வியாழன், 30 ஜூன், 2016

பசு குறித்த கட்டுக்கதை

விஞ்ஞானம் எங்கே -அஞ்ஞானம் எங்கே?



பசு குறித்த கட்டுக்கதை

பசு மாட்டின் உடலில் உள்ள உறுப்புகள், அமைப்புகள்குறித்து அறிவியல் ரீதியில் எவரும் சொல்லிவிட லாம். தலைப்பகுதி, கண், காது, வாய், கொம்பு, கழுத்து, வயிறு, உடல் உள் பகுதி, மேல்பகுதி, கால்கள், குளம்புகள், வால் மற்றும் பால் கறக்கும் மடி எனப் பலவாறாக எவரும் சொல்லிவிடலாம்.
ஆனால் இல்லாத இந்த மதத்தில் தான் பசு மாட்டின் உடலில் கண் ணுக்கே புலப்படாத வகையில் கடவு ளர்கள் பலரும் வாடகையே தராமல் பசு மாட்டின் உடலில் குடியிருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சிரம்(தலை) - சிவபெருமான், நெற்றி-சிவசக்தி, வலது கொம்பு-கங்கை, இடது கொம்பு - யமுனை, கொம்புகளின் நுனி-காவிரி,கோதாவரி, முதலிய புண்ணிய நதிகள், சராசை உயிர் வர்க்கங்கள், கொம்பின் அடியில்- பிரம்மன், திருமால், மூக்கின் நுனி- குமரக்கடவுள், மூக்கின் உள்ளே- விதயாதரர்கள், இருகாதுகளின் நடுவில்- அஸ்வினிதேவர், இருகண்கள்- சூரியர், சந்திரர், வாய்-சர்ப்பாசுரர்கள், பற்கள்-வாயுதேவர், நாக்கு-வருணதேவர், நெஞ்சு-கலைமகள், கழுத்து-இந்திரன், மணித்தலம்- எமனும் இயக்கங்களும், உதடு-உதய அஸ்த்தமன சந்தி தேவதை கள், முரிப்பு-(கொண்டை) - பன்னிரு ஆதித்யர்கள்(சூரியர்கள்), மார்பு-சாத்திய தேவர்கள், வயிறு - பூமிதேவி, கால்கள்- அனிலன் என்னும் வாயு தேவன், முழந் தாள்- மருத்துதேவர், குளம்பு-தேவர்கள், குளம்பின் நுனி-நாகர்கள், குளம்பின் நடுவில்-கந்தர்வர்கள், குளம்பின் மேல்பகுதி-அரம்பையர், முதுகு-உருத்திரர், யோனி-சப்தமாதர்(ஏழு கன்னியர்), குதம்-இலட்சுமி, முன்கால்-பிரம்மா, பின்கால்-உருத்திரன் தன் பரிவாரங்களுடன், பால்மடி-ஏழு சமுத்திரங்கள், சந்திகள்-அஷ்ட வசுக்கள், அரைப்பரப்பில்-பிதிர் தேவதை, வால்முடி-ஆத்திகன், உரோமம்- மகாமுனிவர்கள், எல்லா அவயவங்கள்- கற்புடைய மங்கையர், சிறுநீர்-ஆகாய கங்கை, சாணம்-யமுனை, சடதாக்கினி-காருக பத்தியம், வாயில் - சர்ப்பரசர்கள், இதயம்- ஆகவணியம், முகம்- தட்சரைக் கினியம்,  எலும்பு, சுக்கிலம்-யாகத் தொழில் அனைத்தும், பசுக்களின் மடிக் காம்புகள் நான்கும் முறையே சுவா ஹாரம், சுவதாஹாரம். வஷ்டஹாரம், ஷந்தாஹாரம் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு பசுவின் உடலில் பலரும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது
-விடுதலை ஞா.ம,2.1.16.

செவ்வாய், 28 ஜூன், 2016

வெண்ணீறு அணிந்தது என்ன? என்ன? என்ன?


நாடகக்காரன் ராஜாவேசம் போட்டுக் கொண்டு
நடிப்பது போல், இந்த மடையன்களும் சாம்பல் அடித்துக் கொண்டு, கொட்டை கட்டிக் கொண்டு
பக்தன் போல வேசம் போடுகிறான். - ஈ.வெ.ராமசாமி
நேசமுற்று பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றிமை திலகம் இட்டுமே
மோசம், பொய், புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி களம் புரண்ட வெண்ணீறாகும் மேனியே.
-சிவவாக்கியர்
நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி
ஓமங்கள், தர்ப்பணம், செப மந்திர யோகநிலை,
நாமங்கள், சந்தனம், வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் கற்பனையே!
- பட்டினத்தார்
அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப்பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கைப் போல் தோன்றலும், அறியா
மழலையர் கையினுட் காவடி எடுத்து
மலையின் மேல் ஏற்றலும் இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகள் கண்டிரங்குமென் நெஞ்சே.
- தடங்கண்சித்தர்
கோவணாண்டி கோலத்திலோ, சடைமுடியுடனோ, அழுக்கேறிய உடம்புடனோ, பட்டினியாக இருத்தலோ, மண்மீது புரள்தலோ, மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருத்தலோ ஆசையை வெல்லாத ஒருவனை புனிதனாக்கி விட முடியாது.
- புத்தர்
தொகுப்பு: சி.நடராசன்
-விடுதலை,29.8.14

நிர்வாணப் பெண்கள்!


ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில்  மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.
ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.
என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.
மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?
-விடுதலை,29.8.14

மத விபச்சாரம்



ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம். இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் நியோகா என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.
பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளைகளைப் பெற்றாள்.
-விடுதலை,14.3.14

பக்தி ஏன் வராது?


இடங்கொண்டு விம்மி 
யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை
மலைகொண் டிறைவர் 
வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை
நலங்கொண்ட நாயகி 
நல்லரவின் படங்கொண்ட வல்குல் 
பனிமொழி வேதப் புரியிறையே!
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,
பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!
-விடுதலை,14.3.14

சனி, 18 ஜூன், 2016

ஆரிய மத வண்டவாளம்: சைவ, வைணவ, ஆதாரங்கள் சொல்லுவது (சித்திரபுத்திரன்)



06-11-1943, குடிஅரசிலிருந்து...
இத்தலைப்பில் சென்ற வாரம் சைவ வைணவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு இழிவுபடுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதைப் பற்றி இராமாயணத்தில் உள்ள படியும் காஞ்சிப் புராணத்தில் உள்ள படியும் ஆதாரங்களோடு எழு தப்பட்டிருந்ததை வாசகர்கள் படித்தறிந்திருக்கக் கூடும்.
இந்த வாரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான சாஸ்திர ஆதாரமும், பதினெட்டுப் புராணங்களில் அதி முக்கியமானதுமான பாகவதத்தில் இருந்து சிவனை வைணவர்கள் ஆபாசமாய் இழிவுபடுத்தியிருப்பதற்கு மற்றொரு சேதி எடுத்துக் காட்டப்படுகிறது. அதாவது ஸ்ரீமத் பாகவதம் பண்டிதர் இஞ்சிக்கொல்லை, ஆர். சிவராம சாஸ்திரியார் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. 1912 வருஷம் சென்னை புரோகரிசிவ் பிரசில் அச்சடிக்கப் பட்டதுமான பாகவத தமிழ் வசனம் என்னும் புத்தகத்தில் 8-வது ஸ்கந்தம் 12வது அத்தியாயம் 846,  847, 848, 849-வது பக்கங்களில் பரமசிவன் விஷ்ணுவின் மோகினி ரூபத்தை பார்க்க விரும்பியது என்ற தலைப்பில் இருப்பதாகும். சற்று தயவு செய்து இதையும் படித்துப் பாருங்கள்.
என்னவென்றால், சிறீ மகாவிஷ்ணு மோகினி வேஷங் கொண்டு அசுரர்களை மோகிக்கும்படி செய்து ஏமாற்றி தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார் என்கின்ற சங்கதியை பரமசிவன் கேள்விப்பட்டு, கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் விஷ்ணுவிடம் வந்து, விஷ்ணுவை வணங்கி ஜகத்காரணரே, தேவ தேவரே, நீரே பூரணர், நீரே நித்தியர், உம்மைவிட வேறு கடவுளே இல்லாதவரே (என்றும் இன்னும் பலவாறாகவும் சொல்லி பிரார்த்தித்ததாக இரண்டு பக்கம் எழுதப்பட்டிருக்கிறது) என்று பிரார்த்தித்து விட்டு, தேவாதிதேவரே தங்களுடைய எல்லா அவதாரத் தையும் தெரிசித்தேன். மோகினி வேஷத்தை மாத்திரம் பார்க்கவில்லை. அதனைப் பார்க்க வந்தேன். காட்டி அருளவேண்டு மென்றார்.
அதனைக் கேட்ட மகா விஷ்ணு வானவர், அது அசுரர் களை ஏமாற்ற எடுத்த வேஷமானதால்,அதைக் காண்ப வர்களை மோகிக்கச் செய்யும், மன்மதனை அதிகப்படுத்தும், சாமிகள்தான் அதைத் தோத்திரஞ் செய்வார்கள் என்று சொல்லி மறைந்து, ஒரு நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருக்கும் ஒரு அழகிய பெண்ணாகத் தோன்றினார்.
சிவனும் பார்வதியும் நான்கு புறமும் விஷ்ணுவைத் தேடிப் பார்த்து காணாமையால், நந்தவனத்தைப் பார்க்க அதில் ஒரு பெண் வந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து சிவன் புத்தி கலங்கி, பார்வதியும் சிவகணங்களும் பக்கத்தில் இருப்பதைக்கூட நினைக்காமல் அவளை (மோகினியை) பார்த்தார். மோகினி வேஷம் போட்ட பெண், பந்தடிக்கும் கவனத்தில் தனது ஆடை. (சேலை)யை மெல்ல நழுவ விட்டுவிட்டாள். அதைப் பார்த்த பரமசிவனுக்கு காமம் அதிகரித்துவிட்டது. மன்மதன் தனது முழு சக்தியை யும் பிரயோகித்தான். பார்வதி பார்த்திருக்கப் பார்த்திருக்க வெட்கமில்லாமல் சிவன் மோகினியின் பின்சென்றான். மோகினி (விஷ்ணு) ஓடி ஒரு மரத்தில் மறைந்து கொண்டாள்.
சிவன் ஓடோடி அவளைப் பிடித்தான். அவள் திமிரிக்கொண்டு வேகமாக ஓடினாள். சிவன் வேகமாக ஓடி அவள் மயிரைப்பிடித்து இழுத்து, இருகைகளால் ஆலிங் கனம் செய்து கொண்டு பலவந்தம் செய்தான்.
அவள் அவிழ்ந்த தலை மயிருடன், ஆடையின்றியே சிவனை வஞ்சித்து நழுவிக் கொண்டு ஓட்டமெடுத்தாள்.
சிவன் புத்தி இழந்து, காமங் கொண்ட ஆண் யானையின், இந்திரியம் கீழே சிந்தப்படுவது போல் தனது இந்திரியத்தை நிலத்தில் சிந்த விட்டுக் கொண்டே பின் தொடர்ந்தார். சிவனுக்கு இந்திரியம், வெளிப்பட்டவுடன் மோகினி (விஷ்ணு) மறைந்து விட்டாள். சிவன் ஏமாந்தான்.
அந்த இந்திரியம் எங்குஎங்கு நிலத்தில் விழுந்ததோ அந்த இடம் எல்லாம் தங்கம் வெள்ளி விளையும் சுரங்க பூமியாக ஆகிவிட்டன.
அந்த இந்திரியம் எங்குஎங்கு காடுகளிலும், வனங் களிலும், மலைகளிலும், நதிகளிலும், குளங்களிலும் விழுந் ததோ அங்கெல்லாம் சிவனின் சான்னித்தியம் விளங்குகிறது. மகரிஷிகளும், தேவர்களும் அங்கு விளங்குகிறார்கள்.
சிவன் இம்மாதிரி தனது இந்திரியம் சிந்தப்பட்ட பின் புத்தி வந்து நான் விஷ்ணுவினால் ஏமாற்றப்பட்டு மூடனாக்கப்பட்டேனே என்று கருதியதுடன் மகாவிஷ்ணுவின் மகிமை தெரிந்தவரானதால் இது சகஜம்தான் என்று திருப்தியடைந்தார்.
என்பதாக இந்தப்படி பாகவத மூலத்தின் 8ஆவது ஸ்கந்தம் 12-ஆம் அத்தியாயம். 1 முதல் 37ஆவது சுலோகம் வரை உள்ள விஷயத்தின் மொழிபெயர்ப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது. இது இப்படியிருக்க இந்த பாகவத விஷயங்களைத் தமிழில் கவியாகப் பாடப்பட்ட பாகவத புராணம் என்னும் நூலிலும், மோகினி உருக்காட்டிய அத்தியாயம் பாட்டு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 வரை இன்னும் மோசமாகப் பாடப்பட்டிருக்கிறது.
அதாவது, விஷ்ணுவின் மோகினி அவதாரத்தைப் பார்க்க சிவன் பார்வதியுடன் கயிலையிலிருந்து வைகுண் டத்துக்குச் சென்று விஷ்ணுவை நமஸ்கரித்து எமது சுவாமியே என்று வணங்கி மோகினி வேஷத்தைக்காட்டு என்றான். விஷ்ணு பெண் உருவத்தை எடுத்தான்.
சிவனுக்கு காமம் ஏற்பட்டு பொலிகாளை எருது போல் பெண்ணின் கிட்டப்போனான்.
விஷ்ணு ஓட்டம் காட்டினான். சிவன் புத்திகலங்கி தன் இடுப்பில் உள்ள ஆடை (புலித் தோல்) அவிழ்ந்து கீழே விழுந்தும் கவனியாமல், ஓடி எட்டி பெண்ணின் மயிரைப் பிடிக்க முயன்றான். முடியவில்லை. மோகத்தால் சிவனின் இந்திரியம் கொட்டிப் போய்விட்டது.
பிறகு சிவனுக்குப் புத்திவந்து சுவாமி உன் பெருமையை அறியாமல் மோசம் போனேன் என்று விஷ்ணுவுக்கு நமஸ்காரம் செய்தான். உடனே விஷ்ணு சங்கு சக்கரத்துடன் காட்சியளித்து மறைந்தார்.
சிவன் கைலாயத்துக்குச் சென்று விஷ்ணுவின் பெருமையைப் பார்வதிக்குச் சொன்னான். என்று இருக்கிறது. சிவனும், விஷ்ணுவும் இடுப்பில் துணி இல்லாத ஆணும், பெண்ணுமாய் தெருவில் ஓடிய ஓட்டத்தைக் கண்ட வைகுண்டத்தில் உள்ள ஆண்களும் பெண்களு மான தேவர்கள், முனிவர்கள் நம் வைகுண்டப் பிராப்த்தி அடைந்தவர்கள், சிரிக்காவிட்டாலும், இந்தக் கதையைப் படித்து நடித்து காலட்சேபம் செய்து ஸ்ரவணானந்தம் செய்து வாழும் சைவ வைணவ பக்தர் சிரிக்காவிட்டாலும், பகுத் தறிவும், சுயமரியாதையும் இல்லாத மானமற்ற கூலிப் பண்டி தர்கள் சிரிக்காவிட்டாலும், மற்ற உண்மைத் தமிழ் மக்கள் இப்படிப்பட்ட ஆரிய மதத்தையோ, இந்து மதத்தையோ, சைவ வைணவ மதங்களையோ பற்றி என்ன நினைப் பார்கள் என்று கேட்பதே இந்த வியாசத்தின் லட்சியமாகும்.
-விடுதலை,18.6.16