சனி, 9 டிசம்பர், 2017

வல்லப கணபதி - மனைவிகள்

கடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை



 


சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அபிதான சிந்தாமணியில் இருக்கிறது-விநாயகர் சதுர்த்தி விரதம், விநாயகர் புராணம் இவை எல்லாவற்றையும் எழுதிக்கொண்டு வந்தார்கள்.

எத்தனை விநாயகர்?

1751 பக்கம் இந்த நூல்-1910இல் போடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி. இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனவும், வக்கிரகுண்டர் விநாயகர் எனவும், கலாதரர் எனவும், கணேசர் எனவும், பாலச்சந்திரர் எனவும், கபில விநாயகர் எனவும், கசாலகர் எனவும், தூமதேபி எனவும், அகோத்கடர் எனவும், உடும்பி விநாயகர் எனவும், வல்லபை கணேசர் எனவும் பெயர்.

அம்மாவைப் போல் பெண் வேண்டுமாம் விநாயகருக்கு!

நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். விநாயகருக்கு மனைவி கிடையாது என்று. விநாயகர் சொன்னாராம், அவருடைய தாயாரிடம், அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டு மானால் உன்னை மாதிரி பெண் வேண்டும் என அம்மாவைப் பார்த்துச் சொன்னாராம். அதனால் ஆற்றங்கரையில் பிள்ளையார் உட்கார்ந்திருக் கிறாராம். என்னை மாதிரி யார் வருகிறார் என்று பார். அவர்களை கல்யாணம் பண்ணிக்கொள் என்று விநாயகருடைய அம்மா சொன்னாராம். இப்படி கதையில் இருக்கிறது. ஏனென்றால் கதை எழுதுகிறவன் அந்தந்த காலகட்டத்தில் தோன்றியதை எழுதினான்.

விநாயகருக்கு எத்தனை மனைவிகள்?

விநாயகருக்கு சித்தி புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தவர் என்று எழுதி வைத்திருக்கின்றான். விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண் டாட்டிகளை கணக்குப் போட்டிருக்கின்றான். இதில் சித்தி ஒரு மனைவி, புத்தி ஒரு மனைவி, புத்தியும் அவருக்கு வெளியிலிருந்துதான் வருகிறது. ஏனென்றால் களிமண் ஆனதினாலே வெளியி லிருந்துதான் புத்தி வரும்.

சித்தி, புத்தி விநாயகரே என்று நம்மாள் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கின்றான். ஏனென்றால் இன்னொரு மொழியிலிருந்து வந்ததினாலே இவனுக்கு என்னவென்றே தெரியாது. வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கே போய் பார்க்க வேண்டும். தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்வது எனக்கே கொஞ்சம் சங்கடமான நிலை. வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன் விநாயகருடைய தம்பி.

சுப்பிரமணியம்-சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன்-அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணனிடம்-விநாய கனிடம் கேட்கின்றார்.

ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்பத்தி

உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும்-சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் வந்து கொண்டேயிருக்கிறது. ஃபேக்டரியில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார்.

கார்க் அடைக்கிற மாதிரி...

உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து கார்க் மாதிரி அடைத்துவிட்டார். இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல். உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது. இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள். சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கிறது போய் பார்க்கலாம்.

தீபாராதனை எதற்கு?

நாங்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுது திராவிடர் கழக தலைமை நிலையம் சிதம்பரத்தில் இருக்கும். மறைந்த கு.கிருஷ்ணசாமி அவர்கள்தான் தலைவர். தலைமை அலுவலகத்திற்குப் போய் விட்டு வருவோம். அங்கு பக்கத்தில்தான் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. ரொம்ப பேர் வெளிச்சம் போதவில்லை என்று கிட்டக்க போய் பார்ப்பான். அய்யர் தீபாராதனை காட்டுவதற்கே வெளிச்சத்தில் பார்ப்பதற்குத்தான். அதே போல தருமபுரிக்கு பக்கத்தில் மத்தூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கேயும் வல்லபை கணபதி கோயில் இருக்கிறது. அங்கே இருக்கிற ஒருவர் கோவிலுக்குள் சென்று வல்லபை கணபதி படத்தையே எடுத்து அனுப்பிவிட்டார். இந்த அசிங்கத்தை அசிங்கம் என்று சொன்னால் எங்கள் மீது வழக்கு போடுவேன் என்று சொல்லுகின்றான்.

உடைந்த எலும்பை உடைந்த எலும்பாக...

எக்ஸ்ரே கருவிமீது யாராவது வழக்குப் போடுவார்களா? எக்ஸ்ரே கருவி உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகத்தான் காட்டும்.

நீதிமன்றங்களில் இந்த விசயங்களைக் கொண்டு சென்றால்தான் வெளிச்சத்திற்கு வரும். நீதிபதிக்கும் தெரியவரும். ஏனென்றால் அங்கேயும் ரொம்பபேர் பிள்ளையார் படம் மாட்டியிருக்கின்றார்கள்.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

ஆகவேதான் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் என்றால் யாரையும் வைவதற்கு அல்ல. யாரையும் கோபித்துக் கொள் வதற்கு அல்ல. வசைபாடுவதற்கு அல்ல.

மனிதன் மூடத்தனத்தில் இருந்தபொழுது பிறந்த கருத்து-கடவுள் மூடநம்பிக்கை. சீர்காழியில் அய்யா அவர்களை அழைத்தார்கள். அய்யா அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொன்னார். கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியவன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று.

ஏனய்யா, இவ்வளவு அசிங்கமான கடவுளை இன்னமும் இவன் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றான். இவன் காட்டுமிராண்டி காலத்து அறிவை அந்த மனப்பான்மையை வைத்திருக்கின்றான் என்ப தற்காக சொன்னார். யாரையும் வைவதற்கு அல்ல.

பெரியாருக்கு எதிர்ப்பு காட்ட....

அய்யா வருகிறார் என்றவுடன் இங்கேயிருக்கிற புத்திசாலிகள் என்ன செய்தார்கள்? பெரியாருக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காக இங்குள்ள கடைவீதியில் பக்கத்தில் ஒரு பெரிய போர்டை எழுதி வைத்து விட்டார்கள்.

ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. என்ன எழுதி வைத்தார்கள் தெரியுமா?

கடவுளைக் கற்பித்தவன் அறிவாளி. கடவுளைப் பரப்பியவன் யோக்கியன். கடவுளை வணங்குகிறவன் நாகரிகமானவன். இந்த மூன்று வார்த்தையைப் போட்டு அய்யா அவர்கள் பார்க்கிற மாதிரி எழுதி வைத்து விட்டார்கள்.

சீர்காழியில் அய்யா பேசுகிறார்

நமது தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள். நமது பொதுக்கூட்டத்திற்கு முன்னாலே இப்படி ஒரு போர்டை எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று அய்யா அவர்களிடம் சொன்னார்கள். அய்யா அவர்கள் இருக்கட்டும், அதுதான் முக்கியம் என்று சொன்னார். இதே சீர்காழியில் அய்யா பேசினார்.

ஏம்பா, கடவுள் என்பவன் தானாக உற்பத்தி ஆனவன் அல்ல. மனிதன்தான் கடவுளை உற்பத்தி பண்ணியவன். அந்த மனிதன் முட்டாளாக இருக்கும்பொழுது இந்த மாதிரி கடவுளை உண்டாக்கினான். எனக்குப் போட்டி என்று நினைத்து நீ என்னுடைய விசயத்தையே ஒத்துக் கொண்டாயே, உன்னை அறியாமல்.

உடனே போர்டை கழற்றிவிட்டான்

கடவுளை உண்டாக்கியவன் அறிவாளி என்று எழுதிய வைத்திருக்கிறாய் அல்லவா? அப்படி என்றால் கடவுள் தானாக உண்டானவன் அல்ல. மனிதன்தான் உண்டாக்கினான் என்று நான் சொன்ன விசயத்தை நீ ஒத்துக்கொண்டாய். உனக்கும் , எனக்கும் என்ன பிரச்சினை? கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று நான் சொல்லு கின்றேன். நீ அறிவாளி என்று சொல்லுகின்றாய். இதை வேண்டுமானால் இரண்டு பேருமே விவாதம் பண்ணிக்கொள்ளாமே என்று சொன்னார்.

சீர்காழியில் எழுதி வைத்தவன் டக்கென்று போர்டைக் கழற்றி எடுத்துவிட்டுப் போய்விட்டான் (சிரிப்பு-கைதட்டல்). இதுவரை தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம் பெரியார் பதில் சொல்லியிருக்கின்றார். பெரியார் கேட்ட கேள்விக்குத்தான் இந்த நாட்டில் எவரும் பதில் சொல்லவில்லை (கைதட்டல்).

புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல

ஆகவே யாரையும் புண்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. இந்து முன்னணி சகோதரர்கள் உள்பட, ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிற தமிழர்கள் உள்பட, பா.ஜ.க வில் இருக்கிற தமிழர்கள் உள்பட அவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரிகள் அல்லர். சமூக நீதிக்குப் பாடுபட வேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மின்சாரத்தை ஒதுக்க முடியுமா?

பெரியார் எங்களுக்கு மட்டும் உரியார் அல்லர். பெரியாருடைய கொள்கை அறிவியல் கொள்கை. மின்சாரத்தை நீங்கள் யாரும் மறுக்க முடியாது, ஒதுக்க முடியாது. கொஞ்சம் பவர்கட் என்றால் உடனே கோபித்துக்கொள்கிறான் அல்லவா?

ஏனென்றால் அவ்வளவு தொழிற்சாலை அந்த, அளவிற்கு வளர்ந்திருக்கிறது. எல்லாம் அவன் செயல். அவனின்றி ஓரணுவும் அசையாது என்று சொல்லுகின்றீர்களே. அப்படியானால் யாரிடம் கோபித்துக்கொள்ள வேண்டும்? அப்பொழுது அவன் செயல் இல்லை. இது மனிதன் செயல் என்று இப்பொழுது சொல்லுகின்றான். ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை.

மூடநம்பிக்கையின் விளைவு

அந்த மூடநம்பிக்கையினால்தானே இன்றைக்கு மனிதர்கள் மோதிக்கொள்ளுகிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் எந்தக் கோவிலுக்காவது ஆபத்தா? கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நாங்கள் எங்கேயாவது கலவரம் பண்ணியிருக்கின்றோமா? மதம் இல்லை என்று சொல்லுகின்ற எங்களால் யாருக்காவது சங்கடம் உண்டா?

யாருக்காவது விரோதி உண்டா?

மதத்தை ஒப்புக்கொள்ளாத நாங்கள் யாருக் காவது விரோதியாக இருந்திருக்கிறாமா? மதத்தை ஏற்றுக்கொள்கிறவன்தானே என் மதம் பெரிது; என் கடவுள் பெரிது; கடவுள் இங்கேதான் பிறந்தார் என்று சொல்லுகின்றான். அந்த இடத்தில் நீ மசூதி கட்டிக்கொண்டுவிட்டாய் என்று சொல்லுகின்றான். எனவே மதவாதிகள் சம்மட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களால் இரத்த ஆறு கடவுள் நம்பிக்கையாளர்கள் இரத்தஆறு ஓடச்செய்கிறார்கள். மனிதநேயம் படைத்த பெரியார் தொண்டர்கள் மனிதர்களாக இருங்கள்; சகோதர்களாக வாழுங்கள் என்று சொல்லு கிறார்கள். எனவே கடவுளும், மதமும் நம்மைப் பிரித்திருக்கிறது. இணைக்கவில்லை. பெரியார் நம்மை மனிதராக்கி இணைத்திருக்கிறார். பெரியார் தத்துவம் என்பது மனிதநேயம்.

அரசியல் சட்டத்தில் ழரஅயளைஅ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே பெரியார் தத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலமாக ஒருவருக்கு ஒருவர் ஜாதி பிரச்சினைக்கோ, ஜாதிச் சண்டைக்கோ, மதச்சண்டைக்கோ இடமில்லை.

மாறுபட உரிமை உண்டு

மாறுபட்டால்கூட அவரவர் உரிமை அவரவர்க்கு. இந்தியாவில் மதப்பிரச்சினையால் இந்தியா முழுக்க பதற்றம். ஆனால் தமிழ்நாட்டில் அந்தப் பதற்றமே இல்லை. காரணம் என்ன? இந்த மண் பெரியார் பிறந்த மண்.

பெரியார் தொண்டர்கள் ஆளக்கூடிய மண்

பெரியார் ஆண்ட மண். அது மட்டுமல்ல. பெரியாருடைய தொண்டர்கள் ஆளக்கூடிய மண். எனவே தான் இந்த மண்ணில் மனிதநேயம் ஆளும். இந்த மண்ணில் சமூகநீதிக் கொடி பறக்கும். இந்த மண்ணில் அனைவர்க்கும் அனைத்தும் என்ற தத்துவம் இருக்கும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கின்றேன்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். 

-விடுதலை நாளேடு, 9.10.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக