ஞாயிறு, 19 மார்ச், 2023

ஆரியர்கள் அயோக்கியத்தனம் / விஷ்ணு புராணம்

 ஆரியர்கள் அயோக்கியத்தனம்

• Viduthalai

ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

நம் நாட்டில் பிழைக்கவந்த -  குடியேறிய ஆரியர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதையும் நம்மை மனிதத் தன்மை யோடு வாழவிடாமல் செய்து, அவ்வளவு கொடுமையும், அட்டூழியமும் செய்திருக் கிறார்கள் என்பதையும் உணரவேண்டு மானால் அவர்களால் எழுதப்பட்ட புராண இதிகாசங்களைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

வேதத்திலும் சாஸ்திர உபநிஷதங்களி லும் ஏராளமான அயோக்கியத்தனங்களும், கொலைபாதகங்களும் இருந்தாலும் அவைகளைச் சரியானபடி ஆதாரத்தோடு வெளிப்படுத்துவது என்பது என் போன்ற வர்களுக்கு அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்றாலும், புராண இதிகாசங்கள் என்பவைகளைக் கொண்டு தக்க ஆதா ரங்களோடு வெளிப்படுத்துவது எளிதான காரியமேயாகும்.

புராணம் என்றால் பழைய கதை என்பது அகராதியில் பொருள். என்றாலும் புராணங்கள் என்றால் பழைய கதை என்று திரு.முன்ஷியே பல இடங்களில் குறிப் பிட்டிருக்கிறார்.

சாதாரணமாக ‘புராண’ என்கின்ற சொல்லுக்கே பழையது என்பது பொருள். இந்தியில் ஆனாலும், உருதுவில் ஆனாலும், நவா என்றால் புதியது; புராணம் என்றால் பழையது. இது சாதாரணச் சொல்! ஆகவே, அப்படிப்பட்ட பழங்கதை என் னும் பேரால் பார்ப்பனர் எழுதி வைத் திருக்கும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகிய புராணங்களில் காணப்படும் கருத் துகள் சிலவற்றை, எடுத்துச் சொல்லுவோம். அதில் இருந்து ஆரியர்களின் மத ஆதா ரங்களின் அக்கிரமங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு புராணம்

விஷ்ணு புராணத்தில் ஓர் இடத்தில் அதாவது ஓர் அத்தியாயத்தில் காணப்படு வதாவது:

தேவர்கள் எல்லாம் விஷ்ணுவிடம் சென்று, “மகாவிஷ்ணுவே! பூலோகத்தில் அசுரர்கள், ராட்சதர்கள் எல்லோரும் ஜப, தபங்கள், தானதர்மங்கள் செய்து ஒழுக்கத் தோடு நடந்து வருகின்றார்கள். இதனால்  தேவர்களாகிய - பிராமணர்களாகிய எங் களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடு கிறது. எங்களை மக்கள் மதிப்பதில்லை. தேவர்கள், பிராமணர்கள் என்பதற்காகவே நாங்கள் அடைந்துவந்த பெருமைகளையும் உரிமைகளையும் அடைய முடிவதில்லை. அவற்றில் அவர்களும் உரிமையும் பங்கும் கேட்கிறார்கள். அதனால் எங்களுக்குக் குறைந்துவிடுகின்றன. இதனால் நாங்கள் எங்கள் பெருமையை இழக்கவேண்டி இருக்கின்றது. ஆதலால் எங்களைக் காப் பாற்றி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கு விஷ்ணு பகவான் சொல்லு கிறார்: ‘நான் என் உடலில் இருந்து ஒரு மாயா மோகனை உண்டாக்குகின்றேன்; அவன் மக்களிடம் சென்று “தான தர்ம, ஜபதபம் செய்வதில் பிரயோஜனம் இல்லை. மக்கள் ஒழுங்காக அறிவின்படி நடந்தால் போதும்’’ என்று சொல்லிவிடுவான். அப் பொழுது நான் அவர்களை “நீங்கள் எல் லோரும் வேத சாஸ்திரப்படி நடவாமல் அறிவின்படி நடந்தவர்கள், விஞ்ஞானத்தை பிரதானமாய்க் கொண்டவர் கள். ஆதலால் நரகத்தில் இருக்கத் தகுந்த வர்கள்’’ என்று சொல்லி நரகத்தில் போட்டு அழித்துவிடுகிறேன்’’ என்று சொல்லி விட்டார்.

அதன்மீது அந்த மாயாமோகன் மக்க ளுக்குப் பகுத்தறிவைப் போதித்து, எல்லோ ரையும் வேத மார்க்கத்தைவிட்டு பகுத்தறி வுப்படியே நடந்து, எல்லா மக்களும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அதன் பயனாய் உலக போக போக்கியங்கள் யாவும் ஆரியர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமே கிடைத்து அவர்கள் சுகவாசியாக வாழ்ந்தார்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குறிப்பு: அந்த மாயாமோகன் போதித்த கொள்கைகள் புத்தியைப் பொறுத்த கொள்கை. ஆனதனால் அந்த மாயா மோகனுக்குப் புத்தன் என்று பெயர் ஏற்பட்டதாகவும் அதிலே இருக்கின்றது. இது விஷ்ணு புராணத்தில் உள்ளபடி தொகுக்கப்பட்டது.

- தந்தை பெரியார்