புதன், 28 மார்ச், 2018

“இந்து மதத்தை ஒழித்துவிடுவதே மேல்” சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம்

01.04.1928- குடிஅரசிலிருந்து...

இந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் சென்னை பிரதிநிதிகளான அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும் சட்ட சபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்து கிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும்போது இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதனதர்மி களின் பிரதிநிதியாகவே, தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக்கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசும் போது அதற்குப் பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரன் சரண்முன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம் மசோதவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம் மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோ தாவை எதிர்ப்பதன் இரகசியம் எனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந்திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீ ஆச் சாரியார் போன்ற வர்களே காரணம் என்றும், இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையா யிருக்கு மானால் அதை ஒழித்து விடுவதே மேல் என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக் கின்றார் என்று கூறினாராம்.

இந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது தமிழ்நாடு பத்திரி கையோ அல்லது ஒரு ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் முன்ஷி ஈஸ்வரசரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது ஈஸ்வரசரணர் பிரச்சாரம் என்றோ தலையங்கம் கிளம்பி யிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீ ஈஸ்வர சரணர் நல்லகாலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியர் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

சர் பாத்ரோ ஆச்சாரியார்

சென்னை சட்டசபையில், பாலிய விவா கத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மா ளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில்

சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லுவோம். மனிதர்கள் அரசியலில் கரணம்போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்ப வைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல் கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான் மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு.

ஆனால் சமுக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கி யமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம். சர்பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர் உண்மையில் அவருக்கு மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற அபிப்பிராய மிருக்குமா னால் தேவஸ்தான சட்டம் செய்ததைப் பற்றியும், யூனிவர்சிடியில் செய்ததைப் பற்றியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மரியாதையாக பார்ப்பன ரல்லாதார் கட்சியை விட்டு வெளியில் போய்விடும்படியாக வேண்டிக்கொள்ளு கிறோம்.

ஸ்ரீ பாத்ரோ ஆச்சாரியாரைவிட ஸ்ரீவரத ராஜூலு அய்யங்காரே மேல் என்று ஜனங்கள் நினைக்கும் படி நடந்து கொண்டதற்கு நாம் மிகுதியும் பரிதாபப்படுகிறோம். தமிழ்நாடு பத்திரிகையின் புரட்டு

தமிழ்நாடு பத்திரிகை 6000 பிரதி வெளியாகின்றது என்று சூழ்ச்சி அறிக்கை வெளியானதைப் பற்றி நாம் முன்னமேயே அச் சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்த சர்க்கார் அதிகாரிகளையும் கண்டித்து எழுதியி ருந்தோம். இப்போது சர்க்காரார் இனி அம்மாதிரி நடந்து கொள்ளுவதில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

மேற்படி அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் தமிழ்நாடு தினசரிப் பத்திரிகை ஆரம்பிக்கவே இல்லை. வாரப்பத்திரிகை அவ்வளவு இருந்ததாக அவர்களே சொல் லுவதும் இல்லை.

ஆகவே இப்புரட்டு சர்க்காருக்கு தாராளமாய் வெளிப்படுத்தப்பட்டு விட்டதால் சர்க்கார் 23.03.1928இல் ஒரு அறிக்கை வெளியிட்டு அதிக ஜஸ்டிஸ் பத்திரிகை இந்த இரண்டு வருஷமாய் அதிகமாய்க் கொண்டு வருவதை ஒப்புக் கொண்டு இனிமேல் விவகாரத்திற்கு இடம் கொடுக்கத் தக்கதான பத்திரிகைகளின் எண்ணிக்கைகளைப் பற்றி வெளிப் படுத்துவதில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.

இதிலிருந்து ஸ்ரீ வரதராஜுலு வின் சூழ்ச்சி நிஜமா அல்லது நாயக்கரின், கண்ணப்பரின் பொறாமை நிஜமா? என்பதை முடிவு செய்யும் வேலையை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம்.

-  விடுதலை நாளேடு, 24.3.18

வெள்ளி, 23 மார்ச், 2018

பள்ளிக்கூடத்தில் புராண பாடம் - சித்திரபுத்திரன் -

08.04.1928 - குடிஅரசிலிருந்து....



உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப் போம்.

பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.

உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்ட தில்லையா மடையா?

பையன் : நான் கேட்டதில்லை சார். ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத் திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டிருக் கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணுவின் படுக்கை என்றும், அந்த விஷ்ணு இராம அவதாரம் எடுத்தபோது இந்த ஆதிசேஷன் லட்சுமணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக் கின்றது.

உபாத்தியாயர் : ஆமாம் அந்த ஆதி சேஷன் தான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா?

பையன் : இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்...

உபாத்தியாயர் : என்ன சந்தேகம்? சீக்கிரம் சொல்.

பையன் : பூமியைத் தாங்கிக் கொண்டிருக் கின்ற, ஆதிசேஷன் விஷ்ணுவுக்கு படுக்கை யாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் தாங்குவார்கள்? தவிர லட்சுமணனாக உலகத் திற்கு வந்து விட்டபோது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார்.

உபாத்தியார்: நீ என்ன குடிஅரசு படிக் கிறாயோ! அது தான் அதிகப் பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய். பொறு! உனக்கு இந்த பரீட்சையில் சைபர் போடுகின்றேன்.
பையன் : இல்லவே இல்ல சார், நான் சத்தியமாய் குடி அரசைப் படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார்.

உபாத்தியார் : ஆதிசேஷன் தெய்வத் தன்மை பொருந்தியவன்.  ஒரே காலத்தில் பல வேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான். விஷ் ணுவுக்கு படுக்கையாகவுமிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத்திற்குப் போகும் போது லட்சுமணனாக கூடவும் போவான். தெரியுமா?

பையன் : இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அது மாத்திரம் சொல்லிப் போங்கள் இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.

உபாத்தியார் : என்ன சொல் பார்ப்போம்.

பையன் : பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் சரி, அதை நான் ஒப்புக் கொள்ளு கின்றேன். அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது சார். எனக்கு நிஜமாலும் தெரியவில்லை சார்.

உபாத்தியார் : என்ன சங்கதி சொல்லு; நான் கோபிக்கிறதில்லை.

பையன் மறுபடியும் : பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் சார் (தலையை சொறிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்கறாங்க சார்? அவர் எதன் மேலிருந்து கொண்டு தாங்கறாங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்லை சார்.

உபாத்தியார் : போக்கிரிப்பயலே நீ குடி அரசு படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதி யாச்சுது. பொறு, பொறு, பேசிக்கொள்கிறேன். வாயை மூடிக்கொண்டு போய் உட்கார், அதிகப்பிரசிங்கிப் பயலே!

பையன் பேசாமல் உட்கார்ந்து கொண்டான். உபாத்தியாயரும் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சைக்கு அவனை அனுப்பவில்லை. இதைப் பற்றி  கேள்வி கேட்பாரும் இல்லை. பள்ளிக்கூட மேனேஜரையும் வாத்தியார் சரிப்படுத்திக் கொண்டார்.

- விடுதலை நாளேடு, 23.3.18

புதன், 21 மார்ச், 2018

கோயில் சொத்துக்களை கொள்ளையிடும் ஆரிய பார்ப்பனர்கள்!

"கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று இந்து முன்னணி கோரி வருகிறது.
மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப் பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற் போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட் டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

'தேசியத் தலைவர்' எனப் பெத்த பேர் வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம் பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக் கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதி காரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப் பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசு வரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், 'இது கபாலீசுவரர் கோயில் சொத்து' என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலை யத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக் காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவது தான். 'வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்‘ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.

சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சி தர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.

தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்து களும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந் தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.

கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக் கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்),  உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி என திட்டித் தீர்த்தன.

''1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்த வேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள். என்றும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ் தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு  ஜில்லாவில்  ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள் தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப் படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும் போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத் துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அற நிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடை மையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ கத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.
தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை  அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன் னணி முதலான அமைப்புகள். மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம் என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் சர்ச்சைக்குரிய இடம் ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்.

- நன்றி: 'புதிய ஜனநாயகம்‘, பிப்ரவரி, 2012

- விடுதலை நாளேடு, 21.3.18

புதன், 14 மார்ச், 2018

பங்குனி உத்திர... முருகனுக்கு... அரோகரா!


இரா.கண்ணிமை

 

பங்குனி உத்திரம் - ஆண்டுதோறும் பங்குனியில் வருகிறது. கோவணத்தோடு நிற்கும் பழனியாண்டிக்கு - பாலாபிசேகங்கள் - பலபல மொட்டை வேண்டுதல்கள். இந்த பழனியப்பன் என்ற சுப்பிரமணிய முருகனின் கதை இதோ:

சிவனின் இரண்டாம் மகன் சுப்பிரமணியன், சுப்பிரமணியன் யுத்த தேவனாம். இவனின் மறு பெயர்கள்:

முருகன் - அரண்மகன் - அறுமீன்காதலன் - ஆறுமுகன் - ஆசான் - ஆண்டலைக் கொடியோன் - கங்கை மைந்தன் - கடம்பன் - கந்தன் - கலையுணர் புதல்வன் - காங்கேயன் - கார்த்திகேயன் - குகன் - குழகன் - குறிஞ்சிவேந்தன் - குன்றெறித்தோன் - சிலம்பன் - சூர்ப்பகைவன் - செட்டி - செவ்வேள் - சேந்தன் - சேய் - சேவற்கொடியோன் - தாருகற் சேற்றோன் - தாருகாதி - தெய்வானைக்காந்தன் - வள்ளி மணாளன் - வாகுலேயன் - விசாகன் - வேலன் - வேலிறைவன் - வேல் - என்பவனவாம். இத்தனை புனைப்பெயர்கள் எதற்கோ தெரியவில்லை.

சுப்பிரமணிய விக்கிரகம் பன்னிரெண்டு கையுள்ள, மஞ்சள் நிறமுள்ளதாய் செய்யப்பட்டிருக்கும். சுப்பிர மணியனின் இரு மனைவிகளையும் மயில் வாகனத்தின் மேல் அதன் இரு பக்கத்திலும் இருக்கவைத்து வணங்கு கிறார்கள். சுப்பிரமணியனின் முக்கிய தலங்கள்:- திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், திருத்தணி, திருச்செந்தூர், சோலைமலை, பழனி, கதிர்காமம் (இலங்கைத்தீவில்) முதலியனவாம்.

சூரபதுமன் எனும் ஓர் அசுரனை அழிப்பதற்காய் சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து சுப்பிரமணியனை உண்டாக்கினாராம். சுப்பிரமணியன் அவ்வசுரனுடன் பத்து நாள்கள் போரிட்டும் முடியாததால் - அவனைத் தன் வேலாயுதத்தால் தந்திரமாக இரண்டாய்த் துண்டித்து ஒன்றை மயிலாகவும், மற்றதைச் சேவலாகவும் ஆக்கி, மயிலை தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொண்டானாம்.

சுப்பிரமணியனுக்கு தெய்வானை என்ற மனைவி யும், வள்ளியென்ற வைப்பாட்டியும் உண்டு. திருத் தணியில் சுப்பிரமணியன் தன் இரு மனைவிகளோடும் இராத்திரி தோறும் படுத்திருப்பதாக - தினமும்காலையில் இவர்களை வந்து எழுப்ப கதவுகளைத் திறந்து - உள்ளே பூசை செய்ய வரும் பூசாரி, ஆண்டிகள், தட்டுமுட்டு சாமான்கள், நாடகக்குழுவுடன் கோயில் வாசற்படியில் நின்று அரோகரா போடுவார்களாம்.

இதுபற்றிய ஒரு விருத்தம்

எண்ணெய் வரவே வாசமெலு மிச்சம்

பழச்சாறிள நீரு முக்கனியுமே

இருக்குமொரு சாறுதேன் சர்க்கரைப் பால்

தயிரிடைக் கிடை திருமஞ்சனத்

திண்ணிறைய வேதியர், புண்ணிகைத்

தேருசெய் பஞ்சகவியஞ்

செய்யசெயன மறையோர்கள் கொடுவந்து

நிற்கிறார்தேவனே பள்ளியுணராய்த்

திருத்தணியில் வாழ்முருக தெய்வாணை

வள்ளிதன் தேவனே பள்ளியுனராய்!

சுப்பிரமணியன் இரு மனைவிகளுடன் இரவில் நித்திரை செய்வதாயும், தினந்தோறும் காலையில் பூசாரிகள் எழுப்பி எண்ணெய், மலர்கள், கரும்புசாறு, பழச்சாறு, இளநீர், தேன், பால், தயிர் முதலான பொருள்களை உண்ணக் கொடுக்கும் வழக்கம் திருத்தணிக் கோயிலில் உண்டாம்.

சுப்பிரமணியனுக்கு தெய்வானை எனும் மனைவி யிருக்க குறப்பெண்ணான வள்ளியின் அழகைப்பற்றி அறிந்து அவளைச் சேர ஆசை கொண்டு பல தந்திரங்கள் செய்தும் அவள் இனங்காததால் தன் அண்ணன் பிள்ளையார் உதவியால் யானை உருவாய் மாறி வள்ளியைத் துரத்தவே வள்ளி ஓடி சுப்பிரமணியனைச் சரண் அடைந்தாள். பிறகு சுப்பிரமணியன் வள்ளியிடம் கூடி தன் இச்சையை நிறைவேற்றியதாய் கதையுண்டு. கந்தபுராணம் வள்ளியம்மை திருக்கலியாணப்படலம்: 62, 64, 65, 67, 68, 69, 71, 72, 84, 87, 104, 107, 110, 111, 112, 113, 114, 115, 132, 133, 136, 137, 143, 160, 161, 162, 163, 164, 234ஆம் பாடல்களிலும் அறிந்து கொள்ளலாம்.

போகமுனிவர் சுப்பிரமணியர் வரலாறு கூறல்:

போகர் ஏழாயிரம் 4ஆம் காண்டம் பக்கம் 576

பிழைக்கவே வடிவேலர் தம்மைத் தானும்

பேரானயிவ் வுலகில் தேவனெ ன்றும்

வழக்கமுடன் யிதிகாசங்கள் சாஸ்தி ரங்கள்

வளமாகப் பாடிவைத்தார் வினயம் யாவும்

முழக்கமுடன் வடிவேலர் முருகன் தானும்

முற்பிறப்பில் பஞ்ச தக்கியனாக

தழக்கமுடன் பிறந்ததாய் சாத்தி ரங்கள்

தாரணியில் கவிவாணர் கட்டி னாரே!

பாடல் 590

இருந்திட்டார் வள்ளிதனை சிறையெ டுத்து

யெழிலாக அவனிதனில் இருந்தா ரென்றும்

பொருந்தவே உலகுதனில் சுவாமி யாக

பொங்கமுடன் வீற்றிருந்தார் சதாகா லந்தான்

வருந்தியே கோடிமனு பேர்க ளெல்லாம்

வையகத்தில் மகாதேவ னென்று சொல்லி

திருந்தியே சமஸ்கரித்து தலைகு னிந்து

திகழுடனே கோடியுக மிருகந் தாரே!

பாடல் 591

தாமான சாத்திரங்கள் சொன்ன தெல்லாம்

தகைமையுடன் பொய்யாச்சு பொன்னு லோகம்

நாமேதான் சொன்னபடி வடிவேலர் தானும்

நாட்டிலே யிருந்தாரோ யில்லை கண்டீர்!

வேமேதான் பூலோகம் தன்னை விட்டு

விடுபட்டு தேகமது மண்ணாய் போச்சு

போமேதான் மண்கூறு மண்ணாய் போச்சு

பூவுலகில் இருந்தாராம் காணோம் பாரே!

போகர் ஏழாயிரம் 6ஆம் காண்டம் பக்கம் 900

பாடல் 622

செப்பலாஞ் சுப்பிரமணியர் என்பார் பாரு

சிறப்பான மனிதரல்லால் வேறொன் றில்லை

ஒப்புடன் நீ நினைத்த சுப்பிர மணியன்

ஓகோ!கோ நாதாந்தக் கடவு ளாச்சு,

எப்படியும் நாதாந்தக் கடவு ளுக்கு

எழிலானஅவதார புருஷ னென்றும்

எழிலான சாத்திரங்கள் சொல்ல லாச்சே!

பாடல் 623

சொல்லவே யவரவர்கள்: தக்க நேர்மை

சுந்தரனே தன்மனத்தி லயிங்கிலங் கொண்டு

வெல்லவே பலவிதமாம் தெய்வம் போலே

விசாரணைக ளில்லாமல் பேதை நெஞ்சாய்

புல்லவே கவிவாணர் கட்டும் வாக்கியம்

புகழாகப் பலபுலவாம் நாமம் தன்னை

சொல்லவே நற்கடவுள் என்று கூறி

செம்மலுடன் மதிகெட்டு துதிப்பார் பாரே!

ஓர்வெண்பா

தம்பியோ பெண்திருடித் தாயாருடன் பிறந்த

வம்பனோ நெய்திருடி வாமணன் - அம்புவியில்

மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே

கோத்தி ரத்திலுள்ள குணம்

போக முனிவர் 4ஆம், 6ஆம் காண்டத்திலுள்ள பாடலால் மனிதர் தங்கள் அறியாமையால் சுப்பிரமணி யரை ஓர் சிருஷ்டி கர்த்தாவுக்குச் சமத்துவமான கடவு ளாய் வணங்கி வழிபடுகிறார்களேயழிய அவன் கடவுள் அவதாரமும் அல்ல - கடவுளுமல்ல - மனைவி - கூத்திகளுடன் வாழ்ந்த மனிதனேயாவான். சாத்திர புராணங்களாலும் - கட்டுக்கதைகளாலும் - கடவுளாய் மதிக்கப்பட்டான். வேறொன்றில்லை - என்றெல்லாம் தெளிவாகக் கூறியுள்ளார் போக முனிவர்.

கந்தனுக்குக்காவடி தூக்கும் பக்தர்களே! - மேலே சொல்லப்பட்டவை எங்கள் சொந்த புராணமல்ல - உங்கள் கந்தபுராணத்தில் சொல்லி வைத்தவைகள்தாம். போக முனிவர் தாகத்தோடு பாடிவைத்தவைகள் தாம். உங்கள் மனம் புண்படுகிறதா? படட்டும் பங்குனி உத்திர முருகனுக்கு அரோகரா போடுங்கள்! போட்டுக் கொண்டே இருங்கள்.

- விடுதலை நாளேடு, 13.3.18

.