.5.2006)
கரூர் அருகே நேர்த்திக் கடனை செலுத்த எச்சில் இலைகள்மீது உருளும் விநோதத் திருவிழா நடைபெற்றது.
கரூர் அருகேயுள்ள நெரூரில் ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராளுக்கு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 92வது ஆண்டாக உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராளுக்கு சிறப்பு அபிஷேகம். இலட்சார்ச்சனை செய்யப்பட்டது. அவரது திருவுருவப் படம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது.
இதையடுத்து அக்ரஹார வீதியில் பிரம்மாண்ட அன்னதானம் நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் அதிகமானோர் சாப்பிட்டனர்.
பின்னர் அனைவரும் எழுந்த பிறகு, மூடப்படாத எச்சில் இலைமீது சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் உருண்டனர். "நெரூரில் ஜீவ சமாதி யடைந்த ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள். அன்னதானத்தின் போது ஒரு இலையில் அமர்ந்து உண்பார். அது எந்த இலை எனத் தெரியாததால், அனைத்து இலைகளின்மீதும் பக்தர்கள் உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது அய்தீகம்" என்றனர் பக்தர்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். வேண்டுதல்கள் நிறைவேறியதும், இலையின் மீது உருளுவோரும் உண்டு. கோயிலுக்கு வருபவர்கள் யாராயினும் சாப்பிட மாட்டேன் எனக் கூறினால், அவரைக் கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைப்பது வழக்கம். காரணம், அவரது உருவில்கூட பிரம்மேந்திராள் வந்திருக்கலாம் எனக் கருதியே. இதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
('தினமணி' 8.5.2006)
(கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால் மூக்குப் புடைக்கும் ஆன்மீக சிரோன்மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?)
இதைவிட இன்னொரு அருவருப்பான தகவல் உண்டு. பரலோகம்போக வைக்கத்தில் சாப்பிட்ட எச்சில் இலையை விலைக்கு விற்று காசு சம்பாதிக்கும் சங்கதி.
'குடிஅரசு' இதழில் வெளி வந்த தகவல்கள் இதோ:
"வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று சில சமயங்களில் 0.0.6 வீதம் விற்கப்படுகிறது. (அந்நாளில் இது அரையணா மதிப்பு)
வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கரியமாகி விடும் என்றும், சந்தானமில்லாத வர்களுக்குச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாத ஜனங் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி பூசை செய்துஅந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாபம் போய் விடும் என்று நம்பும்படியாக செய்கிறதை விடப் பெரிய மோசடியல்ல"
(ஆதாரம்: 'குடிஅரசு' 9.8.1925)
இதைத் தொடர்ந்து  குடிஅரசு இதழில் 'லோகோபகாரி' ஏட்டில் வந்த செய்தி இது. இதன் தலைப்பும் 'வைக்கம் எச்சிலை" தான்.
"வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும் வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தின் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு  எழுதியிருக்கிறார். அவர் சொல்லுவதின் சுருக்கம்: வைக்கம் எச்சிலை சகல நோய்களையும், முக்கியமாக வயிற்று நோய்களையும், மலட்டுத்தன்மையையும் நீக்கவல்ல தென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு. வைக்கத்தம்மன் கோயில் எச்சிலைகள் பரம்பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன. அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களே பிராமணர்கள் சாப்பிட்ட பின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டு போய் மொத்தமாக நாயர்களுக்கு விற்று விடுகிறார்கள். நாயர்கள் எச் சிலைகளில் உள்ளவற்றையெல்லாம் அவற்றின் சீர் கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை. நன்றாகக் கலந்து கடைத் தெருவுக்குக் கொண்டு போய் பகிரங்கமாக விற்கிறார்கள். நகர பரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்.
வாரியர்களிடமிருந்து வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். சில காலத்திற்கு முன் தெய்வ பக்தியுள்ள உயர் வகுப்பார் பலர் இதனை வாங்கித் தங்கள் நோய் தீருமென்று உட்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலைகளை வாங்கி உண்கிறார்கள்."
('குடிஅரசு' 30.8.1925)
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார் ஆனால் பக்தி என்று வந்து விட்டால் மானமாவது - அறிவாவது!
சேலம் அன்னதானபட்டியில் பக்தர்கள் செருப்படி படும் செருப்படி திருவிழா இன்னும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது.
இது பகுத்தறிவுக்கு அழகா என்று கேட்டால் 'சோ' போன்ற பார்ப்பனர்கள் என்ன எழுதினார்கள் தெரியுமா?
இதோ ஒரு கேள்வி - பதில்.
கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?
சோவின் பதில்: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? "பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?"  என்று கேட்க வேண்டியதுதானே! இப்போதுதானே உங்கள் கேள்வி முழுமை அடையும். ('துக்ளக்' 4.3.2009).
பகுத்தறிவைப் பித்தலாட்டம் என்று சொல்லும்  ஆசாமி அவாளின் அகராதியில் அறிவு ஜீவிகளாம்!
அந்த அறிவு ஜீவிதம் என்பது - அக்ரகாரத்துப் பக்கம் வருவாய் நதி புரண்டு ஓடுவதற்காகத்தான்.
இல்லாவிட்டால் எச்சில் இலையை விலைக்கு விற்று பணத்தை எக்கில் சொருகிக் கொள்வார்களா?
ஆதாயமில்லாமல் அக்கிரகாரக் கூட்டம் ஆற்றைக் கட்டி இறைக்காது; அறிவை அழிக்கும் வேலையில் இறங்கினால்தானே அவர்களால் அறுவடை செய்ய முடியும்!
அதனால்தான் அறிஞர் அண்ணா சொன்னார் "முதலில்லா வியாபாரம், விதைக்காது விளையும் கழனி" என்று அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.
இன்று "ஆஸ்திகம்" என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று "நாஸ்திகம்" என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்" என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் (19.2.1971) இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
பக்தியைக் பகிஷ்கரிப்பீர்!
பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்!
ஏன் கொளுத்த வேண்டும் மனுதர்மத்தை?

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 148: பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தை கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.
மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 154: கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!
மனுதர்மம் - அத்யாயம் 8 - சுலோகம் 379: கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக்குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டையடித்தலே தண்டனையாகும்.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 19: பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 35: ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 52: மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 60: கணவனை இழந்த பெண்ணை ஒரு ஆண் தன் உடல் முழுக்க நெய்யைப் பூசிக்கொண்டு, இரவில், இருட்டில் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 78: கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனாயிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.
மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 94: முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்தக் கேடுகெட்ட, ஒழுக்கங்கெட்ட, மோசமான மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டாமா? கொளுத்துவோம் வாரீர்! வாரீர்!

பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம்....

தயாராகட்டும் பட்டியல்!
தயாராகட்டும் பட்டியல்!!
- விடுதலை நாளேடு, 4.1.19

சனி, 5 ஜனவரி, 2019

வனிதா மதில் - பெண்கள் சுவர்

கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் "வனிதா மதில்" என்னும் மாபெரும் நிகழ்வு நடந்து உள்ளது...!

நீதியற்ற முறையில், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் போன்ற வெவ்வேறு காரணங்களால் ஒடுக்கபட்டு நீதிமறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அந்த அநீதியிலிருந்து விடுவிக்க நடக்கும் முயற்சிகள் அனைத்தும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்...!

ஜாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முறையிலும், பெண்கள் என்ற முறையிலும் இந்த கொடுமைகளை மிக அதிகமாக அனுபவித்து வரும் நிலை இந்தியாவில் இந்த நவீன காலத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது சமூக வளர்ச்சிக்கு முரணான விஷயங்கள் ஆகும்...

ஒரு காலத்தில் கேரளாவில்...இத்தகைய கொடுமைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் அதிகமாக இருந்து வந்தன...

ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள், அய்யா வைகுண்டர் போன்றோர் இத்தகைய அநீதிகளுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளாக செயல்பட்டனர்...

பின்னாளில் காங்கிரசிலுள்ள  முற்போக்கு  எண்ணங் கொண்டவர்கள் இத்தகைய போராட்டங்களை தொடர்ந்தனர்...

அதற்கு அடுத்த காலகட்டத்தில் காங்கிரசில் இருந்து செயல்பட்ட சோஷலிஸ்டுகள் இந்த  செயல்பாடுகளை இன்னும் வேகத்தோடு முன்னெடுத்தார்கள்...

பின்னாளில் காங்கிரசில் உள்ள சோஷலிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக மாறி செயல்பட ஆரம்பித்த பின்னர், அத்தகைய போராட்டங்கள் வர்க்க ரீதியான போராட்டமாக பண்பு வடிவான மாற்றமடைந்ததன் மூலம் நிலவுடமையின் நிழலில் சுகபோகமாக வாழ்ந்து வந்த ஜாதிய, சடங்கு, சம்பிரதாய, பெண்ணடிமைக் கொடுமைகள் என அனைத்து விதமான கொடுமைகளும் சொல்லத்தகுந்த அளவில் உடைதெறியப் பட்டன....

இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று வந்த சுவாமி விவேகானந்தர்...
கேரளத்தில் அக்காலத்தில் நிலவிய இத்தகைய கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்....கொடுங்கல்லூர் என்ற இடத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட அவரிடம் "நீ என்ன ஜாதி?" என்று கேட்ட கேள்வியின் கொடூரத்தால் ஆடிப்போன விவேகானந்தர்..."இந்த ஊர் பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்று கேரளத்தை  வர்ணித்தார்....பல ஊர்களிலும் சுற்றிவந்த தான்,  இத்தகைய கொடுமைகளை வேறு எங்கும் காணவில்லை என்று மனம் வெதும்பினார்...இத்தகைய கொடுமைகளை மாற்றி  இந்த சமூகத்தை மீட்பது மிகவும் கடினம் என்று கருதினார்.

கேரளத்தின் நம்பூதிரி சமூகம் என்ற பிராமணீய ஆதிக்கம் நிறைந்த ஜாதி, மேல்ஜாதி என்று கருதப்படும் நாயர் சமூகம் உட்பட மற்ற அனைத்து ஜாதியினரையும், அதுபோலவே தங்கள் நம்பூதிரி சமூகம் உள்ளிட்ட எல்லா சமூக பெண்களையும், தங்களது  அடிமைகளாகவே நடத்தினர். 

நாயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமென்றாலும் பாலியல் ரீதியாக பயன்படுத்தும் உரிமை உள்ளதாக சொல்லி, நாயர் சமூக பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடி வந்தனர்...நள்ளிரவில் தென்னை ஓலை இலக்குகளை சேர்த்து கட்டிய "ஓலைச் சூட்டு"  பந்தத்தை பிடித்துக்கொண்டு தனது எடுபிடி கணக்குப் பிள்ளை வழிகாட்டியவாறு முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து வரும் நம்பூதிரி, முன்கூட்டியே மனதில் நினைத்திருக்கும் ஏதாவதொரு நாயர் சமூத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் முன் நின்றால்...அந்த கணக்குப் பிள்ளை அந்  வீட்டின் கதவைத் தட்டுவார்...உடனே அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்துவிட்டு...வந்திருப்பவர் அந்த ஊரின் நிவுடமையாளரான நம்பூதிரி என்று அறியும் போது உள்ளே சென்று தனது பாயையும் தலயணையையும் எடுத்துக்கொண்டு வெளியில் உள்ள திண்ணையில் வந்து அமர்ந்து கொள்ளவேண்டும்...அதிகப்படியான  சலுகையாக கணக்குப்பிள்ளை கொண்டுவரும் வெற்றிலைப் பெட்டியில் உள்ள வெற்றிலையை அவருடன் அமர்ந்து   மென்றவாறே உரையாடிக் கொண்டு  நம்பூதிரியின் மிதியடியையும் குடையையும் காவல் காக்கும் நாயைப் போன்று கூனிகுருகி அமர்ந்து கொள்ளலாம்...

சமூக அந்தஸ்து பெற்ற நாயர் சமூகத்திற்கே இதுதான் தலைவிதி என்றால் மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களை எப்படி நடத்தி இருப்பார்கள்...?

இவாறான பாலியல் அத்துமீறல்களை நம்பூதிரி சமூக ஆண்கள், நாயர் சமூகப் பெண்களிடம் நடத்துவதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு, அந்த நம்பூதிரியை அப்பா என்று அழைக்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது...நம்பூதிரிகள் மூலம் நாயர் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பா என்று அழைக்கும் உரிமையை கேட்டு நாயர் சமூகமும் போராடும் நிலைமையில் கேரளம் ஒருகாலத்தில் இருந்தது என்பதிலிருந்தே பிராமணீயத்தின் நச்சு வேர்கள் எப்படி ஆழப் பரவியிருந்தது என்பது விளங்கும்...

அதுபோலவே நம்பூதிரி சமூகப் பெண்களின் நிலை...

நம்பூதிரி குடும்பத்தில் உள்ள  மூத்த ஆண் மட்டுமே முறைப்படி ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்...அந்த பெண், தனது  கணவரின் உடன்பிறந்த அனைவருக்கும் பாலியல் ரீதியான தேவைகளை தீர்த்துவைக்க கடமைப்பட்டவர் என்ற அநீதியான நடைமுறை இருந்தது. தனது கணவரின் மற்ற சகோதரர்கள் யாரும் ஒரு நம்பூதிரிப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. வேண்டுமென்றால்  நாயர் பெண்ணை புடவை கொடுத்து சமந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் அது திருமணம் என்று அழைக்கப்படாது, மாறாக "சம்பந்தம்" என்றே அழைக்கப்படும்...அப்படியே ஒரு நம்பூதிரி பெண்ணை திருமணம் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது. அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது..அங்கீகரிக்கப்பட்ட வாரிசுகள் வேண்டுமெனில் மூத்தவரின் மனைவியின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம்...அதுபோலவே நம்பூதிரி பெண்  குழந்தைகளை முதியவர்களுக்கு  திருமணம்  செய்து வைப்பது...அவ்வாறு நடக்கும் திருமணம் முடிந்து சிலகாலத்தில் அந்த கிழவன் இறந்து போனால் அந்த குழந்தை விதவையாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மூலையில்  அடைபட்டுக் கிடக்கவேண்டும்.

ஆக நம்பூதிரிப் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே சலுகை என்னவென்றால், தீண்டாமை என்னும் கொடுமையால் வீட்டிற்கு வெளியில் நிற்காமல் வீட்டிகுள்ளே பிரவேசிக்கலாம்...அதுவும் மாதவிலக்கு காலங்களில் நம்பூதிரி பெண்களும் தீண்டத்தகாதவர்கள் தான்...

அதுபோலவே இன்னொரு கொடுமை...நம்பூதிரி சமூகத்தில் இளம் கன்னிப்  பெண்கள் இறந்துபோனால்...அவர்கள் கன்னி கழியாமல்  தகனம் செய்யப்படக் கூடாது என்ற ஒரு கேவலமான மூடநம்பிக்கை...அதற்காக பரிகாரம் என்ற பெயரில் அநாகரிகமான சடங்கு ஒன்று இருந்தது...அந்த இளம் பெண்ணின் பிணத்துடன் சண்டாள ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆண் உறவு கொள்ள வேண்டும்..."சவ போகம்"  என்று அழைக்கப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான சடங்கை நிகழ்த்த, தனியாக ஒரு ஜாதிப்  பிரிவினரை சண்டாளர் என்ற பெயரில் வைத்திருந்தார்கள். உயிருடன் இருக்கும் போது அந்த சண்டாளர் சமூகத்தில் உள்ள ஒரு ஆணுக்கு, சம்பந்தப்பட்ட நம்பூதிரிப் பெண்ணே விரும்பினால் கூட திருமணம் செய்ய முன்வராதவர்கள், அந்த பெண் இறந்த பிறகு சடங்கு என்ற பெயரில் பிணத்துடன் போகம் செய்ய கட்டாயப்படுத்தும் கொடூரம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்திருக்க முடியாது...

அதுபோன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் மாராப்பு சேலையைப் பயன்படுத்த, வரிவிதித்த, மார்பின் அளவைப் பொறுத்து வரிவிதித்த கேவலமான அரசியலமைப்புச் சட்டம் வைத்திருந்த ஊராக ..."முலை வரி" என்ற  பெயரில் வசூலிக்கப்பட்ட வரியை செலுத்த முடியாமல் மாரப்பு இல்லாமல் இருந்த பெண்கள் நிறைந்த நிலையிலிருந்த கேரளம்... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நங்கோலி என்ற பெண் முலைவரி கேட்டு வந்தவர்களிடம் தனது மார்பை அறுத்து சேப்பம் இலையில் வைத்து கொடுத்துவிட்டு தன்னை மாய்த்த கொடூரம்...

மலையாள மொழியின் முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச சேர்ந்த பெண் கலைஞரான ரோசி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் நடித்த திரைப்படத்தை தானே பார்க்கமுடியாமல் போன கொடூரம் நிகழ்ந்த கேரளம்...

விவேகானந்தர், மாற்றுவது மிகவும் கடினம் என்று கருதிய  கேரளம் இன்று...

பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இத்தகைய கொடுமைகள் யாவும் பெருமளவில் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, ஒப்பீட்டளவில் ஜாதிவேற்றுமைகள்  ஒழிக்கப்பட்ட  மாநிலமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்த மாநிலமாக  தலைநிமிர்ந்து நிற்கிறது...

ஆனாலும் பிற்போக்கு சக்திகள் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முயல்கின்றன...சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அமுல்படுதவிடாமல் இரட்டை நிலைபாடுகளுடன் நின்று சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட முயலும் சங்க பரிவார் சக்திகள், தொடர்ந்து பிற்போக்குத்தனமான செயல்களை செய்ய முயல்கின்றன...

அவற்றை முறியடித்து...கேரளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை  செயல்படுத்த முன்னத்தி ஏராக கேரளம் எடுக்கும் ஒரு அரிய முயற்சியே...இந்த "வனிதா மதில்"

கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் உட்பட ஏராளமான முற்போக்கு எண்ணம் படைத்த அமைப்புகள் இந்த நிகழ்வை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீராகத் திட்டமிட்டு சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்ட முயல்கின்றனர்...

கேரளத்தின் வட எல்லையான காசர்கோட்டில் துவங்கி தென் எல்லையான திருவனந்தபுரம் வரை நீண்டு கிடக்கும் சுமார் 640 கி.மீ தூரத்தை இடைவெளியின்றி, பெண்களை மட்டும், கைகளைக்கோர்த்து சங்கிலியாக அல்லாமல், தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக நின்று அணிவகுக்கச் செய்து சமத்துவம் என்ற சிந்தனையை சமூகத்தில் இன்னும் இன்னும் ஆழமாக விதைக்கச் செய்யும் இந்த முயற்சி உலக ஊடகங்களையும் கூட திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது...

BBC தொலைக்காட்சி மாலை அரைமணி நேரம் நேரலையாக ஒலிபரப்ப திட்டமிட்டுள்ளது...

பெண்கள் மட்டும் அணிதிரளும், உலகிலேயே மிகப்பெரும் இந்த நிகழ்வை பற்றி கேள்விப்பட்டவுடன் அதை  ஒரு கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் செயலில் கின்னஸ் சாதனை அங்கீகரிக்கும் குழுவினர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்...கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...இந்த வனிதா மதிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராய்ந்து இடைவெளி ஏதுமுள்ளதா என்று அறிய ஒரு கிலோமீட்டருக்கு ஒரு  ஒளிப்பதிவாளர் என்ற முறையில் சுமார் 640 ஒளிபதிவாளர்களை, கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 50 லட்சம் பெண்கள் நிகழ்வில் பங்கேற்பதுடன் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆண்கள் இந்த செயல்பாடுகளுக்கு துணை நிற்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டது....

சமூக சீர்திருத்தப் போராட்டம் உள்ளிட்ட எத்தகைய போராட்டமென்றாலும் சமூகத்தின் சரிபாதியான பெண்களின் பங்கேற்பு மிகவும் அவசியம்...அதிலும் அவர்களே அதுபோன்ற போராட்டங்களுக்கு  துவக்கப் புள்ளியானது இன்னும் சிறப்பு...!

தமிழகம் உட்பட இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இத்தகைய முயற்சிகள் நடக்க இது ஒரு துவக்கப்புள்ளியாக அமைந்தது...!

வென்றது இந்த முயற்சி...!

  "வனிதா மதில்" வரலாறு படைத்தது...!

#சமூக_சீர்திருத்த_இயக்கங்கள்_வெல்லட்டும்