திங்கள், 14 செப்டம்பர், 2015

பிள்ளையார் பிறப்புக்கு நான்கு வகைக் காரணம்: எது உண்மை? எல்லாமே பித்தலாட்டம்


- தந்தை பெரியார் விளக்குகிறார்

இக்கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல் லோராலும் ஒப்புக்கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும், விநாயகர் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக் கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.
நிற்க, இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவ தும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப் போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது.
ஆகவே, இப்படிப்பட்டதான யாவ ராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.
1. ஒருநாள் சிவனின் பெண் சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத் திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளை யாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகி விட்டதாகவும், அந்த ஆண் குழந்தை யைப் பார்த்து - நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே! என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாக வும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளை யார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற் குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, காவல் வைத்திருந் தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், காவற்காரன் தலையை வெட்டி உருட்டி விட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார் வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்ட மாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்த தாகவும் கதை சொல்லப்படுகின்றது.
இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத் திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.
2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில்  கருவுற்றிருக் கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச் சிசுவின் தலையை வெட்டி விட்டு வந்த தாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4. தக்கனுடைய யாகத்தை அழிப்ப தற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்ட தாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப் பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்த தாகவும் மற்றொரு கதை சொல்லப் படுகின்றது. இது தக்கயாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.
எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற் கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவது மான தாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கட வுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்ட தற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர் தான் ; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்த மற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர் என்று சொல்லுவதும், மற்றும் அது ஒரு சக்தி என்றும், ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றை யெல்லாம் மக்களை நம்பவும், வணங் கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை (வல்லப கணபதி) செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலை யின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப் படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின் றார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப் பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகத்டிக் கொண்டு அந்தரத் தில் நிற்பது போலவும் செதுக்கப்பட் டிருக்கின்றது.
இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப் படுகின்றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களை யெல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு அசுரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, ஈசல் புறப்படுவது போல் பல லட்சக்கணக்காய் வந்து கொண்டே இருந்ததாகவும், தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.  இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளை யார் கடவுளின் உதவியை வேண்டிய தாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல், தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்து அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு கண்ட வைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக்கொண்ட ஆதாரங் கள் போற்றப்படவில்லையா? அன்றி யும், பல கோயில்களில் உருவாரங் களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்து விட்டான் என்று சொல்வதானால், இவைகளுக் குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவை களைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளு கின்றோம்.
சீர்திருத்தக்காரர்கள், அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றும், மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து, கடவுளுக்கு ஆபத்து என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும், கடவுளையும் காப்பாற்ற வென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங் களை விலக்க முன் வந்தார்களா? என்றும் கேட்கின்றோம்.
இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத் திரம் வாதத்திற்கும், ஆராய்ச்சிக்கும், குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்து விட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று சொல்லுவோம்.
(சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் 26.8.1928 குடிஅரசு இதழில் எழுதியது)
-விடுதலை,14.9.15

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் சொன்னது என்ன?


பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015 காலை ) தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள்; தாலிபற்றி அம்பேத்கர் கருத்து என்ன? தகவல் என்ன? என்று சில ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டுள்ள காரணத்தால் கீழ்க்கண்ட தகவலும், கருத்தும் தரப்பட்டுள்ளன.
Mr. C.A. Innes I.C.S., Editor of the Gazeteer of Malabar and Anjengo issed under the authority of the Government of Madras says:
‘Another institution found amongst all the classes following the marumakkattayam system, as well as amongst many of those who observe makkattayam, is known as ‘Tali-tying wedding’ which has been described as ‘the most peculiar, distinctive and unique’ among Malayali marriage customs. Its essence is the tyding of a tali (a small piece of gold or other metal, like a locket, on a string) on a girl’s neck before she attains the age of puberty. This is done by a man of the same or higher caste (the usages of different classes differ), and it is only after it has been done that the girl is at liberty to contract a sambandham. It seems to be generally considered that the ceremony was intended to confer on the tali tier or manavalan (bridegroom) a right to cohabit with the girl; and by some the origin of the ceremony is found in the claim of the Bhu-devas or *Earth-Gods,* (that is the Brahmins), and on a lower plane of Kshatriyas or ruling classes, to the first-fruits of lower caste womanhood, a right akin to the medieval droit de seigneurie.’ - Vol. I, p. 101.
இதன் தமிழாக்கம் வருமாறு:-
சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார்  அஞ்சேங்கோ (Malabar and Anjengo)  கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. இன்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.
மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைபிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வெறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது;
புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி பக்.101)  (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206).
-விடுதலை,11.4.15

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஆதிசங்கராச்சாரி அவதார ரகசியம்


ஆதிசங்கராச்சாரி ஏன் இவ்வுல கில் அவதரித்தார்? அவர் அவதரித்த தன் உள்நோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரமசிவனே காதோடு காதாக தனது ஒய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்டவாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.
கலியுகத்திலுண்டாகும் பக்தர் களுடைய சரித்திரத்தைச் சுருக்க மாகச் சொல்லுகின்றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக்கொள்ளத் தக்கது. ஒருவர்க்குஞ் சொல்லத்தக்கது அன்று. அம்பிகையே! பாவகர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற்கலியுகத்தில் எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்குவேன் மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல் வேன், கேட்பாயாக!
இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் ... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்ப வர்கள்; வேதபோதக வாக்கியங் களுக்கு மாறுபாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்; பெரிய சாத்திரங்களால் அத்வை தத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர் களாகிய இவர்களால், குல ஆசா ரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.
அப்போது அவர்களைக் கரை யேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற் றில் சங்கரர் என்னும் திருநாம முடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்.
(சங்கர திக்கு விஜய காவிய வசனம் நூல், பக்கம் 2) - மருதவாணன் புரிகிறதா சூட்சமம்?
-விடுதலை,11.10.14

மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு



பெங்களூரு
முத்து.செல்வன்

நம் தொல்மரபான குரு  சிஷ்ய ஆசிரம முறையை இழந்துவிட்டோம். அந்த முறை தொடர்ந்திருந்தால் நாட்டில் நாம் எதிர்கொண்டு வரும் வன்முறையும் கடும்போக்கும் (தீவிரவாதம்) இருந்திரா.
பல நாடுகளில் கடும்போக்கு நிலவி வருவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு மாந்தனிடமும் நற்பண்புகளை வளர்ப் பதன் மூலம் வன்முறையைத் தவிர்த்திட இயலும். அதனை நிறைவேற்ற பழைய மரபுகளுக்கும் வேதங்களுக்கும் திரும்பிட வேண்டும், நான் வல்லதிகாரியாக இருந்திருந்தால் பகவத் கீதையையும் மகா பாரதத்தையும் முதல் வகுப்பு பாடத் திட்டத்திலேயே சேர்த்திருப்பேன். அப் போதுதான் நல்வாழ்வுக்குரிய வழிமுறை களைக் கற்கவியலும். எனவே இந்தியா தொல் மரபுகள் காலத்திற்குச் செல்ல வேண்டும் - உச்சநீதிமன்ற நீதியரசர் தவே.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் வழியில் இயங்கிவரும் பாரதீய ஜனதா கட்சி உட்பட அனைத்து சங் பரிவார அமைப்புகளும் கூறிய, கூறிவரும் கருத்து களை நீதியரசர் எதிரொலித்துள்ளார்.. வேதங்கள் சொல்லும் சனாதன தருமம் கூறுவதென்ன?
பிறப்பால் பிளவுண்டு நால்வர்ணங் களாக வாழும் மாந்தருக்காகவே  - அவர் களுக்கு வாழ்நெறிகளைக் காட்டுவதற் காகவே படைக்கப்பட்டனவே வேதங் களும் (ச்ருதி) அவற்றுக்கான விளக்கங் களும் (ச்ம்ருதிகள்)
அவற்றுக்கு அடிப்படையாகக் கருதப் படுவது  வியாசரின் பிரம்மசூத்திரம். இந்த வியாசர்தான் நான்கு வேதங் களையும் பகுத்து உலகுக்கு அளிப்ப தற்காக, பராசர முனிவனால் வன்புணர்வு செயப்பட்ட மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவன். ஸ்ரவணாத்()  யயனார்த்()த
ப்ரத்()திஷேதா()த்() ஸ்ம்ருத்தே ஸ்ச்சு பிரம்மசூத்திரம் (1.3.9.38) இந்தக் குறுமொழிக்கு  உரை எழுதிய ஆதி சங்கரர்,  சூத்திரர்கள் வேதங்களைக் கேட்பதற்கும், படிப்பதற்கும், வேத முறைகளை அறிந்து கொள்வதற்கும் ச்ம்ருதி (ஸ்மிருதி  சமயநெறி)  தடை விதிக்கிறது. இந்தக் காரணத்தாலும், சூத்திரர்கள் வேதங்களைப் படிப்பதற்கும் அறிந்துகொள்வதற்கும் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். கீழ்க்கண்ட பகுதி வேதத்தைக் கேட்பதற்குத் தடையைத் தெரிவிக்கிறது.. வேதத்தைக் கேட்பவன் காதுகள் காய்ச்சிய ஈயத்தாலும் அரக்காலும் நிரப்பப்பட வேண்டும்., சூத்திரன் ஓர் இடுகாடு போன்றவன்;  எனவே அவன் அருகில் வேதத்தைப் படிக்கக் கூடாது.  இந்தக் கடைசிப் பகுதி யிலிருந்து வேதத்தைப் படிப்பதற்கான தடை உடன் உருவாகின்றது. ஏனெனில்,  அவன் அருகில் கூட வேதத்தைப் படிக்கக் கூடாதென்றால், அவனால் எப்படி அதைக் கற்றுக் கொள்ள முடியும்? மேலும், சூத்திரர்கள் வேதத் தைப் படிப்பதற்கு வெளிப்படையான தடையும் உண்டு..
அவன் அதை பலுக்கி னால் அவன் நாக்குத் துண்டிக்கப்பட வேண்டும்; அவன் அதைப் பாதுகாத் தால், அவன் உடல் துண்டிக்கப்பட வேண்டும்.. வேதங்களைக் கேட்பதற்கும் படிப்பதற்குமான தடை, வேத முறை களில் அறிந்து கொள்வதற்கும் மேற் கொள்வதற்குமான தடையையும் தந்துவிடுகிறது.. இருந்த போதிலும், சூத்திரனுக்கு அறிவைப் புகட்டக் கூடாது, படிப்பிற்கும் ஈகத்திற்கும், பரிசளிப்பிற்கும் இருபிறப்பாளராகிய பிராமணர்க்கு மட்டுமே தகுதி உண்டு என்பன போன்ற வெளிப்படையான தடைகளும் உள.. எது எப்படி இருப் பினும் வேதங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு (சூத்திரருக்கு) எந்தத் தகுதியும் கிடையாது என்பது முற்ற முடிந்த முடிவாகிறது (The Sacred Books of the East, Vol XXXIV, ed.by F.Max Muller, The Vedaanta Sutraas with the commentary by Shankeracharya Translated by George Thibaut, P.229-9; pub.by Motilal Banarasidass, Delhi
தமிழில்: ஆதிசங்கரரின் மக்கள் விரோதத் தத்துவம்,, பேராசிரியர் கே.எஸ். பகவான் கன்னடத்தில் சங்கராச்சார்ய மத்து பிரதுகாமித்தன என்னும் தலைப் பில் எழுதிய நூலின்  தமிழாக்கம் வீ.செ .வேலிறையன், பக்7,8. மகரந்தம் வெளியீடு, கரூர்,1986.
பிரமன் என்பதே இறுதி உண்மை ஆகும்; உலகம் என்பது வெறும் மாயையே; தனி உயிர்நிலைக்கும், அதாவது கடவுளுக்கும் மாந்தனுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை என்பததைத் தன் ஒருமையியல் கோட்பாடாகக் (அத் வைதம்) கொண்ட சங்கரர்  எது எப்படி இருப்பினும் வேதங்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு (சூத்திரருக்கு) எந்தத் தகுதியும் கிடையாது என்பது முற்ற முடிந்த முடிவாகிறது என்று எழுதினார் என்றால் அவருடைய கொள்கை உறுதிப் பாட்டை என்னவென்று சொல்லுவது? இரண்டே வரிகளைக் கொண்ட பிரம்ம சூத்திரத்தில்  சூத்திரர்களுக்கு மறுக்கப் படும் உரிமைகளை இத்துணை வரிகளில் எழுதியுள்ளமை வியப்புக்குரியதே..
ஆதி சங்கரருக்குப் பின்னர் தோன்றிய மத்துவாச்சாரியும் இராமானுசாச்சாரியும் 11 ஆம் நூற்றாண்டில் வீர சைவத்தைப் பரப்புவதற்குக் கடுமையாக உழைத்த சிறீபதிபண்டிதாரத்யரும் பிரம்ம சூத்திரத்திற்கு, சங்கரரைப் பின்பற்றியே உரை எழுதியுள்ளனர். இராமானுசர் எழுதிய விளக்கவுரை  ச்றீபாஷ்யம்; பண்டிதராத்யர் எழுதிய விளக்கவுரை அவருடைய சிறீகரபோசியம் நூலில் உள்ளது. (மேலது பக் 7)
புத்த, சமண மதங்களின் தாக்கங் களில் இருந்து, இந்துமதத்தை மீட் டெடுத்த பெருமை ஆதி சங்கரருக்கே உண்டு என்று பெருமையுடன் கூறுவர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் நிறுவியதாகக் கூறப்படும் மடங்களின் வழி இன்றளவும் இந்துத்துவா பரப்பப்பட்டு வருகின்றது. சங்கர மடங்களின் தலைவர்களைச் சூத்திர களும் போற்றி வணங்கி மகிழ்கின்றனர்;  பல்லக்கிலும் தூக்கி மகிழ்கின்றனர். காஞ்சி மடம் சங்கரரால் நிறுவப் பட்டதன்று. இருப்பினும் அவரால் நிறுவப்பட்டதாகப் பொய்யுரைத்து வருகின்றனர். சூத்திரர்களும் மகா பெரியவாள், பெரியவாள், சின்னவாள் என்று அந்த மடத்தின் தலைவர்களைப் போற்றுகின்றனர்.
காலப்போக்கில் சங்கரரின் மக்கள் விரோதக் கொள்கையை மறந்து விட்டனர்.. ச்ருதி. ச்ம்ருதிகளின் பெயரால் பார்ப்பனர்களின் ஏற்றத்திற்கே வழி வகுக்கப்பட்டிருக்கின்றது. அவற்றுள் மக்களின் நல்வாழ்விற்கான அறநெறிகள் உள்ளதைப் புறக்கணித்துவிட்டு வகுப்பு வாதத்தை முன்வைப்பதாகக் கூறப்படுவ துண்டு.. ஆனால், இந்து மதத்தை மீட்டு ருவாக்கம் செய்திட சங்கரர் மேற் கொண்ட சூழ்ச்சிகள் ஒரு துறவிக்குரிய பண்புநலனாகத் தெரியவில்லை. மதவெறியாகத்தான் தெரிகிறது.
மக்களுக்குக் கல்வியை மறுத்தது மட்டும் சங்கராச்சாரியார் செய்த ஒரே மிகக் கொடிய குற்றமன்று. அவருடைய கொள்கைக்கு மிகப்பெரும் அறை கூவலாய் அமைந்த புத்த மதத்தை அழிப்பதற்காக, விலங்காண்டித்தனமான, வெறுக்கத்தக்க, கொடிய முறைகளைப் பின்பற்றினார். அவர் தம்முடைய கல்வி அறிவாலும் ஏரணத்தாலும் (தருக்கத் தாலும்)  புத்த மதத்தை மறையச் செய்தார் என்று கூறுவது வேடிக்கைக்குரியதே ஆகும். மாறாய், ஆளும் வகுப்பாரின் கூட்டுடன் பவுத்தர்களை அழித்தார்.. தெற்கிலே பல்லவர்களும் மேற்கிலே சாளுக்கியர்களும் பிராமணீயத்திற்கு வலுவூட்டிய பேரரசர்களாக விளங்கினர். (A.H. Lomghurst, The Antiquities of Narajunakonda).  இவர்களுடைய உதவி யின்றி சங்கராச்சாரியார்   இத்தகைய குற்றச் செயலினை மேற்கொண்டிருக்க முடியாது. தம்முடைய நேரடி மேற்பார் வையிலேயே, அவர் பவுத்தர்களையும் பவுத்தர்களுடைய சிலைகளையும் நினைவு அடையாளங்களையும் அழித்தார். நாகார்ச்சுனகொண்டாவில் அகழ் வாராய்ச்சி மேற்கொண்ட A.H. Lomghurst,  தம்முடைய விலை மதிப்பற்ற The Buddhist Antiqyities of Nagarjunakonda   என்ற நூலில் இச் செய்தியைக் குறித் துள்ளார். (மேற்கண்ட நூல்: பக்21,22).
புத்த மதம் வேதங்களின் மேலாண் மையை  ஏற்காததும் திறந்த மனப் பான்மையை ஊக்குவித்ததும்தாம் சங்கராச்சாரியாரே தம் கூட்டத்தாருடன் சென்று புத்த நிலையங்களை அழித்து விட்டதாகக் கூறும் அறிஞர் பேராசிரியர் கே.எஸ்.பகவான், வேத மனம் மிகவும் கொடிய மனம்; பொறுமையைப்,பற்றி, இணக்கத்தைப்பற்றி இதற்குத் தெரியாது. மாறுபட்ட தாங்கிக் கொள்கின்ற  பண்பாடும் இதற்குக் கிடையாது. உறுதியாக, இதற்குப் பண்பட்ட பழக்கம் தெரியாது. தன்னைவிட உயர்ந்ததாக எதைப் பார்க்கின்ற பொழுதும், தற் கொலை செய்து கொள்கின்ற உணர் வையே இது பெறுகிறது. இத்தகு தன்மைகள் பெற்ற மனத்தை, வேத மனம் என அழைக்கலாம் என்று கருத்தறிவித் துள்ளார். (மேலது: பக்.39).
ஆதி சங்கரருடைய  புத்த சமண மத எதிர்ப்புணர்வை தேவாரம் பாடிய ஞானசம்பந்தர், வேட்டுவேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டுச் சிந்தை முரட்டமண் குண்டரை
வைதிகத்தின் வழியொழு காதவக் கைதவ
முடைக்கா ரமண் தேரரை எனப் பாடி எதிரொலித்துள்ளார். இந்திரனே! தேவரீர் யாகஞ்செய்பவர்களின் நன் மையின் பொருட்டு யாகஞ் செய்யாத வர்களைக் கொல்லுகின்றவர்களாயும் அவ்வாறெ தங்களைப் புகழ்ந்து பாடுபவர்களின் பகைவர்களைத் துன்புறுத்துவராயுமிருக்கின்றீர் என்று இந்திரனைப் போற்றியுள்ளார்.
- (சுவாமி சிவானந்த சரசுவதியின் மத விசாரணை)

- தொடரும்

மகாபாரதத்தில் வர்ணப் பாகுபாடு (2)



பேராசிரியர் பகவான் கூறியுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு நீதியரசர் தவேயின் கூற்றை ஆய வேண்டும். பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய சங்கரருக்கும் மத்வருக்கும் இராமானுசருக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே, எவற்றை முதல் வகுப்பிலிருந்தே கற்பிக்க வேண்டுமென்று தவே கூறுகின்றாரோ அந்த மகா பாரதமும், பகவத் கீதையும் தாம் என்பதில் அய்யமில்லை. வேத காலத்திலேயே மறுப்பியக்கங்கள் தோன்றி மக்களிடையே செல்வாக்கும் பெற்றிருந்தன. இல்லாதிருந்தால் பிற் காலத்தில் அவற்றைப் பற்றிய விரிவான குறிப்புகள் நமக்குக் கிடைத்திரா. சார்வாகர், லோகாயதர், சாங்கியர், மீமாம்சகர் வேத மறுப்பியக்கத்தைச் சார்ந்தோர்களாக இயங்கியிருக்கின் றனர். அவர்களைப் கண்ணன், பகவத் கீதையில், துஷ்கர்மன் (தீவினையர்), நரதாம (கீழ் மாந்தர், ஹுதஞான, அல் பமேத (அறிவிலிகள்), மூட (முட் டாள்கள், அபத்தவ, நஷ்தான், அசேத, சம்ஷ்யத்ம, நாஷ்தம, டம்பமன், அசுர, ராக்ஷச என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறான்.
வால்மீகி இராமாயணத்தில், யதாஹிசோர்: ஸ்ததாஹிபுத் தஸ்ததா:ஹதம்னாஸ்திகம் த்ரவித்தி:  - அதாவது திருடன் எப்படியோ அப்ப டியே புத்த சமயத்தவன் என்று அறிந்து கொள் என்று உள்ளது. பவுத்தர்களைத் திருடர்களுக்கு ஒப்பானவர்கள் என்று வால்மீகி கூறக் காரணம் என்ன? கடவு ளையும் ஆன்மாவையும் மறுத்ததால் பௌத்தர்களுக்கு இந்தப் பட்டம். அறிவையே தெய்வமாகக் கருதிய சமணர்களுக்கு, சம்ஷ்யதம (எதிலும் அய்யுறுவோர்  சந்தேகப் பிராணிகள்)  என்று பட்டம்.
மாந்த வரலாற்றில் உண்மையான முன்னேற்றதிற்குத் தேவையான விளையுள்ளுக்க்குரிய உழைப்பையும் சமுக உறவுகளியும் பழித்துரைக்கும் வேதங்கள் கூறியவற்றை எதிர்த்து, அறிவுக்கு முதன்மையிடம் கொடுத்து மக்கள் நலன் பேண விரும்பியவர்களை எதிர்கொண்டு முறையான ஞாயமான அமைவுகளைக் கூறவியலாத சனாதன வாதிகள் மேற்கண்டவாறு பழிதூற்றலா யினர் என்பது வரலாற்று உண்மை.
மகாபாரதத்தில் சாந்தி பர்வம் ஒரு பகுதி. குருசேத்திரப் போர்க்களத்தில், தலைக்குக் கீழ் உள்ள பகுதிகள் அனைத் தும் கால்கள் வரையில் முழுவதுமாக அம்புகளால் துளைக்கப்பட்ட உட லோடு விட்டுமன் (பீஷ்மன்) கிடக்கை யிலே, வெற்றி பெற்று ஆட்சியில் அமரக் காத்திருக்கும் தருமனுக்கும் அவனுடைய உடன்பிறப்புகளுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் நல்லாட் சியின் அறங்களைப் புகட்டுவதாக அமைந்த பகுதி. சாவின் விளிம்பில் கிடந்துகொண்டு, கண்ணனுடைய துணையுடன்   பல்லாயிரக் கணக்கான சொலவங்களை அறிவுரைகளாக வழங்குவதாக அமைந்தது. எப்படி ஆட்சி புரிவது, நன்மை  தீமை,, ஒழுக்கங்கள், ஆண்  பெண்களுக்குரிய அறங்கள்,குற்றங்கள், அவற்றுக்குரிய தண்டனைகள், வரிவிதிப்பு, போர்க்கள அறங்கள் எனப் பலவாறு விளக்கப் பட்ட சாந்தி பர்வத்தின் எல்லா அத் தியாயங்களிலும் வேரோடி இருப்பது சனாதன தரும,  நால்வருண அறமாக வும் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப் பனவாகவும் இருப்பதை உணரவியலும்.. அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்ப் போம். கட்டுரையாளன் படித்த மொழி பெயர்ப்பு நூலில் (ஸ்ரீ மஹா பாரதம், மணலூர் வீரவல்ல்லி இராமானுஜா சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) உள்ள வாறே மேற்கோள்கள் அளிக்கப் பட்டுள்ளன.
அத்தியாயம் 11 (ராஜதர்மம்  தொடர்ச்சி).: கர்ம மார்க்க்கமே சிறந்தது என்பதை விளக்குகையில் விட்டுமண் இடையிலே ஒரு முனிவனுக்கு ஒரு பறவை நாற்கால் பிராணிகளுள் பசு சிறந்தது. உலோகங்களுள் தங்கம் சிறந்தது. சப்தங்களுள் வேதம் சிறந்தது. இரண்டுகால் பிராணிகளுள் பிரா மணன் சிறந்தவன். பிராமணனுக்கு ஜனனம் முதல் மரணம் வரையில் காலத்துக்குத்தக்கபடி ஜாதகர்மமுதல் ஸ்மசானத்தில் செய்கிற முடிவான கார்யம் வரையிலுள்ளவை எல்லாம் வேதத்தால் விதிக்கப்பட்டன.  என்று கூறியதாக உரைக்கின்றான்.
அத்தியாயம் 14 (ராஜதர்மம்  தொடர்ச்சி).:  எல்லாப் பிராணிகளிடத்தும் ஸ்னே ஹமும் கொடுப்பதும் வேதமோதுவதும் தவமும் பிராமணர்களுக்குத்தான் தர்மமாகும். அரசர்களுக்கு இவை தர்மமாகா.
பிராமனன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன்,, மற்றுமுள்ள எவனும் எந்தச் சமயத்திலும் சாந் தனான பிராம்மணனை ஒரு புல்லாலும் அடிக்கக் கூடாது. பிராம்மணனைப் பெரிய தடியெடுத்து அடிக்க ஓங்கின பாவி முந்நூறு வருஷங்கள் நல்ல நிலையை அடையமாட்டான், அடிப்பவன் ஆயிர்ம் வருஷம் நரகத்தில் வீழ்வான்.  மிரட்டுவதற்காகத் தடியை ஓங்கினாலே தண்டனைக்குரைய வனாகின்றான்.
பசு வதையும் கள்ளுண்ணலும்
அத்தியாயம் 33: ராஜதர்மம் தொடர்ச்சி   விதிவிலக்குகள் சாஸ்திர விதியல்லாமல் பசுக்களைக் கொல்லுவதும் கொல்லச் செய்வதும் கூடாது.  விதிப்படியுள்ள பசுக்களின் வதம் அவைகளுக்குள்ள அனுக்ர ஹமாம். சாஸ்திரத்திற் சொல்லியபடி ஸோமரஸத்தின் ...பெருமையாகிய  உண்மையை அறிந்து ஸோமமென்னும் கொடியை விகரயஞ்செய்வது தோஷ மாகாது
உயிரிழப்பு என்பது உலக இயற்கை என்பதால் போர்க்களத்தில் உயிரிழந்த உற்றவர்களுக்காக வருந்தத் தேவை யில்லை என்பதை விளக்க வந்த கண் ணன் உயிரிழந்த பல பெரியவர்களின் கதைகளைக் கூறுகிறான். அவற்றுள் ஒன்று ப[சுவதைக்குச் சான்று பகர்ந்து நிற்கின்றது.
அத்தியாயம் 28 ராஜதர்மம் தொடர்ச்சி
சங்கிருதி என்னும் மன்னனின் புதல்வனான இரந்தி தேவன் இந்திரனி டமிருந்து பல வரங்களைப் பெற்று நல்லாட்சி புரிந்து வந்தானாம். அவனுடைய நல்லாட்சியினால்  மகிழ்ந்த ஆக்கள் (பசுக்கள்) தாமாகவே தங்கள் வாழ்விடங்களைவிட்டு அவனை அடைந்து, தங்களை நற் செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வந்தனவாம் அவன் அவற்றை எதற்குப் பயன்படுத்தினான் தெரியுமா? தம் குடிமக்களின் தேவை களுக்காக அல்லாமல் வேள்விக்காக பயன்படுத்தியுள்ளான்.. மேலே படியுங்கள்:
அவனால் யாகத்தில் உபயோகிக் கப்பட்ட (தாமாகவே வந்த) பசுக்களின் தோற்சுமையிலிருந்து கசியும் ஜலம் சர்மண்வதியென்னும் பெயர் கொண்ட பெரிய நதியாகிப் பிரஸித்தி பெற்றி ருக்கிறது. அந்த அரசன் பெரிய ஸபை யில் பிராமணர்களுக்குஅதிகமான ஸுவர்ணங்களைத் தானஞ் செய்தான். தங்கத்தைப் பெற்ற பிராமனர்கள் எனக்கு இவ்வளவு; உனக்கு எவ்வளவு? என்று கேட்டு மன்னன் அளித்த தங்கதை வாரிக்கொண்டு மன்னனை வாழ்த்தினார்களாம். வாழ்த்த மாட்டார்களா பின்னே? தமிழ்நாட்டு மன்னர்கள் தங்கள் கொடைமடத்தால் பார்ப்பனர்களுக்கு, பிரம்ம தேயம் என்றும் சதுர்வேதி மங்கலங்கள் என்றும் வாரி வழங்கினர் அல்லவா?)
ஸங்க்ருதியின் புத்திரனான ரந்தி தேவன் வீட்டில் ஓர் இராத்திரிக்கு ஆயிரத்து நூற்றிருபது பசுக்கள் உபயோகிக்கப்பட்டன. பார்ப்பனர்கள் நனறாக, போஜனம் செய்து மகிழ்ந்தனர்.
விதிப்படி செய்யப்படும் பசு வதை கொல்லப்பட்ட பசுக்களுக்கு நன்மை யாம். பசுவைக் கொல்லும்போது ஹோதா என்னும் ப்ரோகிதன் சொல்ல வேண்டியது:
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வமத்ரிகா அத்ரிகா அத்ரிகா உர் இதித்ரிர்ப்ரூயத்  பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல், அடிப் பதை நிறுத்தாதே. (சுவாமி சிவானந்த சரசுவதியின் மத விசாரணை) சிவானந்த சரசுவதியின் ஞானசூரியனைப் படித்து மேலும் பல விளக்கங்களைப் பெறுவீர்.
இசுலாமியர் ஹலால் சொல்லி உயிரிகளைக் கொல்வது போல்வது இது.
அத்தியாயம் 34  ராஜதர்மம் தொடர்ச்சி  ப்ராயச்சித்தங்கள்  கழுவாய்
அரசனே! எவன் நியமமுள்ள பிராமணர்களுக்குக் கம்போஜ தேசத் திலுண்டான நூறு குதிரைகளைத் தானஞ்செய்தும் அல்லது ஒரு பிரா மணனுக்காவது அவன் வேண்டியதெல் லாம் தானஞ்செய்வதுடன் அத்தா னத்தைத் தான் சொல்லிக் கொள் ளாமலும் இருக்கின்றானோ அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடு கின்றான்.
அத்தியாயம் 37
விட்டுமன், கண்ணன் ஆகியோர் விளக்கியுரைத்த அறிவுரைகளுக்குப் பின்னர்ப் பாண்டவர்கள் அஸ்தினா புரத்திற்கு வருகிறார்களாம். அவர்கள் வரும்பொழுது, அந்த நகரத்துப் பெண்கள் நாணத்துடனும் பொறாமையுடனும் பார்த்துக் கூறியதைக் கேளுங்கள்
ஓ! பாஞ்சாலி! மஹரிஷியை அடைந்து விளங்கும் கவுதமியைப் போல புருஷர் களில் மிகச் சிறந்த இப்பதிகளை யடைந்து விளங்கும் நீயே பாக்கியமுள் ளவள். கல்யாணி! உன் காரியங்கள் பழுதில்லாதவை. உன்னுடைய தவமே தவம் என்றுகொண்டாடினார்கள்.
அய்ந்து பேரைக் கணவர்களாகக் கொண்ட பாஞ்சாலியின் தவமே தவம மாம். அசுதினாபுரப் பெண்களுக்கிருந்த ஏக்கத்தைக் கவனியுங்கள். ஒருவேளை அவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவர்களும் மகிழ்ந் திருக்கக் கூடும். அவர்களுடைய  பெற் றோரோ கண்வன்களோ ஒப்பவில்லை போலும். இதில் மற்றொரு செய்தியைக் கவனியுங்கள்.. முனிவன் ஒருவனின் மனைவி கவுதமியை ஒப்பபிட்டுப் பேசியதிலிருந்து கவுதமிக்கும் பல கணவன்களோ என எண்ணத் தோன்று கிறது.
- பெங்களூரு
முத்து.செல்வன்

விடுதலை,4,11.10.14

திங்கள், 20 ஜூலை, 2015

பெருமாள் கோவிலில் துளசி பிரசாதமானது எப்படி?

பெருமாள் கோவிலில்
துளசி பிரசாதமானது எப்படி?
முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்
பெருமாள் கோவில்களில் துளசி பிரசாதமானது எப்படி? திருத்துழாய் என்று வைணவர்கள் துளசியைப் போற்றுகிறார்கள். துளசிக்கு மருத்துவ குணங்கள் உண்டு. தலையில் பேன் இருந்தால் தலையணை உறைக்குள் துளசியை அடைத்து அதன்மீது படுத்தால் பேன் உதிர்த்து விடும். இருமல், சளிக்குச் சுக்குக் கஷாயத்தோடு துளசியைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு.
ஆனால் இந்தக் காரணங்களாலெல்லாம் துளசி பிரசாதமாகி விடவில்லை. துளசி பிரசாதம் ஆன புராணக் கதை பலருக்குத் தெரியாது. இதில் தத்துவார்த்தமோ, ரகசிய அர்த்தமோ எதுவும் கிடையாது. அவ்வாறு நல்ல வாய்ப்பாக எந்தப் பண்டிதரும் சொல்லவுமில்லை. துளசி பற்றிய புராண மூடநம்பிக்கைக் கதை புராணத்திலுள்ளதுதான். எனவே துளசிபற்றிய மூடக்கதை என்று சொல்லும் பகுத்தறிவாளரைக் குறை கூறக்கூடாது. இதில் இன்னொரு சுவையான தகவலும் கூடுதலாக உண்டு. இராமனின் அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்குத் துளசிபற்றிய கதையும் காரணம். துளசி பற்றிய கதை பகுத்தறிவு வாதிகளோ, வரலாற்று ஆசிரியர்களோ கற்பனையாகப் புனைந்த கதையும் அன்று. சைவ புராணங்களில் கந்த புராணத்தில் உள்ளது. இந்தப் புராணத்தை எடுத்து விட்டால் சைவமில்லை என்று கூறுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுவர்.
இனி கதைக்கு வருவோம். விருத்தாசுரன் என்கிற ஒரு வலிமை மிக்கவன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் விருதை என்பதாகும். விருத்தாசுரனின் துணைவி அழகிலும் கற்பிலும் சிறந்தவள்.
விருதையை மகா விஷ்ணு கண்டு மோகித்து வசப்படுத்தத் தந்திரங்கள் பல செய்தும், தம்முடைய கடவுள் சக்தி எல்லாம் காட்டியும் முடியாமல் சூரனிடம் சண்டையிட்டார். சூரன் மகாவிஷ்ணுவைவிட வலிமைமிக்கவன் ஆதலால், சூரனிடம் சண்டையிட்ட அவர் தோற்று ஓடி விட்டார்.
ஓடியவர் சிவனைக் கண்டு அவரிடம் தன் ஆசையையும் கவலையையும் தெரியப்படுத்தினார். சிவன் சூரனிடம் சண்டையிட்டுச் சூரனைக் கொன்றார். விஷ்ணு சூரன் உடலுக்குள் புகுத்து கொண்டார். விருதையிடம் திருட்டுத்தனமாகக் கலந்து இருந்தார்.
விஷ்ணுதான் தன் புருஷன் உடலில் புகுந்து திருட்டுத்தனமாகத் தன்னைக் கூடி விட்டான் அன்று தெரிந்து விஷ்ணுவை நீ அயோக்கியனினும் அயோக்கியன். நீ ஒரு சண்டாளன். நீ செய்த காரியத்திற்கு மன்னிப்புக் கிடையாது. ஆகையால் நீ மனிதனாகப் பிறந்து உன் மனைவியை அசுரகுலத்தவன் தூக்கிச் சென்று சிறை வைத்துக் கற்பை அழிக்கும்படியாகச் சாபம் கொடுக்கிறேன் என்று சாபம் கொடுத்துவிட்டாள்.
பத்தினி சாபம் பலிக்கும் என்று சொல்வார்கள் அல்லவா? எனவே விருதையின் சாபம் பலித்தது. சாபம் கொடுத்த விருதை அக்கினியில் விழுந்து சாம்பலானாள். மகாவிஷ்ணுவுக்கோ விருதை சாம்பலான பின்னரும் மோகம் தணியவில்லை.
விருதையின் மோக ஆசையால் அந்தச் சாம்பலில் விழுந்து புரண்டு கிடந்தார். இந்த அவமானத்தை விஷ்ணுவின் சகோதரியும், சிவனின் மனைவியுமான பார்வதி பொறுக்காமல் துளசி என்னும் தன்னுடைய தாதிப் பெண்ணை அனுப்பி விஷ்ணுவின் சோகங்களை எல்லாம் தீர்த்து அழைத்து வருமாறு அனுப்பினாள். அவ்வாறே துளசி என்னும் பெண் சென்று திருமாலின் சோகங்களையெல்லாம் நீக்கி, அவரை அழைத்து வந்தாள். அந்தத் துளசி என்னும் பெண்ணை மகாவிஷ்ணு தம் மார்பில் வைத்துக் கொண்டார்.
இவ்வாறு இராம அவதாரமும், இராமாயணமும் உண்டாவதற்கு இந்தக் கதை அடிப்படையாயிற்று. ஜனகாதி மகரிஷிகள் விஷ்ணுவின் காவற்காரர்களான துவாரபாலகர்களுக்குக் கொடுத்த சாபத்தால் விஷ்ணு ராமராக அவதாரம் செய்தார் என விஷ்ணு புராணம் கூறும். எப்படியாயினும் சாபத்தால் விஷ்ணு அவதாரம் செய்தார் என்று ஆகிறது.
பார்வதியின் பணிப்பெண் துளசி விருதையின் பிணச் சாம்பலில் சோகத்தில் புரண்டு உருண்ட மகாவிஷ்ணுவின் சோகத்தைத் தீர்த்தமையால் துளசியை மகாவிஷ்ணு மார்பில் அணிந்துகொண்டார். அதுபோல் எல்லாரும் துளசியை அணிந்து கொண்டால் எல்லா வித சோகத்தினின்றும் சுகம் பெறலாம் என்று நினைத்து வைணவ பக்தர்கள் துளசியை அணிந்து கொள்கிறார்கள்.
மகாவிஷ்ணு பார்வதி தேவியின் அண்ணனானபடியால் அவருக்குப் பணிப் பெண் துளசி கிடைத்தது. அவ்விதம் எல்லாருக்கும் கிடைக்க வழியில்லாததால் விஷ்ணுவின் பெயர் சொல்லித் துளசித் தழையை அணிந்து கொள்கிறார்கள். வைதீக மதம் பொய்யைப் புளுகி வயிறு வளர்க்கும் கதையில் இதுவும் ஒன்று என்று கூறுவார் கைவல்யம் சுவாமிகள்.
இதுவரை புராணக் கதை கேட்டோம். துளசியை நம்பி தஞ்சாவூர் ஒழிந்த உண்மையான வரலாறு ஒன்று இருக்கிறது. இது நாயக்க மன்னர்கள் காலத்து வரலாறு.
தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆண்டார்கள். மதுரையை ஆண்டவர்கள் மதுரை நாயக்கர்கள். தஞ்சையை ஆண்டவர்கள் தஞ்சை நாயக்கர்கள். தஞ்சை நாயக்கர்கள் வைணவர்கள். அதாவது நாமக்காரர்கள். எனவே இந்த வைணவர்களின் அரசாட்சியை ஒழித்துக் கட்ட சைவர்கள், மராத்தியர்களுடன் பேசித் தஞ்சாவூர்மீது படையெடுத்து வரும்படி செய்தார்கள். மராத்தியர்களுக்குச் சைவர்கள் கூறிய யோசனை இது. நவராத்திரி சமயம் தஞ்சைமீது படையெடுங்கள். அதுதான் சரியான சமயம். ஏனென்றால் நவராத்திரியின் போது ஆயுதங்கள் எல்லாம் பூசையில் இருக்கும். அதை எடுக்காமலிருக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் கூறினார்கள். அதுபடி மராத்தியர்கள் நவராத்திரியின் போது வந்தார்கள். மராத்தியர்கள் படை எடுத்து வந்திருக்கிறார்கள்; தடுத்து நிறுத்த வேண்டும் என்று தஞ்சை நாயக்க மன்னரின் தளபதிகள் சொன்னார்கள். ஆயுதமோ இல்லை, பூசையில் இருக்கிறது. என்ன செய்வது? குருக்களையும் புரோகிதர்களையும் கேட்டார்கள்.
குருக்களின் யோசனை எப்படி இருக்கும்? குருக்கள் சொன்னார்: ஆயுதத்தைப் பூசையில் வைத்திருக்கிறோம். எனவே ஆயுதத்தை எடுத்தால் அம்பாள் கோபிப்பாள், மகாதோஷம் என்றார்.
மன்னர் கேட்டார்: மராத்தியர் படை எடுத்து வந்திருக்கிறார்களே, தடுக்க என்ன வழி?
குருக்கள் அருமையான ஆன்மிக யோசனை ஒன்று சொன்னார். பூசைக்கு ஏராளமான துளசி வந்திருக்கிறது. அதைக் கோட்டை வாசலில் போட்டு விட்டால் அதைத் தாண்டி எதிரிகள் வர மாட்டார்கள். துளசியைத் தாண்டுவது மகாபாவம் என்றனர். இவ்வாறு புரோகிதர்களின் புளுகை அன்றும் நாயக்க மன்னர்களும், அவருடைய பக்தர்களும் நம்பினார்கள்.
அங்குள்ள துளசியையெல்லாம் கோட்டை வாயிலில் போட்டார்கள். துளசியின் விசேடம்(!) மராத்தியனுக்குத் தெரியுமா? தெரியவில்லை. மராத்தியர்களிள் குதிரைகளுக்கும் தெரியவில்லை. கோட்டைக்குள் மராத்தியர்கள் மளமளவென்று வெள்ளம் போல் புகுந்தார்கள். தஞ்சை நாயக்கர்களின் தலைகளைப் பனங்காய்களைப் போல் சீவித் தள்ளினார்கள். தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி இருந்த இடத்தில் மராத்தியர் ஆட்சி ஏற்பட்டது. அன்று துளசியின் பித்தலாட்டத்தைச் சொல்ல தந்தை பெரியார் போல் வேறு ஒருவரும் இல்லை. இராப்பகலாய் இருபது நாள் கொள்ளையடித்தார்கள். துளசி பார்த்துக் கொண்டிருந்தது. துளசிக்குள்ளிருந்த அம்பாளும், சக்திகளும் பட்டஅடியால் அங்கேயே மாண்டு போனார்கள். தஞ்சை நாயக்கர் ஆதிக்கம் துளசிப் பிரசாதத்தின் மகிமை யால் நம்பி மன்னர்களின் அலுவலர்கள் தம் கடமையைக் கைவிட்டனர். எனவே அந்தக் காலத்துப் புலவன் பார்ப்பான் பெருத்து வடுகன் துரைத்தனம் பாழ்ந்ததுவே என்று பாடினார். பிரசாதமும், பூசையும் மலிந்து விட்டது என்பதுதான் இதன் பொருள்.

-விடுதலை14.8.10

ஆண்டாள் பிரதாபம்!- மின்சாரம்


விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சாசனம் வலியுறுத்தினால் என்ன? மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் வெளியேறிட வேண்டும் என்று பொதுவாக யார் கூறினால்தான் என்ன?
அதுபற்றி எல்லாம் நம் நாட்டு ஊடகங்களுக்குக் கவலையில்லை; சமூகப் பொறுப்புணர்ச்சி என்பது காயிலாங் கடையில் வாங்கும் சரக்கா என்று கேள்வி கேட்கும் நிலையில் தான் இருக்கின்றன.
இன்னும் சொல்லப் போனால் மக்கள் மவுடிகச் சேற்றில் மூழ்கிக் கிடக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்களை நல்லவிதமாக மொட்டை அடிக்கலாம் என்று கருதுகிற கழுகு மனப்பான்மைதான் பெரும்பாலான நம் நாட்டு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும். மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் தரமான ஏடுகளை எதிர்பார்ப்பார்களே! முற்போக்கான தகவல்களை தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுவார்களே! அப்படியெல்லாம் ஏடுகள் நடத்த, தொலைக்காட்சிகளை இயக்க போதிய அறிவு விசாலமும், பொது அறிவும் தேவைப்படுமே!
மூடச் சரக்கு என்றால், போர் போராகக் கொட்டிக் கிடக்கின்றன புராணங்களில். எண்ணிக்கையில் கூற முடியாத அளவுக்கு இறைந்து கிடக்கின்றன இதிகாசங்களில். தலைக்கு மேலே வழிந்து ஓடுகின்றன தல புராணங்கள்.
அதனால்தான் இந்த ஊடகக்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆன்மிக இணைப்புகளை அள்ளி விடுகின்றன.
இதற்குப் புதிய சிந்தனைகள் தேவையில்லை. ஏற்கெனவே இவர்கள் ஒவ்வொரு வாரம் மாதத்திற்கேற்ற மூடப் பண்டிகைகள், கோவில் விழாக்கள்பற்றி கொட்டியிருப்பவற்றை அப்படியே வெளியிட்டால், யார் என்ன கேட்கப் போகிறார்கள்?
வருடா வருடம் மீனாட்சிக் கல்யாண விழா மதுரையில் நடக்கத்தான் செய்கிறது. அதற்கான புராணக் கதைகள் மாறவா போகின்றன?
திருவில்லிப்புத்தூர் ஆடிப் பூரம் என்பதற்குப் புதிதாக எதைக் கண்டுபிடித்து இலக்கியக் கட்டுரைகள் தீட்டப் போகிறார்கள்?
மக்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் சிக்கல்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியே வருவதற்கு ஏதாவது போதைகள் தேவைப்படுகின்றன.
அந்த இடத்தை மதவாதிகள் கைப்பற்றி தங்கள் கைச்சரக்கை அவிழ்த்து வருகிறார்கள். ஊடகக்காரர்கள் அதனைக் கடன் வாங்கி கடைச் சரக்காக்கி கல்லாப் பெட்டிகளை நிரப்பி விடுகிறார்கள்.
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? பன்றி விற்ற காசு நாறவா போகிறது?
தந்தை பெரியார், சாமி கைவல்யம் போன்றவர்கள், சுயமரியாதைக்காரர்கள் இந்தப் புராண ஆபாசங்களை நார் நாராகக் கிழித்துத் தோரணங்களாகத் தொங்க விட்டுத்தான் பார்த்தனர்.
ஏடுகள் நடத்தி, அவற்றில் புதைந்து கிடக்கும் இழிவுகளை எல்லாம் விலாவாரியாக எடுத்து எழுதித்தான் பார்த்தார்கள்.
அதில் ஓரளவு விழிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.
திருநீறு பூசினால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்கிற அளவுக்குக் கீழ்த்தரமாக எழுதி வைத்துள்ளார்களே என்று தன்மான இயக்கம் பகுத்தறிவுக் கருத்துகளை திருப்பித் திருப்பி எடுத்துச் சொன்ன நிலையில், நெற்றி கொஞ்சம் சுத்தமாக ஆக ஆரம்பித்தது என்பது உண்மைதான்.
ஆண்கள்கூட குங்குமம் வைத்துக் கொண்ட காலம் இருந்ததுண்டு. இப்பொழுது வெட்கப்பட்டு நெற்றியை விலாசம் எழுதும் விளம்பரப் பலகையாக ஆக்கிக் கொள்வதைத் தவிர்த்துள்ளனர்.
ஆனாலும் பய+பக்தி இருக்கிறதே! ஆம் பயம் இருந்தால்தான் பக்தி வரும். அதனைச் சன்னமாகச் செய்வதில்தான் இந்த ஊடகங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு திரிகின்றன.
ஆடிப்பூரம் ஸ்பெஷலாம்; அது என்னப்பா ஆடிப்பூரம்?
திருவில்லிபுத்தூரில் உள்ள பெருமாள் கோயிலில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் நாள்தோறும் பூக்களைப் பறித்து, பெருமாளுக்குச் சூட்டும் பணி பெரியாழ்வாரைச் சார்ந்தது.
ஒரு நாள் பூ பறிக்க அந்த நந்தவனத்துக்குச் சென்றபோது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டதாம்! ஆச்சரியத்தோடு அங்கு மிங்கும் கண்களைச் சுழல விட்ட அய்யங்காரின் கண்களில் ஒரு குழந்தை பட்டது. அதைத் தூக்கி மார்போடு வாரி அணைத்து, வளர்த்து வந்தாராம். (பூமாதேவிதான் அந்தக் குழந்தையாகப் பிறந்தது என்பது ஒரு புராண அளப்பு!)
சீதைகூட அனாதையாகக் கண்டு எடுக்கப்பட்ட கதை வைணவத்தில் இது ஒரு தனிப் பாணி போலும்!
திருவல்லிபுத்தூரில் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்த நாள்தான் ஆடிப் பூரமாம்.
கோதை நாச்சியார் என்று அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டி வளர்த்தார் பெரியாழ்வார்.
வளர்ந்த அந்தக் குழந்தை என்ன செய்ததாம்? பெருமாளுக்குத் தம் தந்தையார் நாள்தோறும் கட்டி வைத்த பூமாலையை, பெருமாளுக்கு அணிவிப்பதற்கு முன்பே தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாளாம்.
ஒரு நாள் அவ்வாறு ஆண்டாளாகிய (கோதை நாச்சியார்) அந்தப் பெண் தன் கழுத்தில் பெருமாளுக்குரிய மாலையை அணிந்திருந்தபோது பெரியாழ்வார் பார்த்துத் திடுக்கிட்டாராம்.
பகவானுக்குச் சூட்டப்பட வேண்டிய மலையை பாவ ஜென்மமான மனிதன் சூட்டி மகிழலாமோ! அபச்சாரம் அல்லவா!
மீண்டும் நந்தவனம் சென்று, புதிதாகப் பூக்களைப் பறித்து மாலை கட்டிக் கொண்டு போனபோது பெருமாள் மறுதலித்தாராம்.
ஆண்டாள் கழுத்தில் அணிந்த மாலைதான் தமக்கு வேண்டும் என்று ஆண்டவன் அடம் பிடித்தானாம்.
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்! என்ற பட்டம் இவ்வாறு தான் வந்ததாம்.
பக்தையாக அந்தப் பெண் எப்படியாம்? பிஞ்சில் பழுத்தது.
பகவானாகிய கண்ணனைக் கலியாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டதாம்.
கடவுளுக்கும் பக்தைக்கும் காதலாம். திருவரங்கத்தின் கோபுரத்திலிருந்து, திருவரங்கத்தில் உள்ள தம் காதலியான ஆண்டாளுடன் காதல் கண்களை சிமிட்டுவாராம்.
உறவு முறையில் பார்க்கும்போது, பக்தை என்பவள் பகவானின் மகள்தான் ஆனாலும் அந்த மகளைத் தான் பகவான் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தினானாம்! நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று மானம் உள்ளவர்கள் கொதிக்கலாம். ஆனால் பக்தி என்று வந்து விட்டால் அனைத்தையும் உதிர்க்க வேண்டியதுதானே!
இந்தக் கதை எப்படியோ இருக்கட்டும்! பக்தையாகிய அந்த மகள், தகப்பனாகிய அந்தக் கடவுளிடம் மையல் கொண்டு பாடிய பாடல்கள் ஒன்றா இரண்டா? 143 பாடல்கள் இந்தத் தொகுப்புதான் நாச்சியார் திருமொழி என்பதாகும்.
மார்கழி நோன்பிருந்த ஆண்டாள் தன் தோழியரை விடியற்காலையில் எழுப்புவதாக அமைந்த 30 பாசுரங்கள் அடங்கிய நூலுக்கு திருப்பாவை என்று பெயர். இப்பாடல்களுக்குமுன் கொக்கோகம் தோற்று ஓடும் ஓடியே விடும்!
எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல். திராவிட இயக்க எழுத்தாளராக விளங்கிய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மறைந்த தோழர் பொன்மலைபதி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை ஒன்று போதும் பக்தியின் யோக்கியதைக்கு (உண்மை 1.10.1977)
விரகதாபம் எடுத்து, வெட்கம் சிறிதுமின்றி வண்டல் வண்டலாகப் பாடும் அந்த ஆபாசத்தை வெளிப்படுத்தினால்தான் பத்தில் ஒருவராவது சிந்தித்துப் பார்ப்பார்கள். அந்தக் கட்டுரையை தனியே காண்க!

மங்கை பாடிய கொங்கை!
பொன்மலை பதி
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்ணாழ்வார்! அவர்தான் ஆண்டாள் அம்மையார். கோதையென்றும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும், நப்பின்னைபிராட்டி, பூமிப் பிராட்டி, பெரிய பிராட்டி என்றும் வியப்போடு அழைப்பர். அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசி மலரில், பூமிப் பிராட்டியராக, அமசையாய் அயோநிஜையாய் திருவவதரித் தருளினாராம். அதாவது யோனிவழி பிறவாத, பூமியில் கண்டெடுத்த கரும்பார் குழற்கோதையாவார்! அனாதையோவென அய்யுற வேண்டாம்! அவதாரமென மெய்யுணர் வீரே! அவரைக் கண்டெடுத்து, வளர்த்து, திருமாலுக்கே கைப்பிடித்து இட்டவர் விஷ்ணுசித்தர் எனப் புகழ் பெற்ற பெரியாழ்வாரே!
அலங்காரப்பித்து
ஆண்டாள் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மிக்க திறமையும், ஆர்வமும் கொண்டவர்.
அவனுக்கு நேரொவ்வா திருக்கிறேனோ?
ஒத்திருக்கிறேனோ?
என்று காரை பூண்டு, கூறையுடுத்து, கைவளை குலுக்கி, கோவைச் செவ்வாய் திருத்தி எப்படி ஒப்பனை! அவ்வொப்பனை யழகைக் கண்ணாடியிலே கண்டு கண்டு மகிழ்வாராம்!
திருமணப் பேச்சு அடிபடுவதற்கு முன்னமேயே, கட்டிலறைக் கனவுகள் காண்பதில் வல்லவர்! காதல் வேட்கையால் உந்தப்பட்டு பற்பல பாக்கள் பரவசமாய்ப் பாடியிருக்கிறார். உறுப்புகளின் அழகை வருணிப்பதில் ஆண்கள் கெட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக, கவர்ச்சியாக, பாலுணர்ச்சி சுவையோடு பாடியவர்கள் ஆண்களுக்கு நிகர் ஆண்டாளே!)
அப்படிப்பட்ட ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார்திருமொழி யிலோ:
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!
கிருஷ்ணன், துகிலைத் திருடிக் கொண்டு மரக்கிளையில் போட்டு, அமர்ந்து கோபியரின் கொங்கையழகையும், அல்குலின் கண்கவர் அகலத்தையும் நீச்சலுடைகூட இல்லாத அப்படிப்பட்ட அம்மணக் குட்டிகளைக் கண்டு களிப்பதைப் பெண் ஆழ்வாராகிய ஆண்டாளே பாடுகிறார்:
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித் தருளாயே!
இது என் புகுந்ததுஇங்கு அந்தோ!
நீ வேண்டிய தெல்லாம் தருவோம்!
பட்டைப் பணித்தருளாயே!
கோலச் சிற்றாடை பலவும்
கொண்டு நீயேறி யிராதே!
கோலம் கரிய பிரானே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்!
நீதியல்லாதன செய்தாய்!
என்று கதறிக் கதறிக் கேட்டும் கண் கொட்டாமல் களித்து இன்புற்ற காட்சியைக் காணாத கண் என்ன கண்ணோ! வென ஏங்குவார்களேவென்றுதான் கற்சிற்பங்களாக, வண்ண ஓவியமாக வடித்து வைத்து இன்றும் கோகுலாஷ்டமி கொண்டாடி களிக்கிறோம்!
ஏக்கத்தின் உருக்கம்
ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
பாம்பறியும் பாம்பின்கால் என்பார்கள். அதற்கொப்ப நுட்பமான உட்பொருள்களையெல்லாம் அம்பலப்படுத்திப்பாட இப்படியெல்லாம் ஆணாழ்வார்களால் முடியுமா? அதற்காகவென்றே அத்தனை பேர்களுள் கொங்கைக் காமத்தைப் பாட, அதிருசி, தனிருசியுடன் பாட அவிதரித்தார் போலும் ஆண்டாளம்மையார்! மேலும், மேலும் கேட்க, படிக்க அவாவுறும் வகையில் தொடருகிறார்:
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!
கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!
இருக்கட்டும், இதைக் கேளுங்கள்:
காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!
எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! போதாவோ? சரி கேளுங்கள்.
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
லெறிந்து என்னழலைத் தீர்வேனே!
அப்பாடி! காமவேட்கைத் தீயின் சுவாலையை எப்படித்தான் எழுதுவது? நிற்க,
கொம்மை முலைகள் இடர்தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
என்றவாறெல்லாம் தவித்து, பக்த கோடிகளையும் ஒழுக ஒழுக உருக வைத்து எப்படி எப்படியெல்லாம் காமத்தினூடே கண்ணன் நாமம் பாடி நம்மையும் வாழவிட்டார் பார்த்தீர்களா?

-விடுதலை ஞா.ம.14.8.10

மகாபாரதத்தில் பசு விருந்து வெகு ஜோர்!

பார்ப்பனர்கள் தாங்கள்தான் காலம் காலமாக பசுவைத் தெய்வமாகப் போற்றி வருபவர்கள் எனவும் பசுவைக் காப்பாற்றுவது, மனுதர்மம், இந்து தருமமாகும் என்று கூப்பாடு போடு வதும் நகைப்பிற்கிடமானதாகும். இவர் களது முன்னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள் போன்ற எல்லா ஆரியர் களுக்கும் பசுக்கள்தான் விருந்து நடத்த ஆகார மாமிசமாக பயன்படுத்தப்பட்டி ருக்கிறது.
இது அவர்களது நூல்கள் பலவற்றிலும் காணப்படுகிறது. ஆனால், இத்தனைக் காலமும் சும்மா யிருந்துவிட்டு தேர்தலும் நெருங்கி ஒரு பார்ப்பனரல்லாதவர் நாட்டைத் தலைமைதாங்கி நடத்துகிற நிலை உருவாகி விட்டதைக் கண்டதும் வயிற் றெரிச்சல் பொறுக்காமல் இந்து தர்மத்தைக் காப்பாற்றுகிறோம். என்ற மயக்குப் பெயரில், அயோக் கியர்களை பசுவதைத்தடை என்ற பெயரில் உசுப்பி விட்டு காலித்தனங்களில் இறங்கியுள்ளனர்.
இன்றைய பார்ப்பனர்களின் முன் னோர்கள் மாட்டு மாமிசம், அதுவும் வெறும் பசுமாமிசமாக விருந்து நடத்தி, கூட்டங் கூட்டமாக ருசித்து சாப் பிட்டு ஆனந்தித்ததை, அவர்களது அய்ந்தாவது வேதமான மகாபாரதத் திலேயே  கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
துரோணபர்வம் 67-1-2ல், கண்டுள்ளது.
ஸ்ங்க்ருதி நந்தி தேவம் சம்நதம் ஸஞ்ஜய ஸீஸ்தரும   ஆஸன் த்விஸத் ஸாஹஸ்தரா லஸ்ய
ஸீதா மகாத்ம நண க்ருஹா நாப்யா சுதாத்வப்ராந்
அதி தீந் பரிவேஷ காஹா
சாந்தி பர்வம் 27-28ல்,
தத்ர ஸ்மஸூதாஹ க்ரோ ஸாந்த
ஸூம்ருஷ்ட மணி குண்டலாக
ஸூபம் பூயிஷ்ட மஸ் நீத்வம நாத்ய
மாம்ஸம் யதா புரா.
இந்த ஸ்லோகங்களின் கருத்துப்படி அரசர்களின் மாளிகைகளில், பார்ப் பனர்களுக்கு விருந்து படைப்பதற் கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர்.
நாளொன்றுக்கு இரண்டா யிரம் பசுக்கள் வீதம் கொல்லப் பட்டன. இப்படியிருந்து பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாக பார்ப்பனர் கள் வந்து சமாளிக்க முடியாமல் போய் விட்டதால் அவர்களைப் பார்த்து சமையற்காரர்கள் மாமிசம் குறைவாக இருக்கிறபடியால் தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலைமை ஏற்பட்டதாம்.
இந்த நூல் தவிர மற்ற நூல்களிலும் இதற்கு நிறைய ஆதாரம் காணலாம். இந்த பசுமாமிச விருந்தைப் பற்றி காளிதாசனும் தன்னுடைய மேகதூதத் தில் குறிப்பிட்டிருக்கிறான். அவற்றில் மாதிரிக்கு ஒன்று.
வ்யாலம் பேதாஹ ஸுபித நயாலம் பஜாம்
மானயிஷ்யஸ்ந் ஸரோதோ மூர்ததியா புவி பரிணதாம்
நந்தி தேவஸ்ய கீர்த்திம் (மேகனைதம் 1-45)
பசு மாமிசத்தை வெளுத்துக்கட்டி யது மட்டுமல்லாமல், தங்கள் கூட்டம் தின்ற பசுக்களின் எண்ணிக்கையை கூறிக்கொள்வதைப் பெரிய பெருமை யாக எண்ணியிருந்தனர்.
இவர்களது அரசனாக இருந்த நந்திதேவன் என்ற பார்ப்பன மன்னனின் விருந்து சாலை மகா பிரசித்தி பெற்றிருந்தது. இவ னுடைய நாட்டின் தலைநகரம் சர்மண் வதி (சம்பல்) நதிக்கரையில் இருந்தது.
இந்த நதிக்கு சர்மண்வதி என்ற பெயர் வந்ததுமே போதும், பார்ப்பனர்கள் பசு மாமிசத்திலேயே ஊறிக்கிடந்ததை தெரிவிப்ப தற்கு நந்தி தேவனுடைய அரண்மனையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பசுக்கள் கொல்லப்பட்டு அவைகளின் தோல்கள் மலைமலையாக சமையற் கட்டிற்குப் பக்கத்திலேயே குவிக்கப்பட்டிருக்குமாம்.
அந்த ஈரத்தோல்களி லிருந்து கசியும் நீர் ஓர் நதியாகவே பெருகி ஓடிற்றாம். தோலிலிருந்து வெளிப்பட்டு ஓடியதால் அதற்கு சர்மண்வதி (சர்ம-தோல், ணவதி-வெளிப்பட்டு ஓடுதல்) என்ற பெயர் ஏற்பட்டதாம்.
இதைக் கருத்தாகக் கொண்டதே:
நாக்ஜோ மஹா நஸே பூர்வ
நந்தி தேவஸ்ய வைத் வேஜே!
அஹந்ய ஹநி பத்யேதே த்வே ஸஹஸ்த்ரே கவாம் ததா
ஸாமாம்ஸ தத தோஹ் மந்நங்
நந்தி தேவஸ்ய நித்ய ஸஹ
அதுலா கிர்த்திர் பவந் நபஸ்ய
த்விஜ ஸத்தம்
(வனபர்வம் 208-1-10)
மஹா நதி சர்மராஸே நதிக் லேதாத்
ஸங்ஸ்நஜே யதஹ ததஸ் சர்மண்வதி த்யேவம்
விக்யாதாஸா மஹா நதி (சாந்தி பர்வம் 29-23) இந்த நந்தேவனின் தம்பிதான் பார்ப்பன மகரிஷியாக இருந்த கௌரிவித் என்பவர்.
சுராபானம் அருந்தியவர் பார்ப்பனர் இவ்வாறு பசுக்களின் இனமே அழிந்திருக்கக் கூடிய அளவுக்கு தின்றுவிட்டு, சுரா மதுவைக்குடித்து விட்டு, வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த பார்ப்பனக் கூட்டத்தை அன்றே திராவிட இனம் வெறுத்தது; விரட்டியடித்தது.
இத்தகைய திராவிட மக்களிடமிருந்து தங்களை ரட்சித்துத் தங்களது சுகானுபவத்தைக் கெடுக்காமல் காப்பாற்றிய அரசர்களை அன்றைய பார்ப்பனர் தெய்வமாகக் கொண்டாடி னர் இந்தக் காரணத்தினால்தான் வால்மீகியும் சுங்க வம்சத்து சக்ரவர்த்தி புஷ்யமித்திரனைத் தனது ராமாயண காவியத்தில் ராமனாக, கடவுள் அவ தாரமாக ஆக்கி வைத்தான்.
காளி தாஸனும் தான் எழுதிய ரகுவம்சத்தில் ரகுவாக அரசன் சந்திரகுப்தனையும், குமார சம்பவத்தில் குமாரனாக குமார குப்தனாகவும் வர்ணித்து வைத்தார்.
உலகத்திலேயே மிக அதிக எண்ணிக் கையில் மாடுகள் இருப்பது இந்தியாவில் தான், ஆனால் வெட்கக்கேடு என்ன வென்றால் உலகத் திலேயே எலும்பும் தோலுமாக மிகக்குறைந்த அளவில் பால் கொடுக்கும் மாடுகள் நிறைந் துள்ள நாடு நமது பெருமைமிக்க இந்தியாவில்தான்.
செலவு செய்வதில் பாதியளவுகூட கொடுக்காத பசுக்கள் தான் தற்சமயம் இங்கு மிகுதி. கொஞ்சம் மாடுகள் தற்சமயம் தோலுக்காக, மாமிசத்திற்காகக் கொல்லப்படுவதையும் நிறுத்திவிட்டால் வெறும் மரப்பு மாடுகளும், எலும்பு மாடுகளும் மனி தனது பயிரையும் சேர்த்து வீணடித்துக் கொண்டுதானே இருந்துவரும்.
வட இந்தியப் பார்ப்பனர் மாமிச பட்சணிகளே! தென் இந்தியப் பார்ப் பனரும் யாகம் செய்கையில் உண் கின்றனர்.
ஆகையால் இந்த கோட்சே கும்பல் களும்  பார்ப்பன இனத்திற்கு ஏகபோக மான ஆர்ய சமாஜ் ஜனசங்க, க.து. க்களும் பசுவதைத்தடை  என்று கூச்சல் போடுவது மக்களை மடையர்களாக எண்ணி நடத்தும் பச்சை அயோக்கியத் தன வெறியாட்டமாகும். ஆகையால் இந்த பசுவதைத் தடைப்போராட்டம் என்ற பெயரில் காமராசரை கூட்ட மாகச் சென்று தாக்கவே திட்டமிட்டுக் காரியமாற்றுகின்றனர்.
(விடுதலை 23-_11_-1966)
(விடுதலை ஞாயிறு மலர் 11-_4_-2015)