பிள்ளையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிள்ளையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

பிள்ளை யார்?



கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல விதமாகச் சொல்லப்படுவதும். அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

*தந்தை பெரியார்

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண் ணிக்கை “எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது” என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கட வுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள் களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள் ஏற்படுத்தி இருப் பவை அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெரும்படியான அறிவுகளும் வெகு காலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.


இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு.

நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள் களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்கு வதுமாக இப்போது அமலில் இருக்கும் பழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதும் அதிக செல்வாக்குள்ளதும் முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றி சற்று கவனிப்போம். ஏனெனில் கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதல் கடவுளைப்பற்றித் தெரிவதுதான் நன்மையானதாகும். ஏனெனில் முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால் மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாயிருக்கலாம். அன்றியும் எந்தக் காரியம் ஆரம்பித் தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால் நாமும் கடவுள்களின் கதைகளைப் பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப்பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ. இல்லா விட்டால் “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்” அன்றியும் சமீபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்று வரப்போவதால் இந்தச் சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்க லாம். ஆதலால் தொடங்குதும்.

பிள்ளையார் பிறப்பு

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்கு களைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்த தாகவும் அந்த சமயத்தில் பார்வதி புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்த தாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனையும் பார்த்து “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு, கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்” என்று கேட்டதாகவும் அதற்கு சிவன் “காவல்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி தான் உண்டாக்கின குழந்தை வெண்டுண் டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி முண்டமாக கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிரைக் கொடுத்து பார்வதியை திருப்தி செய்ததாகவும்” கதை சொல்லப் படுகின்றது. இக்கதைக்கு சிவ புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களுமிருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாக சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும் அதற்கு பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பிய தாகவும் தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்ட தாகவும் சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும் உடனே ஒரு யானை யின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

5. இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப் பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.
எனவே பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக் கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும் அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப்பல விதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு உடையவ ராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால் மற்ற கட வுள்கள் சங்கதியைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுதானே தீரும் (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ஆகவே இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதா யிருக்கின்றது. இதனைப் பின்னால் கவனிக்கலாம்)

கோடிக்கணக்கான கடவுள்கள்

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ சந்தே கங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான் அவர் நாம ரூப குணமற்றவர், ஆதியந்தமற்றவர், பிறப்பு இறப்பு அற்றவர் தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும் மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்த சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும் வணங்கவும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடு கின்றோம். சிதம்பரம் கோவிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து அதன் தும்பிக்கையை மற்றொரு பெண்சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன் இந்தக் காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும் ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண்குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும் அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது.

ஆபாசக் கதைகள்

அதாவது ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும் அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும் உடனே பிள்ளையாரானவர் ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படு கின்றது. எனவே இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங் களுக்கு கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் “ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

“எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெ ழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா அன் றியும் பல கோவில்களில் உருவங்களாகத் தோன்ற வில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவை களுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும் – இப்படி இருக்க வேண்டும்” என்றும் “மதத்திற்கு ஆபத்து, சமயத்துக்கு ஆபத்து” கடவுள்களுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் “வக்காலத்து பெற்று” மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணி களுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும் பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு இந்த ஆபாசங் களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லி விடுவதாலேயே எந்தக் கடவுளையும் எந்தச் சமயத் தையும் காப்பாற்றிவிட முடியாதென்றோ சொல் லுவோம். இனி அடுத்த முறை அடுத்தக் கடவுளைப் பற்றிக் கவனிப்போம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 26.08.1928

- விடுதலை நாளேடு Published September 1, 2024

புதன், 31 ஆகஸ்ட், 2022

உச்சிஷ்ட கணபதி

உச்சிட்ட கணபதி (சமக்கிருதம்: उच्छिष्ट-गणपति, Ucchiṣṭa Gaṇapati) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும்.


உச்சிட்ட கணபதி, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் படம்.

திருவுருவ அமைப்புதொகு

இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.[1] வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.[2] உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும். பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும். மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு. இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.

- விக்கிப்பீடியாவில் இருந்து

வியாழன், 14 மே, 2020

பிள்ளையார்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிள்ளையார்:

பரமசிவன் மனைவி பார்வதி. ஒருமுறை குளிக்கப் போகும் போது, தன் உடம்பில் இருந்து திரட்டிய  அழுக்கை சேர்த்து, உருவமாக்கிக்  காவலுக்கு வைத்தார். 

அழுக்கில் உயிர் பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, "யார் வந்தாலும் உள்ளே விடாதே" என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டார். 

அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தார். அழுக்கு உருவமோ, அவரை  உள்ளே விட மறுக்கவே கோபம் கொண்ட பரமசிவன், தடுத்தவரின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டார்.

குளித்துக் கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரமசிவனைப் பார்த்து, "எப்படி இங்கே வந்தீர்கள்? காவலுக்கு இருந்தவர் எங்கே?" என்று கேட்டார்.

காவல் காத்தவரை வெட்டி சாகடித்து விட்டதாகப் பரமசிவன் சொன்னார்.
அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டார் பார்வதி. 

பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது. அதன் தலையை வெட்டி, அழுக்குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தார் சிவபெருமான்.

(ஆதாரம்: கந்தபுராணம் மற்றும் சிவபுராணம்)   

மற்றொரு கதை:

நந்தவனத்தில் உலவி வந்த சிவன், பார்வதி தம்பதிகள் அடர்ந்த காடு ஒன்றில் நுழைகின்றனர். 

அங்கே இரண்டு யானைகள் கலவி (உடலுறவு) செய்து வந்தன. அதைப் பார்த்த சிவன், பார்வதி அதுபோலவே   கட்டிப் புரண்டனர். 

அப்போது பிறந்த குழந்தையின் முகம் யானை வடிவமாகவும், உடல் மனித வடிவமாகவும் இருந்தது. 

(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை" என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)

- வி.சி.வில்வம்

வெள்ளி, 11 அக்டோபர், 2019

பிள்ளையார் 'குணக்களஞ்சியம்'

மயிலாடன்




இந்தத் தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ பிள்ளையாரின் குண விஷயங்களை வித்தாரமாக எழுதித் தள்ளியுள்ளது.

1. பிள்ளையாரை மனதார நினைத்தாலே போதும் விக்கினங்களிலிருந்து காப்பார் (விக்னேஷ்வரான விநாயகன் உண்டியலை அபேஸ் செய்தபோது அவர் சக்தி எங்கே போனதாம்?).

2. அரக்கர்களை அழித்தவன் ஆதலால் பிள்ளையாரை நினைத்தால் வீரம் கிட்டும் (கடவுளின் வேலை சண்டை போடுவதும், அழிப்பதும் தானா?)

3. விநாயகரின் பெரிய தலையே அவர் ஞானம் உடையவர் என்பதற்கு அடையா ளம். (பெரிய தலை இருந்தால் ஞானம் என்று எந்த முண்டம் சொன்னது?).

4. பார்ப்பதற்கே ஒரு கம்பீரம் நிறைந்த அழகிய உருவம் கொண்டவர் பிளளையார் (பிள்ளையார் போல குழந்தை பிறந்தால் கொஞ்சுவார்களா - கழுத்தை முறித்துக் கொல்லுவார்களா?).

5. சமதிருஷ்டி உடையவரை மீறி உள்ளே நுழைந்த தந்தையானாலும் தடுக்கக் கூடியவர் (பார்வதி தேவியார் குளிக்கும்போது உடலின் அழுக்கைத் திரட்டி உருவாக்கப்பட்டவர் தான் பிள்ளை யாராம் - இருக்கட்டும். பார்வதி தேவி குளிக்கும் இடத்திற்கு சிவன் சென்ற போது அவனைத் தடுத்து நிறுத்தினான் பிள் ளையார் என்பதைத்தான் ‘விஜயபாரதம்‘ இப்படி எழுதியிருக்கிறது. அந்த சக்தி பிள்ளையாருக்கு இருந்தால் தடுத்த பிள்ளையாரின் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் தள்ளினானே சிவன், அப் பொழுது இந்தப் பிள்ளையாரின் சக்தி ‘லீவு’ எடுத்துக் கொண்டு போய் விட்டதா?)

6. உதவும் குணம் உடையவராம் இந்த விநாயகர், அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு ஆணவம் நீங்கப் பெற்ற காவிரியை மீண்டும் ஓட வைத்தவர் (காவிரி பிரச்சினைக்காக இவ்வளவுப் போராட்டம் ஏன்? விநாயகனுக்குக் கொழுக்கட்டை வைத்துப் பூஜை போட்டால் தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓட இவ்வளவு எளிதான வழி இருக்கிறதே - இதனை ‘விஜயபாரதம்‘ கையாண்டு கருணை மழை பொழிய செய்யக் கூடாதா?)

7. புதுமையாக சிந்தித்தார்: தாய் தந் தையை சுற்றி வந்தாலே அகில உலகையும் சுற்றி வந்த பேறு கிடைக்கும் என உணர்த் தியவராம் இந்தத் தொந்தி கணபதி. (ஒரு மாங்கனிக்காக விநாயகனும் முருகனும் சண்டை போட்டபோது, எனது முடியை முதலில் தொட்டு வருபவர்களுக்குத்தான் இந்த மாங்கனி என்றாராம் அப்பா சிவன். முருகன் மயிலேறி பறந்தானாம். விநாய கனோ தன் தாய் தந்தையரைச் சுற்றி முதலில் வந்தானாம். இதைத்தான் இப்படி ஜோடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு. இதில் விநாயகனின் தந்திரம் இருக்கிறதே தவிர போட்டியை வெல்லும் ஆற்றல் இல் லையே! சரி, விநாயகன் அறிவாளி என்றால் அவன் சகோதரன் முருகன் பரம முட்டாளா?)

8. தியாகம் : மகாபாரதம் எழுதுவதற்கு அழகிய தன் தந்தத்தையே உடைத்தவர் (தந்தத்தினால் அவ்வளவு பெரிய மகா பாரதத்தை எழுத முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். தன் சக்தியால் ஒரு எழுது கோலை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதானே?)

9. நம்பிக்கை: விநாயகர் தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் கைவிடுவ தில்லை. உதாரணமாக வள்ளியை மணக்க உதவி புரிந்தது. (சகோதரனுக்காக எந்த வேலையைச் செய்துள்ளார் பார்த்தீர்களா? ஒரு வள்ளியைக் கை பிடிக்கக் கூட சகோதரன் முருகன் கையாலாகாதவனா?)

10. எளிமை: ஒரு குழந்தைகூட விநாயகனை எளிதாக வரைந்து விட முடியும். (யானை முகம், பெருத்த தொந்தி, தந்தம், வாகனமான மூஞ்சுறு இவை அத்தனையும் கொண்ட ஓர் உருவத்தை எளிதாக வரைந்து விட முடியுமா? இவர் எளிமையான கடவுள் என்றால் மற்ற இந்து மதக் கடவுள்கள் கடுமையானவர்கள் தானா?)

11. புலனடக்கம்: அதாவது யானையை அடக்க அதன் பாகன்கள் அங்குசத்தைப் பயன்படுத்துவர், ஆனால் அந்த அங்கு சத்தையே தன் ஆயுதமாகத் தரித்தவராம். ஒருவனது கட்டுப்பாடே அவனை சிறந்த தலைவனாக்கும் என உணர்த்துபவர் விநா யகராம். (தன் தும்பிக்கையால் வல்லபை என்ற பெண்ணின் குறியில் என்ன செய்தார் என்பதுதானே இவர்களின் புராண லட் சணம்!).

ஒரு கடவுளச்சியின் உடல் அழுக்கி லிருந்து பிள்ளையார் உருவம் போல ஒரு பிள்ளை என்றால், இந்த அசிங்கத்தை அநாகரிகத்தை என்னவென்று சொல்லு வது?

அழுக்கிலிருந்து பிள்ளை பிறக்குமா?

இந்த ஆபாச - அருவருப்புக் கற்பனைக் கடவுளுக்கு எத்தனை எத்தனை இலட்ச ணங்களை - ஆர்.எஸ்.எஸ். ஏடு வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறது.

கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்று கூறுவானாம். இதற்குப் பொருத்த மானது - ‘விஜயபாரத’த்தின் அளப்புகள்!

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிள்ளையார் பிறந்த கதை--இது அழுக்கு கதையல்ல!

நந்தவனத்தில் உலவிவந்த சிவ-பார்வதி தம்பதிகள்,ஒட்டியிருந்த படர்ந்த காட்டில்"எதற்கோ"நுழைந்தனர்.அங்கே யானைகள் இரண்டின் "கலவி "க் காட்சியைக் கண்டனர்.
கட்டுமீறிப்போன ஆசையில் கட்டிப்புரண்டனர் இந்தக் கடவுள் தம்பதிகள்.

தேவாரத்தில் சம்பந்தர் "பிடியதன்"என்று துவங்கும் பாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (இப்பாடலை கூகிளில் சர்ச் செய்தபோது இப் பாடல் அழிக்கப்பட்டுள்ளது) .

கட்டுக்குலையாத மேனிகளில் அரும்பு கட்டியது வியற்வைத்துளிகள்.

கல்விக் கோலங்கொண்ட யானையைப் பார்த்தே மனைவிக்கு "ஆலிங்கன" ஆனணகளைப் பிறப்பித்தான் சிவன்.
எனவேதான், பிறந்த குழந்தை யானைமூஞ்சியாய் பிறந்து விட்டது.

முக்கண்ணனின் முதல் மைந்தனுக்கு இன்னொரு பிறவிக்கதையும் உண்டு.

கசமுக அசுரன் என்பவன் சாகாவரம் பெற்றவன், தேவர்களை வம்புக்கிழுத்து விளையாடுவதே இவனின் பொழுது போக்கு.
தன்னைச்சாகடிக்க யாருமில்லை என்ற தைரியத்தில் "நாமார்க்கும் குடியல்லோம் :நமனை அஞ்சோம் என்று கண்ணாமூச்சி காட்டினான் தேவர்களிடம்.
வெறுப்பும், கொதிப்பும் கொண்ட தேவர் குலம், திணறித்திண்டாடிச் சிவனை அடைக்கலம் கொண்டது.
தம்பதி சமேதரமாகத் தோட்டம் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கிடந்த உலகநாயகனும் நாயகியும், தற்காலிகமாகத் தங்கள் செயல்களை ஒத்திவைத்து, வதைபடும் தேவர் இனத்தைப் பரிசீலித்தனர்.
அப்போது அவர்கள் கண்களில் கலவிப்புரியும் யானைகளின் காட்சி தென்பட்டது.
அவ்வளவுதான்!
சிவனும் பார்வதியும் சும்மா இருப்பார்களா?
உடனே யானையாக உருமாறி விட்டனர்!
பிறகென்ன!?
இரும்பும் காந்தமும்தான்!!
இதன் விளைவு--பிறந்தார் பிள்ளையார்.
பிறந்தவர் யானை முகமும் ,மனித உடலுமாக இருந்தார்.
(ஆதாரம்:வலிவலம் கோவில் சிவனைப்பற்றிய திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை "என்று தொடங்கிய பாடிய தேவாரப்பாடல்)
"வடிகொடு தனதடி வழிபடுமவரிடம்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை"".

- ஆறாம் அறிவு குழுவில் ராஜமோகன்

22.4.19

புதன், 12 செப்டம்பர், 2018

ஒரு விநாயகனுக்கு எத்தனை எத்தனை கதைகள்

பழைமைவாதக் கருத்துகளை நவீன அறிவியல் வளர்ச்சியால ஏற்பட்ட கருவிகளைக்கொண்டே அறிவி யலுக்கு புறம்பானவற்றை பரப்பிவருவதை தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டுபிடித்தபோது மின்சாரம் இல்லை. ஆனால், கோயில்களில், தேரோட்டங்கள், வீதி உலாக்களில், உற்சவங்களில், விழாக்களில் மின்சார விளக் குகள், ஒலி பெருக்கிகள், அலங்கார விளக்குகள், தோர ணங்கள்,  இல்லையென்றால், விழாக்களாகவே கருதமுடியாத அளவிற்கு அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி வரு கிறார்கள். கோயில் கருவறைக்குள் மின்விளக்கு எப்போது வந்தது? வண்ண வண்ண பூச்சுகள் நவீன தொழில் நுட்பங்களுடன் வந்தது எப்படி?

இல்லாத இந்து மதத்தில்தான் விழாக்களும் உள்ளன. ஒவ்வொரு கடவுளுக்கும் விதவிதமான கற்பனைக்கதைகள், அதன் தொடர் சங்கிலியாக மக்களின் மூளையையும், பொருளையும் பாழடிக்கும்

கடவுளர்க்கு பிறப்பு, இறப்பு உண்டா?

கிருஷ்ணனுக்கு ஜெயந்தியாம், அதுவே கோகுலாஷ்ட மியாம். ராமனுக்கு நவமியாம். விநாயகனுக்கு சதுர்த்தியாம். பிறப்போ, இறப்போ இல்லாத கடவுள்களுக்கு பிறந்த நாள் விழாக்கள் ஏன்? பண்டிகைகள் ஏன்?

கடவுளைக் கற்பித்து, அதன் அற்புதங்களை சொல்வ தற்காக கற்பனை கதைகள், புராணங்கள் வைத்து, அவற்றைக் காட்டி கோயில்கள், பண்டிகைகள் என்று பக்தியின்பெயரால் திட்டமிட்டு பரப்பும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

விநாயகனின் பிறப்புக்கே கதைகள் பல உள்ளன. புத்தகங்களில் அடுத்தடுத்த பதிப்புகளில் பின் இணைப்பு களாக, கூடுதல் தகவல்களை இணைப்பதை ப்போல், ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த சிவன் கோயில், மாரியம்மன் கோயில் என எந்த கோயிலாக இருந்தாலும், அந்த கோயிலின் முன்பகுதியில் சிறிய அளவில் இடம் ஒதுக்கி பிற்பாடு திணிக்கப்பட்ட கடவுளாகவே விநாயகன் சிலை அமைக்கப்பட்டிருக்கும்.

விக்கினம் தீர்ப்பவன், வினை தீர்ப்பான் விநாயகன் என்று கூறுகிறார்கள். மேலும், விநாயகனை வணங்காத வர்களுக்கு விக்கினத்தை உருவாக்கிவிடுவான் என்றும் பாமர பக்தர்களை அச்சுறுத்தி பக்தியை வளர்க்கின்றனர். வினை தீர்ப்பான் விநாயகன் என்றால், வினையை ஏற்படுத்தியவன் யார்? என்று சிந்திக்க வேண்டாமா?

விநாயகனுக்கோ பார்வதியின் வயிற்றிலிருந்து பிறப்பு கிடையாது என்று ஒரு கதை கூறுகிறது. விநாயகன் பிறப்பு என்று சொல்லப்படுவதில் பார்வதியின் கணவன் சிவனுக்கு  தொடர்பேதும் கிடையாது-. ஏனென்றால், குளிக்க சென்ற கடவுள் பார்வதி, தன்னுடைய உடலிலிருந்து திரட்டப்பட்ட அழுக்கைக்கொண்டு ஓர் ஆண் சிறுவனின் (நேரடியாக சிறுவன்!) உருவம் செய்து, காவலாக வைத்தாளாம்.

(சர்வசக்தியுடைய பெண் கடவுளுக்கே பாதுகாப்பு கிடையாதா?) மனைவியைத் தேடினானாம் சிவன். (நம்பிட வேண்டும் சர்வசக்திகொண்டவன்) பின்னர் பார்வதி குளிக்கு மிடம் சென்றானாம். பார்வதியின் அழுக்குருண்டை யால் உருவம் பெற்ற சிறுவன் தடுத்தானாம். தன் மனைவியைக் காண்பதற்கு தடையா என்று ஆவேசமடைந் தான் சிவன் (கடவுள்!) விளைவு சிறுவன் தலை கிள்ளி எறியப் பட்டது. சிவனைக் கண்ட பார்வதி, காவலுக்கு வைத்திருந் தேனே என்றாளாம். தலையை கிள்ளி எறிந்து விட்டதாக சிவன் கூற, தான் உருவாக்கிய மகனாயிற்றே என்று பார்வதி அழுதாளாம். (சிவனுக்கே தொடர்பில்லாமல் பிள்ளை?)

மதவெறிக்கான கருவியாக்கப்பட்ட

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்

விநாயகர் சதுர்த்தி என்பது பண்டிகையாக மக்களிடையே திணிக்கப்பட்ட பிறகு, ஏரி, குளம், நீர்நிலைகளிலிருந்தும் பெறப்பட்ட களிமண்ணைக் கொண்டு, கைகளால் செய்யப் பட்டும், அச்சுகள் உருவாக்கப்பட்டு அச்சுப் பிள்ளையாரா கவும் ஓரடிக்கும் உள்பட்ட உயரத்திலே செய்யப்பட்டு, வீட்டளவில் வழிபாடு செய்வதும், பின்னர் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலோ, வீட்டிலுள்ள கிணற்றினுள்ளோ தூக்கிப் போட்டுவிட்டு, அவரவர் வேலைகளை பார்த்து வந்தார்கள். இந்து மதத்தில் புராணக்கதைகளால் ஏற்படுத்தப்பட்டு, மக்களிடையே பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட எத்தனையோ பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக மட்டுமே இருந்துவந்தது. ஆனால், பல அடி உயரங்களில் விநாயகன் சிலை அமைப்பதும், அதை ஊர்வலமாக எடுத்துச்செல்வதும், அந்த விநாயகன் ஊர்வலத்தின்போது மதச் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செய்து வருகிறார்கள்.

இந்து மதத்துக்கு வீழ்ச்சி ஏற்படும்போது, குறிப்பாக பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு வீழ்ச்சி ஏற்படும்போதெல்லாம் இந்த பிள்ளையாரையும், அதேபோல், ராமனையும் ஒரு மதவெறிக்கான கருவியாக  ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள்.

இந்துத்துவாத் திணிப்புக்கான கருவியாக மராட்டிய மாநிலத்தில் திலகர் முதற்கொண்டு, மராட்டிய பார்ப்பனர் களால் பரப்பப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விநாயகன் வழிபாடு பெரிய அளவில் இல்லாத பகுதிகளிலும் வடநாட்டு மார்வாரிகளின் பணத்தைக் கொண்டு வாரியிறைத்து கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், வீதிகள்தோறும் விநாயகன் சிலைகள் அமைப்பதும், விநாயகன் வழிபாடு, கணேஷ் பூஜை என்று பரப்புவதை செய்து வருகிறார்கள். மதக்கலவரத்துக்கான வித்தாக விநாயகன் வழிபாட்டை தூக்கிப்பிடிக்கின்றனர்.

விநாயகனின் எண்ணற்ற மனைவியர்

மணமான நிலை பற்றி புராண கதைகளில் விவரிக்கப் பட்டுள்ளது. தென் இந்தியாவில் விநாயகன் மணமாகாத பிரம்மச்சாரி கடவுளாம். (கடவுளுக்கு ஏன் திருமணம்?) தாயைப்போலவே மனைவி வேண்டும் என்று அரச மரத்தடியில் பெண்தேடி வருகிறான் என்றும், அதனாலேயே பெண் கிடைக்காத பிரம்மச்சாரி கடவுள் என்றும் கூறப்படுவதுமான கதைகள் பல உண்டு.

இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு  மூர்த்தியின் குமாரியாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தனர் என்று அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, புத்தி, சித்தி மற்றும் ரித்தி ஆகியோரை விநாயகன் மணந்துகொண்டான் என்றும், இன்னும் சில இடங்களிலோ சரஸ்வதியின் கணவனே விநாயகன் என்றும் கூறப்படுகிறதாம். விநாயகனை பற்றியும், அவன் மணமான நிலை பற்றியும் பல்வேறு வட்டார வேறுபாடுகளுடன் பலவிதமான குழப்பங்கள் நிலவுகிறதாம்.

சிவபுராணத்திலும் விநாயகனின் திருமணம் கூறப்பட் டுள்ளதாம். விநாயகனும், அவன் தம்பி கந்தனும் பிரஜாபதி யின் புதல்விகளான சித்தி மற்றும் புத்தியை மணக்க போட்டி போட்டார்களாம்.

பெண்ணுக்கான இந்த சண்டையில் ஜெயித்த விநாயகர், அந்த இரட்டை சகோதரிகளை தனக்கே மணம் முடித்து வைக்க தன் பெற்றோர் பரமசிவன் பார்வதியிடம் கோரிக்கை விடுத்தானாம்.  விநாயகனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திக்கு பிறந்த ஷேமா மற்றும் புத்திக்கு பிறந்த லாபா என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கதைகள் கதைகளாக மட்டும் இருந்தால், மனிதனின் கற்பனை வளம் என்று விட்டுவிடலாம். ஆனால், கதைகளின் அடிப்படையில் கடவுளர்கள், கடவுளர்களின் அற்புதங்கள், அவற்றை அடிப்படையாக் கொண்டு பண்டிகைகள் என்று மக்களின் அறிவையும், பொருளையும் பாழ்படுத்துவதை பகுத்தறிவுள்ள எவரும் ஏற்பார்களா?

பயத்தின் அடிப்படையில் உழைக்கும் பாமர மக்களை சுரண்டும் பார்ப்பன ஆதிக்கவாதிகள் வஞ்சிப்பதற்காக உருவாக்கப்பட்டவையே புராணங்கள், பண்டிகைகள்.

கடவுள், பக்தி என்றால் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று எந்த கேள்வியையும் கேட்டுவிடக்கூடாது. நம்ப வேண்டும், அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆய்ந்து பார்க்கும் பகுத்தறிவுக்கு வேலையே கிடையாது. இப்படி சொல்வதுதான் மதம். மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, பக்தி எல்லாம் மோசடியே.

அபிதான சிந்தாமணி

அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளதாவது:

விநாயகசதுர்த்தி விரதம்: - விநாயகர் விரதம் என்பது  விநாயகமூர்த்தியையெண்ணி ஆவணி மாசம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் அநுட்டிப்பது.  இதை அநுட்டித்தோர் உமை, புருசுண்டி, அவ்வை முதலியோர்.  இது சிந்துரனைக் கொல்லக் கசாநநர்  அவதரித்த காலம்.

விநாயகபுராணம்- உபபுராணங்களில் ஒன்று.  இதனைப் பார்க்கவபுராணம் என்பர்.  இதைத் தமிழில்திருவாவடுதுறைக் கச்சியப்பசுவாமிகள் மொழிபெயர்த்தனர். இது விநாயகர் செய்த திருவிளையாடல்களைக் கூறும்.

விநாயகமூர்த்தங்களாவன- (14) சுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணிகர், லம்போதரர், விகடர், விக்கினராசர், கணாதிபர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜாநநர், வக்கிர துண்டர், சூர்ப்பகர்ணர், ஏரம்பர், ஸ்கந்தபூர்வர்.

விநாயகர்-1. தன்னை வணங்கினர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதார்க்கு  விக்கி னத்தைத் தருபவரும்  தனக்குமேல் நாயகரிலாதவருமாத லால் இப்பெயர் வந்தது.

(1) இவர் சிவமூர்த்த பேதம். இவர்க்கு யானைமுகம் வந்த வரலற்றினைக் கஜமுகரைக் காண்க.

(2) இவர் இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கி அகத்திய முனிவரிடம் இருந்த கரகநீரைக் காகவுருக் கொண்டு கவிழ்த்து அவன் சீகாழியில் வைத்த நந்தவனத்தைச் செழிப்பித்தனர். இதனால் அகத்தியர் கோபங்கொண்டு குட்டவர அவர்கைக்குத் தப்பித் தரிசனம் தந்தவர்.

(3) பார்வதி பிராட்டியார் திருவயிற்றிருந்து சிந்துரனால் தலைநீங்கி மயேச்சுரன் தலையைப்பூண்டு  சிந்துரனைத் திலகமாய் அணிந்தவர்.

(4) பராசுவமுனிவர் ஆச்சிரமத்தில் வளர்ந்து விக்னராசர் எனப் பெயர் அடைந்தவர்.

(5) இவர்க்குச் சிந்தாமணி விநாயகர் எனவும் வக்கிரதுண்ட விநாயகர் எனவும், கலாதரர் எனவும், கணேசர் எனவும், பாலசந்திரர் என்றும், கபிலவிநாயகர் எனவும், சுமுகர் எனவும், கசாநநர் எனவும், தூமகேது எனவும், மகோற்கடர் எனவும், உடுண்டிவி நாயகர் எனவும், வல்லபை கணேசர் எனவும் பெயர்.

(6) இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு  மூர்த்தியின் குமாரியாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தனர்.

(7) இவரது திருவிளையாடல்களைத் தனித்தனி காண்க.  இவர் சிருட்டி முதலிய பஞ்சகிருத்தியமுஞ் செய்து நாயகமாய் நிற்றலில் இவரே பரமென்பர் காணாதிபத்ய மதத்தவர். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதப்படக் கூறும். அந்தந்தச் சிறப்புப் பெயர்களிற் காண்க.

(8) இவரைப் பிரமன், விஷ்ணு, தக்கன், முற்கலன்,  வீமன், இந்திரன், ருத்ரன், உமை, கர்த்தமன், நளன், சந்திராங்கதன், சண்முகர், மன்மதன், ஆதிசேடன், புருசுண்டி, அங்கராசன், சந்திரன், கிப்பிரப்பிரசாதன், கிருதவீரியன், சூரசேநன், பரசுராமன், இராவணன், அகத்தியன், காசிபன் முதலியவர் பூசித்து இட்ட சித்தியடைந்தனர் என்ப.

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார்.

இவ்வாறு அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

சிந்திக்க வேண்டாமா?

கற்பனைக்கதைகளை அடிப்படையாகக் கொண்டே விநாயகன் குறித்து புராணப்புரட்டுகள் மக்களிடையே திணிக்கப்பட்டுள்ளது.

விநாயகன் பிறப்பு உள்பட புராணங்களில் கூறப்பட்ட அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்ததாதவற்றை பகுத்தறிந்து ஆராய்பவர்கள் சிறிதும் ஏற்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு தொடர்பேதும் இல்லாத வடநாட்டின் இறக்குமதியான விநாயகனுக்கு பண்டிகை என்பதன் பெயரால் கொண்டாடி, அறிவை இழக்கலாமா?

1953ஆம் ஆண்டிலேயே பிள்ளையார் சிலை உடைத்து பகுத்தறிவு வெளிச்சத்தை அளித்தவர் தந்தை பெரியார். கணினி யுகம் என்று கூறப்படுகின்ற அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்தில் அறிவியலுக்கும், அறிவுக்கும் பொருத்தமற்ற கட்டுக்கதைகளை புறந்தள்ள வேண்டாமா? சிந்திப்பீர்.

-  விடுதலை நாளேடு, 6.9.18