வெள்ளி, 4 அக்டோபர், 2019

பண்டிகைகளின் பின்னணி

இந்து மதத்தில் பண்டிகைகளுக்குக் குறைச்சலே இல்லை.

சிறீ அனுமத் ஜெயந்தி, கெர்ப்போட்ட நிவர்த்தி, தை அமாவாசை, மாசி மகம், சிறீ மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சிறீ ராம நவமி, மதுரை சிறீ மீனாட்சி திருக்கல்யாணம், சிறீ கள்ளழகர் எதிர் சேவை, அட்சய திருதியை (தங்கம் வாங்க சிறந்த நாள்), சிறீ மத் சங்கர ஜெயந்தி, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம், சங்கரன் கோவில் தபசுக் காக்ஷி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜெபம், சிறீ மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சிறீ விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, சர்வ மகாளய அமாவாசை, நவராத்திரி, சரசுவதி பூஜை / ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை இத்தியாதி... இத்தியாதி... இத்தியாதி...

பெரும்பாலும் இந்து மதப் பண்டிகைகள் எல்லாம் அசுரர்களை அழிப்பது என்ற மய்யப்புள்ளியை வைத்துச் சுழலுவதாகவே இருக்கும். தீபாவளி என்றால், நரகாசுர வதம், கந்த சஷ்டி என்றால், சூரபத்மன் வதம் - நவராத்திரி என்றால், மகிஷாசூரன் வதம், ஓணம் என்றால் மாவலி வதம்.

அசுரன் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்தரிப்பதுதான் இந்த இதிகாச, புராணங்கள் என்பவை.

திராவிடர்களான அசுரர்களை அழிக்கவே கடவுள் அவதாரம் எடுத்ததாக எழுதித் தள்ளியுள்ளார்கள். அப்படி சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நாளை பண்டிகையாக்கி, கொல்லப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே பண்டிகையாகக் கொண்டாட வைத்துவிட்டனர் என்பது எத்தகைய அவலம்!

ஆண்டு முழுவதும் ஏராளமான பண்டிகைகளைக் குவித்து வைத்துள்ளனர். திராவிடர்களின் அறிவையும், மானத்தையும் இழக்கச் செய்வதுடன், அவர்கள் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பொருளை ஒரே நாளில் நாசப்படுத்தும் ஏற்பாடாகவும் இதனைக் கருதவேண்டும்.

ஒரு கடைசிக் கடவுள் கல் உள்ளவரைக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை, பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்து கல்லுப் போன்ற மிகப்பெரிய உண்மையாகும்.

புரட்டாசியில் நவராத்திரி என்று கூறி ஒன்பது நாள்களை நாசப்படுத்துகிறார்கள். மூன்று நாள் பார்வதிக்கு - 3 நாள் லட்சுமிக்கு - 3 நாள் சரசுவதிக்காம். முறையே சக்தி, செல்வம், கல்விக்கு இந்தக் கடவுள்கள் அதிபதியாம். ஒன்பது நாள்களும் கொலு வைத்து நாள்தோறும் பூஜைகளை நடத்தி மடமைத்தனத்துக்கு மகுடாபிசேகம் செய்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் (அப்படி ஒருவன் இருக்க முடியுமா?), அவனின் பரிவாரங்களும் உலகை இம்சித்துக் கொண்டிருந்தனராம் (உலகத்தையே இம்சித்து இருந்தால் மற்ற மற்ற நாடுகளில் மகிஷா சூரனையும், அவன் பரிவாரங்களையும் மற்ற நாட்டுக்காரர்கள் என்ன செய்தார்களாம்?). அந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட்டனராம். (ஏன் பரமசிவன், விஷ்ணு எல்லாம் இருந்தார்களே!). பார்வதி தேவி ஒன்பது நாட்கள் சிவனைக் குறித்துத் தவமிருந்து அவனிடமிருந்து தக்க சக்தியைப் பெற்று ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று பரிவாரங்களை நாசம் செய்தாராம். மகிஷா சூரனைக் கொன்றதால், பார்வதிக்கு மகிஷாசூரமர்த்தினி என்று பெயரும் வந்து சேர்ந்ததாம்.

பார்வதி தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாளில் வேண்டிய வரங்களை சிவன் அருளினாராம். இந்த நவராத்திரியின் சூட்சமத் தத்துவம் இதுதானாம்.

இடையே இடைச் செருகல். லட்சுமி - செல்வத்தின் அதிபதி அவளை வேண்டினால் செல்வம் பெருகுமாம்.

கல்விக் கடவுளான சரசுவதியை வேண்டிக் கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாமாம்!

சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே - சூத்திரன் படித்தால் நாக்கை அறு என்று என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் சரசுவதி பூஜை கொண்டாடக் கட்டளை இடுவதும், அப்படி சரசுவதியைப் பூஜை செய்தால் கல்வி ஒளி கிடைக்கும் என்பதும் பச்சையான முரண்பாடு அல்லவா!

கல்விக்கென்று கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகளாக மக்கள் கிடந்தது ஏன்? திராவிட இயக்க மும், தந்தை பெரியாரும் அயராது பாடுபட்டதால், நீதிக்கட்சி ஆட்சியால், காமராசர் காட்டிய ஆர்வத்தால், தொடர்ந்து நடைபெற்று வந்த திராவிடர் இயக்க ஆட்சியால் கல்வி வளர்ந்ததே தவிர, சரசுவதி பூஜையாலா? மக்களுக்குக் கல்வி கிடைத்தது? எத்தனை நூறு ஆண்டுகாலமாக சரசுவதி பூஜை கொண்டாடப்படுகிறது!

அப்பொழுதெல்லாம் ஏன் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை? சரசுவதி பெண் கடவுளாக இருந்து பெண்கள் அறவே கல்வியில்லாத களர் நிலமாக ஆக்கப்பட்டது ஏன்? ஏன்?

செல்வத்துக்கென்று ஒரு கடவுள் இலட்சுமி இருக்கும் இந்த நாட்டில் வறுமைக்கோட்டுக்கும் கீழே மக்கள் உழலுவது ஏன்? நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் 77 சதவிகிதம் என்று அரசு புள்ளி விவரம் கூறும் பரிதாப நிலை ஏன்? இரவு சாப்பாடு இல்லாமல் படுக்கைக்குச் செல்லுவோர் இந்தியாவில் 20 கோடி பேர் என்ற நிலை ஏன்? ஏன்?

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? இந்தக் கடவுள்கள் வெங்காயங்கள் எல்லாம் கற்பிக்கப் பட்டவை - மக்களை முட்டாளாக்கி அவர்களின் அறிவை, உழைப்பை, பொருளை முற்றிலும் சுரண்டும் சூழ்ச்சி என்பதல்லாமல் வேறு என்னவாம்?

உழவர் திருவிழா (பொங்கல்), மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்கள், சிந்தனையாளர்களைக் குறிக்கும் நாள்களை நன்றித் திருவிழாவாகவும், அவர்களின் சிந்தனைகளைப் புதுப்பிக்கும் வரலாற்று நாளாகவும் கொண்டாடுவதைப் புரிந்துகொள்ளலாம்.

மக்களை மொட்டை அடிக்கும் பண்டிகைகளைத் தடை செய்தால், அது உண்மையிலேயே மக்கள் நல அரசாக இருக்க முடியும் - சிந்திப்பீர்!

- விடுதலை நாளேடு, 4.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக