வியாழன், 1 ஜனவரி, 2015

மனு தர்ம முரண்பாடு

சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.
(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)
படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான். (மனு, அத்தி.3, சு.17)
13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மை யினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.
பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது.
விடுதலை,24.10.14,ப7

படக்காட்சியில் காமச்சுவை!

காட்சி என்ன கண்ணோடு வருகிறதா? என்று கிராமப் புரத்து மக்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் படக் காட்சியிலே பாமரர்களின் உள்ளம் படிந்துதான் கிடக்கிறது.
கடலன்ன காமங் கொண்டாலும் மடலேறா மாண்பு மங்கையொருத்திக்கு உண்டென்பான் வள்ளுவன்.
விரிந்து, பரந்து கிடக்கும் கடலைக் கண்டால் புலவர் பெருமக்கள் பழம் பனுவல்களையெல்லாம் பாழும் வயிற்றில் பதுக்கிக் கொண்டாயே என்று புழுங்கி ஏங்குவர். நீலக்கடலின் நீள்கரையில் நின்று, கடல்நீர் நீலமாக இருப்பதேன்? என்று அறிவியல் உலகம் வினா எழுப்பி விடை கண்டது.
அலைக்கும் கடல் முத்துக்களைக் கொடுத்து தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டது என பழங்கால வரலாற்றைப் பாங்குற அறிந்தோர் பகர்வர்.
பாம்பின் படங்கண்டும், விடங்கொண்ட பார்ப்பானை விரைந்து அடி, பாம்பு தப்பினாலும் பரவாயில்லை என்றார் தந்தை பெரியார்.
கடலையும், நிலத்தையும் பாம்பு தாங்குவதாக மூடத் தனத்தின் முழுமுதற்கருத்தைத் தமிழ் மண்ணில் விதைத்தனர்.
பெண்ணைப் பேரின்பப் பொருளாக்கி பேரிடியைத் தமிழர் வாழ்வில் விழ வைத்த பேதை மனிதர், மூடப் பழக்கத்தைப் புகுத்தியன்றோ தமிழர்களின் தன் மானத்தை இழக்க வைத்தனர்! ஒன்றா இரண்டா, ஓராயிரம் அன்ன உன்மத்தர் களால் உலா வந்தன பாடல் உருவிலே.
ஆண்ட இனம் ஆரியத்திற்கு அடிமைப்பட்டது அதனாலன்றோ? கோள்கள் தங்களின் ஈர்ப்புச் சக்தியால் இயங்கி வரு கின்றன என்பது அறிவியல் கண்ட கண்டுபிடிப்பு. ஆனால், ஆத்திகர்களோ கடல், நிலச்சுமையைப் பாம்பு தாங்கு வதாகப் பொய்யையே புனைந்து வைத்துத் தமிழர்களை மாய்க்க, இன்பத்தை ஊட்டினர்.
ஆயிரந்தலைப் பாம்பு படமெடுத்து மூடியதைப் போல, பெண்ணொருத்தி தன் மறைவிடத்தை மேகலை எனும் ஆபரணங் கொண்டு மறைத்தாள் என்று பிரபுலிங்க லீலையில் பேசப்படுகிறது. பெண்ணின் உறுப்பைப் பெரிதாக்கி பாம்பின் படம் அதற்கு உவமை என்பர் புலவர் பெருமக்கள்.
ஆனால், லிங்கத்தின் லீலையை பாடவந்த புலவன், மறைவிடத்தை நீள அகலங்கண்டு மீளமுடியாமல் - ஆயிரந்தலைப் பாம்பின் படங்களைக் கொண்டு மூடி அழகு பார்க்கிறான் - அளவு போடுகிறான் ஆத்திகப் புலவன். என்னே கடவுள் பக்தி! பக்திச் சுவையைப் பாட வந்தவன் பாவையின் படம் பற்றி சுவையொழுகப் பாடுகிறான்.
பக்தி வருமா? புத்தி அழியுமா? பாடலை மனப்பாடம் செய்யும் பக்தர்களே! பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது, உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறதன்றோ!
பாடலையே தருகிறோம். படித்தின்புறுங்கள்.
பாயும் வெண்திரைக் கருங்
கடல் நிலச்சுமைப் பாம்பின்
ஆயிரம் படங்களுந்திரை
யிட்டன வனைய
மீயி லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாய்
மாயை மங்கைத னல்குலி
னொருதிரு மடந்தை
(
பிரபு லிங்கலீலை, பக்கம். 67)
- தஞ்சை ஆடலரசன்
விடுதலை,24.19.14,ப7

திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!


திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன்  கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.
சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.
மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஆத்திகத்தின் மோசடி வேலை
ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.
காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.
எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-
காமத்தைப் பரப்பும் கருவி
அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?
இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.
கருங்குழற் செவ்வாய்
வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)
எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)
ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்
மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.
எனவே!  ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!
-தஞ்சை ஆடலரசன்
விடுதலை,26.9.14,ப7