செவ்வாய், 26 ஜூலை, 2022

இந்து மதத்தில்தான் தாழ்த்தப்பட்ட கிளை!


13.11.1948 - குடிஅரசிலிருந்து... 

தாழ்த்தப்பட்ட வகுப்பார் உணரவேண்டும், இந்துக்களாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பாரென்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் குறள் இந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுள்ள சத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும். விரும்பிப்படித்து அதன்படி நடக்கவேண்டும். ஒவ்வொருவனும் தான் இந்து அல்ல திராவிடனே - திருக்குறளானே என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்னமதம் என்றால் குறள் மதம், மனிததர்ம மதம் என்று சொல்லப் பழகவேண்டும்.

யார் எதைச் சொல்லியபோதிலும், எது எத்தன்மையுடையதாய் இருப்பினும், ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்துப் பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்யவேண்டும். சுய அறிவே பிரதானம் என்ற, வாலறிவன் நற்றாள் என்ற வள்ளுவர் கருத்துப்படி அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக