கி.வீரமணி

‘தீபாவளி’ என்றும், ‘தீப ஒளித் திருநாள்’ என்றும் அழைத்து – நடக்காத கற்பனைப் புளுகு மூட்டைகளின் மீது புரண்டு, அறிவினை மாய்த்து அறியாமைச் சேற்றை அள்ளி அள்ளிச் சந்தனமாக எண்ணிப் பூசி சலங்கை கட்டி ஆடும் அறிவுப் பஞ்ச, சிந்தனை வறண்ட, படித்த பாமர மூட ஜென்மங்களே, தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு, திராவிடர்க்கு உரியதா? அது உண்மையாக நடந்ததாக இருந்திருந்தால், இந்திய நாடு முழுவதும் அதன் வரலாறு ஒன்றாக இருந்திருக்க வேண்டுமே! ஆனால், அது வரலாறு அல்ல, கட்டிவிடப்பட்ட ஆரியப்புளுகு வெள்ளத்தின் அலைகள் தான் இவையெல்லாம். அதனால்தான் ஒரே பண்டிகைக்கு ஓராயிரம் கதைகள் வருகின்றன. புதிதாகவும் முளைக்கின்றன. பல்வேறு புராணங்களில் அதுவும் எப்போது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் அள்ளித் தெளிக்கும் அறிவுக்கு மாறான – மக்களை மடையர்களாக்கும் புராணப் புளுகு மூட்டைக் குப்பைகள் தான் இவை! அந்தக் குப்பையில் அமர்ந்து குதூகலிக்கும் மூட மக்களே,
சற்றே பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள்; செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான யுகத்தில், இந்த வெற்றுக் “கப்சாக்களை” நம்பி சீரழியலாமா?
கண்முடி வழக்கங்கள் எப்போது மண்மூடிப் போகும்?
ஆரியக் கலாச்சாரத்தை, போதைப் பொருள் போல அப்பாவித் தமிழ் ஏமாளிகளுக்கும், கோமாளிகளுக்கும் அள்ளி அள்ளி விநியோகம் செய்து வரும் பார்ப்பன நாளேடான ‘இனமலர்’ ஏட்டில் “தித்திக்கும் தீபாவளி‘‘ என்ற தலைப்பில் இன்று (8.11.2026) 9ஆம் பக்கத்தில் இரண்டு புராணப் புரட்டுக் கதைகளை வெளியிட்டு புத்தியை மழுங்கடிக்கும் ‘புராணப் போதைப் பொருளை’ விநியோகம் செய்து, மக்களை மாக்களாக்கும் மகத்தான சேவை செய்கிறது!
இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் நுழைந்து – அதனை மீட்க மகாவிஷ்ணு (வராக) பன்றி அவாரம் எடுத்து, விஷ்ணு அவதாரம் – பூமாதேவியோடு சேர்ந்து பன்றி உருவெடுத்து மகாவிஷ்வுணுக்குப் பிறந்த பொல்லாப் பிள்ளை நரகாசுரனைத் தாயை விட்டே பிள்ளையைக் கொல்ல வைத்த சூழ்ச்சிக் கதையை சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும் நாடெங்கும் 100 ஆண்டுகளாகத் தோலுரித்து விளக்கியதால், அதற்குப் பதிலாக இப்போது அதை விட்டுத்தள்ளி,
புதிய புராணப் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியுள்ளது; இது பலரும் அறியாத எந்த பழைய புராணத்தில் எப்போது உருவாக்கப்பட்டது என்றெல்லாம் கேட்கக் கூடாது.
“நம்பினால்தான் ‘மோட்சம்‘, இல்லையேல் ‘நரகம்‘ – அதுவும் ரவுராதி நரகம்!” என்ற கப்சாவை ஒரு புதுக்கதை அதில் பகுத்தறிவாளர்களின் இக்கட்டான முந்தைய கேள்விகளுக்குப் பதிலளிக்காது ‘ரூட்டை‘ மாற்றி கதை எழுதியுள்ளார்கள். அறியாமை இருட்டை, அழிவை அகிலத்திற்கும் அடகு வைத்த பாமரப் பக்தியாளர்களுக்குப் புதிய தித்திப்பு தந்து கொண்டாட புதிய யுத்தியைக் கொண்டுள்ளது!
இதோ அதன் புராணக் கதை:


காட்டுக்குள்ளே திருவிழாவா?
கட்டுக்கதை ஒரு விழாவா?
“காட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்தவர் தீர்க்கதமஸ். இருட்டு, விலங்குகள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களால் துன்பத்திற்கு ஆளானார்.
ஒருமுறை அப்பகுதிக்கு வந்த முனிவர் சனாதனரிடம், ‘துன்பம் என்ற இருளில் சிக்கித் தவிக்கிறேன். அதில் இருந்து விடுபட விரதம் இருக்கிறேன்.
விரதம், தவத்தில் ஈடுபட்டு மேலும் துன்பத்திற்கு ஆளாகி விட்டேன். மகிழ்ச்சியுடன் வாழ வழியே இல்லையா?” எனக் கேட்டார்.
அதற்கு சனாதனர், ‘கங்கையில் நீராடி, புத்தாடை உடுத்தி, இனிப்புகளைச் சாப்பிட்டு, ஏழைகளுக்கு தானம் அளித்து, வீடெங்கும் விளக்கேற்றி திருவிழா போல கொண்டாடுங்கள். துன்பம் தீரும்” என்றார்.
எப்போது கொண்டாடலாம் எனக் கேட்டதற்கு ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி அன்று தீபம் ஏற்றி எமதர்மனை வழிபடுங்கள்.
அகால மரணம் ஏற்படாது. மறுநாள் நரக சதுர்த்தசியன்று நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், அங்கு துன்பப்படும் நம் முன்னோர்கள் விடுபடவும் பிரார்த்தனை செய்யுங்கள். எண்ணெய், சிகைக்காய், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புகள் வைத்து பூஜை செய்யுங்கள்.
அந்த புனித நாளில் எண்ணெய்யில் மகாலட்சுமியும், சிகைக்காயில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் பார்வதியும், நீரில் கங்கையும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரம்பொருளான கடவுளும் தங்கி உள்ளனர். இவர்கள் மனம் குளிர்ந்து ஒளியின் பாதையில் உங்களை வழிநடத்துவர்” என்றார்.
அதன்படி காட்டில் வாழ்ந்த தீர்க்கதமஸ் கொண்டாடிய விழாவே தீபாவளி.
பின்னாளில் அவர் தெய்வீகம் மிக்க முனிவராக மாறினார்.”
(‘தினமலர்’, 8.11.2026)
இதனைக் கேள்வி கேட்டால் தீபாவளிப் பட்டாசுத் தீயாக வெடித்துக் கரியாகிவிடும்!
‘நம்பு, நம்பு, புராணக் குப்பைகளை!’ அப்படியிருந்தால்தான் குப்பையில் புரளுவதைத் தீராத சுகமாகக் கருதி விழ முடியும் என்பது ஆரியத்தின் நரித்தனம்!
அப்பாவிகளே, நீங்கள் அறிவாளிகளாவது எக்காலம்?
அதற்கு முக்காலமும் உழைக்கிறது இந்த இயக்கம் – நீங்கள் எங்கள் மீது வாரி எறியும் அவதூறுச் சேற்றையும், அருவருப்புகளையும் புறந்தள்ளியும்கூட…
‘விடியாத இரவில்லை
திருந்தாத மக்கள் இல்லை’ என்ற நம்பிக்கையோடு கழகத்தவரும், நாமும் உழைக்கிறோம்!
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக