தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62
*****
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
***********
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201
***********
அகராதிக் குறிப்பில்
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
- நூல்: அபிதான சிந்தாமணி
***********
சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80
***********
அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்
பக்கம்: 33, 34
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக