செவ்வாய், 29 நவம்பர், 2016

கடவுள்கள் கற்பனையே!

கேள்வி: ஆறுமுகமும் பன்னிரு கைகளும் கொண்ட முருகனுக்குக் கால்கள் மட்டும் இரண்டு இருப்பானேன்?

பதில்: கடவுளுக்கு வடிவம் இல்லை. நமது கற்பனை கருக்கேற்ப நாம்தான் அவருக்குப் பல வடிவங்களைக் கொடுத்திருக்கிறோம்.

இது, ஆர்.எஸ்.எஸ். வார ஏடான 'விஜயபாரதத்தின்' (2.12.2016) பதிலாகும்.

உருவமற்றவன் கடவுள், கண்டவன் விண்டதில்லை, விண்டவன் கண்டதில்லை என்று சொல்லும் இந்து மத ஆசாமிகளே, பக்தர்களே, நீங்கள் சொல்லுவது உண்மையானால் கோயில்கள் ஏன்? அங்குப் பல்வேறு உருவங்களை வடித்து வைத்து ஆறு கால பூஜை, தேரோட்டம், திருக்கல்யாணம் என்ற கூத்துகள் ஏன்? கடவுளுக்கு சமையல் அறை ஏன்? பள்ளியறை ஏன்? என்று திராவிடர் கழகத்துக்காரர்கள் கேட்கும் பொழுது, பதில் சொல்ல சரக்கு இல்லாமல் சேற்றைவாரி இறைத்த வகையறாக்களே, காலந் தாழ்ந்தாவது நாம் சொல்லும் கருத்தை, கூற்றை ஒப்புக் கொண்டே தீர வேண்டிய நிலையைப் பார்த்தீர்களா?

பன்னிரெண்டு கைகளும், ஆறு முகமும் கொண்ட முருகனுக்கு இரண்டு கால்கள் ஏன் என்று கேட்பது நியாயந்தான் - அது ஒரு கற்பனைதான் என்று ஒப்புக் கொண்டு விட்டார்களா, இல்லையா?

கோயில்களில் அடித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுள் சிலைகள் கற்பனை என்றால், ஒவ்வொரு கோயிலுக்கும் எழுதி வைக்கப்பட்ட தல புராணங்களும் பொய்தான் என்று ஆகிடவில்¬லா?

பதினெட்டுப் புராணங்களும், பொய்கள்தான், குப்பைக் கூளங்கள் தான்என்று ஆகி விட்டதா இல்லையா?

ஆக்கல் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்பதெல்லாம் சுத்த வெத்து வேட்டு என்று ஆகி விட்டதா இல்லையா?

சிவனின் மனைவி பார்வதி, விஷ்ணுவின் மனைவி லட்சுமி, பிரம்மாவின் மகளும், மனைவியுமான சரசுவதி என்பதெல்லாம் புரூடா என்பது புலனாகி விட்டதா இல்லையா?

சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி என்ப தெல்லாம் இட்டுக் கட்டப்பட்ட கை சரக்கு என்ற குட்டு உடைபட்டு விட்டதா இல்லையா?

கடவுள் அவதாரமான ராமன், கிருஷ்ணன் என்பதெல்லாமே  இல்லாதவைதான் என்பதை ஏற்றக் கொண்டு விட்டார்களா இல்லையா? ராமன் கோயில் பிரச்சினையை ஏன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்? சேது சமுத்திரத் திட்டத்தில் ராமன் பாலத்தை இடிக்கலாமா என்று சத்தம் கொடுப்பதெல்லாம் கண்டிப்பாக அயோக்கியத்தனம்தான் என்பதைக் காலந் தாழ்ந்தாவது பக்தர்கள் உணர வேண்டாமா?

இராமாயணம், கீதை, மகாபாரதம் என்கிற பொய் மூட்டைகளைக் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியாரும், அவர்கள் இயக்கத்தவர்களும் கூறிய பொழுது கொந்தளித்தது எல்லாம் நடிப்புதான் என்பதைக் காலம் தாழ்ந்தாவது ஒப்புக் கொள்வார்களா? இவற்றை எல்லாம் நம்பி பொருளையும், பொழுதையும், கருத்தையும் விரயமாக்கி விட்டோமே, பெரியார் சொன்னவற்றைக் கேட்க மறுத்தோமே, மோசம் போய் விட்டோமே என்று காலந் தாழ்ந்தாவது நம் மக்கள் சிந்திக்க வேண்டாமா? என்பது தான் நமது அறிவார்ந்த கேள்வியாகும்.

மாதந் தவறினாலும் பண்டிகை தவறாது என்கிற முறையில் தீபாவளி, கார்த்திகை என்று கண்ட கண்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதும், விரதம் இருப்பதும், படையல் போடுவதும், கோயில் கோயிலாக குடும்பத்தோடு  சென்று வருவதும், கோயில் உண்டியலில் பணத்தைக் கொட்டுவதும், நேர்த்திக் கடன் கழிப்பதும், காசை கரியாக்கும் கயமைச் செயலே என்பதை, 'விடுதலை' எழுதும் பொழுது, ஒப்புக்கொள்ளாதவர்கள் 'விஜயபாரதம்' எழுதும்போது ஏற்றுக் கொண்டு தானே தீர வேண்டும்.

திருப்பதியில் கொட்டிய பணம் எல்லாம் பாழ் - அது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு சிலை - அதற்குச் சக்தியும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது என்று உறுதியாக நினைத்து கடந்த காலத்தில் ஏமாந்து போனதற்காக வெட்கப்பட்டு, இனிமேல் இத்தகு முட்டாள்தனத்தில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வார்களா?

ஏதோ ஒரு நேரத்தில் புத்தியில்லாமல் தவறு செய்து விட்டோம் - இப்பொழுதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டு இது புத்தி கொள் முதல் என்று கவனத்தில் கொண்டு, கோயில் குளம் என்று சுற்றுவதை முற்றிலுமாக ஒழிக்கும் நல்ல புத்தி வருமா நாட்டோருக்கு என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவார்ந்த கேள்வி!

கோயில்களைக் கட்டிய நமது அரசர்கள் முட்டாள்கள்; அந்தக் கோயிலுக்குள் கருவறை என்று சொல்லி ஆணி அடித்து அங்கே உட்கார்ந்து கொண்டு புரோகிதக் கொள்ளையடித்த  சுரண்டல்காரர்கள் அயோக்கியர்கள்; இவற்றை எல்லாம் நம்பி ஏமாந்த நாமோ மகா மகா மூடர்கள் என்பதை நம் மக்கள் உணர்ந்து கொண்டு திருந்துவார்களேயானால், அது மிகவும் வரவேற்கத்தக்கதே!

ஒரு கட்டத்தில் உண்மை என்று நம்பி இருக்கலாம், ஏமாந்தும் போயிருக்கலாம், அது தவறு என்று தெரிந்து கொண்ட பிறகு, மாற்றம் அடைவதுதானே புத்திசாலித் தனம். மனிதன் என்றால் பகுத்தறிவுவாதி என்பதற்கும்  அதுதானே அடையாளம்.

இந்தக் கற்பனைக் குட்டிச் சுவரை கட்டிக் கொண்டு எத்தனைக் காலம் அழுது இருப்போம் - நமது முட்டாள்தனத்தை மூலதனமாகக் கொண்டு பார்ப்பன சுரண்டல் கூட்டம் எவ்வளவுக் கொள்ளை அடித்திருக்கும்; அதனைவிட இந்தக் குழவிக் கல் கடவுள்களை வைத்து தானே நம்மைத் தீண்டத்தகாதவர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் இழிவுபடுத்தினார்கள்.

இவற்றை எல்லாம் கொஞ்சம் அசை போட்டுப் பார்த்து ஏமாந்தது போதும், விழித்துக் கொண்டோம் என்று வீறு கொண்டு எழுவீர் தோழர்களே, தமிழினப் பெரு மக்களே!

ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' இந்த வகையில் தொடர்ந்து எழுத வேண்டும், 'வரவேற்கிறோம்'.

----------------------’விடுதலை’ தலையங்கம் 29-11-2016

கடவுளுக்குத் தூதர் எதற்கு

முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?

-தந்தை பெரியார்.

செவ்வாய், 22 நவம்பர், 2016

அட, அயோக்கிய புரோகிதர்களே! சுவாமி விவேகானந்தர்


மைசூர் ராஜ்யத்திலிருந்து புறப்பட்ட சுவாமிஜி, கொச்சி ராஜ்யத்தை அடைந்தார். அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு திருவனந்தபுரத்துக்குப் போனார். வழிநெடுகிலும் வனப்பு மிக்க இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்று மகிழ்ந்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தார். அப்போது டிசம்பர் மாதம்.
பேராசிரியர் சுந்தரராம அய்யர் வீட்டில் சுவாமிஜி தங்கினார். சுந்தரராம அய்யர், திருவிதாங்கூர் இளவரசருக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கும் ஆசிரியர் ஆவார்.
சுந்தரராம அய்யர் பிராமண உணர்வு மிகுந்தவர், வைதிக ஹிந்து சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், எதையும் பிராமண இயல்போடு நோக்குபவர், பிராமணர் அல்லாத வர்களை சமபுத்தி இல்லாதவர் என்று சுவாமிஜி கூறியதாக எழுதி இருப்பவர். இவர் கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பது ஆராயற்பாலது. பிராமண குலம் இந்தி யாவுக்கு மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறது.
இப்பொழுதும் மகத்தான காரியங்களை செய்து வருகிறது. இனியும் மகத்தான காரியங்களைச் செய்யும் என்று சுவாமிஜி கூறியதாகச் சுந்தரராம அய்யர் எழுதி இருக்கிறார் பிராமணர்களைப் பற்றிச் சுவாமிஜி கூறியிருக்கும் கருத்துக்கு இந்தக் கருத்து முற்றும் முரண்படுகிறது.
வேதங்களை இயற்றிவர்கள்?
வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் க்ஷத்திரியர்களால் இயற்றப் பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.
வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணை யின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.
உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர் களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிட மிருந்து பிறக்கவில்லை (3.280)
முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).
நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)
பார்ப்பனரல்லாதார் துயில் நீக்கம்!
குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்சக்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)
பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களி லும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.
மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன! (5.180) இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை.
கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு (பக்கம் 162 முதல் 164 வரை)
-விடுதலை,5.6.15

வெள்ளி, 18 நவம்பர், 2016

திருடர்க்கழகு திருநீறடித்தல்”


15.06.1930- குடிஅரசிலிருந்து..

திருநெல்வேலி சைவர்களின் கையாயுத மாயிருந்து கொண்டு பார்ப்பனப் பிரசாரஞ் செய்து கொண்டிருக்கும் லோகோபகாரிஎன்னும் பத்திரிகையானது தனது ஜுன்  12ஆம் நாள் பத்திரிகையில் குடிஅரசின் கூற்று என்னும் தலையங்கத்தில் திருடர்க்கழகு திருநீறடித்தல் என்று குடி அரசில்  எழுதியிருப்பதால் குடிஅரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எழுதியிருக்கிறது.

நாம் இதுவரை எவ்விதத் தப்பிதமும் செய்து மன் னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய சமயம் நேரவில் லையானாலும் தவறுதல் என்று தோன்றினால் மன்னிப்புக் கேட்க எப்பொழுதுமே தயாராய் இருக்கிறோம். ஆனால் இந்த விஷ யத்தில் எவ்விதத்திலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாக சிறிதும் விளங்கவில்லை.

அதாவது திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும். இல்லாவிட்டால் மூடர்க்கழகு யென்றாவது விளங்கும். எப்படி எனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவது கடவுளின் அருளைப் பெறவாம். அதை இடுகின்றவர்கள் கருதுவதும் தாங்கள் எவ்வளவு அக்கிரமக்காரர் ஆனாலும் திருநீரிட்ட மாத்திரத்திலே சகல பாவமும் போய் கைலாயம் சித்தித்துவிடும் என்பதேயாகும்.

இதற்கும் ஆதாரமாக திருநீறின் மகிமையைப் பற்றி சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாத்திரத்தில் ஒரு பார்ப்பனன் மிக்க அயோக்கியனாகவும் கொலை, களவு, கள், காமம்,பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்து கொண்டே இருந்து ஒரு நாள் ஒரு  புலையனான சண்டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியை புணர்ந்ததாகவும்,

அந்த சண்டாளன்  இதை அறிந்து அந்தப் பார்ப்பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை  சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எரித்துவிட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை  அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள்  கட்டிப்பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்திற்றள்ளக் கொண்டு போனதாகவும்,

அந்தச் சமயத்தில் சிவகணங்கள்  ரத்தின விமானத்துடன் வந்து அந்தப் பார்ப் பனனை எமதூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமானத்தில் வைத்துக் கைலாயத் திற்குப் பார்வதி இடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து இவன் மாபாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படிக்  கொண்டு போகலாம்? என்று வாதாடினதாகவும்,

அதற்கு சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்று திருநீறு பட்டு விட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத்திற்கு அருகனான தினால் பரமசிவன் எங்களை அனுப்பினார் என்று சொன்னதாகவும், இதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக்கைப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒருநாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சமில்லை என்று சொல்லி வாதாடி சிவகணமும், எமகணமும், எமனும், சிவனிடம் சென்று இவ்வழக்கை சொன் னதாகவும்,

பிறகு சிவன் இந்தப் பார்ப்பனன் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந்தாலும் இவனைக் குத்திக் கொன்று சுடுகாட்டில் இவன் பிணத்தை எரித்துவிட்ட போது மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம்பலின் மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதன் காலில் பட்டி ருந்த அந்த சாம்பலில் கொஞ்சம் பிணத்தின் மீது பட்டு விட்டதால் அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டிய தாயிற்றென்று  சொல்லி எமனைக் கண்டித்தனுப்பிவிட்டு பார்ப்பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால், திருநீறு எப்படியாவது சரீரத்தில் சிறிது பட்டுவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கி யர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணிகின்றார்கள். அந்த சாதிரத்தின் அடுத்த அத்தியாயத்தில் அத் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு அந்த முறைப்படி இட்டால் இதில் எழுதக்கூடாத மகா பாதகங்கள் செய்வதினால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்றும், அவன் பிதிர்கள் செய்த பாவங்கள்கூட நீங்கி நரகத்திலி ருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதியிருக் கின்றது.

இவை பிரமோத்திர காண்டம் 14ஆவது, 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது அதாவது பேராசைக்கார ராகவாவது, மூடராக வாவது இருக்காமல் வேறு என்னவாய் இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர் களுக்கே விட்டு விடுகிறோம்.

தவிர, நாம் முன் எழுதியதற்காக வருத்தமடைந்த திரு நெல்லையப்ப பிள்ளை அவர்கள் வேளாளன் திருநீறு பூசினால்தான் மோட்சத்திற்கருக னென்றும், மற்றவன் பூசினால் அருகராகாரென்றும் கருதிக் கொண்டிருப்பவர். உதாரணமாக,  திருநெல்வேலி ஜில்லா முதலா வது சுய மரியாதை மகாநாட்டில் திருநீறு பூசிய யாவரும் கோவிலுக்குள் போகலாம் என்ற தீர்மானம் வந்த காலத்தில் 2000 பேர் உள்ள கூட்டத்தில் ஆட்சேபித்தவர் இவர் ஒரே ஒருவராவார்.

ஆகவே திருடர்க்கழகு திருநீறடித்தல் என்று எழுதிய விஷயத்தில் இவருக்குச் சிறிதுகூட கோபம் வர நியாயமே இல்லை. ஒரு சமயம் லோகோபகாரிக்கு மனவருத்தமிருக்குமானால் அது திருடர்க்கு  அல்லது மூடர்க்கு என்று ஒரு திருத்தம் கொண்டுவந்தால் ஒப்புக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.
-விடுதலை,18.11.16

.

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஆகமமும் மதம் மாறிய புத்தர் கோயில்களும்


ஆகமமும் மதம் மாறிய புத்தர்  கோயில்களும்

பொறியாளர்
ப.கோவிந்தராசன் BE,MBA,MA,MA


மனு சாஸ்திரம் அரசர்களையும் பொது மக்களையும் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள ஆரியர் களால் உருவாக்கப்பட்டது. அதேபோல் கடவுள்களை உருவாக்க முதலில் வேதங்களையும் பல நூறு ஆண்டு களுக்குப் பின்னர் புராணங்களையும், இராமாயணத்தையும், மகாபாரதத் தையும் உருவாக்கினார்கள்.
பக்தி என்ற பெயரால் கோவில்களையும் பின்னர் அந்த கோவில்களை நிர்வகிக்க ஆக மத்தை பயன்படுத்தினார்கள். இத்தகைய ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் பிற மதங்களை அழிக்கவும் கோயில்களை எவ்வாறு பயன்படுத் தினார்கள் என்பதையும் தொகுத்து அளிக்கப்படுகிறது
2. ஆகமத்தின் வரலாறு:-
மெசபடோமிய நாகரிக காலத்தில் கோயில்கள் களிமண்ணைக் கொண்டும் செங்கல்லைக் கொண்டும் கட்டப் பட்டன. ஆகையால் கோயில்கள் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டன என் றும் சில குறிப்பிட்ட கால இடை வெளியில் (குடமுழுக்குப் போல) புதுப் பிக்கப்பட்டன என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன (பக்73 நூல்-ஹிஸ்டரி வெளியீடு டி.கே. பப்ளிகேசன். தொகுப்பு ஆடம் ஹார்ட்- டேவிஸ் )
இது போல சிந்து சமவெளி காலத் தில் மாடிக் கட்டடங்கள் பொது குளியல் இடங்கள் தானியக் கிடங்குகள் கட்டுவதற்கும் செங்கலைப் பயன்படுத் தினார்கள். காளி, பசுபதி போன்ற தெய்வங்களையும் வணங்கினார்கள்.
எனவே சிந்து வெளி மக்கள் விக்கிரக ஆராதனை செய்ய கோவில்களை கட்ட செங்கலை   பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் திட்டமிட்டு நகரங் களை உருவாக்கிய சிந்துவெளி மக்கள் கோவில்களை கட்டுவதற்கு ஆகமம் போன்ற விதி முறைகளை கடைப்பிடித் திருக்க வேண்டும். எனவே ஆரியர்கள் ரிக் வேதம் உருவாக்குவதற்கு முன்னரே ஆகமம் தோன்றியிருக்க வேண்டும்.
வேத மதத் தோற்றத்தின் பின்பு எழுதப்பட்ட வரலாற்று நூல்களின்படி பல்லவர்கள் காலம் கிபி 575 வரை கோயில்கள் குகைக் கோயில்களாகவே இருந்தன. கருங்கல் செங்கல் போன்ற வற்றை பயன்படுத்தவில்லை. எனவே கோயில்கள் கட்டப்படவில்லை. ஆனால் அவை பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டன.
இதனால் மகேந்திர வர்ம பல்லவர் காலம் (கிபி 615முதல் 630) வரை கோயில் கட்டுமானக்கலை தோன் றவில்லை என அறியலாம். இதனால் ஆகமமும் தோன்றவில்லை இதை விளக்க மகேந்திர வர்மன் உருவாக்கிய குடைவறை கோயில்கள் உள்ள  இடங் கள் மண்டகப்பட்டு மாமண்டூர்
மகேந்திரவாடி தளவானுர் பல்லா வரம் சீயமங்கலம் சிராப்பள்ளி ஆகும். (நூல் -மகேந்திரர் குடை வறைகள் ஆசிரியர்.-- மு.நளினி இரா. கலைக் கோவன்) மகேந்திரனுக்குப் பின் ஆட்சி செய்த நரசிம்ம பல்லவன் காலத்தில் (கி.பி 630 முதல் 681 வரை)தான் முதன் முதலாக செங்கல் மற்றும் கருங்கல்லால் ஆன கோயில்கள் கட்டப்பட்டன.
இதுவே சோழர் காலத்தில் மலையே இல்லாத தஞ்சைப் பகுதியில் மலை போல்  உயர்ந்த கோபுரங்கள் அமையக் காரணமாகும். இவ்வாறு அமைக்கப் பட்ட கோயில்கள் உள்ள கர்ப்ப கிரகம் குடைவரை கோயில்களில் உள்ளது போல் மிகச் சிறியதாக இருக்கும்.
இந்த கருவறைக்குள் செல்லவும் தமிழால் ஓதி வழிபடவும் அனைத்து ஜாதியினரும் பல்லவர் காலத்தில் அனுமதிக்கப்பட் டனர். இதன் பின்னர் சோழர்கள் ஆட் சியில் கருவறைக்குள் பாரப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
எனவே ஆகமம் சோழர்கள் காலத்தில் தான். தோன்றியிருக்க வேண்டும் மற்றும் ஜாதி பேதம் அதிகரித்து இருக்க வேண்டும். இதனை விளக்கும் பாடல் சிலவற்றை காணலாம் ( பக்கம் 206 நூல் -தமிழர் நாகரிக வரலாறு- ஆசிரியர்- முனைவர் -இறையரசன்)
1. சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பானாகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே- (திருநாவுக்கரசர்)
2. சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோல் நாட்டுவோம்
பறைச்சி யாவதேதடா பணத்தியாவதேடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ.
(சிவ வாக்கியர்)
3. காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே எங்குலம் சுக்கிலந்தான்மைந்தா
தோணப்பா தோணமற் சாதிபேதஞ்
சொல்லுவான் சுருக்குமாகச் சுருண்டு போவான் (காகபுசுண்டர்)
(நூல் ஆசிரியர் முனைவர் இறைய ரசன் நூல்-- தமிழர் நாகரிக வரலாறு)
3. ஆகமத்தின் வகைகள்
ஒவ்வொரு மதத்திற்கும் உரிய முதன்மை கடவுளை வழிபடுவதற்கு ஏற்றவாறு  ஆகமங்கள் உருவாக்கப்பட் டுள்ளன. அவை
1. சைவம் (சிவன்) 2. வைணவம் (விஷ்ணு) 3. பவுத்தம் (புத்தர்) 4. சாக்தம் (பெண் தெய்வங்கள்) 5. பாகவதம் (வசுதேவர்)
சைவ மதத்தில் உள்ள பிரிவுகள்--- ஆகமவாதிகள் சுத்த சைவம்; வீரசைவம் கபாலிகர் (கிபி 13ஆம் நுற்றாண்டு) காளாமுகர். வைணவ மதத்தில் உள்ள பிரிவுகள் --பாகவதம் (வசுதேவர்) பஞ்சராத்ரா அல்லது 5 ராத்திரிகள் (நாராயணன்). மேலும் வடகலை (சமஸ்கிருத மொழிக்கு முன்னுரிமை) தென்கலை (தமிழ் மொழிக்கு முன்னு ரிமை).
பின்னர் பஞ்சராத்ராவுடன் பாகவதம் இணைந்தது.
இதில் மகாயானப் பிரிவை சேர்ந்த பவுத்தர்கள் புத்தரை தெய்வமாகக் கருதி வணங்கினார்கள். இந்த மகாயானம் மூன்றாம் கனிஷ்கர் காலத்தில் (கிமு 100 முதல் கிபி.200 வரை) பிரிந்தது. மகாயானத்தைச் சேர்ந்தவர்கள் புத்த ஆகமத்தை பாலி மொழியில் எழுதி னார்கள்.
சிவ ஆகமம் மற்றும் வைணவ ஆகமம் முதன் முதலில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் பல்லவர் காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டது. அப்போது இந்து மதம் தோன்றவில்லை. எனவே இந்து கோயில்களுக்கு என்று தனியே ஆகமம் இதுவரை எழுதப்படவில்லை.
அதே சமயத்தில் வட இந்தியாவில்  ஆகமம் எதுவும் இயற்றப்படவில்லை. இதனால் பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட வில்லை எனவரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் மேலும் வடஇந்தியா விலிருந்து பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் பலரால் அழைத்து வந்த பிராமணர்களுக்கு ஆகமத்தைப் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை எனக் கூற லாம்.
பின்னர் தமிழும் சமஸ்கிருதமும் அறிந்தவர்களால் ஆகமங்கள் சமஸ் கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப் பட்டன.  பின்னர் வைணவ மதம் வடகலை தென்கலை என இரு பிரிவுகள் மொழி அடிப்படையில் தோன்றின. தென்கலை பிரிவில் தமிழ் மொழிக்கு முதலிடம் தரப்படுகின்றது.
வடகலைப்பிரிவில் சமஸ்கிருத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது ஆழ் வார்கள் காலத்தில் (கிபி 8-ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், தன் காதலை தமிழ் பாசுரங்களின் மூலம் வெளிப்படுத்தி ரங்கநாதரை மணந்து கொண்டது இங்கே நினைவு கூரலாம்.
4. ஆகமத்தின் கூறுகள்  ஆகமம் என்றால் கோவில் கட்டியதிலிருந்து வழிபாட்டு முறை முதலான  எல்லா கூறுகளிலும் காலங் காலமாக கடைப் பிடிக்கப்படும் மரபுகளைக் குறிப்ப தாகும்.ஆகமங்கள் என்பவை 1. மதக் கோட்பாடுகள் 2. கோயில்  அமைப்பு கட்டுமானம் பராமரிப்பு. 3. யோகா 4. வழிபாடு மற்றும் சடங்குகள் ஆகிய கூறுகளை கொண்டவை ஆகும்.
ஆகமம் ஆரியர் வருகைக்கு முன்பே  கோயில்கள் உருவாகின என புத்த மதக் கோயில்கள்ஆகமத்தின் அடிப் படையில் கட்டப்பட்டவை எனக் கருதலாம். ஒவ்வொரு அரசர்கள் காலத்திலும் கடவுள் கொள்கைகளில் கடவுள்களின் வடிவமைப்பு மற்றும் கோயில் கட்டுமானம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன அதனால் ஆகமங்கள் எவ்வாறு மாற்றம் அடைந் தன என்பதை இனி காணலாம்
5. புத்தமதம் வலுவிழத்தலும் பிராமண மதம் வளர்ச்சியும் பேரரசன் அசோகனின் மவுரிய சாம்ராஜ்யம் அவனது மறைவுக்குப் பின் வலிமை குன்றியது. பின்னர் கிபி 185-ல் சிறு சிறு அரசுகளாகப் பிரிந்தது அப்போது புத்த மதம் மன்னர்களின் ஆதரவு இல் லாததினால் நலிவடைந்தது. இதை சீன யாத்திரிகர் யுவான் சுவாங் (629-_645) தனது பயண நூலில் கீழ்க்கண்ட வாறு கூறியுள்ளார் வட இந்தியா முழுமைக்கும் புத்த மதம் உயிர்ப்புடன் இருப்பதை சிறிதும் காண முடிய வில்லை.
புத்த கோயில்களும் விகாரங் களும் பாழடைந்து பயனற்று உபயோ கிப்போர் இல்லாமல் வெறிச்சோடியி ருந்தன. பால மன்னர்களும் ஹர்ஷ வர்த்தனரும் ஆண்ட பகுதிகளில் புத்தமதம் பாதுகாப்புடன் இயங்கி வந்தது. ஆனால் இந்தியா வின் வட மேற்குப் பகுதியில் ஹூணரகள் படை யெடுப்பால் பல புத்த விஹாரங்கள் மற்றும் கோயில்களும் அழிக்கப் பட்டன. பல புத்தத் துறவிகள் கொல் லப்பட்டனர்.
பின்னர் ஆட்சி செய்த குப்தர்கள் (கிபி 320 கிபி.550) பிராமண மதத்தையும், கடவுள்களையும் ஆதரித் தார்கள் (நூலாசிரியர் ஆர.சி.மஜும் தார். நூல் ஏன்சியன்ட் இந்தியா பக்கம் 427_-428).
(தொடரும்)
-விடுதலை ஞா.ம.,19.3.16
ஆகமமும் மதம் மாறிய புத்தர்  கோயில்களும் (2)

பொறியாளர்
ப.கோவிந்தராசன் BE,MBA,MA,MA


6. ஆகமும் மதம் மாறிய புத்தர் கோயில்களும்
6.1 ஆந்திர பிரதேச கோயில்கள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயில் களில் முதன்மையானது திருப்பதி சிறீ வெங்கடேசுவரா சாமி வாரி கோயில். இந்தக் கோயிலில் வழிபாட்டுச் சடங்குகள் எல்லாம் வைகானச ஆகமம்  மற்றும் மகாராத்ர ஆகமம் ஆகிய இரண்டு ஆகமங்களின் அடிப் படையில் செய்யப்படுகின்றன. இந்த முறையை தொடங்கியவர் சிறீ இராமானுஜர் (1017-_1037) ஆகும். ஆகம முறை யில் இந்த திருமலா கோயில் கட்டப் பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய கீழ்க்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்
6.1.1. நிலம்-- திருமலா கோயில் அமைக்க  சிறீநிவாசன் என்ற கடவுள் வராகசாமி என்ற கடவுளிடம் 16.2 ஏக்கர் நிலம் கேட்டார். இதற்கு சம்மதித்த வராகசாமி சிறீநிவாசனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி வராகசாமி (கடவுள்) சிறீநிவாசனுக்கு (கடவுள்) மேற்படி நிலத்தை தானமாகக் கொடுக்க வேண் டும் அதற்குப் பதிலாக சிறீநிவாசன் (கடவுள்) தன்னுடைய முதல் தரிச னத்தை தன்னுடைய கோயிலில் இருக் கும் வராகசாமி கடவுளுக்கு தருவார் மேலும் சிறீநிவாசன் தன்னுடைய கோயில் உண்டியலில் தன் பக்தர்களால் தரப்படும் காணிக்கைகளை வராகசாமி கடவுளுக்கு தரவேண்டும்.
இந்த ஒப்பந் தத்தின்படி இன்று வரை வராகசாமி கடவுளுக்கு காணிக்கைகள் அளிக்கப்படு கின்றது என்று திருமலா தேவஸ்தானம் கூறுகின்றது.எனவே திருமலா கோயில் சொத்துக்கள் அனைத்தும் முதலில் வராகசாமிக்குத்தான் சொந்தம். பிறகு அவரால் சிறீனிவாசன் கடவுளுக்கு தரப்படும்.
6.1.2. தற்போதுள்ள பெரிய திரு வாசல் 50 அடி உயரம் கொண்டது. இதன் உயரமான 50 அடிக்கு 13-ஆம் நூற்றண்டிலிருந்து கொஞ்சங் கொஞ்ச மாக உயர்த்தப்பட்டது.
6.1.3. சங்கா நிதி மற்றும் பத்மாநிதி என்ற) இரு தேவதைகள் திருமலா தேவஸ்தானம் சொத்துக்களை பாதுகாக்கிறார்கள். இந்த இரு தேவதை சிலைகளும் கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுத ராயரால் அமைக்கப் பட்டன (14ஆம் நூற்றாண்டு)
6.1.4. வெங்கடேவரா சன்னதிக்கு முன்பு மூன்று வெண்கல சிலைகள் உள்ளன. அவை 1.கிருஷ்ண தேவராயர் 2. அவரின் முதல் மனைவி 3. அவரின்  இரண்டாவது மனைவி. ஆனால் தஞ்சையில் ராஜராஜன் சிலை அவன் கட்டிய பெரிய கோயிலுக்கு வெளியே உள்ளது.மேலும் திருப்பதியில் சிலைகள் வைத்தவர் கிருஷ்ண தேவராயர் தஞ்சை யில் சிலை வைத்தவர் சாமானியர் கருணாநிதி. இதற்கு எல்லாம் காரணம் ஆகமமே.
6.1.5. சந்திரகிரியை  கிபி. 1570-ல் ஆண்ட மன்னன் வெங்கடபதி ராஜு சிறீநிவாசக் கடவுளுக்கு பல விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைக் காணிக்கையாக வழங்கியதால் அவ ருக்கு கோயிலுக்கு உள்ளே பெரிய திருவாசல் அருகே செப்பு சிலை வைக்கப்பட்டுள்ளது
6.1.6. டோலோத்சவம் கிபி 1351-ல் தொடங்கப்பட்டது
6.1.7. சிறீராமானுஜர் (1017-_1037) வெங்கடேஸ்வரா கோயிலில் பல மேம் பாடுகளையும் வழிபாட்டு முறைகளில் பல சீர் திருத்தங்களையும் செய்தார். இவர் தென்கலைப் பிரிவை சேரந்தவர் (தமிழ் மொழிக்கு முன்னுரிமை தரப் படும்.  உம்- சிறீ ஆண்டாள்.) திருப்பதி கோயில் முதலில் எந்தப்பிரிவையும் சேரவில்லை.  பின் தென்கலை பிரிவை சேர்ந்தது. ஏனென்றால் ராமானுசர் காலத்திற்குப் பின்தான் வடகலை தென் கலை என்ற பிரிவுகள் வலுப்பெற்றன.
6.1.8. முஸ்லீம் படையெடுப்பினால் சீரங்கப் பட்டினத்திலிருந்து சிறீ ரங்கநாதரின் மூலவிக்ரகம் கிபி 1320 மற்றும் 1369 என இருமுறை  பெயர்த்து எடுக்கப்பட்டு திருப்பதி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் படையெடுப்பு முடிந்து திரும்பவும் சீரங்கப்பட்டினம் எடுத்து செல்லப்பட டது.
6.1.9. மொகலாய மற்றும் ஆங் கிலேயர் (கிபி 1700) தாக்குதலில் இருந்து திருப்பதி கோயிலையும் வெங்கடேசுவரா கடவுளையும் பல முறை காப்பாற்றியவர் ராஜா தோடர் மால டில்லி சுல்தானின் மூத்த அமைச் சர் இவரது சிலையும் இவருடைய தாயார் மற்றும் மனைவியின் சிலைகளும் கொடிக் கம்பம் அருகே அமைந்துள்ளன.
6.1.10. போக சீநிவாச மூர்த்தி (சிலை) தான் உத்சவ விக்ரகம்ஆகும். (மூல விக்ரகம் நிலையானது). இதை பல்லவ ராணி சாம வாயி-- ஆல் கிபி 614-ல் வழங்கப்பட்டது. இந்த உத்சவ மூர்த்தி தினமும் படுக்கை அறைக்கு எடுத்து செல்லப்பட்டு அதிகாலையில்  பள்ளி யெழுச்சிப் பாடிய பின் மூலவிக்ரகம் அருகே திரும்பவும் வைக்கப்படும் இந்த உத்சவ மூர்த்திதான் முதன் முதலாக நான்கு கைகளுடன்அமைக்கப்பட்டது
6.1.11. நிசாம் ஆட்சி காலத்தில் 1929-ல் அமைச்சராக இருந்த சிறீராம் துவாரக தாஸ் என்பவர் கோயிலின் முக்கிய வாசலில் வௌளியிலான கதவுகளை அமைத்தார்.
6.1.12. கோயிலில் உள்ள மூலவிக்ர கத்தின் பெயர்கள் வெங்கடேச சுவாமி பாலாஜி சிறீநிவாசன் ஆகும். இந்த மூல விக்கிரகம் (சுயம்பு) உள்ள கருவறையை வலம் வர பாதை ஒன்று தொடக்க காலத்தில் இருந்தது. பின்னர் கிபி1250-ல் சுற்றுசுவர் எழுப்பி அந்த பாதை மூடப்பட்டது இவ்வாறு கோயில் அமைப்பை மாற்ற ஆகம விதிகள் அனுமதிக்.கிறதா என்ற ஐயம் ஏற்படுகின்றது. மேலும் சுயம்புவாக தோன்றியது என்று சொல்லுவதால்  மூல விக்ரகம் தோன்றியபடியே இருக்கும் எனவே எந்த வித மாற்றமும் இல்லாமல. நின்ற கோலத்தில் மூலவிக் கிரகம் அமைந்துள்ளது சுயம்புவாக தோன்றிய விக்கிரகங்கள் எல்லாம் ஆகமத்தின்படி இருக்காது.
6.1.13 டில்லியிலிருந்து படையெடுத்து வந்த மாலிக்கபூரால் திருப்பதி உள்ளிட்ட பல கோயில்களில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் செல்வங்கள்  கொள்ளையடிக்கப்பட்டதால் ஆகமத்தினால் கோயிலுக்கு மற்றும் விக்கிரகங்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை. எனவே பாதுகாப்பு தர புது ஆகமம் உருவாக்க வேண்டும்
6.1.1.4. இரண்டாம் குலோத்துங்கன் தில்லை நடராசர் கோயிலில் இருந்த பெருமாளை அகற்றி கடலில் எறிந் தான் .அந்த சிலையை மீட்ட ராமா னுசர் திருப்பதி கோயிலில் சேர்த்தார். இதனால் சினம்கொண்ட குலோத்துங் கனுக்குப் பயந்து ராமானுசர் கொய்சள மன்னனிடம் அடைக்கலம் புகுந்தார்.
6.2. தமிழ் நாட்டு கோயில்கள்
புத்த மதம் அசோகர் காலத்தில் கிமு300-ல் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு மதமும் தோன்றவில்லை. ஆனால் தொல் காப்பியத்தில் கூறியவாறு இந்திரன முருகன் மால் மாயோன் சேயோன் கொற்றவை போன்ற கட வுள்களை திணைகளின் அடிப்படை யில் பிரிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.இதுவே தமிழ்நாட்டில் ஆகமத்தின் தொடக்கம்.
என்பதினை தொல்காப்பியத்தின் மூலம் அறிய லாம். மேலும் கோவில் கட்டும் பழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகத் செய்திகள் ஏதும் இல்லை. ஆனால் சிலப்பதிகார காலத் தில் அதாவது கடைச் சங்க காலத்தில்  (கிமு 400 முதல் கிபி 200 வரை) கண்ணகிக்கு கோயில் கட்டப்பட்டது. இருந்த போதிலும் கோவில்கள் பெரிய அளவில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டது பிற்கால சோழர்களின் (கிபி-850_-1200) காலத்தில் தான்.
சோழநாட்டில் கற்பாறைகள் இல் லாத காரணத்தால் செங்கற்களைப் பயன்படுத்திசுதை (மண்சிலை ) வேலைகள் உடன் கூடிய உயரமான கோபுரங்களை கொண்ட கோயில் (மணிக்கோயில்) களை அமைத்தனர். அரசர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில்  தங்களு டைய மதத்தினை வளர்க்க கோயில் கள் கட்டினார்கள். மேலும் தமிழ் நாட்டிற்குள் பரவிய வடஇந்திய மதங்களில் (வைதீக பிராமண மதம் புத்த சமண மதங்கள் அசீவக மதம்) ஒன்றான புத்த மதக் கோயில்களும் கட்டபட்டன.
யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகர் கிபி 640-ல் காஞ்சிபுரத்திற்கு நரசிம்ம பல்லவன் காலத்தில் வந்தார் அவர் தனது பயணக் குறிப்பில் கீழ்க்கண்ட செய்திகளைக் கூறியுள்ளார். அசோக ரால் கட்டப்பட பவுத்த விகார் மற்றும் ஸ்தூபிகள் காஞ்சிபுரம்சோழ நாட்டிலும் பூம்புகார் மயூரப்பட்டிணம் மற்றும் மதுரை (அசோகனின் உறவினர் மகேந்திரர்) ஆகிய இடங் களில் காணப் பட்டன. அவற்றில் சில சிதைவடைந்திருந்தன. சில வைதீக பிராமணர்களால் கவரப்பட்டன. இந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை பின் வருமாறு மயிலை சீனி.வேங்கடசாமி தனது நூலில் (பவுத்தமும் தமிழும்) கூறியுள்ளார்.

(தொடரும்)
-விடுதலை ஞா.ம.,26.3.16
ஆகமமும் மதம் மாறிய புத்தர் கோயில்களும் (3)
பொறியாளர்
ப.கோவிந்தராசன்
6.2.1.வைதீக பிராமண மதம் யாகங்களை உயிர் கொலைகள் செய் வதை நிறுத்திக்கொண்டு கொற்றவை முருகன் திருமால் சிவன் போன்ற திராவிட தெய்வங்களை தன் மதத் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. (பக்கம் 37)
6.2.2. இந்தப் புதிய மதத்தைச் சார்ந்த சம்பந்தர் பவுத்தர்களுடன் வாதப் போர் செய்து அவர்களை தோற்கடித்து சைவராக்கிய வரலாறும் மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பவுத்தருடன் வாதம் செய்து அவர்களை தாமிர பரணிக்கு (1972-ல் இலங்கை என மாறி யது) துரத்திய வரலாறும் திருமங்கை ஆழ்வார் கிபி 800-ல் நாகப்பட்டினத்துப் பவுத்த ஆலயத்திலிருந்து பொன்னால் அமைந்த புத்தர்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப்பணியை செய்த வரலாறும் பவுத்த மதத்தின்  வீழ்ச் சியைக் காட்டுகின்றன. (பக்கம் 37-38) இங்கு மாணிக்க வாசகர் கோயில் கட்டி யதையும் கடவுள் நரியைப் பரியாக்கி யதும் நினைவு கூரத்தக்கது.
6.2.3. இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ் வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலென தெரி கிறது. (பக்கம்51 பவுத்தமும் தமிழும் மற்றும் பக்கம் 126 திருக்குறளும் சைவ சித்தாந்தமும் தி.ந. அநந்த நயினார் 1932.)
6.2.4. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் வெளி மதில் சுவரில் பல புத்தரின் உருவங்கள் காணப்படுகின்றன. இது கிருஷ்ணதேவராயரால் 1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்த கோயில் களை இடித்து இந்த மதில் சுவர் கட்டியிருக்க வேண்டும்.
6.2.5. காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாரா தேவியின் ஆலயமாக இருந்தது. (பக்கம் 52)
6.2..6.புத்த கோயில்கள் பிற்காலத்தில் சாஸ்தா அல்லது அய்யப்பன் கோயிலாக மாறின. சாஸ்தா என்ற சொல் புத்தரைக் குறிக்கும் சாஸ்தா என்றால் சாஸ்திரி அல்லது கற்றவன் என்று பொருள். (பக்கம் 149_-150) சாஸ்தா என்ற பெயர் சாத்தன் என்றும் பின்னர் சாத்தனார் என்றும் அதன் பின்னர் அய்யனார் என்றும் மாறியது.
6.2.7.ஆதியில் புத்த கோயிலாக இருந்த ஆலயங்கள் பின்னர் தர்மராஜா கோயில் எனவும் கிராம சிறு தெய்வங் களின் (முனீஸ்வரன்) கோயிலாகவும் மாறின.
6.2.8. தாரா தேவி மங்கல தேவி சிந்தாதேவி போன்ற பவுத்த  தெய் வங்களின கோயில்கள் கிராம சிறு தெய் வங்களின் கோயில்களாக (தர்மராஜா வின் மனைவி திரவுபதி) மாறின
6.3. கேரள கோயில்கள். நலிவுற்ற புத்த மத்தை பிராமணர்கள் கைப்பற்றிய பின்பு புத்தமதக் கோயில்கள் பல பிரா மணர்கள் வசம் வந்தன. நலிவடைந் திருந்த ஆரியர்களின் வேதமதம் பிராமண மதமாக கிபி 6-ஆம் நூற்றாண் டில் மாறியது வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள் (நூல்: -ஹிஸ்டரி தொகுப்பு ஆசிரியர்-ஆடம்  ஹாரட் - டேவிஸ்பக்கம் 143) இத்தகைய  பிராமண  மதம் புத்த மதக் கொள்கை களையும் ஏற்றுக் கொண்டது. கவுதமப் புத்தரையும் 9-வது அவதாரமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த மாற் றங்கள் புத்த மதக் கோயில்கள் கட்டிடங்கள் வரலாற்றுச் சின்னங்கள். மற்றும் நூல்கள் ஆகியவை  பிராமணர்கள் வசப்படுத்துவதற்கு உதவி புரிந்தன. மேலும் தர்மம் சாஸ்தா சரணம். சங்கம். போன்ற சொற்கள் பிராமண மதத்தில் பயன்பாட்டுக்கு வந்தன. மக்கள் மாமிச உணவு.காம உணர்வு.போதைப் பொருள்கள் போன்ற வற்றை தவிர்த்து  கடுமையான விரதங்களைக் கடைப்  பிடித்து  உடல் உடை உள்ளம் ஆகியவற்றை தூய்மை செய்து கொண்டு யாத்திரை சென்று கடவுளை வழிபட்டனர். உதாரணம்- காசி மற்றும் தீரத்த யாத்திரை சபரிமலை அய்யப்பன் தரிசனம்.
கேரளாவில் தற்போது உள்ள அம்மன் கோயில்கள் பகவதி கோயில் கள் சாஸ்தா கோயில்கள் முதலானவை முற்காலத்தில் பவுத்த கோயில்களாக இருந்தவை ஆகும்  என மயிலை நா. வேங்கடசாமி தனது நூலில் கூறுகிறார் (பக்கம் 39மு75 நூல். பவுத்தமும் தமிழும் கேரளக் கோயில்களில் முதன்மை யானது. சபரிமலை அய்யப்பன்  கோயில் ஆகும். இந்த அய்யப்பனை வணங்கும் பக்தர்களுக்கும் பவுத்த துறவி களுக்கும் உள்ள ஒற்றுமையை விவரிக்கிறார்  முனைவர் எஸ்.என்.சதாசிவன் தனது நூலில் (சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா) கீழ் கண்டவாறு
6.3.1.அய்யப்பன் கோவிலில் உள்ள 18 படிகள் புத்தரின் 18 பெயர்களைக் குறிக்கின்றது. மேலும் புத்தரின் 18 போதனைகளைக் குறிக்கின்றது. இந்த 18 போதனை கடைப்பிடித்தால் ஒருவர் நிர்வாணத்தை அடையலாம் அதாவது அய்யப்பனைத் தரிசிக்கலாம் (பக்கம் 129)
.6.3.2.சாஸ்தா என்றால் காப்பவன் அல்லது போதிப்பவன் என்று பொருள். எனவே புத்த மதத்தில் புத்தரை தர்ம சாஸ்தா என்றும் தர்மராஜா என்றும் அழைக்கிறார்கள். பிராமண மதத்தில் தர்ம கிருஷ்ணா தர்ம ராமன் என்ற பெயர்கள் வழக்கத்தில் இல்லை. தர்மம் என்ற சொல் பவுத்தர்களால் பரப்பப்பட்டது.
6.3.2. இந்த புத்தகோவிலை பவுத் தர்களிடமிருந்து மறவர்கள் கைப்பற்றி னார்கள். பல பவுத்த துறவிகள் மறவர்களால் கொல்லப்பட்டனர் மறவர்களிடமிருந்து பந்தள மகாராசன் மீட்டார். பௌத்தராக இருந்த மகா ராசா பிராமண மதத்திற்கு மாறினார். பின்னர் பிராமணர்கள் அவரை சத்ரியராக அங்கீகரித்தனர். அய்யப்பன் கோவில் நிர்வாகம் பந்தள மகாராசன் வசம் வந்தது. இவரது ஆட்சிகாலத்தில்  புத்தர் கோயில் அய்யப்பன் (தர்ம சாஸ்தா) கோயிலாக மாற்றப் பட்டது. மேலும் பல தகவல்களை சாஸ்தா கோயிலை நிர்வகிக்கும் உரிமைக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்துப்  பெறலாம்.
6.3.3. மாவேலிக்கரா மாவட்டத்தில் உள்ள கண்டியுரில் இருந்த புத்தன் கோயில் மாவலி மன்னரும் அவரது குடும்பத்தினரும் வணங்குவதற்காக கட்டப் பட்டது. இந்த மன்னர் புத்த மதத்தைச் சார்ந்தவர். இவரது மறைவுக் குப்பின் (இவர் வாமன அவதாரத்தில் விஷ்ணுவால் கொல்லப்பட்டவர் என்று கருத வாய்ப்பு உள்ளது.) கி.பி 15ஆம்  நூற்றாண்டில் இங்கிருந்த புத்த கோயில் சிவன் கோயி லாக மாற்றப்பட்டது. (பக்கம் 133 எ சோசியல் ஹிஸ்டரி ஆப் இந்தியா)
இவ்வாறு இந்தியாவில் உள்ள பல கோயில்கள் முதலில் புத்தர் கோயிலாக  புத்தமதத்தினரால் கட்டப்பட்டு பின்னர் புத்த மத வீழ்ச்சி அடைந்த தால் சைவ வைணவ கோயிலாக மாறின. புத்தர் வாழ்ந்த காலத்தில் சைவ வைணவ மதங்கள் தோன்ற வில்லை. இதன்படி மதம் மாறிய புத்த கோயில்கள் சைவ வைணவ ஆகமங் களால் கட்டப்பட்டவை அல்ல.
7. முடிவுரை:
கோயில் கட்டுவதையும் விக்கிரகங் களை வணங்குவதையும் ஆதி சங்கரர் எதிர்த்தார் ஏனென்றால் எங்கும் எதிலும் நிறைந்த கடவுளை ஓரு கோயில் வளாகத்திலோ விக்கிரகத் திலோ இருப்பதாக நம்புவது சரியல்ல என்று அவர் கருதினார். சங்கரர் தர்க்க வாதத்தில் சிறந்தவர். மற்றும் சைவமதத்தைச் சார்ந்தவர். இவர் இளமையிலேயே கி.பி.830-ல் இமய மலையில் உள்ள கேதார் நாத்தில் சந்தேகத்திற்கு உரிய சூழ்நிலையில் இறந்து போனார். இவர் புத்த மதத் தின் வழியில் சைவ மதத்தை வளர்த் தார். பல சங்கர மடங்களை (பூரி.துவா ரகா சிருங்கேரி) உருவாக்கினார்.
சங்கரருக்கு பின் வாழ்ந்த இராமானுஜர் (1017 -1037) சங்கரரின் அத்வைத தத்துவத்திற்கு எதிராக விசிஷ்டாத்வைதம் என்ற புதிய தத்துவத்தை பரப்பினார். இவர் வைணவ மதத்தில் தென்கலைப் பிரிவை சார்ந்தவர் இவர் கோயில் கட்டுவதையும் விக்கிரக ஆராதனை யையும் சடங்குகளையும் திருவிழாக் களையும் ஆதரித்தார். இவர் பல புத்த கோயில்களை வைணவக் கோயிலாக மாற்றினார். அவைகளில் குறிப்பிடத் தக்கவை ---திருப்பதியில் இருந்த மகாயானப்பிரிவை சார்ந்த புத்தமத கோயிலை வெங்கடேஸ்வரா கோயி லாக மாற்றியது மற்றும் கீழ் திருப் பதியில் இருந்த புத்த மத பெண் தெய்வத்தின் கோயிலை பத்மாவதி தாயார் கோயிலாக மாற்றியது ஆகும். திருப்பதி கோயிலுக்கு ராமானுஜர்  செய்த சேவைகளைப் போற்றும் வகையில் அவருக்கு கோயிலுக்கு உள்ளே ராமானுஜரின் உருவச்சிலை வழிபாடு செய்வதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
மேலே விவரித்தபடி பல கோயில்கள் ஆகமங்களை கடைப்பிடிக் காமல் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் கூட்டம் கோயில் ஆகமத்தின் படி கட்டப்பட்டதா இல்லையா அர்ச்சகர் பிராமணரா இல்லையா அர்ச்சகர் சொன்ன மந்திரத்தை கடவுள் புரிந்து கொண்டாரா என்று எல்லாம் சிந்திப்பது இல்லை மேலும் சில கடவுள் கள் செல்வாக்கு இழப்பதால் புதுப்புது கடவுள்கள் உருவாகின்றன (ராமன் கிருஷ்ணன் கார்த்திகேயன் இலட்சுமி.   கோயில்களை ஆதரிக்கும் அரசர்கள் மதம் மாறுவதால் கோயில்களும் மதம் மாறுகின்றன. அதே போல் மதமாறு கின்ற கோயில்கள் ஆகம விதிகளுக்கு முரண்பட்டவை பல மன்னர்களால் சிறிது சிறிதாக கட்டப்பட்ட கோயில் களும் ஆகமத்திற்கு முரணானது. எனவே ஆகமத்திற்கும் கடவுள் பக்திக்கும் தொடர்பு இல்லை எனக் கூறலாம்.
தற்போது சுதந்திர இந்தியாவில்  பல நூறு மன்னர்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு அவர்களின் சமஸ்தானங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு இந்திய யூனியனில் சேர்க்கப் பட்டன மற்றும் அந்த மன்னர்களுக்கு வெறும் மானியம் மட்டும் வழங்கப்பட் டது. பின்னர் அந்த மானியமும் 1974-_75-ல் ஒழிக்கப்பட்டது. மேலும் தனியாரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வங்கிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள் நாட்டுடைமையாக்கப்பட் டதால் மன்னர்களாலும் பெரும் வணிகர்களாலும் கட்டப்பட்ட கோயில் களை இந்திய அரசு மாநில அரசு
மற்றும் அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கலாம். .இந்த கோயில்களுக்கு எல்லாம் பொதுவான புதிய ஆகமத்தை உருவாக்கலாம். புத்தர் காலப் பள்ளிகளே தற்போது கல்விச் சாலைகளாக அமைந் துள்ளன. இந்த கல்விச்  சாலைகளைப் போல கோவில் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் தேவையான கல்வி முறையை கற்பிக்கவும் ஒரு பல்கலைக் கழகம் அமைக்கலாம். இதனால் அங்கீரிக்கப்படாத கோயில் களையும் நடைபாதை கோயில்களையும் தடுக்கலாம். இதற்கு கர்ப்பத் தடையை முதலில்  எதிர்த்த போப் ஆண்டவர் மதவாதிகள் பின்னாளில் ஏற்றுக் கொண் டதை கூறலாம்.            
(நிறைவு)
-விடுதலை ஞா.ம.,2.4.16

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் கொளுத்திய மனுதர்ம வாசகங்களைக் காணீர்!!


டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தீவைத்துக் கொளுத்திய மனுதர்ம நூலின் 40 விதிகள்
1.  'எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலா காது'' (10 : 147)
2. ''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).
3. ''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற் குணமின்மை இவற்றையுடையவனா யினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).
4. ''அன்றாட வேள்விகள் அய்ந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).
5. ''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).
6. இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).
7. 'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).
8. மாதர்க்குப் பிறவியைத் தூய்மை யாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளை யுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).
9.  பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்பேது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத் துனன் அல்லது தன் கணவ னுக்கு ஏழு தலை முறைக்குட் பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் . ( அத் 9. சு.59)
10.  கணவன் துராசாரமுள் ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்க வேண்டியது. ( அத் 5. சு.154)
11.  பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத் தில் கணவன் ஆக்ஞை யிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. ( அத் 5. சு.148)
12 . பெண்களையும், பிராமணரல்லாதா ரையும் கொல்லுதல் பாதகமாகாது. ( அத் 11 சு.65)
13. தனக்கு பொக்கிஷநாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும் அரசன் அதிகத் தீர்வையை ஏற்படுத்தி பிராமணர் களுக்குக் கோபம் வரச் செய்யக்கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனை யோடும். வாகனத்தோடும் அழிந்து போகும் படி சபிப்பார்கள். (அத் 9. சு.343)
14. வைதீகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிரா மணனே மேலான தெய்வம்.( அத் 9. சு.317)
15 . ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிரா மணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந் தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.
அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராம ணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது. ( அத் 8. சு.38)
16. பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்ட னையாகும். மற்ற வருணத் தாருக்கு கொலைத் தண்டனை யுண்டு. ( அத் 8. சு.379)
17. சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக் கூடாது. (அத் 4. சு.135-6)
18. பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யா மலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண் டும். (அத் 8. சு.380)
19. பிராமணனுக்கு மங்களத் தையும், சத்திரியனுக்குப் பலத் தையும், வைசியனுக்குப் பொரு ளையும் , சூத்திரனுக்குத் தாழ் வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இட வேண்டியது. (அத் 2. சு.31-32)
20. பிராமணனுக்குப் பஞ்சு நூலாலூம் சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசிய னுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண் டியது. (அத்2. சு.44)
21. பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வை யினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. (அத்3.சு,241) சிரார்த்த உணவு சூத்திரனுக்குக் கூடாது.
22. எவன் சிரார்த்தஞ்செய்து அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்குப் போடு கிறானே அந்த மூடன் கால சூத்திரமென் னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (அத் 3. சு. 249)
23. ''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).
24. அந்த சிரார்த்தத்தில் (சூத்திர னுக்கு தானஞ்செய்யப்பட்ட சிரார்த்தத் தில்) புசித்த பிராமணன் தன் மனைவி புணர்ச்சி யினாசையால் வந்தபோதிலும், அவளுடன் அன்று சம்போகஞ் செய்தால் அவளுடைய மலத்தில் அந்த மாதம் முழுவதும் அவனுடைய பிதுர்க்கள் மூழ்குகிறார்கள். (அத்.3.சு .250)
25. சூத்திரன் என்பவன் ஏழு வகைப் படும் 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன். 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன். 4. விபசாரி மகன். 5. விலைக்கு வாங்கப் பட்டவன். 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 7. தலைமுறை தலை முறையாக ஊழியம் செய்கிறவன். (அத் 8. சு. 415)
26. சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவ னத்திற்காவது அல்லது இரண்டிற்கு மாவது, பிராமணனையே தொழ வேண் டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)
27. பிராமணர்களை வழிபடாததனா லும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத் திரத் தன்மை அடைந் தார்கள். (அத்10. சு.43)
28. பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)
29. சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்க லாம், பிராமணனுக்குத் 29. தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத் திருக்கிறார். (அத்.8. சு 413)
31. சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் செல்ல வேண்டியது, அப் படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது. (அத் 8. சு. 235)
32. சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் ; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண் டென்று தோன்றுகிறது (அத் 1. சு.91)
33. யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும் . ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும்.
(அத். 7. சு.24)
34. செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத் காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)
35. சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்க வனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோக மானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது . அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உப சரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்ய வேண்டி வரும். (அத்.10.சு.129)
36. சூத்திரன், பிராமணர்களைத் திட்டி னால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
37. சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவை களைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். (அத்.8.சு.271)
38. சூத்திரன் பிராமணனைப் பார்த்து நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய் தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (அத்.8. சு.272)
39. சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆச னத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத்.8.சு.281)
40. சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்கு கிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்க வேண் டும் அடித்தால் கையையும் , உதைத்தால் காலை யும் வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.280)
-விடுதலை ஞா.ம.2.4.16