கார்த்திகை தீபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திகை தீபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 நவம்பர், 2018

“கார்த்திகைத் தீபம்”

கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை “சுப்பிரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள்.

இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதேடு, காடு, மேடு, குப்பை கூளங்களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய் செலவு, சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூட நம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்கவழக்கங்களும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!

இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன.

முதலாவது,

ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவிமார் களைப் பார்த்து மோகங் கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங்கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந் ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுபவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!

அடுத்து, இதன் மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.

இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

அடுத்த கதை.

ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழு முதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கம் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடி பிடிச்சண்டை ஆகி விட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வரு கின்றார்களே அவர் தான் பெரியவர்’ என்றானாம்.

உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.

பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணாமல் மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், தாழம்பூவே எங்கிருந்து எவ்வளவு காலமாய் வருகின்றாய் என்று கேட்கவும் நான் பரம சிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டு இருக்கிறேன் என்றதாம். உடனே பிரம்மன். நான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம் .

அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக்கண்ட சிவன்கோபங் கொண்டு பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது’ என்றும் சாபமிட்டாராம்.

உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து , மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கை தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும் என்று கேட்க அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம் .

இதுதான் திருவண்ணாமலைப் புராண மாகிய அரு ணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப்பண்டிகையாகும்.

இவ்வாறு முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப் படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா?

மேலும் நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண்காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத்துரோகி, மதத் துரோகி வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றார்கள். சிறி தாவது பொறுமைகொண்டு, நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.”

தந்தைபெரியார்

நூல்: “இந்துமதப் பண்டிகைகள்”

பக்கம் 33 - 35

இந்த உண்மையை உணர்ந்த பிறகும் கார்த்திகை தீபம் என்ற பண்டிகையை கொண்டாடுவது மானக்கேடு அல்லவா? அருள் கூர்ந்து முட்டாள்தனமான மூடப் பண்டிகைகள் எதையும் கொண்டாடாதீர்கள்.

-  விடுதலை நாளேடு, 16.11.18

புதன், 14 நவம்பர், 2018

அண்ணாமலைக்கு "அரோகரா!

*அண்ணாமலைக்கு "அரோகரா!"*

*--மயிலாடன் --*

திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோயிலில் மகா கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்றமும் நடைபெற்று விட்டது.

மகா தீபத்தன்று 2668 அடி உயரமுள்ள மலைமீது தீபம் ஏற்றப்படுகின்றது. இதற்காகச் செலவழிக்கப்படும் நெய்யின் அளவு என்ன தெரியுமா? 3500 கிலோ, பயன்படுத்தப்படும் காடாத் துணி 11 ஆயிரம் மீட்டராம்.

இந்தக் கார்த்திகைத் தீப விழாவுக்குச் சொல்லப்படும் புராணக் கதை ஆபாசமானது, கடவுள் பொய் சொன்னதாகக் கூறப்படுவது!

இந்து மத மும்மூர்த்தி கடவுளுக்குள் யார் பெரியவர் என்ற போட்டா போட்டி - அதற்கொரு  பரிட்சையை வைத்தாராம் சிவன்!  ஜோதி  வடிவத்தில் பூமிக்கும் மண்ணுக் குமாக ஓங்கி நின்றாராம். யார் தனது முடி அல்லது பாதத்தை முதலில் கண்டு வருகிறார்களோ - அவர் தான் சக்தி வாய்ந்தவர் என்று பரிட்சையை வைத்தாராம் சிவன்.

சிவனின் அடியைப் பார்த்து வருவதாக விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்துப் பூமியை தோண்டிக் கொண்டு சென்றாராம். பிர்மாவோ கருடன் வாகனத்தில் முடியைக் காணப் புறப்பட்டாராம். அப்பொழுது தாழம்பூ ஒன்று வானிலிருந்து வந்து கொண்டு இருந்ததாம். அப்பொழுது பிர்மாவுக்கு ஒரு பொறி தட்டியது. "தாழம் பூவே, தாழம் பூவே! நீ சிவனின் முடி யிலிருந்து தானே வருகிறாய்; நான் சிவனின் முடியைக் கண்ட தாக எனக்காகச் சாட்சியம் சொல்லு" என்று பிர்மா கெஞ்சிக் கூத்தாடிட தாழம்பூ மனம் இளகிப் பொய்ச் சாட்சி சொன் னதாம். உண்மையை உணர்ந்த சிவன் பிர்மாவைப் பார்த்து உனக்கு எங்கும் கோயில் வைத் துப் பூஜை செய்யக் கூடாது என்றும், பொய் சொன்ன தாழம் பூவைப் பூஜைக்குப் பயன் படுத்தக் கூடாது என்றும் சாபம் விட்டாராம்.

அந்த நாளில்தான் ஜோதி உருவமாக நின்ற சிவனுக்கு விழா, எடுக்கப்படுகிறதாம். இந்தக் கதையில் உள்ள கற்பனை - ஆபாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

இதற்காக 3500 கிலோ நெய்யை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டுமா? அமெரிக்காவைச் சேர்ந்த உணவுத் திட்ட ஆராய்ச்சி நிறுவனம் 119 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்ன கூறுகிறது? குழந்தைகள் ஊட்டச் சத்து உணவுக் குறைவு என்ற வரிசையில் இந்தியா நூறாம் இடத்தில் உள்ளதாம்...! இதன் காரணமாக 5 முதல் 20 வயது குழந்தைகளில் 35 விழுக்காட்டினர் வயதுக்கேற்ற உயரம் இல்லாமலும், எடை இல்லாம லும் அவதிப்படுகின்றனர்.

பெண்கள் ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றனர் இப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஒரு குழவிக்கல்லுக்காக (சாமிக்காக) மூடத்தன பண்டிகையன்று 3500 கிலோ நெய் எரித்துப் பாழாக் கப்பட வேண்டுமா? மனித நேயம் உள்ளோர் சிந்திக்கட்டும். மதப் பண்டிகைகள் மனிதகுல தாழ்ச்சிக்கே தான்  என்பது விளங்கவில்லையா?

*நன்றி : "விடுதலை" நாளிதழ் 25-11-2017*