சனி, 20 செப்டம்பர், 2025

குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


‘குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி


கட்டுரை, ஞாயிறு மலர்

சைவ மதத்தின் பெருமையை கூறுவதோடு, அதன் கதாநாயகர்களான பார்வதி பரமசிவனின் திருமணக் காட்சி களையும், அவர்களின் மகனாக ஸ்கந்தன் (கந்தன் – முருகன்) பிறப்பதை பற்றியும் ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் கூறுகிறது.

இந்த காப்பியத்தை காளியின் பக்தராக கூறப்படும், ‘கவிஞர் காளிதாசர்’ இயற்றியதாக கூறப்படுகிறது. (இவர் வாழ்ந்த காலம் பொ.மு 01 முதல் பொ.பி. 05 வரை ஏதோ ஒரு நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது!

‘குமார சம்பவம்’ என்கிற இந்த காப்பியத்தில் 17 சருக்கங்கள் இருக்கின்றன. இதில் எட்டு சருக்கங்களை தான் ‘காளிதாசர்’ இயற்றிய தாகவும், மற்ற 9 சருக்கங்களை வேறு யாரோ எழுதி ‘இடை செருகல்’ செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

முதல் 8 எட்டு சருக்கங்களைத் தான் பலர் ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். சிலர் மட்டுமே 17 சருக்கங்களையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பக்தி நூல்களை வெளியிடும் ‘லிட்டில் பிளவர் பதிப்பகம்’ ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் 8 சருக்கங்கள் கொண்டதையே வெளியிட்டுள்ளது.

காப்பியத்தின் பெயர் ‘குமார சம்பவம்’, ஆனால் இந்த எட்டு சருக்கங்களில் குமார சம்பவத்தை பற்றியே குறிப்பிடப்படவில்லை!. அதாவது குமாரன் எனப்படும் ஸ்கந்தனின் பிறப்பு பற்றியே குறிப்பிடப்படவில்லை. குமாரனின் பிறப்பு பற்றி காவியம் எழுத வந்த காளிதாசர், குமாரனின் பிறப்பை பற்றி, கூறாமலா இருந்திருப்பார்?

பிறகு வரும் 9, 10, 11 ஆகிய சருக்கங்களில் தான் கந்தன் எனப்படும் குமாரன் எப்படி பிறந்தான் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த வர்ணனை மிகவும் அருவருப்பாக (ஆபாசமாக) இருப்பதால் தான் இடைச்செருகல் என புறக்கணித்து விடுகின்றனர்.

‘குமார சம்பவம்’ என்கிற காப்பியத்தில் உள்ளபடி…..

பார்வதி – பரமசிவன் திருமணம் பருவதமலையில் நடைபெறுகிறது. அங்கே ஒரு மாதம் தங்கி இன்பம் அனுபவிக்கின்றனர். பிறகு இமய மலையின் உச்சிக்கு(கந்தமாதன மலை) புறப்பட்டு சென்று அங்கு யாரும் அறியா இடத்தில் மதுவை உண்டு, பாலின்ப களிப்பில், வாழ்க்கை வாழ்கின்றனர்.

கட்டுரை, ஞாயிறு மலர்

இப்படியே நூறு தேவ ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர்.(மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களின் ஒரு நாள். 360 மனித ஆண்டுகள் தேவர்களின் ஒரு ஆண்டு. அப்படியானால் 360×100 =36000 மனித ஆண்டுகள்) அதாவது 36,000 மனித ஆண்டுகள் பார்வதியும் -பரமசிவனும் உடலுறவில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

ஆனாலும் பார்வதிக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலங்கி போய், இனிமேல் ஒரு குழந்தை பிறந்தால் யாரால் தாங்க முடியும்? என அஞ்சிய தேவர்கள் ‘அக்னி’ தேவனை தூது அனுப்ப முடிவு செய்தனர். அக்னி தேவன் ‘புறா’ வடிவில், பார்வதியும் பரமசிவனும் உடலுறவு கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான். துணுக்குற்ற சிவன் அப்படியே வெளியே வந்து அக்னி தேவனிடம் ‘என்ன அவசரம்?’ என்று கேட்டான். தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் ‘தாரகாசுர’னை கொல்ல, ஒரு மகனை தாங்கள் பெற்றுத் தர வேண்டும்’ என தேவர்கள் என்னை அனுப்பி வைத்துள்ளனர்’ என கூறினார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

சமாதானம் அடைந்த சிவன், “உடலுறவுக்கு இடையே என்னை தொந்தரவு செய்ததால் வெளியேறும் ஸ்கலிதத்தை (விந்துவை) நீ ஏந்தி கொள்” என அக்னி பகவானிடம் விட்டார்.

அக்னி பகவான் அதன் வெப்பத்தை தாளமாட்டாமல் கங்கை நதியின் ‘சரவணப் பொய்கை’யில் மூழ்கி அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டான். அங்கே நீராட வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த விந்துவின் நீரினால் கர்ப்பமானார்கள். அந்த கர்ப்பத்தை அங்கேயே ஈன்று விட்டு விட்டனர்.

அதைப் பார்வதி எடுக்க ஆறு குழந்தைகளாக மாறின. அதை ஒன்றாக சேர்க்க ஆறு தலை 12 கை உடைய கந்தனாக (ஆறுமுகம் – ஷண்முகம்) மாறியது.

‘குமார சம்பவம்’; சருக்கம்: 9,10,11 பகுதிகள் தான் இவற்றை விவரிக்கின்றன.

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், பால காண்டம் சருக்கம் 36, 37இலும்,

ஸ்ரீ சிவ மஹா புராணம்,1 ஞான சம்ஹிதை,18. தாரகாசூரன் உதயமும் திரிபுரத் தோற்றமும்’ பகுதியிலும்  இதே கதை இடம்பெற்றுள்ளது.

‘குமார சம்பவம்’ என்ற பெயரில் காப்பியம் எழுத வந்தவர், குமாரனின் பிறப்பு பற்றி எழுதாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை. பிறகு வந்தவர்கள் காப்பியத்தை நகலெடுக்கும் போது அந்தந்த காலகட்டத்தில் இருந்த மொழி நடைக்கேற்றாற் போல் எழுதியிருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு “இந்தப் பகுதி இப்படி இருக்கிறது; அந்தப் பகுதி அப்படி இருக்கிறது’ அதனால் இந்த பகுதிகளை அவர் எழுதி இருக்க மாட்டார்” என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதையே!

- விடுதலை ஞாயிறு மலர், 20.09.2025