("திருவிளையாடல் புராணத்"தில் "மாபாதகம் தீர்த்த படலம்' என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதியில், தாயைப் புணர்ந்த காமுகப் பார்ப்பானை, கண்டித்த தந்தையை கொன்ற அந்த பார்ப்பானுக்கு முக்தி வழங்கிய சிவன் கதை உள்ளது.)
26. மா பாதகம் தீர்த்த படலம்
குலோத்துங்கன் எவருக்கும் நிகரற்ற நல்லாட்சி புரிந்து வந்தான். அந்நாளிலே அவந்தி நகரத்தில் ஒரு அந்தணன் வாழ்ந்து வந்தான். அவலுக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் பேரழகி ஆனால் மனைமாட்சி சிறிதும் அற்றவள். காமவெறி அவளைப் பற்றிப் பிடித்துப் பேய் போல் ஆட்டிக் கொண்டிருந்தது.
அத்தம்பதியர்க்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே அவன ஒரு கொடிய பாவியாகத்தான் பிறந்தான். அவனது இளமைக் காலச் செயல்களை ஒழுங்குபடுத்த தந்தை முயன்றார். அதனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. "தந்தை சொல் மிக்க தோர் மந்திரம் இல்லை" என்பன போன்ற நல்ல நெறிமுறைகளையெல்லாம் தனது இளமைப் பருவத்திலேயே கொன்று குழிதோண்டிப் புதைத்து விட்டவன் அவன்! அதனால் தனது பாவி மகன் விஷயத்தில் அவன் எப்போதும் தலையிடுவதில்லை. ஆனால் அவனது தாயோ, அவன் சொன்னதற்கெல்லாம் ஆமாம் போட்டு, அவன் மாபாவியாகக் காரணமும் ஆனாள்.
அவன் கொலை முதலிய கொடிய பாவங்களாகிய சரக்குகளை ஏற்றிய மரக்கலம் போல இருந்தான். இளமை செழிக்க வளர்ந்து வந்தான். அவன் கட்டுக் கடங்காத காமம் கொண்டவன். தீவினை தலைக்கேறி தறிகெட்டு நின்றதால், தன்னைப் பெற்று வளர்த்த தாயையே காம வெறியோடு பார்த்தான்; தாயையே விரும்பினான்.
அச்சம், மடம், நாணம். பயிர்பு என்ற நான்கும் நீங்கப் பெற்றவளாக இருந்த அன்னையும் அவனது விருப்பத்திற்கு இணங்கினாள்!
அந்தக் கீழ மகன் தாயைக் கூடி ஒழுகும் செயலை அவனுடைய தந்தை குறிப்பால் அறிந்தான், ஆனால், அதனை அறியாதவன் போல நடந்து கொண்டான். மற்றொரு நாளில் வெளிப்படையாகக் கண்டும் யாதொன்றும் கூறவில்லை. ஆனால், அவனது மகனோ, கோபம் கொண்டு. "என் தந்தையைக் கொல்வேன்” என எழுந்தான். "நீ தாயிடத்தில் காம இன்பத்தை நுகர்ந்தாய்! இன்னும் தத்தையைக் கொன்றாயானால் என்ன பயனை அடைவாய்?" என்று தாய். கூறித் தடுத்தாள்.
அதற்கு அக் கொடியவன், "காமுகர்களுக்குத் தாயாலும் தத்தையாலும் என்ன பயன்? இனிய அருளைப் பெற்றால் என்ன பயன்? அறத்தைப் பெற்றாலும் என்ன பயன்? என்றான். காம மயக்கம் அவனது அறிவாகிய மதியை விழுங்கியது. காமமாகிய கள்ளை உண்டு அறிவிழந்த அந்தப் பாவி. ஒரு மண் வெட்டியை எடுத்துத் தன் தந்தையைத் துண்டுபட வெட்டித் தனது வெறியைத் தணித்துக் கொண்டான்.
பிறகு அப்பாதகன் தந்தையைத் தகனம் செய்து விட்டு, சுமக்கத் தகுந்த பொருளுடனும் தன் தாயுடனும் கற்கள் நிறைந்த கானகத்தின் வழியே நெடுந்தொலைவு சென்றான்!...
அப்போது...!
இடி போன்ற சொல்லையும், கூரிய கணையைப் பூட்டிய வில்லையும் கொண்ட வேடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். "செல்லாதே! நில்!" என்று அவன் கையில் இருந்த பொருட்களையும், அவனது தாயையும் கைக் கொண்டு போயினர்.
"தூர தேசத்தில் சென்று இடையூறின்றி வாழலாம்" என கருதிய எண்ணம் அவனுக்கு; நேர்ந்தது இன்னொன்று!
இறந்து விட்ட அவனது தந்தை மாபாதக வடிவாய் வந்து தந்தை அவனைப் பற்றிக் கொண்டு, படாதபாடு படுத்தினார். "இனி என் செய்வேன்? இனி என் செய்வேன்? என்று நெடுநாள் பெருந்துயர முற்றான். தனியே பல காலம் திரிந்து அலைந்தான். கண்டோர் அனைவரும் நகைத்தனர். மகாபாதகன் துன்பம் முழுவதும் குறைந்து, சிவனாரின் திருவருட் செயலினால், அக்கொலை பாவம் நீங்கும் நாள் தெருங்கி வந்தது. அவன் மதுரைப் பதியை அடைந்தான்.
அப்போது அங்கையற் கண் அம்மையார் வேடுவச்சியாகத் திருவருட் கொண்டார். வேடுவனாக சோம சுந்தரக் கடவுள் திருவருட் கொண்டார். மேகங்கள் தவழும் திருக்கோபுர வாசலின் பக்கத்தில் அவர்கள் இருவரும் வந்திருந்தனர். அங்கு பனங்கருக்குப் போன்ற மேகங்கள் தவழும் வாயையுடைய நாய்கள் அவர்களை விட்டு விலகாது காவல் புரிந்து கொண்டு இருந்தன. இறைவனாகிய வேடுவனும் இறைவியாகிய வேடுவச்சியும் சூதாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிறிதும் அமைதி இல்லாதவனாய்த் துன்பத்துடன் அங்கே அந்த மாபாதகன் வந்தான். அவனது வருகையை கண்ட இறைவன், இறைவியிடம் இவ்வாறு கூறலானார்:
''யாரும் நினைத்தற்கரிய கொடிய மாபாதகன், பெரும் காம நோய் பிடித்தவன் வருவதைப் பார்! காம நோய் இருக்கிறதே, அது மிகவும் பொல்லாதது; மிகவும் கொடியது. எப்படித் தெரியுமா? அது, குணமும், குலமும் ஒழுக்கமும், குறைவதையும், கொலையும் பழி பாவங்கள் உண்டாதலையும் பார்க்காது; அது, தம் உயிருக்கும் அழிவு வருதலையும் எண்ணாது; காமமே கொலைகளுக்கெல்லாம் காரணம்: கண்ணோட்டமில்லாத காமமே களவுகளுக்கும் காரணம்; எமனும் அஞ்சும் காமமே கமள் உண்ணலுக்கும் காரணம். ஆகையால் காமமே நரகத்தின் நிலைகளன்" என்று கூறியருளினார்.
கொலைப் பாவத்தால் பெரும் துயரம் உற்று, அங்கு வந்த கொடிய பாதகனுடைய முகத்தைச் சிவவேடுவன் நோக்கினார். "ஏடா! பார்ப்பானே! நீ துன்பத்தால் அலைந்து திரிந்து வருந்துவது ஏன்?" என்று வினவினார்.
முற்பிறப்பில் செய்த பாவத்தின் முதிர்ச்சியால், பிறந்து தாயைக் கூடியது, அது காரணமாகத் தந்தையைக் கொன்றது, பின்னாளில் அக் கொலைப்பாவம் பிரம்மகத்தி வடிவமாக வந்து பிடித்து வருத்த, எங்கும் திரிந்து அலைந்தது... அது நீக்கப் பெறாமல் இப்பதிலை வந்து அடைந்தது ஆகிய நிகழ்ச்சிகளை எல்லாம் கூறி அழுதான் மாபாதகன்.
வேட்டுவ வடிவங் கொண்ட கருணை மூர்த்தி அந்த அப்பாவியை நோக்கி, "இப்பாவம் எங்கே போனாலும் நீங்காது. நரகத்தினை அடையும் அளவுக்கு கொடிய பாவத்தை நீ அறிந்து செய்துள்ளாய்! நாம் உன் மீது திருவருள் நோக்கம் செய்ததால் இப்பாவம் எளிதில் நீங்கும் வண்ணம் கூறுகிறோம். கையில் பிச்சை எடுத்து ஒரு பொழுது மட்டும் உண்பாய்! சிவனடியார்களுக்குக் குற்றேவல் புரிவாய்! சூரியன் உதிக்கும் முன்னே நித்திரை விட்டு எழுந்து, அருகம் புல்லைக் கொய்து, பசுக்களுக்குக் கொடு. அனுதினமும் நீராடி, சிவபெருமானை நூற்றி எட்டு முறை அங்கப் பிரதட்சணம் செய்: முக்காலமும் திருக்கோயில் புறத்தொட்டித் தீர்த்தத்திலே நீராடு!
இத்தவெநெறியில் நின்றால் உனது கொலைப் பழி நீங்கும்" என்று கூறியருளினார்.
இதைக் கேட்ட வேடுவச்சியாக மீனாட்சியம்மையார் சிவபெருமானை நோக்கி, "எம் பெருமானே! இக் கொடியவன், தான் செய்த பாவத்திற்கு எவ்வகையிலும் உய்ய வழி இல்லாதவன். இவனுக்கு உய்யும் வகையை அருளிச் செய்தது ஏனோ?" என்று வினவினார்.
அதற்குச் சிவபெருமான், "கொல்லும் பெரும்பழிக்கு அஞ்சாத புலையராயினும், அவரும் நினைத்தால் அச்சமுண்டாக்கும் கொடும் பழியினை அஞ்சாது செய்த மாபாதகத்தால் கட்டப்பட்டு, எங்கும் தீரும் வழிவகையில்லாமல், வேறு பற்றுக் கோடும் இன்றி, அழிய கடவோனைக் காப்பதல்லவா, பாதுகாப்பு!" என்று கூறினார்.
சிவ பெருமானின், இந்த உள்ளம் உருக்கும் உரைகளைக் கேட்ட அங்கையற் கண் அம்மையார் மனக்களிப்பு அடைந்தார்.
உடனே வேட்டுவனும் வேட்டுவச்சியும் மறைந்தருளினர். கொடிய பாதகனான பார்ப்பானும் பெருவியப்புக் கொண்டு, மதுரை நாயகன் கூறிய வண்ணம நன்னெறிக்கு ஏதுவான விரதம், ஒழுக்கச் செயல்கள் மேற்கொண்டு விரைவிலேயே பாதகம் நீங்கி, பிராமண வடிவம் பெற்றான்.
-திருவிளையாடல் புராணம்
- சுவாமி சண்முகானந்தா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக