செவ்வாய், 22 ஜூலை, 2025

ஆகமக் கோயில் இன்று இல்லவே இல்லை!

 

ஆசிரியருக்குக் கடிதக் கட்டுரை வாசகர்கள் ஆழ் சிந்தனைக்கு… ஆகமக் கோயில் இன்று இல்லவே இல்லை!

மறவன் புலவு க. சச்சிதானந்தன்

வைகாசி 1 வியாழன் (15.05.2025)

மறவன் புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்.

ஆகம விதிகளுக்கு அமைந்த சைவக் கோயில்கள் உலகில் இக்காலத்தில் இல்லவே இல்லை. பல்லவர் சோழர் காலங்களில் எழுதிய ஆகம விதிகளுக்கு அமையக் கட்டிய கோயில்கள் நாயக்கர் காலங்களில் ஆகம விதி மீறலைத் தொடங்கின. பல்லவர் அமைத்த காஞ்சிபுரத்தில் அமைந்த அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயிலில் அம்மன் கோயில் இல்லை. அருள்மிகு தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் அம்மன் கோவிலைக் கட்டவே இல்லை. சிவனும் உமையும் சேர்ந்ததே இலிங்க வடிவம் என்று ஆகம விதிக்கு அமைய நாயக்கர் காலத்தில் அருள்மிகு தஞ்சைப் பெருவுடையார் கோயில் வளாகத்துள் அருள்மிகு அம்மன், பிள்ளையார், முருகன் கோயில்களைக் கட்டினார்கள். ஆகம விதிகளை மீறினார்கள்.

மகுடாகமத்தைப் பின்பற்றும் சிதம்பரம் அருள்மிகு சிவகாமி அம்மையார் உடனுறை நடராசப் பெருமாள் திருக்கோயில் மேலக் கோபுர வாயிலில் ஆடுகளைப் பலியிட்டுக் கொண்டிருந்தார்கள். திருக்கோயில் அறங்காவலர்களான தீட்சிதர்களின் ஒப்புதலுடன் ஆகம விதிகளுக்கு முரணாக நடக்கிறீர்கள் எனத் தீட்சிதர்களிடம் தவத்திரு ஆறுமுக நாவலர் முறையிட்டார். ஆகம விதிகளுக்கு அமைய நடக்குமாறு தீட்சிதர்களுக்கு ஆணை அதன்பின் பலியிடுதலுக்குத் தடை. ஈழத்தில் வாழ்ந்தவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார். தருமபுரம் ஆதீனத்திற்கும் சைவ சமய ஆலோசகராக இருந்தவர். ஈழத்தின் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையைத் தொடக்கி வைத்தவர் சபையின் முதல் தலைவர். திருப்பணி தொடங்கிய பொழுது நவக்கிரகங்களைக் கோயிலுள் நிலை பெறச் செய்யச் சபையினர் விரும்பினர்.

அருள்மிகு சிவன் கோயிலில் நவக்கிரக நிலையிடல் ஆகம விதிகளுக்குப் புறம்பானது எனத் தலைவர் பதவியை உதறி எறிந்தார். நவக்கிரகங்கள் அமைந்த அருள்மிகு சிவன் கோயில்கள் அனைத்துமே ஆகம விதிகளுக்குள் அடங்காத திருக்கோயில்களே. 28 ஆகமங்களும் இதைக் கூறுகின்றன. எனவேதான் சொல்கிறேன், ஆகம விதிகளுக்கு உள் அடங்கிய திருக்கோயில்கள் உலகில் எங்குமே இல்லை என.

கோலாலம்பூர் அருள்மிகு முருகன் கோயிலில் இராசராசேசுவரி திருவுருவத்தை நிலை பெறச் செய்யலாமா எனத் தருமபுர ஆதீனத்திடம் கேட்டனர். அப்பொழுது அங்கு வேத ஆகமப் பாடசாலை முதல்வராக இருந்தவர் சிவத்திரு சுவாமிநாத சிவாச்சாரியார். அருள்மிகு முருகன் கோயிலுள் இராசராசேசுவரி நிலை பெற முடியாது எனக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதுவே தருமபுர ஆதீனத்தின் நிலைப்பாடு எனச் சொன்னார். அதன்பின்னர் கோலாலம்பூரில் இருந்து சிலர் வந்தார்கள். சிவத்திரு சுவாமிநாத சிவாச்சாரியாரைச் சந்தித்தார்கள். என்ன மாயமோ தெரியவில்லை. என்ன கொடுக்கல் வாங்கல் நடந்ததோ அறிய முடியவில்லை. அருள்மிகு முருகன் கோயிலில் இராசராசேஸ்வரி நிலை பெறலாம் எனச் சிவத்திரு சுவாமிநாத சிவாச்சாரியார் கடிதம் எழுதிக் கொடுத்தார்.

இந்த முரண் நிலையை நானே நேரில் தருமபுர ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். தருமபுர ஆதீனம் அவரைக் கண்டித்தது. பணி நீக்கம் செய்தது போலும்! இப்பொழுது மயிலாடுதுறையில் தனியாக வேத ஆகம பாடசாலை நடத்துகிறார். ஆகம விதிகளை அவரவர் தமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள், தமது வசதிக்கு ஏற்ப ஆகமப் பத்ததிகளை எழுதிக் குவிக்கிறார்கள். இப்பொழுது உள்ள சைவக் கோயில் எதுவும் ஆகம விதிகளுக்குள் அமையாதன என்றே மூல ஆகமங்களைப் படித்தவர்கள் சொல்வார்கள்.

ஆகம விதிகளின் மூலங்களைப் படிக்க விரும்புபவர்களுக்காக புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனம் 28 ஆகமங்களையும் வெளியிட்டுள்ளது.

சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,

காமிகம் – திருவடிகள்

யோகசம்  – கணைக்கால்கள்

சிந்தியம் – கால்விரல்கள்

காரணம்-கெண்டைக்கால்கள்

அசிதம் அல்லது அசிதம் – முழந்தாள்

தீப்தம்-தொடைகள்

சூட்சுமம் – குய்யம் (அபான வாயில்)

சகசரகம் – இடுப்பு

அம்சுமதம் அல்லது அம்சுமான் முதுகு

சுப்பிரபேதம்-தொப்புள்

விசயம்-வயிறு

நிச்வாசம்- நாசி

சுவயம்புவம் – முலை மார்பு

அனலம் அல்லது ஆக்கினேயம் கண்கள்

வீரபத்திரம் அல்லது வீரம் – கழுத்து

இரெளரவம் – செவிகள்

மகுடம் -திருமுடி

விமலம் – கைகள்

சந்திரஞானம் – மார்பு

பிம்பம் -முகம்

புரோத்தகீதம் – நாக்கு

இலளிதம் – கன்னங்கள்

சித்தம்-நெற்றி

சந்தானம் – குண்டலம்

சர்வோக்தம் -உபவீதம்

பரமேசுரம் – மாலை

கிரணம் – இரத்தினாபரணம்

வாதுளம்- ஆடை

இவற்றின் படிகளை புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் விலைக்குப் பெறலாம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சைவ சித்தாந்தத் துறைக்கு முழுத் தொகுதியையும் நான் அன்பளித்தேன்,ஆகம விதிகளுக்கு அமையக் கட்டிய கோயிலுக்கு அன்று, மனத்தால் கட்டிய கோயிலுக்கே முன்னுரிமை என்றார் சிவபெருமான்

சேக்கிழாரின் பாடல் வரிகளைத் தருகிறேன்.

பெரிய புராணம் 65ஆவது பூசலார் நாயனார் புராணம் பூசலார் நாயனார் மனத்தில் கோயில் கட்டினார். அங்கு சிவனே முழுமுதற் கடவுளாய் எழுந்தருளினார்.

 

பாடல் எண்: 4

அடுப்பது சிவன்பால் அன்பர்க்

காம்பணி செய்தல் என்றே

கொடுப்பதெவ் வகையுந் தேடி

அவர்கொளக் கொடுத்துக் கங்கை

மடுப்பொதி வேணி அய்யர்

மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்

எடுப்பது மனத்துக் கொண்டார்

இருநிதி இன்மை யெண்ணார்.

 

பாடல் எண்:5

மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி

எனைத்துமோர் பொருட்பேறின்றி என்செய்கேன் என்று நைவார்

நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதிய மெல்லாம்

தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.

 

பாடல் எண் : 6

சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி

நாதனுக் கால யஞ்செய் நலம்பெறும் நன்னாள் கொண்டே

ஆதரித்து ஆக மத்தால் அடிநிலை பாரித் தன்பால்

காதலில் கங்குற் போதுங் கண்படா தெடுக்க லுற்றார்.

 

பாடல் எண்:7

அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம்

வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான

முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு

நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.

 

பாடல் எண் : 8

தூபியும் நட்டு மிக்க சுதையும்நல் வினையுஞ் செய்து

கூவலும் அமைத்து மாடு கோயில்சூழ் மதிலும் போக்கி

வாவியுந் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்

தாபனம் சிவனுக் கேற்க விதித்தநாள் சாரும் நாளில்,

 

பாடல் எண் :9

காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற

மாடெலாஞ் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்

நாடமால் அறியா தாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னால்

ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.

 

பாடல் எண் : 10

நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த

நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் நீயிங்கு

ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் என்று

கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்.

 

பாடல் எண் : 11

தொண்டரை விளக்கத் தூயோன் அருள்செயத் துயிலை நீங்கித்

திண்டிறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்

கண்டுதான் வணங்க வேண்டும் என்றெழுங் காத லோடும்

தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான்.

- விடுதலை நாளேடு, 21.5.25

வியாழன், 17 ஜூலை, 2025

அரசியலுக்காக முருக ப(க்)தர்கள் மாநாடு நடத்தும் இந்து முன்னணி பதில் சொல்லுமா? முருகனை விழுங்கிய ஸ்கந்தன்

 



சிகரம் ச.செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் மதப் பிரச்சினைகளைத் தூண்டி அரசியல் குளிர் காய்வதற்காக ஆர்.எஸ்.எஸ். – சங்பரிவார் கும்பர் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடத்துகிறது. தமிழ்நாட்டில் போற்றப்பட்டு வந்த முருகனும், வடநாட்டு ஸ்கந்தனும் ஒன்றல்ல. வடநாட்டு ஸ்கந்தன் முருகனை விழுங்கியது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

தமிழ்நாட்டுப் பாரம்பரிய கடவுளான முருகன்மீது பிராமணிய செல்வாக்கின் வழி வட நாட்டு ஸ்கந்தமரபு ஏவிவிடப்பட்டது. வடநாட்டில் ஸ்கந்தன், தென்னாட்டில் முருகன் இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இரண்டும் ஒன்றா?

முதலில் ஸ்கந்தனைப் பற்றிச் சிறிது அறிவோம்!

வடநாட்டில் ஸ்கந்தன் ஒரு சிறுதெய்வம்; தமிழ்நாட்டில் முருகன் அப்படி அல்ல. வடநாட்டில் ஸ்கந்தன் வணக்கம், பெருந் தெய்வங்களின் வணக்கம் மேலோங்கும் வரை கணிசமான செல்வாக்கோடு இருந்தது. அப்படி ஒரு செல்வாக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை இருந்ததால்தான் முருகன் வணக்கத்தை ஆக்கிரமிக்க முடிந்தது. ஸ்கந்தனுக்கு இன்னொரு பெயர் ‘சுப்ரமண்யா’. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் ஸ்கந்தன் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பதஞ்சலி முனிவர் ஸ்கந்தன் பற்றி எழுதியுள்ளார். ரிக்வேத காலத்திலேயே ஸ்கந்தன் வணக்கம் துவங்கிவிட்டது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். காளிதாசனின் புகழ் பெற்ற படைப்பான குமாரசம்பவம் ஸ்கந்தனைப் பற்றிய காவியமாகும். ஸ்கந்தனின் இன்னொரு தோற்றம்தான் கார்த்திகேயன். மகாபாரதத்தில் ஸ்கந்தன் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது. வால்மீகியின் இராமாயணத்திலும் ஸ்கந்தன் இடம் பெற்றுள்ளான் என்கிறார்கள். குப்த அரசர்கள் ஸ்கந்தனை வணங்கியவர்கள். குப்த அரசர்களில் ஒரு மன்னன் பெயர் குமார குப்தா இன்னொரு மன்னன் பெயர் ஸ்கந்த குப்தா. ஆதி சங்கரர் கூறிய ஆறு சமயங்களில் ஸ்கந்தனை முன்னிறுத்தும் கவுமார வணக்கம் ஒன்றாகும்.

அதர்வண வேதத்தில் அக்னியின் மைந்தன் என்று குமாரன் (ஸ்கந்தன்) அழைக்கப்படுகிறான். ஆனால் அதே சமயம் ஸ்கந்தன் திருடர்களைக் காப்பவன் என்று வடமொழி நாடகமான “மிருச்சகடிகம்” (Mrichchakatikam) கூறுகிறது.

கீதையில் கண்ணன் கூறுகிறான்.

“Among Generals, I am skanda, the lord of war”

இவை எல்லாம் வடநாட்டில் ஆதி நாட்களில் ஸ்கந்தன் பரவலாக வணங்கப் பட்டிருக்கிறான் என்பதை உணர்த்தும். அவன் இளமை, போர், காதல் அனைத்தின் உருவாகவே இருந்திருக்கிறான். அதனால்தான் வடநாட்டு ஸ்கந்த மரபை தென்னாட்டு முருகன் மீது ஏற்றுவது சுலபமாக இருந்திருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் முருகன் வணக்கம் தொடர்ந்து செல்வாக்கோடு இருந்தது போல், வடநாட்டில் ஸ்கந்தன் வணக்கம் இருக்கவில்லை. பெருந் தெய்வங்களின் வணக்கம் மேலே வரவர ஸ்கந்தன் வணக்கம் பின்னிருக்கைக்குப் போய், அங்கும் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. இன்று ஸ்கந்தன் வணக்கம் வடநாட்டில் கிட்டதட்ட இல்லை. இந்த நிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நேர்ந்து விட்டது.

எனினும் ஒரு சில இடங்களில் ஸ்கந்தன் வணக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அரியானா மாநிலத்தில் சில இடங்களில் ஸ்கந்தன் வழிபாடு இருக்கிறது. அம்மாநிலத்தில் Pehowa என்னும் ஊரில் ஸ்கந்தனுக்கு ஒரு பெரிய கோயில் இருக்கிறது. இங்கு ஸ்கந்தன் பிரம்மச்சாரி.

அதனால் இக்கோயிலில் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பஞ்சாப் மற்றும் மராட்டியப் பகுதிகளில் சிறுசிறு கோயில்கள் அவனுக்கு உண்டு. வங்கத்தில் துர்கைப் பூஜையின் போது ஸ்கந்தனும் சேர்த்து வணங்கப்படுகிறான். ஆனால் தென்னாட்டில் வட கேரளா, தென்கன்னடம் முதலிய பகுதிகளில் ஸ்கந்தன் வணக்கம் என்பது சுப்ரமணிய வணக்கமாக இருக்கிறது.

ஸ்கந்தன் பற்றிய கதைகளை தமிழ் முருகனுக்கு அணிவித்து புதிய ஒப்பனை செய்து விட்டார்கள். புராணங்களை எல்லாம் அவனுக்குச் சொத்தாக்கிவிட்டார்கள். பல புதிய கதைகளையும் புழக்கத்திற்கு விட்டார்கள்.

எடுத்துக் காட்டு வேண்டுமா?

திருஞான சம்பந்தர் சைவத்தின் கொடியை

ஏழாம் நூற்றாண்டில் உயர்த்திப் பிடித்தவர்

சமயக்குரவர் நால்வரில் முக்கியமானவர்.

இவரையே முருகனின் வடிவமாகக்

காட்டும் புராணக் கதைகள் உண்டு.

முருகனை பால முருகன் என்பர். சம்பந்தரும் பாலகர்தான். பாலுக்கு அழும் சம்பந்தரைப் பார்த்து பார்வதி பால் கொடுக்கிறாள். அது சாதாரண பால் அல்ல; ஞானப்பால்! புராணப்படி சிவன் பார்வதியின் மைந்தன் தானே முருகன்! இந்த முருகனின் அவதாரம் தான் திருஞானசம்பந்தர் என்கிறார்கள். அதாவது பார்வதி பால் கொடுத்தது யாருக்கோ அல்ல. தன் மகனுக்குத்தான்!

இந்தக் கதையின் பின்னால் இன்னொரு தந்திரமும் ஒளிந்திருக்கிறது!

சம்பந்தர்தான் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார் என்பது பொதுவான செய்தி. முருகன் அநீதியை, அதர்மத்தை அழிக்கும் ஆண்டவன் என்பது முருகனின் அடையாளம்! இதனால் பெறப்பட வேண்டியது என்ன? முருகன்தான் சம்பந்தர் உருவில் சமணர்களை அழித்தான் என்பது! திறமையாக முருகனை பலிகடா ஆக்கிவிட்டார்கள். கழுவிலேற்றிய நிகழ்வும் உண்மையல்ல.

சமணர்களை வன்முறையால் வீழ்த்தியதை மனிதச் செயல் அன்று, தெய்வச் செயல் என்று நியாயப்படுத்திவிட்டார்கள்.

தமிழ் மூதாட்டி அவ்வை மாட்டுக்காரச் சிறுவனிடம் மாட்டிக் கொண்ட கதை அனைவரும் அறிந்ததுதான். “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று மாட்டுக்காரச் சிறுவன் கேட்ட போது, அதன் பொருளை யோசித்துப் புரிந்து கொள்ளாமல், சுட்டப்பழம் கேட்டாள் அவ்வை. மண்ணில் விழுந்த பழுத்த பழத்தை ஊதிச் சாப்பிட முயன்றபோது, “பாட்டி பழம் சுடுகிறதா” என்று அவன் கேட்க, பாட்டிக்கு அப்போதுதான் புரிந்தது! இருந்தாலும் மாட்டுக்காரச் சிறுவனிடம் அவ்வை தோற்பதா? கூடாது! மாட்டுக்காரச் சிறுவன் முருகன்தான் என்று கதை விட்டார்கள். இப்படிப் பல கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. முருகனின் பெருமையைப் பறைசாற்றுபவை அவை.

மேலே பார்த்தவை எல்லாம் தமிழ்நாட்டுக் கதைகள் இவை முருகனின் பெருமை பேசும்.

வடநாட்டுக் கதைகள் முருகன் பிராமணியப்படு தலைப் பேசும். ஸ்கந்த மரபு தமிழ்நாட்டில் முதல் நூற்றாண்டில் தொடங்கி பல்லவர் காலத்தில் வளர்ச்சி பெற்றது என்று சொல்ல வேண்டும்.

வடநாட்டில் ஸ்கந்தன் ருத்திரனின் மகனாகக் காட்டப்படும் கதைகள் உண்டு. ஆனால் மகாபாரதக் கதைப்படி, அக்னிதான் ஸ்கந்தனின் தந்தை! தமிழ்நாட்டில் இந்தக் குழப்பம் இல்லை. சிவனின் மகன்தான் முருகன்! தமிழ் முருகனுக்கும் வடநாட்டு ஸ்கந்தனுக்கும் பல வேறு பாடுகள் உண்டு.

வடநாட்டில் அக்னியோடு ஸ்கந்தன் இணைக் கப்பட்டிருப்பதுபோல் தமிழ்நாட்டில் முருகன் இல்லை. இங்கு முருகன் கொற்றவை மைந்தன். முருகன் வள்ளியோடும் தெய்வயானையோடும் வீற்றிருப்பது போல் ஸ்கந்தன் இல்லை. அறுபடைவீடு ஸ்கந்தனுக்குக் கிடையாது. அறுபடை வீடு பற்றிய பல கதைகள் முருகனுக்கு இருப்பது போல் ஸ்கந்தனுக்குக் கிடையாது. ஸ்கந்தன் வடநாட்டு மரபின் பிரதி நிதி என்றால், முருகன் தென்னாட்டின் பிரதிநிதி!

சோமாஸ்கந்தர்

சைவ சமயம் மெல்ல, மெல்ல பிராமணியப்படு வதற்கு ஓர் எடுத்துக்காட்டு சோமாஸ் கந்தர் வரலாறு.

சோமாஸ்கந்தர் வடிவம் என்றால் என்ன?

சிவனும் பார்வதியும் வீற்றிருக்க இருவருக்கும் இடையில் ஸ்கந்தன் இருக்கும் வடிவம்தான் சோமாஸ்கந்தர் வடிவம்.

இந்த வடிவம் ஒரு சமூக மாற்றத்தின் வடிவம்; அது மட்டும் அல்ல, தமிழர் சமய மரபு பிராமணியப்படுதலின் அடையாளமும் ஆகும்.

நிலவுடைமைச் சமுதாயம் வளர்கின்றபோது, குடும்பம் என்ற அலகு முக்கியத்துவம் பெறுகிறது. விவசாய சமூக வாழ்க்கையில், நவீன கருவிகள் இல்லாத காலகட்டத்தில் குடும்பம் என்ற கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். குடும்பம் ஆள் பலம் கொண்டிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்த கடவுளுக்கும் குடும்பத்தை ஏற்படுத்தினார்கள். திணைச் சமூக வாழ்க்கைக்கு இந்த வடிவம் தேவைப்படவில்லை.

சங்க இலக்கியங்களில் கொற்றவை, முருகன் மறைமுகமாக சிவன் வணக்கம் பேசப்பட்டாலும், அவை சோமாஸ்கந்த வடிவத்தைக் குறிப்பதாக இல்லை என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். குறிப்பாக முனைவர் ஏகாம்பர நாதன் கூறியுள்ளார். பக்தி இயக்க காலம் கூட இந்த சோமாஸ்கந்தர் வடிவத்தை ஏற்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். பக்தி இலக்கியம் சிவனோடு, உமையவளையும், முருகனையும் சேர்த்துப் பேசிய போதிலும் இந்த வடிவத்தை சைவ சித்தாந்தம் அங்கீகரித்த வடிவமாக யாரும் பார்க்கவில்லை.

“செல்லியைப் பாகம் கொண்டார்

சேந்தனை மகனாக் கொண்டார்”

(4வது திருமுறை -பாடல் 431)

என்று பாடுகிறார் திருநாவுக்கரசர்.

இதற்குமேல் இந்த வடிவம் பரவலாகப் பேசப்படவில்லை. காரணம், இது சைவ மரபு சார்ந்தது அல்ல.

ஆனால் பல்லவர் சிற்பங்களில் இந்த வடிவம் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறாத வடிவம் சிற்பங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் சமயம் வெகுவாக பிராமணப் படுதலின் விளக்கமாக இது அமைந்துள்ளது. உண்மையில் சிவனுக்கும் உமையவளுக்கும் இடையில் இருக்கும் உருவம் வடநாட்டு ஸ்கந்தன் தான். முருகன் அல்ல. ஆனால் முருகனாக பாவிக்க வைத்துவிட்டார்கள். தேவாரத்தில் ஸ்கந்தன் இல்லை என்றாலும், பல்லவர்கள் தங்கள் கோயில்களில் பண்பாட்டுப் படை எடுப்பை நிகழ்த்திவிட்டார்கள். அது மட்டும் அல்ல. பல்லவர்கள் தங்கள் சிற்பங்களில், விஷ்ணுவையும், பிரம்மாவையும் கூடவே இணைத்துவிட்டார்கள்.

வரலாற்று ஆய்வாளர் முனைவர். செண்பக லட்சுமியும், பிராமணிய மரபு சார்ந்த ஸ்கந்த, துர்க்கையையும் முருகனோடும், கொற்றவையோடும் அடையாளப்படுத்தி விட்டார்கள் என்பதை எடுத்துரைக்கின்றார். சில பல்லவர்காலச் சிற்பங்களில், பார்வதியின் இடது தொடையில் ஸ்சுந்தன் அமந்திருப்பது போலவும் உள்ளன. சோமஸ்கந்த வடிவத்தில் பிள்ளையாருக்கு இடம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இடும்பன்

முருகனைப் புராண மரபிற்குக் கொண்டுவந்த பின்னர் அம்மரபை உறுதிசெய்யவும், மேலும் வலு சேர்க்கவும் இன்னும் சில துணைக் கதைகள் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட கதைதான் இடும்பன் கதை! சூரபன்மனுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுத்த இடும்பன், சூரபன்மன் அழிவிற்குப் பின்னர் பொதிகை மலைக்கு வருகிறான். பொதிகை மலையில் இருக்கும் அகத்தியர் நற்பயன் வேண்டுமாயின் வடக்கே சென்று அவர் சொல்லும் இரண்டு மலைகளை அப்படியே தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று இடும்பனிடம் சொல்கிறார். இருமலைகளையும் தன் தோள்களில் காவடி போல் தூக்கிவரும் இடும்பன், வழியில் இளைப்பாறுவதற்காக மலைகளைக் கீழே வைக்கிறான். பின்னர் வைத்த மலையைத் தூக்க முயலும்போது முடியவில்லை. அண்ணாந்து பார்த்தால் மலை உச்சியில் முருகன். முருகனின் வேல் இடும்பனைக் கொல்கிறது. இடும்பனின் மனைவி கேட்டதற்கு இணங்கி இடும்பனை உயிர்த்தெழச் செய்து அவனைத் தன் அடிமையாக்கிக் கொள்கிறான். பழனி தலபுராணத்தில் மட்டும் இந்தக் கதை இருக்கிறது. முருகன் கோயில்கள் சிலவற்றில் இடும்பனுக்கும் இடம் உண்டு. இடும்பன் கதை காவடியை அறிமுகப்படுத்துகிறது.

நன்றி: “தமிழ்நாட்டுச் சமய வரலாறு
– ஒரு புதிய பார்வை” நூல்

-விடுதலை நாளேடு,20.6.25

ஞாயிறு, 2 மார்ச், 2025

தாயைப் புணர்ந்து – தந்தையைக் கொன்றவனுக்கு மா பாதகம் தீர்த்த ‘கடவுள்’!

 


விடுதலை நாளேடு
சிறப்புக் கட்டுரை

(திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர், மாபாதகம் தீர்த்த படலம்)

1573. அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால்
பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை.

1574. அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.

26. மா பாதகம் தீர்த்த படலம்
மா பாதகம் தீர்த்த படலம் பாடலின் முழுமையான விளக்கம்

திருவிளையாடல் புராணம் 26 ஆம் பாகத்தில் மாபாதகம் தீர்த்த படலம் என்ற பாடல் 1534 முதல் 1574 வரை உள்ளது
குலோத்துங்கன் எவருக்கும் நிகரற்ற நல்லாட்சி புரிந்து வந்தான். அந்நாளிலே அவந்தி நகரத்தில் ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் பேரழகி ஆனால் மனைமாட்சி சிறிதும் அற்றவள். காமவெறி அவளைப் பற்றிப் பிடித்துப் பேய் போல் ஆட்டிக் கொண்டிருந்தது.

கொடிய பாவி

அத்தம்பதியர்க்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே அவன ஒரு கொடிய பாவியாகத்தான் பிறந்தான். அவனது இளமைக் காலச் செயல்களை ஒழுங்குபடுத்த தந்தை முயன்றார். அதனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. “தந்தை சொல் மிக்க தோர் மந்திரம் இல்லை” என்பன போன்ற நல்ல நெறி முறைகளையெல்லாம் தனது இளமைப் பருவத்திலேயே கொன்று குழிதோண்டிப் புதைத்து விட்டவன் அவன்! அதனால் தனது பாவி மகன் விடயத்தில் அவன் எப்போதும் தலையிடுவதில்லை. ஆனால் அவனது தாயோ, அவன் சொன்னதற்கெல்லாம் ஆமாம் போட்டு, அவன் மாபாவியாகக் காரணமும் ஆனாள்.

அவன் கொலை முதலிய கொடிய பாவங்களாகிய சரக்குகளை ஏற்றிய மரக்கலம் போல இருந்தான். இளமை செழிக்க வளர்ந்து வந்தான். அவன் கட்டுக் கடங்காத காமம் கொண்டவன். தீவினை தலைக்கேறி தறிகெட்டு நின்றதால், தன்னைப் பெற்று வளர்த்த தாயையே காம வெறியோடு பார்த்தான்; தாயையே விரும்பினான்.

தாயைக் கூடி

அச்சம், மடம், நாணம். பயிர்பு என்ற நான்கும் நீங்கப் பெற்றவளாக இருந்த அன்னையும் அவனது விருப்பத்திற்கு இணங்கினாள்! அந்தக் கீழ் மகன் தாயைக் கூடி ஒழுகும் செயலை அவனுடைய தந்தை குறிப்பால் அறிந்தான், ஆனால், அதனை அறியாதவன் போல நடந்து கொண்டான். மற்றொரு நாளில் வெளிப்படையாகக் கண்டும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால், அவனது மகனோ, கோபம் கொண்டு. “என் தந்தையைக் கொல்வேன்” என எழுந்தான். “நீ தாயிடத்தில் காம இன்பத்தை நுகர்ந்தாய்! இன்னும் தத்தையைக் கொன்றாயானால் என்ன பயனை அடைவாய்?” என்று தாய். கூறித் தடுத்தாள்.

அதற்கு அக் கொடியவன், “காமுகர்களுக்குத் தாயாலும் தத்தையாலும் என்ன பயன்? இனிய அருளைப் பெற்றால் என்ன பயன்? அறத்தைப் பெற்றாலும் என்ன பயன்? என்றான். காம மயக்கம் அவனது அறிவாகிய மதியை விழுங்கியது. காமமாகிய கள்ளை உண்டு அறிவிழந்த அந்தப் பாவி. ஒரு மண் வெட்டியை எடுத்துத் தன் தந்தையைத் துண்டுபட வெட்டித் தனது வெறியைத் தணித்துக் கொண்டான்.

பிறகு அப்பாதகன் தந்தையைத் தகனம் செய்து விட்டு, சுமக்கத் தகுந்த பொருளுடனும் தன் தாயுடனும் கற்கள் நிறைந்த கானகத்தின் வழியே நெடுந்தொலைவு சென்றான்!…

எண்ணம் ஈடேறவில்லை

அப்போது…! இடி போன்ற சொல்லையும், கூரிய கணையைப் பூட்டிய வில்லையும் கொண்ட வேடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். “செல்லாதே! நில்!” என்று அவன் கையில் இருந்த பொருட்களையும், அவனது தாயையும் கைக் கொண்டு போயினர்.

“தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் இல்லை” என்பன போன்ற நல்ல நெறி முறைகளையெல்லாம் தனது இளமைப் பருவத்திலேயே கொன்று குழிதோண்டிப் புதைத்து விட்டவன் அவன்! அதனால் தனது பாவி மகன் விடயத்தில் அவன் எப்போதும் தலையிடுவதில்லை. ஆனால் அவனது தாயோ, அவன் சொன்னதற்கெல்லாம் ஆமாம் போட்டு, அவன் மாபாவியாகக் காரணமும் ஆனாள்.

“தூர தேசத்தில் சென்று இடையூறின்றி வாழலாம்” என கருதிய எண்ணம் அவனுக்கு; நேர்ந்தது இன்னொன்று!
இறந்து விட்ட அவனது தந்தை மாபாதக வடிவாய் வந்து அவனைப் பற்றிக் கொண்டு, படாதபாடு படுத்தினார். “இனி என் செய்வேன்? இனி என் செய்வேன்? என்று நெடுநாள் பெருந்துயர முற்றான். தனியே பல காலம் திரிந்து அலைந்தான். கண்டோர் அனைவரும் நகைத்தனர். மகாபாதகன் துன்பம் முழுவதும் குறைந்து, சிவனாரின் திருவருட் செயலினால், அக்கொலை பாவம் நீங்கும் நாள் தெருங்கி வந்தது. அவன் மதுரைப் பதியை அடைந்தான்.
அப்போது அங்கையற் கண் அம்மையார் வேடுவச்சியாகத் திருவருட் கொண்டார். வேடுவனாக சோம சுந்தரக் கடவுள் திருவருட் கொண்டார். மேகங்கள் தவழும் திருக்கோபுர வாசலின் பக்கத்தில் அவர்கள் இருவரும் வந்திருந்தனர். அங்கு பனங்கருக்குப் போன்ற மேகங்கள் தவழும் வாயையுடைய நாய்கள் அவர்களை விட்டு விலகாது காவல் புரிந்து கொண்டு இருந்தன. இறைவனாகிய வேடுவனும் இறைவியாகிய வேடுவச்சியும் சூதாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிறிதும் அமைதி இல்லாதவனாய்த் துன்பத்துடன் அங்கே அந்த மாபாதகன் வந்தான். அவனது வருகையை கண்ட இறைவன், இறைவியிடம் இவ்வாறு கூறலானார்:

காமம் கொடியது

‘‘யாரும் நினைத்தற்கரிய கொடிய மாபாதகன், பெரும் காம நோய் பிடித்தவன் வருவதைப் பார்! காம நோய் இருக்கிறதே, அது மிகவும் பொல்லாதது; மிகவும் கொடியது. எப்படித் தெரியுமா? அது, குணமும், குலமும் ஒழுக்கமும், குறைவதையும், கொலையும் பழி பாவங்கள் உண்டாதலையும் பார்க்காது; அது, தம் உயிருக்கும் அழிவு வருதலையும் எண்ணாது; காமமே கொலைகளுக்கெல்லாம் காரணம்: கண்ணோட்ட மில்லாத காமமே களவுகளுக்கும் காரணம்; எமனும் அஞ்சும் காமமே கள் உண்ணலுக்கும் காரணம். ஆகையால் காமமே நரகத்தின் நிலைக்களன்” என்று கூறியருளினார்.

கொலைப் பாவத்தால் பெரும் துயரம் உற்று, அங்கு வந்த கொடிய பாதகனுடைய முகத்தைச் சிவவேடுவன் நோக்கினார். “ஏடா! பார்ப்பானே! நீ துன்பத்தால் அலைந்து திரிந்து வருந்துவது ஏன்?” என்று வினவினார்.
முற்பிறப்பில் செய்த பாவத்தின் முதிர்ச்சியால், பிறந்து தாயைக் கூடியது, அது காரணமாகத் தந்தையைக் கொன்றது, பின்னாளில் அக் கொலைப்பாவம் பிரம்ம கத்தி வடிவமாக வந்து பிடித்து வருத்த, எங்கும் திரிந்து அலைந்தது… அது நீங்கப் பெறாமல் இப்பதியை வந்து அடைந்தது ஆகிய நிகழ்ச்சிகளை எல்லாம் கூறி அழுதான் மாபாதகன்.

பாவம் நீங்காது

வேட்டுவ வடிவங் கொண்ட கருணை மூர்த்தி அந்த அப்பாவியை நோக்கி, “இப்பாவம் எங்கே போனாலும் நீங்காது. நரகத்தினை அடையும் அளவுக்கு கொடிய பாவத்தை நீ அறிந்து செய்துள்ளாய்! நாம் உன் மீது திருவருள் நோக்கம் செய்ததால் இப்பாவம் எளிதில் நீங்கும் வண்ணம் கூறுகிறோம். கையில் பிச்சை எடுத்து ஒரு பொழுது மட்டும் உண்பாய்! சிவனடியார்களுக்குக் குற்றேவல் புரிவாய்! சூரியன் உதிக்கும் முன்னே நித்திரை விட்டு எழுந்து, அருகம் புல்லைக் கொய்து, பசுக்களுக்குக் கொடு. அனுதினமும் நீராடி, சிவபெருமானை நூற்றி எட்டு முறை அங்கப் பிரதட்சணம் செய்: முக்காலமும் திருக்கோயில் புறத்தொட்டித் தீர்த்தத்திலே நீராடு!
இந்த நெறியில் நின்றால் உனது கொலைப் பழி நீங்கும்” என்று கூறியருளினார்.
இதைக் கேட்ட வேடுவச்சியாக மீனாட்சியம்மையார் சிவபெருமானை நோக்கி, “எம் பெருமானே! இக் கொடியவன், தான் செய்த பாவத்திற்கு எவ்வகையிலும் உய்ய வழி இல்லாதவன். இவனுக்கு உய்யும் வகையை அருளிச் செய்தது ஏனோ?” என்று வினவினார்.

மன்னிப்பு

அதற்குச் சிவபெருமான், “கொல்லும் பெரும்பழிக்கு அஞ்சாத புலையராயினும், அவரும் நினைத்தால் அச்சமுண்டாக்கும் கொடும் பழியினை அஞ்சாது செய்த மாபாதகத்தால் கட்டப்பட்டு, எங்கும் தீரும் வழிவகையில்லாமல், வேறு பற்றுக் கோடும் இன்றி, அழிய கடவோனைக் காப்பதல்லவா, பாதுகாப்பு!” என்று கூறினார்.

சிவ பெருமானின், இந்த உள்ளம் உருக்கும் உரைகளைக் கேட்ட அங்கையற் கண் அம்மையார் மனக்களிப்பு அடைந்தார்.

உடனே வேட்டுவனும் வேட்டுவச்சியும் மறைந் தருளினர். கொடிய பாதகனான பார்ப்பானும் பெரு வியப்புக் கொண்டு, மதுரை நாயகன் கூறிய வண்ணம் நன்னெறிக்கு ஏதுவான விரதம், ஒழுக்கச் செயல்கள் மேற்கொண்டு விரைவிலேயே பாதகம் நீங்கி, பிராமண வடிவம் பெற்றான்.

– திருவிளையாடல் புராணம்

செவ்வாய், 3 டிசம்பர், 2024

தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன்ற காமுகப் பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த சிவன்?


("திருவிளையாடல் புராணத்"தில் "மாபாதகம் தீர்த்த படலம்' என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதியில், தாயைப் புணர்ந்த காமுகப் பார்ப்பானை,  கண்டித்த தந்தையை கொன்ற அந்த பார்ப்பானுக்கு முக்தி வழங்கிய சிவன் கதை உள்ளது.)

26. மா பாதகம் தீர்த்த படலம்

  குலோத்துங்கன் எவருக்கும் நிகரற்ற நல்லாட்சி புரிந்து வந்தான். அந்நாளிலே அவந்தி நகரத்தில் ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். அவலுக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் பேரழகி ஆனால் மனைமாட்சி சிறிதும் அற்றவள். காமவெறி அவளைப் பற்றிப் பிடித்துப் பேய் போல் ஆட்டிக் கொண்டிருந்தது.

  அத்தம்பதியர்க்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே அவன ஒரு கொடிய பாவியாகத்தான் பிறந்தான். அவனது இளமைக் காலச் செயல்களை ஒழுங்குபடுத்த தந்தை முயன்றார். அதனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. "தந்தை சொல் மிக்க தோர் மந்திரம் இல்லை" என்பன போன்ற நல்ல நெறிமுறைகளையெல்லாம் தனது இளமைப் பருவத்திலேயே கொன்று குழிதோண்டிப் புதைத்து விட்டவன் அவன்! அதனால் தனது பாவி மகன் விஷயத்தில் அவன் எப்போதும் தலையிடுவதில்லை. ஆனால் அவனது தாயோ, அவன் சொன்னதற்கெல்லாம் ஆமாம் போட்டு, அவன் மாபாவியாகக் காரணமும் ஆனாள்.

  அவன் கொலை முதலிய கொடிய பாவங்களாகிய சரக்குகளை ஏற்றிய மரக்கலம் போல இருந்தான். இளமை செழிக்க வளர்ந்து வந்தான். அவன் கட்டுக் கடங்காத காமம் கொண்டவன். தீவினை தலைக்கேறி தறிகெட்டு நின்றதால், தன்னைப் பெற்று வளர்த்த தாயையே காம வெறியோடு பார்த்தான்; தாயையே விரும்பினான்.

  அச்சம், மடம், நாணம். பயிர்பு என்ற நான்கும் நீங்கப் பெற்றவளாக இருந்த அன்னையும் அவனது விருப்பத்திற்கு இணங்கினாள்!

  அந்தக் கீழ மகன் தாயைக் கூடி ஒழுகும் செயலை அவனுடைய தந்தை குறிப்பால் அறிந்தான், ஆனால், அதனை அறியாதவன் போல நடந்து கொண்டான். மற்றொரு நாளில் வெளிப்படையாகக் கண்டும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால், அவனது மகனோ, கோபம் கொண்டு. "என் தந்தையைக் கொல்வேன்” என எழுந்தான். "நீ தாயிடத்தில் காம இன்பத்தை நுகர்ந்தாய்! இன்னும் தத்தையைக் கொன்றாயானால் என்ன பயனை அடைவாய்?" என்று தாய். கூறித் தடுத்தாள்.

  அதற்கு அக் கொடியவன், "காமுகர்களுக்குத் தாயாலும் தத்தையாலும் என்ன பயன்? இனிய அருளைப் பெற்றால் என்ன பயன்? அறத்தைப் பெற்றாலும் என்ன பயன்? என்றான். காம மயக்கம் அவனது அறிவாகிய மதியை விழுங்கியது. காமமாகிய கள்ளை உண்டு அறிவிழந்த அந்தப் பாவி. ஒரு மண் வெட்டியை எடுத்துத் தன் தந்தையைத் துண்டுபட வெட்டித் தனது வெறியைத் தணித்துக் கொண்டான்.

  பிறகு அப்பாதகன் தந்தையைத் தகனம் செய்து விட்டு, சுமக்கத் தகுந்த பொருளுடனும் தன் தாயுடனும் கற்கள் நிறைந்த கானகத்தின் வழியே நெடுந்தொலைவு சென்றான்!...

  அப்போது...!

  இடி போன்ற சொல்லையும், கூரிய கணையைப் பூட்டிய வில்லையும் கொண்ட வேடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். "செல்லாதே! நில்!" என்று அவன் கையில் இருந்த பொருட்களையும், அவனது தாயையும் கைக் கொண்டு போயினர்.

  "தூர தேசத்தில் சென்று இடையூறின்றி வாழலாம்" என கருதிய எண்ணம் அவனுக்கு; நேர்ந்தது இன்னொன்று!

  இறந்து விட்ட அவனது தந்தை மாபாதக வடிவாய் வந்து தந்தை அவனைப் பற்றிக் கொண்டு, படாதபாடு படுத்தினார். "இனி என் செய்வேன்? இனி என் செய்வேன்? என்று நெடுநாள் பெருந்துயர முற்றான். தனியே பல காலம் திரிந்து அலைந்தான். கண்டோர் அனைவரும் நகைத்தனர். மகாபாதகன் துன்பம் முழுவதும் குறைந்து, சிவனாரின் திருவருட் செயலினால், அக்கொலை பாவம் நீங்கும் நாள் தெருங்கி வந்தது. அவன் மதுரைப் பதியை அடைந்தான்.

  அப்போது அங்கையற் கண் அம்மையார் வேடுவச்சியாகத் திருவருட் கொண்டார். வேடுவனாக சோம சுந்தரக் கடவுள் திருவருட் கொண்டார். மேகங்கள் தவழும் திருக்கோபுர வாசலின் பக்கத்தில் அவர்கள் இருவரும் வந்திருந்தனர். அங்கு பனங்கருக்குப் போன்ற மேகங்கள் தவழும் வாயையுடைய நாய்கள் அவர்களை விட்டு விலகாது காவல் புரிந்து கொண்டு இருந்தன. இறைவனாகிய வேடுவனும் இறைவியாகிய வேடுவச்சியும் சூதாடிக் கொண்டு இருந்தனர்.

  அப்போது சிறிதும் அமைதி இல்லாதவனாய்த் துன்பத்துடன் அங்கே அந்த மாபாதகன் வந்தான். அவனது வருகையை கண்ட இறைவன், இறைவியிடம் இவ்வாறு கூறலானார்:

  ''யாரும் நினைத்தற்கரிய கொடிய மாபாதகன், பெரும் காம நோய் பிடித்தவன் வருவதைப் பார்! காம நோய் இருக்கிறதே, அது மிகவும் பொல்லாதது; மிகவும் கொடியது. எப்படித் தெரியுமா? அது, குணமும், குலமும் ஒழுக்கமும், குறைவதையும், கொலையும் பழி பாவங்கள் உண்டாதலையும் பார்க்காது; அது, தம் உயிருக்கும் அழிவு வருதலையும் எண்ணாது; காமமே கொலைகளுக்கெல்லாம் காரணம்: கண்ணோட்டமில்லாத காமமே களவுகளுக்கும் காரணம்; எமனும் அஞ்சும் காமமே கமள் உண்ணலுக்கும் காரணம். ஆகையால் காமமே நரகத்தின் நிலைகளன்" என்று கூறியருளினார்.

  கொலைப் பாவத்தால் பெரும் துயரம் உற்று, அங்கு வந்த கொடிய பாதகனுடைய முகத்தைச் சிவவேடுவன் நோக்கினார். "ஏடா! பார்ப்பானே! நீ துன்பத்தால் அலைந்து திரிந்து வருந்துவது ஏன்?" என்று வினவினார்.

  முற்பிறப்பில் செய்த பாவத்தின் முதிர்ச்சியால், பிறந்து தாயைக் கூடியது, அது காரணமாகத் தந்தையைக் கொன்றது, பின்னாளில் அக் கொலைப்பாவம் பிரம்மகத்தி வடிவமாக வந்து பிடித்து வருத்த, எங்கும் திரிந்து அலைந்தது... அது நீக்கப் பெறாமல் இப்பதிலை வந்து அடைந்தது ஆகிய நிகழ்ச்சிகளை எல்லாம் கூறி அழுதான் மாபாதகன்.

  வேட்டுவ வடிவங் கொண்ட கருணை மூர்த்தி அந்த அப்பாவியை நோக்கி, "இப்பாவம் எங்கே போனாலும் நீங்காது. நரகத்தினை அடையும் அளவுக்கு கொடிய பாவத்தை நீ அறிந்து செய்துள்ளாய்! நாம் உன் மீது திருவருள் நோக்கம் செய்ததால் இப்பாவம் எளிதில் நீங்கும் வண்ணம் கூறுகிறோம். கையில் பிச்சை எடுத்து ஒரு பொழுது மட்டும் உண்பாய்! சிவனடியார்களுக்குக் குற்றேவல் புரிவாய்! சூரியன் உதிக்கும் முன்னே நித்திரை விட்டு எழுந்து, அருகம் புல்லைக் கொய்து, பசுக்களுக்குக் கொடு. அனுதினமும் நீராடி, சிவபெருமானை நூற்றி எட்டு முறை அங்கப் பிரதட்சணம் செய்: முக்காலமும் திருக்கோயில் புறத்தொட்டித் தீர்த்தத்திலே நீராடு!

  இத்தவெநெறியில் நின்றால் உனது கொலைப் பழி நீங்கும்" என்று கூறியருளினார்.

  இதைக் கேட்ட வேடுவச்சியாக மீனாட்சியம்மையார் சிவபெருமானை நோக்கி, "எம் பெருமானே! இக் கொடியவன், தான் செய்த பாவத்திற்கு எவ்வகையிலும் உய்ய வழி இல்லாதவன். இவனுக்கு உய்யும் வகையை அருளிச் செய்தது ஏனோ?" என்று வினவினார்.

  அதற்குச் சிவபெருமான், "கொல்லும் பெரும்பழிக்கு அஞ்சாத புலையராயினும், அவரும் நினைத்தால் அச்சமுண்டாக்கும் கொடும் பழியினை அஞ்சாது செய்த மாபாதகத்தால் கட்டப்பட்டு, எங்கும் தீரும் வழிவகையில்லாமல், வேறு பற்றுக் கோடும் இன்றி, அழிய கடவோனைக் காப்பதல்லவா, பாதுகாப்பு!" என்று கூறினார்.

  சிவ பெருமானின், இந்த உள்ளம் உருக்கும் உரைகளைக் கேட்ட அங்கையற் கண் அம்மையார் மனக்களிப்பு அடைந்தார்.

  உடனே வேட்டுவனும் வேட்டுவச்சியும் மறைந்தருளினர். கொடிய பாதகனான பார்ப்பானும் பெருவியப்புக் கொண்டு, மதுரை நாயகன் கூறிய வண்ணம நன்னெறிக்கு ஏதுவான விரதம், ஒழுக்கச் செயல்கள் மேற்கொண்டு விரைவிலேயே பாதகம் நீங்கி, பிராமண வடிவம் பெற்றான்.

 -திருவிளையாடல் புராணம் 

 - சுவாமி சண்முகானந்தா 

 ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

திங்கள், 28 அக்டோபர், 2024

‘புனித’ நீராடும் விழாவாம் – புடலங்காயாம்! நீரில் மூழ்கி 43 பேர் மரணம்!

 

விடுதலை நாளேடு
Published October 24, 2024

நீரில் மூழ்கி 43 பேர் மரணம்!

பாட்னா, அக்.24 பீகாரில் நீர் நிலையில் நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழாவின்போது, பல்வேறு மாவட்டங்களில் 37 சிறார்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்தது.
தங்கள் குழந்தைகளின் நலனுக்காக தாய்மார்கள் விரதமிருந்து, நீா்நிலைகளில் நீராடி வழிபடும் ‘ஜிவித்புத்ரிகா’ விழா, பீகாரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் குழந்தைகளுடன் பெண்கள் நீராடி, கரையோரத்தில் வழிபாடு நடத்தினர்.

இவ்விழாவின்போது, கிழக்கு-மேற்கு சாம்பரன், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், சரண், பாட்னா, வைஷாலி, முஸாஃபர்நகர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 37 சிறார்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
காணாமல் போன மேலும் சிலரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜிவித்புத்ரிகா’ விழாவில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்

வியாழன், 24 அக்டோபர், 2024

சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளைவிட மேலானவர்கள் இல்லை! ஆணவத்துடன் செயல்படக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


விடுதலை நாளேடு

 சென்னை, அக்.20- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடந்துகொள்ளும் போக்கைக் கண்டித்து

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறியும் நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், நீதிமன்றம்தான் இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக சுட்டிக் காட்டிய நீதிபதி, மனத் துயரங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என தெரிவித்த நீதிபதி, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘‘சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ‘ஆருத்ரா தரிசனம்’ தற்போது பல கோவில்களில் நடத்தப்படுவதாகவும், சிதம்பரம் கோவில் ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை’’ எனவும் கூறினார்.

‘‘இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும் எனவும், கோவிலில் காசு போட்டால் தான் பூ கிடைக்கும் என்றும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது’’ என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை
அக். 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.