பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக் குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாதங்களில் 12ஆம் மாதமாகிய பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளாகும். நட்சத்திரங்களில் 12ஆம் நட்சத்திரம் உத்திரம். முருகன் கோயில்களில் இந்நாளில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
மீனாட்சி கல்யாணம்
சிவனுக்கும் பார்வதிக்கும் சோம சுந்தரர் என்றும், மீனாட்சி என்றும் கூறி, திருமணம் செய்வித்த நாள் பங்குனி உத்திரநாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களின் ஆறுதலுக்காக சிவன் பார்வதியை மணந்தானாம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணி களால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துகள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளி யறைக்கு அனுப்பி வைப்பார்களாம்.
பங்குனி உத்திரக் கல்யாணத் திருவிழா அன்றைய நாளில் சைவர்கள் விரதமிருப்பர். பகற் பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் இருப்பார்களாம். இத னைக் கல்யாணசுந்தர விரதம் என்கிறார்களாம்..
பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தான். ராமன், சீதையை கரம் பிடித்தான். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தான். அரங்கநாதன் ஆண்டாள் முதலிய கடவுளர்களின் திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றன வாம். இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் கூறப்படுகிறதாம்.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருக னையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
அசுரர்களை முருகன் அழித்த நாளாம்
பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தானாம். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருந்ததாம். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்ட வனுமான தாரகாசுரன் ஆட்சியில், தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வந்தா னாம்.
அதனால், முருகன், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகா சுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட, இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப் படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரி சூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண் டும் மூர்க்கத் தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகனின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதன் மூலம் அறிந்த முருகன், நேரடியாக போர்க் களத்திற்கு சென்று கடுமையாக தாக்கினானாம்.
தாக்குதலை சமாளிக்க முடியாமல் தாரகாசுரன் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்தான். முருகன், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிய, துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகா சுரனை கொன்றதாம். அதன் பிறகு முருகன், தெய்வானையை மணந்தானாம். அந்த நாளே பங்குனி உத்திரமாம்.
இப்படி சற்றும் அறிவுக்கு பொருந்தாத கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு காலங்காலமாக பக்தியின் பெயரால் மக்களை அறி வுக்குருடர்களாக ஆக்கியதுடன், சிறுபிள்ளை விளையாட்டாக திருவிழாக்களை நடத்தச் செய்து, ஏமாந்த மக்களை வஞ்சித்து வருகின்ற பார்ப்பனக்கூட்டத்தின் வஞ்சகத்தைப்புரிந்து கொண்டு விழிப்பைப் பெறுவது எப்போது? சர்வ சக்தியுள்ளவன் கடவுள் என்றால், அவனுக்கு வேல் எதற்கு? சூலாயுதம்தான் எதற்கு?
எல்லாம் அவன் செயல் என்றால், அசுரர்களின் செயல் யார் செயல்?
அசுரர், தேவருக்குள் பிரச்சினை என்றால், தேவர்களை மட்டும் காக்க வேண்டிய அவசியம்தான் என்ன? கடவுளுக்கு எதற்கு ஆண்டு தோறும் திருமணங்கள்? வைபவங்கள்? விழாக்கள்? அதனால் விளையும் நன்மைதான் என்ன? நேரமும், பொருளும், உழைப்பும் பாழாவதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? பக்தர்கள் சிந்தித்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலைகளிலிருந்து விடுதலை பெற்றிடலாமே!
- விடுதலை நாளேடு, 20.3.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக