சனி, 30 நவம்பர், 2019

கலியன் நாயனார்

தனது மனைவியைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினார் இந்த நாயனார்!

இந்த மாதிரியான வேலையை எந்தப் பார்ப்பனராவது செய்திருப்பார்களா? சூத்திரர்களுக்கு மட்டுந்தான் பக்தி வந்தால் புத்தி போகும்போலும்.

சரி இவர் எவ்வாறு நாயனார் ஆனார் என்று பார்ப்போமா?

புகழுடைய தொண்டை நன்னாட்டில் எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்கிய ஊர் இன்றைய வடசென்னையில் இருக்கும் திருவொற்றியூர். அங்கே உள்ள சக்கரபாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர்குலத்தில் பிறந்தவர் கலியன் நாயனார்.

இவர் சிவனுக்குத் திருத்தொண்டு புரியும் நெறியில் நின்று தமது செல்வத்தைத் திருவொற்றியூர் கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும், பகலும் இடுகின்ற திருப்பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித் திருந்தார்.

கலிய நாயனாரின் பக்தியின் மேன்மையை சோதிக்க கடவுள் உமயபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தாராம். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் திருக்கோயிலில் விளக்கேற்றும் பணிக்குக் கூலி வேலை செய்து அதில் கிடைத்த காசுக்கு எண்ணெய் வாங்கி ஊற்றி விளக்கேற்றினார். ஏற்கனவே ஏராளமான செக்குகள் வைத்துச் சொந்தமாக எண்ணெய் ஆட்டி விற்று வந்தவர், பல பேர் இவரால், இவர் தொழிலால் பிழைத்து வந்தார்கள்.

இப்போது கடவுளின் கடைக்கண்ணால் ஏழையாக்கப்பட்டார். கூலிக்கு அடுத்தவர் செக்கில் வேலை பார்த்தார். அடுத்தவர் செக்கில் எண்ணெய் கடனாக வாங்கி சுமந்து ஊர் ஊராக விற்றார். அதில் கிடைத்த காசுகளை அகல் விளக்கேற்றும் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்ந்தார். அந்தக் கூலி வேலையும் இப்போது கிடைக்காமல் போய்விட்டது.

யாரும் இவருக்குக் கடன்கூட தர மறுத்துவிட்டார்கள். செய்வது அறியாது வேதனைப்பட்ட கலியன் நாயனார், நாளும் விளக்கேற்றிய தொண்டு பல கஷ்டத்திலும் தடைப்பட்டு விடாமல் செய்து வந்தார். இன்றைக்கு விளக்கேற்ற பணம் இல்லையே என்று வேதனைப் பட்டார். தமது கடைசி சொத்தாக இருந்த வீட்டையும் விற்றுக் கோயிலுக்கு விளக்கேற்றினார்.

அடுத்த நாளைக்கு விளக்கேற்ற பணம் இல்லாததால் தன் வீட்டுக்கு விளக்கேற்றி வாழ்ந்த தனது மனையாளைத் தேரடித் தெருவிலே நிறுத்தி விலை கூறினான்! அதில் கிடைத்திருக்கும் பணத்திலாவது கோயிலுக்குத் தடைபடாமல் விளக்கேற்றிவிடலாம் என்று நினைத்து மனைவியை விலை கூறி விற்க துணிந்தார் இவர்.

யாரும் அவளை வாங்கத் துணியவில்லை. நல்லவர்கள் திருவொற்றியூரில் இருந்திருக்கிறார்கள்! சித்தம் கலங்கிய கலியன் நாயனார் எப்படியாவது கோயிலுக்கு தான் இதுவரை செய்துவந்த விளக்கேற்றும் பணி நிறைவேற வேண்டும் என்ற பக்தி வெறியில் தானும் தனது மனையாளும் உடலில் வாளால் தாங்களாகவே வெட்டிக் கொண்டு பீறிட்டு வரும் இரத்தத்தை அகல் விளக்கில் நினைவிருக்கும் வரையில் ஒவ்வொன்றாக நிரப்பி எரியவிட்டு கோயில் வளாகத்திலேயே உயிரை விட்டார்களாம். பாவம் அவருக்கு இரத்தத்தில் விளக்கு எரியாது என்று தெரிந்திருக்கவில்லை போலும். ஒரு சூத்திரக் குடும்பத்தின் சோகக்கதை இது!

கோயில் வளாகத்திலேயே கணவனும் மனைவியுமாய் தற்கொலை செய்து கொண்டபின் இறைவன் இவர்களுக்குப் பேரின்பப் பெருவாழ்வு மேலோகத்தில் அளித்தாராம்! கலியன் நாயனார் சிவபதம் புகுந்து சிறப்புற்றார் என்று வெங்காயக் கதையைப் பெரிய புராணம் சொல்கிறது.

இவரை அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராக வைத்து அழகு பார்க்கிறது ஆரிய இந்துமதம். இதன்மூலம் இவர்கள் கூறவரும் செய்திதான் என்ன? 

எப்பாடுபட்டாவது ஆலயத்திற்கு தொண்டு செய்யவேண்டும், இதுவே மேலான பணி என்றும், அப்போதுதான் மேலோகத்தில் இவர்களுக்கு பேரின்ப வாழ்வை சிவன் அளிப்பார் என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதானே இருந்த இடத்தில் உண்டி வளர்க்கலாம்.
- பாலகிருஷ்ணன் அவர்கள் கட்செவி வழி பகிர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக