சனி, 15 நவம்பர், 2014

போப் மாளிகை மர்மங்கள்

உலகை உலுக்கும் ஒரு நூல்


போப் மாளிகை மர்மங்கள்
- வெளிச்சம்
போப்புகள் என்றால் கடவுளின் பிரதிநிதிகள், புனிதத்தின் மொத்த உருவமான வர்கள் என்ற பிம்பத்தை, கருத்தாக்கத்தினைப் பல்வேறு காலகட்டங்களில் பல போப்புகள் தங்களது செய்கைகள் மூலமாக உடைத்தெறிந் துள்ளனர்.

போப்புகளின் இருண்ட வாழ்க்கை யினை, அவர்தம் கொடூரச்  செயல்களான- கொலை, கொள்ளை, காமக் களியாட்டங்கள், துரோகங் கள், வஞ்சகம், சூழ்ச்சி போன்றவற்றை மற்றவர்கள் அக்காலகட்டத்தில் அறியாமல் இருந்தாலும் உடன் வாழ்ந்த மற்ற போப்புகள் மற்றும் ஏனைய  கத்தோலிக்கக் குருமார்கள் தெரிந்து இருந்தனர்.
ஒரு சிலர் அதிர்ச்சி அடைந் துள்ளனர் எனினும் பெரும்பான்மையினர் அவ்வுயர் பதவியினை அடைய மேற்கூறிய வழிகளையே  பின்பற்றியுள்ளனர். சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான A DARK HISTORY: THE POPES VICE, MURDER AND CORRUPTION IN THE VATICAN என்ற நூல் உலகையே உலுக்கி உள்ளது.
தேர்வு முறையில் பதவி பெறுவது என்பது தொன்றுதொட்டு உள்ள பழக்கம். உலகிலேயே ரோம் நாட்டுப் போப்புகள்தான் அவ்வாறு முதன்முதலாக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.  ஈராயிரம் ஆண்டுகள் பழமையான போப் மாளிகை அய்ரோப்பிய வரலாற்றினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளது.
அதே நேரத்தில் அவர்தம் தேர்வு எல்லாக் கட்டத்திலும் நேர்மையாக ஒழுங்காக நடந்தது இல்லை. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுதல், வெறுப்பினை உமிழ்தல், கோபத்தினை வெளிப் படுத்துதல், அரசியல் தந்திரங்கள், ஏமாற்றுதல் என எதற்குமே பஞ்சம் இருந்தது இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சில சுவையான பகுதிகள் இங்கு கொடுக்கப்பட் டுள்ளன. முழு நூலைப் படித்தால் மொத்தச் சுவையினையும் பெற முடியும்.
பத்தாம்  நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த போப்புகள்தான்  அதிகப்படியாக உல்லாச மற்றும் ஆபாச வாழ்க்கையில் சிக்கிச் சீரழிந்தவர்கள். பெரும்பான்மையினர், விபச்சாரிகளின் பிடியில் சிக்கி அவர்களால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு  அவர்களின் கைப்பாவையாக அவர்தம் மடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.
தொலைந்து போன போப்பினைக் கண்டுபிடிப்பது எப்படி?
போப்புகள் திடீரென காணாமல் போய் விடுவது உண்டு. அப்படி யாராவது தொலைந்து போய்விட்டால் தேடுவதற்கு முன்னால், ஏற்கெனவே அதற்கு முன் தொலைந்து போன  போப்புகள் அங்ஙனம் தொலைந்ததற்கான  காரணங்களின் பட்டியலை ஆராய்வார்கள். அந்தப் பட்டியலின்படி, போப்புகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம், முற்றிலுமாக சிதைக்கப் பட்டிருக்கலாம், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது விபச்சார விடுதிகளில் தஞ்சம் அடைந்திருக்கலாம். ஆதலினால் யாராவது தொலைந்துவிட்டால் முதலில் மேற்கூறிய காரணங்களை ஆராய்ந்து விட்டுத்தான் பின் மற்ற காரணங்களுக்கு வருவார்கள்.
கிறுக்குப் பிடித்த போப் ஏழாம்  ஸ்டீபன் என்பவர் மிகக் குறுகிய காலமே பதவி வகித்த போப் ஆவார். அதாவது வெறும் பதினைந்து மாதங்கள்தான் (896 CE and 897 CE). இவர் மனவளம் குன்றியவர்.  இவரது நாட்டைச் சார்ந்த (மத்திய இத்தாலி) அரசி அஜில்ட்ருதுவுக்கு ஸ்டீபன் போப் ஆவதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய குறையாக கருதவில்லை.
ஏனெனில், அவருக்கு அதற்கு முன் இருந்த போப் போர்மொசுஸ் அவர்களிடம் ஒரு  பழைய கணக்கு தீர்க்க வேண்டியிருந்தது. ஆகவே ஏழாம் ஸ்டீபனின் மனநோய், அரசி அஜில்ட்ருதுவுக்கு ஒரு பெரிய தடையாகத் தோன்றவில்லை.
இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 894 CE. அரசி அஜில்ட்ருது தன் மகன் லாம்பேர்ட்அய் ரோம் நாட்டுப் பேரரசனாக்க வேண்டும் என்ற வேண்டு கோளுடன் அப்பொழுது போப்ஆக இருந்த போர்மொசுவைச் சந்திக்க வருகிறார். அஜில்ட்ருது கண்கவரும் அழகி. அவளது அழகு, கண்டவரைச் சொக்க வைக்கக் கூடியது. ஆகவே, அரசியல் தந்திரங்கள் வெற்றி பெறவில்லையென்றால் தன் வாள்விழியால் போப்பை வீழ்த்தி விடலாம் என முடிவு செய்துவிட்டாள்.
ஆனால், போர்மொசுவிற்கு வேறு எண்ணம் இருந்தது. அவர் அடிப்படையில் நல்லவர். ஆகவே அவர் அஜில்ட்ருது மகன் லாம்பேர்ட்அய் தவிர்த்து காரிந்தியா நாட்டு அரசர் அர்னுல்ப் என்பவரை ரோம் நாட்டுப் பேரரசராக  முடிசூட்டத் தயாராகிறார். இம்முடிவு அஜில்ட்ருதுவின் கோபத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து அர்னுல்ப் பிடம் உதவி கேட்கிறார்.
அர்னுல்ப் தனது படையுடன் வந்து அரசி அஜில்ட்ருதுவையும் அவரது மகன் லாம்பேர்ட்டையும்  அவர்களது நாட்டுக்கு விரட்டியடித்து விடுகிறார். 896 CE பிப்ரவரி 22ஆம்  நாள் ரோம் நாட்டுப்  பேரரசராக  அர்னுல்ப், போப் போர்மொசுவால் முடிசூட்டப்படுகிறார். முடிசூடிய மன்னனுக்கு அடுத்த இலக்கு பேரழகி அஜில்ட்ருதுவை அடைவது.
ஆனால் அவனுக்கு அந்த வாய்ப்புக்  கிடைப்பதற்குமுன் முடக்குவாதத்தால் பாதிக்கபட்டு முடங்கி விடுகிறான். இதற்கிடையே ஏப்ரல் 4ஆம் தேதி போப்  போர்மொசு உணவில் நஞ்சு கலக்கப்பட்டு கொல்லப்படுகிறார். வேறு யார் கொன்றிருக்க முடியும்? அழகி அஜில்ட்ருதுதான்  நயவஞ்சகமாக மோக வலை  வீசி தன் நாட்டுக்கு வரவழைத்து விஷம் கொடுத்து போப்பைக் கொன்று விடுகிறாள்.
வாடிகனில் அடுத்த போப் ஆக வரப் போவது யார் என்பது மிக முக்கியக் கேள்வியாக இருந்தது. தனது மகனை ரோம் நாட்டிற்கு முடிசூட்டாத போப் போர்மொசு செத்தொழிந்தது மட்டும் அஜில்ட்ருதுவுக்கு  முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அவள் இன்னும் அதிகமாக பழி தீர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்த்தாள்.
போர்மொசுவின் பிணத்தை அரியாசனத்தில் அமர வைத்து குற்றச்சாட்டுகளைப் படித்தல்
அதனால் அவளும் அவளை ஒத்த கொடூர குணம் கொண்ட அவளது மகன் இளவரசன் லாம்பேர்ட்டும் வேறு திட்டம் வைத்திருந் தார்கள். தங்களது கைப்பாவையான ஏழாம் ஸ்டீபன் என்பவனைப் போப் ஆக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகின்றனர்.
இதற்குப் பின்னர்தான் வரலாறு காணாத கொடுமைகள் வாடிகன் மாளிகையில் அரங்கேறுகின்றன. இறந்து போன போப்  போர்மொசுவின் மேல் பல்வேறு முறைகேடு களுக்கான  குற்றச்சாட்டுகள் சுமத்தப்படு கின்றன.
இறந்து போனவரை என்ன செய்ய முடியும்? பரலோகத்திற்குச் சென்றா குற்றப் பத்திரிகை வாசிக்க  முடியும். ஆகவே ஏழாம் ஸ்டீபன்க்கு ஒரு விபரீத யோசனை தோன்றுகிறது. கல்லறை திறக்கப்பட்டு பாதி சிதைந்த போப்  போர்மொசுவின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அரண்மனைக்கு எடுத்து வரப்படுகிறது.
கிறுக்குப் போப் அதுவரை உலகம் காணாத விசித்திரமான விசாரணையை நடத்தினான். பிணத்தை அரியாசனத்தில் அமர வைத்து குற்றச்சாட்டுகளைப் படித்தான். பதினெட்டு வயது இளைஞன் ஒருவன் பிணத்தின் அருகே நின்று  இறந்து போன போப்புக்குப் பதிலாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
இந்தக் கேலிக்கூத்து முடிந்தவுடன், போப்பின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஏற்கெனவே பாதி சிதைந்து போன பிணத்தின் வலது கையின் நடு  மூன்று விரல்கள் வெட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவை வெட்டப்பட்டன. இந்த மூன்று விரல்கள்தான் போப் கத்தோலிக்கக் கிறித்துவர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப் பயன்பட்டவை.
இறந்து போன போர்மொசுவின் போப் பட்டம் பறிக்கப்பட்டு சாமானியனாகக் கருதப்பட்டு எல்லோரும் புதைக்கப்படும் இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அரசி அஜில்ட்ருது மாளிகையில் அமர்ந்து ரசித்தார். சிறிது காலத்திலேயே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  வாடிகன்  மாளிகையில் பெரும் கலவரம் ஏற்பட்டு போப் ஏழாம்  ஸ்டீபன் கொல்லப்படுகிறான்.
கத்தோலிக்க மதத்தினைப் பாதுகாப்பது, கிறித்துவத்தைக் கட்டிக் காப்பது என்ற போர்வையில் போப்புகள் எண்ணற்ற அக்கிரமங் களை, கொடூரங்களைத் தங்கள் சுயநலனைக் கருத்தில் கொண்டு அரங்கேற்றியுள்ளனர்.
ஒரு சிலர்  தாங்கள்  தேர்ந்தெடுக்கபட்டவுடன், வாடிகன் திருச்சபையில் ஏற்கெனவே பணி (ஊழியம்?) செய்பவர்களை விரட்டியடித்து விட்டு, முழுக்க தங்கள் உறவினரையும் நண்பர்களையும் அமர்த்தி தயக்கமின்றிக் கொள்ளை அடித்தனர். இதற்குச் சிறந்த  எடுத்துக்காட்டு, 1492இல் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் 6 ஆம் அலெக்சாண்டர் (ரோட்ரிகோ).
தங்கள் மதத்தை எதிர்ப்பவர்கள், அறிவியலார்  மற்றும்  பிற மதத்தினரை  (குறிப்பாக இசுலாமியர்) சாத்தான்களின் ஏவலாளிகளாகக்   கருதி அவர்களைப் பல்வேறு வழிகளில் அழித்தொழிப்பதைப் பிரதானமாகக் கருதினார்கள். மதத்தின் பொருட்டு இனப் படுகொலைகள் பல்வேறு காலகட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
அப்படி இருந்த பொழுதும், கிறித்துவ மதத்தின் கோட்பாடுகள் தொடர்ந்து வெவ்வேறு காலகட்டத்தில் தாக்கப்பட்டு வந்துள்ளது. அப்படி கிறித்தவ மதத்தை முதன்முதலாக எதிர்த்தவர்கள் 1143இல் உருவாகிய கதர்ஸ் என்கிற சமயப் பிரிவினர். போப் தலைமையிலான கிறித்துவ அமைப்புகளுக்கு இவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது பெரும் கவலையாக இருந்தது.
போப் இன்னொசென்ட் என்பவர் தலைமையில் 16 உயர்மட்ட கத்தோலிக்கக் குருமார்கள் (Cardinals) திட்டம் தீட்டி கதர்ஸ் பிரிவினர் மீது இனப் படுகொலையை  1208ஆம் ஆண்டு வாக்கில் பெசியர் என்ற இடத்தில் நடத்தி முடித்தனர். இந்த இன அழிப்பு தற்செயல் போல முதலில் தோன்றினாலும் பின் திட்டமிட்ட சதி என கண்டறியப்பட்டது. இது ஒருவகையில் புனிதப் போராகக் கருதப்பட்டது. விந்தை என்னவென்றால் இந்தப் புனித போர்  1096இல் (ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்) நடந்த முதல் புனிதப் போரினை ஒட்டியே நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஏறத்தாழ 250 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் வாடிகன் மாளிகையின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது. ஒன்று மட்டும் சரியாக உள்ளது, ஆன்மீக மடங்கள், அமைப்புகள், எந்த மதத்தினருக்குரியது ஆனா லும், அக்கிரமங்களுக்கும் அநியாயத்திற்கும் மொத்தக் குத்தகை எடுத்துள்ளது  என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை.
போப்  மாளிகையினைப் போன்று  ஊழலி லும், காமக் களியாட்டங்களிலும், சொத்துக் குவிப்பிலும், அதிகார போதையிலும்  திளைத்த  திளைக்கின்ற  காஞ்சி மடமானாலும், சாய் பாபா ஆசிரமம் ஆனாலும், நவீன 'நாயகன்' நித்தியானாலும்,  வாரிசுச் சிக்கலில் சிக்கியுள்ள  மேல்மருவத்தூரார் ஆனாலும்  நாங்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைவது நடைமுறையில் நாம் கண்கூடாகப் பார்க்கும் ஒன்றுதானே.
உண்மை,மே16-31,2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக