செவ்வாய், 31 ஜூலை, 2018

பிரார்த்தனை

27.09.1931- குடிஅரசிலிருந்து...


இங்கு இந்த விழா துவக்கப்படுமுன்  நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப் பிட்டிருந்த பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய்நடிப்பு நடிக்கப் பட்டதானது உங்களுக்குத் தெரியும், பிரார்த்தனை என்று தலைவர் சொன்னவுடன் சில பிள்ளைகள் வந்தார்கள். கைகட்டினார்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். ஜனகணமன ................. என்று எதை யோ சொன்னார்கள். அதுபோலவே சில பெண்கள் வந்தார்கள். கைகட்டினார்கள். கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்குப் பெயர் பிரார்த்தனையாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு ஆகவாம். நண்பர்களே! இதில் ஏதாவது அறிவோ நாணயமோ இருக் கின்றதா? என்பதை நிதானமாய், பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். தயவு செய்து ஆத்திரப்படாதீர்கள்.

கடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கிய மானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லிவருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல்குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில் இருந்ததா? பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்ற சிறுவர்கள் அவர்களுக்கும், அவர்களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு  சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை, இந்த சபையிலுள்ள சுமார் ஒரு ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து சொல்லிவிட்டு போவது என்றால் இதற்குச் சமமாக எதை சொல்லுவது? அநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல்லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள், புரியாத கருத்துகள் கொண்ட பாடல் களாகவும் வாக்கியங்களாவும் இருக்கின்றனவே தவிர, பக்தி என்பதற்கு பொருத்தமானதாய் இருக்கின்றதா? பாருங்கள். எந்தப் பக்தி பாட்டும் சங்கீத பிரதானியத்திலும், இலக்கண இலக்கிய பிர தானியத்திலும், வேஷப்பிரதானியத்திலும், சடங்குப்பிரதானியத்திலும், இருக்கிறதே தவிர, உண்மை பிரதானியத்தில் சிறிதாவது இருக்கின்றதா? பாருங்கள். இந்த மாதிரி வேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்தப் பக்திக்கு ஏதாவது ஒருதுரும்பளவு யோக்கியதையாவது இவர்களது பிற்கால வாழ்வில் உண்டாகிறதா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத் தையும் நாணயக் குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா? இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங் கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும். ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளரமுடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர் களாக நம்மைச் செய்துவிட்டது. இந்தப்படியான சிந்திக்கும் தன்மை யற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.


- விடுதலை நாளேடு, 27.7.18

புதன், 25 ஜூலை, 2018

மாதவிலக்கு – யோனி பூஜை நடக்கும் அம்மன் கோயில்!


Patrikai
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாதவிக்கு பருவத்தில் உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்கிற தடை குறித்த விவாதம் இன்று இந்தியா முழுதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நெறியாளுனர், “கோயில்களில் இருக்கும் பெண் தெய்வங்கள் மாதவிலக்கு காலங்களில் எங்கே செல்லும்” என்கிற கவிதை ஒன்றை குறிப்பிட்டு பேச.. சர்ச்சை உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில், “கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு மாதவிலக்கு நடப்பதும், அதையொட்டி பிரம்மாண்டமான சடங்குகள் நடப்பதும் ஒரு கோயிலில் வழக்கமாக உள்ளது” என்ற தகவல் கிடைத்தது.

அசாம் மாநிலம் – கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ள ‘காமாக்யா’ சக்தி பீடத்தில்தான் இந்த சடங்குகள் நடக்கின்றன.

ஆம்…

இங்கு வருடம் ஒரு முறை பார்வதிக்கு மாதவிலக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இது ஓரு யோனி பூஜை.

இதற்கு காரணமாக ஒரு புராணக்கதை உண்டு.

கைலாயத்திலிருக்கும் சிவன் சொன்னதை புறக்கணித்து, அவர் மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்‌ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வருகிறார். அதற்குள் பார்வதி தற்கொலை செய்துகொள்ள.. அவளது உடல் 51 பாகங்களாக சிதறிப்போய்விடுகின்றன.

தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். பிறகு காமதேவன்உதவியுடன் கண்டுபிடிக்கிறார். அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவில்!

பார்வதியின் யோனி விழுந்த இந்த சக்திபீடம்தான், இதர. சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது என்று புராணங்கள் போற்றுகின்றன.

அதனால் அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். இது கற்பாறையில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. .

ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பெண் குறியில் `மாத விலக்கு’ ஏற்படுகிறது என்பது ஐதீகம். அப்போது நான்கு நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுகிறது என்றும், இதை மாத விலக்கு என்று சொல்லாமல் வருஷ விலக்கு என்று கூற வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்தக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். இது தேவி மாதவிலக்காகும் நாட்கள். அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது நான்கு நாட்கள் முடிந்தப் பிறகு மீண்டும் கோவில் வாசல் திறக்கப்படும்.

குறிப்பிட்ட அந்த நாட்களில் அம்மனை நீராட்டும் நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் ரத்தம்வழிவது போல செய்கிறார்கள்.

இந்த நீர் பக்தர்களுக்கு (புனித நீராக) அளிக்கப்படுகிறது. உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுகிறார்கள். சன்னியாசிகளும், சன்னியாசினிகளும் இந்த நாட்களில் வந்து வழிபடுவார்கள்.

இந்த நாட்களில் பூசாரிகளும் பக்தர்களும் செவ்வாடைதான் அணிய வேண்டும். இறைவி`காமாக்யாவுக்கும் செவ்வாடை தான் அணிவிக்கப்படும்.

மூன்றாம் நாள் அம்மனுக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் நீராட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படும்.

கோயில் கிணற்றின் மேல் சிகப்புத் துணி போர்த்தப்படுகிறது. நான்கு நாள்கள் முடிந்ததும் நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக அளிக்கப்படும். இது . மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படுகிறது.

இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் – நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் உண்டு. கருவறையிலேயே ஆடு, கோழிகொடுக்கப்படும். 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம். ஆங்கிலேயே அரசு, இதை தடை செய்து விட்டது.

“கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மனுக்கும் மாதா மாதம் மாதவிடாய் நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தில் நீலாய தாட்சி என்னும் கோயில் அம்மனுக்கு ருது சாந்தி விழா நடப்பது உண்டு.

மனிதன் தன்னுடைய உருவாகவே கடவுளை நினைத்து வழிபடுகிறான் என்று அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் கவியரசு கண்ணதாசன் கூறியிருப்பார்.அதைத்தான் இந்த யோனி வழிபாடுகளும் ருது பூஜைகளும் உணர்த்துகின்றன” என்கிறார்கள் இந்து மத பக்தர்கள்.
- கட்செவி பதிவு

ஆடித்திருவிழா என்பதன் பொருள் என்ன? மூடத்தனத்தின் முடை நாற்றம்!

உழைக்கும் மக்களின் உன்னத உழைப்பை மதிக் காமல், அவர்களிடம் சுரண்டிக் கொழுத்து, மூடநம்பிக் கைச் சேற்றில் அவர்களை மூழ்கச் செய்வதுதான் ஆரிய  நரித்தன தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

புராணக் கதையாக கூறப்பட்டுள்ளதன்படி, ஆடி என்பது ஒரு அரக்கனின் பெயர். பார்வதி, சிவனைவிட்டு விலகியிருந்தபோது, அரக்கனான ஆடி, சிவனின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு பாம்பு வடிவம் எடுத்து உள்ளே நுழைந்து, பார்வதியாக உருமாறி சிவபெருமான் அருகே காமத்துடன் சென்றானாம். தன்னோடு சேர்ந்திருக்க வருவது ‘ஆடி எனும்  அரக்கன்’ என்று தெரிந்துகொண்ட ஈசன் அவனை தன் கைகளால் கட்டி இறுக்கிக் கசக்கிப் பிழிந்து ‘சம்ஹாரம்’ செய்தானாம். அந்த ஆடிதான் மாதமானதாம்.

ஆடி மாதத்தில் கோயில்களில் அம்மன் வழிபாடு, வேப்பிலை, மஞ்சள், சாகை வார்த்தல் மற்றும் கூழ் ஊற்றுதல் என பக்தி விழாக்களை நடத்தி வருகின்றனர். அம்மன் கோயில்களில்  பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடுகள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடி அமாவாசை நாளில் முன் னோர்களுக்காக ‘திதி’ திவசம் கொடுத்தால் முன்னோர் களின் ‘ஆசி’ கிடைக்குமாம். முருகனின் கோயில்கள் உள்ள திருவாவினங்குடி(பழநி), திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர், பழமுதிர்ச் சோலை ஆகிய இடங்களை அறுபடை வீடுகள் என்று குறிப்பிட்டு, ‘ஆடிக் கிருத்திகை’ விழா, பூஜைகளை செய்து வருகிறார்களாம்.

பார்வதிக்கு வளைகாப்பாம்

பார்வதிக்கு வளைகாப்பும், ஆண்டாள் பிறந்த நாளும் ‘ஆடிப்பூரம்’ என்று கொண்டாடப்படுகிறதாம்.

(பார்வதிக்கு வளைகாப்பு என்றால் பார்வதி பெற் றெடுத்த பிள்ளை எங்கே போனது?)

பெரும்பாலான அம்மன் கோயில்களில் ஆடிப்பூர திருவிழாவானது பத்து நாட்கள் கொண்டாடப்படுமாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு வழிபாடுகள் நடத்தப் படுவதுடன், வளைகாப்பும் நடத்தப்பட்டு, அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு அளிக்கப்படுமாம். அந்த வளையல்களை அணிந்தால், நன்மை ஏற்படும் என்று கூறி பெண்களுக்கு அளிக்கப்படுகின்றனவாம்.

வரலட்சுமி விரதம் போன்றவற்றால், பெண்களில் மணமானவர், மணமாகாதவர்களுக்கு என தனித்தனியே பலாபலன்கள் ஏற்படுவதற்காக விரதங்களுக்கும், பூஜைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

ஆனால், இந்த மதத்தில்தான் ‘கைம்பெண்’ தன் மையால் பெண்கள் பெரிதும் இழிவுக்குள்ளாக்கப் பட்டார்கள். மாத விடாய் எனும் மாத விலக்கு இயற்கை யானதாக பார்க்கப்படாமல், அதை ‘தீட்டு’ என்று குறிப்பிட்டு பெண் சமூகத்தையே இழிவுபடுத்தும் நிலை இருந்து வருகிறது. பக்திமிகுந்த பெண்ணாக இருந்தாலும், தீட்டு என்கிற பெயரால் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய தடை போடப்படுகிறது.

கொடிகட்டிப் பறக்கும் வணிக உலகம்

பண்டிகைகளின் பெயரால் சுரண்டல்கள் ஒரு பக்கம் என்றால், ஆடி மாதத்தின் பெயரால் வணிகரீதியிலும் மக்களிடையே சுரண்டல் நடக்கிறது.  துணிக்கடைகளில் தேக்கம் அடைந்துள்ள கையிருப்பு பொருட்களை பெரு மளவு விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக துணிக் கடைக்காரர்கள் ‘ஆடித்தள்ளுபடி’ என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர்.

ஆடி மாதமானது ஆன்மிக மாதம் என்று கூறிக் கொண்டு, பக்தியின்பெயரால் மக்களுக்கு பெருந் தீமையையும், பெரிதும் மூடத்தனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆடிப்பெருக்கு (ஆடி 18)

ஆடிப்பெருக்கானது ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஆடி பதினெட்டாம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது, ஆடிப்பெருக்கு விழாவானது நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறதாம்.

காவிரி

காவிரி: 1.இவள் பிரம்மன் மனத்திலிருந்து கவேர னுக்குப் புத்திரியாய் நதியுருவடைந்தவள். இவள், சையமலை (ஸஹ்யபர்வதம்)யிற்பிறந்து துகினத்திற்கும் சேதுவிற்கு மிடையில் ஒன்பதினாயிரம் யோசனை விரிவாய்ச் சையசம்பவை கவேரக்கன்னியெனப் பெயர் பெற்றனள். இவள் அகத்தியரை மணந்தனள். அகத்தியர் வரத்தால் எல்லத் தீர்த்தங்களும் வணங்கும் வரம் அடைந்து அகண்ட காவிரியெனப் பெயர் பெற்று உலகத்தார் பாபங்களைப் போக்குபவள். அகத்தியர் கமண்டலத் திருந்த இவளை இந்திரன் வேண்டுகோளால் விநாயகர் காகவுருக் கொண்டு உருட்ட நதியுருவாய்ப் பிரவகித் தனள். தொல்காப்பியரைக்காண்க. இவளே லோபா முத்திரை. இதில் அரிச்சந்திரன், அருச்சுனன், சுசீலை, ஒரு பன்றி, மண்டூகம், முதலை முதலியோர் ஸ்நானஞ்செய்து நற்கதி பெற்றனர். கன்னி, காவிரிப் பாவை, நீர்ப்பாவை, சோழர் குலக்கொடி, தமிழ்ப்பாவை யெனவும் பெயர் வழங்கும் (காவிரித்தலபுராணம்).

2.கம்ப நாடர் குமரி இவளிடம் சோழன் மகன் காதல் கொள்ள இவள் கற்பு கெடுவதினும் சாதல் நலமென வெண்ணிக் கம்புக்குதூரில் மூழ்கி தற்கொலை புரிந்துகொண்டனள்.

-அபிதானசிந்தாமணி நூலிலிருந்து

நதி எப்படி உற்பத்தியாகிறது என்கிற புவியியல் விஞ்ஞானம் அறிந்தவர்கள் இந்த புராணப் புழுதியை எண்ணி நகையாடுவர்.

காவிரிக்காக விவசாயிகள் அரசிடமும், நீதிமன்றத் திடமும்தான் நீதிகோரி போராடும் நிலை இருந்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவே தமிழகமே கிளர்ந்தெழுந்து போராட வேண்டியதாகவே உள்ளது. ஆனால், ஆடியில் விழா எடுத்து நன்றி தெரிவிக்கப்படுவதுதான் ஆடிப்பெருக்காம்.

கடந்த பல ஆண்டுகளாக காவிரி வறண்டு தண்ணீ ரின்றி இருந்தாலும் ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடுவதை நிறுத்தக்கூடாது என்று தண்ணீரை ஒரு செம்பில் வைத்து பூஜை செய்தாலே போதும் என்று பார்ப்பனர்கள் உபன் யாசங்கள் செய்துவிடுகிறார்கள். ஆக, வழிபாடுகளின் மூலமாக காவிரி நீர் வரச்செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

பக்தி, வேண்டுதல்கள் என்கிற பெயரால் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். கைகள், தோள் பட்டைகள், கன்னப்பகுதிகள், நாக்கு உள்ளிட்ட  உடல் உறுப்புகளில் வேல் குத்திக்கொள்ளுதல், அலகு குத்திக் கொள்ளுதல், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், நெருப்பு மிதித்தல், காவடி எடுத்தல் ஆகியவற்றின் மூலமாக தங்களின் பக்தியை நிரூபிக்க முயன்று வருகிறார்கள். இவையாவும் கடவுளின் சக்தியால்தான் என்று தாங்களும் ஏமாறுவதுடன், பிறரையும் ஏமாற்றி வரும் நிலை தொடர்கிறது.

மக்களின் அறிவு, சிந்தனைத்திறத்தை பாழடித்து, ‘பய’பக்தியை உருவாக்கி, இல்லாத சொர்க்கம், பேராசை களைக் காட்டியே தங்களின் வயிறு வளர்க்க பார்ப் பனர்கள் தமிழர்களின் பண்பாட்டை சிதைத்தார்கள்.

கோயில்களில் வழிபாடு செய்வதில் தொடங்கி, வீடுகளில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழை அறவே நீக்கி, ஆரிய மொழியான சமஸ் கிருதத்தைத் திணித்துவிட்டார்கள்.

உழைக்கும் மக்களை திசைதிருப்பி, பக்தியின் பெயரால் சுரண்டுகின்ற ஆரியத்தின் கெடுமதிகொண்ட ஆதிக்கத்தால் விளைந்த கேடான,  அறிவுக்குப் புறம்பான பழக்க வழக்கங்களாக மூடநம்பிக்கைகளின் விழாக் களாக  ‘இல்லாத இந்து மத’த்தின் பண்டிகைகளாக உள்ளன.

இதுபோல் பண்டிகைகளின் பெயரால் உழைக்கும் மக்களின் காலம் மற்றும் பொருளை மட்டுமல்லாமல் அறிவையும் பாழடிப்பதே ஆடி மாத பண்டிகைகள்.

தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து, ஆரிய சதிகளுக்கு பலியானார்கள். தமிழர்களின் பண் பாட்டை பாதுகாக்கின்ற நூல்கள், கருத்து கருவூலங்களை ஆற்றில் விட்டு அழித்தொழிக்கின்ற ‘ஆடிப் பெருக்கு’ விழாக்கள் பார்ப்பனர்களால் தமிழர்களிடையே திணிக்கப்பட்டது.

ஆடி, மார்கழி மாதங்களில் தமிழர்கள் இல்லத் திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களை நடத்த முடியாத  அளவுக்கு பண்பாட்டுப்படையெடுப்பு தமிழர்களிடையே திணிக்கப்பட்டது.

பாவயோனியில் பிறந்தவர்களாக பெண்களை இழிவுபடுத்துவதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம் சொல்லுகின்ற வருணாசிரமத்தின்படி, ஜாதிப்பாகுபாடுகள் ஏற்படுத்தப்பட்டன.  அனைத்து ஜாதிப்பிரிவினருக்கும் கீழான நிலையில் பெண்களை வைத்திருப்பதாகத்தான் வேத மதமான இந்துமதம் இருந்து வருகிறது.

ஆகவே, பெண்கள் மதத்தின்பெயரால் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியைப்பற்றி அறியாமல், பக்தியின் பெயரால் விரதங்கள், சடங்குகளில் மூழ்கிக்கிடக்கின்றனர். படித்தவர்களாக இருந்தாலும், உயர் பதவிகளில் இருப்பவர்களானாலும் பகுத்தறிவு இல்லாவிட்டால், படித்த பாமரர்களாகவே மூடத்தனங் களுடன் இருந்து வருகிறார்கள்.

பக்தி, மத வழிபாடு, பிரச்சாரங்களுக்கு பெண்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

நம்முன் எழுகின்ற கேள்வி என்னவென்றால், எல்லாம் அறிந்த கடவுளால், கடவுளாலேயே படைக்கப் பட்டவர்கள் என்று கூறப்படுவோரின் தேவையை அறிந்துகொள்ளமுடியாதா?

எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதெல்லாம் வடிகட்டிய கற்பனை புளுகுதானே. எதையும் மாற்ற முடியாது என்றால், வேண்டுதல்கள் ஏன்? வருத்திக்கொள்ளச் செய்வதும் தான் ஏன்? எல்லாம் விதிப்பயன், கர்ம வினை என்று எதைஎதையோ சொல்லி வஞ்சித்துவரும் கூட்டத்திடம் சிக்கிய அப்பாவி மக்கள் இந்த பக்தி போதையில்  சிக்கிக்கொண்டு படும்பாடு கொஞ்சம் நஞ்சமன்று.

ஊரெங்கும் கோயில்கள், காணுமிடமெல்லாம் சோதிடர்கள், குறி சொல்வோர், பக்தி சுற்றுலா என எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அறியாமையில் உழலும் பாமரர்களின் உயர்வுக்குத்தான் அவர் களிடையே வழியேதும் தென்படவில்லை. அறியாமை இருளிலிருந்து அனைவரும் மீண்டிட பகுத்தறிவு ஒன்றே வழி என்பதை உணர்ந்தால், பக்தி போதையிலிருந்து மீள முடியும். பகுத்தறிவாளர்கள்தான் இந்த மோசடி களைத் தோலுரித்து, செயல்விளக்கங்கள் மூலமாக தங்களை வருத்திக்கொண்டு மக்களின் அறியாமை இருளை போக்கிவருகிறார்கள்.

விவசாயத் தொழிலில், ஆடிப் பட்டம் தேடி விதை, காலத்தே பயிர் செய் என்பதற்கிணங்க உழைக்க வேண்டிய காலத்தை பக்தியின் பெயரால் பாழடிக் கலாமா?

-  ந.கதிர்

-  விடுதலை நாளேடு, 25.7.18