விஜயபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஜனவரி, 2019

விஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்!

மின்சாரம்


ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தின் (4.1.2019) கேள்வி - பதில்கள் இங்கே...

கேள்வி: ஹோம குண்டத்தில் பட்டுப் புடவைகள், பழங்கள், நாணயங்கள் போடுவது வீண்தானே?

பதில்: அக்னியில் நிவேதனம் செய்வதை தெய்வம் ஏற்று நமது எண்ணங்களை பூர்த்தி செய்யும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. இதுதான் பதில்.

ஓ, அப்படியா? முன்னோர்கள் நம்பிக்கை எல்லா வற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டுதான் வாழ் கிறோமா? முன்னோர்கள் போல்தான் முன் குடுமி வைத்துள்ளார்களா? பஞ்சகச்சம் போய் பேண்ட், சூட் வந்தது எல்லாம் எப்படி?

ஏன் கோயில்களில் தீவட்டியைத் தானே முன் னோர்கள் பிடித்து வந்தனர். இன்று வெள்ளைக்காரன் கண்டுபிடித்த நியான் விளக்கு வந்தது எப்படி?

ஆள் வடம் பிடித்து இழுத்து முட்டுக்கட்டைகள் போட்டு நிறுத்தப்பட்டத் தேர்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் வந்தது எப்படி?

அது சரி கடவுளுக்குத் தான் உருவம் இல்லையே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ஆயிற்றே! அவர் எப்படி அக்னிபகவான் ஆனார்? இரவு உணவு இல்லாமல் 20 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் உணவுப் பொருள்களை நெருப்பில் கொட்டுவதும், குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் செய்வதும்தான் முன்னோர்கள் வழியா?

பாட்டன் வெட்டியது என்பதற்காக உப்புத் தண்ணீர்க் கிணற்றைப் பயன்படுத்தி சமைக்க முடியுமா?

அக்னி - தெய்வமாம்; நாம் கொடுக்கும் பொருள்களை ஏற்று நமது எண்ணங்களைப் பூர்த்தி செய்யுமாம்.

இதற்கு அரசாங்கமே தேவையில்லையே! அரசாங்கமே அக்னியை வளர்த்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூபாய்க் கட்டுகளையும், தங்கக் கட்டிகளையும் நெருப்பில் போட்டு  நமது கயிலாயநாதன் பிராந்தியங் களைக் கைவசம் வைத்துள்ள சீனாவிலிருந்து மீட்க வேண்டியதுதானே! 'ரபேல்' வம்புகள் எல்லாம் தேவையில்லையே!

என்ன சாமர்த்தியம்! முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் ஒன்றை செய்வது - அது பற்றிக் கேள்வி கேட்டால் நமது முன்னோர்களின் நம்பிக்கை என்னும் படுதாவுக்குள் மூஞ்சைப் பதுக்கிக் கொள்வது இவை எல்லாம் முற்றிவிட்ட பைத்தியத்தின் கிழிசல் இல்லாமல் வேறு என்னவாம்?

«««


அடுத்த கேள்வி: பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா?

பதில்: பலரை தவறுகள் செய்யாமல் தடுப்பது இந்தப் பாவ புண்ணியம் என்ற நம்பிக்கைதான் காரணம்.

பார்த்தீர்களா - பார்த்தீர்களா? இங்கும் நம்பிக்கை வந்து குதித்துவிட்டதை.

தவறு செய்யாமல் தடுக்கிறதாம். இந்தப் பாவ புண்ணியம் நம்பிக்கை. அப்படியென்றால் காஞ்சி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் ஏன் கம்பி எண்ணி னார்கள்?

நாதுராம் கோட்சே ஏன் காந்தியைக் கொன்றான்? கீதை வாக்கியத்தை எடுத்துக்காட்டிதானே காந்தியைக் கொன்றது தர்மம்தான் என்று நீதிமன்றத்தில் கூற வில்லையா! பாவம் செய்து விட்டு அதற்குக் கழுவாயும்/பிராயச் சித்தமும் வைத்த பின்னர் பாவம் செய்ய அஞ்ச வேண்டிய அவசியம் எங்கேயிருந்து குதிக்கிறது?

12 வருடம் பாவம் செய்தவன் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விடுவதாலேயே பாவங்கள் போகும் என்றால் பாவம் செய்ய பயப்பட வேண்டிய அவசியம் என்ன? குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் தானே இந்த ஏற்பாடு (மகாமகக் குளத்தில் 28 விழுக்காடு மலம், 40 விழுக்காடு மூத்திரம் என்பது தஞ்சை மாவட்ட ஆட்சியர் பரிசோதனைக்குப் பின்னர் கொடுத்த அறிக்கை) இதனால் இ.கோலி, ஓ157-எச்7 பாக்டீரியாக்களால் உணவை நஞ்சாக்கும் - மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உருவாக்கும். இது அல்லாமல் என்னென்ன பொருளைக் கொடுத்தால், அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ற பட்டியல் வேறு.

பக்தி முட்டாள்தனத்துக்கும், சுரண்டலுக்கும் - ஒழுக்கக்கேட்டுக்கும் அளவேயில்லையா?

«««




கேள்வி: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் என்ன விசேஷம்?

பதில்: தர்பாரண்யேஸ்வரரை சனி பகவான் வழிபட்ட தலம். மேடையில் வாய் கிழிய நாத்திகம் பேசும் தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட தங்களது அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட சனீஸ்வரரை நாடி செல்கிறார்கள்.

முதல் கேள்விக்கு அளித்த பதில்தான் இதற்கும். "ஒன்றே கடவுள் அவன் உருவம் அற்றவன்" என்று சொன்னபின் அக்னி பகவான் எங்கே வந்தான்? சனி பகவான் எப்படி வந்தான்? விநாயகன் வந்த விதம் எப்படி? அவன் சகோதரன் சுப்பிரமணியன், தோப்பனார் சிவனும், தாயார் பார்வதியும் என்று கடவுளுக்குக் குடும்பங்கள், கூத்தியாள்கள் வந்த தெல்லாம் எப்படி? (மதுரையில் அழகர் வண்டியூருக் குப் போவது, சீரங்கப் பெருமாள் உறையூருக்குப் போவது)

ஓசை உள்ள கல்லை நீர்

உடைத்து இரண்டாய் செய்துமே

வாசலில் வைத்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்

பூசனைக்கு பதித்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்

ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே?

என சிவவாக்கிய சித்தரின் பாடலுக்கு 'விஜயபாரதம்' பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

சனீஸ்வரனை எந்த தி.க.காரன் நாடி செல்லுகிறான்? விஜயபாரதத்துக்குச் சற்றேனும் அறிவு நாணயமிருந்தால் ஆளைக் குறிப்பிட்டுச் சொல் லட்டும் பார்க்கலாம். அழி - பழி என்பது ஆரியத்தின் பிதுரார்தசொத்து போலும்!

இப்படிதான் சனீஸ்வரன் கோயில் பற்றி ஒரு 'புரூடா' விட்டார்கள்!

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குமேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படுகின்றன என்று ஒரு கதை கட்டி விட்டனர். இதுபற்றி 'சன்' தொலைக்காட்சி பேட்டியில் (24.11.2015 காலை 8.00 - 8.30 மணி) சந்திராயன் புகழ் மயில்சாமி அண்ணாதுரை என்ன கூறினார்? "கிட்டத்தட்ட 10 இந்திய செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றிரண்டாவது திருநள்ளாறுக்கு மேலே போயாகனும். இது போலவே புரளிகளை செய்கிறார்கள் என்பதற்காக எங்கள் குழுவினர் ஆய்வு செய்து பார்த்தோம். திருநள்ளாறில் இந்திய செயற்கைக்கோள்கள் எதற்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை" என்று அழுத்தமாகப் பதிவு செய்தாரே - பார்ப்பனப் பித்த லாட்டத்திற்கு உச்ச வரம்பே இல்லையா?

«««


கேள்வி: எனது விருப்பம் நிறைவேறினால் நான் கடவுளுக்கு மொட்டை போடுகிறேன் என வேண்டுதல் செய்வது சரிதானே?

பதில்: எல்லாம் நம்பிக்கைதான் காரணம் எப்படியோ பக்தி இருந்தால் சரி....

பார்த்தீர்களா - இங்கும் அந்த நம்பிக்கை மூடுதிரை வந்து குதித்து விட்டதே. நம்பிக்கையை நம்பினால் நம்ப வைத்துக் கழுத்தறுத்து விடுவார்கள்.

மொட்டை போடுவதற்கு நாணயமான பதில் உண்டா? நம்பிக்கைதான் காரணமாம். நம்பிக்கையில் இரண்டு வகை உண்டு. ஒன்று தன்னம்பிக்கை - வாழ்வை உயர்த்துவது - இன்னொன்று மூடநம்பிக்கை - இன்னும் கெட்டுப் போறேன் என்ன பந்தயம் கட்டுகிறாய் என்பது. கெட்டுப் போவது என்று முடிவு செய்து விட்டால் பந்தயம் வேறு கட்ட வேண்டுமா?

கடைசியாக என்ன எழுதுகிறது விஜயபாரதம்? எப்படியோ பக்தி இருந்தால் சரி என்கிறது. இங்கேதான் கோணிப் பைக்குள்ளிருக்கும் பூனைக்குட்டி வெளியே வருகிறது.

பக்தி வந்தால் புத்தி போய் விடும் அல்லவா! புத்தி போனால் மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிப் பார்ப்பானுக்குத் தட்சணை கொடுத்து மொடக் மொடக்கென்று பயபக்தி யோடு பஞ்சகவ்யம் என்று குடிப்பான் அல்லவா! அதுதான் எப்படியோ பக்தி இருந்தால் சரி என்பது.

ஆனால் ஒன்று - இந்த மூத்திரக் கலவையைக் கண்டிப்பாக சங்கராச் சாரி குடிக்க மாட்டார் - விஜய பாரதத் தார்கள் குடிக்க மாட்டார்கள். இராம. கோபாலனோ,  இல. கணேசனோ, 'எச்'சகளோ குடிக்கவே மாட்டார்கள்.

அடி மாட்டுப் பக்தி கொண்ட 'சூத்திரனும்', 'பஞ்சமனும்' தான் குடித்துத் தொலைவான். இந்த அஸ்தி வாரத்தில் தான் அவாளின் 'ரேக்ளா' ஜாம் ஜாமென்று ஓடுகிறது.



«««


கேள்வி: பெண்களின் சக்தி வாய்ந்த ஆயுதம் எது?

பதில்: பொதுவாக மனைவி, அம்மா, ஆகியோர் கடைசியில் பயன்படுத்தும் ஆயுதம் கண்ணீர்தான்.

எப்படிப்பட்ட பதில்? பெண்கள் என்றாலே கண்ணீர் தானாம். அவாளின் இந்துத்துவா அகராதியில் இதுதான் பொருள். அழுமூஞ்சி என்கிறார்களா? கோழை என்கிறார்களா? அழுது சாதிப்பவர்கள் என்கிறார்களா?

பெண்களை அய்ந்தாம் வருணத்தவர்களுக்கும் கீழேதானே வைக்கிறது இந்து மதம். மனுதர்மம் ஒன்ப தாம் அத்தியாயம் 19ஆம் சுலோகத்தைக் கேளுங்கள் - கேளுங்கள்.

"மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர் களென்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன" - இதுதான் மனுதர்மம். அதன் மறுபதிப்புதானே விஜயபாரதத்தார்கள்.

தன்னைப் பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரியும், பெற்றெடுத்த மகளும் அந்தப் பெரும்பாலோரில் அடங்குவார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னென்று சொல்ல! அதனால்தான் அந்த மனு தர்மத்தைக் கொளுத்தும் போராட்டத்தை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அறிவித்துள்ளார் தமிழர் தலைவர். (பெண்களே திரண்டு எழுவீர் என்பதே கழகத்தின் வேண்டுகோள்)

«««


கேள்வி: 'தேசம் காப்போம்' என்ற பெயரில் திருமாவளவன் ஒரு மாநாடு ஏற்பாடு செய்துள்ளாரே?

பதில்: அது சரி.. 'தேசம்' என்ற சொல்லே சமஸ் கிருதமாச்சே!

இதுதான் பதில், கேள்வி எதைக் குறிக்கிறது? பதில் எங்கே போகிறது?

பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிப்பார்களே - அந்தக் கெட்ட நடத்தைதான் (Foulgame) இவாளுடையது.

அந்த சொல்லில்தான் பிரச்சினை.... மற்றபடி அந்த மாநாட்டை 'விஜயபாரதம்' வரவேற்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

சமஸ்கிருதமாச்சே என்று அவர்கள் சொல்லுவது அவாளின் உள்ளுணர்வின் தாண்டவம் - அதனைக் கக்கி விட்டார்கள் பார்த்தீர்களா? என்னதான் மூடி மறைத்தாலும் பார்ப்பனத்தனம் முண்டியடித்துக் கொண்டு வெளியில் வந்துவிடுகிறதே!

- விடுதலை நாளேடு, 5.1.19

திங்கள், 29 அக்டோபர், 2018

கொள்கைக்கும், உரிமைக்கும் வேறுபாடு தெரியாத 'விஜயபாரதம்!'



கேள்வி: சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை கி.வீரமணி வரவேற்றுள்ளாரே?

பதில்: நேற்றுவரை அய்யப்ப வழிபாட்டை கிண்டலும், கேலியும் செய்தவர்கள், சாமியே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இவர்கள். இதுபற்றியெல்லாம் கருத்துச் சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

'விஜயபாரதம்', 26.10.2018, பக்கம் 35

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அதேநேரத்தில், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும்பொழுது அவர்களின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுவது மனித உரிமை.

கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறு பாட்டைத் தெரிந்துகொள்ளும் யோக்கியதை ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரத'த்துக்கு இல்லை என்பது விளங்கி விட்டது.

விஜயபாரதம்' சொல்லுவதைப் பார்த்தால் கடவுள் நம்பிக்கையற்ற மக்களுக்கு மட்டுமே தான் திராவிடர் கழகம் வாதாட வேண்டுமா? பகுத்தறிவும், இனநலனும் கழகத்தின் இருவிழிகள் என்பதை அறியாமலோ அல்லது அறிந்திருந்தும் பாசாங்கு செய்யும் தன்மையிலோ விஜய பாரதங்கள்' எப்படி செயல்பட்டாலும் பார்ப்பனீயத்தின் முகமூடியைக் கிழித்தெறிவார் திராவிடர் கழகத் தலைவர்.

இவர்களின் திசை திருப்பும் திரிநூல் வேலை எல்லாம் இங்கு எடுபடாது. ஜாதியே கூடாது என்பவர்கள் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கலாமா என்பார்கள் - இட ஒதுக்கீடு என்று வருகிறபோது இந்தப் பார்ப்பன பூணூல் கும்பலுக்கு ஜாதி ஒழிப்பைப்பற்றி அக்கறை பிய்த்துக் கொண்டு எகிறிக் குதிக்கும்!'

ஜாதி சட்ட ரீதியாக ஒழிக்கப்படட்டும்; பார்ப்பனர்களும், பூணூலை அறுத்து எறியட்டும்; சங்கர மடத்தில் இந்து மதத்தைச் சார்ந்த எவரும் சங்கராச்சாரியாராக வரலாம் என்ற அறிவிப்பு குறைந்தபட்சம் வரட்டும்.

இவற்றையெல்லாம் செய்ய முன்வராத வரை, ஜாதி இருக்கும்வரை ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்னும் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.

அதேபோல, கடவுள், கோவில் வழிபாடுகள் இருக்கும்வரை அவை தொடர்பான உரிமைக் குரலும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும்தான் தாழ்த்தப்பட்டவர்களும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற ஆலயப் பிரவேச போராட்டங்களை நடத்தியது, வெற்றியும் பெற்றது என்பதையும் விஜயபாரதங்களுக்கு' நினைவூட்டுகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் கோவிலில் அவமதிக்கப்பட்டாரே - அப்பொழுது குரல் கொடுத்தது விடுதலை'யா - விஜயபாரதமா?'

எங்கெங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின் றனவோ அங்கெங்கெல்லாம் திராவிடர் கழகத்தின் உரிமைச் சங்கநாதம் வெடித்தே கிளம்பும்!

விஜயபாரத'ங்கள் விளங்கிக் கொள்ளட்டும்!

- விடுதலை நாளேடு, 26.10.18

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

விடை உண்டா விஜயபாரதமே!



- மின்சாரம் -

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆள் நடமாட்டம் இல்லாத சின்னஞ்சிறு சிறிய கோயில்களில் உண்டியல் திருட்டு நடைபெற்று வந்தன - இப்பொழுது பழைமையான பெரிய கோயில்களில் சாமி நகைகளே காணாமல் போகின்றன. பல கோயில்களில் சாமி திருமேனிகளே திருட்டுப் போய் விட்டன. கோயில்களுக்கு நமது முன்னோர்கள் எழுதி வைத்த ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் கொள்ளை போகின்றன. அரசும் காவல்துறையும் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கத் தவறி கோட்டை விட்டுள்ளனர்.

(‘விஜயபாரதம்’ ஆர்.எஸ்.எஸ்.

வார இதழ்) 27.7.2018, பக்கம் 3)

விஜயபாரதத்துக்கு ஒன்று தெரியுமா? கோயிலைக் கொள்ளையடிப்பவர்களும் பக்தர்களே என்று சொல்லியிருப்பவர் இந்துமதத்தின் தலைவரான சாட்சாத் சங்கராச் சாரிதான். காஞ்சி காமக்கோடிப் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான் என்ன சொல்லு கிறார்?

அவர் வாயாலேயே கேட்டால் விஜயபாரத கும்பலுக்கு ருசியாக இருக்குமே!

குமுதம் கேள்வி: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றது. இதற்கு என்ன காரணம்? மக்களுக்கு கடவுள்களின் மீதுள்ள பக்தி போய் விட்டதா?

ஜெயேந்திரர் பதில்: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப்பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழிதேடுகிறார்கள். நாத்திகத் திற்கும், இப்படி எடுத்து போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாக விட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

(பேட்டி: பால்யூ)

(‘குமுதம்’ - 12.9.1996)

என்ன ‘விஜய பாரத’ வீராதி வீரர்களே! வாயடைத்து நிற்கிறீர்களே என்ன சங்கதி? 150கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜ ராஜ சோழன், அவரின் மனைவி உலகமகாதேவி சிலைகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திற்கு கடத்தியது யார்? - இப்பொழுது கையகப்படுத்தப்பட்டு தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது அல்லவா!

அந்த சிலையைக் கடத்தியவர்கள் யார்? விலைக்கு விற்றவர்கள் யார்? வாங்கிய வர்கள் யார்? அவையும் விஜயபாரதத்தின் விலா எலும்பைக் குத்துவதாகவே இருக்கிறது.

கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர் தஞ்சையில் உள்ள சலுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னைக்குக் கடத்தப்பட்டது. பின்னர் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக் கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளும் விற்கப்பட்டன. இதை சிலை தடுப்புப் பிரிவு அய்.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர். (விகடன் இணையம் -30.5.2018) (‘டெக்கான் கிரானிக்கள்’ - 2.6.2018)

ராவ்பகதூர் சீனிவாச கோபாலாச் சாரியாராம். இந்தப் பூணூல் திருமேனிக்கு விளக்கம் வேறு தேவையா? ‘விஜய  பாரதங்கள்’ தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப்போகின்றன?

கேள்வி: முயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் தெய்வத்தின் அருள் இல்லாமல் போனாலும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்பது சரியா?

பதில்: முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடைபெறும் என நம்புகிறதோ!

மார்க்சும், ஏங்கல்சும், விஞ்ஞானிகளும், தந்தைபெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் பெரிய தலைவர்களாகி இன்று வரை மதிக்கப்படுவதெல்லாம் கடவுள் அருளால் அவர்கள் பெற்ற முயற்சிதானா? அப்படி என்றால் அவர்கள் கடவுள், மதம் உள்ளிட்ட வற்றிற்கு சவுக்கடி கொடுத்து தோரணமாய்த் தொங்க விட்டார்களே - அதுவும் இறைவன் அருளால் தானா?

‘தெய்வத்தான் ஆகா தெனினும்  முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்’

என்பது குறள் (619)

கேள்வி: அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?

பதில்: ‘நாகதோஷம் உள்ளது என்று பொருள். பாம்பு கடிப்பதாக கனவு கண்டால் செல்வம் சேரும். அருகில் உள்ள கோயி லுக்குச் சென்று நாகர் சிலைக்கோ, புற்றுக்கோ பால் ஊற்ற வேண்டும்’ என்று விஜயபாரதத் தின் ஆஸ்தான ஜோதிடர் தெரிவித்தார்.

அப்படியா! பாம்பு கடித்ததாக கனவு கண்டாலே செல்வம் சேருமா? கனவில் காணும் போதே செல்வம் சேரும் என்றால் நிஜமாகக் கடித்தால் பெரும் செல்வம் குவியுமோ!

பாம்புப் புற்றுக்கு பால் ஊற்ற வேண்டுமாம்!

இந்த ‘விஜயபாரதங்களுக்கு’ பொது அறிவோ, விஞ்ஞான அறிவோ அறவே யில்லை என்பதற்கு இந்தப் பதில் ஒன்றே போதுமே!

புற்றில் பால் ஊற்றினால் பாம்பு பால் குடிக்குமா? பிளவுண்ட நாக்கையுடைய பாம்பால் பால் குடிக்க முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றன.

கேள்வி: ‘கீதை’, ‘திருவாசகம்’, ‘திருக்குறள்’ சிறப் பென்ன?

பதில்: இறைவன் மனிதனுக்கு அருளியது கீதை. மனிதன் இறைவனிடம் வேண்டியது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

“நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக் குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாள னாகிய என்னால் கூட முடியாது”

(கீதை அத்தியாயம்-4, சுலோகம் 13)

“பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்”

(கீதை, அத்தியாம் 9, சுலோகம் 32)

விஜயபாரதக்குஞ்சுகளே! இந்தக் கீதையை சூத்திரர் களும், பெண்களும், வைஸ்யர்களும் எரிக்க வேண்டுமா? ஏற்க வேண்டுமா? விவேகம் இருந்தால் பதில் சொல் பார்க்கலாம். அது ஒருபுறம் இருக் கட்டும். இந்து மதத்தை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்த உங்கள் விவேகானந்தர் கீதைப்பற்றி  என்ன கூறுகிறார்?

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுவது

நல்லது என்று சொன்னவரும் விவேகானந்தரே!

“கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக-  அதாவது வேத வியாசர் எழுதி யதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப்படுவது போல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜூனனும் ஏனைய வர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன. கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன், ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர, இவர்கள் இருந்தனர் என்றோ, குரு சேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

(விவேகானந்தர் - ‘கீதையைப்பற்றிக் கருத் துகள்’ என்ற நூலில் (ஆதாரம்: ஏ.எஸ்.கே. எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூலில் - பக்கம் 117)

கீதை முட்டாள்களின் உளறல் என்றாரே- அண்ணல் அம்பேத்கர்!

பரவாயில்லையே - குறளையாவது மனிதனுக்கு மனிதன் சொன்னது என்று ஒப்புக் கொண்டதே. திருக்குறளை மனுதர்மத்தின் பிழிவு என்று சொன்ன திலிருந்து புத்தி மாறியிருப்பது வரவேற்கத்தக்கதே..

- விடுதலை ஞாயிறு மலர் 4. 8. 18