திங்கள், 2 மார்ச், 2020

ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....


சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலnக்ஷபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

குடி அரசு - உரையாடல் - 06.09.1931
(சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை - சித்திரபுத்திரன் )

நன்றி: தோழர் வாலாசா வல்லவன் &
Arulmozhi Kathirvel.

ஞாயிறு, 1 மார்ச், 2020

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!

-  தந்தை பெரியார்

ல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடன் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியா திருந்ததாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?

ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறுக்க வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.

-தந்தை பெரியார்  - “விடுதலை”, 9.2.1953

- - - - -

புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடிப்பூசி கொன்றைப் பூச்சூடி தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து

கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு பேயோடு ஆடுகிறவன்.. காட்டுமிராண்டியாய் இல்லாமல் நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா ?

லம்பாடி நரிக் குறவனுக்கும், இந்தச் சிவனுக்கும் என்ன மாற்றம் ?

சைவர்களே..!

சைவப் புலவர்களே..!

அருள்கூர்ந்து கூறுங்கள்.

இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் மகா சிவராத்திரி யாம்..!!

இவன் யோக்கியதை என்ன தெரியுமா ?

தாரு காவனத்து ரிஷிப் பத்தினி களின் கற்பைச் சூறை யாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம் -அது தான் சிவலிங்க உருவம் என்பது..!!

- ஈ.வெ.ரா.

(விடுதலை,18.7.1956)

- விடுதலை நாளேடு 20 2 20