சனி, 30 நவம்பர், 2019

கலியன் நாயனார்

தனது மனைவியைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினார் இந்த நாயனார்!

இந்த மாதிரியான வேலையை எந்தப் பார்ப்பனராவது செய்திருப்பார்களா? சூத்திரர்களுக்கு மட்டுந்தான் பக்தி வந்தால் புத்தி போகும்போலும்.

சரி இவர் எவ்வாறு நாயனார் ஆனார் என்று பார்ப்போமா?

புகழுடைய தொண்டை நன்னாட்டில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்கிய ஊர் இன்றைய வடசென்னையில் இருக்கும் திருவொற்றியூர். அங்கே உள்ள சக்கரபாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர்குலத்தில் பிறந்தவர் கலியன் நாயனார்.

இவர் சிவனுக்குத் திருத்தொண்டு புரியும் நெறியில் நின்று தமது செல்வத்தைத் திருவொற்றியூர் கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும், பகலும் இடுகின்ற திருப்பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித் திருந்தார்.

கலிய நாயனாரின் பக்தியின் மேன்மையை சோதிக்க கடவுள் உமயபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தாராம். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் திருக்கோயிலில் விளக்கேற்றும் பணிக்குக் கூலி வேலை செய்து அதில் கிடைத்த காசுக்கு எண்ணெய் வாங்கி ஊற்றி விளக்கேற்றினார். ஏற்கனவே ஏராளமான செக்குகள் வைத்துச் சொந்தமாக எண்ணெய் ஆட்டி விற்று வந்தவர், பல பேர் இவரால், இவர் தொழிலால் பிழைத்து வந்தார்கள்.

இப்போது கடவுளின் கடைக்கண்ணால் ஏழையாக்கப்பட்டார். கூலிக்கு அடுத்தவர் செக்கில் வேலை பார்த்தார். அடுத்தவர் செக்கில் எண்ணெய் கடனாக வாங்கி சுமந்து ஊர் ஊராக விற்றார். அதில் கிடைத்த காசுகளை அகல் விளக்கேற்றும் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்ந்தார். அந்தக் கூலி வேலையும் இப்போது கிடைக்காமல் போய்விட்டது.

யாரும் இவருக்குக் கடன்கூட தர மறுத்துவிட்டார்கள். செய்வது அறியாது வேதனைப்பட்ட கலியன் நாயனார், நாளும் விளக்கேற்றிய தொண்டு பல கஷ்டத்திலும் தடைப்பட்டு விடாமல் செய்து வந்தார். இன்றைக்கு விளக்கேற்ற பணம் இல்லையே என்று வேதனைப் பட்டார். தமது கடைசி சொத்தாக இருந்த வீட்டையும் விற்றுக் கோயிலுக்கு விளக்கேற்றினார்.

அடுத்த நாளைக்கு விளக்கேற்ற பணம் இல்லாததால் தன் வீட்டுக்கு விளக்கேற்றி வாழ்ந்த தனது மனையாளைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினான்! அதில் கிடைத்திருக்கும் பணத்திலாவது கோயிலுக்குத் தடைபடாமல் விளக்கேற்றிவிடலாம் என்று நினைத்து மனைவியை விலை கூறி விற்க துணிந்தார் இவர்.

யாரும் அவளை வாங்கத் துணியவில்லை. நல்லவர்கள் திருவொற்றியூரில் இருந்திருக்கிறார்கள்! சித்தம் கலங்கிய கலியன் நாயனார் எப்படியாவது கோயிலுக்கு தான் இதுவரை செய்துவந்த விளக்கேற்றும் பணி நிறைவேற வேண்டும் என்ற பக்தி வெறியில் தானும் தனது மனையாளும் உடலில் வாளால் தாங்களாகவே வெட்டிக் கொண்டு பீறிட்டு வரும் இரத்தத்தை அகல் விளக்கில் நினைவிருக்கும் வரையில் ஒவ்வொன்றாக நிரப்பி எரியவிட்டு கோயில் வளாகத்திலேயே உயிரை விட்டார்களாம். பாவம் அவருக்கு இரத்தத்தில் விளக்கு எரியாது என்று தெரிந்திருக்கவில்லை போலும். ஒரு சூத்திரக் குடும்பத்தின் சோகக்கதை இது!

கோயில் வளாகத்திலேயே கணவனும் மனைவியுமாய் தற்கொலை செய்து கொண்டபின் இறைவன் இவர்களுக்குப் பேரின்பப் பெருவாழ்வு மேலோகத்தில் அளித்தாராம்! கலியன் நாயனார் சிவபதம் புகுந்து சிறப்புற்றார் என்று வெங்காயக் கதையைப் பெரிய புராணம் சொல்கிறது.

இவரை அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராக வைத்து அழகு பார்க்கிறது ஆரிய இந்துமதம். இதன்மூலம் இவர்கள் கூறவரும் செய்திதான் என்ன? 

எப்பாடுபட்டாவது ஆலயத்திற்கு தொண்டு செய்யவேண்டும், இதுவே மேலான பணி என்றும், அப்போதுதான் மேலோகத்தில் இவர்களுக்கு பேரின்ப வாழ்வை சிவன் அளிப்பார் என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதானே இருந்த இடத்தில் உண்டி வளர்க்கலாம்.
- பாலகிருஷ்ணன் அவர்கள் கட்செவி வழி பகிர்ந்தது.

வியாழன், 21 நவம்பர், 2019

ரமண ரிஷி ?


*- மயிலாடன் -*

‘தினகரன்' வசந்தம் இணைப்பில் (17.11.2019) ‘‘நினைத்தாலே நடக்கும்!'' என்ற தலைப்பில் ரமணர் அற்புதம் என்று விலா வாரியாக வாரி கொட்டியுள்ளது.
‘‘பகவான் ரமணர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந் தார். எளிய உணவுதான். தயிர்ச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ‘‘நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா?'' என்று கேட்டார். இல்லை என்று சொன்னதுமே எந்தப் புகாரும் இல்லாமல் சாப்பிட்டு எழுந்தார்.
ஆசிரம நிர்வாகிக்கு தகவல் போனது. அவர் தர்ம சங்கடப் பட்டார். உடனடியாக மதுரையில் இருந்த பக்தர் ஒருவருக்கு,  ‘‘ஒரு கூடை நார்த்தங்காய் உடனே அனுப்பவும்'' என்று கடிதம் எழுதினார்.
கடிதத்தைப் பார்த்த ரமண ருக்குக் கோபம் வந்தது (‘மகா னுக்கு' எல்லாம் கோபம் வர லாமோ!) ‘‘இவர்களுக்கெல்லாம் முக்தி, நார்த்தங்காயில் தான் கிடைக்கும் போலிருக்கு. இல் லேன்னா இதையெல்லாமா யார் யார் கிட்டேயோ கேட்டு லெட்டர் போடுவாங்க. நமக்கு வரணும்னு விதி இருந்தா, அதுவே வரும். உங்க இஷ்டம்போல ஆசிர மத்தை நடத்துங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கடிதத் தைத் தூக்கிப் போட்டார்.
இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே பக்தர் ஒருவர் இரண்டு கூடைகளோடு ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.
அவரை சிரித்தவாறே எதிர்கொண்ட பகவான்,
‘‘என்ன கூடையில் நார்த்தங்காயா?'' என்று கேட்டார். (எல்லாம் சொல்லி வைத்து நடக்கும்போலும்!)
அந்தப் பக்தர் ரயில்வே துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். ரயிலில் முக வரியின்றி பார்சலுக்கு ஏற்றப் பட்டிருந்த இரண்டு கூடைகளைத் தான் ஆசிரமத்துக்கு எடுத்து வந்திருந்தார். அதற்குள் என்ன இருக்குமென்றுகூட அவருக்குத் தெரியாது. (இது முறைகேடு அல்லவா!)

அந்தப் பக்தர் சந்தோஷத் தோடு ஒரு கூடையைத் திறந்து பார்த்தார்.
நார்த்தாங்காயேதான். இன்னொரு கூடையிலே ஆரஞ்சுப் பழம் இருக்கலாம். ஆரஞ்சிலே ஊறுகாய் போட்டா சகிக்காது; இரண்டு பழங்களும் கலந்துடாம கவனமா இருங்க'' என்றார் ரமணர்
*‘‘இதெல்லாம் அற்புதமா, இல்லை என்றால் தற்செயலா நடந்ததா சாமி?''* என்று நடந்த அத்தனை சம்பவங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி  கேட்டார்.

‘‘அறிஞர்களின் இதயங்களில் பொக்கிஷமாக விளங்கும் பிரக்ஞை சிந்தாமணியாகும். கற்பகவிருட்சத்தைப்போல அது நினைக்கப்படுவது அத்தனையும் நிறைவேற்றி வைக்கும்'' என்று யோக வாசிஸ்டத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார்'' இதுதான் ‘தினகரன்' வசந்தம் தரும் செய்தி.

இந்தப் பிரக்ஞையாபதிக்கு ஆசிரமத்தில் நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கிறதா? இல்லையா? என்பதுகூடத் தெரியவில்லை என்பதுதான் விதர்ப்பமான கேள்வி.
அது சரி, இப்படிப்பட்ட மகான் மரணம் அடைந்தது எப்படி? குத்திக் காட்டுவது நம் நோக்கமன்று. ஆனால், மகானு மல்ல - புடலங்காயும் அல்ல. சராசரி மனிதனுக்கு ஏற்படுவது போன்ற பொல்லா நோய் வந்து மரணமடைந்ததுதான் ‘மகான்' என்ற சொல்லாடலைத் தோலுரிக்கிறது.
ரமணரின் முதுகுத்துண்டில் என்புருக்கி நோய் இருந்தது. பிறகு முதுகுதண்டுவடத்தில் சர்கோமா எனும் புற்றுநோய்க் கட்டி புறப் பட்டது. நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து அகற்றியும், அகலாமல் வளர்ந்த வண்ணம் இருந்தது. கதிரியக்கச் சிகிச் சைக்கும் அது கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்க வில்லை. ஹோமியோபதியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நோய் முற்றிய நிலையில், 14.4.1950 அன்று மாலை மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்குமேல் வாசகர் சிந்தனைக்கு....!

*நன்றி : "விடுதலை" நாளேடு 18.11.2019*

புதன், 13 நவம்பர், 2019

முருகன் தமிழ்க் கடவுளா? :வி.இ.குகநாதன்11/25/2017 இனியொரு

முருகன் தமிழ்க்கடவுள் என்பது காலகாலமாக இருந்துவரும் ஒரு கருத்தாயினும், அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்புடைய உரையாடல்களால் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது. அண்மையில் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியிலேயே (Vijay tv) “தமிழ்க்கடவுள் முருகன்” என்ற தொடர் ஒளிபரப்பப்படுமளவிற்கு இக் கருத்து பரவலடைந்துள்ளது. உண்மையில் முருகன் தமிழ்க்கடவுளா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இதற்கு நேரடியாக பதிலளிப்பதற்கு முன் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால், இதற்கான பதிலினை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

பழங்காலத் தமிழர் வழிபாடுகளில் முருகன்:

முதலில் பழங்காலத்தில் தமிழர்கள் முருகனை வழிபட்டார்களா எனப் பார்ப்போம். பழைய வரலாறுகளிற்குச் சான்றாகப் பொதுவாக தொல்பொருளாய்வுச் சான்றுகளையும், பழைய இலக்கியங்களையும் கொள்வர். இவ்வாறான தொல்பொருள் சான்றாக நடுகல் வழிபாட்டினைக் காட்டி நிற்கும் நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழரும், அக்காலத்தில் வாழ்ந்த பிற இனத்தினரைப் போன்று, முதலில் மூதாதையோரை வழிபட்டு வந்தனர். இம் மூதாதையர் வழிபாட்டினை நினைவூட்டும் ஈம அடக்கங்கள், ஈமப்படையல்களின் எச்சங்கள் என்பன தமிழகத்தில் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்தில் கந்தரோடை போன்ற இடங்களிலும் அகழ்வராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன (1). இத்தகைய மூதாதையர் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக மரித்தோர் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இதே முறையில் போரில் வீரச்சாவு அடைந்தவர்களிற்கு நடுகற்கள் நடப்பட்டன. மூதாதையர் நடுகல் வழிபாட்டிலிருந்தே வீரர்களிற்கான நடுகல் வணக்கமுறை தோன்றியதாக கலாநிதி கைலாசபதி நிறுவுவார்(2). பழங்காலத்தில் நடுகல் வணக்கம் தவிர வேறு கடவுள் வழிபாடு இல்லை என்பதனை மாங்குடி கிழார் “அடலருந் துப்பின்…” என ஆரம்பிக்கும் பாடலில்
“கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.”

என புறநானூறில் பாடுவார் (3). இத்தகைய முன்னோர் மற்றும் வீரர்களின் நடுகல் வழிபாடும் ஒரு வகை முருக வழிபாடாகக் கருதப்பட்டது. இத்தகைய நடுகல்லான கல் தூண் என்பதையே சுருக்கி கந்து எனக்கூறிப் பின்னர் கந்தன் (ஸ்கந்தா Skanda என்பது வேறு) என அழைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேற்கூறியவாறு இத்தகைய நடுகல் வழிபாடு ஒரு வகைப் பழங்காலத் தமிழரின் முருக வழிபாடாகும்.

இதே போன்று குறிஞ்சி நிலத் தலைவனாகவும் முருக வழிபாடு காணப்பட்டது. இதனையே தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகமும்..” எனப் பாடும். அதாவது மலைசார்ந்த பகுதிகளில் தமிழர்கள்/ தமிழர்களின் முன்னோர் வாழ்ந்தபோது, அப் பகுதியின் தலைவனாக சேயோன்/ முருகன் கருதப்பட்டார். இதே போன்று இயற்கை வழிபாடான சூரிய வழிபாட்டின் மருவிய வடிவமும் மற்றொரு வகை முருக வழிபாடாயிற்று என சாரங்கபாணி எனும் அறிஞர் பரிபாடற் திறன் எனும் நூலில் “மாக்கடலினின்று நிவர்ந்தெழுந்த … செவ்வேள்” எனக் குறிப்பிட அதனை மறைமலை அடிகளாரும் பின்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முருகனின் மற்றொரு வடிவம் வேலினை அடிப்படையாகக்கொண்ட வேலன் ஆகும். பழங்கால முன்னோர் வேட்டையினையும், உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த காலத்தில் தோன்றியதே இந்த வேலன் எனும் வடிவமாகும். வேட்டையினை முடித்து வந்தவர்கள் மீண்டுமொரு முறை வேட்டையில் நடந்தவற்றை செய்து பார்த்தனர். இதன்போது நாடகம், கூத்து என்பன தோன்றியதாகவும், இதன்போது வேலை ஏந்துபவன் வேலனாகக் கருதப்பட்டான். இவ்வாறான காலப்பகுதியில் பூசாரி வேல் ஏந்தி உருக்கொண்டதாக எண்ணிக்கொண்டு ஆடும் ஆட்டமே வெறியாட்டு என கலாநிதி க. கைலாசபதி கூறுகிறார்(4). இத்தகைய வெறியாட்டத்தின்போது வேலை ஏந்துபவரும் வேலனாகவே கருதப்பட்டார்.

மேற்குறித்த பலவகையான பழந்தமிழ் வழிபாடுமுறைகள் நமது முன்னோர்களிடம் காணப்பட்டன என்பது எவளவு உண்மையோ அதேயளவிற்கு உண்மை யாதெனில் இன்றைய நிலையிலுள்ள வழிபாடுமுறைகள் எதுவும் அன்றைய முறைகளுடன் அறவே தொடர்பற்றன என்பதாகும். இதனை விளங்கிக்கொள்வதற்கு நாம் முருகன் சுப்பிரமணிய ஸ்வாமி/ ஸ்கந்த(Skanda) ஆகிய கதையினை அறிந்துகொள்ளவேண்டும்.

ஆரியப் படையெடுப்பால் சுப்பிரமணிய ஸ்வாமியாகிய முருகன்:

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளிற்கு முன்னர் (பொதுயுகத்திற்கு முந்திய 3000 ஆண்டளவில்/ BCE 3000) இடம்பெற்ற ஆரியப்படையெடுப் பானது இந்தியப் பழங்குடி மக்களிற்கு மட்டுமல்லாமல், அவர்களின் இயறகையோடு ஒன்றிய வழிபாட்டுமுறைகளிற்கும் இருண்ட காலத்தினைக் கொண்டுவந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் முதலில் அக்கினி,இந்திரன்,சோமன் போன்ற கடவுள்களிற்கே முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டதுடன், அவற்றையே ஏனையோரிடமும் பரப்பவும் முனைந்தனர். இதனை நாம் ரிக்,யசூர் ஆகிய வேதங்களில் அக் கடவுள்களிற்கு கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இன்று இந்துக்களிடையே பரவலடைந்துள்ள எந்தவொரு கடவுளும் அன்று வேதங்களில் முக்கியம் பெற்றிருக்கவில்லை.

இதற்கு சுப்பிரமணிய ஸ்வாமியாகிய ஸ்கந்தாவும் விதிவிலக்கல்ல. ஸ்கந்தா (Skanda)என்பவர் குமார (Kumara)என்ற பெயருடன் அக்னியுடன் தொடர்புள்ளவராக ரிக் வேதத்தில் முதன்முதலில் காணப்படுகிறார்(5). வேதத்தின் மற்றொரு பகுதியில் ஸ்கந்தா ருத்திரா- Rudra (பிற்காலத்தில் சிவனாகப்போகும் ருத்திரா) உடன் தொடர்புடையவராக, சிறு குற்றவாளிகளின் (The lord of petty criminals) அதிபதியாகக் காணப்படுகிறார்(6). இவ்வாறு வேதங்களில் முக்கியத்துவமிளந்து சிறு சிறு இடங்களில் காணப்பட்ட ருத்திரா, ஸ்கந்தா போன்ற கடவுள்கள் திடீரென முக்கியத்துவம் பெற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னனி காரணமாகவுள்ளது. பார்ப்பனியப் பிற்போக்குக் கருத்தியலிற்கு எதிராக பவுத்தப்புரட்சி ஒன்று பொ.முந்திய ஆறாம் நூற்றாண்டளவில் (BCE 6th century) ஏற்பட்டு இந்தியா முழுவதும் பரவலடைந்தது. இந்தப் பவுத்தப் புரட்சியினை எதிர்கொண்டு தமது பார்ப்பனிய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பார்ப்பனர்கள் தமது அக்கினிக்குப் பலியிட்டு வழிபடும் முறையினைக் கைவிட்டு ஆதிக்குடிகளின் வழிபாட்டுத் தெய்வங்களைத் தமது வேத காலக் கடவுள்களுடன் இணைத்து பல புராணக்கதைகளை உருவாக்கினார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஏனைய தொல்குடி மக்களின் வழிபாட்டுமுறைகள், வேதத்தில் வரும் ஸ்கந்தா,குமாரா போன்றவர்கள், உபநிடதங்களில் வந்த சனத்குமார் (Sanath Kumar)என்பவற்றுடன் தமிழர்களிடையே இருந்த பல்வேறுவகைப்பட்ட முருக வழிபாட்டுமுறைகளையும் இணைத்து சுப்பிரமணிய ஸ்வாமி உருவாக்கப்பட்டார். இதுவே சுப்பிரமணிய ஸ்வாமி தோன்றிய வரலாறாகும்(7). இவ்வாறான பல்வேறு கடவுளின் தொகுப்பாக அமைந்ததாலேயே வேறு எந்தக் கடவுள்களிற்குமில்லாதளவில் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அதிகளவில் பெயர்கள் இருப்பதும், அவரின் பிறப்பு, வளர்ப்புடன் தொடர்புடையதாகப் பல பெற்றோர்கள் (ருத்திரா, பார்வதி, அக்கினி, கார்த்திகைப் பெண்கள்…)காணப்படு வதும் அமைந்துள்ளது.

இவ்வாறு முற்றிலும் பார்ப்பன மயப்படுத்தப்பட்ட ஸ்கந்தா என்ற போர்க் கடவுள் குப்தர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவலடைந்திருந்த போதும், குப்த பேரரசின் வீழ்ச்சியுடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வீழ்ச்சியடைய, தமிழ் நாட்டில் மட்டுமே பழந்தமிழர்களின் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்த காரணத்தால் முக்கியத்துவமிளக்காமலிருந்தது. இந்தப் போர்க்கடவுளின் ஒன்றிணைப்பு மூலமான தோற்றத்தினை நியாயப்படுத்தும் நோக்கில் ஸ்கந்த புராண (Skanda Purana) உருவாக்கப்பட்டது. இதனையடிப்படையாகக் கொண்டு இப்புராணக்கதையினை தமிழர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக கந்தபுராணம் எனும் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் இயற்றப்பட்டது.

கந்த புராணத்தின் முரண்கள்:

கந்த புராணத்தை எவளவோ சிரத்தை எடுத்து இயற்றியபோதும் அதில் பல தர்க்கரீதியான முரண்கள் காணப்படுகின்றன. குறிப்பாக சுப்பிரமணிய ஸ்வாமி சூரனை அழித்து அவனை மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஆக்கியதாக கந்தபுராணம் பாடும். அவ்வாறாயின் அதற்கு முன்னரே சிறுவனாகவிருக்கும்போதே பிள்ளையாருடன் மாம்பழத்திற்கு சண்டையிட்டு மயிலேறி உலகம் சுற்றியது எவ்வாறு என்ற கேள்வி எழும். தூங்கும் குழந்தைகள் உட்பட மொத்த ஊரையே கடலுள் மூழ்கடித்தவர் ( “முஞ்சு தானை களார்ப்பொடு குழீ …” பாடல்- படத்தில் காண்க) எவ்வாறு கருணையே உருவான கடவுளாக முடியும். இவ்வாறான முரண்கள் கந்த புராணத்தில் காணப்படுவதாலேயே தமிழக கிராமப்புறங்களில் ஒருவர் நம்ப முடியாத பொய்களை/ புழுகுகளைக் கூறும்போது, “இந்தப் புழுகு கந்த புராணத்திலும் இல்லாத புழுகு” எனக் கூறுவார்கள். (இதனை சில பக்தர்கள் “கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்த புராணத்திலும் இல்லை” என மாற்றிக்கூறிவருகின்ற போதிலும் முன்னையதே நாட்டுப்புற வழக்கிலுள்ளது).

முருக வழிபாட்டின் இன்றைய நிலை:

பழந் தமிழர்களிடையே காணப்பட்ட இயற்கையோடு ஒன்றியும், அவர்களுடைய வாழ்வியலுடனும் கலந்திருந்த முருக வழிபாட்டின் பல்வேறு வடிவங்களும் இன்று பார்ப்பனப் புராணக்கதைகளிற்குட்பட்டு வேறு ஒரு வடிவிலேயே உள்ளது. இன்னும் கடுமையாகப் பார்த்தால் தமிழர்களிற்கு எதிரான நிலையினை இன்றைய முருகவழிபாடு எடுத்துள்ளதனை சூரன்போர், சமசுகிரதத்திலேயே முருகனிற்கு பூசை என்ற இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தமிழர்களுடைய கோயில்களில் சமசுகிரதத்தில் பூசை நடைபெறும்போதே” தமிழ் நீசபாசை” என்பதனை ஏற்றுக்கொள்வதாகவே பொருளாகிறது. இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “தமிழ்க்கடவுள் முருகன்” எனும் தொடரும் முற்றுமுழுதாக ஸ்கந்த புராணக்கதையினை

அடிப்படையாகக்கொண்டுள்ளதே தவிர மாறாக பழந்தமிழர் வாழ்வியலையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ சிறிதும் பிரதிபலிக்கவில்லை.

முருகன் தமிழ்க் கடவுளா? கேள்விக்கான பதில்:

இப்போது கேள்விக்கான பதில் காண்பதற்கான நேரம் வந்துவிட்டது. இங்கு பதில் காண்பதற்கு முன் கேள்வியினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. முருகன் பற்றித் தேவையானளவு மேலே ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த சொல்லான தமிழ் என்பது “அ” முதலிய 247 எழுத்துக்களையுடைய நமது மொழியைக் (பழைய வட்டெழுத்துக்கள், தமிழி, பேச்சுமொழி உள்ளடங்கலாக) குறிக்கும். இறுதிச் சொல்லான கடவுள் என்பது சற்றுச் சிக்கலானது. அகராதியின் படி கடவுள்(God) என்பவர் அண்டம் (Universe) முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர்(Supreme power) என்றும்,எல்லாச் செயல்களிற்கும் காரணமானவர் எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார் (Oxford dictionary). இப்போது பதிலிற்கு வந்தால் முருகன் தமிழ்க்கடவுளா என்பதற்கு முன் தமிழிற் கு எனத் தனியாகக் கடவுள் இருக்கலாமா எனப் பார்த்தால் பதில் கடவுளின் வரைவிலக்கணப்படி இல்லை என்பதேயாகும். விளங்கக் கூறின், ஒரு வாதத்திற்கு கடவுள் இருக்கிறார் எனக்கொண்டாலும் அவர் இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவாராக இருப்பாரேயன்றி மாறாக தமிழர்களிற்கு முருகன், சமசுகிரத ஆரியரிற்கு இராமர், ஐரோப்பியரிற்கு இயேசு, அராபியரிறகு அல்லா என இருக்கமுடியாது.
இதுவரைப் பார்த்தவற்றைச் சுருக்கமாகக் கூறினால், முருகனின் (கொற்றவை போன்றவையும்) பல்வேறு நிலைகளிலான வழிபாட்டு முறைகள் எமது முன்னோர்களிடம்/பழந் தமிழர்களிடம் காணப்பட்டன. அவையெல்லாம் இன்றைய நிலையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டு முற்றுமுழுதாக உரு மாறிவிட்டன. அவற்றினை மீட்டெடுக்காமல் வெறுமனே முருகன் தமிழ்க்கடவுள் எனக்கூறுவது பார்ப்பனியத்திற்கு முண்டுகொடுக்கும் வேலையேயன்றி வேறில்லை. அவ்வாறு மீட்டாலும், அதற்குப் பின்னர்கூட , இன்றைய அறிவியல்நிலையில் “எல்லாம் வல்ல கடவுள்” என்ற வரைவிலக்கணத்திற்குள் அடைக்கத்தேவையில்லை, மாறாக பழந்தமிழ்க் கலை-பண்பாட்டு வரலாற்று அடையாளங்களாகக்கொள்ளலாம்.

துணை நின்றவை
(1)= பொ.இரகுபதி- பெருங்கற்கால யாழ்ப்பாணம்(பக்கம்6-7)
(2)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்37)
(3)= புறநானூறு- பாடல் 335
(4)= க.கைலாசபதி- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். (பக்கம்172)
(5)= Pandit Pundalik Madhav (1967), translation of The Rigveda Samhita Vol 1, (p 167)
(6)= Narayan Aiyangar (1987), Kumara in Essays on Indo-Aryan Mythology Vol 1 (p 29)
(7)= Nath Vijay (2001), Acculturation Process Mythicised in Puranas and Acculturation: A Historico-Anthropological Perspective, (pp 98-99)

வெள்ளி, 8 நவம்பர், 2019

தீபாவளி பற்றி அண்ணா அவர்களின் கட்டுரை :

தமிழகத்தில் தீபாவளி நரகாசுரவதத்தைக் குறிக்கிறது அல்லவா? 

பஞ்சாபிலே அப்படிக் கிடையாது. 
நளச் சக்கரவர்த்தி, சூதாடி அரசு இழந்த இரவுதான் தீபாவளியாம்! 

இங்கே நாம், அசுரனை ஒழித்த நாளென்று ஸ்நானம் செய்து மகிழ்வது சடங்காகக் கூறப்படுகிறதல்லவா? 

பஞ்சாபிலே நடப்பது என்ன? 

சூதாடுவார்களாம், 
பண்டிகையின்போது!
 தமிழகத்து இந்து, தீபாவளியை நரகாசுரவதமாகவும், 
பஞ்சாப் இந்து அதே தீபாவளியை நளமகாராஜனுடைய சூதாட்டத் தினமாகவும் கருதுவது எதைக் காட்டுகிறது? 
வேடிக்கையல்லவா? 

லாகூரில் ஒரு ரூபாய்க்குப் 
பதினாறு அணா, 
லால்குடியிலும் அதேதான்! 

ஆனால் லாகூர் இந்து 
தீபாவளியின் போது, நரகாசுரனை நினைத்துக் கொள்ளவில்லை. 

லால்குடி இந்துவுக்கு தீபாவளி,
 நளச் சக்ரவர்த்தி சூதாடிய இரவு என்று தெரியாது. 

மான்செஸ்டரிலே உள்ள கிறிஸ்துவரை, ஏசுநாதர் எதிலே அறையப்பட்டார் என்று கேளுங்கள், 

சிலுவையில் என்பார். 

மானாமதுரையிலே மாயாண்டி, மத்தியாஸ் என்னும் கிறிஸ்துவரான பிறகு அவரைக் கேளுங்கள், 

அவரும் ஏசு சிலுவையில் அறையப்பட்டார் என்றுதான் சொல்வார்.

இங்கோ லால்குடி இந்துவின் 
தீபாவளி வேறு, 
லாகூர் இந்துவுக்கு தீபாவளி மற்றோர் காரணத்துடன் ஏற்பட்டிருக்கிறது. 

இவ்வளவோடு முடிந்ததா வேடிக்கை! – மேலும் உண்டு. 

மகாராஷ்டிர தேசத்திலே, 
தீபாவளிப் பண்டிகை எதைக் குறிக்கிறது என்று கேளுங்கள்
விநோதமாக இருக்கிறது. 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் முடியிலே அடியை வைத்த நாளாம் தீபாவளி! 

லால்குடிக்கு லாகூர் மாறுகிறது. 
லாகூரிலிருந்து புனா போனால், 
புதுக் கதை பிறந்துவிடுகிறது. 

கூர்ஜரத்திலே தீபாவளி புது வருசத்து வர்த்தகத்தைக் குறிக்கிறதாம்! 

வங்காள தேசத்தில் காளிதேவையை இலட்சுமியாகப் பூஜை செய்யும் 
நாளாம் தீபாவளி! 

சிலர், ராமன் மகுடம் சூட்டிக் கொண்ட தினமே தீபாவளி என்று கொண்டாடுகிறார்களாம்! 

சரித்திர ஆராய்ச்சியைத் துணை கொள்ளும் சில இடங்களிலே, 
தீபாவளி என்பது 
தேவ கதைக்கான நாளல்ல; 

உஜ்ஜைனி நகர அரசன் விக்கிரமாதித்தன் பட்டம் சூடிய நாளைக் கொண்டாடும் பண்டிகையாம்! 

இவ்வளவோடு முடிந்ததா? இல்லை.

இந்திய தேசத்திலே நான்கு ஜாதிகள், சிரவணம் பிராமணருக்கு, 
நவராத்திரி க்ஷத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு தீபாவளி, 
இதராளுக்கு (!!) ஹோலிப் பண்டிகை என்று சம்பிரதாயம் ஏற்பட்டிருப்பதாக மற்றோர் சாரார் கூறுகின்றனர். 

இதில் எது உண்மை? 
அறிவுடையோர் சிந்திப்பீர்!