- சித்திரபுத்திரன் -
-விடுதலை,16.6.17
கடவுள், மதம், சாதி மற்றும் வேதம் குறித்து பகுத்தறிவு விளக்கங்கள் இப்பகுதியில் இடம்பெறும்.
இராமானுஜர்: புனைவும் உண்மையும் - முனைவர் இரா.நாகசாமி (2008)
விவரங்கள்எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்பிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2015 வெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2015
படித்துப் பாருங்களேன்...
RAMANUJA MYTH AND REALITY - Dr.R.NAGASWAMY
இந்தியத் தத்துவ வரலாற்றில் அத்வைத மரபை உருவாக்கிய ஆதிசங்கரர், துவைத மரபை உருவாக்கிய மத்துவர், விசிஷ்டாத்துவ மரபை உருவாக்கிய இராமானுஜர் என்ற மூவருக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு. பிரம்ம சூத்திரம் என்ற நூலுக்கு மூவரும் உரை எழுதப் புகுந்து மூன்று வகையான தத்துவக் கோட்பாடுகளை உருவாக்கியமை அனைவரும் அறிந்ததுதான். இவர்கள் மூவரையும் மையமாகக் கொண்ட தத்துவ விவாதங்கள் ஒருபுறம் இருக்க, வாய்மொழி வழக்காறுகள் பலவும் இவர்களைக் குறித்து உருவாகியுள்ளன. வரலாற்று நிகழ்வு களுடனும் வரலாற்று மாந்தர்களுடனும் இவை இணைந்து நின்று, புனைவு எது? உண்மை எது? என்ற மயக்கத்தை உருவாக்கியுள்ளன.
இராமானுஜரைப் பற்றிய செய்திகளில் அழுத்தம் பெறுவது, அவர் ஒரு சீர்திருத்தவாதி என்பதாகும். இத்துடன் தமிழக வைணவர்கள் ‘கோவில்’ என்ற சொல்லால் குறிக்கும் திருவரங்கம் கோவிலில் அறங்காவலர் குழுவுடன் இவரைத் தொடர்புபடுத்தும் செய்திகளும், சோழ மன்னனின் பகைமைக்கு ஆளாகி அல்லல்பட்டது குறித்த செய்திகளும் வாய்மொழியாக மட்டுமின்றி எழுத்து வடிவிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றை எல்லாம் கேள்விக்குட்படுத்தியுள்ளது இந்நூல்.
நூலாசிரியர் தமிழ்நாடு அரசின் தொல் பொருள் துறையின் இயக்குநராகவும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். தொல்லியல் அறிவைப் பரவலாக்கிய பெருமை இவருக்குண்டு. தமிழக நடுகற்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றைத் தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தியவர். ‘கல்வெட்டு’ என்ற பெயரில் ஆய்வு இதழ் ஒன்றையும் நடத்தியவர்.
இந்நூலின் முன்னுரையில் இராமானுஜரைப் பற்றிப் புனையப்பட்ட புனைவுகளும் பழமரபுக் கதைகளும் எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லாதவை என்று குறிப்பிடுவதுடன் தம் நூலானது கல்வெட்டு, ஆவணங்கள் ஆகியனவற்றின் துணை யுடன் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் தாம் வலியுறுத்தும் அல்லது வெளிப் படுத்தும் உண்மைகள் எவை என்பது குறித்து அவர் வரையறைப்படுத்துவன வருமாறு:
* இராமானுஜர் திருவரங்கம் கோவில் நிர்வாகத்தில் எவ்விதப் பங்கையும் செய்ய வில்லை.
* சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் காட்டி யவர் அல்லர். அடிப்படையில் அவர் ஒரு வேதாந்தி மட்டுமே.
திருவரங்கம், காஞ்சி, திருப்பதி ஆகிய வைணவத் தலங்களில் உள்ள மூல ஆவணங்கள், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றின் துணையுடன் இராமானுஜரின் உண்மை வரலாற்றைத் தாம் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இச்செய்திகளின் பின்புலத்தில் இந்நூல் நுவலும் செய்திகளை இனிக் காண்போம்.
வாழ்க்கை
மூன்றாம் இராஜேந்திரசோழனின் திருவரங்கம் கோவில் கல்வெட்டு, விஜயகந்த கோபாலன் என்ற தெலுங்குச் சோழனின் திருப்பதிக் கோவில் கல் வெட்டு, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இராமானுஜர் பிறந்த ஆண்டு கி.பி. 1017 ஆகும்.
அவர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. அப்படியானால் 1137 வாக்கில் அவர் இறந்திருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆதாரங்களுள் ஒன்றாக ‘குரு பரம்பரை’ என்ற நூல் குறிப்பிடப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது 16ஆம் நூற்றாண்டில் இது தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக வைணவர்களிடையே நிலவும் ‘வடகலை’, ‘தென் கலை’ என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள், இந்நூலில் இடம்பெறும் கதைகள் நம்ப முடியாதனவாய் உள்ளன என்பதை உணர்ந்துள்ளார்கள். இவ்வுண்மையை இந்நூலைப் பதிப்பித்துள்ள கிருஷ்ணசாமி அய்யங்காரும் தம் முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
குருபரம்பரை நூலில் இராமானுஜர் வரலாறும் இடம்பெற்றுள்ளது. இவ்வரலாறானது, கற்பனை வளத்துடன் வாய்மொழிச் செய்திகளை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள காலவரிசை வரலாற்றுடன் தொடர்புடையதல்ல. முற்றிலும் புராணச் சார்பு உடையது.
இராமானுஜர் தம் மனைவியுடன் முரண் பட்டுத் துறவியானவர். இது குறித்துச் சில கதைகள் உள்ளன. சாதி வேறுபாட்டை வெறுத்து வந்த இராமானுஜர் திருக்கச்சி நம்பி என்ற சூத்திரரைத் தன் வீட்டிற்கு விருந்தினராக அழைத் துள்ளார். அவரும் அழைப்பை ஏற்று இராமானுஜர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இராமானுஜர் வீட்டில் இல்லை. திரும்பிப் போகும் அவசரத்தில் நம்பி இருந்ததால் தன் கணவனது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இராமானுஜரின் மனைவி அவருக்கு உணவு படைத்தார். உணவுண்டபின் தான் பயன்படுத்திய இலையைத் தாமே எடுத்து வெளியில் போட்டார்.
இராமானுஜர் திரும்பி வரும்போது அவரது மனைவி திருக்கச்சி நம்பி உணவுண்ட இடத்தைச் சாணத்தால் மெழுகிக் கொண்டிருந்தார்.
இக்கதையின் மற்றொரு வடிவப்படி திருக் கச்சி நம்பி தான் உணவுண்ட இலையை எடுக் காமல் போய்விட்டார். இராமானுஜரின் மனைவி குச்சி ஒன்றினால் அதை அப்புறப்படுத்தலானார். அச்சமயம் அங்கு வந்த இராமானுஜர் திருக்கச்சி நம்பி தன் வீட்டில் உணவு உண்டு திரும்பிச் சென்றதை அறிந்துகொண்டார்.
இவ்விரு கதை வடிவங்களிலும் இராமானு ஜரது மனைவியின் சாதிய மேலாண்மை வெளிப் படுகிறது. இராமானுஜரும் இவ்வாறே கருதினார். இதனால் தன் மனைவியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் துறவியானார்.
மற்றொரு கதை வடிவின்படி நம்பி, தன் மனைவியுடன் இராமானுஜர் வீட்டில் சில காலம் தங்கி இருந்தார். இதை விரும்பாத இராமானுஜரின் மனைவி, நம்பியின் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இதனால் மனம் நொந்து போய் இராமானுஜரின் வீட்டை விட்டு நம்பி வெளியேறினார்.
இந்நிகழ்வைப் பொறுக்க இயலாது தம் மனைவியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு இராமானுஜர் துறவறம் மேற்கொண்டார்.
இக்கதை வடிவங்களில் இடம் பெற்றுள்ள ஒரு பொதுவான செய்தி, தம் மனைவியைப் பின்னர் அழைத்துக் கொள்வதாகப் பொய் கூறிவிட்டு பிறந்த வீட்டிற்கு அனுப்பியதாகும். இப்பொய்யை உண்மை என்று நம்பியே அவரது மனைவி பிறந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவியிடம் கூறாமலேயே இராமானுஜர் துறவறம் மேற்கொண்டுள்ளார்.
இச்செயல் அவரது பொய்மையை வெளிப் படுத்துகிறது என்பது ஆசிரியரின் வாதமாகும்.
கொலை முயற்சிகள்
இராமானுஜரின் வாழ்வில் அவரைக் கொலை செய்ய முயன்ற சில நிகழ்வுகள் நடந்துள்ளன. முதலாவது கொலை முயற்சி அவரது குருவான யாதவப் பிரகாசரால் நிகழ்ந்துள்ளது. இக்குரு அத்வைத நெறி சார்ந்தவர். இராமானுஜரைக் காசிக்கு அனுப்பி, கங்கையில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும் என்பது இவரது திட்டமாக இருந் துள்ளது. தம் உறவினன் கோவிந்தன் என்பவனது உதவியால் குருவின் சதியில் இருந்து இவர் தப்பி காஞ்சிபுரம் வந்தார். மீண்டும் அதே குருவிடம் கல்வி பயின்று அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வந்துவிட்டார்.
இதுபோன்ற, அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகள் அவரது வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு முயற்சியிலும் ஒரு குறிப் பிட்ட பிரிவினர் கொலைகாரர்களாகச் சித்திரிக்கப் படுகின்றனர். திருவரங்கம் கோவில் பெரிய அர்ச்சகர் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார். சைவம் சார்ந்த மன்னன் ஒருவனும் இத்தகைய கொலை முயற்சியில் ஈடுபடுகிறான். இறுதியாக திருவரங்கம் கோவிலில் பணிபுரியும் அவரது சமயப் பிரிவைச் சேர்ந்தவர் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். வன்முறையான வழியில் கோவில் பணியில் இருந்து அவரை இராமானுஜர் நீக்கி விடுகிறார்.
கொலை முயற்சி தொடர்பான செய்திகள் அனைத்தும் அவர்மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டவை என்பது நூலாசிரி யரது கருத்தாகும். அவர்மீது மரியாதை உணர்வை இவை ஏற்படுத்தவில்லை என்று கூறி இச் செய்திகள் அனைத்தையும் புனைவுகள் என்று ஒதுக்கி விடு கிறார்.
சோழ மன்னன் இராமானுஜரைக் கொல்ல முயன்ற போது அவர் தன் சந்நியாச உடையைக் களைந்து வெள்ளுடை தரித்து தப்பியோடியதாக ஒரு செய்தி உண்டு. இந்நிகழ்வில் அவரது சீடனான கூரத்தாழ்வானின் கண்கள் சோழ மன்னனால் பறிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இடம்பெறும் சோழ மன்னனாக முதலாம் குலோத்துங்கச் சோழனை வைணவ வரலாற்றாசிரியர்கள் முதலில் குறிப்பிட்டார்கள். இராமானுஜரின் மத்திய காலத்தில் அவர் திரு வரங்கம் கோவிலில் வாழ்ந்த போது இது நிகழ்ந்த தாகக் கூறினார்கள்.
திருவரங்கம் கோவிலில் ஏறத்தாழ எண்பது கல்வெட்டுக்கள், முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை. நிலம், தங்கம், கால் நடைகள் ஆகியன ரங்கநாதரின் வழிபாட்டிற்கும், திருவிழாச் செலவுகளுக்கும் வழங்கப்பட்டதை இக்கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
முதற் குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தது தொடங்கி அவன் ஆட்சி முடியும் வரையிலான காலத்தைச் சார்ந்தவை இக்கல்வெட்டுக்கள். தான் பிறந்த பூச நட்சத்திரத்தில் ரங்கநாதருக்குத் திரு விழா நடந்த அவன் சொத்துக்களைக் கொடை யாக வழங்கிய செய்தியும் இக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது. ரங்கநாதர் மீதான அவனது பக்தி உணர்வை இது வெளிப்படுத்துகிறது. அவன் மட்டுமின்றி அவனது பட்டத்தரசியரும் தளபதி களும், பிற அதிகாரிகளும், குலோத்துங்கன் ஆட்சிக் காலம் முழுவதும் திருவரங்கம் கோவிலுக்குக் கொடைகள் வழங்கியுள்ளமை இக்கல்வெட்டு களில் பதிவாகியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக அரங்கநாதர் கோவில், முதலாம் குலோத்துங்கனது நேரடிக் கண்காணிப்பில் இருந்துள்ளது. ‘ஸ்ரீ காரியம்’ என்ற பெயரிலான நிர்வாக அதிகாரிகளை அவனே நியமித்துள்ளான்.
இச்செய்திகள் எல்லாம் வைணவ ஆச்சாரி யரான இராமானுஜரை முதலாம் குலோத்துங்கன் கொல்ல முயன்றான் என்ற கருத்துக்கு எதிராக உள்ளன. ‘கோவில் ஒழுகு’ நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் இராமானுஜரைக் கொல்ல முயற்சி செய்தவன் முதலாம் குலோத்துங்க சோழன் அல்லன் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். முதற் குலோத்துங்கனுக்கு எதிரான சான்றுகள் இல்லாத நிலையில் கொலை முயற்சி இரண்டாம் குலோத்துங்கனுக்கு மாற்றப்பட்டு விட்டது.
இராமானுஜர் 1017இல் பிறந்தவர் என்பதை வைணவ வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். 120 வயது வரை வாழ்ந்த அவர் தன் மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க கர்நாடகம் சென்று அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்து பின் திருவரங்கம் திரும்பி தமது 120 ஆவது வயதில் சமாதியடைந்ததாக நம்புகின்றனர். இரண்டாம் குலோத்துங்கன் 1133இல் தான் ஆட்சிக்கு வந்தான். அப்போது இராமானுஜருக்கு வயது 116.
அவன் ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் அவர் மரணமடைகிறார். இதனால் சோழநாட்டில் இருந்து அவர் வெளியே கர்நாடகத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற செய்தி வலுவிழந்து போகிறது.
* * *
‘கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்’ என்ற நூலின் வரலாற்று மதிப்பு குறித்து ஆராய்ந்து, அதில் இடம்பெறும் இராமானுஜர் சரித்திரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற முடிவுக்கு நூலாசிரியர் வருகிறார். இம்முடிவின் ஊடாக இஸ்லாமியர்கள் இந்துக்கோவில்களை இடித்துப் பள்ளிவாசல் கட்டினர் என்று குறிப்பிடுகிறார். இது ஆட்சியாளர்கள் சிலரின் வழக்கமான செயல் தான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மகேந்திர பல்லவன் சமணர்களின் பாழிகளை இடித்துச் சைவக் கோவில் கட்டியதை சேக்கிழார் பெரிய புராணத்தில் பதிவு செய்துள்ளாரே! நாகப் பட்டினம் பௌத்தப்பள்ளி ஒன்று சைவக் கோவி லாக மாற்றப்பட்டதே! இன்று சைவக் கோவிலாக விளங்கும் நாகர்கோவில் நாகராஜர் கோவிலுக்கு வழங்கப்பட்ட கொடை ‘பள்ளிச் சந்தம்’ என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதே! சமண பௌத்தப் பள்ளிகளுக்கு வழங்கும் கொடை தானே ‘பள்ளிச்சந்தம்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும்.
சிறந்த வரலாற்றறிஞரான ஆசிரியர் இச் செய்திகளை அறிந்தவர்தான். ஆனால், அவரது இஸ்லாமிய எதிர்ப்பு இச்செயல்களை மறக்கும் படி செய்துவிட்டது.
சீர்திருத்தவாதி
ஒரு சீர்திருத்தவாதி என்ற அடையாளம் இராமானுஜருக்கு உண்டு. சாதிய மேலாண்மை யினால் அவரது காலத்தில் கோவில் நுழைவென்பது சில சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்தது. அனுமதி மறுக்கப்பட்ட சாதியினரைக் கோவிலுக்குள் அழைத்து வந்தவர் இராமானுஜர் என்ற கருத்து உண்டு.
ஆன்ம விடுதலையென்பது அந்தணர், வைசியர், சத்திரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியதாய் இருந்தது. இதை ராமானுஜர் தம் ஸ்ரீ பாஷ்யத்தில் குறிப்பிட்டுள்ளார். சூத்திரர்கள் இத்தகுதிக்கு உரியவர்கள் அல்லர் என்றும் குறிப் பிட்டுள்ளார். இதில் அவர் எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை என்பது நூலாசிரியரின் கருத்தாகும்.
இராமானுஜருக்கு முன்பே இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. ‘வியாச பிரம்மசூத்திரம்’ என்ற வடமொழி நூல் சூத்திரர்கள் மோட்சம் செல்ல அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. ஏனெனில் வேதம் அறிந்தவர்கள் மட்டுமே மோட்சம் செல்ல முடியும். வேதம் கற்க சூத்திரர்களுக்கு அனுமதி கிடையாது.
இக்கருத்தைக் கூறும் சுலோகத்திற்கு விளக்க உரை எழுதிய சங்கரர், வேதங்களைக் கற்றறிந்து சூத்திரர்கள் மோட்சம் அடைய வழியில்லை என் பதில் அய்யம் கொள்ளவில்லை. இருந்தாலும் மாற்று வழியாக இதிகாசங்களையும் புராணங் களையும் கேட்பதன் வாயிலாக மோட்சம் அடை யலாம் என்று வழிகாட்டியுள்ளார். தாம் காட்டிய வழியை மகாபாரதம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் சங்கரர் குறிப்பிட்டுள்ளார். (ஏன் புராணப் பிரசங்கங்கள் வீதிகளிலும், வேதக் கல்வி பாது காப்பான மடங்களிலும் நடைபெறுகிறது என்பது இப்போதுதான் புரிகிறது.)
* * *
திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரைச் சந்தித்து “ஓம் நமோ நாராயணாய” என்னும் புனித மந்திரத்தை ராமானுஜர் கற்றறிந்தார். இம் மந்திரத்தை யாருக்கும் ராமானுஜர் கூறக்கூடாது என்று அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு, “அவ்வாறு கூறமாட்டேன்” என்று உறுதிமொழி அளித்தார். ஆனால், உறுதிமொழியை மீறி இம்மந்திரத்தை அனைவருக்கும் கூறினார்.
திருக்கோஷ்டியூர் நம்பி இது குறித்து அவரிடம் கேட்ட போது, “குருவுக்கு அளித்த வாக்குறுதியைத் தாம் மீறியதால் நரகத்திற்குச் சென்றாலும் இதைக் கேட்டறிந்தவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்” என்று விடையளித்தார். இதுவும் இராமானுஜரின் சீர்திருத்த உணர்வுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப் படுகிறது. ஆனால் ராமானுஜரின் இச்செயல் வாக்குறுதியை மீறும் பண்புக்கு எடுத்துக்காட்டு என்பது நூலாசிரியரின் வாதமாகும்.
ராமானுஜருக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருமழிசை ஆழ்வார் “ஓம் நமோ நாரா யணாய” என்ற அஷ்ட சக்ர மந்திரத்தைக் கூறு பவர் சொர்க்கத்தை அடைவர் என்று குறிப்பிட்டு உள்ளார். இம்மந்திரம் இருக்கும்போது ராமானுஜர் “ஓம் நமோ நாராயணாய நமக” என்ற மந்திரத்தை உரக்கக் கூற வேண்டிய அவசியமில்லை என்பதும் நூலாசிரியரின் கருத்தாக உள்ளது.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தை வைணவக் கோவில்களில் ஓதவும் பாடவும் இராமானுஜர் ஏற்பாடு செய்ததாகக் கூறுவர். குறிப்பாகத் திரு வரங்கம் கோவிலில் திருவாய்மொழி ஓத அவர் ஏற்பாடு செய்தார் என்ற செய்தியுண்டு. இச் செய்திகள் உண்மையல்ல என்பதையும், அவருக்கு முன்பே இப்பழக்கம் நடைமுறையில் இருந்தது என்பதையும் கல்வெட்டுச் சான்றுகளின் துணை யுடன் ஆசிரியர் நிறுவியுள்ளார்.
கோவிலை நிர்வகித்தல், பிரபந்தத்திற்கு விருந்தியுரை எழுதுதல், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் என உலகியல் சார்ந்த நடவடிக் கைகளில் இராமானுஜர் ஈடுபடவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் அவர் மேற்கொண்டதாக அவரது சீடர்கள் கூறியுள்ளார்கள். சீடர்களின் கூற்றுக்கு வரலாற்றில் இடமில்லை. இதுவே இராமானுஜர் குறித்த நூலாசிரியரின் இறுதி மதிப்பீடாக உள்ளது.
நூலின் செய்தி
இந்நூலை முழுமையாகப் படித்தவுடன் இந்நூல் ஆசிரியர் குறித்தும், நூலின் செய்தி குறித்தும் சில அவதானிப்புகள் தோன்றுகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
நூலாசிரியரின் ஆழ்ந்த வரலாற்றறிவு. குறிப்பாகக் கல்வெட்டியலில் அவரது புலமை.
வைணவ சமயம் தொடர்பான அவரது அறிவு.
வடமொழி, வேதச் சார்பான நிலைப் பாடு.
சமூக சீர்திருத்தங்கள் குறித்த புறக்கணிப் புணர்வு.
இராமானுஜர் என்ற வரலாற்றுப் பாத்திரத்தின் மீதான புனைவுகளை நீக்கி அவரது உண்மையான உருவத்தைக் காட்டுவது என்பதையே இந்நூலின் அடிப்படை நோக்கமாக அவர் கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவரைக் குறைகூற முடியாது. இம்முயற்சியில் அவர் முன்வைக்கும் சில கருத்துகள் கடுத்த வைணவர்களைக் கோபப்படுத்தும் தன்மையன. அவை குறித்து இங்கு விவாதிக்கவில்லை. இது அவர்கள் பாடு.
புனைவுகள் என்று தாம் கருதுவனவற்றை வரலாற்றுச் சான்றுகளின் துணையுடன் ஆசிரியர் நீக்கியுள்ளார். இம்முயற்சியில் கல்வெட்டுச் சான்று களை அவர் பயன்படுத்தியுள்ளார். வரலாற்று ஆண்டுகளை மட்டுமே சான்றாகக் கொண்டு ஏனையவற்றை வெறும் புனைவுகள் என்று ஒதுக்கி விட்டு எழுதும் வரலாற்று வரைவு இன்று கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.
புனைவுகளில் புதைந்துள்ள உளவியல் பதிவு களையும் எதிர்க்குரலையும், மேட்டிமை ஆதரவுப் போக்கையும் குறியீட்டுப் பொருளையும் அகழ்ந் தெடுக்கும் ஆய்வு முறை உருவாகிவிட்டது. வாய் மொழிக் கதைகளுக்குள்ளும் புராணங்களுக்குள்ளும் பொதிந்துள்ள உண்மைகளை கோசாம்பி, ரொமிலா தாப்பர் போன்ற சிறந்த வரலாற்றறிஞர்கள் வெளிக் கொணர முயன்றுள்ளனர். சான்றாக விருத்தா சுரன் என்ற அசுரனின் பிடியில் இருந்து ஆறுகளை இந்திரன் விடுவித்ததாகக் குறிப்பிடும் புராணக் கதைக்கு கோசாம்பி தரும் பின்வரும் விளக்கத்தைக் குறிப்பிடலாம்.
“விபாலி நதியை அதன் இயல்பான போக்குக்கு மீட்டு வந்ததற்கு இந்திரன் பாராட்டப் படுகிறான். அதனால் அந்த நதி வெள்ளம் அதன் கரையெங்கணும் பாய்ந்து அதனை வெள்ளக் காடாக்கியது. அதன் மூலம் அந்தப் பிரதேசத்தின் விவசாயத்தையும் நகர வாழ்க்கை நெடுங்காலம் நீடிக்கக்கூடிய மற்றும் நகர மக்களைப் பராமரித்து வரக்கூடிய சாத்தியப் பாட்டையும் அழித்தது. இந்த அழிவு பற்றிய உண்மை மறுக்க முடியாதது. இதற்கான காரணங்களை மொகஞ்சதாரோ அகழ் வாய்வில் கண்டறியப்பட்ட எண்ணற்ற பெரு வெள்ளங்களின் வண்டல் படிவங்கள் உட்பட நமக்குக் கிடைக்கக்கூடிய சகல விவரங்களி லிருந்தும் கண்டுணர வேண்டும்.”
திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரி கத்தில் உருவான அணைக்கட்டுக்களை ஆரியர்கள் உடைத்து அந்நாகரிகத்தை அழித்ததாக, கோசாம்பி பொருள் கொள்கிறார்.
இதுபோல் ராமானுஜர் தொடர்பான புனைவு களின் உள்ளார்ந்த பொருளை ஆராய இட முள்ளது. ‘அரசு மதம்’ என்று கூறத்தக்க அளவில் சைவம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் இப்புனைவுகள் உருவாகியுள்ளன என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.
-'கீற்று' இணையம்