செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இதுதான் கடவுள் பக்தியா? ஒழுக்கத்திற்கு பாடமா? / குலசேகர ஆழ்வார் பாடுகிறார்


குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

கிருஷ்ண - லீலை!

"ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா

வாயிலே முலையிருக்க

நஞ்சமார்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து  நீ

அருள் செய்து வளர்ந்தாய்

கஞ்சன் நான் கவர் கருமுகிலந்தாய்

கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து

சங்கு தங்கு முன்கை நங்கை

கொங்கை தங்கலுற்றவன்

பண்ணை வென்ற இன்சொல் மங்கை

கொங்கை தங்க பங்கயக்

கண்ண! நின்ன வண்ண மல்ல தில்லை

எண்ணும் வண்ணமே என்றும்

கொங்கை பாலமுது உண்டவன்

மாதர் வாயமுதம் உண்டவன்

என்று கண்ணனையும்

ஆடகத்து பூண் முலையுடையவள் யசோதை"

- குலசேகர ஆழ்வார்

பக்த கோடிகளே, கொஞ்சம் சிந்தியுங்கள் - கோபப்படாமல்!

கண்ணன் பெருமை இதுதானா?

ராமனுக்கும் - தமிழர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!


கம்பன் வடமொழியில் இருந்து தமிழில் இராமாயணத்தை மொழிபெயர்த்து எழுதும் வரை தமிழர்களுக்கு ராமன் இராமாயணம் குறித்து அறியாது - தெரியாது - ராமனை கடவுளாக தமிழர்களிடையே காட்ட 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அதிகம் பரவிய போது வெகுஜன ஈர்ப்பிற்காக கிராமங்கள் தோறும் ராமாயண கதாகாலட்சேபம் நடத்தினர்.

அத்தகைய ராமாயண கதாகாலட்சேபம் சூரியன் மறையும் மாலை வேளையில் துவங்கி விடிய விடிய சூரியன் வரும் வரை நடக்கும்.

காலை முதல் மாலை வரை விவசாயம், மற்றும் பிற தொழில்கள் செய்து உழைத்து வாழும் மக்கள், மாலை வேளையில் இப்படி தெருக்கூத்து, நாடகம் பார்க்க உட்கார்ந்து விடுவார்கள். தெருக்கூத்து, நாடகங்களை பார்க்கும் வழக்கம் உள்ள தமிழ் மக்கள், விடிய விடிய நடக்கும் ராமாயண கதாகாலட்சேபத்தில் தூங்கி வழிவர். காரணம், தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் கதையை நகர்த்திச் செல்லவும், நடிகர்களுக்கு அடுத்த காட்சியில் நடிப்பதற்கான ஒப்பனை மற்றும், உடைகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை தருவதற்காகவும் கட்டியங்காரன் என ஒருவர் வருவார். (இந்தக் கட்டியங்காரர்கள் தான் இன்றைய நவீன திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களாக பரிணமித்துள்ளனர்). அவர் பார்வையாளர்களை சோர்வடையாமலும், தூங்க விடாமலும் பார்த்துக் கொள்வார்.

ஆனால், ராமாயண கதாகாலட்சேபத்தில் அப்படி இருக்காது. தமிழ்நாடு நிலம் மற்றும் வாழ்வியலோடு ஒட்டும் உறவும் இல்லாத - மண்ணோடு கொஞ்சம் கூட  தொடர்பில்லாத கதையில் மக்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ள முடியாமல் தூங்கி விடுவர். ஆனாலும் பவுத்த சமண தாக்கங்களை மக்களிடமிருந்து அகற்றியே தீரவேண்டும் என்று உறுதியோடு இருந்த அன்றைய பக்தி இலக்கிய பரப்புரைஞர்கள் ராமாயண கதாகாலட்சேபத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். மக்களும் தொடர்ந்து போய் தூங்கி விட்டு வந்தனர்.

இப்படி ராமாயண கதாகாலட்சேபத்துக்கு போய் தூங்கி விட்டு வந்தவனிடம் சீதைக்கு ராமன் யாரென்று கேட்டால் சித்தப்பா என்றானாம். இது தான் விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா ஆன கதை.

இப்படி பக்தி இயக்க காலம் தொட்டே, தமிழர்களிடம் இராமனை அவதாரப் புருஷனாக காட்ட முயன்ற பார்ப்பனர்கள் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கின்றனர்.  தமிழர்களும் பக்தி இயக்க காலம் தொட்டு இன்று வரை இராமனை ஏற்றுக் கொள்ளாமல் மட்டம் தட்டியே வந்து இருக்கின்றனர்.

சீதைக்கு ராமன் சித்தப்பன்....

இதை, சீதைக்கு ராமன் சித்தப்பா, குதிரைக்கு பிறந்தவன் கோதண்ட ராமன், சாப்பாட்டு ராமன், சந்தேக ராமன் என தமிழில் புழங்கி வரும் பழமொழி மற்றும் சொலவடைகளை வைத்தே அறியலாம். 

தனது 3ஆவது அவதாரமான வராஹ அவதாரத்தில் பூமாதேவிக்கு நரகாசுரனை பெற்றுக் கொடுத்தவன் விஷ்ணு. அதே விஷ்ணுவின் 8ஆவது அவதாரமான ராமனுக்கு மனைவியாக சீதையை பெற்றுக் கொடுத்தவள் பூமாதேவி.

அதாவது 3ஆவது அவதாரத்தில் தனது புருஷனாக இருந்தவனுக்கு 8ஆவது அவதாரத்தில் தனது மகளை மனைவியாக்கியவள் பூமாதேவி. அப்போ, சீதைக்கு பூமாதேவி அம்மா என்றால், சீதைக்கு இராமனும் சித்தப்பா தானே!?

சாப்பாட்டு ராமன்

14 ஆண்டு வனவாசம் முடியும் நாளில் ராமன் திரும்பி வந்து அயோத்தி அரியணையை ஏற்கவில்லை எனில் தான் தீயில் விழுந்து உயிர் துறப்பதாக சபதம் எடுத்தவன் பரதன். 14 வருட வனவாசம் முடியும் நாளும் வந்தது.  அப்போது தான் இலங்கையில் ராவண வதம் முடித்து விட்டு அயோத்திக்கு வந்து கொண்டிருந்தான் ராமன். வந்தவன் நேரே போய் தன் தம்பி பரதனின் உயிரைக் காப்பாற்றி இருக்க வேண்டும் - ஆனால் ராமன் செய்த செயல் என்னவென்றால் அறுசுவை உணவு உண்பதற்காக பரத்வாஜ முனிவனிடம் சென்று இத்தனை ஆண்டுகாலமாக சுவையான உணவை சாப்பிடவில்லை. ஆகவே நெய்யோடு அமுத சுவை கொண்ட உணவு வகைகளை  தாருங்கள் என்று கேட்கிறான். அவன் கேட்ட உணவு வகைகளை சமைத்துப் படைக்க நேரம் ஆகும். ஆகவே தனது ஆசிரமத்துக்கு வந்த ராமனை பரத்வாஜ முனிவன், தன்னோட ஆசிரமத்தில் அன்றைய இரவு தங்கி மறுநாள் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத் தான் போக வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.

பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தின் சுவை மிகுந்த உணவுகள் குறித்து நன்கு அறிந்த ராமன் பகல் உணவு - இரவு உணவு, மறுநாள் காலை, மதிய உணவு என வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு உண்ட களைப்பில் உறங்கிப்போனான். இடையில் தான் சரியான நேரத்தில் செல்லாவிட்டால் தம்பி தீயில் விழுந்து செத்துப்போவேன் என்று கூறியது நினைவிற்கு வர, போனாப் போகுது என அனுமனை பரதனிடம் அனுப்பி தான் வந்துக் கொண்டிருப்பதாக தகவல் சொல்லச் சொல்கிறான்.

இந்த நிலையில் தனது அண்ணன் குறிப்பிட்ட நாளில் வாராததால் தன்னுடைய மனைவிகளை சதிக்கு அனுப்பிவிட்டு தானும் தீயில் குதிக்க தயாரானான் பரதன். ஆனால் அவனது தாயார் கைகேயி அவன் உயிர் துறக்கவேண்டாம் என்று அவனைத் தடுத்துக்கொண்டு இருந்த போது அனுமன் அங்கு வருகிறான். ராமன் வருவதைக்கூறுகிறான்.

அதாவது, தம்பியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுவையான சோற்றுக்கு ஆசைப்பட்டு அலைந்த ராமனைத் தான் இன்று வரை சாப்பாட்டு ராமன் என கலாய்க்கின்றனர் தமிழர்கள்.

சந்தேக ராமன்

ராவண வதம் முடிந்து சீதையை அயோத்திக்கு அழைத்து வந்து அரசாட்சி செய்து கொண்டிருந்தான் ராமன். நாடும் நாட்டு மக்களும் தனது ஆட்சியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். ஒரு சலவைத் தொழிலாளியின் வீடு அருகே அவன் வரும் போது அந்த வீட்டில் இருக்கும் சலவைத் தொழிலாளிக்கும் அவனது மனைவிக்கும் சண்டை நடக்கிறது, அதை அவன் கேட்க நேரிடுகிறது.

சலவைத் தொழிலாளியின்.மனைவி தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டு குறித்த நாளில் வராமல், நாட்கள் பல கடந்து திரும்பி வந்ததால், அவளிடம் சண்டை போடுகிறான் சலவைத் தொழிலாளி. “எவ்வளவோ நாட்கள் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை அப்படியே ஏற்றுக் கொண்ட ராமன் போல, உன்னையும் ஏற்றுக் கொள்ள நான் என்ன அந்த மானங்கெட்ட மடராமனா?” என சண்டையில் தன் மனைவியிடம் கேட்டு விடுகிறான். அதைக் கேட்ட ராமன் சீதையின் கற்பின் மேல் சந்தேகம் கொள்கிறான். அவளை தீயில் இறங்கி தன் கற்பை நிரூபிக்க சொல்கிறான். ஒரு வேளை, சீதையின் கற்புக் குறித்து சலவைத் தொழிலாளி இல்லாமல், வேறு எந்த மேல் ஜாதிக்காரனோ பேசி இருந்தால் கண்டு கொள்ளாமல் இருந்து இருப்பானோ என்னவோ, அந்த ராமன்.

தனது ஆட்சியில் இருக்கும் ஒரு கீழ் ஜாதிக்காரன் சீதையின் கற்பைக் குறித்து சொன்னதை பொறுக்க முடியாமல் சீதையின் கற்பை சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொல்கிறான். அதை ஊரார் மத்தியிலும் நிரூபிக்க சொல்கிறான். கட்டிய மனைவியின் கற்பையே சந்தேகப்பட்டு அவளை தீக்குளிக்க சொன்ன ராமன் அது முதல் சந்தேக ராமன் ஆனான்.

ராமன் நமக்கான கடவுள் இல்லை....

 எழுத்தாளர்களாக இருக்கும் மேல்தட்டு வர்க்கம் தங்களின் பெண்ணியம் பேசும் கதைகளில், கதை நாயகிகளை சந்தேகப்படும் கணவன்களை “சந்தேக ராமன்”கள் என எழுதி வந்ததே இதற்கு சாட்சி. வடநாட்டவர் கூட்டத்துக்கு வேண்டுமானால் இந்த அவதார புருஷன் அயோத்தி ராமனாக இருக்கலாம்.  ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு ராமன் என்றுமே சாப்பாட்டு ராமன், சந்தேக ராமன், அயோக்கிய ராமன் தான். வடநாட்டில் தான் ஜெய் சிறீராம். இங்கே தமிழ்நாட்டில் சரியான சாப்பாட்டு ராமனாக இருக்கியே என்பதுதான். தமிழ்நாட்டில் வடக்கே இருந்து பிழைக்கவந்த ஒற்றைக்கோடு நாமம் போட்ட பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் தங்கள் வீடுகளில் ராமனின் படத்தையோ, சிலையையோ வைத்து வழிபட மாட்டார்கள். அப்படி வழிபட்டால் ராமனைப் போல குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும் என காரணம் சொல்வார்கள். உண்மைக் காரணம் ராமன் நமக்கான கடவுள் அல்ல, அவன் வடநாட்டின் மேல்தட்டு மக்கள் தங்களின் லாபத்திற்காக உருவாக்கிய ஒன்று. இன்று அதையே அரசியல் லாபக்கணக்கிற்கும் பயன்படுத்துகிறார்கள்.