புதன், 25 ஜூலை, 2018

ஆடித்திருவிழா என்பதன் பொருள் என்ன? மூடத்தனத்தின் முடை நாற்றம்!

உழைக்கும் மக்களின் உன்னத உழைப்பை மதிக் காமல், அவர்களிடம் சுரண்டிக் கொழுத்து, மூடநம்பிக் கைச் சேற்றில் அவர்களை மூழ்கச் செய்வதுதான் ஆரிய  நரித்தன தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

புராணக் கதையாக கூறப்பட்டுள்ளதன்படி, ஆடி என்பது ஒரு அரக்கனின் பெயர். பார்வதி, சிவனைவிட்டு விலகியிருந்தபோது, அரக்கனான ஆடி, சிவனின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு பாம்பு வடிவம் எடுத்து உள்ளே நுழைந்து, பார்வதியாக உருமாறி சிவபெருமான் அருகே காமத்துடன் சென்றானாம். தன்னோடு சேர்ந்திருக்க வருவது ‘ஆடி எனும்  அரக்கன்’ என்று தெரிந்துகொண்ட ஈசன் அவனை தன் கைகளால் கட்டி இறுக்கிக் கசக்கிப் பிழிந்து ‘சம்ஹாரம்’ செய்தானாம். அந்த ஆடிதான் மாதமானதாம்.

ஆடி மாதத்தில் கோயில்களில் அம்மன் வழிபாடு, வேப்பிலை, மஞ்சள், சாகை வார்த்தல் மற்றும் கூழ் ஊற்றுதல் என பக்தி விழாக்களை நடத்தி வருகின்றனர். அம்மன் கோயில்களில்  பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடுகள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடி அமாவாசை நாளில் முன் னோர்களுக்காக ‘திதி’ திவசம் கொடுத்தால் முன்னோர் களின் ‘ஆசி’ கிடைக்குமாம். முருகனின் கோயில்கள் உள்ள திருவாவினங்குடி(பழநி), திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர், பழமுதிர்ச் சோலை ஆகிய இடங்களை அறுபடை வீடுகள் என்று குறிப்பிட்டு, ‘ஆடிக் கிருத்திகை’ விழா, பூஜைகளை செய்து வருகிறார்களாம்.

பார்வதிக்கு வளைகாப்பாம்

பார்வதிக்கு வளைகாப்பும், ஆண்டாள் பிறந்த நாளும் ‘ஆடிப்பூரம்’ என்று கொண்டாடப்படுகிறதாம்.

(பார்வதிக்கு வளைகாப்பு என்றால் பார்வதி பெற் றெடுத்த பிள்ளை எங்கே போனது?)

பெரும்பாலான அம்மன் கோயில்களில் ஆடிப்பூர திருவிழாவானது பத்து நாட்கள் கொண்டாடப்படுமாம். ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு வழிபாடுகள் நடத்தப் படுவதுடன், வளைகாப்பும் நடத்தப்பட்டு, அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு அளிக்கப்படுமாம். அந்த வளையல்களை அணிந்தால், நன்மை ஏற்படும் என்று கூறி பெண்களுக்கு அளிக்கப்படுகின்றனவாம்.

வரலட்சுமி விரதம் போன்றவற்றால், பெண்களில் மணமானவர், மணமாகாதவர்களுக்கு என தனித்தனியே பலாபலன்கள் ஏற்படுவதற்காக விரதங்களுக்கும், பூஜைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

ஆனால், இந்த மதத்தில்தான் ‘கைம்பெண்’ தன் மையால் பெண்கள் பெரிதும் இழிவுக்குள்ளாக்கப் பட்டார்கள். மாத விடாய் எனும் மாத விலக்கு இயற்கை யானதாக பார்க்கப்படாமல், அதை ‘தீட்டு’ என்று குறிப்பிட்டு பெண் சமூகத்தையே இழிவுபடுத்தும் நிலை இருந்து வருகிறது. பக்திமிகுந்த பெண்ணாக இருந்தாலும், தீட்டு என்கிற பெயரால் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய தடை போடப்படுகிறது.

கொடிகட்டிப் பறக்கும் வணிக உலகம்

பண்டிகைகளின் பெயரால் சுரண்டல்கள் ஒரு பக்கம் என்றால், ஆடி மாதத்தின் பெயரால் வணிகரீதியிலும் மக்களிடையே சுரண்டல் நடக்கிறது.  துணிக்கடைகளில் தேக்கம் அடைந்துள்ள கையிருப்பு பொருட்களை பெரு மளவு விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக துணிக் கடைக்காரர்கள் ‘ஆடித்தள்ளுபடி’ என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர்.

ஆடி மாதமானது ஆன்மிக மாதம் என்று கூறிக் கொண்டு, பக்தியின்பெயரால் மக்களுக்கு பெருந் தீமையையும், பெரிதும் மூடத்தனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆடிப்பெருக்கு (ஆடி 18)

ஆடிப்பெருக்கானது ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஆடி பதினெட்டாம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது, ஆடிப்பெருக்கு விழாவானது நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறதாம்.

காவிரி

காவிரி: 1.இவள் பிரம்மன் மனத்திலிருந்து கவேர னுக்குப் புத்திரியாய் நதியுருவடைந்தவள். இவள், சையமலை (ஸஹ்யபர்வதம்)யிற்பிறந்து துகினத்திற்கும் சேதுவிற்கு மிடையில் ஒன்பதினாயிரம் யோசனை விரிவாய்ச் சையசம்பவை கவேரக்கன்னியெனப் பெயர் பெற்றனள். இவள் அகத்தியரை மணந்தனள். அகத்தியர் வரத்தால் எல்லத் தீர்த்தங்களும் வணங்கும் வரம் அடைந்து அகண்ட காவிரியெனப் பெயர் பெற்று உலகத்தார் பாபங்களைப் போக்குபவள். அகத்தியர் கமண்டலத் திருந்த இவளை இந்திரன் வேண்டுகோளால் விநாயகர் காகவுருக் கொண்டு உருட்ட நதியுருவாய்ப் பிரவகித் தனள். தொல்காப்பியரைக்காண்க. இவளே லோபா முத்திரை. இதில் அரிச்சந்திரன், அருச்சுனன், சுசீலை, ஒரு பன்றி, மண்டூகம், முதலை முதலியோர் ஸ்நானஞ்செய்து நற்கதி பெற்றனர். கன்னி, காவிரிப் பாவை, நீர்ப்பாவை, சோழர் குலக்கொடி, தமிழ்ப்பாவை யெனவும் பெயர் வழங்கும் (காவிரித்தலபுராணம்).

2.கம்ப நாடர் குமரி இவளிடம் சோழன் மகன் காதல் கொள்ள இவள் கற்பு கெடுவதினும் சாதல் நலமென வெண்ணிக் கம்புக்குதூரில் மூழ்கி தற்கொலை புரிந்துகொண்டனள்.

-அபிதானசிந்தாமணி நூலிலிருந்து

நதி எப்படி உற்பத்தியாகிறது என்கிற புவியியல் விஞ்ஞானம் அறிந்தவர்கள் இந்த புராணப் புழுதியை எண்ணி நகையாடுவர்.

காவிரிக்காக விவசாயிகள் அரசிடமும், நீதிமன்றத் திடமும்தான் நீதிகோரி போராடும் நிலை இருந்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவே தமிழகமே கிளர்ந்தெழுந்து போராட வேண்டியதாகவே உள்ளது. ஆனால், ஆடியில் விழா எடுத்து நன்றி தெரிவிக்கப்படுவதுதான் ஆடிப்பெருக்காம்.

கடந்த பல ஆண்டுகளாக காவிரி வறண்டு தண்ணீ ரின்றி இருந்தாலும் ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடுவதை நிறுத்தக்கூடாது என்று தண்ணீரை ஒரு செம்பில் வைத்து பூஜை செய்தாலே போதும் என்று பார்ப்பனர்கள் உபன் யாசங்கள் செய்துவிடுகிறார்கள். ஆக, வழிபாடுகளின் மூலமாக காவிரி நீர் வரச்செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

பக்தி, வேண்டுதல்கள் என்கிற பெயரால் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். கைகள், தோள் பட்டைகள், கன்னப்பகுதிகள், நாக்கு உள்ளிட்ட  உடல் உறுப்புகளில் வேல் குத்திக்கொள்ளுதல், அலகு குத்திக் கொள்ளுதல், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், நெருப்பு மிதித்தல், காவடி எடுத்தல் ஆகியவற்றின் மூலமாக தங்களின் பக்தியை நிரூபிக்க முயன்று வருகிறார்கள். இவையாவும் கடவுளின் சக்தியால்தான் என்று தாங்களும் ஏமாறுவதுடன், பிறரையும் ஏமாற்றி வரும் நிலை தொடர்கிறது.

மக்களின் அறிவு, சிந்தனைத்திறத்தை பாழடித்து, ‘பய’பக்தியை உருவாக்கி, இல்லாத சொர்க்கம், பேராசை களைக் காட்டியே தங்களின் வயிறு வளர்க்க பார்ப் பனர்கள் தமிழர்களின் பண்பாட்டை சிதைத்தார்கள்.

கோயில்களில் வழிபாடு செய்வதில் தொடங்கி, வீடுகளில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் தமிழை அறவே நீக்கி, ஆரிய மொழியான சமஸ் கிருதத்தைத் திணித்துவிட்டார்கள்.

உழைக்கும் மக்களை திசைதிருப்பி, பக்தியின் பெயரால் சுரண்டுகின்ற ஆரியத்தின் கெடுமதிகொண்ட ஆதிக்கத்தால் விளைந்த கேடான,  அறிவுக்குப் புறம்பான பழக்க வழக்கங்களாக மூடநம்பிக்கைகளின் விழாக் களாக  ‘இல்லாத இந்து மத’த்தின் பண்டிகைகளாக உள்ளன.

இதுபோல் பண்டிகைகளின் பெயரால் உழைக்கும் மக்களின் காலம் மற்றும் பொருளை மட்டுமல்லாமல் அறிவையும் பாழடிப்பதே ஆடி மாத பண்டிகைகள்.

தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து, ஆரிய சதிகளுக்கு பலியானார்கள். தமிழர்களின் பண் பாட்டை பாதுகாக்கின்ற நூல்கள், கருத்து கருவூலங்களை ஆற்றில் விட்டு அழித்தொழிக்கின்ற ‘ஆடிப் பெருக்கு’ விழாக்கள் பார்ப்பனர்களால் தமிழர்களிடையே திணிக்கப்பட்டது.

ஆடி, மார்கழி மாதங்களில் தமிழர்கள் இல்லத் திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களை நடத்த முடியாத  அளவுக்கு பண்பாட்டுப்படையெடுப்பு தமிழர்களிடையே திணிக்கப்பட்டது.

பாவயோனியில் பிறந்தவர்களாக பெண்களை இழிவுபடுத்துவதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம் சொல்லுகின்ற வருணாசிரமத்தின்படி, ஜாதிப்பாகுபாடுகள் ஏற்படுத்தப்பட்டன.  அனைத்து ஜாதிப்பிரிவினருக்கும் கீழான நிலையில் பெண்களை வைத்திருப்பதாகத்தான் வேத மதமான இந்துமதம் இருந்து வருகிறது.

ஆகவே, பெண்கள் மதத்தின்பெயரால் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியைப்பற்றி அறியாமல், பக்தியின் பெயரால் விரதங்கள், சடங்குகளில் மூழ்கிக்கிடக்கின்றனர். படித்தவர்களாக இருந்தாலும், உயர் பதவிகளில் இருப்பவர்களானாலும் பகுத்தறிவு இல்லாவிட்டால், படித்த பாமரர்களாகவே மூடத்தனங் களுடன் இருந்து வருகிறார்கள்.

பக்தி, மத வழிபாடு, பிரச்சாரங்களுக்கு பெண்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள்.

நம்முன் எழுகின்ற கேள்வி என்னவென்றால், எல்லாம் அறிந்த கடவுளால், கடவுளாலேயே படைக்கப் பட்டவர்கள் என்று கூறப்படுவோரின் தேவையை அறிந்துகொள்ளமுடியாதா?

எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதெல்லாம் வடிகட்டிய கற்பனை புளுகுதானே. எதையும் மாற்ற முடியாது என்றால், வேண்டுதல்கள் ஏன்? வருத்திக்கொள்ளச் செய்வதும் தான் ஏன்? எல்லாம் விதிப்பயன், கர்ம வினை என்று எதைஎதையோ சொல்லி வஞ்சித்துவரும் கூட்டத்திடம் சிக்கிய அப்பாவி மக்கள் இந்த பக்தி போதையில்  சிக்கிக்கொண்டு படும்பாடு கொஞ்சம் நஞ்சமன்று.

ஊரெங்கும் கோயில்கள், காணுமிடமெல்லாம் சோதிடர்கள், குறி சொல்வோர், பக்தி சுற்றுலா என எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அறியாமையில் உழலும் பாமரர்களின் உயர்வுக்குத்தான் அவர் களிடையே வழியேதும் தென்படவில்லை. அறியாமை இருளிலிருந்து அனைவரும் மீண்டிட பகுத்தறிவு ஒன்றே வழி என்பதை உணர்ந்தால், பக்தி போதையிலிருந்து மீள முடியும். பகுத்தறிவாளர்கள்தான் இந்த மோசடி களைத் தோலுரித்து, செயல்விளக்கங்கள் மூலமாக தங்களை வருத்திக்கொண்டு மக்களின் அறியாமை இருளை போக்கிவருகிறார்கள்.

விவசாயத் தொழிலில், ஆடிப் பட்டம் தேடி விதை, காலத்தே பயிர் செய் என்பதற்கிணங்க உழைக்க வேண்டிய காலத்தை பக்தியின் பெயரால் பாழடிக் கலாமா?

-  ந.கதிர்

-  விடுதலை நாளேடு, 25.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக