திருவாசகத்திற்கு உருகார் ஒரு
வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி
இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.
சைவ குரவர்
நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால்
திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக்
கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும்
படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி
நிற்கிறது.
மயக்கம்
தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக
நடைபெற்ற போரைப் போல, இந்த
மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப்
போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த
மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல
என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஆத்திகத்தின்
மோசடி வேலை
ஆத்திகத்தின்
பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை
விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு
ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.
காமம்
என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு
உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க
எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை
காண் கிறோம்.
எனவே
ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல
காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி
மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-
காமத்தைப்
பரப்பும் கருவி
அணங்குகளின்
அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து
ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று
நிறைவு கொண்டாரா? இல்லையே
பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள்.
ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக்
கொண்டு உள்ளே களிப்புக்
கொண்டு, பட்டிகையறும்
படாமிகைத்து, இணைத்து
எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து
கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும்
கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின்
நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு
ஒரு வாசகம் உண்டா?
இல்லை
என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப்
பயன்பெறுங்கள்.
கருங்குழற்
செவ்வாய்
வெண்ணகைக்
கார்மயில்
ஒருங்கிய
சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சற
நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)
எய்திடை
விருந்த எழுந்து புடைபாத்(து)
ஈர்க்கிடை
போகா இளமுலை மாதர்தம்
மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு
புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள்
ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக்
காரணமாக அமைந்து விட்டது.
எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக்
கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!
-தஞ்சை ஆடலரசன்
விடுதலை,26.9.14,ப7