சனி, 19 செப்டம்பர், 2015

விபச்சாரமும் ஜாதியும்

Image result for சாதி
பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர் களுக்குள் ஆரியக்கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் களுக்குள் மாத்திரம் தான் கடவுளால் கிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இவை முறையே ஒன்றுக்கொன்று, தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பதுமிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாக குறிக்கப்பட்டிருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்படி இருந்தாலும் இப்போது அநேக ஜாதிகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று கவனித்துப் பார்ப்போமானால் அதற்குக்கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம்.
அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத் தாரும் தங்களில் ஜாதிமுறைதவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபசாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியார்கள் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.
அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய், இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபசாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சமஜாதிகள் என்றே காட்டப்பட்டிருக்கின்றன. அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக் கின்றோம்.
ஆகவே அதில், உதாரணமாக, இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும், என்று சொல்லில் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் என்னப்படுபவர்களே பஞ்சம் ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சம ஜாதியிலும் பிராமணன் சத்திரிய குலப்பெண்ணை சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இவர்களில் இந்தப் படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்கு காணியாளர் என்று பெயர் என்றும், மற்றபடி சிற்றரசு, மந்திரித்துவம் முதலிய பதவிகளில்  இருப்பவர்களாயிருந்தால்  அவர்களுக்கு வேளான் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும், குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்காகாதாம், சுப்ரபோதகம், பிரம்ம புராணம் வைகாநசம், மாதவியம், சாதிவிளக்கம், என்கின்ற நூல்கள் என்றும், குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தவிர மேல்கண்ட பிராமாணஜாதி ஆண், சத்திரிய ஜாதி பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது இது தெலுங்கு பாஷை பேசும் தெலுங்கு தேசத்தவனேவரையும் குறிப்பிடத் தக்கதாகவே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும்  சோரத்தால் பிறந்த பிள்ளைகள்  குயவர் என்றும், நாவிதர் என்றும், குறிக்கப்பட்டிருக்கின்றது. அது போலவே பிராமணன். சூக்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை பரசவர், அதாவது செம் படவர் என்றும் சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுகர், என்றும், குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிராமணப்பெண்ணுடன் சூத்திரன் விபசாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடபட்டி ருக்கின்றன.
பிராமண குலப்பெண்களுடன் சண்டாளர் கூடிப்பிறந்த பிள்ளைகள் சருமகாரர். அதாவது சக்கிலிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சத்திரியகுலப் பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணுகர், (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்கவேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும்  கூறப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி கீழ்மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில், அயோவகச் சாதிப் பெண் இடம் நிடாதனுக்குப் பிறந்த, பிள்ளைகள் பார்த்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த படியே இப்போது உள்ள சாதிகளையெல்லாம குறிக்கும்படியாகவே இன்றும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.
இதுபோலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி அதாவது அபிதான கோசம் அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகயும் குறிக்கப்பட்டிருக்கின்றதோடு 4 ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல்கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும்,
விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டடவர்கள் என்றே கூறப்பட்டிருக் கின்றன. செட்டியார் மார்களையும், ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது.
ஆகவே ஜாதியை கட்டிக்கொண்டு அழுவது இவ் விழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.
உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொற்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவை கற்பித்து அதை நம்மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்த காரியமே ஜாதிப்பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.
(குடிஅரசு, 1930)

மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின்பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான்.
மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்த னையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.
-விடுதலை,12.9.15

பார்ப்பனத்திகள் வெளியிலிருந்து வந்தவர்களா

ஜாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப்பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது? அச்சாதி வேற்றுமையை அக்கடவுள் வேறுநாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்தியநாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்ய வேண்டும்?
அவன் முகத்தில் தோன்றியபார்ப்பனர்கள் உயர்ந்த ஜாதியாரென்றும் அதன் கீழ்ப்பாகமாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய சத்திரியர் அவர்களை விட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும், தொடையில் தோன்றிய வைசியர் சத்திரியரைவிட சிறிது தாழ்ந்த ஜாதியார் என்றும் பாதங்களில் தோன்றிய சூத்திரர் இவர்கள் எல்லோரையும் விட கீழானவர் என்றும் கூறல் சரியா?
ஒரே மரத்தில் உச்சியிலும் இடையிலுள்ள கிளைகளிலும் அடியிலும் காய்கள் காய்க்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்த்த பழங்கள் எல்லாவற்றையும் விடத்தாழ்ந்த ருசியையு முடைய தாயிருக்கின்றதோ அவ்வாறில்லாமல் எல்லாம் ஒரே விதமான ருசியாயிருக்கிறதே அஃதே போல் எல்லாச் சாதியாரும் சமமானவர்களாகத்தானேயிருக்க வேண்டும்.
கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்தி செய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவை வெவ்வேறு ஜாதி என்று காட்ட வெவ்வேறு உருவமுடையதாய் உற்பத்திசெய்திருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும், சத்திரியனை வேறு உருவமாகவும், வைசியனை வேறு வடிவமாகவும், சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டு பண்ணியிருப்பானன்றோ?
ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டா வதில்லை. அஃதே போல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப்பெண்ணும், சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டா காமலிருக்க வேண்டு மே? அவ்வாறின்மையால் மனிதர்களனை வரும் ஒரே ஜாதி யென்பது விளங்கவில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றி னான் என்றுதானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்களறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாண மாய்ப்போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைக் கூட்டிக் கொண்டு போவது வழக்கமில்லை. அஃதேபோல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்களின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில் லாமல் போய்விட்டது.
நாம் பழையசாத்திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக்காட்டாக வியாசமுனி மீன்வாணிச்சியி னின்றும், கவுசிக முனி சூத்ரச்சியினின்றும், விசுவாமித்திரர் சண்டாளச்சியினின்றும், வசிஷ்டர் வேசியினின்றும், சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும்,
புலைச்சி வயிற்றில் பராசரமுனியும் பிறந்தததாக காணக்கிடக் கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தியிடம் பிறக்கவில்லை யென்றாலும் பார்ப்பனர்களாக ஏன் அவர்களின் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக் கின்றனர்? இந்நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும், மற்ற ஜாதியார் கூடியிருக்கவும் காரணமில்லை.
சென்ற முறை எடுக்கப்பட்ட ஜனசங்கைக் (Senseus) கணக்குப்படி 100க்கு ஒருவர் பிராமணராயும், மீதி 99 பேரும் சூத்திரராயுமிருக்கின்றார்களே. பார்ப்பனர்களின் தற்கால சித்தாந்தப்படி கலியுகத்தில் சத்திரியரும், வைசியரும் கிடை யாது. பிரம்மாவின் மூத்த புத்திரர்களும், அதிகப் பிரீதியுடைய வர்களும், பூசுரர்களுமான (பூலோக தேவர்களுமான) பார்ப்ப னர்கள் மற்றைய ஜாதியார் களைவிட இத்துணை குறைவாகவும் சூத்திரர்கள் பல்கிப் பெருகி இருக்கவும் காரணந் தானென்னை? ஒரே ஜாதியான பார்ப்பனரிலே பல பிரிவினை களுண்டாகி ஒருவர் வீட்டில் ஒருவர் உணவருந்த மாட்டேனென மறுத்தலும் ஏதற்கு?
பிரம்மதேவன் முகத்திலும், புஜத்திலும், தொடையிலும், பாதத்திலும் பிள்ளை உண்டாவதாகயிருந்தால் அவனுக்கு மனைவி எதற் கென்றும், ஆண்குறி எதற்கென்றும் கேள்விப்பிறக்கின்றது. எனவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை உயர்த்தவே இத்தகைய கட்டுக் கதைகளுண்டு பண்ணியவர் என்பதை நிச்சயமாய் நாமறியலாம்.
(குடிஅரசு 9.11.1930)
-விடுதலை,18.9.15

பிரம தேவனின் ஒரு தலை கிள்ளப்பட்டதற்கு காரணம்

பிரம தேவனின் ஒரு தலை கிள்ளப்பட்டதற்கு காரணம்
பிரம்மா சகல சிருஷ்டிக்கும் வேதத்திற்கும் கர்த்தர். மனைவி சரஸ்வதி. ஆயுதம்-பாசம், கொடி-மறை, வாகனம்-அன்னம் முதலிய ஆசனம்-தாமரை, பொன்மேனியுடையவர் இந்த பிரமம் முதலில் 5 முகத்தோடிருந்தார். பிறகு நான்முகம் ஆனார். ஓர் முகம் இல்லாமைக்குக் காரணம் பல வாறு கூறப்படுகிறது.
தேவர் கூடிச்சிவனுக்குக் கல்யாணம் செய்யு முன் பிரமன் அக்கலியாணப் பெண்ணாகிய பார்வதியைக் காண நினைத்தார். அவள் பெருவிரலை மாத்திரம் காணமுடிந்தது. உடனே காமம் தலைக்கேறிற்று. விந்து வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அதைப் பெருவிரலாலே தேய்த்தார். கோபி சந்தனப்பார்ப்பனர் உண் டாயினர்.
இருவிரலால் தேய்த்தார்; நாமக்காரப் பார்ப்பனர் உண் டாயினர். மூன்று விரலால் தேய்த்தார். விபூதிப் பார்ப்பனர் உண்டாயினர். அனைவரும் வேதகோஷம் செய்வது கேட்ட சிவன் யோசிக்க-பிரமனின் அயோக்கியத்தனம் தெரிந்தது. உடனே சிவன் பிரமனின் 5 தலையில் ஒரு தலையைக் கிள்ளினார்.
எவற்றையும் ஆக்கி அழிக்கும் ஒரு பெரும்பொருளின் அம்ஸமென்று அவ் வரலாற்றிற் குறிக்கப்படும் பிரமனை ஒப்புக்கொள்வது எங்ஙனம்? மனிதரிலும் கடைப்பட்ட மனிதனும் செய்தலில்லாத செயல்கள் இவ் வரலாற்றிற் குறிக்கப்படுகிறது. மக்களின் அறிவை மாய்க்கச்சிறிதும் யோக்கியப் பொறுப்பற்றவர்களால் இது உண்டு பண்ணப்பட்டி ருக்கிறது. இதுவன்றிப் பிரமனின் ஒரு தலை பறிபோனதற்கு மற்றொரு வரலாறும் வரைந்துள்ளனர்.
சிவனுக்கும் பிரமாவுக்கும் 5 தலைகள் இருந்ததால் சில வேளைகளில் இவர் மனைவிமார் அடையாளம் கண்டறியக்கூட வில்லை. ஆதலால் சிவன் பிரமனின் ஒரு தலையைக் கிள்ளினார். என்ன ஆபாசப்பொய்! பார்வதியிம் - சரஸ்வதியும் தம் கணவர் களை அடையாளம் கண்டறிய கூடவில்லையா?
அனைத்தும் சிருஷ்டித்த பிரமன் சிவனல் கிள்ளப்பட்ட தலையைச் சிருஷ்டிக்க முடியாதா? ஜீவர்கள் கதி இன்னசமயம் இவ்வாறு ஆகும் என்று தலையெழுத்தெழுதும் பிரமாவின் தலை கிள்ளப்பட்டது. இப்படி இவர் தலையில் எழுதியது யார்?
இதுவன்றிப் பிரமன் தலை காலியானதற்கு மற்றொரு கதை.
பிரமனின் மகள் ஊர்வசி, மகள் மேல் தகப்பன் காதல் கொண்டான். ஊர்வசி தந்தையைப் புணர நாணினள். ஆனால் இருவரும் மான்களின் உருவங்கொண்டு கலந்தனர். இந்த ஆபாச சேர்க்கையைக் கண்ட சிவன் பிரமன் தலையில் ஒன்றை வெட்டினான். இதனால் பிரமதேவன் யோக்கியதை நன்றய் விளங்கும்.
மக்களைச் சிருஷ்டித்த மகா பெரியாரின் யோக்கியதை இவ்வாறனால் பிறருக்குக் கேட்பானேன்? காமப்பித்துடைய மூடர் கட்டிவிட்ட கட்டுகளை நம்மவர் இன்னும் எத்தனை நாள் விட்டுவைத்திருக்க முடியும்? இதுவன்றி இன்னொரு காரணம்:-
பிரம்மாவுக்கும், சிவனுக்கும் சண்டை ஏற்பட்டது. நான் தான் உன்னைச் சிருஷ்டித்தேன் என்று பிரமன் சொன்னதால் சிவன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டினார். மற்றெல்லாவற்றிலும் இது அதிக வேடிக்கை! நன்று. நான் என்னும் அகந்தையும் இவர்களை விட்டபாடில்லை.
கர்வங் காரணமாகச் சண்டையும் ஒன்றா? பிரமனும், சிவனும் சேர்ந்து உலகு உய்ய நல்ல பாடங் காட்டியருளு கின்றனர். நன்று! அனைத்தையும் சிருஷ்டித்ததாய்ச் சொல்ல ஓர் பிரமனைச் சிருஷ்டிப்பானேன்? அப்பிரமாவுக்கு 5 முகம் என்பா னேன்? பிறகு நான்கு முகமாக்குவானேன்? ஒரு முகம் தீர்ந்ததற்கு கதை வளர்ப்பானேன்? அந்தக்கதையையும் பலவிதமாக ஒன்றுக்கொன்று முரண்பட உளறி வைப்பானேன்?
இதையெல்லாம் சொல்லி மக்களிடம் போர் கிளப்புவானேன்? இந்த புராணங்களைச் சொல்லும் சோம்பேறிகட்கு வஞ்சகர்கட்குப் பணத்தை விரயம் செய்யும் படி விடுவானேன்? இவைகளால் மக்கள் இந்நாள் மட்டும் அடைந்த பயன் என்ன? இனித்தான் என்னபயன் ஏற்படக்கூடும் என்பதை வாசகர்கள் யோசிக்க! அதனோடு இந்த ஆபாச நடனத்தையுடைய பிரமன் தந்ததாய்ச் சொல்லும் வேதம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்பதையும் யோசிக்க!
(புதுவை முரசு, 1930)
-விடுதலை,18.9.15
ஜாதி, மத, நிற, தேச வெறிகள் ஒழிவதெப்படி?

தேவகோட்டை, திருச்சி பக்கத்திலுள்ள கிராமங்களில் ஆதி திராவிடப் பெண்மணிகள் மேலாடை அணியக்கூடாதென்று தடுத்தும் அவர்களுடைய குடிசைகளைக்கொளுத்தியும் ஜாதி இந்துக்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.
படகாரா என்னுமிடத்தில் ஒரு கோவில் குளத்தில் குளிக்கக்சென்ற தீண்டாதார்"  என்பவர்களை ஜாதி இந்துக்கள் என்போர் அடித்துத் துரத்தினார்களாம். திருவாங்கூரிலுள்ள சுசீந்திரத்தில் பொது ரஸ்தாவில் ஆதிதிராவிடர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். இது தான்  ஜாதி வெறி.
கான்பூரில் இந்துக்களும் முஸ்லிம்களும் ரத்த வெறிபிடித்த மிருகங்களைப் போல் ஒருவரை யொருவர் கொலை செய்தும், வீடுமுதலானவைகளைக் கொளுத்தியும் அட்டகாசம் செய்துகொண்டிருக்கிரு.ர்கள்.
திருச்சியில் 'ஹிந்து'க் கடவுள் முஸ்லிம் கடவுளுடைய வீடாகிய மசூதிக்கு முன்பு போனதினால் இரண்டு கடவுளுடைய சிஷ்ய கோடிகளுக்கும் அடிதடி எற்பட்டு ரத்தஞ் சிந்தியிருக்கிறார்கள் மலையாள தேசத்துக் கும்பலாங்கி மாதா கோவில் வழியாக ஈழுவ வகுப்பார் தங்கள் சிலையை வாத்திய முழக்கத்துடன் எடுத்துச் சென்றதற்காக, கிருஸ்துவர்களுக்குக் கோபம் பிறந்து,
சிலையைக் தள்ளி மிதித்துக் கலகம் செய்ததற்காக 80 கிருஸ்துவர்கள் மீது வழக்குக் தொடரப்பட்டிருக்கிறது. இது தான் மத வெறி.
நாகரீகத்தில் மிகுந்த அமெரிக்கர்கள் "நாகரீகம் வேறு, மனுஷத்தன்மை வேறு என்பதை உலகத்திற்கு நிரூபிப்ப தற்காக நீக்ரோவர்களைக் தீயில் போட்டு வதைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். பெரிய புத்திசாலிகள் நிறைந்திருப் பதாகச் சொல்லப்படும் லண்டன் நகரத்தில் இந்திய மாணவர் களைச் சாப்பாட்டு விடுதிகளில் அனுமதிக்கமறுக்கிறார்கள். இது தான் நிறவெறி.
பர்மாவில் பர்மியர்களுக்கும் இந்தியர்களுக்கும் கொடிய சச்சரவுகள் ஏற்பட்டு நிராபாதிகளான பெண்டு பிள்ளை உயிருடன்வதைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இந்தியர்களும் வேறு தேசத்தாரர்களும் நிரந்தரமாய்க் குடியேற முடியாதபடி சட்டங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இது தான் தேச வெறி.
இம்மாதிரியான வெறிகள் மனித சமூகத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்தைப் பாழ்படுத்துகின்றன. இவ்விதவெறிகள் மேலும் மேலும் பெருகாமல் இருக்க வேண்டுமானால், திரு. காந்தியைப் போன்ற வர்ணாசிரமிகளும் திரு.ஷவுகத் அலியைப் போன்ற முரட்டுமதவைதீகர்களும்,
சர்ச்சிலைப் போன்ற தேசபக்தி வெறியர்களும், ராஜாபகதூர் கிருஷ்ண மாச்சாரியைப்போன்ற ஜாதிப்பித்தர்களும் சொல்லுகின்ற விஷயங்களை மக்கள் எதிர்த்துப்போராடவேண்டும். ஆனால் இந்த வெறிகள் ஒழிந்து மனிதன் மனிதனாகவே, மனுஷத் தன்மையோடு, இரக்கம் தைரியம் நல்லெண்ணம், சகோதரத்துவம் முதலிய குணங்களோடு வாழவேண்டு மென்றால் என்ன செய்யவேண்டும்.
லண்டன் அறிவு இயக்கத்தின் போஷகர்களுள் ஒருவராகிய  ஆர்தர்கீத் என்பவர் அபர்டின் சர்வ கலாசாலையில் பேசியிருப்பதை வாசகர்கள் கவனிக்குமாறு கோருகிறோம். உலக ஒற்றுமைக்கு உள்ள "ஒரே வழியைப்பற்றி அவர் சொல்லுவதாவது:-
"உலகில் ஸ்திரமான சமாதானம் நிலவவேண்டுமெனில் உலகிலுள்ள  வெள்ளை நிறம், கறுப்பு நிறம், புது நிறம், மஞ்சள் நிறமுடைய சகல ஜாதியினரும் கலப்பு விவாகம் செய்து உலகிலே ஒரே ஜாதியை உற்பத்தி செய்யவேண்டும்.
பூர்வீக காலக் திலிருந்து ஒவ்வொரு வகுப்பினரும் வழி வழி வந்த தனி வகுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பெண்களைக் கொடுத்தும் கொண்டும் வந்தால் உலகில் கூடிய சீக்கிம் ஒரே வகுப்பு ஏற்பட்டுச் சமாதானத்திற்கு வழி ஏற்பட்டுவிடும். அவ்விதம் செய்வதால் பூர்வீக காலந்தொட்டுத்தாங்கள் அநுபவித்து வரும் பாரம்பரிய நிலைமையை ஒருவருக்கொருவர் பங்கிட்டுக் கொண்டவர்களாவர்.
நமது நாகரீக உலகில் மனிதன் மனதில் துவேஷங்கள் இருக்கத்தான் செய்யும்.  ஆனால் அந்த உணர்ச்சியைப் பகுத்தறிவு கொண்டுகட்டுப்படுத்தவேண்டும். அப்படிக் கின்றேல் பல வகுப்பினர் கலந்து வாழும் நமது நாகரீக உலகம் சதா வகுப்புச் சண்டைகளாலும் போட்டிகளாலும், துன்புற்றுக்கொண்டே இருக்கும்.


(புதுவை முரசு, 20.7.1931)
-விடுதலை,18.9.15

திங்கள், 14 செப்டம்பர், 2015

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்


- தந்தை பெரியார் விளக்குகிறார்

இக்கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல் லோராலும் ஒப்புக்கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும், விநாயகர் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக் கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.
நிற்க, இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவ தும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப் போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது.
ஆகவே, இப்படிப்பட்டதான யாவ ராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.
1. ஒருநாள் சிவனின் பெண் சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத் திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகி விட்டதாகவும், அந்த ஆண் குழந்தை யைப் பார்த்து - நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே! என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாக வும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளை யார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற் குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, காவல் வைத்திருந் தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், காவற்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார் வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்ட மாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகின்றது.
இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத் திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில்  கருவுற்றிருக் கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச் சிசுவின் தலையை வெட்டி விட்டு வந்த தாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்ட தாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப் பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப் படுகின்றது. இது தக்கயாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவது மான தாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கட வுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்ட தற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர் தான் ; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்த மற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர் என்று சொல்லுவதும், மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங் கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை (வல்லப கணபதி) செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலை யின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப் படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின் றார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப் பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகத்டிக் கொண்டு அந்தரத் தில் நிற்பது போலவும் செதுக்கப்பட் டிருக்கின்றது.
இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகின்றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு அசுரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.  இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளை யார் கடவுளின் உதவியை வேண்டிய தாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல், தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்து அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு கண்ட வைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக்கொண்ட ஆதாரங் கள் போற்றப்படவில்லையா? அன்றி யும், பல கோயில்களில் உருவாரங் களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்து விட்டான் என்று சொல்வதானால், இவைகளுக் குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவை களைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள், அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றும், மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து, கடவுளுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங் களை விலக்க முன் வந்தார்களா? என்றும் கேட்கின்றோம்.
இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத் திரம் வாதத்திற்கும், ஆராய்ச்சிக்கும், குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்து விட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று சொல்லுவோம்.
(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 குடிஅரசு இதழில் எழுதியது)
-விடுதலை,14.9.15

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் சொன்னது என்ன?


பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015 காலை ) தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள்; தாலிபற்றி அம்பேத்கர் கருத்து என்ன? தகவல் என்ன? என்று சில ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டுள்ள காரணத்தால் கீழ்க்கண்ட தகவலும், கருத்தும் தரப்பட்டுள்ளன.
Mr. C.A. Innes I.C.S., Editor of the Gazeteer of Malabar and Anjengo issed under the authority of the Government of Madras says:
‘Another institution found amongst all the classes following the marumakkattayam system, as well as amongst many of those who observe makkattayam, is known as ‘Tali-tying wedding’ which has been described as ‘the most peculiar, distinctive and unique’ among Malayali marriage customs. Its essence is the tyding of a tali (a small piece of gold or other metal, like a locket, on a string) on a girl’s neck before she attains the age of puberty. This is done by a man of the same or higher caste (the usages of different classes differ), and it is only after it has been done that the girl is at liberty to contract a sambandham. It seems to be generally considered that the ceremony was intended to confer on the tali tier or manavalan (bridegroom) a right to cohabit with the girl; and by some the origin of the ceremony is found in the claim of the Bhu-devas or *Earth-Gods,* (that is the Brahmins), and on a lower plane of Kshatriyas or ruling classes, to the first-fruits of lower caste womanhood, a right akin to the medieval droit de seigneurie.’ - Vol. I, p. 101.
இதன் தமிழாக்கம் வருமாறு:-
சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார்  அஞ்சேங்கோ (Malabar and Anjengo)  கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. இன்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.
மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைபிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வெறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது;
புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி பக்.101)  (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206).
-விடுதலை,11.4.15