வியாழன், 1 ஜனவரி, 2015

படக்காட்சியில் காமச்சுவை!

காட்சி என்ன கண்ணோடு வருகிறதா? என்று கிராமப் புரத்து மக்கள் கேள்வி எழுப்புவர். ஆனால் படக் காட்சியிலே பாமரர்களின் உள்ளம் படிந்துதான் கிடக்கிறது.
கடலன்ன காமங் கொண்டாலும் மடலேறா மாண்பு மங்கையொருத்திக்கு உண்டென்பான் வள்ளுவன்.
விரிந்து, பரந்து கிடக்கும் கடலைக் கண்டால் புலவர் பெருமக்கள் பழம் பனுவல்களையெல்லாம் பாழும் வயிற்றில் பதுக்கிக் கொண்டாயே என்று புழுங்கி ஏங்குவர். நீலக்கடலின் நீள்கரையில் நின்று, கடல்நீர் நீலமாக இருப்பதேன்? என்று அறிவியல் உலகம் வினா எழுப்பி விடை கண்டது.
அலைக்கும் கடல் முத்துக்களைக் கொடுத்து தமிழர்களின் சொத்துக்களைப் பறித்துக் கொண்டது என பழங்கால வரலாற்றைப் பாங்குற அறிந்தோர் பகர்வர்.
பாம்பின் படங்கண்டும், விடங்கொண்ட பார்ப்பானை விரைந்து அடி, பாம்பு தப்பினாலும் பரவாயில்லை என்றார் தந்தை பெரியார்.
கடலையும், நிலத்தையும் பாம்பு தாங்குவதாக மூடத் தனத்தின் முழுமுதற்கருத்தைத் தமிழ் மண்ணில் விதைத்தனர்.
பெண்ணைப் பேரின்பப் பொருளாக்கி பேரிடியைத் தமிழர் வாழ்வில் விழ வைத்த பேதை மனிதர், மூடப் பழக்கத்தைப் புகுத்தியன்றோ தமிழர்களின் தன் மானத்தை இழக்க வைத்தனர்! ஒன்றா இரண்டா, ஓராயிரம் அன்ன உன்மத்தர் களால் உலா வந்தன பாடல் உருவிலே.
ஆண்ட இனம் ஆரியத்திற்கு அடிமைப்பட்டது அதனாலன்றோ? கோள்கள் தங்களின் ஈர்ப்புச் சக்தியால் இயங்கி வரு கின்றன என்பது அறிவியல் கண்ட கண்டுபிடிப்பு. ஆனால், ஆத்திகர்களோ கடல், நிலச்சுமையைப் பாம்பு தாங்கு வதாகப் பொய்யையே புனைந்து வைத்துத் தமிழர்களை மாய்க்க, இன்பத்தை ஊட்டினர்.
ஆயிரந்தலைப் பாம்பு படமெடுத்து மூடியதைப் போல, பெண்ணொருத்தி தன் மறைவிடத்தை மேகலை எனும் ஆபரணங் கொண்டு மறைத்தாள் என்று பிரபுலிங்க லீலையில் பேசப்படுகிறது. பெண்ணின் உறுப்பைப் பெரிதாக்கி பாம்பின் படம் அதற்கு உவமை என்பர் புலவர் பெருமக்கள்.
ஆனால், லிங்கத்தின் லீலையை பாடவந்த புலவன், மறைவிடத்தை நீள அகலங்கண்டு மீளமுடியாமல் - ஆயிரந்தலைப் பாம்பின் படங்களைக் கொண்டு மூடி அழகு பார்க்கிறான் - அளவு போடுகிறான் ஆத்திகப் புலவன். என்னே கடவுள் பக்தி! பக்திச் சுவையைப் பாட வந்தவன் பாவையின் படம் பற்றி சுவையொழுகப் பாடுகிறான்.
பக்தி வருமா? புத்தி அழியுமா? பாடலை மனப்பாடம் செய்யும் பக்தர்களே! பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது, உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்குகிறதன்றோ!
பாடலையே தருகிறோம். படித்தின்புறுங்கள்.
பாயும் வெண்திரைக் கருங்
கடல் நிலச்சுமைப் பாம்பின்
ஆயிரம் படங்களுந்திரை
யிட்டன வனைய
மீயி லங்கொளி விரிமணி
மேகலை வேய்ந்தாய்
மாயை மங்கைத னல்குலி
னொருதிரு மடந்தை
(
பிரபு லிங்கலீலை, பக்கம். 67)
- தஞ்சை ஆடலரசன்
விடுதலை,24.19.14,ப7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக