செவ்வாய், 20 அக்டோபர், 2015

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு



புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு
...... இந்துக்கள் என்போர்களின் தெய்வங்கள் என்பவை முழுவதும், அதாவது பிள்ளையார் முதல் பிரணவ சொரூபம் வரை அப்புராணக் கூற்றில் கற்பிக்கப்பட்ட தெய்வங்களாகவும், அவைகளினுடைய நாமங்களும், ரூபங்களும், குணங்களும், செய்கைகளும் எல்லாம் அப்புராணக் கூற்றைக் கொண்டதாகவும் காணப்படுவதும் அதற்கு மக்கள் செய்யும் பூசனை, வேண்டுதல், உற்சவம் முதலிய யாவும் கற்பனைகளையே ஆதாரமாகக் கொண்டதாக ...... பொதுநோக்கில் நன்று சுருதி, யுக்தி, அனுபவம், சையன்ஸ் ஆகியவைகளுக்கு ஒத்த முறையில் நின்று புராணக் கூற்றை ஆராய்வோம்.
பெரியார், புராணம் என்பதன் முன்னுரையில் திராவிடர் கழக வெளியீடு, பத்தாம் பதிப்பு 1999.
கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சாணிப் பிள்ளையாராக இருந்த ஒன்றை அரசியல் பிள்ளையாராக, தேசியப் பிள்ளையாராக, இந்து வகுப்புவாதப் பிள்ளையாராக மாற்றியவர் தீவிரவாதி என்று புகழப்படும் (?) பாலகங்காதர திலகர். 1898 ஆம் ஆண்டு அவர் விநாயக சதுர்த்தியை அரசியல் கணேச பூஜையாக மாற்றியமைத்து பாமரர் களுக்கு மதஉணர்வை வெறியாக மாற்றி, இந்துத்துவ அரசியலுக்கு அச்சார மிட்டார். இதைத் தொடர்ந்து சிவாஜி விழா, பசுபாதுகாப்பு அமைப்பு, தடி பயிற்சி அமைப்பு போன்றவையும் அமைக்கப்பட்டன.
விநாயகரின் வாகனமாம் எலிகள்
பம்பாய் மாநிலத்தில் பிளேக் நோய் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தபோது பிளேக் நோய் (தடுப்பு) கமிஷன் ஒன்று பம்பாய் அரசால் உரு வாக்கப்பட்டது. அந்தக் கமிஷன், பிளேக் நோய் பரவுவதற்கு சுகாதார மற்ற இருண்ட இடங்களில் நடமாடும் எலிகளே காரணம் என்று கண்டறிந்து பிளேக் நோயைக் கட்டுப்படுத்த எலிகளை ஒழிப்பது அவசியம் என்று கூறியது. எலிகளைப் பிடித்து அழிப் பதற்காக பிளேக் கமிஷன் அதிகாரி களும், அலுவலர்களும் வீடுவீடாகச் சென்றனர். விநாயகப் பெருமானின் வாகனமான எலிகளைக் கொல்வது இந்துமத உணர்வைப் புண்படுத்துவ தாக அரசியல் விநாயகர்களின் பக்தர்களால் பிரச்சாரம் செய்யப் பட்டது. திலகரின் கேசரி பத்திரிகை பிளேக் கமிஷனைச் சாடியது. கலவ ரங்கள் வெடித்தன. பிளேக் கமிஷனர் ர்ண்ட் என்பவரும் அவரது துணை அதிகாரி அயர்ஸ்ட் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். 1897இல் திலகர் கைது செய்யப்பட்டார். 18 மாதக் கடுங்காவல் தண்டனைக்கு ஆளானார்.
அன்று கணேசர்-கணேச பூஜை அதிகாரிகளைக் கொலை செய்வதற்கு மட்டுமல்ல, முஸ்லீம் எதிர்ப்பு வகுப்புக் கலவரங்களுக்கும் வன்முறை அரசிய லுக்கும் காரணமாக அமைந்தன. இவ்வாறு அரசியல் பிள்ளையார் 1893இல் அவதாரமெடுத்தார். இதற்கு 60 ஆண்டுகள் கழித்து 1953இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட் டத்தை நடத்தினார். மூடநம்பிக்கை களின் பிடியிலிருந்து மக்களை மீட்கும் போராட்டமாக அது இருந்தது.
மராட்டியத்தில் திலகர் கொண்டு வந்த விநாயகர் விபரீதம் சமீப காலமாக தமிழ் மண்ணிலும் பரிசோதிக்கப் படுகிறது. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள், ஊர்வலங்கள், சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகள், வகுப்புக் கலவரம் சட்டம்-ஒழுங்குப் பிரச்சி னைகளுக்காக, காரணிகளாக மாற்றப்படுகின்றன. 2011ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி சிலைகள் கரைப்ப தற்கான ஊர்வலங்கள் வன்முறைக் கலவரங்களின்றி அமைதி யாக முடிந் திருந்தன என்று நாளேடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி நாளேடு ஒன்று பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்குப் போதுமான ஏரி, குளம், குட்டைகள் இல்லாமல் நில ஆக்கிர மிப்புகள் நடந்துள்ளதைப்பற்றி சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.
வக்கிர மனம்
மக்களுக்கு-மனித சமூகத்திற்குத் தேவையான நீர்வளம் வரம்பற்ற, முறையற்ற நில ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்படுகிறதே என்றுசமூக ஆர்வலர்கள்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகின்ற வேளையில், நில ஆக்கிரமிப்புகளால் பிள்ளையார் சிலை கரைப்புக்கு ஏற்படும் தடைகளைப் பற்றிய கவலைக்கு முன்னுரிமை தருகின்ற வக்கிரமனம் கொண்ட மதவாதிகளின் விநாயக நேயத்தை என்னவென்பது?
தியாகராய நகரில் வெடிப்புகையுடன் நள்ளிரவில்  வெளிவந்த திடீர் பிள்ளை யாரும், பால் குடிக்கும் விநாயகர்களும் அவ்வப்போது அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்துஸ் தானத்தில் கொலையும் கூட ஒரு மதச் சடங்கே-கொடுமையான வழிபாட்டு முறையின், சீரழிவான நிலையை அது எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றால், அங்கே இயற்கையின் அதிபதியான மனிதன் (வழிபாட்டின் பெயரால் அனுமன் என்ற குரங்கு மற்றும் சபலா என்று பகு ஆகிய விலங்குகளின் முன் னால் பரவசத்துடன் மண்டியிடுகிறான்.
- கார்ல் மார்க்ஸ்
புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு
இர்பான் ஹமீபிள் இந்திய வரலாறு மீதான கட்டுரைகள் என்ற புத்தகம், பக்கம் 150.
மதத்தின் பெயரால் ஆறறிவுள்ள மனிதன் ஐந்தறிவுகூட இல்லாதவற் றினை, நீண்ட பருந்தினையும் நெடிய குரங்கினையும் யானை, புலி, சிறுத்தை, சிங்கம் போன்றவற்றையும், பசு, எருது, மயில், கோழி, ஏன் எலியையும் கூட தன்னைவிட பல மடங்கு சிறந்த தெய்வங்களாக ஏற்று மண்டியிட்டும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்தும் வணங்குவதில் அருவருப்புக் கொண்ட மார்க்கம், அவரது முன்னோடி ஏகலும் பிராமணீயச் சடங்குகளை, பிராமணீயத் தால் பாமர மக்களிடையே புகுத்தப் படும் மூடநம்பிக்கைகளை சீரழிவுச் சின்னங்களாகவே பார்த்தனர்.
இத்தகைய உருவ வழிபாட்டை நியாயப்படுத்தி பிராமணீயம் கூறுவது என்ன? ராமகிருஷ்ண மடத்து சுவா ஹானந்தரால் எழுதி வெளியிடப் பட்டுள்ள இந்து உருவகங்கள் (Hindu Symbology) என்ற புத்தகத்தின் சில வரிகளைப் பார்ப்போம்.
“Images are the forms of god visulised by saints and seers in their hours of communion (voith god). Art has also contributed to their beauty and richness. ..... As the image is the production of the saintly artist, every single detail of the form is expressive of some deeper universal truth.’’
துறவிகளும் ரிஷிகளும் கடவுளுடன் இணையும்போது அவர்களால் காணப்பட்ட கடவுளின் வடிவங்களே (விக்கிரக) உருவங்கள் ஆகும். கலை அதற்கு அழகையும், செழுமையையும் தந்துள்ளது...... இந்த உருவங்கள் துறவிக் கலைஞர்களின் படைப்புகளாக இருப்பதால், அவற்றின் ஒவ்வொரு நுண்ணிய அம்சமும், மிக ஆழமான உலகளாவிய உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன.
அதாவது விசித்திரமான இக்கடவு ளர் சுயம்புகள் (தன்னைத்தானே தோற்றுவித்தவர்கள்) அல்ல. துறவிகள், ரிஷிகள் போன்றவர்களால் உருவகப் படுத்தப்பட்டவர்கள். அந்த கற்பனை உருவங்களின் ஒவ்வொரு பகுதியும் ஓர் உள் தத்துவத்தை விளக்குவதாக உள்ளதாம். மனிதன் படைத்த கடவுளரைப்பற்றி பகுத்தறிவாளர் இங்கர்சால் பின்வருமாறு கூறுகிறார்:
ஒவ்வொரு தேசமும் ஒரு கடவுளை உருவாக்கியது, அந்தக் கடவுள் அதனைப் படைத்தவர்கள் சாயலில் இருந்தது .........
இந்தக் கடவுளர்கள் எண்ணற்ற மாதிரிகளில், மிகவும் விசித்திரமான கோமாளித்தனமான வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டனர். சிலருக்கு ஆயிரம் கைகள் இருந்தன. சிலருக்கு நூற்றுக்கணக்கான தலைகள் இருந்தன, சிலர் உயிருள்ள பாம்புகளை கழுத்தில் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர், சிலரது கைகளில் குண்டாந்தடிகள் இருந்தன, சிலருக்கோ வாட்களும் கவசங்களும் இருந்தன, வேறுசிலருக்கு கேடயங்கள் இருந்தன, சிலருக்கு சிறகுடைய தேவதூதர்கள் இருந்தனர், சிலர் பார்வைக்குத் தெரியாமல் இருந் தனர், சிலர் எங்கும் பரவி நின்றனர், சிலர் முதுகுப் புறத்தைக் காட்டியே நின்றனர், சிலர் பொறாமைக்காரர் களாக இருந்தனர், சிலர் முட்டாள் களாக இருந்தனர், சிலர் மனிதர்களாக உருவம் ஏற்றனர், சிலர் அன்னப் பறவைகளாக மாறினர், சிலர் எருது களாயினர், சிலர் புறாக்களாயினர், சிலர் புனிதப் பிசாசுகளாயினர், சிலர் மனிதர்களின் அழகிய பெண்களுடன் மையல் கொண்டு புணர்ந்தனர். அனை வருமே மணம் புரிந்திருக்க வேண்டு மென்றாலும் சிலர் மட்டும் மணம் செய்துகொண்டனர், சிலர் ஆதியி லிருந்தே பழைய பிரம்மச்சாரிகளாக இருந்தனர், சிலருக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன, அந்தக் குழந்தைகளும் கடவுளராக மாற்றப்பட்டு அவர்களின் தந்தையரைப் போலவே வழிபாடு பெறு பவனாயினர். பெரும்பாலான கடவுளர் பழிஉணர்ச்சி கொண்டவர்களாகவும், கொடுமைக்காரர்களாக, காமம் மிகுந் தவர்களாகவும், அறிவிலிகளாகவும் இருந்தனர். பொதுவாகக் இக்கடவுளர் கள் செய்திகளுக்காக அவர்களது பூசகர்களையே நம்பியிருந்ததால் அவர்களது அறியாமை நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை.
இந்தக் கடவுளருக்கு அவர்கள் படைத்த உலகங்களின் வடிவங்கள் கூடத் தெரியாது, அவையனைத்துமே முழுமையாகத் தட்டையாக இருப்பதாக நினைத்தனர். சிலர் சூரியனை நிறுத் துவதனால் பகற்பொழுதை நீட்டிக்க முடியும் என நம்பினர்; கொம்புகளை ஊதுவதால் (கோட்டை) நகர மதில் களை இடிக்கலாமென நினைத்தனர். ஏறக்குறைய அனைத்துக் கடவுளரும் அவர்கள் படைத்த மனிதர்களின் உண்மையான இயல்புபற்றி அறிந் திருக்கவில்லை. ஆகவே தம்மை நேசிக் கும்படி அம்மக்களிடமே வலியுறுத் தினர்...... இச்சிறிய பூமியின் தோற்றம் குறித்து கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு கடவுளும் இருக்கவில்லை. அனைத்து கடவுளரும், கவலையளிக்கும் வகையில் மண்ணியல் (geology)   மற்றும் வானியல் ஞானமற்றவர்களாகவே இருந்தனர்.பொதுவாகவே அவர்கள் சட்டமியற்றுவதில் மிகவும் இழிந்த வர்களாகவும் நிர்வாகிகள் என்ற முறையில் சராசரி அமெரிக்க ஜனாதி பதிகளை விட தரங்குறைந்தவர் களாகவுமே இருந்தனர். .......... ஆமாம், அவர்கள் எப்போதுமே தங்களைப் படைத்தவர்களிடம் சார்பு கொண்ட வர்களாகவே இருந்தனர். அந்த ஒரு தலைச் சார்பினால் மற்றவர்களை கொள்ளையடிக்கவும், அழிக்கவும், அவர்களது மனைவியரையும் பெண் களையும் சீரழிக்கவும் தம்மைப் படைத்தவர்களுக்கு உதவினர்.
தங்களை நம்பாதவர்களைக் கொன்று கூறுபோடுவதைப் போன்று மகிழ்ச்சியளிக்கும் வேறு எதுவும் இக்கடவுளருக்கு இருப்பதில்லை. அதுபோன்று இவர்கள் இருக்கிறார்கள் என்பதையோ மறுப்பதைப் போன்று சினம் ஊட்டும் வேறு எதுவும் இருப்பதில்லை.
சில தேசங்கள் ஒரே கடவுளையே வைத்துக் கொள்ளுமளவிற்கு மிகவும் ஏழ்மையாக இருந்தன. கடவுளர்கள் மிக எளிதாகப் படைக்கப்பட்டனர்; அவர்களைப் படைப்பதற்கான கச்சாப் பொருள்கள் மிக மலிவாக இருந்தன; பொதுவாக இந்தப் போலி உருவங் களின் நெரிசலால் கடவுள் அங்காடிகள் பெருத்தும் போயிருந்தன.
- இங்கர்சால்: ‘The Gods’
கடவுளர் மனிதக் கற்பனையின் வீச்சின் அளவிலேதான் அமைந்தன. காலத்தைக் கடந்த உருவக் கடவுளைக் காண முடியாது. மனிதர்கள் இக்கடவுளரைப் படைத்தபோது எதையெல்லாம் அறிந்திருந்தார்களோ, அதன் அடிப்படையில்தான் கடவுளரின் உருவங்கள் படைக்கப்பட்டன.
அவர்கள் அன்று படைத்த தொன்மைக் கடவுளுக்கு கற்கால ஆயுதங்களே இருந்தன. முக்காலமும் அறிந்தவராக சிறப்பிக்கப்படும் அக் கடவுளர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியையும், பீரங்கியையும், லேசர் ஆயுதங்களையும் தாங்கியிருக்கவில்லை. புலித்தோல், மான்தோல் போர்த்திய கடவுளரையும் படைத்தார்களேதவிர தைத்த சட்டை, பனியன், ஜட்டி, டிரௌசர் அணிந்த கடவுளர் இங்கே வரவில்லை. மாடு, புலி, எலியின் மீதும், புறா, மயில், கழுகு போன்றவற்றின் மீதும் பயணித்த கடவுளருக்கு, சைக்கிள் போன்றவை கூட இருக்கவில்லை. கார், பைக், டாங்க் போன்றவற்றை ஞானக்கண்ணால்கூட அறிந்திருக்கவில்லை. கோயில்களில் மறைக்கப்படாத மார்பகங்களுடன் காணப்பட்ட பெண் கடவுளருக்கு, தற்காலத்து ரவிவர்மா ஓவியங்களில் ஜாக்கட்டும், 16 முழுப் புடவையும் கிடைத்தன. எனவே, ஞானியர் கடவுளரிடம் ஒன்றியபோது பார்த்த தோற்றத்தில் உருவங்கள் படைக்கப்பட்டன என்று கதைக்கப்படும் போது, அது தெய் வீகத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களது கற்பனைகளின் சுருங்கிய எல்லைகளைத்தான் வெளிப்படுத்து கிறது. (ராமகிருஷ்ண மடத்து சுவாமி வாகானந்தா எழுதிய Hindu Symbology).
இங்கே கடவுளர்கள் கோமாளித் தனமாக, காட்டுமிராண்டிகளாக, வேடிக்கையாக உருவப்படுத்தப்படுதற்கு தத்துவார்த்தம், உள்ளார்த்தம் என்று பதவுரை பொழிப்புரை கூறுவது தெரிந்தே செய்யப்படுகின்ற மோசடி யாகும். சுவாமி சுவாஹானந்தா சிவன் கடவுளுக்குத் தரும் தத்துவார்த்தத்தைப் பார்ப்போம்.
சிவனது திரிசூலம் திரிபுராசுரனை அழித்ததாகும். அதன் தத்துவார்த்தம் ஸ்தூல, சூட்சும், நடைமுறை நாள் என்ற அகங்காரத்தை வெற்றி கொள்வதாகுமாம்.
அவரது நெற்றிக்கண் அறிவுக்கண். முக்கண்களால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் பார்க்கிறாராம்.
அவர் பயணிக்கும் எருதின் நான்கு கால்கள் உண்மை, தூய்மை, பரிவு, கொடை இவற்றைக் குறிக்கிறதாம். (சிவனது இரண்டு கால்களும், இரண்டு கண்களும், நான்கு கைகளும் எந்தத் தத்துவங்களைக் குறிக்கின்றனவோ?)
அவர் சிகை மீது உள்ள நிலவு காலத்தையும் குறிக்கும், அழிவதையும் குறிக்குமாம். அதுமட்டுமல்ல ஞானத் தின் தோற்றத்தையும் குறிப்பதாகக் கொள்ளமுடியுமாம். (எது எதைக் குறிக்கிறது என்பதில் அவர்களுக்கே குழப்பமிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது) சில வழிபாடு வேதங் களில் (ருத்ர வழிபாடாக) இருப்பதாகச் சொல்பவர்களும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
சிந்துவெளி முத்திரையில் காணப் படும் சிவனுக்கு (?) முக்கண் இல்லை, கங்கையில்லை, உடுக்கையில்லை, கையில் நெருப்பு இல்லை. தலையில் பிறையும் இல்லை. மாறாக இரண்டு கொம்புகள் உள்ளன. குறைகண்ட வர்கள் ஆதியில் விலங்கின் கொம்பு கூடுதல் வலிமையைக் குறிப்பதாகக் கொண்டனர். எனவே அவர்கள் அனுமா னுஷ்யமான கடவுளரைப் படைக்கும் போது அவற்றைக் கொம்புகளுடன் வரைந்தனர். கொம்புகளை இணைத்து பிறையாக மாற்றியது பல நூறாண்டுக் கற்பனை விரிவாக்கத்தின் விளைவே. மனிதர் படைத்த கடவுளர் எப்படிக் கற்பனையோ அதைப்போலவே மதவாதிகள் கூறும் த்த்துவார்த்த விளக்கங்களும் கற்பனைகளே.
இத்தகைய பசப்பலான தத்து வார்த்தங்களைக் குறித்து கைவல்ய சாமியார் கூறியிருப்பதை நினைவிற் கொள்வோம். (உண்மை இந்து மதம்-பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு 2008 பக்கம் 9-10).
- தொடரும்
பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)

பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.
புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)
எதற்கும் தத்துவம் சொல்லலாம்.... எதற்கும் உள்ளது உள்ளபடி அர்த்தம் வந்துவிட்டால் மேலல்லவா? நாய்க்குப் பிறந்த நாயே என்று ஒருவனைத் திட்டினால், திட்டினவன், திட்டைக் கேட்டவன் மனதில் திட்டின வார்த்தை ஊடுருவிப் பாய்ந்ததென்று மனம் திருப்தியடையும்போதும், திட்டைக் கேட்டவன் கோபிக்கும் போதும் தத்துவ அர்த்தம் பிரயோஜனப்படுமா? தத்துவ அர்த்தம் அதிலுண்டா? இரண்டு பேர்களும் தத்துவ அர்த்தத்தை நினைத்தார்களா?......... பஞ்சாட்சரமான பரமசிவனால் படைக்கப்பட்ட நீங்கள் ஞ பஞ்சாட்சர முதலெழுத்தும், ய என்கிற கடையெழுத்தும் சேர்த்துப் பிடித்த பெயரை உடையதும், பரமசிவனுக்குப் படைத்துணையான பைரவரின் வாகனமுமான நாயைப் போன்று நன்றியுடையவராயிருங்கள் என்ற அர்த்தம்தான் அதற்கு உங்கள் அறிவிற்குத் தக்கவாறு பெரியவர்கள் அமைத்தார்கள். தத்துவார்த்தம் உள்ளே அடங்கிக் கிடப்பது உனக்கு விளங்கவில்லையா? என்று சொன்னால் அதை யார் ஒப்புக் கொள்வார்கள்? பிள்ளையார் தோற்றத்தைப்பற்றிய கதைகளை பகுத்தறிவாளர்கள் ஏற்கெ னவே தோலுரித்துக் காட்டியுள்ளனர். தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் பிறப்பு குறித்து மூன்று அருவருப்பான அடல்ட்ஸ் ஒன்லி கதைகளின் கோமாளித்தனத்தையும், ஆபாசத்தையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார். (Hindu Festivals-Periyar E.V. Ramasami, Periyar Self-Respect Propaganda Institution, Madras-1983 PP 17-20)  புராணங்கள் வரலாறுகளல்ல என்பதை பகுத்தறி வுள்ள அறிவியல் நோக்குக்கொண்ட வரலாற்றாளர்கள் அறிவார்கள். ஆயினும் வரலாற்றில் விநாயகர் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வரலாற்றைப்பற்றி ஒரு சில தகவல்களை வாசகர்கள் சிந்தனைக்கு வைக்கவே இந்தக் கட்டுரை.
வரலாற்றில் விநாயகர்:
ரிக் வேத ஆரியர்கள் ஹோம குண்டங்களை உருவாக்கி, நெருப்பில் நெய் சொரிந்து பலிகளை இட்டு மானசீகக் கடவுளரை தமது வேண்டு தலுக்கு இணங்குமாறு தோத்திரம்பாடி வணங்கினர். ஹோத்திரி போன்ற யாக மந்திரங்களை உச்சரித்து யாகங்களை நடத்தும் பூசகர்கள், மந்திரங்களால் தமது மானசீகக் கடவுளர்களின் கவனம் ஈர்க்கப்படும் என நம்ப வைத்தனர். உயிர்ப்பலிகளுக்கோ எல்லையில்லை. ஆனால் அங்கே சிலை வழிபாடோ, கோயில் கலாச்சாரமோ இருக்கவில்லை. எனவேதான் ஆரிய சமாஜத்தை நிறுவி வேதகாலத்திற்குத் திரும்புங்கள் (Back to Vedas) என்று  கூறிய தயானந்த சரசு வதி, உருவ வழிபாட்டை எதிர்த்தார், சடங்குகள் புராணங்களை ஏற்க மறுத்தார்.
ஆனால் வேத காலத்திற்கு முன்பே இங்கு தழைத்திருந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் உருவ வழிபாடு, லிங்க வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு ஆகியவை இருந்ததாக அகழ்வாராய்ச் சிகள் குறிப்பாக அங்கு கண்டெடுக்கப் பட்ட முத்திரைகள் உறுதி செய்கின்றன. சில நூற்றாண்டுகள் வரை சிவலிங்க (சீசனத் தேவர்) வழிபாடுகளை எதிரிகளின் இழிந்த வழிபாட்டு முறைகளாக பழித்துக் கூறி வந்தனர். பின்னர் ஆரியரல்லாதவர்கள் சிலை வழிபாட்டு முறையை படிப்படியாக ஏற்றுக் கொண்டு அவற்றை பிராமணீய மயப்படுத்தினர். வேதகால கடவுளர் சிலருக்கு உருவங்கள் தந்ததோடு, ஆரிய ரல்லாதவர்களிடம் மிகப் பிரபலமாக இருந்த சில கடவுளர்களையும் சுவீ கரித்துக் கொண்டனர். சிவனுக்கும், கந்தனுக்கும், பிள்ளையாருக்கும் திருநீறு பூசப்பட்டு பூணூல்க்ளும் அணிவிக்கப் பட்டன. அந்தக் கடவுளரை வேத-பிராமண பாதுகாவலர்களாகவும் மாற்றினர். பூணூல் அணிந்துகொண்ட வள்ளிமணாளன், தேவசேனாவை (தெய்வானையை)யும் மணந்து பிரா மணருக்கு இனியவன், பிராமணரின் புரவலன் என்ற முறையில் சுப்பிர மணியனுமானான் (சு-பிராமண்ய) பக்தி இயக்கம் இத்தகைய ஒட்டு வேலையை மிக அற்புதமாகச் செய்தது. ஸ்கந்தன், குமாரன் என்று (ஸ்கந்த புராணம், குமார சம்பவம்) வடநாட்டில் பிரபல மான பெயர்களின் பட்டியலில் முருகன் என்பதையோ, சேயோன் என்பதையோ பார்க்கமுடியாமல் போனதில் வியப் பில்லை. ஆனால் சுப்ரமண்யா என்ற பெயர் தென்னாட்டில் மட்டுமே சுருங்கிப் போனது ஏன்? ஏனென்றால் பிராமணனை, பிராமணீயத்தை ஏற்கச் செய்ய வேண்டிய அந்த தேவை, தென்னகத்தில்தான் உணரப்பட்டது; அதைத்தான் பக்தியும் நிறைவேற்றியது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது பிள்ளையார் எப்போது எவ்விடத்தில் தோற்றுவிக்கப்பட்டார் என்பதைச் சற்று பார்ப்போம்.
தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கடவுள் என்றார் (புராணம்)
அப்டியென்றால் விநாயகர் வேதகாலத்துக் கடவுளா? ஆரியர்களின் ஆதிக்கடவுளரில் ஒருவரா? ரிக் வேதகால ஆரியர்கள் என்ற நூலின் பதினைந்தாவது அத்தியாயம் [தேவர் கள் (மதம்)] என்ற தலைப்பினலானது. அதில் நூலாசிரியர் புகழ்பெற்ற வர லாற்றாசிரியர் ராகுல சாஸ்கிருத்தியா யன் ரிக்வேதக் கடவுளர்களைப் பட்டியலிட்டுள்ளார். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும், 3339 கடவுளர் எனினும் ஓரிருமுறை பொத் தாம் பொதுவாகக் கூறப்பட்டாலும், குறிப்பிடப்படும் தேவர்கள் (கடவுளர்) எண்ணிக்கை 33ஐத் தாண்டவில்லை. அதிதி, வருண, மித்ர, அக்னி, அர்யமா, சவிதா, ரோத்ளி, அஸ்வினிகள், தேயுஸ், ப்ருதிவி, வாயு, பர்ஜன்ய, சரசுவதி, உஷஸ், சோம, இந்திரா, ருத்ர, பிரம்ம, சூர்ய, விஷ்ணு, பூஷன் போன்ற பெயர்களிடையே, சிவனைப் போன்று, கந்தனைப் போன்று, விநாயகரும் இடம்பெறவில்லை.
எனவே விநாயகர் ஆதியில் இருந்த கடவுளல்ல, பாதியில் படைக்கப்பட்ட கடவுளரே. விஷ்ணு வழிபாட்டின், சிவ வழிபாட்டின் ஆரம்ப நூற்றாண்டு களில்கூட (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) விநாயகக் கடவுள் அவதரிக்க வில்லை. தமிழகத்தில் சங்க நூற்களில் சேயோன்-மாயோன்-வேந்தன்-வருணன் பட்டியலில் பிள்ளையார் இடம் பெறவில்லை. சங்கம் மருவிய சிலப்பதி காரத்திலும், சூரியனையும், திங்களையும், மாமழையையும் போற்றிப் பாடிய போதும் அங்கு விநாயகர் இடம் பெற வில்லை. சிலம்பில் கூறப்படும் சதுக் கத்துப் பூதம் பிள்ளையார்தான் என்று சிலர் ஆர்வ மிகுதியால் கூறினாலும் சதுக்கத்து பூதம் பெததுவிடக் கடவுள் (பூதம்-சிறுதேவதை என்ற பொருளைத் தரும்) என்று விளக்க முடியும். எனவே சிலப்பதிகார க்லத்திலும் கூட விநாயகர் வழிபாடு இங்கே இருக்கவில்லை. பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு மிவை நாலும் லஞ்சமாகக் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் த் என்று துங்கக் கரிமுகத்தானிடம் வியாபாரம் பேசிய அவ்வை சங்ககாலத்து அதியனைப் பாடிய அவ்வை அல்ல. சங்க காலத் திற்கு பின்னர் வந்த அவ்வைதான் சங்கத் தமிழை குறிப்பிட்டிருக்க முடியும். சங்க என்ற சொல்லை சங்கப் புலவர்கள் கையாண்டது இல்லை.
புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (2)
நரசிம்மவர்மன் என்றும் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவன், சாளுக்கியப் புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி தலைமையில் படையனுப்பினார் எனவும் அப்படை சாளுக்கியப் படையை வென்று சாளுக்கியத் தலை நகரைச் சூரையாடியது என்றும், இப்போரிலே இரண்டாம் புலிகேசி இறந்தான் என்றும் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. வ்தாபியும், அதன் அருகிலிருந்த அய்கோளும் சாளுக்கிய சிற்ப கட்டிடக்கலைகளின் சிகரங்களாக இருந்தன என்றும், வாதாபியில் காணப்பட்ட யானைத்தலையும் மனித உடலும் கொண்ட கணபதிக் கடவுளின் கலை யழகு சிறுத்தொண்ட நாயனார் என்று பின்னர் அறியப்பட்ட பரஞ்சோதியை பரவசப்படுத்தியது. எனவே அந்த கணபதி சிலையை பெயர்த்து வந்து சோழநாட்டிலிருந்த தனது ஊரில் நிறுவி கோவிலமைந்தான் என்றும் கூறப்படுகிறது. அந்த வாதாபி கணபதி தான் தமிழ்நாட்டில் கணபதி வழிபாட்டுக்கு அச்சாரமிட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது தக்காணப்பகுதியில் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த ஒரு பிராமணீயக் கடவுள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டார். படிப்படியாக அனைத்து மக்களில் உள்ளம் கவர்ந்த கடவுளானார் என்ற கருத்து இங்கு நம்முன் வைக்கப்படுகிறது.
நமது கேள்விகளில் ஒரு சில:
விநாயகர் பிராமணக் கடவுள் தானா? வடக்கில் யானைமுகன் (கஜமுகன்) வழிபாடு எப்போது துவங்கியது?
இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் புராதனமான சமயக் கட்டிடங்கள் சிற்பங்கள் பௌத்தத்திற்கு உரியவை.
இன்றைய அளவில் அசோகரால் நிறுவப்பட்ட (பௌத்த) ஸ்தூபிகளும் தூண்களும்தான் மிகத் தொன்மை யானவை. பௌத்த கட்டிடங்கள் பெரும்பாலும் மூன்று வகைப்படும்: 1) ஸ்தூபம் 2) விகாரம் மற்றும் 3) சைத்தியம் என்பவை.
ஸ்தூபம் அல்லது ஸ்தூபி நடுகல், வீரக்கல் போன்ற நினைவுச் சின்னம். புத்தர் அல்லது அவரதுமுக்கிய சீடர் களின் உடற்பகுதிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது எழுப்பப்படும் கட்ட டங்கள். இவைகளை நினைவுச் சின்னங் களாக, மரியாதைக்குரிய சின்னங்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவற்றில் சில வழிபாட்டுக் கோயில்கள் என்று மாற்றம் பெற்றன. விகாரம் என்பது துறவியர் வாழ்விடம். அவரது மக்கள் தொண் டிற்கான அறப்பணிகளின் மய்யம் என்பதாக அவை அமைந்தன.
சைத்தியம் என்பது தியான (மன ஒருமைப்பாட்டுப்) பயிற்சிக்கான இடம் பின்னர் இவை சமூகப் பிரார்த்தனை மய்யங்களாகவும் மாறின. இத்தகைய கட்டடங்களில் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. அசோகரது தூண்களிலும் பல்வேறு மனித-விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் கருடச் சின்னங்கள் விஷ்ணு வுடன் தொடர்புபடுத்தி சிற்பங்களில் இடம் பெறலாயின. காளை (ரிஷபம்) சிந்துவெளி நாகரிகத்தில் மட்டுமல்ல, ஜைனமத மரபுகளிலும் ரிஷபதேவர் ஏறும் ஆதிநாதருடனும் தொடர்பு படுத்தி சித்தரிக்கப்பட்டது.
ஆனால் யானைமுகனை குப்தர் காலம் வரையில் காணமுடியவில்லை. அதுவரையில் அஸ்வமேதம், வாஜ பேயம், ராஜசூயம் போன்ற யாகங் களையே மய்யப்படுத்தியிருந்த பிரா மணீயம் குப்தர் காலத்திலிருந்துதான் சிலைகளையும் கோயில்களையும் மய்யப்படுத்துவதாக மாறியது. இதனால் யாகங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த பலர், சிலை வழிபாட்டுப் பண்பாட்டை உடையவராக இருந்த பிராமணீயத்திற்கு வெளியே இருந்த வெகு மக்கள் மீது சமயத்தின் பெயரால் பிராமணீயத்தின் ஆதிக்கத்தை நிறுவ முடிந்தது. இந்தப் போக்கின் தென்னகப் பதிப்புதான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடத்திய பக்தி இயக்கம். பிராமணர்கள் புதிய கடவுளரைப் படைப்பதைவிட, ஏற்கெனவே மற்றவர்களால் படைக்கப் பட்டிருந்த உருவக் கடவுளரை ஏற்று அவற்றை பிராமணீயப்படுத்துவதே எளிதானது, வீரியமுள்ளது என்று உணர்ந்து அத்தகைய தத்து எடுக்கும் பணியில் மும்முரமானார்கள். சிவன் - வேதங்களைக் காப்பாற்றும் சிவனா னான்.  பிரணவ மந்திரத்தின் நாயகன் - சாம்பலுடன் பூணூலையும் அணி வித்தார்கள் கொற்றவை - காளி சிவனுக்கு உடலில் ஒரு பாதியானாள். அவளைக் கொண்டே அவளைப் படைத்தவர்களை (மகிஷாசுரன் போன்ற மேய்யச்சல் நாகரிகத் தலைவர்களை) கொலை செய்வித்தனர். மாலவன்-திருமால்-விஷ்ணு என பரிணாம மாற்றம் பெற்றார். ரிக் வேதத்தின் கருமைநிற அன்னியர்களான (கிருஷ்ண)வரின் மேய்ச்சல் நாகரிகத்தின் கண்ணன் என்ற மாயோன், விஷ்ணு வின் அவதாரக் கிருஷ்ணனாக்கப்பட் டான். நப்பின்னை ராதையாக மாறி னாள். அவன் மூலமாகவே அவனை உருவாக்கி வழிபட்டு வந்தவர்களை சூத்திரர்களாக்கினான். ஜைன ரிஷபதேவரின் கைலாயம் சிவனது தலை மையகம் ஆக்கப்பட்டது. ரிஷபதேவரின், ரிஷபச் சின்னம் சிவனது நந்தியானது.
சரி, விநாயகர் விவகாரம் எப்படி?
அதை அறிவதற்கு முன் ஒரு சில தகவல்கள்:
சங்கராச்சாரியார் அகச் சமயம் என்று ஆறு வழிபாட்டு முறைகளுக்கு அங்கீகாரமளித்தார் (ஷண்மதம்) (1) சிவ வழிபாட்டைக் கொண்ட சைவம் (2) விஷ்ணு வழிபாட்டைக் கொண் வைஷ் ணவம் (3) சக்தி வழிபாட்டைக் கொண்ட சாக்தம் (4) தூய வழி பாட்டைக் கொண்ட சௌரமம் (5) குமாரஸ் (குமரன்-கந்தன்) வழிபாட் டைக் கொண்ட கௌமாரம் மற்றும் (6) கணபதி வழிபாட்டைக் கொண்ட கணபதியம்.

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (3)

பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.
பிராமணீயமே படைத்த பிரம்மனும், பிரம்மமும் இதில் இல்லை. பிராமணர் அல்லாத கடவுள் பட்டியலில் பிரம்மன் இருக்கவில்லை. சூரிய வழிபாடு வேதத்தில் இருந்தாலும் அது பாப்புலர் கடவுளாகவில்லை. சூரியனைத் தவிர்த்துவிட்டாலும் மற்ற அய்ந்து கடவுளரும் பிராமணர் அல்லாதவர் களால் படைக்கப்பட்டிருந்த கடவுளர் கள். மற்ற கடவுளருக்கு முந்தைய காலத்தில் குறிப்புகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காணப்பட்டன. ஆனால் கணபதிக்கு அப்படிப்பட்ட பூர்வாசிரமக் குறிப்புகள் எங்கே? மற்றொன்று,
பல்லவர் சோழர் காலத்தில் சிவ னுக்கு, திருமாலுக்கு எனக் கோயில்கள் எழுப்பப்பட்ட அளவிற்கு மற்ற நான்கு கடவுளருக்கும் எழுப்பப்படவில்லை. மற்ற கடவுளர்கள் சிவன் கோயில்களில் துணைப் பிரகாரங்களில் உப தேவதைகளாக்கப்பட்டனர். முருகனது படைவீடுகளைக் குறிப்பிடும் திருமுரு காற்றுப் படையின் காலத்தைப்பற்றிய குழப்பம் இனியும் தீரவில்லை. ஆனா லும் அவரது படைவீடுகள், (அவை விஜயநகர காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன) தமிழக எல்லைக் குள்ளேயே முடங்கிப் போயின. ஆனால் அந்தக் கடவுளும் பிராமணியத்தை, வைதீகத்தைக் காப்பாற்றி (அ) சூர பத்மர்களை (பத்மாசூரனை = பத்மா+அசுரன் மாற்றிப் போட்டார் சூரபத்மன்) அசுரர்களைக் கொல்கிறான்.
சங்கரர் வாழ்ந்த 8ஆம் நூற்றாண் டில் கணபதி வழிபாடு துவங்கிவிட்டது என்பது விளங்குகிறது. ஆனால் அவருக்கு (படை) வீடு எதுவுமில்லை. தெருமுனை, ஆற்றங்கரை, அரச மரத்தடி, பிடித்துவைத்த சாணி இவையே அவரது வாசஸ்தலங்கள். கணேச சதுர்த்தி எனப்படும் விநாயகர் பிறந்தநாளில், சாணியாலும், களிமண் ணாலும் ஆன பிள்ளையார்கள் குளம், கிணறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலை களில் அழிக்கப்படுவார்கள். ஆடிப் பெருக்கில் ஏடுகள் அழிக்கப்பட்டதைப் போல. சிவனுக்கு எருதையும், விஷ்ணு வுக்கு கருடனையும், சக்திக்கு சிங்கத் தையும், சூரியனுக்கு குதிரைகளையும், கந்தனுக்கு மயிலையும் வாகனப் படுத்தியவர்கள், அழுக்கிலே உருவாக்கப் பட்டதாக புராணிப்பட்ட கஜமுகனுக்கு மட்டும் இழிவான இருட்டிலே வாழும் எலியை வாகனமாக்கினர். யானைத் தலை-பானை வயிறு, ஒடிந்த கொம்பு, ஒரு கோமாளித்தனமான கலவை (மற்ற ஐந்து கடவுளருக்கும் ஒட்டு உருவம் இல்லை. அழகிய முகம், பரந்த மார்பு, நெடிய உடல், இரண்டுக்கு மேற்பட்ட கரங்கள், ஒட்டிய வயிறு) ஏன் இப்படி?
ஒரு ஒதுக்கப்பட்ட, விரட்டப்பட்ட நிலையில் பிள்ளையார் எப்படி நீண்ட காலம் தொடர்ந்தார்?
சிவனுக்குப் பிள்ளை, கந்தனுக்குத் தமையன், சுந்தரரின் சின்ன வீட்டிற்கு சிவபெருமான தூது சென்றதைப்போல, கந்தனின் காதலுக்கு பிள்ளையார் உதவி செய்வது எல்லாம் பிற்சேர்க்கை.
இதை விளங்குவதற்கு பௌத்த வழிபாட்டு வரலாற்றைப் புரட்ட வேண்டும்.
பெயர் விளக்கம் : ஒப்பீடு:
பிள்ளையாருக்கு விநாயகர், விக் னேஸ்வரன், கணபதி, கணேசன், கஜமுகன், கஜபதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரையில் இப்பெயர்களில் எந்த பிராமணீயக் கடவுளும் இல்லை. ஆனால் இப்பெயர்கள் எல்லாம் தேரவாத, மகாயான பௌத்த நூற்களிலும், மரபுகளிலும் இடம் பெற்றன. இப்பெயர்கள் அனைத்தும் கௌதம புத்தரைக் குறித்தன.
நாயக் என்றால் தலைவன், விநாய கன் என்றால் மிகச்சிறந்த உன்னதமான தலைவன். மகாயானம் தோன்றும்வரை புத்தர் கடவுளாக்கப்படவில்லை. மாறாக நல்ல தலைவன், நல்லாசிரியர் என்றே அறியப்பட்டார்.
புத்தரது தத்துவங்கள் துக்க உண்மையை விளக்குகிறது. உலகில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்கள் மாயை அல்ல, உண்மையே என்றார். துன்பத்திற்கு காரணம் விதியோ ஆண்டவன் கட்டளையோ அல்ல; மனிதனின் துன்பத்திற்கு மனிதனே காரணம்; காரணங்களைத் தெளிந்து அவற்றை நீக்கிவிட்டால், துன்பத்திலி ருந்து, வினைகளின் விளைவுகளுக்கு அதாவது விக்கினத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்று உபதேசித்தவர் புத்தர். விக்கினத்தை நீக்கும் ஈசன்-ஈசுவரன் என்ற பொருளில் விக்னேஸ் வரன் என்றும் அழைக்கப்பட்டார்.
கணபதி: கணம் என்றால் இனக்குழு என்று பொருள்படும். வேதங்களிலேயே இரண்டுவிதமான அரசியல்: சமூக அமைப்புகளைக் காண்கிறோம். பிரா மணனால் அங்கீகரிக்கப்பட்ட மரபுவழி மன்னரை மய்யமாகக் கொண்ட பிரிவு ஜனம் எனப்பட்டது. குல குடும்பத் தலைவர்களது கூட்டு சபையால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களால் ஆளப்படும் பிரிவு (ஒருவகைக் குடியரசு அல்லது பிரபுக்கள் ஆட்சி) கணம் எனப்பட்டது. கணத்தின் தலைமைக்கு உரியவர்கள் கணத்தின் அதிபதி, கணத்தின் பதி என்ற பொருளைத்தரும் கணபதி என்ற சிறப்பைப் பெற்றனர். புத்தர் பிறந்த சாக்கியப் பிரிவு குடியரசு முறையைக் கொண்ட கணம் ஆகும். கணத்தின் தலைவர் என்ற முறையிலும், பௌத்த பிட்சுக்கள் என்ற கணத்தின் தலைவர் என்ற முறையிலும் புத்தரை கணபதி என்றும் அழைத்தனர். ஈசன் என்பதும் தலைவன் அல்லது கடவுள் என்ற பொருளில் வருவது. கணத்தின் ஈசன் கணேசன் ஆவார். கஜபதி: கஜமுகன் என்பதற்கான விளக்கத்தை பௌத்தத் தொன் மங்களிலிருந்து பெறமுடியும். கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில்தான் பௌத்த பீடகங்களுக்கு எழுத்து வடிவம் தரப்பட்டது. அதுபோன்றே மகாயான மும் உருவாகி, புத்தரை கடவுளாக்க முனைந்தது. கடவுளாக்கப்பட்டால் அற் புதங்களை இணைக்க வேண்டுமல் லவா? புத்தர் மரிக்கப் போவதை எங்கோ இருந்த அச்த முனிவர் ஞானத்தால் அறிந்து மாயா தேவியிடம் கூறினாராம்.
(தொடரும்)

புத்த விநாயகர் - வேத விநாயகராக்கப்பட்ட மோசடி வரலாறு (4)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பேராசிரியர் அ.கருணானந்தன்,
வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு)
விவேகானந்தா கல்லூரி, சென்னை.
கருவுற்றிருந்த மாயாதேவியின் கனவில் ஒரு யானை அவரது வயிற் றுக்குள் புகுவதைப் போலக் கண் டாராம். கனவு நிமித்தம் என்னவென்று வினவ கனவியல் நிபுணர்கள் பிறக்கப்போவது ஒரு சக்கரவர்த்தி யாகவோ அல்லது ஒரு புத்தராகவோ ஆகப்போகிறது என்று கூறினார்களாம். பௌத்த பக்தர்களுக்கு கருவிலே நுழைந்த யானை புனிதப் பொருளா யிற்று. கஜேந்திரன், கஜபதி பெயர்களின் மூலமும் அதுவே.
அது மட்டுமா?
பிறந்தவுடனேயே அக்குழந்தை தனது பாதங்களால் ஏழு அடிகள் வைத்து முன் சென்று பின்வந்ததாம். அந்த தெய்வீகக் குழந்தை எடுத்து வைத்த பாதங்கள் பின்னர் தர்ம பாதங் களாகின. புத்தரை ஒரு விஷ்ணு அவ தாரமாகப் பார்க்கும் வைஷ்ணவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு தர்ம பாதம் என்ற பெயரைச் சூட்டுவதுண்டு.
உலகின் துன்பத்தைப் போக்கும் மார்க்கத்தைத்தேடி சித்தார்த்தன் என்னும் அரசன் அல்லது ராஜன் தனது அரசையும், குடும்பத்தையும் தியாகம் செய்து துறவுக் கோலம் பூண்டதால் அவருக்குத் தியாகராஜன் என்னும் பெயரையும் பௌத்த மரபுகள் தந்தன. ஆனால் அதே பெயர் இன்று அது பிராமணீயமாக்கப்பட்ட சிவனைக் குறிக்கிறதாம். பாற்கடலில் கடைந்த போது முதலில் தோன்றிய ஆலகால விஷத்தால் தேவர்கள் சாகாமல் காப் பாற்ற, அதனை சிவனே விழுங்கினராம். உடனிருந்த பார்வதி பதறிப்போய் தன் பர்த்தாவின் குரல்வளையை இறுகப் பிடித்து முறுக்கியதால் அந்த ஆல காலவிஷம் சிவன் தொண்டையிலேயே நின்று நீலகண்டன் ஆனாராம் நீலகண்டன் சரி. எதையும் தியாகம் செய்யாமல் தொண்டையிலேயே விஷத்தைத் தேக்கி கொண்ட பரமசிவன் ஈசன் தானே? எப்படி ராஜன் ஆக முடியும்?
வேத விநாயகர் அதாவது பிராமணீய விநாயகர் தோன்றுவதற்கு முன்னே விநாயகம்-கணபதி-விக்னேசுவரன்-தியாக ராஜன் போன்ற வழி படு பெயர்கள் இருந் தன. அவையாவும் புத்தனைக் குறித்தன. ஏதாவது முதலில் இருந்தது புத்த விநாயகர், புத்த கணபதியே.
புத்தர் தமது வாழ் நாளில் கடவுளை ஏற்றதில்லை. தம்மைக் கடவுளாக்கு வதையும் ஒப்புக் கொண்டதில்லை.
அவரது மறைவுக்கு அவரது நினைவைப் போற்ற விரும்பியவர்கள் அவரது சின்னங்களையே பயன்படுத் தினர்.
யானை ஏற்கெனவே புனிதமாக்கப் பட்டு விட்டது.
புத்தர் தெளிவடைந்தது அரச மரத் தடியில் அதாவது போதிமரத்தடியில், அதனால் அரசமரம் அல்லது போதி மரம் வழிபாட்டுப் பொருளாயிற்று. அரசனாயிருந்த புத்தன் ஞானம் பெற்ற மரம் என்பதால் அது அரசமரம், போதம் (ஞானம்) பெற்ற மரமென் பதால் போதிமரம். அரச மரத்தடிகளில், அதுவும் குறிப்பாக ஆற்றங்கரை அரச மரத்தடிகளில் (புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்ற அரசமரம் நிரஞ்சனா நதிக்கரையில் இருந்தது) யானை உருவம் வைக்கப்பட்டால் அது மும்மடங்கு சிறப்பு பெறுவதாக ஆயிற்று.
புத்தரைக் குறிக்கும் மற்றொரு சின்னம் சக்கரம். சாரநாத்தில் புத்தர் ஆற்றிய முதல் பேருரை தம்ம சக்க பவத்தன (தர்ம சக்கர பரிவர்த்தன அதாவது, புத்தநெறி உலகெங்கும் பரவுவதற்காக சக்கரம் போல் இயங்கத் துவங்கிற்று என்று பொருள்) என்பர். சக்கரம் புத்தநெறியைக் குறிக்கலாயிற்று. (அதனால்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், அரசியலமைப்பு சபையின் உட்குழு தேசியக் கொடியில் அசோக சக்கரம் அதாவது, பௌத்த சக்கரத்தை வைப்பது என்று முடிவெடுத்தபோது இந்து மகாசபை போன்ற இந்துத்துவ வாதிகள், காந்தியின் ராட்டையை வேண்டுமென்றாலும் போட்டுக் கொள் ளுங்கள். அசோக சக்கரம் தேசியக் கொடியில் இடம்பெறக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்).
வேறொரு பௌத்த சின்னம் பாதங்கள் (தர்ம பாதம்) பௌத்த துறவிகள் இந்தியாவெங்கும் பரவினர். பரவிய இடங்களிலெல்லாம் யானை உருவங்களும், அரச மரங்களும், தர்ம பாதங்களும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாயின.
இமயத்திலிருந்து கன்னியாகுமரி வரை பாறைகளில் பொறிக்கப்பட்ட பாதங்களைக் காணமுடியும். அரச மரத்தடிகளிலெல்லாம் யானை உருவங்கள் வைக்கப்பட்டன.
புத்தம் மதமானது, மூடநம்பிக்கைகள் பெருகின, நேர்த்திக்கடன்களும் பெருகின.
பக்தி இயக்கம் என்ற போர்வையில் பிராமணீயம் பௌத்தத்தை வேரறுக்க சைவ-வைணவ  வெறிகளைப் பரப்பிய போது பல பௌத்த-சமணக் கோயில் கள் பிராமணீயமாக்கப்பட்டன. கொடுங்கலூர், சபரிமலை, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் மதமாற்றம் செய்யப்பட்டன.
திகம்பர அருகதர் பழனியாண்டவரானார். ஜேஷ்டாதேவி என்னும் மூத்தோள் மூதேவி என இழிவுபடுத்தி விரட்டப் பட்டாள்.
யானை உருவங்களுக்கு தொப்பையும், சுணங்கயி கைகால்களுடனான மனித உடல்கள் தரப்பட்டு தொந்தி விநாயகராக்கினர்.
புத்தர் பிறந்த விசாக நட்சத்திரம், கார்த்திகையில் பிறந்தவரெனப்படும் முருகனுக்கு சிறப்பு நாளாயிற்று.
புத்தரது தர்ம சக்கரம், விஷ்ணுவின் சக்கராயுதமாயிற்று.
வீடுகளில் போற்றப்ட்ட பௌத்த யானை உருவங்கள் களிமண், சாணி உருவாங்களாகின. முற்றத்தில் வைக்கப் பட்டவை பின்னர் நீரில் கரைக்கப்பட் டன. புத்தரின் மீதான பிராமணீய வெறுப்பு விநாயகரைச் சாணியாக்கிற்று, கணிமண்ணாக்கிற்று. கொம்பை ஒடித் தது, தெருவோரச் சிறு தெய்வமாக் கிற்று, அழுக்கிலிருந்து பிறந்தவராக கதை கற்பித்தது. கோமாளித்தனமான எலி வாகனம் தந்தது. ஞானத்திற்காக ஆற்றங்கரை அரசமரத்தடியில் தியானம் செய்த புத்தர் அழயான பெண்களை எதிர்பார்த்து ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளவராகச் சித்தரிக்கப்பட்டார்.
புத்தரது தர்ம பாதங்கள் ராம பாதங்களாகவும், தேவி பாதங்களாகவும், பீம-அனுமன் பாதங்களாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இந்தியாவெங்கும், மக்களிடையே பிரபலமாக இருந்து வந்த புத்த யானை - புத்த அரச மரம் - புத்த தர்ம சக்கரம் - புத்த தர்மபாதம் போன்றவற்றை இழிவுபடுத்தி, ஓரங்கட்ட முயன்ற பிராமணீயம், அது வெகுமக்களிடம் எடுபடாது எனத் தெரிந்த பிறகு அவற்றையே பிராமணீயப்படுத்தினர். புத்த சின்னங்களைத் திரிபு செய்தே புத்தத்தின் தர்மத்தை அழித்தனர்.
இதற்கு பக்தி இயக்கம் வசதியாக இருந்தது.
கணாபத்தியம் உருவானது; கணபதி சிவனின் அல்லது அவரது மனைவியின் மகனானார் கந்தனின் தமையனானார்.
தெற்கே கட்டை பிரம்மச்சாரியாக வும், வடக்கே கலியாண விநாயகராகவும் இரட்டை வேடம் அணிந்தார்.
வேத எதிர்ப்பு - கடவுள் எதிர்ப்பு - சனாதன எதிர்ப்பு புத்த விநாயகர் வேத விநாயகரானார்;பிராமணப் பூசகர்களின் வடமொழி மந்திரங்களில் பூணூலுடன் புல்லரித்துப் போனார்.
புத்த எதிர்ப்பு வெறியர்களால் ஒழிக்கப்பட்ட ஒரு கொம்பு, வியாசரும் படிக்கும் மகாபாரதத்தை, அவரது எழுத்தராக இருந்து விநாயகர் பனையோலைகளில் எழுதுவதற்கான எழுத்தாணி என்ற புண்ணியம் தரப் பட்டது. அகத்தியரின் கமண்டலத்தை காக்கை உருவில் வந்து கவிழ்த்து காவி ரியை உற்பத்தி செய்த மகாத்மியமும் வேத விநாயகருக்கு அளிக்கப்பட்டது.
வைணவர்கள் ஒரு படி மேலே சென்று, வைதீகத்தை ஏற்காத அசுரர் கூட்டத்தில் மித்திரபேதம் செய்வ தற்காகவே நாத்திகம் பேசும் புத்த அவதாரமாக விஷ்ணுவின் தசாவதாரப் பட்டியலில் இடம் பெறச் செய்தனர்.
அழிக்க முடியாமலிருந்த புத்தர் நினைவுகளை, சின்னங்களை பிரா மணீயம் அணைத்து, போற்றி, திரிபுகள் செய்து, சனாதனத்திற்குச் சாதக மாக்கியது.
இத்தகை கலை-பண்பாட்டு-தத்துவ மோசடிகளை நமது அறிவாளர்கள் உரிய வண்ணம் புரிந்துள்ளனரா?
பக்திகால சைவர்களும் விஷ்ணு பெரிதா, சிவன் பெரிதா போராட்டத் தில் ஈடுபட்டபோது உருவான ஒரு கதை சிவனின் அடி முடியை விஷ்ணு வும் பிரம்மனும் தேடிய ஒன்றாகும். பன்றி உருவிற் சென்ற மாலும், அன்னப் பறவை உருவில் முடி தேடிச் சென்ற பிரம்மனும் தோல்வியடைந்தனர் ஆனாலும், பிரமன் தான் முடியைக் கண்டுவிட்டதாகப் பொய் சொன்னார், தாழம்பூ பொய்ச் சாட்சியம் கூறியது. விளைவு, பிரமனுக்குக் கோயில் இல்லை என்று ஆயிற்றாம். மற்றொரு சிவக்கதை சைவர்கள் திருப்திபட்டுக் கொள்வதற் காக உருவாக்கப்பட்ட கதை பிரமனின் அய்ந்தாவது தலையை சிவபெருமான் கிள்ளியெறிந்த கதையாகும். பிரணவ மந்திரம் தெரியாத பிரமன் முருகனிடம் குட்டுப்பட்ட கதையும் உள்ளது. பிரம்மனுக்கு கோவில் இல்லாததற்கு சைவ சிவனின் சாபம்தான் காரணமா? சைவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்துகொள்ள மட்டுமே இக்கதைகள் பயன்படும். உண்மை நிலவரம் வேறு. சங்கரர் உருவாக்கிய சண்(ஆறு) மதங்களில் பிரம்மன் ஏன் தவிர்க்கப்பட்டார். மற்ற கடவுளர்களை பிராமணர் அல்லாத மற்றவர்களுக் காகப் பட்டியலிட்டவர். வேதம் கூறும் பிரம்மனுக்கு ஏன் ஒரு வழிபாட்டு அடையாளத்தைத் தரவில்லை. பிரம் மன் அல்லது பிரம்மம் பிராமணர் களுக்கே உரியவன். பிராமணனே பிரம்மமாகிறான். அவனை மற்றவர்கள் நெருங்காமல், அவனது தனித்தன்மை பாதுகாக்க வேண்டும், பிராமணீய புனிதத்தை, தனித்துவத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்பதற் காகவே சண்மத (சைவம்-வைஷ்ணவம்-சாக்தம்-சௌரபம்-கௌமாரம்-கணபத்யம்)ப் பட்டியலிலிருந்து பிரம்மனை விலக்கி வைத்தனர். ஆனாலும், ஆகமத்திற்குரிய கோவில் களில் பூசகர் உரிமைகளையும், அரசவை யாகங்களுட்கான யக்ஞ உரிமை களையும், ஸ்மிருதி-ஸ்ருதி விளக்க உரிமைகளை ஏகபோகமாக பிராமணர் களும் வைத்துக்கொண்டனர். இந்த ஆறு மதங்களும், வேத-பிராமண-யாக முறைகளும் முதன்மைப்படுத்திப் பாது காத்தன. சங்கரக் கதியில் பிராமணனும் பிரம்மமும் தனியாகவும், உயர்வாகவும் வைக்கப்பட்டனர். சண்மதக் கடவுளர்களுக்காவது சுயமரியாதை இருக்க வேண்டாமா?
எது எப்படியாயினும் ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள்!
18 புராணங்களில் விநாயகருக்கு என்று எதுவுமில்லை
18 உபபுராணங்களில் கணேசனுக்கு ஒன்றுமில்லை
ஆகமங்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக் கும், சக்திக்கும் தானே தவிர விநாய கருக்கு என்று எதுவுமில்லை.
புத்த மூலத்தைக் கொண்டிருந்த விநாயகருக்கு வைதீகம் தந்த மரியாதை இதுதான்.
பிறரது உழைப்பை மட்டுமல்ல, பண்பாட்டையும், நம்பிக்கையையும், படைப்பாற்றலையும், கற்பனைகளைக் கூட பிராமணீயம் மோசடியாக தனது லாபத்திற்காக மோசடியாக எடுத்து திரிபு செய்யும் என்பதற்கு விநாயகர் விவகாரம் மற்றுமோர் எடுத்துக்காட்டு.
எதுவும் அற்புதங்களாகத் தரப் பட்டால், கடவுளாக்கப்பட்டால் விபரீதவிளைவுகளே ஏற்படும். புத்தரும் அதற்கு விதிவிலக்கல்ல.
பிராமண மோசடியிலிருந்து உண்மைகளை வெளிக்கொணர பகுத் தறிவு வரலாற்றாளர்கள் இனியும் பணியாற்றுவர் என எதிர்பார்க்கிறோம்.
(நிறைவு)

விடுதலை ஞா.ம,22,29.9.12,6,13.10.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக