வெள்ளி, 14 அக்டோபர், 2022

மாரியம்மன் திருவிழா - தந்தை பெரியார்

 

பெரியார் பேசுகிறார் : மாரியம்மன் திருவிழா

ஆகஸ்ட் 1-15,2021

தந்தை பெரியார்

கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.

இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.

இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அந்நிய புருஷன் மீது இச்சைப்பட்டு, அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும் படியாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளை யிட்டார். பரசுராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து, மகனுக்காக மாரியை பிழைப்பிக்கச் செய்து இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்.

தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில், கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலையுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கேயே போய் அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு எனக் கூறி அனுப்பினான். அது முதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன் வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி, மாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள். இது ஒரு புராணம்.

சிவபுராணத்தில் மாரியானவள் கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.

மற்றொரு புராணத்தில் –

அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப்பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும், அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.

அதைக் கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபசாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

(1) சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.

(2) கார்த்தவீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.

இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.

நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல் இவை யாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகின்றேன்.

(‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…)

ஆகம விதிகளின்படிதான் நடக்கின்றனவா?-(2) (அர்ச்சகர்ப் பிரச்சனை)

 

முகப்புக் கட்டுரை : அர்ச்சகர்ப் பிரச்சனை

ஜுலை 16-31,2021

ஆகம விதிகளின்படிதான் நடக்கின்றனவா?-(2)

கவிஞர் கலி.பூங்குன்றம்

புரட்டு என்பதன் மறுபெயர் பூணூல் அணியும்

பார்ப்பனர்களே. அதற்கு வெகுதூரம் போக வேண்டாம். பார்ப்பன உக்கிராணமான (கோயில் சமையல்கட்டு) ‘துக்ளக்கை’ ஒரு புரட்டுப் பு

ரட்டினால் போதும் _ இந்தப் பூணூல் பூனைகளின் புரட்டுகளின் மொத்த உருவமும் பூதாகரமாகவே தெரிந்துவிடும்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போர்க்கொடியைத் தூக்கினார் தந்தை பெரியார். கடவுள் பக்திக்காக அல்ல _ ஜாதி ஒழிப்புக்காகவே!

குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும்தான் கருவறைக்குள் நுழையலாம்; அர்ச்சனை செய்யலாம். மற்றவர்கள் சென்றால் தீட்டுப் பட்டுவிடும் என்பது ஒரு வகையான தீண்டாமையே!

பொது இடங்களில் ஒழிக்கப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பாம்பு _ கோயில் கருவறைக்குள் புகுந்து கொண்டு படம் எடுத்துக் கொத்துகிறது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் அந்தச் கடைசிப் போராட்டம்.

“நாங்கள் ஆட்சியில் இருக்க, அய்யா அவர்களே நீங்கள் போராட வேண்டுமா?’’ என்று முதலமைச்சர் கலைஞர் கேட்டு, அதற்கான சட்டத்தையும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றித் தந்தார்.

அதனை எதிர்த்து நேரடியாக உச்ச நீதிமன்றம் சென்றவர்கள் யார்? “ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்!’’ என்று தங்களுக்கு ஆள்பலம் தேவைப்படும் பொழுதெல்லாம் கூக்குரல் கொடுக்கும் அந்தக் குல்லூகப்பட்டர் பரம்பரையான 12 பார்ப்பனர்கள்தாம் _ காஞ்சி சங்கராச்சாரி _ ஜீயர் _ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆசியுடனும், அனுசரணையுடனும் உச்சநீதிமன்றம் சென்றனர்.  பல்கிவாலா இனாமாகவே வாதாடினார்.

அந்த நிலை எல்லாம் கடந்து, இப்பொழுது ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இருவர் பணியமர்த்தமும் செய்யப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர்பணி நியமனம் செய்யப்படும் தருணம் இது.

தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் நூறு நாள்களுக்குள் அர்ச்சகர் நியமனம் நடைபெறும் என்று அறிவித்தாலும் அறிவித்தார்… அடேயப்பா! வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டு அலற ஆரம்பித்துவிட்டது ஆரியம்.

ஆண்டாண்டுக்காலமாக சுரண்டிக் கொழுத்தவர்கள் அல்லவா! அவ்வளவு சுலபத்தில் விட்டுக் கொடுத்து விடுவார்களா?

ரத, கஜ, துரக பதாதிகளை எல்லாம் பயன்படுத்த மாட்டார்களா? அதுவும் இப்போது அவாள் ஆட்சியாயிற்றே! (கேரளாவில் 60க்கும் மேற்பட்ட கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமனம் நடைபெற்றாயிற்று என்பதையும் மனதில் வையுங்கள்!)

‘துக்ளக்’ குருமூர்த்தி என்ன செய்கிறார்? பழைய ‘துக்ளக்’ குப்பைகளைத் தேடி, அவரின் குருநாதர் திருவாளர் சோ.ராமசாமி அய்யர் 15 ஆண்டுகளுக்கு முன் ‘துக்ளக்’கில் கிறுக்கிய (7.5.2006) தலையங்கம் ஒன்றை எடுத்துப் போட்டு பாஷ்யம் செய்கிறார் பார்ப்பனத் தனத்துடன். (‘துக்ளக்’ 30.6.2021)

அதில் திருமந்திரத்திலிருந்து திருமூலர் எழுதிய புகழ்பெற்ற பாடல் ஒன்று _

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே’’

– திருமந்திரம் பாடல் எண்:  519

இதற்கு சோ தரும் விளக்கம்:

(சிவாச்சாரியார்கள் அல்லாத) பிராமணர்கள் சிவனை அர்ச்சித்தால், அந்நாட்டின் அரசனுக்கு கடும் வியாதி உண்டாகும். அந்த நாட்டில் பஞ்சம் தோன்றும்… என்று நந்தி தேவன் அறிந்து கூறினான் _ என்று பாஷ்யம் செய்துள்ளார் பார்ப்பனரான சோ.

ஆனால், இப்பாடலின் உண்மைப் பொருள் என்ன?

பார்ப்பான் அர்ச்சகனாக இருக்கக் கூடாது. கோவில் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று பார்ப்பான் கடவுளை அர்ச்சிக்கக் கூடாது. அப்படி அர்ச்சித்தால் போர்க் குணம் படைத்த நாடாளும் மன்னனுக்குக் கொடிய நோய் உண்டாகும். அத்துடன் நாட்டிலும் பெரிய பஞ்சம் ஏற்படும் என்று நந்தி கூறியதாக திருமூலர் கூறுகிறார்.

இந்த உண்மையான பொருளையும் சோ அய்யரின் பாஷ்யத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,  ‘அட பித்தலாட்டமே, உன் பெயர்தான் பார்ப்பனரா?’ என்றுதானே கேட்கத் தோன்றும்?

பார்ப்பனர்களைப் பற்றி திருமந்திரத்தில் திருமூலர் எழுதியுள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் எது உண்மை என்பது பளிச் சென்று புரிந்து விடுமே!

நூலும் சிகையும் நுவலின் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலுடை அந்தணர் காணம் நுவலிலே.

– திருமந்திரம் – 230

பார்ப்பானின் உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுக்க வேண்டும். “அறியாமையைப் போக்கிக் கொள்ளாத பார்ப்பனர்கள் உச்சிக்குடுமியும் பூணூலும் பெற்று இருப்பார்களேயானால், இந்த மண்ணுலகானது சோர்வடையும். பெருமை பொருந்திய வாழ்வினையுடைய மன்னவனும் தனது சிறப்புகளை இழப்பான். ஆதலால், இதனைப் பகுத்துணர்ந்து பார்ப்பானுடைய ஆடம்பரப் பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுத்தெறிவதே நல்லதாகும்.’’

“மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்

வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்

பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்து

ஆடம் பரநூற் சிகையறுத் தானன்றே’’

– திருமந்திரம் – 241

(நூல் -_ பூணூல், சிகை _ குடுமி) பார்ப்பானுக்கு மன்னன் நல்லறிவு புகட்ட வேண்டும். தெளிந்த அறிவில்லாத பார்ப்பனர்கள் சடைமுடி, பூணூல் கொண்டு மெய்ஞ்ஞான ஞானிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றி உலவக் கூடும். இப்படிப்பட்ட பார்ப்பனர்களை மன்னன் அறிவாளிகளைக் கொண்டு பரிசோதித்து அவர்களுக்கு நல்லறிவு உண்டாக்குவானேயானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும்.’’

“ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி

ஞானிகள் போல நடக்கின் றவர்தம்மை

ஞானிக ளாலே நரபதி ஜோதித்து

ஞானமுண் டாக்குதல் நல மாகும் நாட்டிற்கே’’

– திருமந்திரம் – 242

மூடர்களே பார்ப்பனர். “உண்மை பேசுதல் இல்லாமலும், தெளிந்த நல்லறிவு இல்லாமலும், எல்லோருக்கும் பொருந்தும் விஷயங்களை அறிவுகொண்டு ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும், பக்தி இல்லாமலும், கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற பித்தம் பிடித்த மூடர்கள்தாம் பிராமணர்கள் ஆவார்கள்.’’

“சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி

ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்

பத்தியும் இன்றிப் பரஊன்மை இன்றினு

பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.’’

– திருமந்திரம் – 231

திருமந்திரத்தில் திருமூலர் கூறிய இந்தப் பாடல்களை வைத்துப் பார்க்கும்பொழுது, ‘சோ’ எழுதியது போல பார்ப்பனர் பெருமை என்பது பித்தலாட்டமும் புரட்டும் சேர்ந்து போட்ட குட்டி என்பது விளங்கும்.

எல்லாப் பிராமணர்களும் அர்ச்சகர் ஆக முடியாது தெரியுமா? சிவாச்சாரியர்கள் _ ஒரு பிரிவினர்தான் அர்ச்சகர் ஆக முடியும். இந்த உண்மை தெரியாமல், “பிராமணர்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் _ மற்றவர்கள் அர்ச்சகர் ஆக முடியாதா?’’ என்று நாம் கேட்கிறோ மென்று சாமர்த்தியமாக எழுதுவதாக நினைப்பு.

-(‘தினமலர்’ 19.6.2021), (‘துக்ளக்’ 30.6.2021)

2006ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களுக்கெல்லாம் சென்று ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறதா? அர்ச்சகர்களுக்கு உண்மையிலேயே ஆகமங்கள், மந்திரங்கள் தெரிந்திருக்கிறதா என்பது பற்றி அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. அந்தக் குழுவில் உ.சே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார் போன்றோரும் இடம்பெற்றிருந்தனர்.

வடபழனி கோயிலைப் பற்றி அவர்கள் கூறுவது என்ன?

“வடபழனி முருகன் கோயிலில் குமார தந்திரமும், காமாக ஆகமமும் பின்பற்றப்படுகின்றன. முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்கு உதவியாக உள்ளவர்கள் அவர்களின் உறவினர்கள் என்பதால், அவர்களுடன் பணியாற்றுவதால், உடனிருப்பதிலிருந்து அறிந்துகொண்ட அஷ்டோத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள். இருப்பினும் அவர்கள் அனைவரும் பூசை செய்கின்றனர். அத்துடன் பக்தர்கள் அதிகம் வருகின்ற காரணத்தால், அர்ச்சகர்களின் தேவை அதிகமாக உள்ளதால், அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுடைய உறவினர் பலரை அழைத்து வந்து அர்ச்சகர்களாகப் பணியாற்ற வைத்துள்ளனர்’’  என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கூறியிருக்கிறதே _ ‘கோயில்கள், ஆகமங்கள், மாற்றங்கள்’ என்ற தலைப்பில் நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய நூலாகவும் வெளிவந்துள்ளதே!

                                                               (பக்கம் 76)

எங்கே போயிற்று ஆகம விதிகள் _ அர்ச்சகர்களின் உறவினர்கள் என்பதால் தீட்சை பெறாவிட்டாலும் கருவறைக்குள் செல்லலாம் _ அர்ச்சனை செய்யலாமாம்!

தமிழ்நாட்டில் உள்ள 108 வைணவக் கோயில்களில் 106 கோயில்களுக்குச் சென்று வந்த உ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார் அந்த 106 திவ்ய தேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பல கோயில்களில் அர்ச்சகர்களே இல்லை என்றும் கூறுகிறார்.

அய்யய்யோ! ஆகமம் தெரியாதவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே _ இது அடுக்குமா? நாடு தாங்குமா? என்று குரல் எழுப்பி சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு முன் குருமூர்த்தி வகையறாக்கள் மறியல் நடத்துவார்களா?

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர்கள் 116 பேர்களில் 28 பேர்களுக்கும் மட்டுமே ஆகம விதிகள் தெரியும் என்று அறிக்கை கூறுகிறதே! (19.01)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் நாட்டில் பிரளயம் ஏற்படும் என்று பிதற்றும் பெம்மான்கள் இதற்கு என்ன செய்யப் போவதாக உத்தேசம்?

சிவாச்சாரியார் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது _ முடியாது என்று அடம் பிடிக்கும் அய்யன்மார்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

திருப்பதியில் அன்றைய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 3.11.2000 அன்று திருப்பதி வெங்கடாசலபதி கோயில் _ தோமாலை சேவையின் போது, குலசேகரன்படியில் அமர்ந்து, அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும் ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) அர்ச்சனை செய்தாரே _ அதனை எந்த ஆகமக் கணக்கில் சேர்த்துக் கொள்வது? _ சொல்லட்டும் ‘துக்ளக்’ கூட்டம்.                                       

இராமேசுவரம் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியாராக இப்பொழுது இருக்கக் கூடிய விஜயேந்திர சரஸ்வதி செய்த அட்டகாசம் கொஞ்சமா?

                                                             (22.2.2021)

கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்றே தீருவேன் என்று தினவெடுத்து முண்டா தட்டவில்லையா? கோயில் அர்ச்சகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா? சிவஆகம தீட்சை பெற்றவர்கள் மட்டும் கருவறைக்குள் செல்ல முடியும் என்று அர்ச்சகர்கள் சொல்லவில்லையா?

இதே குருமூர்த்தியும் காரைக்குடி எச்.ராஜாவும் (அங்கே எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை) அடாவடித்தனமாக நடந்துகொண்டு, சங்கராச்சாரியாரைக் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று பூஜை செய்யுமாறு செய்யப்பட்டதே!

குறிப்பிட்ட சிவாச்சாரியார் தவிர பிராமணர் கூட கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைய முடியாது _ அர்ச்சனை செய்ய முடியாது என்று ஆகாயத்துக்கும் பூமா தேவிக்குமாகக் குதிக்கும் பூணூல்களே, உங்களின் பதில் என்ன?

ஆகம விதிகளுக்கு மாறாக, இராமேசுவரம் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி நுழைந்ததால் கர்ப்பக் கிரகம் தீட்டுப் பட்டிருக்க வேண்டுமே! _ அந்தத் தீட்டைக் கழிக்கத் தேவையான சடங்குகள் சுத்திகரிப்புகள் நடந்தனவா? ‘சுத்த சுயம் பிரகாசங்கள்’ பதில் சொன்னால் நல்லது.

பெண்கள் அர்ச்சகர்கள் ஆகக் கூடாதா?(1)

 

முகப்புக் கட்டுரை : பெண்கள் அர்ச்சகர்கள் ஆகக் கூடாதா?(1)

ஜுலை 16-31,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆண்களிலேயே குறிப்பிட்ட உயர்ஜாதியினர் தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அடம் பிடித்தவர்கள் _ அரட்டைக் கச்சேரி நடத்தியவர்கள், பெண்களும் அர்ச்கராகலாம் என்று சொன்னால் அமைதி காப்பார்களா? அம்மணமாக ஆடித் தீர்த்திட மாட்டார்களா?

‘துக்ளக்’ சோ.ராமசாமி 15 ஆண்டுகளுக்கு முன் ‘துக்ளக்’கில் (7.6.2006) எழுதிய தலையங்கத்தை மறுபதிப்பு செய்து (‘துக்ளக்’ 30.6.2021) குருமூர்த்தி குருக்கள் குதியாட்டம் போடுகிறார்.

‘சோ’ ராமசாமி எழுதியது என்ன?

“சரிநிகர் சமானம் என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும் என்பது  கொடுமை அல்லவா? முழுவதும் இல்லா விட்டாலும் 33% அர்ச்சகர்கள் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட முடியாதா? இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாள்களிலும், அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாமா?’’ என்று கிறுக்குத்தனத்தின் அசல் பதிப்பான சோ 15 ஆண்டுகளுக்கு முன் எழுதினார் என்றால்… பார்ப்பன சங்கத்தின் அதிகாரபூர்வமற்ற நாளேடான திரிநூல் ‘தினமலர்’ என்ன எழுதுகிறது?

“அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை மீண்டும் தி.மு.க. அரசு கையில் எடுத்திருக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றி பல்வேறு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று புலம்புகிறது ‘தினமலர்’ (17.6.2021).

அதே ‘தினமலர்’ (6.7.2021) தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் நாகசாமியும் “பெண் அர்ச்கர் நியமனம் அவசியமா?’’  என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்கள் உரிமைப் பிரச்சினை இது.

9.5.1981 அன்று கரூரில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டத்திலும் 11.8.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?

“கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை உயர்ஜாதியினமாகிய பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு என்ற நிலையை மாற்ற சட்டம் ஒன்றை கலைஞர் தலைமையில் இயங்கிய தி.மு.க. அரசு நிறைவேற்றியது. அச்சட்டத்தை உச்சநீதி மன்றத்தின் மூலம் முடக்கிவிட்ட நிலையில் அதனை மாற்றிட நடத்திடும் போராட்டத்தினை இம்மாநாடு ஆவலோடு எதிர்பார்க்கிறது.

அவ்வாறு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லும்போது ஆண்களுக்கு மட்டும்தான் என்ற ஒரு கருத்து இருப்பதால், பெண்களுக்கும் அர்ச்சகர்களாக ஆகும் வாய்ப்பைத் தர வேண்டும் என்பதைக் கோரும் கிளர்ச்சியாக அக்கிளர்ச்சியை விரிவு படுத்துவோம் என்பதை இம்மாநாடு தெரிவிக்கிறது.’’

இந்தத் தீர்மானம் ஏனோ தானோ என்ற போக்கில், யாரையோ எரிச்சல் ஊட்டுவதற்காக நிறைவேற்றப்பட்டதல்ல. ஆதாரங்கள் ஏகப் பட்டவை தாராளமாகவே உள்ளன.

எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராஜன் ஆணையக் குழு  அறிக்கை (1982)

1. தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவனைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே, முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும், திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்தபோது, தான் பூஜை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே, அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமான் சமீபம் இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள்கூர்ந்த பெருமான், தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக் கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞானசம்பந்தர், இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடி சாய்ந்த இலிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல், குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரிய புராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமத்தில் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மரபுகள் உடைக்கப்பட்டன: கோவிலில் பெண்கள், உயர் வகுப்பினர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம்:

மராட்டியத்தில் 900 ஆண்டுகளுக்குப் பின் ருக்மணி அம்மன் கோவிலில் பெண் அர்ச்சகருக்குக் கோவில் நிருவாகம் அனுமதி வழங்கியுள்ளது.

மராட்டிய மாநிலம் பந்தர்பூர் என்ற நகரில் 900 ஆண்டு பழைமைவாய்ந்த வித்தால் ருக்மணி அம்மன் கோவில் உள்ளது. மராட்டியத்தில் வர்காரி என்ற இனத்தவர்களின் குலதெய்வமாக இது விளங்குகிறது. ஆண்டுதோறும் 2 கோடி பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபடுகிறார்கள்.

அஷாத் என்ற புனித மாதத்தில் வர்காரி இன மக்களும், மற்ற இனத்தவர்களும் இந்தக் கோவிலுக்கு நடைபயணமாகச் சென்று தரிசனம் செய்வார்கள்.

இந்தக் கோவிலில் அன்றாட பூஜைகள் செய்ய பெண் அர்ச்சகர்கள் மற்றும் உயர் வகுப்பினர் அல்லாத இதர பிரிவினரையும் அனுமதிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவில் அர்ச்சகர் பணிக்குப் பெண்கள் மற்றும் இதர பிரிவினர் 129 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 16 பெண்களை கோவில் நிருவாகம் தேர்வு செய்துள்ளது. இதுபற்றி கோவில் நிருவாகத் தலைவர் அன்னா டாங்கே கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இங்குப் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது 900 ஆண்டுகளுக்குப் பின் அந்த மரபு உடைக்கப்பட்டு அனைவரும் பூஜை செய்யலாம் என்ற முன் மாதிரியான முடிவை எடுத்துள்ளது என்றார்.

முதல் கட்டமாக 16 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். அவர்களில் ஊர்மிளா பதே என்ற பெண் முதன்முதலாக கோவிலுக்குச் சென்று பூஜைகளை நடத்தினார். பெண் அர்ச்சகர்கள் ருக்மணி அம்மனுக்கு மட்டும் பூஜைகள் செய்வார்கள். வித்தால் சுவாமிக்கு ஆண் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(3.7.2014)

 உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. அக்கோயில் அறக்கட்டளை சார்பில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, 40 ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்புக் கூறியது.

வித்தல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே கூறும்போது, நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களால் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப்பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக்கட்டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகியவற்றை அனைத்து ஜாதியினரும், குறிப்பாக பார்ப்பனரல்லாதார் செய்ய வேண்டுமென்று விரும்பினோம் என்றார்.

கோவில்களில் பெண் பூசாரிகள் – கர்நாடக முதல்வர் அறிவிப்பு

மங்களூரு -_ “கர்நாடகாவில் உள்ள கோவில்களில், பெண் பூசாரிகளை நியமிப்பது குறித்து, மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்’’ என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவில், நவராத்திரியை முன்னிட்டு, தசரா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் பெரும்பாலான கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதோடு, பெண்கள், இளைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கூட்ரோலி கோகர்ணேஸ்வரர் கோவிலில், தசரா கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்த, மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, கோவில்களில், பெண்களை பூசாரிகளாக நியமிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது:

மக்களிடையே, தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், சம நீதி கிடைக்க வேண்டும். 1912களில், நாராயண குரு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடினார். அவரின் பெருமுயற்சியால், அனைத்துத் தரப்பினரும் கோவிலுக்குள் பிரவேசித்து வழிபட்டனர். அப்போது, தீண்டாமைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்தது போல், இப்போது பெண் உரிமைக்கும் போராட வேண்டும்.

பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோவில்களில், பெண்களைப் பூசாரிகளாக நியமிப்பது குறித்து, மாநில அரசு ஆலோசித்து வருகிறது. அரசின் இந்த முடிவை, மக்கள் ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன். அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்ட பின், விரைவில், பெண் பூசாரிகள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

(‘தினமலர்’ -29.9.2014 பக்கம் 10)

பெண் அர்ச்சகர் எங்கே?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் எல்லா பூஜை புனஸ்காரங்களையும் பெண்களே செய்கின்றனர். கோயில் நுழைவுப் போராட்டத்தில் தொடங்கி, பரம்பரைப் பூசாரிகள் நி

யமனத்தைத் தடை செய்யும் போராட்டம் வரை தமிழ்நாடு கலாச்சாரப் போராட்டங்கள் பல கண்டபோதிலும் கோயில்களில் பெண்களின் பங்கு என்பதும், ஆகமக் கோயில்களில் பெண் பூசாரிகள் நியமனம் என்பதும் இதுவரை பேசாப் பொருள்தான்.

புனித நூல்களில் பாகுபாடில்லை

வேத நூல்கள் உள்பட இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்னும் வரிகள் காணப்படவில்லை. புராதன வேத காலங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேதம் பயின்றனர். மணம் முடித்தோ அல்லது மணம் முடிக்காமலோ பிரம்மவாதினி எனும் பெண் பூணூல் அணிந்த பிறகு (யக்ஞோபவீதம்) வேத ஞானம் பெறுவதற்காக வேதம் பயின்றார்.

வேதப் பள்ளி ஆசிரியரான கதா சாக்ஷாவுக்கு காதி எனும் பெண் மாணவி இருந்தார் என அஷ்டத்யாயி நூலில் பாணினி குறிப்பிட்டுள்ளார். ரிக் வேதப் பாடல்கள் கைவரப்பெற்ற பெண் மாணவிகளை அவர் பாவிரிச்சி என்றே அழைக்கிறார் என்கிறார், சமூக வரலாற்றாசிரியர் நந்திதா கிருஷ்ணா. பெண்கள் குறித்துப் பாடப்பட்ட எத்தனையோ வேதப் பாடல்களும் இருக்கின்றன. வேத குருக்களாகப் பணியாற்றியதைத் தவிரவும் கோயில் விக்ரகங்களுக்கு முக்கிய அபிஷேகப் பூசைகளும் பெண்கள் செய்திருக்கின்றனர்.

பிராமண ஆகம முறைகளைப் பின்பற்றிய இந்துக் கோயில்களுக்கும் சிறு தெய்வ வழிபாடுகளுக்கும் இடையே நுணுக்கமான வேறுபாடு உண்டு. சிறுதெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்த கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக இல்லாவிட்டாலும், சமயச் சடங்குகளில் முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால், வேதங்களைப் படிக்கவும் ஆன்மிக ஞானம் பெறவும் தகுதியுடையவர்கள் பிராமண ஆண்களே எனப் பிராமணர்களுக்குள் பிடிவாதம் இருந்ததுபோலவே மற்ற சமூகத்தினரும் பெண்களைச் சமயச் சடங்குகள் ஆற்ற மறுப்புத் தெரிவித்தனர் என்கிறார் எழுத்தாளர் வ.கீதா. அறிவைக் கைப்பற்றும் இந்தச் செயல்தான் ஆணாதிக்கத்தின் துவக்கப் புள்ளி.

குருதியின் குறியீடு

ஆனால், பெண்களே அத்தனைப் பூஜை புனஸ்காரங்களையும் செய்யும் ஒரு கோயில் இருக்கிறது. சென்னையிலிருந்து 50 மைல் தொலைவில் 1970களில் கட்டி எழுப்பப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்தான் அது.

ஜாதி, இனம், வர்க்க வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது குருதியின் நிறம். அதன் குறியீடாக இங்கு வரும் பெண்கள் சிவப்பு நிறச் சேலை அணிவது வழக்கம். ஒரு தாய், ஒரு குலம் என்பதே இக்கோயிலின் மந்திரச் சொல்.

மாதவிடாய் நாள்களில் கோயிலுக்குள் கால் பதிக்கவே கலாச்சாரத் தடை விதிக்கும் ஒரு மதத்தில், இந்தக் கோயில் அந்தத் தடைகளைத் தவிடுபொடியாக்குகிறது. புனிதம், தீட்டு போன்ற படிப்பினைகளுக்கு இங்கு இடமில்லை. மாதவிடாய் என்பது இயற்கை நிகழ்வாகக் கருதுவதால் எந்நேரமும் இந்தக் கோயிலுக்குள் பெண்கள் பிரவேசிக்கலாம்.

அதேபோல கிராமப் புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு உரித்தான அம்மன் கோயில்களில் பெண் பூசாரிகளைக் காண்பது சகஜம். இருப்பினும், அங்கும் ஆண்கள் பெண்களின் இடத்தைப் பிடித்துக் கொள்வது உண்டு. பெண் பூசாரிகளுக்குப் பதிலாக நுழையும் ஆண்கள் சேலை அணிந்து பூஜை செய்யும் போக்கும் உள்ளது என்கிறார் முனைவர் கிருஷ்ணா.

பிரச்சினை எங்கே?

பெண் அர்ச்சகராக நினைத்தால் ஏன் இத்தனை எதிர்ப்பு? மாதவிடாய் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. முதலாவதாக, யாகம் நடத்துபவருக்கும் (யஜமானா) புரோகிதருக்கும் இடையே ஒரு சம்பிரதாயம் உண்டு. யாகம் நடத்துபவர் புரோகிதர் கையில் கங்கணம் கட்ட வேண்டும். அந்த வகையில் ஓர் ஆண் ஒரு பெண் கையில் கங்கணம் கட்ட வேண்டும் என்றால், இருவரும் தம்பதியினராக இருக்க வேண்டும். அடுத்து, யாகம் முடிந்ததும் நடத்துபவர், புரோகிதருக்குச் சம்பாவனை கொடுக்க வேண்டும். அப்படியிருக்க ஒரு பெண் புரோகிதர் சம்பாவனை பெற்றுக் கொள்வது என்பது ஒழுக்கக் கேடாகக் கருதப்படும்.

இரண்டாவதாக, பண்டைய காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி அடையும் எண்ணம் துளிர்த்தவுடன் ஆண்கள் பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்லாமல் சமய, ஆன்மிகத் தளத்திலும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். மூன்றாவதாக, தொடர்ந்து பல ஆண்டுகள் பயின்றால் மட்டுமே அர்ச்சகராக முடியும். இளம் வயதிலேயே திருமணம் முடித்துக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெண்களுக்கு எழுதப்படாத விதி. பெண் அர்ச்சகர் உருவாக இதுவும் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது எனலாம்.

ரிக் வேத காலத்தில் 30க்கும் அதிகமான வேத பண்டிதர்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. ஆனால், இன்று ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் பெண்களுக்கு இடமில்லை.

– ராதிகா சந்தானம், ஸ்ருதிசாகர் யமுனன்

– ‘தி இந்து’ (தமிழ்) 13.10.2015

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் அறிக்கை என்ன கூறுகிறது?

பெண் அர்ச்சகர்களும் ஸ்மார்த்த அர்ச்சகர்களும் 16.01. பெண் அர்ச்சகர்கள்:

வைணவ திவ்ய தேசங்கள் 108இல், 106க்குச் சென்று வந்துள்ள, உ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்ய தேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் என்றும், பல கோயில்களில் அர்ச்சகர்களே இல்லை என்றும் கூறுகிறார். அத்தோடு மட்டுமல்லாது, ஆண் பூசாரி இல்லாத காலத்தில் பெண் பூசாரிகள்கூட பூசை செய்வார்கள் என்றும் கூறுகிறார். ராமானுஜர், ஆகமம் நமக்கு இல்லை என்றும், பெண்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் தெரிவித்துள்ளார். இதிலிருந்து ஆகமம் என்பது (நடைமுறைகள்) மாற்றப்படக் கூடாத அளவு அவ்வளவு முக்கியத்துவம் உடையது இல்லை என்பதுதான் ராமானுஜர் கூற்று என்பதை அறியலாம். மேலும், பெண்களும் அர்ச்சகராகப் பணிபுரியலாம் என்பதுதான் ராமானுஜரின் கருத்து என்பதையும் அறியமுடியும். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள, வழிபாட்டு முறைகளைப் பற்றிய, கல்வெட்டுகளில் “இத்தளிச்சேரிப் பெண்டிர் (ஆடல் வல்ல மகளிர்) ஒவ்வொரு பூசை நேரத்திலும் தேவார இசைப் பாடல்களைப் பாடியவாறு வாத்திய இசைக்கேற்ப நடனமாடியபடி தட்டுகளில் பூக்களை எடுத்துச் சென்று அர்த்த மண்டபத்திற்கு மேலுள்ள தளங்களில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள கிழக்குப் புற வாயில்களின் வழியாக கீழே நிறுவப்பட்டிருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பார்கள். மேலும் இறை மூர்த்தங்கள் திருவீதி உலா சென்று வந்த பின் கோயில் வாசலில் வரவேற்று கோயிலினுள் அழைத்துச் செல்லும் உரிமையும் தளிச்சேரிப் பெண்டிருக்கே வழங்கப்பட்டிருந்தது’’ என்ற குறிப்பும் காணப்படுகிறது. பல கோயில்களில் ஆண்கள் இல்லாத காலத்தில் பெண்கள் பூசை செய்வதை இன்றும் காணலாம். எனவே, பெண்களுக்கு அர்ச்சகராவதற்கு உரிமை இல்லை என்ற வாதம் சரியானதல்ல என்பதையும் அறியலாம்.

“‘சரிநிகர் சமானம்’ என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பது கொடுமை அல்லவா! முழுவதும் இல்லாவிட்டாலும் 33% அர்ச்சகர்கள் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட முடியாதா? இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாள்களிலும் அந்த அர்ச்சகிகள் கோயிலில் அர்ச்சனை செய்யலாம்’’ _ என்று ஆத்திரமும் கிண்டலும் குதிக்க _ கொதிக்க சோ 2006இல் எழுதியதைத் தேடிப் பிடித்து இப்பொழுது (30.6.2021) மறுபதிப்பு செய்துள்ளாரே குருமூர்த்தி குருக்கள் (ஒரு வார்த்தையைக் கவனிக்க வேண்டும் _ மாதவிலக்கு நாள்களிலும் அந்த ‘அர்ச்சகிகள்’ என்று குறிப்பிட்டு இருப்பதில் உள்ள ஆரியக் கோபமும் திமிரும் தினாவெட்டும் மனுதர்மப் புத்தியும் கவனிக்கத் தக்கவை.)

முகத்தில் அடிப்பது போல ஒன்றைக் கேட்கலாம். அந்த மூன்று நாள் தனிமைப்படுத்தி உலக்கையைக் காவலுக்கு வைக்கும் வ(ப)ழக்கம் இப்பொழுது அக்ரகாரவாசிகள் வீட்டில் நடைமுறையில் உண்டா? அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பார்ப்பனப் பெண்கள் இதற்காக மாதத்திற்கு மூன்று நாள்கள் விடுப்பு எடுப்பது உண்டா?

கடைசிக் கடைசியாக மண்டையில் அடிப்பதுபோல ஓர் எடுத்துக்காட்டு.

‘மாதவிலக்கான நாளில் அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாம்.’ இதுதான் புரட்சி என்று புலம்பும் கூட்டம், கண்களில் விளக்கெண்ணெய்யைப் போட்டுக் கொண்டு, காதுகளையும் கூர்தீட்டிக் கொண்டு ஒன்றைப் படிக்கட்டும் _ கேட்கட்டும்!

கேரள மாநிலத்தில் செங்கண்ணூர்  செங்கண்ணூர் என்ற ஊரைக் கேள்விப்பட்டு இருப்பார்களே! ஆங்கே பகவதி அம்மன் பகவதி அம்மன் என்ற கோயிலை அறிந்திருப்பார்களே!

அந்தக் கோவிலில் விசேஷம் விசேஷம் என்ன என்ன?

அந்தப் பகவதி அம்மனுக்கு மாதா மாதம் மாதவிலக்கு வரும். அந்த மூன்று நாள்களில் _ ஆம் அந்த மூன்று நாள்களில்தான் பக்தர்கள் விசேஷமாய்க் கூடுவார்கள். பக்திப் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து ஓடுமே! இதற்கு என்ன பதில்? _ குருமூர்த்தி _ தாம்ப்ராஸ் (பார்ப்பனர் சங்கம்) கும்பலே!

இன்னொன்று மிக மிக முக்கியமானது. சிவனின் பக்கத்தில் பார்வதியும், சடையில் கங்கையும் மனைவியாக இருக்கிறார்களே _ அவர்கள் அந்த மூன்று நாளில் சிவனை விட்டு வெளியேறுவதில்லையே! அப்பொழுது சிவனின் நிலை என்ன? அட முரண்பாடே உன் நிலைதான் ஹிந்து மதமா?

குங்குமத்தின் ‘கதை’ என்ன?

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின் விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாதவிலக்கு வேளை ஏற்படும் இந்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் பெண்களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

– செ.கணேசன் எழுதிய

“பெண்ணடிமை தீர’’ என்னும் நூலிலிருந்து…