திராவிட மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிட மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 பிப்ரவரி, 2020

திராவிட மதம் வேறு ஆரிய மதம் வேறு ஆதி ஆரியப் பார்ப்பனரின் - பிரித்தாளும் சூழ்ச்சி (திராவிடச் சேய்)

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

கட்டுரையாளர் பற்றி....

திராவிடச்சேய் என்னும் பெயரில் 19.4.1940 'விடுதலை' இதழில் வெளிவந்த கட்டுரை இது. ஜாதி, மதம், வருணம் முதலியவற்றால் விளையும் கேட்டினை எடுத்துரைக்கின்றது. திராவிட மதம் ஆரிய மதத்திலிருந்து வேறுபட்டது என்பதை விளக்கும் கட்டுரை இது. திராவிட மதத்தை ஆரிய புரோகிதர்கள் தம்வசப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியலிடுகிறது. அரசர்களைத் தம் கைப்பாவை ஆக்கிக் கொண்ட சாதுர்யத்தையும் வெளிப்படுத்துகிறது.

சமயத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ வருணத்தைப் பற்றியோ நமக்கு அக்கறையில்லை; சமயம் சங்கடத்தை விளைவிப்பது; சாதி, ஒற்றுமையைக் குலைப்பதும், தம் மனிதனை அடிமையாக்குகிறது; வருணம் மனிதவர்க்கத்தின் சக்தியை ஒடுக்குகிறது என்பதே எமது அபிப்பிராயம். துஷ்டச்சிறுவரை பூச்சாண்டி காட்டி அடக்கு வதுபோல, மனிதச்சட்டத்திற்கும், நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்படாதவனை கண்ணுக்குத் தெரியாதகடவுளைக் காட்டி அதனால் பயப்படுத்தி வந்திருக்க வேண்டுமென்பதே பகுத்தறிவில் கண்ட உண்மை. ஆனால் பிற்காலத்துப் போக்கு எப்படியாயிற்று? அக்கிரமத்தையொடுக்கத் தோற்று விக்கப்பட்ட பொய்க் கடவுள் அக்கிரமங்களை பல கோடி மடங்கு அதிகமாகச் செய்ய பற்றுக் கோடாகிவிட்டது. சமய மென்பது ஜனங்கள் நலன் பெற்று நடக்கவழிகாட்டும் ஒரு சட்ட இலாகா. பிற்காலத்திலோ, சமயம், குடி, கொலை, கொள்ளை, விபசாரம், அக்கிரமம், அநியாயம், மோசடி, வஞ்சனை, சூது முதலியன செய்து, ஒரு பிரிவினர் வயிறு வளர்க்கும் பொது ஜனத்துரோக இலாகாவாயிற்று. இந்த சமயமும் சாத்திரமும், கடவுளும் கோவிலும் தோன்றிய அந்த நாள் முதல் இந்த நிமிஷம் வரை சமயத்தின் பேராலும், சாமியின் பேராலும் நடந்து வரும் அக்கிரமங்கள், அநியா யங்கள், கொலைகள், பகற்கொள்ளைகள், மோசடிகனை எண்ணத்தான் முடியுமா? மனதில் எண்ணத்தான் கூடுமா?

ஜனசமூக அழிவிற்குக் காரணமென்ன?

ஜனசமூக அழிவுக்கும் செல்வநாசத்திற்கும் இந்த சமய சாதி கலகந்தான் மறுக்க முடியாத காரணமென்பதை நீண்ட நாள் உலகச் சரித்திரமே கூறும்.

இருந்தும், நல்லதை விடுத்து அல்லதைக் கொள்வதே மனிதர்களுக்கு சகஜமாகிவிட்டது. கஷ்டத்தை விலைக்கு வாங்குவதே மானிட சுபாவமாயிருக்கிறது. நல்லது செய்வா ரைக் கரிப்பதும் சுயநலத்தால் நல்லவன் போல் மாய நாடகம் நடித்து பின்னர் தலையில் கல்லைப் போடுகிறவர்களை நம்புவதும் உலக வழக்கமாகிவிட்டது.

இந்த இலக்கணப்படி கெடுதியை விளைவிக்கும் சாதி சமயங்களில் மனித வர்க்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இன்னும் அதே நம்பிக்கை தான். பகுத்தறிவு இயக்கங்கள் என்ன பாடுபட்டும், இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பது மலையைத் தகர்ப்பது போல் கஷ்ட சாத்தியமாக இருக்கிறது. மதத்தின் சூதுச் சட்டங்களால் பகுத்தறிவு இழந்து மாக்களா கிய மக்கள் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் - பூர்ண மாகப் பெற்று மக்களாக இன்னும் எத்தனை காலமாகுமோ அறிய முடியவில்லை.

இத்துறையில் சுருக்காக வெற்றிபெற வேண்டுமானால், பைத்தியக்காரனை அவன் போக்கிலேயே விட்டுத் திருப்பு வதுபோல மதப்பித்து கொண்டவர்களை, மதத்தின் பேரைக் கூறியே உண்மையுணரச்செய்ய வேண்டும். காந்தியாரும் இந்த உண்மையை உணர்ந்து தான் போலும் அரசியலில் கடவுள் பேரை உதவிக்கு அழைக்கிறார். ஆத்ம கட்டளை, கடவுள் உத்திரவு என்று கூறி பாமரமக்கள் கண்ணில் மண் தூவி காங்கிரசின் பேரால் ஏகபோக சர்வாதிகார ஆட்சி நடத்த முயலுகிறார்.

இந்த ஏமாற்று வயிற்றுப் பிழைப்பு சமயங்களின் யோக்கி யதைகளை பகுத்தறிவு உடையவர்களை ஆராய்ந்து உண்மை உணரும்படி விட்டுவிடுகிறோம்.

இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டுள்ளது, திராவிட மதம் ஆரிய மதம் தானா? திராவிடர்கள் தமக்குள் கட்டு திட்ட சட்டமான தனிப்பட்ட மதம் இல்லையா? திரா விடருக்கு சுய அறிவு இருந்ததா, அல்லது ஆரியப் பார்ப்ப னரிடம் விலைக்கு வாங்கிக்கொண்டனரா என்பதுவே.

திராவிட மதம் தனிப்பட்டது

திராவிட மதம் ஆரிய மதத்தினின்றும் தனிப்பட்டது. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு பல நூற்றாண்டு களுக்கு முன்னரே திராவிட மக்கள், பகுத்தறிவுக்கும் மக்கள் நன்மைக்கும் ஏற்றதோர் இயற்கைச் சமயத்தைக் கையாண்டு வந்திருக்கின்றனரென்பது ஆதித் தமிழ்ப் பெருங் காவியங் களாலும், அகப்பொருள் புறப்பொருள் போன்ற நூற்களா லும் தெளியக் கிடக்கிறது. திரா விட மதமென்பது இயற்கை மதம். இயற்கைச் சக்தியே, மனிதர் வாழ்வதற்கு சாதக மான இயக்கச் சக்தியெனக் கண்டு அச்சக்திகளைதகுந்தபடி உப யோகத்திற்குள் கொண்டு வரவும், அச் சக்திகளை விபரீத வழிகளில் பயன் படுத்திக் கொள்ளாமல் தடைப்படுத்தவும் சில கட்டு திட்ட சட்டங்களை ஏற்படுத்தி அச்சக்திகளுக்கும் திருமால், முருகன், சிவன் என்ற தனித் தனிப் பெயர் களைக் கொடுத்து பூசித்து வந்திருக்கின்றனர். இப்பெயர்கள் விவ சாயத்திற்கான நீர், நிலம், காற்று, உஷ்ணம் ஆகியவை களையே குறிப்பிடுவனவாகும். கண்ணுக்குத் தெரியாத உலகத்திலுள்ள சூதுக் கடவுளைக் குறிப்பிடுவனவல்ல. எனவே நமது மூதாதைகள் என திராவிடப் பெரியோர் இயற்கைச் சக்திகளை ஒழுங்கு பெற பயன்படுத்திக் கொள்ள இப்போது மின்சாரம் நீராவி முதலியவற்றின் உபயோகத்திற்கு ஏற்பட்ட கட்டுத்திட்டங்கள் போன்று ஏற்படுத்திக் கொண்ட சட்ட நியதிகளே சமயமாகுமென்பது பகுத்தறிவில் காணும் தீர்ப்பு. தெய்வம் என்றால் பயன் தரும் சிறந்த சக்தி என்றே பொருள் கொள்ளப்படும். எனவே மக்கள் பிழைப்பதற்கு பயன்தரும் இயற்கைச் சக்தியே தெய்வம் அல்லது கடவுளா கிறது. இதற்குச் சான்றுகள் பழங்காலத் தமிழ் நூல்களிலும் இக்காலம் கிடைக்கும் சரித்திர நூல்களிலும் பரவிக் கிடக் கின்றன.

இந்த ஆதி இயற்கை வழிபாடு தெய்வச்சமயநெறி திகழ்ந்த காலத்து கொடுமைப்படுத்தும்பிரிவுபடுத்தும் சாதிப் பிரிவுகளும் இல்லை. எல்லாரும் சரிநிகர் சகோதரப்பான் மையே கொண்டிருந்தனர். மேலும் ஒழுக்கத்திற் சிறந்தோ ரையும் அறிவிற்சிறந்தோரையும் பொதுநலத்தொண்டு செய் வோரையும் மேன் மக்களெனவும் மரியாதை செலுத்தி வந்தனர்.

ஆரிய மதப்படையெடுப்பு

இவ்விதம் அமைதியும் அன்பும் கொண்டு வாழ்ந்த திராவிட மக்களுக்குள்ளே சாதிசமயப்பாகுபாடுகளும் வேற்றுமைகளும் பூசல்களும் எப்போது உண்டாயின! இப்போதிருப்பது திராவிட மதமா? என்பன தெளிவுபட வேண்டும்.

இப்போது இத்திராவிட நாட்டில் பரவி நிற்கும் இந்துமதம் அசல் திராவிட மதம் அல்ல என்று உறுதியாகக் கூறலாம். ஆரிய மதக்கலப்பில் மயங்கியதோர் சூது மதம் தான் இப்போது உள்ளது.

கி. மு. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், வடநாட்டு ஆரிய மதங்களான சைன மதம், பிராமண மதம், பவுத்தமதம், ஆசீவக மதம் நான்கும் தென்னாட்டை நாடி வந்தன. அக்காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கப்பட்ட மதம் வடநாட்டு மத சம்பந்தமற்ற கவிதை தனி மதமாகும்.

வடநாட்டு மதங்களான இந்த நான்கு ஆரிய மதங்களும் திராவிட நாட்டில் புகுந்த காலத்தில் தான் மதப்பூசல்களும் வந்தன. பல வியாபாரிகள் ஒரே சரக்கை ஒரே இடத்தில் விற்க முற்பட்டால், என் சரக்கு மேல், உன் சரக்கு கீழ் என போட்டிப் பூசல் நேரிடுவது சகஜம் தானே. அதே போலத் தான் ஆரியமதங்கள் நான்கும் தத்தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தத்தமது சிறப்பைக் கூறி பூசலிட்டு பேரம் செய்யத் தொடங்கின. அன்று தொடங்கிய சண்டை இன்று வரை நாமச்சண்டை விபூதிச் சண்டை சோற்றுச் சண்டை யாகத் தொடர்கிறது.

பற்பல உபாயங்களால் திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து அவர்கள் நிழலில் சிறப் பும் செல்வாக்கும் தேடிக்கொள்ள முயற்சித்தனர். இப்பெருங் குடி மக்களையும், மதத்தின் பேரால் ஒருவருடன் ஒருவர் போர் புரியும்படியும் சூதிழைத்தனர். பற்பல சமயங்களிலும் குடி, கலகங்களும் செற்றமும் ஏற்பட்டன.

இதற்குச் சான்று, மணிமேகலையில்,

"ஒட்டிய சமயத்துறு பொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப்பாங்கறிந் தேறுமின்

பற்றா மாக்கள் தம்முடனாயினும்

செற்றமும் கலாமும் செய்யாதகலுமின்"

என்ற குறிப்பிலிருந்து அறியக் கிடைக்கிறது.

இந்து சமயத்தோற்றம்

பவுத்த மதம் தனக்குள்ளேயே ஏற்பட்ட அறுவகைப் பிரிவுகளால் வலிமையிழந்தது. பிறந்த இடத்தை மறந்து பிறரிடத்தில் வாழவேண்டியதாயிற்று. கி.பி. நான்கு அய்ந்து நூற்றாண்டுகளில் பவுத்தம் குன்றியது. ஜைனமும் தலை தூக்கித் தணிந்தது.

ஆடுவாராடி ஒடுங்கிய பின் வந்து மூன்று நூற்றாண்டு களுக்குப் பின் வைதீக மதமெனும் பிராமண மதம் தலை தூக்கத் தொடங்கிற்று.

உயிர்க்கொலையும் சாதிப்பிரிவும்

வைதீக மதத்தின் கொள்கைகள்படி, யாகத்தில் உயிர்க் கொலை செய்யும் வழக்கம் எங்கும் பரவிற்று, மேலும் இம் மதத்தை இங்கு தூக்கிக் கொண்டுவந்தவர்களாகிய வேத வித்துக்களாம் ஆரியப் பிராமணர் உயர் ஜாதி என்றும் வலியுறுத்தப்பட்டது.

அது மட்டுமா? தம் வேதப்புரட்டுகளை திராவிடர் அறிந்து கொண்டால் எங்கே தம் வயிற்றுப் பிழைப்பில் மண் விழுந்து விடுமோவென அஞ்சி வேதங்களுக்குத் தெய்வத் தன்மையும் கற்பனை செய்தனர். அதாவது கடவுளே அவர்கள் நேரில் அந்த வேதங்களை ஒப்புவித்ததாகவும் பிறரிடம் கூறவோ, கொடுக்கவோ கூடாதென கடவுளே தம் வாயார கட்டளையிட்டதாகவும் அக்கட்டளையை மீறி னால் கண் கெடும் மண்டை வெடிக்குமென்றும் பயங்கர பயத்தை கிளப்பிவிட்டு மதத்தின் பேரால் சர்வ போகங்கள் அனுபவித்து வர முயற்சித்தனர்.

இருபிறப்புத் தந்திரம்

இந்தவித சுயநலக் கட்டுப்பாடுகளை சுய அறிவுள்ள திராவிடர் விரும்பவில்லை. பிராமணர் சரக்கும் இங்கு விலைபெற முடியவில்லை பிழைப்பில் மண் விழுந்தது. சோற்றுக்கு வகையற்று காட்டுக்குச் சென்று தவம் செய்த தாகக் கூறி காய் கிழங்குகளையும் இலை சருகுகளையும் தின்ன வேண்டிய கதியேற்பட்டது.

எத்தனை காலம் தான் பட்டினியிருக்க முடியும். இதனால் தமது வர்க்கம் அழிவது கண்டு ஆரியரும் வேறொரு தந்திரத்தைக்கையாண்டனர்.

அய்ந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர் தமது மதக் கொள்கைகளை மாற்றி தம் மதத்திற்கு பொன் முலாமும் சர்க்கரைப் பூச்சும் பூசத்தொடங்கினர். கடவுள் பெயரால் உயிர்க்கொலை செய்வதை திராவிடர் வெறுத்தனர். அத னால் அந்த சடங்கை ஆரியர் தம் மதத்திலிருந்து நீக்கினர். திராவிடத் தெய்வங்களான திருமால் சிவன் முருகன் இவைகளை தம் மதக் கடவுள்களாக ஏற்றுக் கொண்டு சம்மந்தி உறவுகொண்டாடத் தொடங்கினர். சிவனுக்கும் திருமாலுக்கும் தம் வடநாட்டிலே பெண்டாட்டிகளைத் தோற்றுவித்தனர்.

ஆர்ப்பாட்ட வெறியாட்டுகளை விடுத்துத் திராவிடர் விரும்பும் அன்பு அல்லது பக்தி மார்க்கத்தையும் மேற் கொண்டனர். உண்மையைக் கூறுமிடத்து திராவிட மதத்தி லிருந்த நல்ல கொள்கைகளை எல்லாம் திருடி தம் மதத்தில் புகுத்திக் கொண்டு உங்கள் மதம் எங்கள் மதத்தில் அடங்கியிருக்கிறதெனக் கூறி ஏமாற்றி தன் வசப்படுத்தினர் வஞ்சக தந்திரத்தில் மிகுந்த ஆரியப் புரோகிதர்கள். மேலும் திராவிட பாஷைகளையும் கற்றனர்; திராவிடப் பெண்களை யும் கொண்டு திராவிட பூமியில் ஆரியப் பயிர்களை விதைக்கலாயினர். ஆரிய பூமியில் திராவிட விதைகளை நட்டால் எங்கு திராவிடப் பயிர் பெருகிவிடுமோ என்று பயந்து, திராவிடர் ஆரியப் பெண்களைத் தீண்டினாலும் தீண்டின திராவிடர் கொலை செய்யப்படவேண்டுமென மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளையும் தோற்றுவித்தனர். தப்பித்தவறி ஆரிய நிலத்தில் (பெண்) திராவிடமுளை முளைக்க ஆரம்பித்திருப்பதாகக் கண்டால் அந்த ஆரிய நிலமும் தீயிட்டுச் சாம்பலாக்கப்படும். ராவணப் பெரியாரிட மிருந்து மீட்கப் பட்ட சீதையை நெருப்பில் புகச்சொன்னதும் இக்கொள்கையை வலியுறுத்துகிறது.

மேற்காட்டிய வரலாற்றால் திராவிட நாட்டில் அரிய மதமான வைதீகப்பிராமணமதமெனும் இந்துமதம் (இந்து என்ற ஆரிய மொழிக்கு திருடர் என்று யாரோ பொருள் கற்பித்திருப்பதாக படித்த ஞாபகம்) எப்படி முக்காடிட்டுப் புகுந்து ஆதிக்கம் செலுத்தலாயிற்று; எப்படி திராவிடரின் இயற்கைச் சமயம் உருவழிந்தது என்பது தெள்ளத் தெளிவு படுகிறது.

படிக்கக்கூடாத பாஷை

ஆரிய மதம், குடியையும், உயிர்க்கொலையையும் அத் துடன் விபசார விருத்தியையும் கொள்கைகளாகக் கொண் டிருந்த தென்பதற்கு இதிகாச புராணங்களே சாட்சிகளாகும். இந்தக் கொடுமைகளை திராவிட மக்கள் விரும்பினாரில்லை. இந்தக் கொள்கைகளை விடவும் ஆரியர் மனம் இடம் தரவில்லை. அதனால் மற்றொரு தந்திரம் செய்தனர். இந்த இருபிறப்பு மதக்கொள்கைகளை எல்லாம் சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டனர். அப்பாசைக்கும் தெய்வீகத்தைக் கற்பித்தனர்.

திராவிடர் படிக்கக்கூடாதென்றும் தெய்வச்சீற்ற பயங் காட்டி தடைப்படுத்தினர். தப்பித்தவறி ஆரிய வேத பாராய ணத்தை திராவிடர் காதால் கேட்டுவிட்டாலும், கேட்ட ரகசி யத்தை வெளியில் சொல்ல முடியாமல் நாக்கைத் துண் டித்தோ மற்றும் பலவகை சித்திரவதைத் தண்டனைகளுக் குட்படுத்தியோ வந்தனர். இதற்கு சட்டங்களும் வகுத்தனர். அரசர்களையும் தமது கைப்பாவையாக்கிக் கொண்டனர்.

தற்காலப் பெரியார் தடிப்புரை

இவ்வாறாக திராவிட சமய நெறிகளை அழித்து, ஆரிய மாக்கினர். ஆரியப் பிராமணர் இந்தப் பிராமணர்களின் சந்ததியாராகக் கொள்ளப்படும் தற்கால பிராமணப் பெரி யார்கள் சிலர் தாங்கள் ஆரியர்கள் என்று கூறிக் கொள்வ தில் பெருமை கொள்ளுவதுடன் திராவிட மதம் என்ப தில்லை. ஆரிய மதத்தைத்தான் திராவிடர் - சூத்திரர் அனுஷ்டிக்கச் செய்யப்பட்டனர். திராவிடர் முன்னர் மதமற்ற காட்டுமிராண்டிகனாக (குரங்குகளென்றும் கரடிக ளென்றும் ராட்சசரென்றும் ராமாயணம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது) இருந்தனர். நாங்கள் தெய்வ அருள் கொடுத்து ஆரிய தேஜஸ் கொடுத்தோம் என்று வாதமிடு கின்றனர்.

ஆனால் சில ஆரியப் பெரியோர்கள் (சுயநலத்தாலோ பரநலத்தாலோ அறியோம்) "நானும் ஒரு தமிழன் தான்" என்று தமிழ் கூட்டங்களில் கூறிக்கொள்ளுகின்றனர். மாஜி பிரதம மந்திரியான தோழர் ஆச்சாரியசாமிகளும் ஒரு முறை இந்த அருள்பாட்டை திருவாய் மலர்ந்தருளினா ரென்றும் பத்திரிகை வாயிலாக அறியக் கிடைக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றதாக நினைவில்படுகிறது. ஓர்ஷிப்புல் மேயர் சாஸ்திரிகளும் ஒரு தடவை தமது அரசியல் கனவே கவேதோப்பாக்யான பாராயணத்திலும் இந்தக்கருத்தைப் பிரதி பிம்பிக்கத் திருவுள்ளம் பற்றியதாகவும் கூறக்கேள்வி. தோழர் ஆச்சாரியார் ஆரியச்சம்பந்தியும் தமது திராவிட சம்பந்தியின் கொள்கைகளை வலியறுத்தி மேற்கைச்சாத் திடுவது போல் "ஹிந்துக்கள் எல்லோரும் இந்துக்கள் தான். ஆனால் மேல் கீழ்ச்சாதி என்ற வருணாச்சிரம தர்ம பாகு பாடுகள் தெய்வப் பிறப்பு தான்" என்று மகாத்மியம்படிக்கிறார்.

இந்தப் பெரியார்களின் கூற்று எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் கலப்பற்ற உண்மை என்பதனை பகுத்தறி வாளர் தம் ஆராய்ச்சித் தீர்ப்புக்கு விட்டு விடுகிறோம்.

- 'விடுதலை', 19.4.1940

- விடுதலை நாளேடு, 17.2.20