(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், காலையிலும் மாலையிலும் யார் பிரபந்தங்களைப் பாடுவது என்பதில் அந்தக் கோவி லோடு தொடர்புடைய வடகலை அய்யங்கார்களுக்கும் தென்கலை அய்யங்கார்களுக்கும் இடையிலான மோதல் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது.
எல்லா வைணவக் கோவில்களிலும் காலையிலும் மாலையிலும் பிரபந்த சேவை என்பது உண்டு. நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல்களை, இறைவனுக்கு முன்பாக வைணவர்கள் பாடுவதே இந்த பிரபந்த சேவை. இந்த பிரபந்த சேவையில் ஈடுபடுவோர் அத்ய பாகர்கள் எனப்படுவார்கள். இவர்களுக்கு இதற்கு பிரதிபலனாக பிரசாதமும் வழங்கப்படும்.
இந்தப் பிரபந்தங்களைப் பாடுவதற்கென முறைகள் உண்டு. பிரபந்தக் கோஷ்டியில் மூத்தவராக இருப்பவர், “ஆரம்பிக்கலாம்” என்ற சொன்னதும் பிரபந்த சேவை துவங்கும். முதலில், அவர்கள் சார்ந்த பிரிவின் ஆச்சாரியாரைப் போற்றிப்பாடிவிட்டு, பிரபந்தங்களைப் பாடுவார்கள். தென்கலை வைணவர்களைப் பொறுத்த வரை, பிரபந்தங்களைத் துவங்குவதற்கு முன்பாக, மணவாள மாமுனிகளை போற்றும் “சிறீ சைலேஷ தயாபாத்திரம்” என்ற மந்திரத்தைச் சொல்லி துவங்கு வார்கள். வடகலை வைணவர்களைப் பொறுத்தவரை, “சிறீ ராமானுஜ தயாபாத்திரம்” என்ற மந்திரத்தைச் சொல்லித் துவங்குவார்கள்.
இதற்குப் பிறகு இரு தரப்புமே பொதுவான பிர பந்தங்களைப் பாடுவார்கள். இதனை முடிக்கும்போது, தென்கலையார் “மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்” என்ற வாழித் திருநாமத்தைச் சொல்லி முடிப்பார்கள். அதேபோல வடகலையார் தங்களுக் கென ஒரு வாழித் திருநாமப்பாடலை வைத்துள்ளனர்.
வடகலை, தென்கலை சர்ச்சை
வரதராஜப் பெருமாள் கோவிலைப் பொறுத்தவரை, இந்த பிரபந்தம் பாடுவதில் தொடர்ச்சியாக தென்கலை வடகலை இருவருமே மோதிக்கொண்டு வருகின்றனர்.
இந்த மோதல்கள் பல சமயங்களில் மிக மோசமான கட்டத்தையும் எட்டியிருக்கின்றன. இந்த மோதலின் போது கோவிலுக்குள்ளேயே, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்ட நிகழ்வுகள் அதிகம் உள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வட கலை வைணவ சம்பிரதாயத்தின்படி நிர்வகிக்கப்படும் ஒரு கோவில். ஆனால், இந்தக் கோவில் துவக்கத்தில் தாத்தாச்சாரியார் என்ற குடும்பத்தின் வசம் இருந்தது. இந்த தாத்தாச்சாரியார் என்போர் வடகலை வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இங்கிருக்கும் அர்ச்சகர்கள் அனைவரும் வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இப்படியிருக்கும்போது, இந்தக் கோவிலில் இறைவனின் திருவுருவுக்கு முன்பாக பாடும் உரிமை தென்கலை வைணவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியைச் சொல்கிறார்கள் வைணவர்கள். முகலாயப் படையெடுப்பின்போது, வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்த சிலை, உடையார்பாளையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்த பாளையக்காரரின் வசம் இருந்தது.
இந்தத் திருமேனிகளைத் தேடிவந்த தாத்தாச்சாரியார் கள், அவை அங்கிருப்பதை கண்டனர். ஆனால், அந்தப் பாளையக்காரர் அதனைத் தர மறுத்துவிட்டார். அப்போது அந்த ஊரில் இருந்த ஆத்தாஞ்ஜீயர் என்பவர், அய்தராபாத்தில் உள்ள நவாபிடம் கூறி கூலிப்படைகளை அனுப்பி சிலைகளைப் பெற்றுக் கொடுத்தார். அதற்குப் பிரதிபலனாக, தினமும் இறை வனின் திருவுருவுக்கு முன்பாக பிரபந்தங்களைப் பாடும் உரிமை ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்திற்கு அளிக் கப்பட்டது. பிறகு, அந்த உரிமை, ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்தினர் மட்டுமல்லாது பல தென்கலையாருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வடகலை – தென்கலை வேறுபாடு என்ன?
வைணவப் பண்பாட்டில் நாதமுனிகளுடன் துவங்கும் ஆச்சார்ய பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் ராமாநுஜர். தற்கால வைணவ நடை முறைகளை உருவாக்கி, அவற்றுக்குக் கருத்துகளின் அடிப்படையில் உயிர் கொடுத்தவராக, ராமானுஜரை வைணவர்கள் கருதுகின்றனர்.
ராமாநுஜரின் காலத்திற்குப் பிறகே வைணவத்தில் வடகலை – தென்கலை என இரு பிரிவுகள் ஏற்பட்டன. காஞ்சிபுரத்தை மய்யமாகக் கொண்ட ஆச்சார்யார் களைப் பின்பற்றுபவர்கள் வடகலை என்றும் திருவரங் கத்தை மய்யமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுவோர் தென்கலை என்றும் பொதுவாகக் குறிக்கப்படுகின்றனர்.
தென்பகுதியில் உள்ள திருநெல்வேலியில், ஆழ் வார் திருநகரியில் 1370இல் பிறந்த மணவாள மாமுனி களைப் பின்பற்றும் வைணவர்கள் தென்கலையார் என்றும் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1268இல் காஞ்சிபுரத்தில் தூப்புல்லில் பிறந்த வேதாந்த தேசிகரை பின்பற்றும் வைணவர்கள் வடகலையார் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்ற கருத்தும் உண்டு. திருவரங்கத்திற்கு வடக்கே காஞ்சிபுரமும் தெற்கே ஆழ்வார் திருநகரியும் உள்ளதால், நிலவியல் சார்ந்து இந்தப் பெயர்கள் அளிக்கப்பட்டன.
வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் நாமம், பெருமாளின் பாதங்களைக் குறிக்கிறது. அதனை வெறுமனே நெற்றியில் வரையக்கூடாது எனக் கருதி, ஒரு சிறிய தாமரை மலரை நாமத்திற்குக் கீழ் வரைந்தனர் தென்கலையினர். இது நாமத்தோடு இணைந்து சீ வடிவிலானது. ஆனால், வடகலையினர் இதனை ஏற்க வில்லை. அவர்கள் வெறுமனே ஹி வடிவில் நாமத்தை இட்டுக் கொள்வதையே தொடர்கின்றனர்.
தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவி லில் நடக்கும் பிரச்சினை என்பது மேல் குறிப்பிடப்பட் டதைப் போன்ற தத்துவார்த்தப் பிரச்சினை அல்ல. தென்கலை வைணவர்களுக்கும் வடகலை வைணவர் களுக்கும் இடையில் நடக்கும் உரிமை சார்ந்த பிரச்சினை.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், அற நிலையத்துறை ஆணையரின் அனுமதியின்றி வட கலை, தென்கலை தொடர்பாக எதையும் சேர்க்கக் கூடாது, என்ற அரசின் உத்தரவு உள்ளது. இதை மீறி கோவிலின் கருவறையில் வெள்ளிக் கதவு பொருத்தப் பட்டுள்ள, சங்கு சக்கரம் சின்னங்களுடன் உள்ள கதவில், வெள்ளியிலான வடகலை நாமம் திடீரென பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள யதீந்த்ர ப்ரவண சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2010இல், திருமலையிலும் இதே போன்ற பிரச்சினை கிளம்பியது: திருப்பதி வெங்கடேச பெரு மாள் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மத்தியில் எழுந்துள்ள வடகலை, தென்கலை திருநாமம் பிரச் சினை குறித்து ஆந்திர மாநில ஆளுநர் கவனத்திற்கு புகார் அனுப்பியுள்ளதாக அகோபில மடம் செயலர் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் நடக்கும் ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் வாகன சேவையின்போது கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் களிடையே திருநாமம் முக்கியத்துவம் குறித்து வடகலை, தென்கலை நாமப் பிரச்சினை தொடர்ந்து பல ஆண்டுகளாக, “நீறுபூத்த நெருப்பு போல்’ இருந்து வருகிறது.
திருமலையில் ரத உற்சவத்தின்போது திருநாமத் துடன் கூடிய பெரிய துணியால் தயாரிக்கப்பட்ட ஆங்கில “ஏ’ எழுத்து போன்ற கூடாரம் வாகன சேவைக்கு முன்னும் பின்னும் அணிவகுத்து செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. இதில் வடகலை நாமம் வெளியில் தெரியாமல் துணியை மூடிவிட்டனர். தென்கலை நாமம் பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடு கின்றனர் என வடகலை பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
பிரம்மோற்சவ வாகன சேவையின்போது தொடர்ந்து, “வடகலை’ நாமத்திற்கு அவமானம் நடந்து வருவதாக இப்பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள், ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டு மென கூறியதன் பேரில் வடகலை, தென்கலை திரு நாமப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி, அகோபில மடம் செயலர் ஆளுநருக்குப் புகார் அனுப்பி வைத்தார்.
இப்பிரச்சினைக்கு ஆளுநர் சரியான தீர்வு காண வேண்டுமென அர்ச்சகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், உற்சவத்தின்போது ரதத்தின் மீதுள்ள மரத்தி லான மரப்படிவம் உடைந்து விழுந்தது. இதனால் மேல் பகுதியில் தங்கக் தகடுக்கு கீழ் பாகத்தில் இருந்த துணி காற்றுக்கு விலகி விட்டது. இந்த சம்பவமும் அர்ச்ச கர்கள், பக்தர்கள் மத்தியில் உற்சவத்தின்போது பரபரப் பாக பேசப்பட்டது
சிறீரங்கத்தில் ரங்கநாதர் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த பின் ராஜகோபுரத்தில் தென் கலை நாமம் போடப்பட்டுள்ளது புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளது சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் உலகி லேயே உயரந்த 237 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டது. இது வடகலை குழுவினரை புண்படுத்துவதாக சிறீரங்கம் அகோபில மடத்தின் 45ஆவது பீடாதிபதியான ஜீயர் கூறியுள்ளார்.
இது குறித்து ஜீயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜகோபுரம் எனக்கு முன்பு இருந்த ஜீயர் சுவாமிகளால் கட்டப்பட்டது. அவர் வடகலை நாமம் போடுபவராக இருந்தாலும் அவர் எந்த விதமான பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக எந்தவிதமான நாமமும் போடாமல் விட்டுவிட்டார். ஆனால் கோவில் அதிகாரிகள் கும்பாபிஷேக புனரமைப்புப் பணி எனக் கூறி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ராஜகோபுரத்தின் ஆறாவது வாயிலில் தென்கலை நாமத்தை வைத்து அதற்கு நியான் விளக்கும் போட்டுள்ளார்கள். இது வடகலை நாமம் போடுபவர்களைப் புண்படுத்தும் செயலாகும். இதே போல் கோவிலின் தேசிகர் சுவாமி சன்னிதியிலும் தென்கலை நாமம் போடப்பட்டுள்ளது. இந்த கோவில் வடகலை நாமம் போடுபவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு தென்கலை நாமம் போடப்படடுள்ளது.
யானைக்கு எந்த நாமம் போடுவது?
சிறீரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918-1919இல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்களுக்குள் ஏற்பட்டது. அப் பொழுது நீதி மன்றங்களை கடந்து, லண்டன் பிரிவு கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படியே சிறீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக் காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள், பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள். மூன்று மாதங்கள் நடந்த இந்த அல்லோலகல்லோலத்தில் யானை சங் கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாம். மறுநாள் பத்திரிகைகைகளில் சிறீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகைகளில் வேறு செய்தி கூறியதாவது, சிறீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்கவில்லை, அப்படி தவறுதலாகப் பிரசுரிக் கப்பட்டது, உண்மையில் யானைக்கு மதம் பிடிக்காமல் தான் சங்கிலியை அறுத் துக் கொண்டு ஓடியது, என்று விளக்கம் கொடுக்கப்பட்டதாம்.
வைஷ்ணவ கோயில்களில் யாருடைய மந்திரத் தைச் சொல்வது என்பதில் பலகாலப் பிரச்சினை இருந்து வந்தது. லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கொடுத்தது – சுவையானது.
பிரிவி கவுன்சில் வழக்கு
His Holiness பெரிய கோயில் கேள்வியப்பன் திருவேங்கட ராமானுஜ பெரிய ஜீயங்காருலு வாரு -அப்பீல் செய்தவர்.
-எதிர் பார்ட்டி-
பிரதிவாதி வெங்கடசாருலு மற்றும் பலர். எதிர்பார்ட்டிகள்.
இந்து மதக் கோட்பாட்டின்படி, இறைவன் மூன்று நிலைகளில் இருக்கிறான்.
பிரம்மா, உருவாக்குபவர்;
விஷ்ணு, காப்பவர்;
சிவன், அழித்துச் சரி செய்பவர்.
The Deity manifests himself in three aspects as
Brahma – the Creator, Vishnu – the Preserver and
Siva- the Destroyer and Renovator.
இதில் விஷ்ணுவை வழிபாடு செய்து வருபவர்கள் வைஷ்ணவர்கள். தென்னிந்தியாவில் விஷ்ணுவுக்குப் பல கோயில்கள் உள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே சமஸ்கிருத வேதங்களும், மந்திரங்களும் விஷ்ணு வழிபாட்டுக்காக இருந்து வருகின்றனவாம். இதுபோலவே தென்னிந்தியாவில் 4000 பிரபந்தங்கள் தமிழில் உள்ளன. இவைகளை விஷ்ணு பக்தர்களான ஆழ்வார்கள் பாடிச் சென்றுள்ளனர் என்கின்றனர்.
விஷ்ணு வழிபாட்டு முறைகளை வகுத்துச் சென்ற ஆச்சாரியர்கள் முக்கியமானவர்கள்.
லண்டன் பிரிவி கவுன்சில் வரை!
1887-1893இல் திருச்சானூர் கோயிலில் இதுபோல் ஒரு வழக்கு வந்தது. அதில் திருச்சானூர் கோயிலில் முழுக்க முழுக்க தென்கலை மந்திரமே சொல்லப்பட்டு வருகிறது என்றும், திருச்சானூர் பழக்கமே, திருமலை யிலும் திருப்பதியிலும் பின்பற்றப்படுகிறது என்றும் தீர்ப்பு உள்ளது.
மற்றொரு வழக்கில் (Krishnasami v.Krishnama, 1882 ILR 5 Mad 313) காஞ்சிபுரத்திலுள்ள பெரிய கோயிலில் தென்கலை முறையே உண்டு. வடகலை முறையை தடைசெய்ய இந்த வழக்கு வந்தது. அதில் முழுக்க முழுக்க தென்கலை முறையே சரி என்று தீர்ப்பு.
மற்றொரு வழக்கில் (Srinivasa Thathachariar v. Srinivasa Aiyangar, 1899, 9 Mad LI 355) இதில் திருநெல்வேலி கோயிலில் தென்கலை மந்திரமே சொல்ல வேண்டும் என்றும் வடகலை மந்திரத்தை சொல்ல உரிமையில்லை என்றும், வாழி மந்திரம் சொல்லும்போது, வடகலை ஆச்சாரியர்கள் அதை அவர்கள் வேண்டுமென்றே சேர்ந்து உச்சரிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
இவ்வாறு பல தீர்ப்புகளை ஆராய்ந்து, பிரிவு கவுன்சில் முடிவாக: தென்கலை முறையே சரி; ‘சாதித் அருளா’ சொன்னவுடன் தென்கலை மந்திரங்களே தொடங்க வேண்டும். வடகலை மந்திரங்களை திருப்ப தியில் ‘தர்மபுரி, கோடிகன்னிகாதானம், தோமாலை’ (Dharmapuris, Kotikannikadanams and Thomalais) இவைகளில் தவிர வேறு எங்கும் சொல்லக் கூடாது. வாழி திருநாமம் எப்போது சொன்னாலும், தென்கலை மந்திரத்துடனேயே சொல்ல வேண்டும்.
திருமலை சேர்ந்த திருப்பதி, திருச்சானூர் வாழும் தென்கலை பண்டிதர்கள் எப்போதும் தென்கலை மந்திரம் சொல்ல உரிமையுண்டு. அதில் வடகலை மந்திரம் சொல்லி குழப்பக் கூடாது.
பெரிய ஜீயங்கர் தலைமையில் இவை நடக்க வேண்டும்.
பிரச்சினை – ஹிந்து மதத்தின் காத்தல் கடவுள் என்று சொல்லப்படும் விஷ்ணுவைப் பொறுத்தது – அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையையே அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சரண டையும் நம்பும் ஆண்டவனாலும் கையாலாகவில்லை. வெள்ளைக்கார கிறித்தவ நீதிபதிகள் லண்டன் பிரிவி கவுன்சில்தான் தீர்க்க வேண்டியிருந்தது. வெட்கப்பட வேண்டாமா?
இந்த இலட்சணத்தில் கடவுள் பக்தி குறைந்ததால் தான் நாட்டில் ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டது; அமைதி சீர்குலைந்தது என்று சொல்லுவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை; ஏழு நூற்றாண்டுகளாக இந்தச் சண்டை அடங்கவில்லை.
ஹிந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போவதாகக் கூறும் காவிக் கூட்டம் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறதாம்?
கண்டு முட்டு! கேட்டு முட்டு!
வடகலை பக்தன் தென்கலைப் பக்தனைப் பார்த்து விட்டால் சுவரில் போய் முட்டிக் கொள்வான். அதற்குப் பெயர் ‘பார்த்து முட்டு’.
ஒரு கலைகாரன் இன்னொரு கலைகாரனைப் பற்றிக் காதில் கேட்டுவிட்டாலும் சுவரில் போய் முட்டிக் கொள்வானாம். இதற்குப் பெயர் ‘கேட்டு முட்டு’. எப்படி இருக்கிறது?
வைணவப் பக்தரான ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த நிலையிலேயே சரியாக ‘அழகாக’ ஒன்றை சொன்னார்.
“நம் நாட்டில் மற்றவர்கள் சண்டைகளைக் காட்டி லும், பக்தர்களின் சண்டையே அதிகம். ‘என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைகள்தான் அதிகம்’’ என்றாரே!
(சென்னைத் தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் – 15.4.1953)
ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகக் கூறு வோர் – இந்தப் பிரிவுகளில் எதை முன்னிலைப்படுத்தி அமைக்கப் போகிறார்களாம்?