திங்கள், 15 ஆகஸ்ட், 2016

’சரஸ்வதி’ படையெடுப்பு எப்படி? எப்போது?

- கி.வீரமணி
கல்விக் கடவுளாக சரஸ்வதி கற்பிக்கப்பட்டுள்ளதற்கும், திராவிடர்களுக்கும் எவ்வித ஒட்டோ, உறவோ கிடையாது. இது ஒரு வகை ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் கூறு, விளைவு ஆகும்.
நாம் நமது விழைவாகவோ, கற்பனையாகவோ இப்படி எழுதவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் நம்முடையதா, பிறரது பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவால் ஏற்பட்ட தாக்கமா? என்று கண்டறிய, ஒரு எளிய வழி, அச்சொல் அடி எங்கே உள்ளது? அது தமிழா?
பிற சொல்லா? என்று பார்த்தாலே தெரியும் என்றார். எடுத்துக்காட்டாக ‘ஜாதி’ என்பதும், ‘ஆத்துமா’ என்பதும் தமிழ்ச் சொற்கள் அல்ல. எனவே, இறக்குமதியானவை -_ புகுத்தப்பட்டவை என்பது விளங்குகிறது அல்லவா?
சரஸ்வதி என்பது தமிழ்ச் சொல்லா? அல்ல; அதுபோல, திராவிடர்களுக்கும் எந்தவிதத்திலும் உரியது அல்ல. இடையில் திணிக்கப்பட்டது _- அதுவும் புராண காலத்தில்.
வேத காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் எந்தக் கடவுளர்களும் இல்லை என்பது ஆய்வாளர்களின் தெளிவான நிலைப்பாடு.
பிறகு பாமர மக்களை வயப்படுத்த புராணங்கள் -_ இதிகாசங்கள் என்று கட்டுக்கதைகளை [(Mythology)- Myth என்றால் உண்மை அல்லாத இட்டுக் கட்டப்பட்டவை என்றுதான் பொருள்] உருவாக்கினர்.
வேதங்களை தங்களுடைய தனி உடைமையாக்கி, மற்ற வர்ணத்தவர் படிக்கவோ, படிப்பதைக் கேட்பதோ கூடாது என்றும், மீறினால் நாக்கறுப்பு, காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றல் தண்டனை என்று ஆக்கினர்.
அதன்படி வேதங்களில் சரஸ்வதி கிடையாது. பிறகு புராணங்களில்தான் வருகின்றாள்.
‘அபிதான சிந்தாமணி’ (தமிழ்க் கலைக் களஞ்சியம்) ஆ.சிங்காரவேலு முதலியார் _- (1910ஆம் ஆண்டு) ‘சரஸ்வதி’ என்ற தலைப்பில் தரப்படும் தகவல்கள் (பக்கம் 723, 2010ஆம் ஆண்டு பதிப்பு).
சரஸ்வதி: A.1 பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யாதிஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம், கைகளில் ஜபமாலை, புத்தகம், வீணை, எழுத்தாணி தரித்து எழுந்தருளியிருப்பவள் எ_-ம்., இவளுக்கு ஒரு கரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இரு கரங்களில் வீணை எ_-ம் இவட்குப் பிரிமவித்தை, முகம், நான்கு வேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதிவயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங் கூறுப.
2. தஷயாகத்தில் காளியால் மூக்கறுப்புண்டு மீண்டும் பெற்றவள்.
3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன் கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக்கொண்டு தொடர்ந்து சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள்.
4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.
5. ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
6. பிரமன் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி மூவருடன் கூடிக் கங்காஸ்நானத்திற்குப்போக சரஸ்வதி ஆகாயவழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ்செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரமதேவனிடஞ் சென்று தான் வருமுன் ஸ்நானஞ் செய்ததுபற்றிக் கோபித்தனள். பிரமன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியைப் பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சாபம் ஏற்றவள்.
7. ஒரு யாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகையைத் தாரமாகப் பெற்றதால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப.
8. இவளும் இலக்குமியும் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிரமனைக் கேட்கப் பிரமன் இலக்ஷமிதேவிஎன்ன மாறுகொண்டு நதியுருவாயினள்.
9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துள்தோன்றியவள், புலத்தியரை அரக்கனாகச்சபித்தவள். சரத்காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர்.
10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக்கண்டு, அந்த மோகவார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ யிவ்வாறு தூஷித்துக் கொண்டிருந்ததால் ஒருகாலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள். (சிவமகாபுராணம்)
11. இவளும் கங்கை, லக்ஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்தினிகள். ஒரு கால் விஷ்ணு கங்கையிடம் அதிக ஆசைகொண்டு அவளுடன் நகைமுக மாயிருத்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லக்ஷ்மியை நோக்க லக்ஷ்மி கங்கைக்குச் சார்பாயிருத்தலைக்கண்டு இவள் லக்ஷ்மியைச் செடியாகவும், நதியாகவும் போகச் சபித்தாள்.
கங்கை சரஸ்வதியை நதியுருவமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள். லஷ்மியிதனால் தர்மத்வஜருக்குக் குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியென்னும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர். லஷ்மி சங்க சூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரமபத்தினி ஆயினள். சரஸ்வதி பாரத வருஷத்தில் நதியாக வந்தபடியால் பாரதி, பிரமனுக்குப் பத்தினியாதலால் பிராம்மி,  வாக்குகளுக்குத்தேவியாதலால் வாணி, அக்னியைப் போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சனிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப் படுகின்றனள், இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்  சென்ற பின் தங்கள் பதமடைவர் (தேவி -_ பா.)
சரஸ்வதி B.1 ஒரு நதி  It rises in the hills of Sirmur. It disappears at vinasanatirtha after taking a Westerly course from Thaneshar.
ஸரஸ்வதி நதி இது ருஷிகளின் யாகத்தின் பொருட்டு, சுப்ரபை, காஞ்சனாஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு,  விமலோதகையென பிரவகித்தது.
இதனைத் தமிழ்ப்படுத்தி கலைமகள் ஆக்கினர் பிற்காலப் புலவோர்.
பண்பாட்டுப் படையெடுப்புக்கு பிற்காலப் ‘புலவோர்’ ‘முகவர்களாகவே’ செயல்-பட்டுள்ளனர்.
தரவு: மறைமலை அடிகளாரின் ‘முற்காலப் புலவரும் - பிற்காலப் புலவரும்’ நூல்.
டபிள்யூ.ஜே.ஜான்வில்கின்ஸ் (W.J.Wilkins) என்ற மேலைநாட்டவர், 1882 இல் கல்கத்தாவிலிருந்து, சமஸ்கிருத மொழி பயின்று ஆங்கிலத்தில், ‘Hindu Mythology’ என்ற ஒரு நூலை எழுதினார்.
அதில் பல பிரிவுகளாக கடவுள்களை அறிந்து மதம் என்ற ஆரிய சனாதன வேத மதத்தில் எப்படி உள்ளனர் என்பதை விரிவாக எழுதியுள்ளார்.
1. வேத கடவுள்கள் _- வேத கடவுள்கள் சூரியன், வெளிச்சக் கடவுள், புயல் கடவுள்கள்,
2. புராண கடவுள்கள் என்றும் பகுத்து எழுதியுள்ளார்.
அதில் புராண கடவுள்களால்தான் மேற்காட்டிய பிரம்மாவும், அவர் உருவாக்கிய மகள் -_ மனைவி ‘சரஸ்வதியும்’ உள்ளனர்!
இந்த இரு கடவுள்கள்பற்றி கதைகள்,
மகாபாரதம்
பிரம்ம புராணம்
பத்ம புராணம்
வராக புராணம்
ஸ்கந்த புராணம்
மச்ச புராணம்.
இப்படி பலப்பலவற்றில் விசித்திரக் கதைகள் உள்ளன!
எப்படி பிள்ளையார் என்ற வினாயகன் வடக்கே இருந்து தமிழ்நாட்டிற்கு கி.பி. ஆறாம் நூற்றாண்டு இறுதி அல்லது ஏழாம் நூற்றாண்டில் இறக்குமதி செய்யப்பட்டானோ, அதுபோலத்தான் சரஸ்வதி என்ற கடவுளச்சியும் கொண்டு வரப்பட்டாள். கல்விக்கே கடவுள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, ‘சரஸ்வதி பூஜை’, ‘சரஸ்வதி வந்தனா’ - இவைகள் எல்லாம் திராவிடத்தில், தமிழ்நாட்டில் ஊடுருவின!
ஆரிய மா¬யையின் தாக்கம் அப்பட்டமான ஆரியப் பண்பாட்டின் விளைவு.
கல்வியைக் கண்ணாகக் காட்டினார் வள்ளுவர். கடவுளாகக் காட்டவில்லை - அவர் காலத்திலேயே பண்பாட்டுப் படையெடுப்பு தொடங்கியது என்ற போதிலும்கூட!
-உண்மை,16-31.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக