தொழில்கள் அனைத்துக்கும் அவற்றை நடத்துவதற்கான விதிமுறைகள் உள்ளன; அரசியல் தொழில் ஒன்றைத் தவிர! அதே போல மதங்கள் அனைத்தும் நன்னடத்தைக்கான விதிமுறைகளைக் கொண்டுள்ளன, ஆனால் இந்துக்களுக்கு மட்டும் அது போன்ற விதிமுறைகள் இல்லை. எனவே, அண்மையில் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது அகில உலக இந்து மாநாட்டில் கலந்து கொண்ட தர்மாச்சாரியார்கள், ஆச்சார்யஸம்ஹிதா என்ற ஆறு விதிமுறைகளை இந்துக்களுக்காக அறிவித்துள்ளார்கள்.
கிறித்துவர்களின் பத்து கட்டளைகளைப் (Ten Commandments) போல கண்டிப்பானதாகவும், திட்டவட்டமாகவும் இந்து விதிமுறைகள் இல்லாமையால் அதுபற்றி யாரும் அஞ்சவேண்டியதில்லை. பத்துக்கட்டளைகள் மிகவும் எளிதானவை. கொலை, சோரம் போதல், பல கடவுள் வழிபாடு (Polytheism) முதலியவற்றைக் கண்டிக்கின்றன. இதை அறிந்த இந்து மத ஆச்சாரியார்கள் சடங்கிற்காக ஆறு இந்து விதிமுறைகளை அறிவித்துள்ளனர். அதனால், மிகவும் மோசமான அயோக்கியர்கள் கூட அந்த விதிமுறைகளைச் சுலபமாகப் பின்பற்ற முடியும் அல்லவா?
ஆறு விதிமுறைகள்
அந்த ஆறு விதிமுறைகளின்படி, ஒரு இந்து 1) சூரியனை வழிபட வேண்டும்; 2) பகவத்கீதையை படிக்கவேண்டும்; 3) தனக்கு விருப்பப்பட்ட (இந்துக்) கடவுளின் படத்தை தனது இல்லத்தில் மாட்டி வைத்திருக்க வேண்டும்; 4) ஓம் என்ற அடையாளச் சின்னத்தை நூலில் அல்லது சங்கிலியில் கட்டி அணிந்து கொள்ள வேண்டும்; 5) வருகை அட்டை (Visiting Card) மற்றும் குறிப்பேடுகளில் இந்த (ஓம்) அடையாளத்தைப் பதித்துக் கொள்ள வேண்டும்; 6) துளசிச் செடியை வீட்டின் முன் வளர்க்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் எந்த வகையிலும் இந்து சமுதாயத்தை வளப்படுத்துவதாகவோ, பலப்படுத்துவதாகவோ அல்லது காலத்திற் கேற்றாற்போல மாற்றி அமைக்க போவதாகவோ தெரியவில்லை. இவை கலப்படம் அற்ற, சுயநலவாதிகளின் சொந்த நலனுக்கும், வளமைக்கும் ஆன தனிப்பட்ட திரு விளம்பரக் கட்டளைகள் ஆகும்
உட்பூசல்கள்!
மேலும், பெரும்பாலான இந்துக்கள் தத்தம் பிரிவுகளின் கொள்கைகளை விட்டுக்கொடுத்து இந்த ஆறு விதிமுறைகளையும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். முதல் உலக இந்து மாநாட்டின் கூற்றுப்படி பவுத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்துக்களே! ஆனால், இவர்கள் அனைவரும் பகவத் கீதையை நம்பி அதைப் படிக்கமாட்டார்கள். (ஏனெனில், பகவத்கீதை வைணவர்களின் புத்தகம்; அது அவதாரங்களின் புகழ் பாடுகிறது). இவர்கள் மூர்த்தியை (அ) சிலையை வழிபடமாட்டார்கள். ஓம் என்ற அடையாளத்தை அணிந்து கொள்ளமாட்டார்கள். (ஏனெனில், 'ஓம்' என்பது ஒரு சூழ்ச்சியான ஆண்-பெண் உறுப்புக்களைக் குறிக்கும் பாலுணர்வு அடையாளம் ஆகும்).
மீண்டும் மீண்டும் பித்தலாட்டங்கள்!
உண்மையான விதிமுறைகள் எனில், அவைகள் தனிப்பட்ட மனிதனின் மன வளர்ச்சியையும், சிந்தனைத்திறனையும் உயர்த்த வேண்டும். அப்படி உயர்ந்தால், சமுதாய அமைப்பும் உறுதிப்படும். அத்தகைய விதிமுறைகள் இந்து மதத்தில் மண்டியிருக்கும் புராணம், சடங்கு, சாத்திரம், சம்பிரதாயம் என்னும் நாற்றமடிக்கும் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதாக இருக்கவேண்டும். இந்து தர்மாச்சாரியார்கள் (இந்து சமுதாயத்தைப் புனரமைக்க) தீவிர அறுவை சிகிச்சை எதையும் செய்யமுடியாது என்பது பகுத்தறிவாளர்கள் அறிந்த விஷயம். அதனால், பித்தலாட்டத்தையே மீண்டும் மீண்டும் பேணி, வளர்த்துப் பாதுகாக்கிறார்கள்,
- நன்றி "காரவன்", ஏப்ரல் 1, 1979
தமிழாக்கம்: ச.ராமசாமி
- விடுதலை ஞாயிறு மலர், 24 .3 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக