எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (118) – 

நேயன்

யார் இந்த தெய்வம்? வேடுவன்.கிராத உருவம் கொண்ட தெய்வம். வில்லேந்தியவன்.
ரிக் வேதத்தில், மூன்று முழுப் பாடல்கள், இந்தத் தெய்வத்தைப் பாடுகின்றன. 75 இடங்களில், ருத்ரன் குறித்த குறிப்புகள் வருகின்றன. ரௌத்ர பிரம்மன் (ரிக், 10.61.1), உக்கிரமானவன்(2.33.11), வேகமுடையவன் (1.114.4), செந்நிறத் தன்மை கொண்டவனின் காட்டுப்பன்றி (1.114.5), மருத்துக்களின் தந்தை (1.114.2.33), வேகமான அம்புகளையும் (2.33.10) வலிமையான வில்லையும் கொண்டவன் (7.46.1), வானில் ஆதவனாகவும், வளிமண்டலத்தில் மின்னலாகவும், பூமியில் நெருப்பாகவும் உறையும், அக்னி(2.1).

அவன், அழகிய உதடுகள் கொண்டவன் (ரிக்.2.33), இளைஞன் (2.33.2), மயக்குபவன்(1.114), சூரியனைப்போல் ஜொலிப்பவன்(1.43.5), பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த மேனியன் (2.33), ஞானவான் (1.43.1), பாடல்களின் பதி (1.43.4), குணப்படுத்தும் மருந்துகளை வைத்திருப்பவன் (1.43.4), வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியன் (2.4.4), சடாமுடி கொண்டவன் (1.114.1,5), நேரில் அமர்ந்தவன் (2.33.11), பிரபஞ்ச அதிபதி (7.46.2).
வேள்வியின் முடிவில் எஞ்சியதை ருத்திரன் ஏற்கிறான். வேள்வி முடிந்த அந்தச் சாம்பல் எஞ்சிய இடத்தில் ருத்ரன் உறைகிறான். இந்த ருத்ரனை, வேள்வியின் அரசன் என ரிக்வேதம் (4.3.1) அழைக்கிறது.

ஆனால் ருத்ரன், வாஸ்துவின் அதிபன். வாஸ்து  மிஞ்சியது. வேத வேள்வியில் எஞ்சியது மட்டுமல்ல, அதன்பின் அதுவே வேதி எனும் வேள்வித்தளமும்கூட. இது ஒரு தரிசனத்தை உள்ளடக்கியுள்ளது. நாமரூப பேதங்களுடன் விரிந்த இயக்கமான பிரபஞ்சக் காலச் சூழலின் சடங்கு குறிப்பிட, வேத வேள்வி. எனில், எது வேள்வியில் எஞ்சுகிறதோ, அதுவே சத்தியமானது. அதுவே நிரந்தரமானது. அதுவே, எல்லா சிருஷ்டிக்கும் ஆதார அடிப்படையானது. அதன் தலைவனே ருத்ரன்.
ருத்ரன், வேள்வியின் மிகுதியைக் கொள்வ-தென்பது இழிநிலை அன்று. அதுவே, மிக உயர்ந்த இறுதிச் சத்தியத்தின் குறியீடாக, பாரத மரபில் பார்க்கப்படுகிறது.

அக்னியாக ருத்ரன் இருந்து, அவனே பிரஜாபதியை சிருஷ்டியை நோக்கித் தூண்டுகிறான்.
வேள்வியில் அதுவே மீண்டும் சடங்கினைத் தொடங்கும் சக்தி கொண்ட மூலப்பொருள். முந்தைய பிரபஞ்ச சுழலில் எது எஞ்சுகிறதோ அதுவே அடுத்த பிரபஞ்ச சிருஷ்டிக்கான மூலப்பொருள்.ஒடுக்கப்பட்டனவாக, விலக்கப்பட்டனவாக, வெறுக்கப்பட்டனவாக, பெரும்பான்மைச் சமுதாயம் யாரை நினைக்கிறதோ, அந்த வடிவங்களெல்லாம் ருத்ரனுக்கு மற்ற வடிவங்களாகின்றன. சுக்ல கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ளது, ஸ்ரீ ருத்ரம்.

சிவன் வேறு; ருத்ரன் வேறு. சிவன், திராவிடக்கடவுள்; ருத்ரன், ஆரியக் கடவுள். இவை இரண்டும் கலந்துவிட்டன என்று சொல்வோர் உள்ளனர். ஆனால், ஆரிய – திராவிடக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் இந்தியவியலாளர்கள்கூட, இந்த இரட்டைப் பார்வையை மறுத்துள்ளனர். சமஸ்கிருத அறிஞரும் வேத தொன்மவியலாளருமான ஆர்தர் பெரிடெல் கெய்த் ( (A.B.Keith), ருத்ர- சிவன் என்பதில், திராவிட ஆரிய கூறுகளைக் கண்டறியும் முயற்சிகள் பயனற்றவை என ஒப்புக்கொள்கிறார். ஜன் கோண்டா என்பவர், வேத ருத்ரனுக்கும் வேத காலத்துக்குப் பிறகு உருவாகும் சிவன் எனும் பெரும் கடவுளின் தன்மைகளுக்கு, ஒரு சீரான தொடர்ச்சியைக் காண்கிறார். தாண்டேகர் என்பவர், இன்னமும் ஆழமான ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் வேத தொன்மம், ஒரு தொன்மப் பரிணாமக் களம் மட்டுமே. அதில் இருந்து பல்வேறு தொன்மங்கள் உருவாகி, கிளைவிட்டு மேலெழுந்துள்ளன.

ஆரிய -திராவிட இனவாதக் கோட்பாட்டைக் கொண்டு, சிவ இறைக்கோட்பாட்டை அணுகுவது, உண்மையில் பெரும் அபத்தம் நிறைந்த முரண்களையே உருவாக்கும். இதற்குச் சரியான ஆதாரமாக, மறைமலை அடிகளின் திருவாசக விரிவுரையைக் காணலாம். வேதங்களை, ஆரிய நூல்கள் என அவர் இழித்துக் கூறுகிறார்

‘‘ஆரிய வேதங்களும்… இறைவனருளாற் றோன்றிய நூல்களாயின், அவ்விறைவற்குரிய பேரறிவுத் தன்மை அவற்றின்கட் காணப்படுதல் வேண்டும். மற்றும், அவை தம்மோடு தொல்காப்பியம், திருக்குறள், சிவஞானபோதம் முதலிய மெய்ந்நூற் பொருள்களை ஒப்பவைத்து நடுநின்று நோக்குவாரெவர்க்கும், மற்றித் தமிழ்மறைகளுட் காணப்படும் அரும்பெரு நுண்பொருட் பற்றி, ஆரிய வேதங்களில் ஒரு சிறிதுங் காணப்படாமை எளிது விளங்கு மாகலின், இவற்றோடொப்ப அவைகளும் இறைவனருளாற் பிறந்தனவென்றால் பொருளில் புன்மொழிகளாகுமென்க.’’
ஆக, ஒரே நூலின் இரு இடங்களில், இரு முற்றிலும் வேறான நிலைப்பாடுகளை மறைமலையடிகள் எடுப்பதை நாம் காணலாம். இங்கு, ஒரு நிலைப்பாடு முழுக்க முழுக்க, ஆழ்ந்த மறைநூல் அறிவு சார்ந்தும், மற்றொன்றோ மன_முன்முடிவுகளின் அடிப்படையிலும் அமைவதையும் நம்மால் காணமுடியும்.

ஆக, ஆதித் தொன்மை வேர்களைக் கொண்ட ஒரு படிமம்தான் வேத ருத்ரன். வரலாற்று காலங்களில், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் சிவ தெய்வமாகவும், அத்தெய்வத்தின் பல உருவங்களாகவும் கிளை பரப்பி, ஒரு பெரும் மக்கள் சமுதாயத்தின் ஆன்ம லட்சியமாக சிவம் இன்று விளங்குகிறது.’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
ஆரியர்கள் வருகைக்குமுன், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மெசபடோமியா, எகிப்து, இலங்கை மலேசியா, பர்மா, தாய்லாந்து போன்றவற்றை உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பில் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
அப்படி வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில் எந்த மூடநம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஜாதிப் பிரிவுகளும் இல்லை.
தங்களுக்கு எவை பயன்பட்டனவோ அவற்றை மதித்தனர். வணங்கினர்.
அப்படி அவர்கள் வணங்கியவற்றுள் ஆண் – பெண் உறுப்புகளை இணைத்து வணங்கியது முதன்மையானது.
இன்பம் பெறுவதும், இனப்பெருக்கம் செய்
வதும் ஆண் – பெண் உறுப்புகள் இணைந்த நிலையில் தான் இயலும். எனவே இன்பம், இனப்பெருக்கம் இரண்டிற்கும் அடிப்படையான ஆண்_ பெண் உறுப்புகளை இணைத்து வணங்கினர்.

நிலத்தலைவர்களை மதித்து வணங்கினர். உயர் பெண்களை வணங்கினர். குலப்பெரியோர்களை வணங்கினர். இவையே தமிழர்களின் வழிபாடாக இருந்தன. இப்படி தமிழர்கள் வாழ்ந்த நிலையில், மத்திய ஆசியாவிலிருந்து தமிழர் வாழ்ந்த நிலப்பகுதிக்குள் பிழைப்பதற்காக வந்தேறினர் ஆரியர்கள். அவர்களிடமும் தொடக்கக் காலத்தில் எந்த கடவுள் வழிபாடும் இல்லை.
நெருப்பு, காற்று, மழை, சூரியன், பூமி போன்றவற்றையே வணங்கினர். பின்னர் மழைமேகங்களுக்கு கர்த்தாவாக இந்திரனை உருவகம் செய்து வணங்கினர்.

அவர்களுக்கு நெருப்பும், இந்திரனுமே முதன்மையான தெய்வங்கள். ருத்திரன் என்ற வழிபாடு ஆரியரின் வேத காலத்தில் இருந்தது. ஆனால், தற்போதுள்ள சிவன் வழிபாட்டிற்கும் ருத்திர வழிபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டும் ஒன்று என்பது ஆரியர்கள் பிற்காலத்தில் தங்கள் நலத்துக்காக, ஆதிக்கத்திற்காக ஒன்றாக்கிய மோசடி!

அவர்கள் இதை மட்டுமல்ல, புத்தரின் உருவத்தை வினாயகராக மாற்றினர். தமிழரின் நிலத்தலைவர் முருகனை ஸ்கந்தன், சுப்ரமணியன் என்று மாற்றி அதற்குப் புராணங்களைப் புனைந்தனர். தமிழரின் தாய் தெய்வ வழிபாட்டை சக்தி, பார்வதி, துர்க்கை வழிபாடாக்கினர். மேக வழிபாட்டை திருமால் வழிபாடாக்கினர். எரிமலையை அருணாசலம் ஆக்கினர். அருண என்றால் நெருப்பு; அஜலம் என்றால் மலை. அதுவே அருணாஜலம் ஆக மாற்றப்பட்டது. திருவண்ணாமலை தீபம் எரிமலைத் தீயின் அடையாளம்தான்.
பின்னர் எல்லா கடவுளுக்கும் உறவு கற்பித்து சிவனுக்கு திருமால் மைத்துனர் என்று மாமன், மச்சான் ஆக்கினர்.
அதைப்போலவே ருத்திரனையும் சிவலிங்கத்தையும் தொடர்புபடுத்தி சிவன் ஆக்கினர்.
அதை இனி விளக்குவோம்.

(தொடரும்)