திங்கள், 5 ஜூன், 2017

கடவுள், மதம், வேதம்

02.02.1930- குடிஅரசிலிருந்து... 
அய்க்கிய இந்திய சங்கத்தாரின் வரவேற்பு

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும், உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றி பேசிய புகழ் வார்த்தைகளும், தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்துகொண்ட மாதிரியும் பார்த்துதான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மலாய் நாட்டுப் பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரதாபங்களைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும், ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறைபட்டு தனது கொள்கைகளுக்கும், தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும், ஊக்கமும் ஏற்பட்டு விட்டதென்றும், யோக்கியமான எவ்வித அரசியல்காரர்களும், மத இயல்புக்காரர்களும், சமுக இயல்புக்காரர்களும், அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்படவேண்டியதில்லை என்றும் சுயமரியாதையும், சமத்துவமும், அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சிய மென்றும், ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்றுதான் உறுதியாய்க் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.

நாங்கள் இங்கு எந்தக் கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ, ஆதரவையோ உண்டாக்க வரவில்லையென்றும், மற்றவர்களைப்போல் பணம் வசூல் செய்து மூட்டை கட்டிப்போக வரவில்லையென்றும், உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோ மென்றும் அதற்குத் தக்க உதாரணங்கள் காட்டிப் பேசினார். கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

கடைசிப் போரின் முதல் பலன்
13.04.1930- குடிஅரசிலிருந்து...

திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப் பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்திப் போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம்  காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக்கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும். ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும்.

ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக் கின்றோம். கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப்போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்துவார்களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார்களேயானால் அது கடைசிப் போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப்பார்த்துதான் ஆகவேண்டும்.

சைனா - சைவம் -சித்திரபுத்திரன்
09.02.1930 - குடிஅரசிலிருந்து...



சைவன் : - அய்யா தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?
வைணவன் : - ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டுகால் பிராணிகளில் ஏணி வகையராவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகையராக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டுமரம் முதலியவைகளையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக் காரர்களைப் பின்பற்றுவ தாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.

சைவன் : - அப்படியா இது நல்ல சைவம்தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போகவேண்டும். நான் போய்விட்டு வருகிறேன். (என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ? என்று நினைத்து ஓடி விட்டார்.)

புரட்டு
11. 05.1930 -குடிஅரசிலிருந்து...

பாமர மக்களை ஏமாற்றி, படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது.

கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல்வதுண்டு. நாட்டில் செய்யப்படும் வதுக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசி யத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு. அவ் வாறாகவே பஞ்சமர்கள் என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்ன வென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறியாத தலைவர்களும், கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன.

இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகா நாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்று கிறோம். தீர்மானத்தைச் சபையின்முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை ஒரே நொடியில் பறந்துவிடும் என்ற புரட்டுச்சொல்லை வழக்கம் போலச் சொல்லிவிட்டார். மானமிழந்து, உரிமையிழந்து, அடிமை வாழ்வு பெற்று நிற்கும் காலத்தில் தோன்றாத சுயமரியாதை உணர்ச்சியும், காரியத்தில் பற்றும், ஊக்கமும், அரசியல் சுதந்திரம் பெற்று அரசாங்க மாளிகையில் (வர்ணாசிரமிகள்) வீற்றிருக்கும்போது ஏற்படுமா? என்ற உண்மையை நண்பர்கள் ஆராய வேண்டுகிறோம். கஷ்டமுற்ற காலத்தில் கடவுளை நினையாத மக்கள் சுகப்படும் காலத்தில் நினைப் பதில்லை என்பதுபோல அந்நிய ஆதிக்கத்தால் நசுக்குண்டு கிடக்கும் காலத்திலே ஜாதி சமய வேற்றுமை களைந்து ஒற்றுமையடைய மனதில்லாத மக்களா சுயராஜ்யப் போரை நடத்தப் போகிறார்கள்?

எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.

16. 02. 1930 -குடிஅரசிலிருந்து..

-விடுதலை,27.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக