வெள்ளி, 21 ஜூலை, 2017

மாமாங்கத்தின் அற்புதம் -சித்திரபுத்திரன்

26.02.1933 - குடிஅரசிலிருந்து...

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக் காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். 
சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா? 

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்தபோதிலும்,  கூழாய் இருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவ தில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.

சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீ ரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்றுவேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும். 
பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
-விடுதலை,21.7.17

ஞாயிறு, 2 ஜூலை, 2017

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.
அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்கா விட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.
சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.
இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்க தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.
ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.
அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து