புதன், 14 நவம்பர், 2018

அண்ணாமலைக்கு "அரோகரா!

*அண்ணாமலைக்கு "அரோகரா!"*

*--மயிலாடன் --*

திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோயிலில் மகா கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்றமும் நடைபெற்று விட்டது.

மகா தீபத்தன்று 2668 அடி உயரமுள்ள மலைமீது தீபம் ஏற்றப்படுகின்றது. இதற்காகச் செலவழிக்கப்படும் நெய்யின் அளவு என்ன தெரியுமா? 3500 கிலோ, பயன்படுத்தப்படும் காடாத் துணி 11 ஆயிரம் மீட்டராம்.

இந்தக் கார்த்திகைத் தீப விழாவுக்குச் சொல்லப்படும் புராணக் கதை ஆபாசமானது, கடவுள் பொய் சொன்னதாகக் கூறப்படுவது!

இந்து மத மும்மூர்த்தி கடவுளுக்குள் யார் பெரியவர் என்ற போட்டா போட்டி - அதற்கொரு  பரிட்சையை வைத்தாராம் சிவன்!  ஜோதி  வடிவத்தில் பூமிக்கும் மண்ணுக் குமாக ஓங்கி நின்றாராம். யார் தனது முடி அல்லது பாதத்தை முதலில் கண்டு வருகிறார்களோ - அவர் தான் சக்தி வாய்ந்தவர் என்று பரிட்சையை வைத்தாராம் சிவன்.

சிவனின் அடியைப் பார்த்து வருவதாக விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்துப் பூமியை தோண்டிக் கொண்டு சென்றாராம். பிர்மாவோ கருடன் வாகனத்தில் முடியைக் காணப் புறப்பட்டாராம். அப்பொழுது தாழம்பூ ஒன்று வானிலிருந்து வந்து கொண்டு இருந்ததாம். அப்பொழுது பிர்மாவுக்கு ஒரு பொறி தட்டியது. "தாழம் பூவே, தாழம் பூவே! நீ சிவனின் முடி யிலிருந்து தானே வருகிறாய்; நான் சிவனின் முடியைக் கண்ட தாக எனக்காகச் சாட்சியம் சொல்லு" என்று பிர்மா கெஞ்சிக் கூத்தாடிட தாழம்பூ மனம் இளகிப் பொய்ச் சாட்சி சொன் னதாம். உண்மையை உணர்ந்த சிவன் பிர்மாவைப் பார்த்து உனக்கு எங்கும் கோயில் வைத் துப் பூஜை செய்யக் கூடாது என்றும், பொய் சொன்ன தாழம் பூவைப் பூஜைக்குப் பயன் படுத்தக் கூடாது என்றும் சாபம் விட்டாராம்.

அந்த நாளில்தான் ஜோதி உருவமாக நின்ற சிவனுக்கு விழா, எடுக்கப்படுகிறதாம். இந்தக் கதையில் உள்ள கற்பனை - ஆபாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

இதற்காக 3500 கிலோ நெய்யை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டுமா? அமெரிக்காவைச் சேர்ந்த உணவுத் திட்ட ஆராய்ச்சி நிறுவனம் 119 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்ன கூறுகிறது? குழந்தைகள் ஊட்டச் சத்து உணவுக் குறைவு என்ற வரிசையில் இந்தியா நூறாம் இடத்தில் உள்ளதாம்...! இதன் காரணமாக 5 முதல் 20 வயது குழந்தைகளில் 35 விழுக்காட்டினர் வயதுக்கேற்ற உயரம் இல்லாமலும், எடை இல்லாம லும் அவதிப்படுகின்றனர்.

பெண்கள் ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றனர் இப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஒரு குழவிக்கல்லுக்காக (சாமிக்காக) மூடத்தன பண்டிகையன்று 3500 கிலோ நெய் எரித்துப் பாழாக் கப்பட வேண்டுமா? மனித நேயம் உள்ளோர் சிந்திக்கட்டும். மதப் பண்டிகைகள் மனிதகுல தாழ்ச்சிக்கே தான்  என்பது விளங்கவில்லையா?

*நன்றி : "விடுதலை" நாளிதழ் 25-11-2017*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக