கடவுள், மதம், சாதி மற்றும் வேதம் குறித்து பகுத்தறிவு விளக்கங்கள் இப்பகுதியில் இடம்பெறும்.
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021
கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்
திங்கள், 30 ஆகஸ்ட், 2021
சிவ சிவ # லிங்க வழிபாடு
சனி, 28 ஆகஸ்ட், 2021
சிவபெருமான் லீலைகள்
வியாழன், 22 ஜூலை, 2021
தேவாரப் பெருமை இதுதானா?
12.08.1944 -குடிஅரசிலிருந்து....
மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திருவாலவா யாயருள்
பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்
டெண்ணற் கற்பழிக்கத் திருஉள் ளமே
என்பதாகும். இதன் கருத்து என்ன?
திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரியப் பிரசாரம் செய்தவற்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்த மக்கள் யார்? திராவிடர்கள்தானா - அல்லவா?
அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம்பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்தாலும், ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள்.
இந்தத் திராவிடர்களின் (பெண்களை) மனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினது? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கின்ற விபரத்தைப் பண்டிதர்கள், சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.
வெள்ளி, 28 மே, 2021
விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்? -2
ஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம்? - 2
- பேராசிரியர் ந. வெற்றியழகன்
குறிக்கோள் உண்டாமே?
நாத்திகர்கள் எல்லாமே குறிக்கோளின்றி குருட்டாம்போக்கில் வந்ததென்று நம்பு கிறார்கள். ஆத்திகர்களோ, புத்திக்கூர்மையுள்ள காரணகர்த்தா இருக்கிறார் என நம்புகிறார்கள் என எழுதியுள்ளார்.
உலகிலுள்ள உயிரற்ற, உயிருள்ள அனைத்தும், படிப்படியாக பரிணாம வளர்ச்சிப் படிநிலையில் உருமலர்ச்சி பெற்றது.
நுண்ணிய ஆற்றலிலிருந்து பேரண்டம் (Universal) எவ்வித நோக்கமுமின்றி இயற்கைப்போக்கில் தானாகவே உண்டானது; அதுபோல, வைரஸ், பாக்டீரியாவிலிருந்து ஒரு செல் (Cell) உயிரிலிருந்து படிப்படியாக உருமலர்ச்சி பெற்று சடுதி மாற்றம் (Mutation) காரணமாக..... மனிதர்வரை மாற்றம் பெற்று வந்துள்ளது என்று, நாத்திகர்கள்அறிவியல் நெறிப்படி குறிக்கோள் எதுவுமின்றி உண்டானவை என்று கூறி வருகின்றனர்.
இவர்கள்தான் சொல்லட்டுமே?
ஆனால், இந்த ஆத்திகப் பேரறிவாளர் (?)களோ குறிக்கோளோடு படைக்கப்பட்டது; புத்திக்கூர்மையுள்ள கடவுளால் படைக்கப் பட்டது என்று கிளிப்பிள்ளைப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிக்கோளோடு புத்திக்கூர்மையுள்ள கடவுள் படைத்தார் என்று உளறிக் கொட்டித் தீர்க்கும் இவர்கள் என்ன குறிக்கோளோடு படைத்தார் என்று சொல்ல வேண்டாமா? சொல்ல முடியுமா? சொன்னார்களா இதுவரை? இனியும்தான் சொல்வார்களா?
ஞானப்பழத்தைப் பிழிந்து....
கடவுள் புத்திக்கூர்மையுள்ளவராமே? நல்ல நகைச்சுவை! இவரது நுண்ணறிவுக்கு, புத்திகூர்மைக்கு ஒரே ஒரு சான்றினை மட்டும் பார்ப்போமா?
விலக்கப்பட்ட கனிபற்றி புத்திக் கூர்மையுள்ள கடவுள் கர்த்தர் ஆதாமிடம் என்ன சொன்னார்? நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்! _ (ஆதியாகமம் -2-17)
ஆதாம், ஏவாளின் சொல்லைத் தட்டாது அந்த மரத்தின் கனியை உண்டார்.
விலக்கப்பட்ட பொருளை - சாகடிக்கும் அளவுக்கு நஞ்சுடைய கனியைக் கர்த்தர் ஏன் படைக்க வேண்டும்? தேவையில்லாமல் படைத்துவிட்டு அதனை முதல் மனிதர் உண்ணக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? நம் ஆணையை ஆதாம் மீறுவான் என்ற முன்னறிவு கர்த்தருக்குக் கிடையாதா? நுண்ணறிவு இவ்வளவுதானா? இதுதான் கர்த்தரின் புத்திக்கூர்மையா? வெட்கம்! வெட்கம்!
கற்பனையாம்! கட்டுக்கதையாம்!
மைக்கேல் டென்டன் என்பவர், தம்முடைய பரிணாமம் - சர்ச்சையிலுள்ள ஒரு கோட்பாடு (ஆங்கிலம்) என்ற நூலில், பரிணாமக் கோட்பாடு ஒரு முக்கியமான விஞ்ஞானக் கோட்பாடாக இருப்பதற்குப் பதிலாக, அந்தக் காலத்து ஜோதிடர்களின் கற்பனைபோலவே இருக்கிறது; நம் நாளில் உள்ள பிரபலமான கட்டுக்கதைகளில் ஒன்று டார்வினின் பரிணாமக் கோட்பாடு என்பதாகக் குறிப்பிட்டுள்ளது கட்டுரையின் ஒரு பகுதி, டார்வினின் பரிணாமக் கோட்பாடு கட்டுக்கதையாம்! ஜோசியக் கற்பனையாம்!
போப் ஏன் அங்கீகரித்தார்?
ஜோசியர்களின் கட்டுக்கதை எனக் கூறும் இந்தக் கோட்பாட்டை ஏன் ரோமிலுள்ள போப் ஜான்பால் அங்கீகரிக்க வேண்டும்? ஃபோண்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்று 5.10.1996 நாளிட்ட செய்தியில், புதிய அறிவு, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினை அங்கீகரிக்கச் செய்கிறது. டார்வின் கொள்கைகளைப் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
(செய்தி: The Hindu - 26/10/1996).
“With a formal statement sent to the pontifical Academy of Science on Wednesday, the Pope John Paul said that fresh knowledge leads to recognition of the theory of evolution as more than a hypothesis” -
(The Hindu. 26/10/1996).
மாற்றம் பெற்ற போப் மனநோயாளியா?
வெறும் ஜோசியக் கட்டுக்கதை யாயிற்றே, டார்வின் பரிணாமக் கோட்பாடு, அப்படியிருக்க அதனை ஏன் பரிணாமக் கோட்பாடு (Theory) என்றும், அதனைப் புதிய அறிவுபெற கல்வி நிலையங்களில் கற்பிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்ப வேண்டும்?
ஜோசியக் கட்டுக்கதை என்று மைக்கேல் கென்டன் கூறியுள்ளாரே, யாராவது கட்டுக்கதையைப் பள்ளிகளில் பயிற்ற வேண்டும் என்பார்களா? போப்பாண்டவர் அறிவு அற்றவரா? அல்லது மனநோயாளரா? இதனை, மைக்கேல் டென்டனும், விழித்தெழு இதழின் கட்டுரையாளரும் விளக்க வேண்டும்! என்ன பிதற்றல்!
பாமரத்தனமான பல்கலைக்கழகப் பேராசிரியர்
ஒரு காலத்தில் நாத்திகராக இருந்து இப்போது கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிட்டராம் பிராக் நகரிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபிராண்டீ ஷேக் விஸ்கோசில், தமது மாற்றத்திற்கான காரணங்கள் பலவற்றைக் கூறியுள்ளாராம். அவை அத்தனையும் ஒரு பேராசிரியருக்குரிய விளக்கமாகத் தெரியவில்லை. பொருந்தாக்கூற்றாக _பாமரனின் விளக்கமாகத்தான் தெரிகிறது. அவற்றுள் ஒன்றை மட்டும் பார்ப்போம்!
படி, படி, பைபிள்படி!
உயிரினங்களின் தோற்றம் பற்றிய ரஷ்யாவின் பிரபலமான விஞ்ஞானியின் சொற்பொழிவில் கலந்து கொண்டாராம் இவர் 1970இல். அவர் உயிரினத் தோற்றம் பற்றிப் பதில் தெரிய வேண்டும் என்றால் பைபிளைப் படியுங்கள். முக்கியமாக, ஆதியாகமத்தில் படைப்பைப் பற்றிச் சொல்லியிருக்கிற தகவலைப் படியுங்கள் என்றாராம். அவரும் படித்தாராம்... புரிந்து கொண்டாராம்! என்ன வேடிக்கை! என்ன கோமாளித்தனம்! என்ன பைத்தியக்காரத்தனம் பார்த்தீர்களா? இவர் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்!
படைப்புபற்றி பைபிள் பகர்வது:
பைபிள் ஆதியாகமத்திலுள்ள உயிரினத் தோற்றம் பற்றித்தான் தெரிந்து கொள்வோமே! இல்லை, நினைவுபடுத்திக் கொள்வோமே? பைபிள் ஆதியாகமப்படி,
முதல் இரண்டு நாட்களில், பகல், இரவு, வானம், இவற்றைப் படைத்தார் கர்த்தர்.
3ஆம் நாள்: புவி, கடல், புல், பூண்டு, கனிமரங்கள்.
4ஆம் நாள்: சூரியன், சந்திரன், விண்மீன்கள்
5ஆம் நாள்: நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.
6ஆம் நாள்: காட்டு விலங்குகள், ஊர்வன.
கடைசியில், முதல் மனிதன் ஆதாம், முதல் மனுசி ஏவாள் (Adam and Eval) படைத்தார் கடவுள்.
பரிதிக்கு முன் பயிருயிரியா?
3ஆம் நாள்: புல், பூண்டு, மரங்களைப் படைத்தாராம். 4ஆம் நாள்தான் சூரியனைப் படைத்தாராம். சூரியன் இல்லாமல், ஒளிச்சேர்க்கை இல்லாமல், மாவுச்சத்து (Starch) உருவாக்காமல் தாவரம் தழைக்க முடியுமா? பைபிள் ஆதிகயாகமம் சொல்வது அறிவியலுக்கு அடிப்படையாமே! பினாத்தலாக இல்லை? கோடிக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் பேரண்டம், விண்மீன்கள், கோள்கள், உயிரினங்கள் உண்டானவை என அறிவியல் கூற, இவற்றை வெறும் ஆறே நாளில் ஆண்டவர் படைத்தாராமே? இது எந்த வகை அறிவியல்?
பாக்டீரியா - வைரஸ் பற்றி பைபிளில் இல்லையே?
பிற உயிரினங்கள் படைக்கப்பட்டனவே, வைரஸ், (Virus), பாக்டீரியா (Bacteria) இவற்றை ஆண்டவர் படைக்கவில்லையா? யார் படைத்தது? இவைபற்றி மூச்சு_பேச்சு இல்லையே பைபிள் ஆதியாகமத்தில்? ஏன்? இவற்றைப்பற்றி அறிவியல் என்ன கூறுகிறது? பாக்டீரியா மிகவும் எளிமையான உட்கரு செல் (cell), நுண்ணுறுப்புகள் இல்லாத தொன்மையான செல் ஆகும்.
ஒரு செல் பச்சைப்பாசிகளிலிருந்து, பச்சையத்தை (Chlorophil) இழந்து பரிணாமத்தில் சாறுண்ணி (அ) ஒட்டுண்ணி வாழ்க்கைக்கேற்ப தகவமைப்புகளைப் பெற்று பாக்டீரியா உருவாக்கியிருக்கலாம் என்கிறது அறிவியல்.
வைரஸ் எனப்படுவது ஒரு சாதாரண உயிரியைப்போல செயல்படுவது அன்று: அது, தனித்து இருக்கும்போது. உயிரற்றதனைப் போலவும், ஒரு செல்லினுள்ளோ பாக்டீரியாவினுள்ளோ நுழைந்து செயல்படும்போது உயிருள்ளது போலவும் இயங்கும்.
விழித்தெழு ஏடு விடையளிக்குமா?
இவைபற்றி, பைபிள் ஆதியாகமம் சொல்லவில்லையே, ஏன்? பேராசிரியர் விஸ்கோசில் ஆவது பதில் சொல்வாரா? ஆதியாகமம் பயின்றவராயிற்றே அவர்? அல்லது, விழித்தெழு இதழாவது விடை சொல்லுமா? சொல்லத் தெரியாவிட்டால் இப்படியெல்லாம் எழுதாமல் அடங்கிப்போகுமா? அதுதான் அதற்கும் நல்லது; அனைவருக்கும் நல்லது! விரிவஞ்சி, முதன்மையான சில கருத்துகளுக்கு மட்டுமே மறுப்பு வரைந்துள்ளோம். வேண்டாத இந்த வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமா, விழித்தெழு இதழ்? இல்லையேல், நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளும்! வசதி எப்படி?
செவ்வாய், 25 மே, 2021
காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்தானே...
உடல்நலம் பெற...
காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா!
பிரம்மாவைத் தோற்றுவித்தவரே!
நீயே நோய்களைப் போக்கி
நலம் தரவேண்டும்.
‘தினமலர்' ஆன்மிக மலர், 21.5.2021
அப்படியா! காஞ்சி மட சீட கோடிகள் மருத்துவர்களை நாடாமல், குருவாயூரப்பனை சேவிக்க வேண்டியதுதானே?
காமகோடியே சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்தானே!
செவ்வாய், 18 மே, 2021
தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62
*****
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
***********
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201
***********
அகராதிக் குறிப்பில்
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
- நூல்: அபிதான சிந்தாமணி
***********
சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80
***********
அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்
பக்கம்: 33, 34
