- சித்திரபுத்திரன் -
02.09.1928 - குடிஅரசிலிருந்து....
விஸ்வாமித்திரன் சுப்ரமணியனது பிறப்பைப் பற்றி ராமனுக்குக் கூறியது:-
1. சிவபெருமான் உமாதேவியைத் திருக்கலியாணம் செய்து, மோகங் கொண்டு அவளுடன் 100 தேவ வருஷம் (மனித வருஷத்தில் பல யுகம்) புணர்ந்து கொண்டிருந்தனர். அவ்வளவு காலம் கழிந்தும் பார்வதி கர்ப்பம் அடைய வில்லை. அது கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் சிவனிடத்தில் வந்து, இவ்வளவு காலம் புணர்ந்த உம்முடைய தேஜஸ்ஸாகிய விந்து வெளிப்படு மானால் உலகம் பொறுக்கமாட்டாது. உம்முடைய விந்துவை தயவு செய்து விடாமல் நிறுத்திக் கொள்ளும் என்று வேண்டவும், அதற்கிசைந்த சிவன் தனது விந்துவை மற்றபடி யார் தரிப்பது? எங்கு விடுவது? என்று கேட்க, தேவர்கள் பூமியில் விடும்படி சொல்ல, அதன்படியே சிவன் பூமியின் மீது விட்டுவிட்டார். பூமி அதை தாங்கமாட்டாமல் பூமி முழுவதும் கொதிகொண்டு எழ தேவர்கள் அந்த வீரியத்தை பூமி தரிக்க முடியாது எனக் கருதி அக்கினியிடம் சென்று வேண்ட அக்கினி வாயுவின் உதவியால் அவ்வீரியத்திற்குள் பிரவேசித்து பிரம தேவன் கட்டளைப்படி அதை கங்கையில் கொண்டு சேர்த்து, அவ்வீரியத்தைப் பெற்று ஒரு குழந்தைப் பெற வேண்டு மென்று கங்கையை வேண்ட, கங்கையும் அதற்குச் சம்மதித்து அவ்வீரியத்தைப்பெற, அவ்வீரியமானது கங்கை முழுவதும் பரவி நிறைந்துவிட, கங்கை அதை தாங்கமாட்டாமல் மறுபடியும் அக்கினியை வேண்ட, அக்கினி மனமிரங்கி கங்கையை நோக்கி ஏ கங்கையே! நீ அடைந்த சிவனின் வீரியத்தைத் தாங்க முடியாவிட்டால் பனிமலை அருகில் விட்டுவிடு என்று சொல்ல, கங்கையும் அவ்வாறே அவ்வீரியத்தை பனிமலையின் அருகில் விட, அங்கு அது குழந்தையாகத் தோன்ற அதை இந்திரன் பார்த்து அக் குழந்தைக்குப் பால் கொடுத்து வளர்க்க கிருத்திகா தேவிகளை ஏவ, அவர்கள் அதற்கு பால் கொடுத்து வளர்த்து வரலானார்கள். பல இடத்தில் சிவனது வீரியம் ஸ்கலிதமானதன் பலனாக அக்குழந்தை உற்பத்தி யானதால் அக்குழந்தைக்கு ஸ்கந்தன் என்றும், கிருத்திகா தேவிகள் ஆறுபேர்களுடைய பால் சாப்பிட்டதால் கார்த்திகேயன் என்றும், மேல்கண்ட ஆறுபேரின் முலையிலும் ஆறுமுகம் கொண்டு ஏககாலத்தில் பால்குடித்ததால் ஷண்முகன் என்று பெயர்கள் ஏற்பட்டன.
இவ்வரலாறு வால்மீகி ராமாயணத்தில் சிவன் பார்வதியை புணர்ந்தது என்று தலைப்பெயர் கொண்ட 36-வது சருக்கத்திலும் குமாரசாமி உற்பத்தி என்கின்ற 37வது சருக்கத்திலும் காணப்படுகின்றது.
இரண்டாவது வரலாறு தேவர்கள் சிவனிடம் சென்று அசுரர்களை அழிப்ப தற்கு தகுந்த சக்தி கொண்ட ஒரு குழந்தையை பெற்றுத்தர வேண்டுமென்று வேண்ட, சிவன் அருள்கூர்ந்து தனது அய்ந்து முகங்களுடன் மற்றும் ஒரு முகத்தையும் சேர்த்துக் கொண்டு தோன்ற அவ்வாறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் ஆறிலிருந்து ஆறுதீப்பொரிகள் வெளியாக, அப்பொறிகளைக் கண்டு தேவர்களும் மனிதர்களும் நடுங்கி பரமனை வேண்ட, பரமன் அப் பொறிகளை கங்கையில் விடும்படி சொல்ல அவர்கள் அப்படியே செய்ய, கங்கை அது தாங்க மாட்டாமல் அவைகளைக் கொண்டு சரவணத்தில் செலுத்த, அங்கு ஆறு குழந்தைகள் தோன்ற, அந்த ஆறு குழந்தைகளையும் கிருத்திகைப் பெண்கள் அறுவர்களும் பால் கொடுத்து வளர்த்து வந்தார்கள். பிறகு சிவன் பெண்ஜாதி பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்துக் கட்டி அணைத்து முத்தமிட்டு பாலூட்டுகையில் அவ்வாறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆகிவிட்டது. இதற்கு ஆறுமுகமுடையதால் ஆறுமுகன் என்றும் கங்கையாறு ஏந்திச் சென்றதால் காங்கேயன் என்றும் சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இது கந்தபுராணத்திலும் முருகன் கதையிலும் உள்ளது.
குறிப்பு : சுப்பிரமணியன் பிறப்புக்கு மேல் கண்டபடி இரண்டு கதைகள் காணப்பட்டாலும் கந்த புராணத்தின் கதைப்படி பார்த்தாலுமே வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் ராமருக்குச் சொன்னதாகச் சொல்லப்படும் மேல்கண்ட கதைதான் உறுதியாகின்றது. ஏனெனில் கந்தபுராணத்திலும் பார்வதியானவள் தன்மூலியமாய் பிள்ளை பெறுவதை தடுத்ததற்காக தேவர்கள் மீது கோபித்து தேவர்களை பிள்ளையில்லாமல் போகக் கடவது என்று சபிக்கின்றாள் என்று காணப்படுகின்றது. சிவனது நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறி வெளியாகி அதிலிருந்து பிள்ளை உண்டாகியிருக்கும் பட்சத்தில் பார்வதிக்கு தேவர்களிடத்தில் கோபம் உண்டாகக் காரணம் ஏற்பட நியாயம் இல்லை. இந்தக் கோபம் உண்டாவதற்குக் காரணம், வால்மீகி ராமாயணத்தில் சொல்வது போல், அதாவது 100 தேவ வருஷம் சிவன் பார்வதியைப் புணர்ந்து கடைசியாக வீரியம் வெளிப்பட்டு கருதரிக்கும் சமயத்தில் தேவர்கள் குறுக்கிட்டு சிவனை தனது வீரியத்தை பார்வதி கர்பத்துக்குள் விடாமல் நிறுத்திக் கொள்ளும்படி வேண்டினதால் சிவன் அதை எடுத்துக் கொண்டதற்கு பார்வதி கோபித்து வீரியம் ஸ்கலிதமாக்கும் சமயத்தில் கொடுமை செய்ததற்காக அவர்களைச் சபித்து, அதாவது தன்னைப் போலவே தேவர்களுடைய பெண்சாதிகள் எல்லோரும் பிள்ளையில்லாமல் மலடிகளாக வேண்டுமென்று சபித்ததாகக் காணப்படுவது நியாயமாக இருக்கின்றது.
அன்றியும் பார்வதி தனது கர்ப்பத்தில் விழ வேண்டிய வீரியத்தை பூமி பெற்றுக் கொண்டதால் பூமியையும் பார்வதி தனது சக்களத்திபோல் பாவித்து அவளையும் பூமியையும் பலபேர் ஆளவேண்டுமென்று சபித்ததாகவும் அதனாலேயே பூமிக்கு அடிக்கடி அரசர்கள் மாறுகிறார்கள் என்றும் வால்மீகியில் காணப்படுகின்றதும் பொருத்தமாயிருக்கின்றது.
கந்தப்புராணமோ மேல் கண்ட சிவன் 100 வருஷம் புணர்ந்த விஷயம் ஒன்றைத் தவிர மற்றவைகளையெல்லாம் ஒப்புக்கொள்ளுகின்றது.
ஆகவே சுப்பிரமணியன் என்றும் சண்முகன் என்றும் கார்த்திகேயன் என்றும் ஸ்கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது மேல்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உள்பட்டது என்பது வைணவப் புராணங்களிலும் சைவப் புராணங் களிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்த சுப்பிரமணியனுடைய கடவுள் தன்மை யையும் செய்கைகளையும் வேறு தலைப்பின் கீழ் விவரிக்கலாம்.
- விடுதலை நாளேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக