சனி, 31 டிசம்பர், 2016

கருக்கலைப்பு குற்றமில்லை என அறிவித்துள்ளவர் போப்


கத்தோலிக்க சர்ச்சுகளின் பார்வையில் இதுநாள்வரையிலும் பாவகரமானதாக பார்க்கப்பட்டு வந்த கருக்கலைப்பு பாவ கரமானதில்லை என்று போப் அறிவித்து, இனிவரும் காலங்களிலும் கருக்கலைப்பு விவகாரங்களில் தலையிடுவதிலிருந்து விலகி, அதை பாவகரமானது என்று எண்ண வேண்டாம் என்று பிஷப்புகள் மற்றும் கிறித்தவ பாதிரியார்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார் போப் பிரான்சீஸ்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 20.11.2016 முடிய கத்தோலிக்க சர்ச்சுகளில் Ôகருணை ஆண்டுÕ அனு சரிக்கப்பட்டு தற்காலிகமாக கருக்கலைப்பு பாவகரமானதல்ல என்று அறிவிக்கப் பட்டது-.

21.11.2016 அன்று போப் பிரான்சீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கருக் கலைப்பு பாவகரமானதல்ல என்கிற அறி விப்பு கால வரையறையின்றி நீட்டிக்கப் படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

‘‘கருக்கலைப்பு பாவகரமானது என்று சொல்லப்பட்டாலும், அதுகுறித்து என் னுடைய கருத்தை மேலும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். அப்பாவிகள்மீது திணிக் கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கருக்கலைப்பு பாவகரமானதல்ல என்று குறிப்பிட விரும்புகிறேன்.

அதேபோல், கருக்கலைப்பு பாவகர மானது இல்லை என்று அறுதியிட்டு என்னால் கூறமுடியும். அப்படியே கூறு கிறேன். கருக்கலைப்பு பாவகரமானது என்றால், திருந்திய உள்ளங்களுக்கு கட வுளின் கருணை கிடைப்பதைத் தடுப்பதாக ஆகிவிடும். ஒவ்வொரு பாதிரியாரும், கிறித்தவ மத போதகர்களாக, இருப்பவர்கள் அனைவரும் கருக்கலைப்பு விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்துவதில் தனி கவனத்துடன் பயணப்பட்டு, அவர்களுக்கு ஆதரவுடன் வழிகாட்டுபவர்களாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று போப் பிரான்சீஸ் தம்முடைய கடிதத்தில் கிறித்தவ பாதியார்கள் உள்ளிட்டவர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் கருக்கலைப்பை மிகவும் பாவகரமானது என்று குறிப்பிட்டு வந்துள்ளன. மன்னிப்பு அளிப்பது என்பது  பிஷப்புகளிடம் உள்ளது. பாதிரியார்கள் அல்லது மதப் போதகர்களாக இருப்பவர்கள் இதுபோன்ற நிலைகளில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களின் ஒப்புதல் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று வாடிகன் கூறுகிறது.

அமெரிக்கா கத்தோலிக்க செய்தி சேவை  நிறுவனம் அளித்துள்ள தகவல் களின்படி, பெரும்பாலான பிஷப்புகளால் சுழற்சி முறையில் பாதிரியார்கள் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், கருணை என்பது பன்னாட்டளவில் தொடர்புள்ள தாக உள்ளதாகும். போப் தம்முடைய அறிவிப்பில், கடவுளின் கருணைக்கும் மனமுருகிக் கோரப்படுகின்ற மன்னிப் புக்கும் தடையாக எவரும் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள் ளார் என்று அச்செய்தி நிறுவனம் குறிப் பிட்டுள்ளது

-விடுதலை ஞா.ம.,26.11.16

எங்க முத்து மாரியம்மா...


- இரா. கண்ணிமை

மாரியம்மனை தமிழ்நாட்டின் கிராம தேவியாக்கி - அவளின் வரலாறு தெரியா விட்டாலும், ஆடிப்பாடி ஆர்ப்பாட்டமாக அவளுக்கு விழா கொண்டாடி வருவதை எங்கும் காணலாம்.

மாரியம்மாளின் வரலாற்றை பல் வேறாக சொல்வதில் இதுவும் ஒன்று.

கருவூர் பெரும் பறையன் மகள் ஆதி என்பவளை பேராழி முனியின் மகனான பகவன் என்பான் மனைவியாக்கிக் கொண் டானாம். பகவன் - சாதியில் பார்ப்பானாம், ஆதி என்பவள் பறைச்சி யுமாதலால் - இவ்விருவரும் மற்றவர் களால் புறக் கணிக்கப்பட்டு ஊரிலே பிச்சையிரந் துண்டு நாட்டிலே வாழ்ந்தார்களாம். இவர்களுக்கு நான்கு பெண்களும், மூன்று ஆண்களும் பிறந்தார்கள் இவர்கள் உப்பை, உறுவை அவ்வை, வள்ளி, அதிக மான், கபிலர், வள்ளுவர் என்றழைக்க பட்டனர்.

உப்பை: ஊற்றுக்காட்டிலே வண்ணார் வளர்த்தனர். இவளே எங்கும் கிராம தேவதையாய் போற்றி வணங்கப்படும் தற்கால மாரியம்மன்.

உறுவை: இவளை சாணார் வளர்த் தனர். அவ்வை: இவள் நரப்புச் சேரியில் அல்லது சேரி நரப்பில் நரப்புக் கருவி யோர் சேரி பாணரிடத்தில் வளர்ந்தாள்.

வள்ளி: இவள் மலைச்சாரலில் குறவனிடத்தில் வளர்ந்தாள்.

அதிகமான்: ஆரூரிலே அரசனாயிருந்த அதிகமான் வீட்டில் வளர்ந்தான்.

கபிலன்: ஆரூரிலே பார்ப்பனர் வீட்டில் வளர்ந்தான்.

வள்ளுவர்: தொண்டை மண்டலத்து மயிலாப்பூரில் - பறையரிடத்தில் வளர்க் கப்பட்டான்.

இவ்வேழு பேரில் ஆதி என்னும் பறைச்சி வயிற்றில் முதல் பிறந்ததும் வண்ணார் வீட்டில் வளர்ந்தவளுமான உப்பை என்பவள் பறைச்சி வயிற்றில் பிறந்ததால் வெட்டியாரப் பறையனுக்கே மணமுடித்து கொடுத்தார்.

அக்காலத்தில் உப்பைக்கு வைசூரி நோய் கண்டு உடலெங்கும் புண்ணாகி நாற்றமெடுத்து ஈக்கள் மொய்த்தன.

அவளின் கணவனான வெட்டியான் வறிய நிலையில் இருந்ததால் கட்ட ஆடைகூட இல்லாதவளாய் வேப்பந் தழைகளை அவளுக்குக் கீழே பரப்பி - அதையே போர்வையாய் மூடி - பாது காத்து ஊர் ஊராய் சுற்றி பிச்சையெடுத்து வாழ்ந்தான்.

அவளின் நோய் தெளிந்த பின் இருவ ரும் பிச்சைக்குப் போகும் போது இவள் புண்களில் மொய்க்கிற ஈக்களின் தொல்லை தாங்காமல் வேப்பந் தழை களாலேயே அவற்றை ஓட்டி - விசிறிக் கொண்டே வீடு வீடாகப் பிச்சையெடுத்து காலத்தைக் கழித்தனர். பிறகு அந்நோ யாலேயே அவள் இறந்து போனாள். ஊரார் அவளை அம்மை நோய் கண்ட வளானதால், உப்பை என்னும் பெயரை மாற்றி மாரியம்மன்  என்ற பெயரைச் சூட்டி சமாதி கட்டி வைத்து கிராம தேவதையாக வணங்கி னார்கள். இப் பழக்கம் எனும் நோய் இன்றைய வரையில் தொடர்கிறது.

உப்பை என்ற மாரியம்மனின் வரலாறு உண்மையென்றால் நோய் வாய்ப்பட்டு முடிந்து போன ஒரு மனித  பிறவியை தேவியாக்கி வணங்குவதால் எந்த நன்மையாவது கிடைக்குமா?  இதில் என்ன நியாயம் உண்டு? இது அறியாமையும் அஞ்ஞானமும் அல்லவா?

கடந்த காலங்களில் மனிதர்க்குள் கண்ட கொடிய நோய்களையும் எல்லாம் கடவுளா கவே நம்பி - பின்னும் வராமலிருக்க வணங்கினார்கள் வாந்தி, பேதி, காலரா நோய்கள் அனைத்தும் காளிதேவி என நம்பினார்கள். ஆங்கில மருத்துவத்தில் ஆத்தா வார்த்தது அல்ல, ஆத்தா ஊத்தியது அல்ல என்பதுதெளிவாகி விட்டதே.

இந்த மாரியம்மன் அல்லாமல் பரமேஸ்வரி-  மகேஸ்வரன்  மனைவி, மனோன்மணி - சதாசிவன் மனைவி,

ருக்மணி - கிருஷ்ணன் மனைவி,

சீதை - ராமன் மனைவி,

ராதை - கிருஷ்ணன் வைப்பாட்டி,

காமாட்சி - ஏகாம்பரன் மனைவி,

விசாலாட்சி - விசுவநாதன் மனைவி,

அழகம்மை - கச்சாயை மனைவி,

உண்ணாமுலை - அருணாசலம் மனைவி,

மீனாட்சி - சொக்கநாதன் மனைவி,

தயிலி - வைத்தி மனைவி,

அலமேலு - வெங்கடாசலம் மனைவி,

பெருந்தேவி - வரதராசன் மனைவி,

கனகவல்லி - வீரராகவன் மனைவி,

ஆகியோரும் பொன்னி, குள்ளி, சங்தி, ஷீரி, நாகி, காளி, பாலி, கோலி, சீயான் முதலிய புது தேவதைகளையும் கன்னிமார் என்னும் தேவியர்களையும் - மக்கள் கண்மூடித்தனமாய் வணங்குகிறார்கள்.

இதைப்பற்றி அகத்தியர் சொல்வதைக் காணுங்கள்.

முகிவாகச் செய்துவிட்டேன்
மைந்தா, மைந்தா!
முப்பதுக்குள்  ளடக்கிவிட்டேன்
முன்னூல் பார்த்து
அகிலமதில் விரித்துவிட்டேன்
இந்த நூலை;
யார்தானு மெந்தனைப்போ
லறைய மாட்டார்
பகிரதியுங் கலைமகளும்
வாணி தானும்
பார்வதியு மறுமுகனும்
பல பேர் தானும்
சகியாத மூர்த்திகளா
யிவர்க டானும்
சக்திசிவ விருப்பிடமோ
சாற்று வீரே!

மேற்கூறிய தேவர்களும் தேவியர் களும் வணக்கத்திற்குரியவர்கள். கடவு ளர்கள் அல்ல என்கிறார் அகத்தியர்.

சூத்திரச்சி மாரியம்மாளின் சுயமரி யாதை சொல்லி விட்டோம். இதைக்கேட்ட பிறகு எங்க முத்து மாரியம்மா! முத்து மாரியம்மா! எனப்பாடிப் பாடி -மாரியம் மனுக்கு கூழ்  ஊற்றப் போகிறீர்களா?
-விடுதலை,31.5.14

வெள்ளி, 30 டிசம்பர், 2016

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை -சித்திரபுத்திரன்-


மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர் களுக்கெல்லாம் அய்சுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?

லட்சுமியான ஸ்ரீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப்பிட்ட தால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண் களையெல்லாம்கூட கைவைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப்பாட்டுக்கே லாட்டரி போடும் படியாக ஏன் செய்யக் கூடாது?

விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்குக் கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடு கிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம்தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்று வதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர் களுக்கும் உள்ள பந்துத்துவமாகும்.

விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர் களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும்.

- குடிஅரசு - கற்பனை உரையாடல் - 16.03.1930

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக்கூடாது; சூத்திரன் பெரிய உத்தி யோகத்திற்குப் போகக் கூடாது; சூத்திரன் வயிறார கஞ்சி குடிக்கக் கூடாது - என்பதற் காகவே மனுதர்மச் சாஸ்திரம் பார்ப்பனரால் எழுதப்பட்டது. இதுதான் இந்து லாவுக்கு அடிப்படையாக உள்ளது.

சிவகாமி - சிதம்பரனார் திருமண அழைப்பு

திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர் கட்கும் 05.05.1930 திங்கட்கிழமை மாலை5 மணிக்கு திரு. ஈ. வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுய மரியாதை மகாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். -  குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி -  திருமண அழைப்பிதழ் - 04.05.1930

-விடுதலை,5.7.14

ஆடி அமாவாசையாம் பித்ரு வழிபாடாம்!


நாளை - சனியன்று ஆடி அமாவாசை யாம்! அமாவாசை தான் மாதா மாதம் வரு கிறதே, அது என்ன ஆடி அமாவாசை!

ஒவ்வொரு மாதமும் எந்த அக்கப் போரையாவது அள்ளி விட்டு மக்கள் பணத்தை அள்ளிக் கொள்ளும் புரோ கிதச் சுரண்டல் ஜாம் ஜாமென்று நடக்க வேண்டும் அல்லவா!

அதற்குத்தான் இந்தத் தெருப் புழுதி கள் எல்லாம். அமாவாசையன்று முன் னோர்களை வணங்கினால் நன்மை கிடைக்குமாம். அதில் ஆடி அமாவாசை என்பது விசேடமாம்!

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இறந்து போன முன்னோர்கள் தம் குடும்பத்த வரின் வம்சம் செழிக்க அருள் தரட்டும் என்ற எண்ணத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை இறைவன் பூமிக்கு அனுப்பி வைக்கிறானாம்.

அந்த நாளில் தர்ப்பணம் செய்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார் களாம்! அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கு மாம்.

அய்தீகப்படி நம் முன்னோர்கள் தான் மறுபிறப்பு எடுத்துவிட்டார்களே, அப்படி இருக்கும்பொழுது ஆத்மா எங்கே இருந்து குதித்ததாம்.

கறந்தபால் முலைப்புகா

கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா

விரிந்த பூ உதிர்ந்த காய்

மீண்டும் போய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை, பிறப்பதில்லையே!

என்று நமது சித்தர் பாடியதுதான் நினை விற்கு வருகிறது!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம்

மறுபிறப்பு ஆகியவற்றைக்

கற்பித்தவன் அயோக்கியன்

நம்புகிறவன் மடையன்

இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்

மகாமகா அயோக்கியன்

என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியதுதான் எத்தகைய அரு மையும், அறிவும், உண்மையும் வாய்ந்தது!

இப்பொழுது நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் நாடகத்திற்கு வருவோம்!

தனது தகப்பனாரின் திதிக்காக (திவ சத்துக்காக) புரோ கிதப் பார்ப்பனர் வரு வார்.

நடிகவேளுக்கே உரித்தான குரலில் வரவேற்பார்!

அய்யர்வாள்! உங்களிடம் கொடுக் கும் பதார்த்தங்கள் எல்லாம் எங்கள் அப்பாவுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் தானே?
- நடிகவேள்

பேஷா, நன்னா கிடைக்கும் - சந்தேகம் வேண்டாம்!
- புரோகிதப் பார்ப்பான்

ஓ, பார்ப்பான் வயிறு பரலோகத் துக்குத் தபால் பெட்டியோ?
- நடிகவேள்

பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கலகலப்பு, சிரிப்பு வெடி!

இதோ பாருங்க அய்யர்வாள், எங்கள் அப்பா இருக்கிறாரே, அவருக்குக் கவிச்சு இல்லைன்னா ஓருண்டை சோறு உள்ளே போகாது; ஒரு துண்டு கருவாடாவது கண்டிப்பாக இருக்கவேண்டும். நீங்கள் என்னா செய்றேள், மீன், கோழி, முட்டை, ஆட்டுக்கறி சமையல் எல்லாம் தயாராக இருக்கிறது.

எனக்கு முன் உட்கார்ந்து திவ்யமா சாப்பிடனும் - அது எங்கள் அப்பா வுக்குக் கிடைக்கனும். உங்கள்மூலம் அந்தக் காட்சியை நான் கண்குளிரப் பார்க்கனும் - சந்தோஷப்படனும் - சாப்பாடு ரெடி - நீங்கள் ரெடிதானே? என்பார்.

அவ்வளவுதான்! அய்யர் ஓட்டம் பிடிப்பார்.

இதற்கு விளக்கம் தேவையில்லை. ஆடி அமாவாசைப் பக்தர்களே! அறிவு கொண்டு சிந்திப்பீர்! அய்யன்மார்களின் சுரண்டலுக்கு அடிபணியாதீர்! அடி பணியாதீர்!!

-விடுதலை,25.7.14

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஓணம் பண்டிகையும் தசாவதாரமும்


பொறியாளர்
ப.கோவிந்தராசன்
BE, MBA, MA (History), MA (Linguistics)

கேரள மாநிலத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத் தில் சாதி மதபேதமின்றி எல்லா மக்களும் கொண்டாடும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். ஒணம் பண்டிகை அரசு விழாவாக கொண் டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை விஷ்ணு வாமன அவதாரமாக அவ தரித்த போது கொல்லப்பட்ட மலை யாள நாட்டை ஆண்ட மாவலி என்ற அசுர மன்னன் விஷ்ணு பகவானிடம் ஒரு வரம் பெற்றான்.

அதன்படி தான் பெரிதும் நேசித்த தன்னுடைய மக்களை மலையாள நாட்டிற்கு வரும் நாள் ஓணம் பண்டிகையாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த விஷ்ணு எப்போது முக்கிய கடவுள் ஆனார்? யாருடைய ஆட்சி காலத்தில் அவதாரங்கள் தோன்றின?

இதிகாசம் உள்பட பல புராணங்கள் எப்போது எழுதப்பட்டன? யாருடைய ஆட்சி காலத்தில் யுகம் பற்றிய விவரங்கள் தெரியவந்தன? இது போன்ற வினாக்களுக்கு விடை காண கீழே உள்ளவாறு முயற்சிக்கப்படுகன்றது
விஷ்ணுவின் அவதாரங்கள்

இப்போது நடைபெறும் கலியுகத் திற்கு முன்பு   ஒன்பது யுகங்கள் ஏற்பட் டதாக சொல்லப்படுகிறது. அவைகளின்  விவரங்கள் ஒரு பட்டியலாகத் தரப் பட்டுள்ளது.

குறிப்பு:- 4,32,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை விஷ்ணு அவதாரம் எடுத்து பூமிக்கு வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்றுகிறார். இது போதுமானது அல்ல. ஏனென்றால் எஞ்சிய பெரும்பாலான காலமெல்லாம் அதர்மம் தான் ஆட்சி செய்கின்றது. மேலும் ஒரு யுகம் என்பது நீண்ட கால அளவு. அதனால் அவதரிக்கும் நாள் துல்லியமாக நிர்ணயிக்கவில்லை.

கீழே உள்ள பட்டியலின் படி பல கருத்துக்கள் உருவாகின்றன. அவை களில் சில

1. ஓணம் பண்டிகை திரேத யுகத்தில் (12,96,000 ஆண்டுகள்) தொடங்கி துவா பர யுகத்தில (8,64,000 ஆண்டுகள்) நடை பெற்று கலியுகம் (சுமார் 5025 ஆண்டுகள்) வரை தொடர்கின்றது.

2. வட இந்தியாவில் ராமன் வன வாசம் முடிந்து பட்டணப் பிரவேசம் செய்த நாளை (தரேதாயுகம்) தீபாவளி யாக பல யுகங்களாக கொண்டாடப் பட்டு வருகின்றது.

3.தென்னிந்தியாவில் கிருஷ்ணா நரகாசுரனை வதம் செய்த நாளை (துவா பரயுகம்) தீபாவளியாக சென்ற யுகத்தி லிருந்து கொண்டாடப்பட்டு வருகின் றது. தென்னிந்தியாவில் கருணனை வழிபடுவதாகவும் வட இந்தியாவில் ராமனை வழிபடுவதாகவும் காணலாம்.

மேலே உள்ள கருத்துக்கள் உண்மை யில் தவறானது. ஏனென்றால் வேதங் களில் விஷ்ணுவுக்கு எந்த முக்கியத்துவ மும் தரப்படாமல் ஒரு சிறு கடவுளாக கருதப்பட்டார். மேலும் வேதங்களில் இந்திரனைத்தான் முதன்மைக் கடவுளாக இன்றும் காணப்படுகின்றது.

அந்த இந்திரன் எந்த அவதாரங்களும் எடுக்காமல் (குழந்தையாகப் பிறந்து கருணனாக வளர்ந்து அர்ஜுனனுக்குத் தோரோட்டாமல்) தானே நேரில் மண்ணுலகிற்கு வந்து எதிரிகளை அழித்து வேத தர்மத்தை விரைவாக காப்பாற்றினார். இதனால் புத்தர், மகாவீரர், அலெக்சாண்டர், அசோகர், இயேசு போன்ற மாமனிதர்ளுக்கு இணையாக கதாபாத்திரங்களை உரு வாக்க பின்னர் அவர்களை கடவுளாக மாற்றும் ஆரியர்களின் சூழ்ச்சியாக கருத வாய்ப்புள்ளது.

குப்தர் காலத்தில் 
புராணங்களும் இதிகாசங்களும்

வரலாற்று அறிஞர் பலரின் கருத் துப்படி ஆரம்பத்தில் இதிகாசங்களும் புராணங்களைப் போல் நீண்ட நெடுங் கதைகளாக இல்லாமல் சிறுகதைகளாக இருந்தன. பின்னர் கீழே சொல்லப் படுகின்ற காரணங்களால் உருப் பெருக்கம் அடைந்தன

1. குப்த வம்ச மன்னர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் புராணங்களில் காணப்படுகின்றன. இதன்படி புரா ணங்கள் பல குப்தர் காலத்தில் (கி.பி. 320 முதல் 550 வரை) தான் இறுதி வடிவம் பெற்று எழுதி முடிக்கப்பட்டது. இதன் பின்தான்  பல்லவர்களின் (கிபி 600 முதல் 900 வரை ) தொடங்கியது.

2. மகாபாரதம. குப்தர்கள் காலத்தில் (கி.பி. 320)தான் பாகவத மதத்தைச் சார்ந்த பகவக் கீதை மற்றும் புராணங்கள்  சேர்க்கப்பட்டு கீழ்க்கண்டவாறு உருப் பெருக்கம் அடைந்தது. (ஆதாரம்: ஆர்.கே.நாராயணன்- -எழுதிய மகாபாரதம் என்ற நூல். வெளியீடு-பென்குயின் பதிப்பு மற்றும்--- ஜயா- என்ற நூல். எழுதியவர் -தேவதத் பட்ட நாயக்)

1. தற்போதைய மகாபாரதம் துவக்கத்தில் 24,000 பாடல்கள் கொண் டதாகவும் “ஜயா’’ என்ற பெயரை கொண்டதாகவும் விளங்கியது.

தற்போதைய மகாபாரதம் இடைக் காலத்தில் விரிவாக்கப்பட்டு 88000 பாடல்கள் கொண்டதாக விளங்கியது. அப்போது பாரதம் மகாபாரதம்  என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய மகாபாரதம் குப்தர் காலத்தில் எழுதப்பட்ட போது 1,00,000 பாடல்கள் கொண்டதாகவும் மகா பாரதம் என்ற பெயரை உடையதாகவும் விளங்கியது. அப்போது பகவத் கீதை சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் இந்த பகவத் கீதையினால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால்----தனது அரண்மனையை தனது எதிரிகளிடமிருந்து மீட்க துவா ரகை மன்னன் கிருஷ்ணன் பலநாள் கடுமையாகப் போரிடநேர்ந்தது

(ஆதாரம்: இராஜாஜியின் மகாபாரதம்).

இத்தகைய துவாரகையை ஆண்ட----குறுநில மன்னனான கிருஷ்ணனை சர்வ வல்லமை பொருந்திய ஒரே முதன்மைக் கடவுளாக உயர்த்துவதற்கு கதை மிகவும் பயன்பட்டது.

கிருஷ்ணனை வழிபட்டவர்களை பாகவதர்கள் என்று அழைக்கப்பட்டது. அவர்களின் மதத்தை பாகவதமதம் என்று புதிய பெயரால் அழைக்கப்பட் டது. (ஆதாரம் - வரலாறு குறித்த எல்லா பாடநுல்கள் டில்லி யுனிவர்சிட்டி) மேலும் பாகவதர்கள் நாராயணனை வணங்க மாட்டார்கள்.

3.மகாபாரதம் மற்றும் புராணங்களும் எழுதப்பட்டதைப் போல் இராமா யணமும் குப்தர் காலத்தில் தான் சமஸ்கிருத மொழியில் அசோகர் பிராமி எழுத்துக்களில் முதன் முறையாக எழு தப்பட்டது.  இறுதி வடிவம் கொண்ட இராமாயணத்தை ஆய்வு செய்த அறி ஞர்கள் ராமாயணத்தில் மொத்தம் உள்ள 17,868 சுலோகங்களை ஆராய்ந் தார்கள்.

அவற்றில் 8121 சுலோகங்கள் (46 சதவீதம்) பல்வேறு கால கட்டங் களில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. (மேலும் கந்தபுராணமும் இராமாயண மும் ஒன்றே-- என்று தந்தைபெரியார் கூறியுள்ளார் என்பதை நினைவு கூரத்தக்கது.)

(ஆதாரம்: பாரதீய வித்யாபவன் வெளியிட்ட ‘எப்பலாகு ஆப் ராமா யணா என்ற நூல் மற்றும் பரோடாவில் உள்ள எம்.எஸ். யுனிவர்சிட்டி செய்த--இராமாயண ஆராய்ச்சிக் குறிப்புகள்)

எனவே, ஒன்பது அவதாரங்களை (மகாபாரதம் மற்றும் இராமாயணமும் உள்பட) குறித்த புராணங்களும் மற்ற புராணங்களும் நான்கு யுகங்களும் முதலானவை எல்லாம் பாகவத மதத்தில் குப்தர் காலத்தில்தான் தோற்றுவிக் கப்பட்டவை மேலும் குப்தர் வம்ச மன்னர்கள் பாகவதர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்

மேலே விவரித்தப்படி ஓணம் பண்டிகை குப்தர் காலத்திற்குப்பின் நடந்த பல்லவர் காலத்தில் (கி.பி.600 -950) தொடங்கியிருக்க வேண்டும் உதாரணமாக மகாபலிபுரம் என்ற நகரை உரு வாக்கி, பின்னர் தங்கள் தலை நகராக ஆக்கிக் கொண்டார்கள்.

முடிவாக ஓணம் பண்டிகை இயற் கையில் ஏற்படும் பருவ கால மாற்றங் களைக் கொண்டாடும் வகையில் அமைந்த பண்டிகை ஆகும். கேரளத்தில் தென் மேற்கு பருவக் காற்றால் மழைக் காலம் ஜுன் முதல் செப்டம்பர் மாதம் தொடக்கம் வரை நீடிக்கிறது. மழைக் காலம் முடிந்தபின் கல் தரை எல்லாம் ஈரமில்லாமல் காய்ந்து கோலங்கள் போடவும் பூக்கள் சேகரிக்கவும் வசதியாக இருக்கும்.

எனவே மழைக் காலம் முடிந்த பின் கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. (மலையாள மொழியில் கேரு என்றால் ஏறு என்று பொருள். அளம் என்றால் கடற்கரை பகுதியைக் குறிக்கும்). இதேபோல்தமிழ் நாட்டில் அய்ப்பசி கார்த்திகை மாதங்களில் மழை பெய்து முடிந்த பின் மார்கழி மாதத்தில் விடியல் காலையில் கோலம் போடுவது வழக்கம். இது இயற்கையில் சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சியினை மதம் சார்ந்த பண்டி கைகளாக ஆரியர்களால் மாற்றும் சூழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது.


-விடுதலை ஞா.ம.,26.9.15

சனி, 10 டிசம்பர், 2016

கார்த்திகை தீபத்தின் கர்த்தா யார்?

- இரா.கண்ணிமை -

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே - பக்தர்குழாம் கால்கடுக்க-திருவண்ணாமலைக்குநடைப்பயணம்மேற் கொள்வதும் - வீடுகளில் விளக்கேற்றுவதும் - அண்ணா மலையாருக்கும் - உண்ணாமுலையாருக்கும் உண்டியல் ஏந்துவதும் - அண்ணாமலைக்கு அரோகரா..! அரோகரா... என்று குரலெழுப்பி திருவண்ணாமலையில் தீபம் கொளுத்துவதும் அல்லாமல் - சிவத்தலங்களில் திருவிழாக்கள் செய்வதும் இங்கே வாடிக்கை - வேடிக்கை.

இந்த அண்ணாமலையும்-உண்ணாமுலையும்குடி கொண்டிருப்பது-திருவண்ணாமலையில்...இதுசிவத்தலம் என்றுதலபுராணம்கூறுகிறது.சிவத்தலத்திற்குஉரியார் சிவபெருமான்! - அந்த சிவன் யார்? அவனின் வரலாற் றைத்தெரிந்து கொள்வோம்.

சிவன் மும்மூர்த்திகளில் ஒருவன். சிவன் மும்மூர்த்திகளிலும், பஞ்ச கர்த்தாக்களிலும், முப்பத்து முக்கோடி தேவர்களிலும் - பிதுர்தேவர்களிலும், தேவிமார்களிலும் - முதன்மையான கடவுளாய் மதித்து ஈஸ்வரபட்டமிட்டு தொழுது - ஆலயங்கள் கட்டி தேர்த்திருவிழாக் கொண்டாடுகிறார்கள்.

சிவனுக்கு பல பெயர்கள் உண்டு. சிவன் பதவி: கைலாயம். ஆயுதங்கள்: சூலம், பாசம், பிராகமெனும் வில். சிவனூர்த்தியும் - கொடியும்: இரிஷபம். உடை: புலித்தோல். சிவனுக்கு ஆயுள்: முன்னூறு ஆண்டுகள். சிவன் ஜென்ம நட்சத்திரம்: திருவாதிரை.

சிவன் தன் மனைவியை தலையில் வைத்திருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. சிவன் தன் உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு - நீண்ட சடைகளை வளர்த்து ஆண்டி வேடத்துடன், சூலாயுதத்தைக் கையிற்பிடித்துக் கொண்டு ஆணைத்தோலை உடுத்தி, பாம்புகளை ஆபரணமாய்ப் போட்டுக்கொண்டு, தலை மண்டை ஓட்டை கையில் பிடித்துக்கொண்டு, மதுவினால் நிறைந்த சிவந்த கண்களுடன் வெகுவாய் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் பிச்சையிரந்துண்டு, வெட்டிச்சியுடனே திரிந்து - பன்னிரண்டு வருடம் ருத்திர பூமியான சுடுகாட்டில் வாழ்ந்ததாய் தெரிகிறது. சிவனுக்கு அய்ந்து தலைகளும், மூன்று கண்களும் உண்டாம்.

ஒரு சமயம் சிவன் பிர்மாவின் தலையில் ஒன்றை சங் கரித்ததால் அந்த பிர்மஹக்தி (சாபம்) சிவனை பிடித்துக்கொண்டு, பன்னிரண்டு வருடம் தலையோட்டில் இரந்து உண்டதாயும் தெரிகிறது. இதை விளக்கும் ஓர் வெண்பா.

நக்கீரர் வெண்பா

சங்கருப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கே துகுலம்

பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை

யரிந்துண்டு வாழவோ, மரனே நின்போ

லிரந்துண்டு வாழ்வ தில்லை.

சிவனுக்கு பிள்ளைகளும் உண்டு. சிவன் தன் மனைவி பார்வதியுடன் - வேசிகள் இருக்கிற சிவபுரத்தில் பிச்சையேற்று உண்டு வருகையில் - சிவனுக்குப் பல மனைவிகள் இருந்தும் பரத்தைகளோடு திரிவதைக் கண்ட பார்வதி பலமுறை சண்டையிட்டாள். ஒரு முறை - பத்மாசூரன், நான்யார் தலையில் கைவைப்பேனோ-அவன் சாம்பலாய்ப்போக வரம் தர வேண்டுமென்று கேட்க - அப்படியே அவ்வரம் கொடுத்தான் - அதை சோதிக்க முனைந்து - அவன் சிவனையே துரத்த - தான் கொடுத்த வரம் தனக்கே ஆபத்தாய் முடிந்ததென நடுங்கி ஓடி மறைய இடமில்லாமல் ஒரு அய்விரலிக் காயினுள் புகுந்து ஒளிந்துக் கொண்டதாய் கதை. இதை விளக்கும் ஒருபாடல்.

பேரின்ப மணி மாலை

மூவரையும் சனியன்தான் பிடித்த தாலே

முதலொருவன் தலையிழந்தான் முக்கண்ணுள் ளோன்

சாவு வருமென முனிவன் தனக்கு மஞ்சித்

தானொளித் தான் அய்வேலி தன்னி லேதான்?

பாவியென்ற திருமாலோர், பெண்ணி னாலே

பதியிழந்து பாரியுடன் வனத்திற் சென்றான்

தேவனென்றே இவர்கள் தம்மை வணங்கி னாலித்

திறமையுள்ள கதியருளுந் தேவ னாமோ?

பொருள்: மும்மூர்த்திகளும் சனியன் பிடித்த சாபத்தால் பிர்மாவின் தலை சிவனால் கிள்ளப்பட்டு - இழக்க நேர்ந்த தாகவும் சிவன் பஸ்மாசூரனுக்கு வரம் தந்ததால் - அதை சோதிக்க அசுரன் சிவனைத் துரத்த - சிவன் ஓடி ஒளிந்ததாகவும், திருமால் என்னும் பாவி - விஷ்ணு, ராம அவதாரத்தில் தன் தந்தை தசரதன் மனைவியின் வேண்டுகோள்படி - சீதையுடன் வனவாசம் சென்றதாகவும் காண்கிறதே. இவர்கள் தேவர்கள் ஆவார்களோ? என்பதாம்.

இதனால் விஷ்ணு பக்தர் விஷ்ணுவின் மோக தந்திரத்தால் - பெண்ணாய் மாறி அசுரனைக் கொன்றதால் சிவன் தப்பிப் பிழைத்தார் என இழிவாய் பேசுகிறார்கள். இதன் முழு விவரத்தையும் கந்த புராணத்திலும், பாகவதம் 10 ஆம் ஸ்கந்தம் விருகா சூரனைக் கொன்ற அத்தியாயத்தில் 6 முதல் 16 பாடலிலும் காணலாம். இது பற்றிய ஒரு விருத்தம்:

ஆதிவேதாந்த முதலறியா ஞான வஞ்செழுத்தின்

மெய்ப் பொருளை யயன்மால் தேடுஞ்

சோதியே யம்பலத்திற் தோன்றி யாடுஞ்

சுடரொளியே நீபிடித்த தோஷத் தாலே

பாதிமதி சடைகளினிந் தரவும் பூண்டு

பதியிழந்து சுடலைதனிற் பாடி யாடி

சாதி யினிற் கடைவேட னெச்சிற் தின்றார்

சனியனே காகமேறுந் தம்பி ரானே!

ஒரு கொச்சகம்

சனியனிந்த மூவரையும் தாரணியிலே பிடித்தால் சனியன் தனையனுப்பும் தற்பரனார் வேறலவோ? விருமாவின் கையெ ழுத்து மேதினியோர்க் குண்டானால் விருமா தலையறுக்க விதியெழுதி வைத்தவரார்?

இப்பாடலின் படி மும்மூர்த்திகளையும், தேவர்களையும் சனிபகவான் ஆட்சி செய்து, நிலைகுலையச் செய்வது உண்மை யானால், சிவனோ, சனியனோ யார் பெரிய தேவன்? மனிதர்க்கு விதியெழுதுவது பிர்மாவானால் - பிர்மா தலையற்றுப் போக விதியெழுதியது யார்? என்று சொல்லுங்கள்.

சிவன் அசுரனுக்குப் பயந்து அய்விரலிக்காயினுள் ஒளிந்து கொண்டிருந்ததால், சிவனை மீட்க விஷ்ணு மோகினி உருவெடுத்து ஓர் அழகிய பெண்ணாய் அந்த அசுரனின் முன்வர - சிவனை அழிக்க காத்துக் கொண்டிருந்த அசுரன் இந்தப் பெண்ணைப் பார்த்து மயங்கி அவளைக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்ய முனைந்தபோது - “நீ போய் முழுகிக் குளித்து உன்னை சுத்தம் செய்து கொண்டு வாவென அவள் சொல்ல - அவன் சென்ற இடமெல்லாம் தண்ணீர் இல்லாமல் செய்து - கடைசியாக மாட்டுக்குளம்பிலிருந்து ஒரு துளித் தண்ணீர் கொண்டாவது தலையில் வைத்து சுத்திகரித்துக் கொண்டு வாவெனவே - அசுரன் அப்படியே செய்ய - அக்கினியே பற்றியெரிந்து சாம்பலாய்ப் போனானாம்.

விஷ்ணு தன் பெண்ணுருவை மாற்றி அசுரன் பற்றி எரிந்து அழிந்த வகையைச் சிவனுக்குச் சொல்லி, அய்விரலிக்காயினுள்ளிருந்து இறங்கச் சொல்ல, சிவன் இதை உண்மையென நம்பாமல் விஷ்ணுவை திரும்பவும் பெண்ணுருவாய் மாற்றி - ருசுப்படுத்திக் காண்பிக்கச் சொன்னான். அப்படியே விஷ்ணு பெண்ணுருவாய் மாறியதும் சிவன் அடங்க முடியாத - மோக விகாரத்தால் தாவி கட்டிப் பிடித்து விஷ்ணுவோடு கூடிப்புணரவே - அந்த நிமிடமே அரிஹரபுத்திரன் (விஷ்ணு வுக்கும், சிவனுக்கும் பிறந்த பிள்ளை) என்ற அய்யனார் பிறந்து விட்டானாம். இந்த காமச் செயல்கள் நிறைந்த கதையின் வரலாற்றை வாய் கூசாமல் வெளியிட்டுச் சொல்லலாமோ? இது உண்மையா? இரு சமய விளக்கம் கவுதமர் வீடு சிவசாப சம்பந்தப்படலத்தில் உள்ள பாடலையும் பாருங்கள்.

ஏகுகின்ற தோரளவில் வெள்ளமாயிந் திரியத்து

வெள்ளருவி யோடலுந்

தேகமுள்ள காண்யாறு தானெனாமென்ன வங்கையா

லன்னி வேறுகோ

ரூகு புத்தியால் விந்துவென்று தானுன் னியின்ன

வாறொழி விலாசம்

போக மெய்துவார் யோனிலிங் கப்போது விழவிப்

புவியிலென் றனன்.

பொருள்: ஒரு நாள் காலையில் கவுதம ரிஷி எழுந்து குளிக்கப்போகும்போது - எதிரே வெள்ளப் பெருக்கு போல் இந்திரியம் ஓடுவதைக் கண்டு - காட்டு ஆறென எண்ணி தன்கையினால் அள்ளிப்பார்த்து - அது இந்திரியம் என்றறிந்து இப்படி ஒழியாது கலவி செய்வோர் லிங்கமும், ஆவடையாரும் - அற்றுப் பூமியில் விழக்கடவது என்று சபித்தார். இதனால் சிவன், பார்வதியின் லிங்கமும், ஆவடையாரும் - கவுதமர் சாபத்தால் அறுவுண்டு போயிற்றாம். இதைக் கண்ட ரிஷிகள் எல்லோரும் கவுதமரிடம் வந்து ‘நீ குடியிருக்கிற வீட்டில் கொள்ளையடித்தாற்போல் - சந்திரசேகரனாகிய சிவனை சபிப்பதற்குப் புத்தியற்றுப் போனாய். இனி நீ அந்தண குலத்திலிருக்க சம்மதியோம்‘ - என்று சொல்ல - ரிஷிகளைப் பிரியப் படுத்த கவுதம ரிஷி அற்றுப்போன சிவன், பார்வதியின் லிங்கத்தையும் ஆவடையாரையும் (ஆண்குறி - பெண் குறி) அனைவரும் இன்று முதல் அருச்சனை செய்வார்கள் என்று சொல்லி ஒப்புரவானதாக கந்தபுராணத்தில் எழுதியிருக்கிறது. இதேபோல இன்னொரு சமயம் தாருகாவனத்து ரிஷிகள் சாபத்தால் சிவனுடைய லிங்கம் (ஆண் குறி) அற்றுப் போக வில்லையா?

ரிஷி, முனிவர்கள் சாபத்தால் அற்று விழுந்த இந்த லிங்கத்தையும், ஆவடையாரையும் கல்லுருவில் செய்து (ஆண்குறி - பெண்குறி) கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் வைத்து வணங்குவதுமன்றி பலவித உலோகங்களில் செய்து சிறியதாய் கழுத்திலும் கட்டி தொங்கவிட்டுக் கொண்டு லிங்க பூசை செய்யவில்லையா? லிங்க பூசையைப் பற்றிய அகத்திய முனிவர் பாடல் இதோ:

அகஸ்தியர் ஞானம் 30 இல் 20 ஆம் பாடல்

பாரப்பா இப்படியே தெளிவில் லாமல்

பராபரத்தை யறியாமல் மோசம் போறார்,

ஆரப்பா எதிர்ப்பார்கள் என்னோ டேதான்

அஞ்ஞான மூடர்கள்தான் அதை எண் ணார்கள்

வேரப்பா சிவலிங்கம் விஷ்ணு லிங்கம்

வேதாந்த லிங்கத்தை விரித்துப் பார்த்தால்

சோரப்பா கசுமால நாற்றம் நாற்றம்

சிவன் வேண்டு மென்று தினஞ் செபத்தை செய்யே!

பொருள்:  (சிவம் - மோட்சம்) மக்களுள்ளத்தில் தெளிவான படி ஒன்றான மெய்யறிவை அறியும் அறிவில்லாத படியால் - அவரை அறியாமல் மோசம் போகிறார்கள். நான் மெய்வேதாந்த விளக்கம் சொல்லும்போது ஞானமில்லாத மூடர்கள் தவிர என்னை யார் எதிர்ப்பவர்கள்? வேதாந்தத்தில் சிவலிங்கம், விஷ்ணுலிங்கம் என்று பூசை செய்வதைப் பற்றி விவரமாய் ஆராய்ச்சி செய்து பார்த்தால் - பெரும் நாற்றத்திலும், நாற்றமாய் காண்கிறது.

(தொடரும்)

-விடுதலை,10.12.16

சனி, 3 டிசம்பர், 2016

இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:
இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.
இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியு டையவர்களாக இல்லை.
இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை.
நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.
நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.
- இரவீந்திரநாத் தாகூர்

திராவிடர் கழகம் என்று சொல்லப் படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பன ரல்லாத மக்கள் அனைவருக்குமான கழக மாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.
-விடுதலை,27.3.15

மந்திரம் - தந்திரம் - யந்திரம்மனிதன் ஒரு காந்தம். அவன் உடல் உறுப்புகளில் காந்த சக்தி உள்ளது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூட மறுக்க முடியாது. ஏனென்றால், அது விஞ்ஞானி களால் நிரூபிக்கப் பட்ட உண்மை.
இந்த உண்மையின் அடிப் படையில் அமைந்தது தான் தாந்த்ரிக சாஸ்திரம். சரியான சாதனையாலும், பயிற்சியாலும் இந்த காந்த சக்தியை ஓர் ஆக்க சக்தியாக்கி அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டியிருக் கின்றனர். (ஞான பூமி, பிப்ரவரி 1982, பக்கம் 29)
தேஹரியில் கொஞ்சகாலம் தங்கினேன், அப்போது பண்டிதரிடம் எனக்குப் படிக்கச் சில புத்தகங்களையும் ஏடுகளையும் கேட்டேன். அவர் சில இலக்கணங்கள், இலக் கியங்கள், நிகண்டுகள், தாந்திர நூல்கள் கிடைக்குமென்றார். தாந்திர நூல்களை நான் அதுகாறும் பார்த்ததில்லை. அதைப் படிக்கக் கேட்டேன். பண்டிதர் பல தாந்திர நூல்களைத் தந்தார்.
புத்தகத்தைத் திறந்ததுமே நம்பமுடியாதபடி அவ்வளவு அசுத்த, ஆபாச, அபத்த, அசங்கியச் சரக்குகளைக் கண்டு அருவருத்தேன். தாந்திர நூல் தாய், மகள், அக்கா, தங்கை, சண்டாளி, சாமரி என்ற விவஸ்தை இல்லாமல் ஸஹகமனம் (புணர்ச்சி) செய்யத் தூண்டுகிறது.
அதில் நிர்வாண ஸ்திரீயை பூஜை செய்யச் சொல்லியிருக்கிறது. எல்லா பிராணிகளையும் கொன்று புலாலுண்ணலாம். மீனுண்ணலாம், மதுபானம் செய்யலாம்; இவையெல்லாம் பூஜா விதியாம்.
பிராமணன் முதல் சாமரன் வரையில், விவஸ்தை இல்லாமல் பஞ்ச மகாரானுஷ்டானம் செய்யச் சொல்லுகிறது. மாமிசம், மது, மத்ஸ்யம், முத்திரை, மைதுனம் ஆகியவை பஞ்சமகாரங்கள். இந்தப் பைசாச அனுஷ்டானங்கள் முக்தி தருமாம். ஆனந்த முக்திக்கு இவை வழியாம்.
இந்தத் தாந்திர நூல்களை படித்து முடித்தபோது, என் அருவருப்பிற்கும் வியப்பிற்கும் அளவில்லை. இப்படிப்பட்ட ஆபாசக் குப்பை களை எழுதி தர்ம சாஸ்திரம் என்று பிரச்சாரம் செய்யும் தூர்த்தரை வெறுத்து, அங்கிருந்து சிறீநகரம் சென்றேன்.
- (பக்கம் 24, நூல்: தயானந்த ஜோதி, ஆரிய சமாஜம், சென்னை
-விடுதலை,27.3.15

கீதைப் பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில்  கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா?
என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம்  நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்
ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.
மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.
பொதுஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு பொது ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்கக் கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.
-விடுதலை,27.3.15